ஆடி வரும் வண்ண மயிலே-01
அத்தியாயம்:01
சென்னையில் உள்ள மிக பெரிய மண்டபத்தில்…மக்கள் கூட்டம் அலை கடல் என திரண்டு வந்து கொண்டு இருந்தார்கள்.
அவர்கள் இன்று இப்படி வர காரணம் ஒரு நாட்டிய நிகழ்ச்சி…அது சாதாரண நாட்டிய நிகழ்ச்சி அல்ல செல்வி மயூரிகா வின் நடனம்.
அவள் நடனம் ஆடினால் காற்று கூட வேகமாக வீசாது…மரங்கள் கூட அவளுக்கு தங்கள் வாழ்த்தை தெரிவிக்க மலர்களை உதிர்க்கும்…கடல் கூட அமைதியாக அவள் நடனத்தை ரசிக்கும்.
ஏன் நடனத்தின் தலைவன் நடராஜர் கூட அவளுடன் நடனம் ஆட அசைபடுவார்…அவளை பற்றி அறிந்தவர்கள் சொல்லும் வார்த்தை..
மயூரிகா நடனத்திற்க்கு என்று பிறந்தவள்…அவள் உடம்பில் ஓடும் ரத்தித்தில் நடனம் கலந்து இருக்கு…அவள் நடராஜரின் மகள் என சொல்வார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன் தான் அவள் அமெரிக்காவில் நாட்டிய நிகழ்ச்சி ஒன்றை…முடித்து கொடுத்து விட்டு வந்தாள்.
அவள் நடனத்தை ரசிக்க வந்தவர்களில் அதிகமானவர்கள் வெள்ளைகார்கள் தான்…
நம்மவர்களை விட அவர்களுக்கு தான் கலையின் அருமை தெரியும்….அதை மதிக்கவும் செய்வார்கள்.
அவள் நடன நிகழ்வு என்றால் கண் மூடி கொண்டு புக் பண்ணி விடுவார்கள் ஸ்பான்சர்கள்…அவள் நடனத்தின் மேலே மக்களுக்கு அவ்வளவு ஈர்ப்பு…டிக்கெட் மட்டும் லட்சத்தை தாண்டி விற்பனையாகி போகும்.
அதை விட ஆண்கள் கூட்டம் அலை மோதும் அதில் வயது வேறுபாடு இல்லை…காரணம் ஆளை அசரடிக்கும் அழகு அவள் அழகு….
அவளை பார்க்க என்றே ஒரு கூட்டம் வரும் இப்படிப்பட்ட அவள்… தன் பங்களாவில் ஒரு அழகிய பெண்மணியின் புகை படத்திற்க்கு முன்னே நின்றிருந்தாள்.
சென்னையில் நடு மத்தியில் அமைந்திருந்தது அந்த பிரமாண்டமான பங்களா…
கேட் வாசலில் இடது புறமாக உள்ள தூணில் சியாமளா அகம் என… கறுப்பு நிற போர்ட்டில் தங்க நிற எழுத்துக்கள் பளபளத்தது.
உள்ளே போனால் இரண்டு பக்கமும்…எல்லா நிறத்திலும் ரோஜா பூக்கள் தொட்டியில் பூத்து குலுங்கியது…அதை பார்த்து கொள்ள இரண்டு வேலையாட்கள் நின்றிருந்தார்கள்.
வலது பக்கத்தில் மூன்று கார்கள் கூடவே டிரைவர்கள் நின்றிருந்தார்கள்…எல்லாம் பாரின் கார்கள் பளிங்கு தரை… வெள்ளையும் தங்க வண்ணத்தில் அந்த அழகிய பங்களா கம்பீரமாக நின்றது.
உள்ளே போனால் வரவேற்று அறை, நடு கூடம், சமையலறை, பூஜை அறை, கெஸ்ட் ரூம் இருந்தது…
முதல் மாடியில் நான்கு அறைகள்… இரண்டாம் மாடியில் நான்கு அறைகள் அதற்க்கு மேலே பரந்த மொட்டை மாடி இருந்தது…அதில் சின்னதாக கோவில் இருந்தது.
அதில் சாம்பசிவம் நடராஜர் வடிவத்தில் இருந்தார்…அவர் முன்னே மலர்களும், ஊதுபத்தியும் நறுமணம் பரப்பி கொண்டு இருக்க…விளக்கு ஒளி வீசி கொண்டு இருந்தது.
அது போல வெல்வட் சிவப்பு நிற துணியின் மேலே…சலங்கைகள் வீற்றிருந்தது அந்த இடமே தெய்வீக கலையோடு காட்சியளித்தது.
கீழே பூஜையறையில் மணி ஒலிக்க…சிவனின் திருநாமத்தை உச்சரித்து கொண்டு இருந்தார்… அறுபது வயது மதிக்கத்தக்க பெண்மணி…
அதை கேட்டு கொண்டே ஹாலில் உள்ள சோபாவில்… கண்களை மூடி கொண்டு சாய்ந்து இருந்தார்…அறுபதைந்து வயது உள்ள ஒருவர்.
அப்போது சார் என அழைத்து கொண்டு வந்தாள் மயூரிகாவின் பி.ஏ யசோதா…மெல்ல கண்களை திறந்து அவளை பார்த்தார் சக்ரபாணி.
சியாமளா குரூப் ஆப் சேர்மன் ஒரே மகள் ஆசை மகளின் பெயரில் தான்…அவர் எல்லா தொழிலும் தொடங்குவது அவர் பூர்வீகம் கிராமம் தான்.
அவர்கள் முன்னோர்கள் சென்னை வந்து சின்னதாக தொழில் தொடங்கி…இந்த அளவுக்கு வந்திருக்கிறார்கள் அவர்.. அதை பல மடங்காக இன்று உயர்த்தி இருக்கிறார்.
அவர்கள் கலை பரம்பரையை சேர்ந்தவர்கள்…அதானால் தான் அது சம்மந்தப்பட்ட தொழிலை நடத்தி வந்தார்கள்…
இசை கருவிகள் உற்பத்தி சகல விதமான இசைகருவிகளும்… அவர்கள் கம்பெனியில் இருந்து தான் விநியோகம் செய்வது.
உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டுக்கு கூட… அவர் கம்பெனி தான் எக்ஸ்போர்ட் செய்வது இது கூடவே… டின்னில் அடைக்க பட்ட உணவு வகைகள் அவர் எக்ஸ்போர்ட் செய்கிறார்.
ஊறுகாய், ஸ்நாக்ஸ் வகைகள், அப்பளம் போன்றவை…அவர் பார்வை யசோதாவை என்ன என கேட்டது.
யசோதா “ சார் சாரதா மேடம் கால் பண்ணி இருந்தாங்க…மயூ மேடம் ரெடியாகி கிளம்பி விட்டாங்களா என்று..? அது தான் அவங்க எங்கே என பார்க்க வந்தேன்…” என்றாள்.
“ பாப்பா அப்பவே ரெடியாகி விட்டாள் யசோ மா…கண்மணி இங்கே தானே இருந்தாள் எங்கே அவளை காணோம்…
சரி முதலில் இந்த ஆரத்தியை தொட்டு கொள்ளுங்க…” என்றவாறே கல்யாணி முதலில் கணவருக்கு ஆரத்தியை நீட்டினார்.
சக்ரபாணி மனைவியை ஒரு பார்வை பார்த்தவாறே…
“கிட்ட தட்ட நாப்பது வருடங்கள் கல்யாணி நம்ம கல்யாணம் பண்ணி…என் ஓவ்வொரு அசைவும் உனக்கு தெரியும் அது போல.. நீ என்ன நினைக்கிற என்றும் எனக்கு தெரியும்.
அப்படி இருந்தும் கூட ஆரத்தியை என் கிட்ட நீட்டினால் என்ன அர்த்தம் மா..? என்ன என் மனசு மாறி விட்டதா என அறிய முயலுகிறாயா..?
அது எப்பவும் மாறாது நான் மண்ணுக்குள்ளே போகும் வரைக்கும்…இந்த சக்ரபாணி கைகள் என்னை படைத்தவனை நோக்கி குவியாது…” என்றார்.
கல்யாணி “ என்னங்க இப்படி பேசுகிறீங்க…நம்மை படைத்தவன் கருணை நம்ம மேலே காட்டாது இருந்தால் இந்த வாழ்வு நமக்கு ஏது..?
உங்க கோபம் எனக்கு புரிகிறது ஏன் உங்களுக்கு மட்டுமா அந்த வலி இருக்கு..? உங்களை விட எனக்கு நூறு மடங்கு வலி இருக்கு…
சியாமி நான் பத்து மாதம் சுமந்து பெத்த என் பெண்ணுங்க…
நமக்கு பிறகு தான் அவள் போக வேணும் ஆனால் நமக்கு முன்னே…தன் பெண்ணை நம்ம கிட்டு கொடுத்து விட்டு பாவி மகள் போய் சேர்ந்து விட்டாள்.
அவளை தொடர்ந்து நானும் போய் இருப்பேன்…ஆனால் முடியாதே என்னை உங்களை நம்பி…நம்ம பேத்தி இருக்கிறாளே அவளை நல்ல ஒரு கையில் பிடித்து கொடுக்க மட்டும் நம்ம வாழ்ந்து தான் ஆக தானே வேணும்.
அதற்க்கு இந்த ஈசன் துணை நமக்கு வேணும்…நம்ம இரண்டு பேருமே வாழ்வதே யாருக்காக அவளுக்காக தானே…அப்போ வயதான நமக்கு பரமேஸ்வரன் துணை தேவை தானே…” என்றார்.
சக்ரபாணி “ கல்யாணி உன்னை விட அதிகமாக அவனை துதித்தவன் நான்…
அவன் என் கிட்ட என் சொத்தை, பணம் ஏன் என் உயிரை கேட்டு இருந்தால் கூட….அதை எல்லாம் அவன் காலடியில் வைத்து இருப்பேன்.
ஆனால் அவன் பறித்தது என் உயிருக்கு உயிரான என் பெண்ணை…அதுவும் எப்படிப்பட்ட பெண்ணு அவள் ஈ, எறும்புக்கு கூட துரோகம் செய்யாதவள்.
அதுவும் அணு தினமும் ஈசனை ஆராதித்து தன் நாட்டியத்தால் மகிழ்வித்து கொண்டு இருந்தவள்…ஒரு நாள் கூட ஈசனுக்கு அவள் சேவை செய்வதை நிறுத்தவில்லை.
அப்படிப்பட்ட என் பெண்ணை ரத்த வெள்ளத்தில் என்னை பார்க்க வைத்தான்…அதை என்னால் ஏற்று கொள்ள முடியாது கல்யாணி…என்னை வற்புறுத்தாதே.
அது தான் எனக்கு பதிலாக நீ இருக்கிற தானே…நீ அவனை வேண்டி கொள்ளு…” என்றார்.
கல்யாணிக்கு தெரியும் அவர்கள் பெண்ணு சியாமளா மேலே…கல்யாணியை விட சக்ரபாணி நான்கு மடங்கு பிரியம் வைத்திருந்தார் என்று.
மகளை பிரிந்த அந்த வலி தான் அவரை…இந்த அளவுக்கு மாற்றி இருக்கு இதற்கான பதிலை காலம் தான்… சரி செய்ய வேணும் என நினைத்தார்.
அப்போது “ யசோ அக்கா என அழைத்து கொண்டு…லிப்ட்டில் இருந்து கண்மணி வந்தாள்…அவள் தான் மயூரிகாவின் ஹெல்பர் பெண்ணு…
பியூட்டிசன் கோர்ஸ் படித்து பயிற்ச்சி பெற்றவள்…அவளை படிக்க வைத்தவர் சக்ரபாணி அவர் ஊர் பெண்ணு என்ற பாசம்…இவர்கள் கூட தான் கண்மணி தங்கி இருக்கிறாள்.
யசோதா ஆபிஸ் மேனஜ்மென்ட் கோர்ஸ் படித்தவள்…சொந்த ஊர் திருச்சி வேலை பார்க்க இங்கே வந்திருக்கிறாள்…அவளும் சக்ரபாணி பங்களாவில் தான் தங்கியிருக்கிறாள்.
யசோ “ கண்மணி மேடம் ரெடியாகி விட்டாங்களா..? ஷோவுக்கு டைமாகி விட்டது சாரதா மேடம் கூட…
மூன்று தடவை கால் பண்ணி விட்டாங்க… இப்போ கிளம்பினால் தான் இந்த டிராஃபிக்கில் நீந்தி… சரியான நேரத்திற்க்கு போய் சேர முடியும்…” என்றாள்.
கண்மணி “ மயூ அக்கா எப்பவோ ரெடியாகி விட்டாங்க அக்கா…அவங்க இன்னும் கீழே வரவில்லையா கா..? நான் வாஷ் ரூம் போய் இருந்ததால்…
எனக்கு தெரியவில்லை இருங்க நான் அக்காவை பார்த்து விட்டு வருகிறேன்…” என்றவள். மயூரிகாவை அழைக்க போக திரும்பினாள்.
கல்யாணி “ கண்மணி நீ இரு முதலில் நீயும் யசோவும் டிபன் சாப்பிட போங்க…
உங்க அக்கா இப்போ எங்கே இருப்பாள் என… எனக்கு தெரியும் நான் அவளை அழைத்து வருகிறேன்…” என்றவர்… இரண்டாம் மாடியில் உள்ள மயூரிகாவின் ரூம்க்கு போனார்.
இரண்டாம் தளம் முழுவதுமாக மயூரிகாவின் உடையது…அவள் அன்னையின் தளம் அவர் பிறந்து வளர்ந்த பங்களா இது…இப்போ மயூரிகாவுக்கு சொந்தமாகி இருந்தது.
அந்த நான்கு ரூம்மில் சியாமளாவின் ரூம் கதவு மெல்ல திறந்து இருந்தது….அந்த அறையில் பிரமாண்டமான தங்க நிற போட்டோ பிரேமில்… சிரித்து கொண்டு இருந்தார் அழகிய பெண்மணி ஒருவர்.
அவர் முன்னால் நாட்டிய உடையில் அப்சரஸை தோற்கடிக்கும்…அழகில் நின்றிருந்தாள் இருபத்துநான்கு வயது உடைய மயூரிக்கா.
அவள் தாயின் அழகை தான் கொண்டு பிறந்து இருந்தாள்…அதிகமாக அவளிடம் காணபடுவது சியாமளாவின் சாயல் தான்.
பிறை நெற்றி, வில் போல புருவம், அடர்ந்த இமைகள்…மீன் போல விழிகள் மாம்பழ கன்னம் கொவ்வை பழ இதழ்கள்…
சங்கு கழுத்து ஐந்தரையடி உயரம், அதற்கேற்ற உடல்வாகு குங்கும பூ நிறம்…முட்டி வரை இயற்கையாக உள்ள அடர்ந்த கூந்தல்…
மொத்தில் பிரம்மன் என்னும் சிற்பி… பார்த்து பார்த்து செதுக்கிய சிலை அவள்.
தாயின் படத்தை மெல்ல வருடி விட்டவள்…
“ இன்று எனக்கு ஒரு டான்ஸ் புரோகிராம் இருக்கு மா…எப்பவும் போல இப்பவும் எனக்கு உன் ஆசீர்வாதம் வேணும்.
என்னை தேடி பல வாய்ப்புகள், வெற்றி வந்தாலும் கூட…நீ என் கூட இருந்து அதை பார்த்து சந்தோஷபட இல்லையே மா.
நாட்டிய உலகில் என்னை தாரகை என சொல்கிறாங்க…இல்லை உண்மையான தாரகை நீ இந்த திறமை கலை எல்லாம் நீ எனக்கு தந்தது.
என் மூன்று வயதில் உன் கையால் எனக்கு சலங்கை போட்டு விட்ட…அப்போ இருந்து இந்த நொடி வரைக்கும் நான் சலங்கை கட்டாத நாள் இல்லை மா.
நம்ம ஊரில் நம்ம நாட்டில் மட்டுமல்ல பாரினில் கூட என் நாட்டியத்தை…கெளரவிக்க ஆளுங்க இருக்கிறாங்க மா.
அவங்க கேட்கும் முதல் கேள்வி நீ நாட்டிய தாரகை சியாமளா பெண்ணு தானே…அப்படியே அவள் சாயல் தான்.
கூடவே அவள் திறமையும் உன் கிட்ட விட்டு போய் இருக்கிறாள் என்று சொல்வாங்க…அதை கேட்டு எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கும் மா.
ஆனால் அப்போ எல்லாம் தாத்தா முகத்தில் எந்த உணர்வும் இருக்காது மா…
அவர் இந்த நாட்டியத்தை வெறுக்கிறார் மா…என் எந்த நாட்டிய நிகழ்ச்சிக்கும் அவர் வரவே மாட்டார்.
பாட்டி மட்டும் தான் வருவாங்க இந்த நாட்டியம் தான்… உன் வாழ்க்கையை சிதைத்து விட்டதாக நினைக்கிறார் மா…
ஆனால் உண்மை அது அல்ல நீ ஏமாந்து நிற்க காரணம்…பொருத்தம் இல்லாத நபரை காதலித்து தான் என்று அவருக்கு இன்னும் தெரியவில்லை மா…”என்றாள்.
“ இல்ல பாப்பா உன் தாத்தா நாட்டியத்தை வெறுக்கவே இல்லை…அவர் உன் நடனத்தை பார்க்க வராத காரணம் நீ பாப்பா…” என சொல்லி கொண்டு கல்யாணி வந்தார்.
மயில் ஆடி வரும்…
