அலை கடல் பெண்ணவள்

அலை 10

 

சலங்கை நீண்ட மழை போல ஒலித்தது. நடராஜரை நோக்கித் தலைகுனிந்து மயூரி அஞ்சலி செய்தாள். மக்களின் கண்களில் கண்ணீர் துளிகள் வந்தது. அம்பையின் தேன் குரலிலும், மயூரியின் பரதத்திலும் அந்த வேங்குழல் கோவில் பக்திப் பெருக்கில் ஸ்தம்பித்தது.

“ஆஹா… ஆஹா…” என எல்லோர் மனதிலும் மயூரி நிறைந்தாள். தண்பெருநை நதி கூட அமைதியாக வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்தி இசை நாட்டிய கானத்தை ரசித்தாள் என்பதை அவளின் நீரோட்டம் காட்டியது.

(நான் செய்த பூஜை சரியாகச் செய்யப்பட்டதோ, தவறாகச் செய்யப்பட்டதோ எதுவாக இருந்தாலும் அனைத்தையும் மன்னித்து அருள்வாயாக. கருணையின் கடலே! மகாதேவா! உமக்கே ஜயம் ஜயம்.)

மயூரி அம்பையிடம் வந்தாள். அம்பை மயூரியைக் கட்டிக் கொண்டாள். ரதிமஞ்சரி அம்பையிடம் வார்த்தைகள் இல்லாமல் நன்றியைத் தெரிவித்தார். 

அம்பை ரதிமஞ்சரியிடம், “எப்படி அம்மா இருந்தது நாட்டியம்?” என்றாள்.

“ஆனந்த தாண்டவத்தில் இசையும் நாட்டியமும் உள்ளம் உருகிப் போனது அம்பை. உனக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன்?” என்றார் ரதிமஞ்சரி.

அம்பை ரதிமஞ்சரியின் கைகளைப் பிடித்து, “நீங்கள் தான் எனக்குக் குரு அம்மா. நீங்கள் இல்லையென்றால் நானும் இல்லை இந்தக் கலையும் இல்லையே அம்மா, உங்களைவிட நாட்டியத்தில் மிஞ்ச எவருமே இல்லையே அம்மா. இப்போதுதான் நீங்கள் நாட்டியம் ஆடுவதை நிறுத்தி விட்டீர்கள்!” என்ற ஆதங்கத்துடன் ரதிமஞ்சரியின் காலில் விழுந்து வணங்கினாள்.

ரதிமஞ்சரி, “சௌந்தர்யமாக வாழு மகளே!” என்றார். 

செப்புச்சிலை போல் எழுந்த அம்பையை கண்டவரின் கண்கள் ‘எத்தனை துயரங்கள் கண்டங்களைத் தாண்டி வந்தவள் இவள்’ என்று நினைத்துக் கொண்டே இறைவனை வணங்கினார்.

மயூரியின் பார்வை அர்த்தமண்டபத்தின் நாற்புறமும் சுழன்றது. மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கலையத் தொடங்கியதில் அந்த உருவம் மயூரியின் கண்களில் படவில்லை. கண்களில் ஒரு நிமிடம் சலிப்பு வந்தது.

இதைக் கண்ட அம்பை ரதிமஞ்சரியிடம், “நாங்கள் முன்வாயிலில் இருக்கிறோம்.” என்றவள் மயூரியை கூட்டிக் கொண்டு நடந்தாள்.

ரதிமஞ்சரி வாத்திய குழுக்களை வீடு செல்ல அவர்களிடம் கூறிக் கொண்டிருந்தார். 

 

மயூரிக்கு கோபம் வந்தது. ஆனாலும் வெளிக்காட்டவே முடியாது. யார் அவன்? உண்மையில் அவன் மனிதனா இல்லை கந்தர்வனா? யார் அவன்? கேள்விகள் வந்து வந்து போயின்.

சிறுவயதிலிருந்தே மயூரியை வளர்த்தவள் அம்பை. அவளின் கூரிய பார்வையில் மயூரி தப்ப முடியுமா என்ன?

இரண்டாவது யாமம் ஆதலால் வாடைக் காற்று மிகவும் குளிராக வீசியது. மேனி நடுங்கியது. கோவில் வாசலில் பல்லாக்கு இருக்கும் இடம் வந்தபோது திடீரென ஒரு சப்தம் கேட்டது 

 

மயூரியும், அம்பையும் ஒருசேரத் திரும்பினர். எங்கிருந்தோ ஒரு குதிரை ஓடி வருவது போல இருந்ததும் மயூரி பயத்தில் கண்ணை மூடிக் கொண்டாள்.

மயூரியின் கைகளில் ஏதோ ஈரமாகவும், சூடான காற்று வந்ததையும் உணர்ந்தவள் கண்மலர்க் குடைகளை மெதுவாக விரித்தவளின் அருகே ஒரு அழகிய வெள்ளைக் குதிரை தன் கைகளை நாக்கால் தடவிக் கொண்டு இருப்பதைப் பார்த்ததும் 

பளீரென ஏதோ அதிர்வு இதயத்தில் வந்து போனது. உள்ளம் கனிந்தாள். மிகவும் மகிழ்வுடன் கைகள் நடுங்க மென்மையாக எராவை தடவினாள். மயூரியின் பவளவாயில் ஏதோ வார்த்தை துடித்தது. ஆனால் வார்த்தைகள் தெரியவில்லை.

மயூரியின் தடவலில் எரா கழுத்தை உயர்த்தி “ஹ்ரீஇ…” என்று மகிழ்ச்சியுடன் கனைத்து, முன் குளம்புகள் மண்ணைத் தட்டி மயூரியின் கைகளில் தலையைத் தேய்த்தது. மயூரிக்கு அது “நான் உனக்காகக் காத்திருந்தேன்” என்று பேசுவது போல இருந்தது.

அம்பைச் சிரித்துக் கொண்டே இந்தக் காட்சியை ரசித்துக்கொண்டிருந்தாள், கூடவே வேறு சிலரும் இதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சிவமானச பூஜையில் இரண்டு இதயங்கள் ஒன்று சேர்ந்தததா? அந்த இரவு ஒரு நாட்டியம் மட்டும் நடக்கவில்லை. ஒரு காதல் அமைதியாகப் பிறந்ததா? காதல் எழுதப்பட்ட ரகசிய எழுத்துபோலத் தெரியுமா?

மயூரியின் நிலையைப் பார்த்த அம்பை, “அடடா! எரா எங்கே வந்தாய்? எப்படி கண்டுபிடித்தாய் என் மயூரியை?” என்றவளை எரா பார்த்துத் தலையை மட்டும் ஆட்டிவிட்டு மயூரியை உரசிக்கொண்டும் பூப்போல் இடித்துக் கொண்டுமே இருந்தது.

மயூரி அம்பையிடம், “யார் இவன், இவ்வளவு பாசமாக இருக்கிறானே?” என்றாள்.

அம்பைச் சிரித்துக் கொண்டே, “இவர் யவனதேசத்திலிருந்து நம்மைக் காணவே வந்திருக்கிறார். இவரின் நாமம் எரா. மயூரி, நாங்கள் முன்னமே நண்பர்கள் ஆகிவிட்டோம். பாசக்காரன் இவன்.” என்றாள்.

மயூரிக்கு ‘என்ன யவனதேசமா, அபோது நான் பார்த்தவன் நிழலா இல்லை நிஜமா?’ என்ற கேள்வி தொக்கி நின்றது. விழிகள் நாற்புறமும் ஒரு நிமிடம் சுற்றியது.

‘எங்கும் தட்டுப்படவில்லையே’ என்ற தேடலில் சோர்ந்தாள்.

அப்போது ரதிமஞ்சரி அங்கே வந்தவள், “அம்பை, யாருடையது இந்தக் குதிரை? என்ன இங்கே நிற்கிறீர்கள், பல்லாக்கில் ஏறுங்கள்.” என்றாள் அவசரமாக.

அப்போது கோவில் உள்ளிருந்து வந்த சிறுவன், “அம்மா, சிவாச்சாரியார் தங்களை அழைக்கிறார்.” என்றான்.

“இதோ வருகிறேன்.” என்ற ரதிமஞ்சரி, “உள்ளே அமருங்கள், உடனே வருகிறேன்.” என்றவள் கோவில் உள்ளே சென்றாள்.

அம்பைக்கும் மயூரிக்கும் தவிப்பு வந்தது. ‘என்ன இது எராவை எப்படி இங்கே விட்டுச் செல்வது’ என்று.

இவர்களின் தவிப்பை தூரத்திலிருந்து கண்ட இருவர் இவர்களிடம் வந்தார்கள்.

டக்டக்கெனக் காலடிச் சப்தம் மயூரியின் காதுகளில் கேட்டது. இதயம் படபடத்தது.

இந்தச் சப்தம் அவளை என்னவோ செய்தது. காலடிச் சப்தம் இவள் அருகே கேட்டது. எங்கிருந்தோ வந்த மூச்சுக்காற்று இவளைத் தொட்டது.

‘ஆஹா’ என்ற வேதனை ஒன்று வந்து போனது. வேங்குழலி நாயகியின் கோபுர கலசத்தின் நேர்கோட்டில் அந்த நொடி நிலவு வெளிச்சம் இறங்கிப் பொன்னும் வெள்ளியும் கலந்த நிறத்தில் கோவில் வாயிலைப் பிரகாசப்படுத்தியது.

பூர்ண ஒளி வெள்ளத்தில் ஆறரை அடி உயரத்தில் பொலிவும் இளமையுடன் ஒருவனும் அவனுடன் ஒருவனும் இவர்களை நோக்கி வந்தனர்.

அவனைக் கண்டதும் எரா “ப்ர்ஃப்… ப்ர்ஃப்…” மெதுவான தொண்டை அதிர்வுடன் வரவேற்புக் குரலைக் கொடுத்தது.

அம்பை, “என்ன சிங்கா, எங்கே போனீர்கள்? பார், எரா வந்துவிட்டான் கண்டுபிடித்து” என்று கேட்டுக்கொண்டே வீனஸைப் பார்த்தாள். 

வீனஸ் மிருதுவாக, “எரா…” என்றான். கேட்டது எராவிடம், பார்த்து மயூரியை.

சிங்கனின் கவனமோ வேறு பக்கம் இருந்தது, மொத்தத்தில் அனைவரும் அவர்களின் வேறு உலகத்தில் இருந்தார்கள் அம்பையை தவிர.

குனிந்த தலை நிமிராமல் கைவிரல்களை எராவிடம் கொடுத்து விட்டு நிலத்தைப் பார்த்து நின்றாள் நாட்டிய மயூரி. எராவோ அவளின் மருதாணிச் சிவப்பிட்ட தளிர் விரல்களை ஏதோ ஒரு புதிய காய்போல் உள்ளதைபோல் வலிக்காமல் கடித்துக் கொண்டு விளையாடியது. 

மயூரியும் சற்றே வலியுடன் கடித்துவிட்டால் “ஸ்ஸ்ஸ்…” என்ற சப்தத்துடன் விளையாட ஓவ்வொரு முறையும் விரல்களைப் பிரித்துப் பிரித்து நீட்டிக் கொண்டே முனங்கினாள். அப்படி அவள் முனங்கும்போது முகம் பல அபிநய முத்திரைகளைக் காட்டியது. புதியவனின் அருகாமை அவளை அவஸ்தைக்குள்ளாக்கியது. மேனியின் ஒவ்வொரு பாகமும் வலிக்கத் தொடங்கியது. மயூரியின் மூச்சுக் காற்றே அவள் கன்னத்தில் வெக்கையை உண்டாக்கியது. ‘ஐயோ என்ன இது’ என்று நெகிழ ஆரம்பித்தாள். 

இதைக் கண்டுகொண்டவன் வீனஸ் மட்டுமே.

வீனஸின், “எரா…” என்ற குரலைக் கேட்டதும் மயூரிக்கு தலைவெடித்துப் பெரிய துயரம் வந்தது போல் இருந்தது. அவளை இன்ப வேதனைக்கு உள்ளாக்கிய இந்தக் குரல்… அதே குரல்! தவமாய் தவமிருந்து காத்து இருந்த குரல்! எண்ணவோட்டம் சுழன்றது பல்வேறாக.

மயூரி அறியாமலே கண்விழிகளை மட்டும் திருப்பித் தலையை உயர்த்திப் பார்த்தாள். நெடிய நிழலுருவம் நிஜ வடிவமெடுத்து நின்றது. சாம்பல் கலந்து நீலக்கண்களுடன் மையிட்ட விழிகள் பார்த்தன. நின்ற இடம் மறைந்தது, சுற்றி நின்றவர்கள் மறைந்தனர், யாருமற்ற வெளியில் இருவர் மட்டுமே நின்றனர்.

 

பால்வெளியில் பளிங்கு சிலைகள்

இரண்டும் 

பார்வையால் பசியாற ருசியாற

இரண்டும்

பறவைகளாய் சிறகு விரிக்க

இரண்டும்

நித்திலத்தில் நீ வேறு நான் வேறு 

இரண்டும்

பேசிக் கொண்டே பிரிந்தன

இரண்டும்

பிரிந்த அன்றில் இணைகள் 

இரண்டும்

நதிக்கரையில் சந்தித்தன

இரண்டும்

பழையது மறந்து புதியதாக

இரண்டும்

கண்ணோடு கண் நோக்கின

இரண்டும்

நீ யார் நான் யாரென

இரண்டும்

நின்றது இக்கணம் இணை சேர

இரண்டும்

வேங்குழல் மயக்கத்தில் பிதற்றிக் கொண்டது 

இரண்டு இதயங்கள்…

 

எராவின் சிலிர்ப்பில் பார்வைகளை வருத்திக் கொண்டு பிய்த்துக் கொண்டனர் இருவரும்.

சிங்கன், “சொல் அம்பை” என்றான். 

அம்பை, “என்ன, நான் எப்போது உன்னைக் கூப்பிட்டேன், நீ எப்போது என்னிடம் கேட்கிறாய்? என்றாள் பரிகாசமாக.

“ஓ… அதுவா…?” என்று இழுத்துக் கொண்டே, “சொல் அம்பை” என்றான் கவனமே இல்லாமல்.

என்ன இது, இவன் என்ன பார்க்கிறான்? என்று அம்பை சிங்கன் பார்வை போன வழியில் பார்வையைச் செலுத்தியவளுக்குச் சிரிப்பு வந்தது.

தூரத்தில் தெரிந்த மண்டபத்தில் மூன்று நிழல்கள் நின்றன. அதில் ஒரு உருவம் கைகளில் இருந்த பிரசாதத்தை ருசிபார்த்துக் கொண்டே, பக்கத்தில் இருந்தவர்களின் தொன்னைகளையும் பிடுங்கித் தின்று கொண்டிருந்ததது. வயதான அம்மா ஏதோ சொல்லிக் கொண்டே திட்டிக்கொண்டிருந்தாள். அதைக் கண்டு கொள்ளாமல் நெய்வழியும் பொங்கலை ருசி பார்த்துக் கொண்டே அக்கம் பக்கம் கண்களைத் திருப்பிக் கொண்டே தின்றது. அருகில் ஒரு பெண் வேறு இதைக் கவனிக்காமல் எங்கோ வெறித்துக்கொண்டிருந்தாள்.

அது வேறு யாருமல்ல துகிலன்தான். இதைக் கண்ட சிங்கனுக்கு கோபம் தலைக்கேறி நின்றது.

சிங்கன் அம்பையிடம், “இதோ ஒரு நொடியில் வருகிறேன்.” என்றான். 

அம்பைக்கு புரிந்து போனது இன்றைக்கு துகிலன் நிலைமை பாவம் என்று.

சிங்கன் அவர்கள் நின்ற பக்கம் துகிலனின் பின்னால் சென்றான். 

“வயிற்று வலி சரியானதா துகிலா?”

பின்னாலிருந்து கேட்ட குரலில் தூக்கி வாரி, பொங்கல் வாயுடன் துகிலன் கண்கள் தானாகத் திரும்பின. கையை நடுவில் நிறுத்தினான். பொங்கல் உருண்டை கையில் உறைந்து நின்றது.

சிங்கன் கீழே பார்த்தான். துகிலன் அருகே காலியான தொன்னை குவியல். மீண்டும் கேட்டான். “வயிற்று வலி எங்கே?” 

துகிலன் வயிற்றைத் தொட்டான். 

“ஐயோ! இப்போ ரொம்ப வலிக்குது.” என்றான்.

அதற்குள் அங்கே வந்த அம்பை துகிலன் அருகே வந்து மெதுவாகக் கேட்டாள்.

“வயிற்று வலி எந்த ராகம் துகிலா? பொங்கல் ராகமா? லட்டு ராகமா?” துகிலன் முகம் சுருங்கியது.

“அக்கா, நீயுமா? தயவுசெய்து காப்பாத்து.” என்றான்.

 

சிங்கன், “இதை நீ பொங்கல் சாப்பிடுவதற்கு முன்னால் யோசித்திருக்க வேண்டும்.” என்றான். 

அம்பைக்கு சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தாள்.

சிங்கன், “நாட்டியம் பார்க்க வயிற்றுவலி எடுத்த முதல் பக்தர் நீங்கதான் போல?” என்றான் கோபமாக.

துகிலனின் அம்மா, “கோபிக்காதே அப்பா. அவன் மனசு குழந்தை மாதிரி. சாப்பாட்டைப் பார்த்தா புத்தி போயிடும். ஆனால் பொய் மனசு இல்ல.” என்றாள்.

துகிலன் அம்பையையும், சிங்கனையும் பார்த்துக் கொண்டே மனதில் ‘போரில் கீழே விழுந்திருந்தால் கூட இவ்வளவு அவமானம் வராது, சரி உணவு முக்கியமானது’ என்ற தீர்மானத்துடன் திடமாக நின்றான்.

 

அலை வருடும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page