அவள் முதல் அவள் வரை.
**************”**********************
அத்தியாயம் – 1.
“””’”””””””””””””””””””
சக்ரவர்த்தியின் வேளாங்கண்ணிக் கடற்கரை.
வேளாங்கண்ணிக் கடற்கரை யாராலும் விற்கப்படவுமில்லை, சக்ரவர்த்தி விலை கொடுத்து அதை வாங்கிடவுமில்லை.
இயற்கை எல்லோருக்கும் பொதுவானதைப் போலவே தனித் தனியுமானது. இந்த இரண்டாவது விதியின் அடிப்படையில்தான் இதோ… இப்போது இது சக்ரவர்த்தியின் வேளாங்கண்ணிக் கடற்கரை.
மாலை நேரம். அலைகள் நுரைகளைக் கொண்டு வந்து கரையில் கோலமிட்டுக் கொண்டிருந்தன.
எந்தக் கூந்தலோ உதிர்த்துவிட்டுப் போன ஒரு ரோஜா, அலையேறிக் கரை சேர்ந்து கிடந்தது.
உடலின் பின் பாதியை மணலுக்குள் புதைத்து, முன் பாதியைக் காட்டிச் சிரித்துக்கொண்டிருந்தது ஏதோ ஒரு குழந்தையின் வலது கால் செருப்பு.
கரையிலும் நின்றுவிடாமல் கடலுக்குள்ளும் சென்றுவிடாமல் அலைகளோடு அலைமோதிக்கொண்டே இருந்தது ஒரு சம்மங்கிப் பூமாலை.
அலைகளிடம் சிக்கிக்கொள்ளாமல் கரையைப் பற்றியபடியே கிடந்தது ஒரு வெள்ளை நிறக் கைக்குட்டை.
தின்று கொழுத்த நண்டுகளும், கொழுப்பதற்காக திண்ணத் தேடும் நண்டுகளும் வலைகளில் தங்காது அலைந்து கொண்டிருந்தன.
அலைகள் அடிக்கும் சப்தம் அந்த இடத்தின் உயிரோட்டத்தை இசைத்துக் கொண்டிருந்தது.
மேகங்களுக்குக் கீழே ஒரு பறவைக் கூட்டம் கூடுகள் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தது.
சில பறவைகள் அலைகளுக்கு மேல் பறந்து கொண்டிருந்தன.
மலை நேரத்திற்கே உரிய பிரத்யேகக் கடற்கரைக் காற்று இதமாக வீசிக்கொண்டிருந்தது.
இறைவன் எழுதிய அந்தக் கடற்கரைக் கவிதை அழகாக இருந்தது.
கடற்கரை என்பது ஒரு பெண்ணைப் போன்றது. பெண்ணிற்கு ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு அழகு. கடற்கரையும் அப்படித்தான்.
அதிகாலையின் கடற்கரைக்குப் பூப்பெய்தவிருக்கும் பெண்ணின் அழகு.
விடியலின் கடற்கரைக்குப் பூப்பெய்தியிருக்கும் பெண்ணின் அழகு.
மாலை நேரக் கடற்கரைக்குப் பருவப் பெண்ணின் வெட்க அழகு.
அந்த மாலை நேரக் கடற்கரையில், மனிதர்கள் நிரம்பி வழிந்தனர்.
ஒரு புதுமணத் தம்பதியர், தங்களுக்கிடையில் காற்று நுழைந்துவிடக் கூடாதென்ற கவனத்தோடு நெருக்கமாக நடந்து கொண்டிருந்தனர்.
ஒரு வயதான தம்பதியர், ஒருவரது கையை ஒருவர் பிடித்துக் கொண்டது போதாதென்று சண்டையையும் பிடித்தபடி நடந்து கொண்டிருந்தனர்.
சில குடும்பங்கள் குழந்தைகளுடன் அலைகளில் குதித்து விளையாடிக் கொண்டிருந்தன.
கடைகளில் மசாலாவில் ஊறிய மீன்கள் வறுபடும் வாசனை காற்றோடு வந்து மூக்கைத் துளைத்தது. சிலர், வறுபட்ட மீன்களை மகிழ்ச்சியோடு சுவைத்துக் கொண்டிருந்தனர்.
இந்த ஆரவாரங்களை எல்லாம் தாண்டித் தொலைவில் அமைதியாகக் கைகளைக் கட்டிக் கொண்டுக் கரையில் நின்றபடி அலைகளையே பார்த்துக் கொண்டிருந்தார், சக்ரவர்த்தி.
அறுபத்து இரண்டு வயதென்றால் நம்ப மறுத்து ஐம்பத்தைந்து என்று வாதிட வைக்கும் உருவம். ஐந்தரை அடி உயரம். உயரத்திற்கேற்ற உடல் வாகு. சிவந்த நிறம்.
இடது புறம் வகிடெடுத்துப் படிய வாரிய கேசத்தைக் கடற்கரைக் காற்று கலைத்துக் கொண்டிருந்தது.
மழுங்கச் சவரம் செய்த முகம். முகத்திற்கேற்ற அழகான, அளவான சால்ட் அண்டு பெப்பர் மீசை.
ரே பான் கோல்டு ஃபிரேமில் கிட்டப் பார்வைக்குப் போட்டுக் கொண்ட ஆட்டோ கூலிங் கண் கண்ணாடி.
வெளிர்ச் சந்தன நிறத்தில் முக்கால் வாசிக் கையாக மடிக்கப்பட்ட முழுக்கைச் சட்டையும், கெண்டைக் கால் வரை சுருட்டி விடப்பட்ட பிஸ்கட் நிற ஜீன்ஸ் பேண்ட்டும், இடது கையிலிருந்த டைட்டன் சொனாட்டா வாட்ச்சும் அவரை இன்னும் அழகாக்கிக் காட்டின.
கடற்கரையில் இருள் தன்னைப் பொழியத் தயாரானது.
நின்றிருந்த சக்ரவர்த்தி, சற்று முன்னே சென்று அலைகளில் கால்கள் நனையும்படி நின்றார். அலை வந்து அவர் கால் தொட்டதும் கண்கள் மூடி, நின்ற நிலையில் பறந்தார்.
கடல் அலைகளில் கால்கள் நனைவது ஒரு சிலிர்ப்பான சுகம். ஒரு ஈரமான ஆனந்தம். ஒரு மெல்லின இன்பம். ஆனால், எல்லோரும் அதை உணர்வதில்லை அல்லது அனுபவிப்பதில்லை.
சக்ரவர்த்தி அப்படியானச் சிலிர்ப்பை, ஆனந்தத்தை, இன்பத்தை உணர்ந்து அனுபவித்தார்.
வந்த அலைகள் மீளும் போது பாதங்களைச் சுற்றிலும் இருந்த மணலை அரித்து இழுத்துச் சென்றன.
அப்போது பாதங்கள் உணர்ந்த குறு குறுப்பால் இமைகளை இறுக மூடிப் பற்கள் தெரியச் சிரித்தார். அந்தச் சிரிப்பு, அலைகளின் நுரையைப் போலவே அழகாக இருந்தது.
ஓடி வந்து கால்களைக் கட்டிக் கொள்ளும் குழந்தையின் தலையைப் பாசத்தோடு வருடிக் கொடுப்பது போலக் குனிந்து தனது வலது கையால் அலைகளுக்கு வருடிக் கொடுத்தார்.
மனித மனம், எதையும் எப்படியும் உருவகிக்கும். அவரது மனம், கடல் அலையைக் குழந்தையாக உருவகித்து மகிழ்ந்தது.
அந்த மகிழ்ச்சியோடு நிமிர்ந்தார். கண் கண்ணாடியை இடது கையால் கழற்றிவிட்டுக் கண்கள் மூடி, வலது கையில் ஒட்டியிருந்த சமுத்திரத்தை முகத்தில் பூசிக் கொண்டு மெதுவாகக் கண்களை திறந்தார்.
மீண்டும் குனிந்து அலையில் கையை நனைத்தவர் நிமிர்ந்து அண்ணாந்து வாய் திறந்து விரல்களை அருகில் கொண்டு சென்றார்.
கடல் நீரின் சில துளிகள் விரல்களிலிருந்து வாய்க்குள் விழுந்தன. கண்கள் மூடி ருசித்து முகத்தில் எட்டிப் பார்த்த மகிழ்ச்சியோடு விழுங்கினார்.
உவர்ப்புச் சுவை அவரின் உயிருக்குள் இனித்தது.
தேன் துளிகளை ருசிக்கும் ஒருவனது முகப் பாவனைக்கும் கடல் நீரை ருசித்தச் சக்ரவர்த்தியின் முகப் பாவனைக்கும் இடையே வித்தியாசம் கண்டுபிடிப்பவருக்குக் கடல் நீர் முழுவதையும் தேனாக மாற்றிப் பரிசாக வழங்கப்படும் என்று தைரியமாக அறிவிப்புச் செய்யலாம்.
அந்த மகிழ்ச்சியோடு அலையாடும் கடலை ஒரு பார்வை பார்த்தார். அந்தப் பார்வை சாதாரணப் பார்வை அல்ல.
ஏக்கம் ஒரு கண்ணிலும் திருப்தி மறு கண்ணிலும் சாத்தியமாகிப்போன ஒரு பார்வை அது.
சில நொடிகளுக்குப் பிறகு கண்களை மூடி நீண்டதொரு மூச்சுக் காற்றை உள்ளிழுத்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் காற்றை வெளியேற்றினார்.
மற்றவர்களுக்குத்தான் அது உப்புக் காற்று. அவருக்கு அப்படியல்ல. அந்த உப்புக் காற்றில் அவருக்கென்று ஒரு வாசனை இருந்தது. அவருக்கென்று ஒரு குளிர் இருந்தது. அவருக்கென்று ஒரு இன்பம் இருந்தது.
அவரது நுரையீரலின் உட்புறச் சுவரை அப்படியான ஒரு காற்று வருடிவிட்டு மீண்டதை அவர் மட்டுமே அறிவார்
கையிலிருந்த கண் கண்ணாடியை முகத்தில் அணிந்து கொண்டு அங்கிருந்து நகர்ந்து முன்பு நின்ற இடத்திற்குத் திரும்பவும் வந்தார்.
அங்கிருந்த அவரது பையை எடுத்து இரண்டு தோள்பட்டைகளிலும் மாட்டிப் பின்புறமாக முதுகில் தொங்கவிட்டார். கறுப்பு நிறக் கட் ஷூக்களைத் தன் இடது கையின் விரல்களில் தொங்கவிட்டபடி நடக்கத் தொடங்கினார்.
இரண்டு அடிகள் நடந்தவர், சட்டென்று நின்று தலையை உயர்த்தி வானத்தைப் பார்த்தார். அவரது முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி.
கண்கள் குத்திட்டு நின்றன. இமைகள் சில நொடிகள் இயக்கத்தை மறந்தன.
சக்ரவர்த்தியின் விழிகள் வானில் தவழ்ந்து கொண்டிருந்த நிலாவையே பார்த்துக் கொண்டிருந்தன. அந்த விழிகள் நிலாவிடம் பேசின.
என்ன பேசின என்பதையும் அவர் மட்டுமே அறிவார்.
மனிதக் கண்கள் மனிதக் கண்களோடு மட்டும் பேசுவதில்லை. மனிதர்கள் அல்லாத, மனதிற்குப் பிடித்த பலவற்றோடு பேசிக் கொண்டுதான் இருக்கின்றன.
சக மனிதர்களிடம் வார்த்தைகளால் சொல்ல முடியாத, மனதிற்குள் கிடக்கும் எத்தனையோ விஷயங்களை கண்கள் தான் பல சமயங்களில் ஏதோ ஒன்றிடம் பேசுகின்றன.
அப்படியான ஒரு அழுத்தமான விஷயத்தைத்தான் அவரது கண்களும் அப்போது பேசின.
அந்தப் பேச்சில் ஏக்கம் இருந்தது. வலி மிதந்தது. மகிழ்ச்சி பூசியிருந்தது. கேள்விகள் இருந்தன. பதில்கள் கிடந்தன.
இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு நிலாவிடமிருந்து விடைபெற்று நடந்தார். நடந்தபடியே திரும்பி அலைகளைப் பார்த்தார்.
வெளியில் செல்லும் தந்தையிடம் நானும் உடன் வருகிறேன் என்று வாசலுக்கு வந்து அழும் குழந்தையைச் சமாதானப்படுத்தி வீட்டிற்குள் அழைத்துச் செல்வதைப் போலத் தன்னை நோக்கி ஓடி வரும் அலைகளை யாரோ சமாதானப்படுத்திக் கடலுக்குள் அழைத்துக் கொள்வதாக நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.
வறுத்த மீன்கள் விற்கப்படும் கடைகளை நெருங்கியவர் ஒரு நிமிடம் நின்று காற்றில் வந்த மீன் வாசனையை நன்கு இழுத்து முகர்ந்து ரசித்தார்.
தேவையான அளவு மசாலாவில் தேவையான நேரம் ஊறவைத்து தேவையான அளவு வேகவைத்துப் பொரித்து எடுத்தால் தேவையான அளவிற்கு மேலேயே மீனைச் சாப்பிடலாம்.
கடல் மீனைக் கடற்கரையில் சாப்பிடும் சுகம் இருக்கிறதே… அது ஒரு தனிச் சுகம்.
அந்த மீன் விரும்பி, அப்போது மீன் உண்ண விரும்பவில்லை. அதற்கும் ஒரு காரணம் இருந்தது. அந்தக் காரணத்தையும் அவர் மட்டுமே அறிவார்.
கையிலிருந்த ஷூக்களைக் கீழே வைத்துக் கால்களை நுழைத்துக் கொண்டுக் கடை வீதியில் நடந்து வருகையில் பாதையின் ஓரமாக இருந்த இட்லிக் கடையின் முன்னால் நின்று அங்கு தட்டில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி மாவு உருண்டையை ஆசையாகப் பார்த்தார்.
ஆவியில் வெந்து, தேங்காய்த் துருவலில் உருண்டு புரண்டிருந்த அரிசி மாவு உருண்டைகள் அவரை இழுத்தன.
விற்றுக் கொண்டிருந்த பெண்ணிடம் உருண்டையைக் காட்டி ஒன்று வேண்டுமென்றுச் செய்கையால் கேட்டபடியே பர்ஸிலிருந்துப் பணத்தை எடுத்து நீட்டினார்.
“இன்னொன்னு தரவா சார்?” என்று அந்தப் பெண் கேட்கவும், போதுமென்ற பதிலையும் செய்கையாலேயே சொன்னார்.
“க்கும்… திங்க மட்டுந்தான் வாயத் தொறப்பாரு போல…” என்று முணு முணுத்தபடியே காகிதத்தில் வைத்த உருண்டையுடன் மீதிப் பணத்தையும் கொடுத்தார், கடைக்காரப் பெண்.
வாங்கிய சக்ரவர்த்தியின் காதில் அந்தப் பெண் சொன்னது நன்றாகவே விழுந்தது.
அதற்கு மென்மையாகப் புன்னகைத்துக் கொண்டே சற்று நகர்ந்து நின்று அரிசி மாவு உருண்டையைச் சாப்பிடத் தொடங்கினார்.
சரியான அளவு இனிப்பும் தேங்காய்த் துருவலும் சேர்ந்த அதை ரசித்துச் சுவைத்தார்.
ஒவ்வொருவருக்கும் இப்படி ஏதாவது ஒரு எளிமையான உணவுப் பொருள் மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.
அந்தச் ‘சக்ரவர்த்திக்கு’ வீதியில் நின்று சாப்பிட்ட ஒரு அரிசி மாவு உருண்டை, ‘ராஜ விருந்தாக’ இருந்தது.
சுவைத்த பிறகு தேவாலயம் வந்தார். தேவாலயத்தின் பக்கவாட்டு நடைபாதையின் நடுவில் நின்று, அதன் நீளத்தைத் தலையை இடமும் வலமுமாகத் திருப்பித் திருப்பி இரண்டு முறை பார்த்துப் பெருமூச்சு விட்டார்.
அந்தப் பார்வையிலும் பெருமூச்சிலும் ஏக்கம் கொட்டிக் கிடந்தது.
பிறகு, தேவாலயம் கடந்துப் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தார்.
திருச்சி செல்ல இருந்த பேருந்தின் முன்புறப் படியில் ஏறி உள்ளே சென்றார். கூட்டம் பெரிதாக இல்லை. பேருந்தின் நடுப் பகுதியில் காலியாக இருந்த இருவர் அமரும் இருக்கைகளில் இடது புற ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தார்.
அவருக்கு வலது புற எதிர் வரிசை இருக்கையில் ஒருவனும் அவனுக்கு அருகில் ஜன்னலோர இருக்கையில் அவனது மனைவியும் இருந்தனர். அவர்களுக்குத் திருமணமாகிச் சில ஆண்டுகளே ஆகியிருக்கக் கூடும்.
இருவரும் ஏதோ ஒன்றின் காரணமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். உரக்கக் கத்தாமல் அவர்களுக்குள் கேட்கும்படிக் கத்திக் கொண்டார்கள்.
சக்ரவர்த்தி, அவர்களைப் பார்க்கிறார் என்பதை லட்சியம் செய்து கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை.
எதிர்பாராத விதமாக அவன் அவளைப் பளாரென்று கண்ணத்தில் அறைந்தான்.
சக்ரவர்த்தியின் முகம் மாறிவிட்டது. வலித்த கண்ணத்தைத் தன் கையால் பிடித்துக் கொண்ட அவளால் பொதுவெளியில் தனது கணவன் அவ்வாறு நடந்ததை ஏற்க முடியாமல் திரண்டு நின்ற கண்ணீரோடு அவனை முறைத்தாள். விருட்டென்று எழுந்து அவனைக் கடந்து வந்துச் சக்ரவர்த்திக்கு அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
திரண்டிருந்த கண்ணீரைத் துடைத்துவிட்டுக் கைகளை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு நேராகப் பார்த்தபடி இருந்தாள்.
அவன், பல்லைக் கடித்தபடி அவளிடம், “இப்ப இங்க வர்றியா இல்லயாடி?” என்றான்.
சக்ரவர்த்தி, இப்போது அவனை ஒரு பார்வை பார்த்தார். அவரது பார்வையில், ‘இப்படித் தான் பொண்டாட்டியப் பொது இடத்துல அடிப்பியா?’ என்பது போன்ற கேள்வி இருந்தது.
அவரது பார்வையின் கேள்வியை அவன் உணர்ந்தான் போலும். அவரிடம் பேசினான்.
“சார், எங்க ஊரு பழநி. கல்யாணமாகி அஞ்சு வருஷமாச்சு. இவளை என்னால வசதியாப் பாத்துக்க முடியல. சம்பளம் போதல. தொடர்ந்து கஷ்ட்டம். இப்பச் சம்பளம் அதிகமா வர்ற மாதிரிக் கோயமுத்தூர்ல வேலை வருது. குடும்பத்தோட அங்க போயிடலாம்னு சொன்னாக் கேக்க மாட்டேங்கறா. இவ சின்ன வயசுப் ஃபிரண்டு சென்னையில இருக்கா. அதனால அங்க போலாம். அங்க வேலை தேடிக்கலாம்னு பிடிவாதம் புடிக்கறா. என்னைப் பெத்தவங்கள நான் பாக்கணும்ல? அவங்களுக்குச் சென்னை ஒத்து வராது. அதப் புரிஞ்சக்காமப் பேசுறா.”
வலிக்கும் கண்ணத்தோடு வார்த்தைகளுக்கு வலிக்காமல் அவளும் பேசினாள்.
“ஊரக் காலி பண்றதுன்னு ஆயிடுச்சு. எங்க போனா என்ன? கோயமுத்தூர்ல திங்கிறதச் சென்னையில தின்னாச் செரிக்காதா? புள்ளைங்க வாழ்க்கையப் பாக்கணும்ல? சென்னை எல்லாத்துக்குமே ஒத்து வரும். என் ஃபிரண்டப் பாத்து ரொம்ப நாளாச்சு. சின்ன வயசுல இருந்து நானும் அவளும் அவ்ளோ க்ளோஸ். அவளை எனக்கு ரொம்பப் புடிக்கும். நமக்குப் புடிச்சவங்க பக்கத்துல இருக்கறது எவ்வளவு பெரிய சந்தோஷம்?”
பேசி முடித்த அவளையே பார்த்தார் சக்ரவர்த்தி. அவளும் அவரைப் பார்த்தாள்.
அப்போது சக்ரவர்த்தி அவளிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்.
“மனசுக்குப் புடிச்சவங்க நம்ம பக்கத்துலயே இருந்துட்டா, அப்புறம் நினைவுகளுக்கு என்ன மரியாதை?”.
அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லவோ அந்தக் கேள்வியைக் கடந்து போகவோ அவளால் முடியவில்லை.
உண்மைதான். இப்படியொரு கேள்விக்கு எப்படிப் பதில் சொல்ல முடியும்?
இந்த வாழ்க்கையில் மனதிற்குப் பிடித்தவர்கள் எல்லோரும் அருகிலேயே இருக்கச் சாத்தியம் இருந்துவிடுகிறதா? இல்லைதான்.
அவளால் மெளனமாக மட்டுமே இருக்க முடிந்தது.
பதில் சொல்ல முடியாத அந்தக் கேள்வி அவளை ஏதோ செய்தது.
அவளுக்குள், அவளது பிடிவாதம் அதன் பிடியைத் தளர்த்தத் தொடங்கியது.
சக்ரவர்த்தியின் கேள்வி அவர்களுக்குள் சமாதானத்தை ஏற்படுத்தியது. அவள் சிரித்தாள். அவனருகில் அமர்ந்தாள். அவன் மகிழ்ந்தான். பேருந்து புறப்பட்டது.
பேருந்தில் முன்பு ஒலித்து நிறுத்தப்பட்டப் பாடலொன்று விட்ட இடத்திலிருந்து இப்போது ஒலிக்கத் தொடங்கியது.
“பக்கத்தில் நீயும் இல்லை,
பார்வையில் ஈரம் இல்லை,
சொந்தத்தில் பாஷை இல்லை,
ஸ்வாசிக்க ஆசை இல்லை.
பக்கத்தில் நீயும் இல்லை,
பார்வையில் ஈரம் இல்லை,
சொந்தத்தில் பாஷை இல்லை,
ஸ்வாசிக்க ஆசை இல்லை.
கண்டு வந்து சொல்வதற்கு,
காற்றுக்கு ஞானம் இல்லை.
நீலத்தைப் பிரித்துவிட்டால்,
வானத்தில் ஏதுமில்லை.
தள்ளித் தள்ளி நீ இருந்தால்,
சொல்லிக் கொள்ள வாழ்க்கை இல்லை.
வண்ணம் கொண்ட
வெண்ணிலவே…
வானம் விட்டு வாராயோ…”
சக்ரவர்த்தி, எஸ்.பி.பியின் குரலில் ஒலித்த அந்த வரிகளில் லயித்து, மனதிற்குள் சொல்லிக் கொண்டார்… “ஹூம்… எத்தனைச் சரியான ஒன்று? நீலத்தைப் பிரித்துவிட்டால், வானத்தில் ஏதுமில்லை…”
அதற்குப் பிறகு, மனதிற்குள் இன்னொன்றையும் சொல்லிக்கொண்டார்.
அது, இதுவரை அவரது வாழ்க்கையில் அவர் ஒரு முறை கூடச் சந்தித்திராத ஒரு நபரின் பெயர்.
“……………….”
