அலை 8
வேங்குழல் நாயகன்–வேங்குழல் நாயகி கோவில் கோபுரம் நிலவொளியில் மெதுவாக உயிர் பெற்று எழுந்து ஜோதி ஒளிக் கடலாக ஜொலித்தது.
சிங்கன், “அதோ பாருங்கள், கொற்கையின் நாதனின் கோபுரக்கலசம்!” என்று பயபக்தியுடன் கன்னத்தில் போட்டுக் கொண்டான்.
அந்தி வானத்தின் வர்ணஜாலத்தில் கோவில் மாடப்புறாக்கள் சடசடவென இறக்கையை அடித்துக் கொண்டு பறந்த காட்சி தூரிகை ஒன்று தவற விட்ட ஓவியமாகும்.
வீனஸும் சிங்கன் என்ன செய்தானோ இனிமேல் நாமும் அதையே செய்ய வேண்டும் என்று பின்பற்றினான். தமிழர்களின் பழமையையும் கலாச்சாரங்களையும் கற்க அனுபவிக்க இதைவிட சிறந்த தருணம் இனிக் கிடைக்காது என்பதில்உறுதியாக இருந்தான்.
சிங்கன் கோவில் முன்னே இருந்த வீரனை அழைத்துக் கோவில் பின்புறம் உள்ள கோசாலையில் ஆகாரம் அளித்துப் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு வீனஸுடன் கோவில் பிரகாரத்தில் காலை வைத்தான்.
வீனஸ் கோவில் முகப்பை பார்த்துக் கொண்டே இருந்தான். சிங்கன் வீனஸ் தோளைத் தட்டி சைகை செய்தான்.
சிங்கன் கைகளைத் தலைக்கு மேல் தூக்கி கொண்டே கணீர்க் குரலில், “ஹர ஹர மகாதேவா!” என்றான்.
வீனஸுக்கு மேனி எங்கும் சிலிர்த்தது. ‘நான் யார்? இங்கே எதற்காக வந்தேன்? என்ன செய்து கொண்டு இருக்கிறேன்? என்ன நடக்கிறது?’ என்ற பல கேள்விகளுடன் பிரகாரத்தில் கால் வைத்தவுடன், பொதிகை மலையிலிருந்து வீசிய குளிர்ந்த காற்று நகர வீதிகளை வருடி வந்தது. அந்தக் காற்றோடு கலந்தது ஆராதனை தொடங்குவதற்கான மணியின் முதல் ஓசை ஒலித்து.
சிவன் கோவிலை மையமாகக் கொண்டு வளைய வடிவில் விரிந்திருந்த வீதிகள் ஒழுங்காய் வரைந்த ஓவியம்போலத் தெரிந்தன. சுவாமி ஊர்வலங்கள் தடையின்றி நகர அகலமான பாதைகள், மழைநீரை சுமந்து செல்லும் கற்சாலைக் கால்வாய்கள் (மழைநீர் வடிகால்வாய்கள்) இவை அனைத்தும் பாண்டியர் நுண்ணறிவின் சான்றுகள்.
கோவில் வாசலில் பூவாசம் பரவி இருந்தது. மலரணியார்(பூக்காரிகள்) தங்கள் கூளங்களில் மல்லிகை, குருவிந்தா, செவ்வந்தி மலர்களை அடுக்கி வைத்து வரிசையாக அமர்ந்திருந்தனர். மலரின் மணமும், தீபத்தின் வாசமும் ஒன்றோடு ஒன்று கலந்து பக்தியின் மூச்சாக மாறியது.
வேங்குழல் நாயகியும் வேங்குழல் நாதனும் எழுந்தருளிய அந்தக் கோவில் இசை மூச்சு விடும் இடமாக இருந்தது.
கருவறையைச் சுற்றி அமைந்த புனிதத் தோப்பில் உயர்ந்து நின்ற வேங்கை மரங்கள் தங்கள் பரந்த கிளைகளை வானம் தொடும் அளவுக்கு விரித்திருந்தன. தடித்த கொம்புகளும் கருநிறத் தோலுடன் அவை காலத்தின் காவலர்கள்போல அமைதியாக நின்றன. மேலே கிளைகளில் பொன்னிற வேங்கைப் பூக்கள் கூட்டம் கூட்டமாக மலர்ந்து, காற்று ஒவ்வொரு தடவையும் வீசும்போது மெல்ல உதிர்ந்து தரையில் பொன் மழை பெய்தது போலக் கொட்டிக் கிடந்தன. பூவாசமும் ஈரமான மண்ணின் மணமும் கலந்து அந்த இடம் தெய்வ வாசம் போல நறுமணம் வீசியது.
கோவிலைச் சுற்றி வளர்ந்த ஸ்தலவிருட்சமான வேங்குழல் மரங்கள் காற்றடிக்கும்போது இயற்கையே ஒரு ராகம் பாடியது போல ஓசை எழுப்பின.
வேங்கை மரங்களுக்கு நடுவே மூங்கில் காடுகள் அடர்த்தியாக வளந்திருந்தன. நீளமான பச்சை மூங்கில்கள் ஒன்றை ஒன்று சாய்ந்து நின்று, மேலே இணைந்து இயற்கை மண்டபம் கட்டியிருந்தன.
பொதிகை காற்று அவற்றுள் புகுந்து செல்லும்போது “ஊஊம்… ஊம்ம்…” என்று நீண்ட இசை ஒலி எழுந்தது. அது சாதாரண காற்றொலி அல்ல வேங்குழல் நாதன் ஊதும் நாதம் போல மென்மையாகவும் ஆழமாகவும் கேட்டது. அந்த ஒலி சங்கீத மண்டபத் தூண்களைத் தொட்டுத் திரும்பி, முழுக் கோவிலையும் ஒரு கீதமாக நிரப்பியது.
கோபுரத்தைக் கடந்தவுடன் நந்தவனத்தின் சுகந்தம் மூச்சை நிரப்பியது. மல்லிகை, அரளி, செம்பருத்தி, சம்பங்கி மலர்கள் காற்றோடு ஆடின. அந்த வழியாக நடந்த பக்தர்களின் மனம் தானாக அமைதியடைந்தது.
சங்கீத மண்டபத்தின் சுவர்களில் ஆழமான சிற்ப வேலைப்பாடுகள் செதுக்கப்பட்டிருந்தது. பக்கச் சுவரில் யாழை தழுவிய கலைமகள், அவள் விரல்கள் இன்னும் ஸ்வரத்தைத் தொடப் போகும் நிலையில் உறைந்து நின்றது, வேணுகானம் ஊதும் கன்னியர், இன்னொரு பகுதியில் மத்தளம் தட்டும் கணங்கள் அவர்கள் தோள் தசைகள் கூட அசைவது போலச் செதுக்கப்பட்டிருந்தது.
நடன நிலைகளில் உறைந்த தேவதைகள் வரிசையில் ஒரு கை உயர, ஒரு கண் சாய, பாதம் அரை உயரத்தில் நின்ற அசைவுகள் கல் என்றாலும் அடுத்த நொடி அசைந்து விடுமோ என்று தோன்றியது. ஒவ்வொரு ஆடையிலும் மடிப்புகள் தெரிந்தன. நகைகளில் பொன் ஒளி மின்னும் போலக் கல் பிரகாசித்தது.
சில இடங்களில் புராணக் காட்சிகள் சிவன் ஆனந்த தாண்டவம், பார்வதி பரிவான நிலை, கணபதி, முருகன், பூத கணங்கள் வரிசையாகக் கதை சொல்லும் ஓவியம்போலச் செதுக்கப்பட்டிருக்கும். இசை மண்டபம் என்பதால், நடன கரணங்கள் (அடிகள், கைமுத்திரைகள்) கூடக் கல்லில் பதிக்கப்பட்டிருக்கும்.
சங்கீத மண்டபத்தின் சுவர்மேல் பகுதியிலோ மலர் வளைய வடிவங்கள், அன்னப்பறவை, மகரம், கொடிவளை போன்ற அலங்கார வடிவங்கள் ஓடையாகச் செல்வது போலச் செதுக்கப்பட்டிருக்கும். தீப ஒளி பட்டால் அந்த வடிவங்கள் நிழல் வீசி அசைவது போலத் தோன்றும். அதுதான் மண்டபத்தின் மாய அழகு.
அர்த்தமண்டபத்தின் மையத்தில் நந்தி அமைதியாக அமர்ந்திருந்தது. அது ஒரு கல் சிலை அல்ல உயிருள்ள சிவபக்தன் போலத் தோன்றியது. அதன் பெரும் கண்கள் நேராகக் கருவறை வாயிலைத் துளைத்து உள்ளே இருக்கும் சிவலிங்கத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தன. அந்தப் பார்வையில் அசைவு இல்லை, சோர்வு இல்லை, முடிவில்லா காவல் மட்டுமே, அபிஷேக நீர் வழியும் ஒலி, மணி முழக்கம், வேத மந்திர ஓசை, இவை அனைத்தும் நந்தியின் செவிகளுக்கே முதலில் சேர்வது போல இருந்தது.
பக்தர்கள் உள்ளே செல்லும் முன் நந்தியின் அருகே நின்று கையைக் கூப்பினர்.
“இறைவனிடம் எங்கள் வேண்டுதலை நீ சொல்லித் தர வேண்டும்” என்ற மௌன நம்பிக்கையுடன் அதன் செவியில் சொன்னார்கள். நந்தி அசையவில்லை, ஆனால் பக்தர்களின் வேண்டுதல்களுக்குச் செவி சாய்த்தது.
நந்தியின் திருமேனியில் விழுந்த மலர்கள் உலர்ந்தும் அசையவில்லை. மழை பட்டும், வெயில் பட்டும் அது திரும்பிப் பார்க்கவில்லை. ஏனெனில் நந்தியின் உலகம் ஒன்றே, கருவறையில் சிவநாதன்.
பூமியில் மாலை பிரதோஷ நேரம் ஆழமாக இறங்கியது. கோவில் முழுவதும் தீப ஒளியில் நனைந்தது. நந்தி முன் வில்வ இலைகள் குவிந்திருந்தன. பக்தர்கள் கைக்கூப்பி நின்றனர்.
சிவாச்சாரியார் கருவறைக்குள் நுழைந்து அபிஷேகம் செய்யத் தொடங்கினார். பால், தயிர், சந்தனம், ஒவ்வொன்றும் மந்திர ஓசையோடு சமர்ப்பிக்கப்பட்டது. சிவலிங்கத்தின் மீது அபிஷேகத் துளிகள் முத்துபோல் ஒளிந்தன.
வேதபாடசாலை சிறார்கள், “ஓம்… நமோ… ருத்ராய…” சிவமந்திர உச்சாடன ஒலி முழங்கியது. அந்த மந்திர ஒலி கல் மண்டபத் தூண்களில் மோதித் திரும்பியது.
கூடவே உடுக்கையும், பேரிகையும் எழுந்தது. “தும்… தும்… தும்…” அதற்கு இணையாக வேத மந்திர ஓசை உயர்ந்தது. வேத ஒலி ஒரு பக்கம். உடுக்கை ஒலி இன்னொரு பக்கம். வேத மந்திர ஒலி முழங்கியது. சிவாச்சாரியார் ஆகம முறையில் அலங்காரம் செய்தனர்.
வேங்குழல் நாதனுக்கு சந்தனம், விபூதி, ருத்ராட்சம், வில்வமாலை, குங்குமம், மலர்மாலை, பீதாம்பர பொன்னாடையும், இரத்தின ஆபரணமும் அணிவிக்கப்பட்டது.
வேங்குழல் நாயகி, நாயகன் சன்னதி தீப ஒளியில் நனைந்திருந்தது. வேங்குழல் நாயகிக்கு மரகதப் பச்சையும், பொன்னாரஞ்சும் கலந்த பட்டுத்துகில் உடுத்தியும், பல அடுக்கிலான இரத்தின மாலைகளும், மாணிக்க மரகத லட்சுமி பதக்க ஆபரணங்களிலும் கம்பீரமாக விளங்கினாள்.
நாயகி மார்பில் தொங்கிய சிவனும் சக்தியும் இணைந்த திருமாங்கல்யத் தாலி பொற்கதிர் பிடித்த நிலவுபோல மின்னியது.
மடப்பள்ளியிலிருந்து நெய்வேத்யத்திற்கான அன்னம், பாயசம், பானகம் படைக்கப்பட்டிருந்தது.
கருவறைக் கதவு திறக்கும் ஒவ்வொரு நேரமும் தீப ஒளி வெளியில் வந்து நந்தியின் முகத்தைத் தொட்டது. அந்த ஒளியில் நந்தியின் கண்கள் மேலும் ஜொலித்தன.
கற்பூர தீபம் உயர்ந்தபோது நாயகியின் பொன் திருமாங்கல்யத்தில் பட்ட ஒளி பக்திகடலில் ஆழ்த்தியது. சாம்பிராணி, ஜவ்வாதும் கலந்த தூப வாசத்தில் கற்பூர தீபாராதனை உயர்ந்தபோது, ஒளி எல்லோரின் முகத்திலும் அருள் தடம் தீட்டியது
பலர் கண் மூடி நின்றனர். சிலர் கண்ணீர் மல்கப் பிரார்த்தித்தனர். அந்த நொடி வேண்டுதல் இல்லை, பயம் இல்லை, பரவசம் மட்டும்.
வீனஸிற்கு கற்பூர ஆராதனை காட்டியபோது முகம் வியர்த்துச் சிவந்து நெஞ்சம் உருகி, “அம்மா…” என்றழைத்தான். இதைக் கண்ட சிங்கனுக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக இருந்தது. மணக்கும் திருநீற்றை வீனஸின் நெற்றியில் இட்டான்.
பக்தர்கள் கூட்டத்தோடு கடைசியாக நின்றவர்கள் சிங்கனும், வீனஸுமே, ஆனால் சுவாமியின் இடது புறத்தில் அம்பை நின்றிருந்தாள். அவள் கண்களில் கண்ணீர் வழிந்து ஓடிக்கொண்டிருந்தது்.
அந்த நேரத்தில் கோவில் வாசல் வழியாக ஆலய யானை கோதை மெல்ல நடந்து வந்து நின்றது. அதன் பெரிய காலடி கற்சரளத்தில் பட்ட ஒவ்வொரு அடியும் தாளம் போட்டது போல ஒலித்தது. கழுத்தில் கட்டியிருந்த மணி மெதுவாக ஆடியது “கிளங்… கிளங்… கிளங்…” என்ற ஒலியுடன்.
பக்தர்கள் நெய்வேத்திய பிரசாதங்களை வாங்கிக் கொண்டு பிரகாரங்களை சுற்றியுள்ள அர்த்தமண்டபத்தை நோக்கிப் போக ஆரம்பித்தார்கள்.
சிங்கனும் வீனஸைப் பார்த்து, “நண்பா! எங்கள் அம்மனும், அப்பனும் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். உங்களுக்குத் திருமணம் நடக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்யுங்கள். அப்படியே நடக்கும்.” என்று சொல்லிக் கொண்டே கோவிலின் வெளிப்பிரகாரத்தை காட்டிக் கொண்டே நந்தவனம் வந்தார்கள்.
இரவு நேரம் ஆதலால் பூக்களின் வாசம் மட்டுமே இருந்தது. சிங்கன், “இதற்குப் பின்னால் தன்பெருநையும் படித்துறையும் இருக்கும். வலது புறத்தில் அர்த்தமண்டபமும், கோசாலையும், இடது புறத்தில் மடப்பள்ளியும், வேதபாடசாலையும் உள்ளது.” என்றான்.
பாண்டியர்கள் காலத்தில் குருகுல வேதபாடசாலை இருந்தது. வேதபாடசாலை எப்போதும் கோவிலுடன் கூடிய நதிக்கரையில் அமைத்திருப்பார்கள். வைகறையில் எழுந்து நதியில் நீராடி வேதங்களைப் படித்துக் கோவிலில் ஆகம வேலைகள், கோசாலையை தூய்மையாக்குதல், பசுக்களைக் கவனித்தல், இப்படி கோவில் திருப்பணிகளை மனசுத்தம் கொண்டு செய்ய வேண்டும். மனித மேனியை நெய்யாக உருக்கிப் பக்தி என்ற ஒளியால் இறைவனைக் காணலாம்.
வீனஸ், “இதற்குப் பாடமெல்லாம் படிக்க வேண்டுமா?” என்று சந்தேகம் எமுப்பினான் சிங்கனிடம்.
“ஆம்! கண்டிப்பாக இப்படித்தான் நான்கு வேதங்களையும் கற்க வேண்டும்.” என்ற குரலில் இருவரும் திரும்பிப் பார்த்தனர்.
சிங்கன், “அம்பை…” என்றான்.
வீனஸைப் பார்த்துச் சிரித்தவள் வீனஸ் கைகளில் வில்வ இலையுடன் ரோஜாப் பூக்களையும் கைகளில் திணித்தாள். அப்போது அம்பையின் கருவிழியில் வேங்குழல் அம்மனின் கண்களில் இருந்த கருணை வழிந்தது.
வீனஸிற்கு ஏதேதோ ஞாபகம் வந்து வந்து போனது. ‘இந்தக் கருணையை நான் எங்கோ பார்த்திருக்கிறேனே! எங்கே எங்கே…? இதோ சற்று முன்தானே… சற்று முன்தானே…’ படபடப்புடன் மனது யோசனை செய்தது. ‘ஆஹா! சன்னதியில் கற்பூர ஆரத்தியில்…’ ஞாபகம் வந்தது.
வீனஸிற்கு தான் குழந்தை வடிவில் சிறியதாக மாறியதைப் போலவும், அம்பை நாயகியாக நின்றது போலத் தோன்றிய அக்கணம் பரவசமடைந்தான்.
அலை வருடும்…
