அலை 9
அம்பை சிங்கனிடம் பேசிக் கொண்டே, “ஆமாம் எங்கே சிங்கா எராவும், வண்ணாவும்?” என்றாள்.
கோசாலைக்கு அருகில் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றான். அம்பையுடன் பேசிக்கொண்டே படித்துறைக்கு அருகே வந்தார்கள்.
அம்பை வீனஸிடம், “இவளே எங்கள் தண்பெருநை. எங்களின் தாகம் தீர்க்கும் பவித்ரமானவள். எங்களின் பாவங்களைக் களையும் கங்கை இவளே!” என்றாள்.
வீனஸிற்கு ஒன்றுமே புரியவில்லை. ‘என்ன இது ஆற்றைக் கூடவா தெய்வமாக நினைப்பார்கள்?’ புரியாமல் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டு நின்றான்.
அவனின் முகம் போன போக்கைக் கண்ட அம்பைக்கும், சிங்கனுக்குமே ‘ஐயோ பாவம் இவன்’ என்றே தோன்றியது.
அம்பை வீனஸிடம், “பயம் கொள்ளாதீர்கள், போகப் போகப் புரிந்து விடும். சரியா?” என்றாள்.
சிங்கன், “என்ன அம்பை இன்றைக்கு நாட்டியமா?” என்றான்.
“அட! ஆமா சிங்கா. சரி, போய்த் தயாராகிறேன்.” என்று வீனஸைப் பார்த்து, “வந்து விடுங்கள்.” என்றாள்.
வீனஸ் எதற்கென்றே தெரியாமல் தலை ஆட்டினான்.
சிங்கன், “வாருங்கள், சிறிது நேரம் அமரலாம்.” என்று அழைக்கப் படித்துறையில் உட்கார்ந்தார்கள்.
தண்பெருநை அமைதியாக மெதுவாகப் போய்க் கொண்டிருந்தாள். இருட்டில் அவளின் அழகு தெரியவில்லை. அப்போது அங்கிருந்த மக்களிடையே சலசலப்பு கேட்டது. பரப்பாக இருந்ததது அந்த இடம். புறாக்கள் கூட்டம் ஒன்று சட்டெனப் பறந்து ஓடியது போலக் காலியாக இருந்தது அந்த இடமே!
ஆச்சரியமாக வீனஸ் சிங்கனை பார்த்தான். “என்ன இது?” என்று வினவினான்.
சிங்கன் மெதுவாகச் சிரித்துவிட்டு, “அதுவா! இன்னும் சற்று நேரத்தில் உங்களது கேள்விகள் அனைத்திற்கும் விடை கிடைத்துவிடும்.” என்றான்.
வீனஸ், “ஆஹா! நீங்கள் என்ன ஜோதிடரா? என்னுடைய கேள்விகள் பல உள்ளது. அது அனைத்திற்கும் பதில் கிடைக்குமா என்றால் சந்தேகம் தான், இருந்தாலும் என் அவசரமான கேள்விகளுக்குப் பதில் கிடைத்தால் கூடப் போதுமானது. என்ன சொல்கிறீர்கள்?” என்றான்.
சிங்கன், “நான் ஜோதிடர் இல்லைதான் ஆனால் இந்தக் கடைசி கேள்விக்குப் பதில் கிடைத்துவிடும். ஆனாலும் சொல்ல முடியாது. இந்த நாயகியின் கருணை இருந்தால் உங்களது பூர்வ ஜென்மம் கூடத் தெரியலாம்.” என்றான். ஏதோ யோசனையுடன்.
இவர்களின் சம்பாஷணையின்போது வெளியே மஞ்சள் இரவு வேங்குழல் நாயகத்தின் கோவில் தீப ஒளியில் மூழ்கியிருந்தது. அர்த்தமண்டபக் கற்கள் கூட ஒளி குடித்து ஜொலித்தன. தூப வாசமும் மல்லிகை மணமும் காற்றில் கலந்து இசை வரப்போகிறது என்று முன்கூட்டியே சொன்னது.
கோவில் வாசலில் பல்லாக்கு ஒன்று வந்து நின்றது. திரை மெதுவாக விலகியது. பல்லாக்கைப் பார்த்தவுடன் வானவீதியில் உள்ள நட்சத்திரங்களின் கூட்டங்கள் தலையைச் சிமிட்டி எட்டிப் பார்த்தது யார் அவள் என?
முதலில் தெரிந்தது திரையை விலக்கிய ஓர் அழகிய மருதாணிச் சிவப்புப் பூசப்பட்ட கைவிரல்களும், பல்லாக்கிலிருந்து கீழே வைக்கப்பட்ட வெண்மையான பாதமும், பாதத்தின் வட்டங்களில் பூசப்பட்ட மருதாணிச் சிவப்பும், இரண்டு கால்களில் நூறு மணி கொண்ட பரதநாட்டிய சலங்கை கட்டப்பட்டிருந்தது. சலங்கை ஒலி எழுப்பவில்லை ஜல் ஜல் என் இசையை எழுப்பியது.
அவள் தலைகுனிந்து முதலில் கோபுரத்தை நோக்கி அஞ்சலி செய்தாள். ‘இன்று என் உடலும் அசைவும் உனக்கே சமர்ப்பணம்!’ என்றவள் நேராகச் சுவாமியின் கருவறை நோக்கி நடந்தாள்.
தேவலோகம் செல்லச் சென்ற தேவலோக யுவனர்களும், யுவதிகளும் ‘ஆஹா! அபரஞ்சித காஞ்சனை, யார் இந்தச் சௌந்தர்ய தாரகை?’ என நின்று ரசித்தனர் என்பதை அப்போது அவர்களின் மீதிலிருந்து வீசிய திவ்ய பரிமள சுகந்தம் தென்றலாக வந்து நறுமணத்தைக் கொடுத்தது.
மகாமண்டபக் கற்கள் அவள் அடியை ஏற்றுக்கொண்டன. வேங்குழலியின் கருவறை வாசலில் நின்றபோது, தீபாராதனை ஒளி சிவலிங்கத்தைத் தொட்டுத் திரும்பி அவள் முகத்தில் விழுந்தது. அவள் கண்கள் மெதுவாக மூடியது. அபிநயம் இல்லை. நடனம் இல்லை. பக்தி மட்டும்.
கணீகையர் பெண் நாட்டிய மயூரி, மயூரியின் அன்னை ரதிமஞ்சரி, “மயூரி, வேண்டிக்கொள்.” என்றார். அன்னையிடம் திரும்பிய மயூரியைப் பார்த்த ரதிமஞ்சரியோ தன் பெண்ணின் அழகில் சொக்கி நின்றார்.
தலையில் மூன்று கோடாக நெற்றியில் ஜொலித்த அந்த முத்தும் பவளமும் கலந்த நெற்றிச்சுட்டி, சந்திரன் சூரியன் சின்னம் பீம்பை, தேனீ இறகின் கருநிற மென்மை போலக் கூந்தல் செழித்து சுருள்விட்டுப் பின்னி அதில் மல்லிகைச் செண்டு சூடி இருந்தது. தலையின் பின்னால் வட்டமாய் அமர்ந்திருந்த ரகோடி பின்னலின் அசைவுக்கு இணையாக அந்த மல்லிகை மாலை கூட ஆடியது. காதுகளில் ஜிமிக்கி குண்டலங்கள் காற்றைத் தொட்டு மெதுவாக அசைந்தன.
எட்டாம் நாள் பிறைநிலா வளைவைப் போன்ற நெற்றி திலகத்தால் ஒளிர்ந்தது. மன்மத வில் போல வளைந்த புருவங்கள்கீழ், நீலத் தாமரை இதழ் நனைந்தது போல ஆழமுள்ள கண்களில் கரிசை இலையின் கண்மை தூரிகை ஓவியத்தில் துடித்துக் கொண்டே மைவிழியில் பக்தி உணர்வு நெகிழ்ந்து பிரகாசித்தன.
செம்பகப்பூ மொட்டின் மென்மை வடிவம்போல மூக்கு, கிளிக் கொக்கின் நய வளைவுடன் செதுக்கப்பட்டிருந்தது. பவளத் துகள்களை உருக்கி வடித்தது போலச் சிவந்த உதடுகள்; அவை சிரித்தால் முத்துச் சரம் போல ஒழுங்காய் மின்னும் பற்கள் வெளிச்சம் கொடுத்தன. சங்கு வளைவுபோல நீண்ட கழுத்தைச் சுற்றி ரத்தின மாலைகள் ஒளி வளையம் போட்டன.
மயிலின் நீலமும், குங்குமச் சிவப்பும், மரகதப் பச்சைப் பட்டுக் கலந்த நாட்டிய உடை முன் விசிறி மடிப்புடனும், இடுப்பில் பொன் ஒட்டியாணம். மார்பில் அடுக்கு அடுக்காக ரத்தின மாலைகளும், காசுமாலையும். தோளில் பொன் வங்கி வளையல்கள் பாம்பு வளைவு போலப் பிடித்து நின்றன. மணிக்கட்டில் மரகத வைர வளையல்கள் அவள் கைகளை அசைக்கும் முன்பே தாளம் போட்டன. அனைத்தும் ஆகம விதிப்படி அலங்கரித்து இருந்தன. அவள் நிற்கும் நிலையே ஒரு ஆராதனையாக இருந்தது.
“அன்னையே போலாமா?” என்ற சப்தத்தில் ரதிமஞ்சரி, “வாம்மா…” என்று மயூரியை அழைத்துக் கொண்டு அர்த்தமண்டபத்தை நோக்கி நடந்தார்.
சிங்கன் வீனஸிடம், “வாருங்கள் போகலாம்.” என்றான்.
வீனஸ், “அங்கே என்ன நடக்கும்?” என்றான்.
“எங்கள் சிவநாட்டிய தாரகையின் நடனம் இருக்கிறது.” என்றான்.
வீனஸ், “நடனம் தானே, இதற்கு ஏன் இவ்வளவு பரபரப்பு?” என்றான் சாதாரணமாக.
சிங்கன், “நடனம் தான். உங்கள் யவனபுரியில் நடக்கும் நடனம் வேறு. இங்கே நீங்கள் பார்க்கும் தெய்வீக நடனம் வேறு.” என்று சொல்லிக் கொண்டே அர்த்தமண்டபத்தின் கடைசி யாழி தூணின் அருகே நின்றனர்.
அர்த்தமண்டபம் முழுவதும் மக்கள் நிரம்பி இருந்தார்கள். மண்டபத்தின் ஒருபக்கம் வாத்தியர்கள் வாத்தியக் கருவிகளுடனும் அவர்களுடன் அம்பை ஜதிக்கட்டையுடன் உட்காந்து இருந்தாள்.
வீனஸ் அம்பையைப் பார்த்தவுடன் சிங்கனிடம், “அது அம்பை தானே? அது என்ன?” என்றான் ஜதிகட்டையைப் பார்த்து.
சிங்கன், “அவசரம் வேண்டாம். இன்னும் சில நாழிகை அது என்னவென்று தெரிந்து விடும்.”
வீனஸ் ‘என்ன இது எதையுமே தெரிந்து கொள்ள முடியவில்லை’ என்ற குழப்பத்துடன் பார்ததான். அப்போது ‘நடுவில் யார் அது சாதாரண உடையில் துகிலன் மாதிரி’ என்று பார்த்தான். கூடவே இரு பெண்களிடம் பேசிக்கொண்டிருந்தான். அதைக் கண்டதும் சந்தேகத்தில் சிங்கனிடம் கையை நீட்டிக் கேட்டான்.
அவன் நீட்டிய இடத்தில் துகிலன் தான், நீண்ட வஸ்திரத்தை தலையைச் சுற்றி மூடிக்கொண்டு பெண்களிடம் கிசுகிசுத்தான். ஒரு பெண் வயதானவள், இன்னொரு இளம் பெண் ஒருத்தியுடன் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் அவ்வப்போது தலையைத் திருப்பித் திருப்பித் தன் முட்டைக் கண்ணை உருட்டி உருட்டித் தேடிப் பார்த்துக்கொண்டிருந்தான்.
சிங்கனுக்கு அதிக கோபம் வந்தது. “பாவி பாவி, வயிற்றுவலி என்று சொல்லிவிட்டு இங்கே பெண்களிடம் சிரித்துக் கொண்டிருக்கிறானே!” என்பதைக் கண்டு பொறமையுடன், “வா! நீ வருவாயில்லையா அப்போது நன்றாகக் கவனித்துக் கொள்கிறேன்.” என்றான்.
சிங்கனின் கோபத்தையும், துகிலனின் அட்டகாசத்தையும் கண்டு விழுந்து விழுந்து சிரித்தான் வீனஸ்.
மண்டபத்தின் நடுவே ஆனந்த தாண்டவம் புரியும் பெரிய நடராஜர் திருமேனி முன் பூ வாசனை, தூப வாசனை கலந்த பரவச அமைதியுடன் இருந்தார்.
மயூரியும், ரதிமஞ்சரியும் அர்த்தமண்டபம் வந்தததும் இறைவனை வணங்கி அம்பையிடம் வந்தார்கள் ரதிமஞ்சரி அம்பையின் அருகே அமர்ந்தார். மயூரி அம்பையிடம் குருமுத்திரை இட்டாள். அம்பை ஆசீர்வதித்தாள்.
மயூரியின் அழகைக் கண்டு புளங்காகிதம் அடைந்தவள், “போய் ஆடு!” என்றாள்.
சிரித்துக் கொண்டே வீனஸ் திரும்பி அர்த்தமண்டபத்தைப் பார்த்தவன் ஒருநிமிடம் அதிர்ந்தான். ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்தான்.
மயூரி அணிந்திருந்த ஆபரணங்கள் வெறும் அலங்காரம் அல்ல அர்ப்பணிப்பின் அறிகுறிகள்.
ஒட்டியாணம் இடுப்பில் ஒலிக்கக் காத்திருந்தது. மயூரி அரைமண்டியில் இறங்கி அஞ்சலி முத்திரை செய்தாள்.
முதல் அடி நிலத்திற்கு நமஸ்காரம் செய்தாள். இரண்டாம் அடி கலைக்கு நமஸ்காரம். மூன்றாம் அடி சிவனுக்கு சமர்ப்பணம் செய்தாள். அபிநயம் பிறந்தது.
அம்பை ஜதி சொல்ல ஆரம்பித்தாள். அம்பையின் குரல் மெல்ல எழுந்தது. இனிமையான வெள்ளி ஓசைபோல, “தை தித் தை… தோம் தக தோம்…” ஜதி மண்டபக் கற்களைத் தட்டித் திரும்பியது. அதன் கூடவே மிருதங்கம் தாள வாத்தியங்களும், நாதஸ்வர மங்கலநாதமும் சேர்ந்தது. அடுத்து சிவமானச பூஜையை அம்பை பாட ஆரம்பித்தாள்.
“தை யம் தித் தோம்…” அதன் பின் அவளின் இனிய குரல் உயர்ந்தது.
“ரத்னை கல்பிதமாஸனம்…”
மயூரி கைகளால் ரத்தின ஆசனம் அமைத்தாள் கற்பனையில் அல்ல, மன பூஜையில். தரையில் வைக்கவில்லை சிவபெருமானை இதயத்தில் அமர வைத்தாள்.
அடுத்த வரி “ஹிமஜலை ஸ்நானம்…”
அவள் விரல்கள் கங்கை ஆனது. தலையிலிருந்து நீர் பொழிந்தது போல அபிநயம் ஓடியது. முகத்தில் பக்தியையும் கண்களில் ஈரத்தையும் காட்டினாள்.
“திவ்யாம்பரம்…” அவள் கைகள் பட்டு ஆடை போர்த்தின.
“நானா ரத்ன விபூஷிதம்…”
ஒவ்வொரு ஆபரணமும் காற்றில் வரைந்து சிவனுக்கு அணிவித்தாள். அந்த நேரத்தில் மயூரியின் கண்கள் திறந்தன. அபிநய சுற்றுப் பார்வையை பார்த்தவளின் நீலவிழிகள் அர்த்தமண்டப நிழல் ஓரத்தில் நின்ற ஒருவனின் நிழல் ஓவியத்தைக் கண்டு வியாபித்து நின்றது.
மயூரியின் இதயம் திறக்க ஆரம்பித்தது. உடனே அம்பையின் குரலில்,
“ஹ்ருத்கல்பிதம் க்ருஹ்யதாம்…”
என்று பாடியது கேட்டபோது,
“இதயத்தில் செய்த பூஜையை ஏற்றருளும்” என்ற வரி,
‘சிவனுக்கா? அல்லது விதி முன்னால் நிறுத்திய அந்தப் பார்வைக்கா?’ என்ற கேள்வி மயூரியின் மனதில் எழுந்தது.
கைகளில் மருதாணிச் சிவப்பு முத்திரைகள் விரல்கள் அசைந்தபோது அவ்வப்போது மலர்ந்த பூக்கள்போலத் திறந்தன. அபிநயத்தில் சிவனை அழைத்தாள். சலங்கை ஒலி உயர்ந்தது. பாடல் தீவிரமானது. நாட்டியம் மேல்ஜதிக்கு ஏறியது. மயூரி ஒரு சுற்று எடுத்தாள் நாட்டிய உடை பட்டு விசிறி மடிப்பு மலர்போல விரிந்தது.
மயூரியின் பார்வையில் அபிநயம் வந்தது. அவள் கண்கள் வட்டமாகச் சுற்றின. அந்த நொடி மறுபடியும் பார்வை அவனிடம் வந்து நின்றது.
இந்த முறை நிழல் உருவத்தின் உதட்டில் புன்முறுவல் தெரிந்தது போல இருந்தது.
ஒரு கணம் தாளம் ஓடியது. ஆனால் அவள் இதயம் புதிதாகப் படபடப்புடன் அடித்தது. பக்தியின் நடுவே ஒரு புதிய உணர்வு மின்னியது.
ஆனாலும் அவள் அபிநயம் தப்பவில்லை. அதன் ஆழம் மாறியது. அதை அம்பை கண்டு கொண்டாள். அம்பையின் குரல் மேலே ஏறியது.
“ஶ்ரீ மஹாதேவ ஸம்போ” என்ற உச்சரிப்பில் அம்பையின் குரல் மண்டபத்தை நிரப்பியபோது மயூரி கடைசி அடிபாதம் பதித்தாள். பக்தி, சிருங்காரம், கருணை மூன்றும் ஒன்றாகக் கலந்து நடனத்தை முடித்தாள்.
அலை வருடும்…
