அத்தியாயம் – 2
ஜானு கூறியதுபோலவே, அடுத்த ஓரிரு நாட்களில் அவளுக்கும் ஆண்டுத் தேர்வுகள் முடிவடைந்து, பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறை அறிவிப்பு கிடைத்ததும், அன்று பள்ளியை விட்டுத் திரும்பியபோது அவள் வீட்டுக்குச் செல்லவில்லை நேராக அபியின் வீட்டு வாசலுக்கு ஓடினாள்…
”அபி! அபி! லீவ் விட்டுட்டாங்க!” அவள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தாள், அபிக்கும் ஆனந்தம் தாங்கவில்லை. அவனது போரடிக்கும் பெரிய நகர வாழ்க்கையிலிருந்து இந்தப் புதிய சூழல் அளித்த சுதந்திரம், இப்போது ஜானுவின் நட்பால் முழுமையடைந்தது….
ஜானுவிற்கும் பள்ளி விடுமுறை விட்டுவிட்ட பிறகு அபி ஜானு இருவரையும் கையில் பிடிக்க முடியவில்லை, விடுமுறையின் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு ஒரு திருவிழாதான். அபிக்கு அந்தச சிறிய நகரமும், தெருக்களும் புதிது. அவன் கண்களுக்கு எல்லாமே வேடிக்கையாக இருந்தது. ஆனால், ஜானுவுக்கு இந்தச் சூழல் அத்துப்படி…
அந்த ஊரில் வீட்டுக்கு அருகில் இருக்கும், அவளுக்கு மிகவும் பிடித்தமான இடங்களுக்கெல்லாம் அவனை அழைத்துச் சென்றாள்.
அவள் முதலில் அழைத்துச் சென்றது, தெருவுக்குப் பின்னால் இருந்த ஒரு சிறிய பழைய ரயில்வே தண்டவாளத்தின் ஓரம். இப்போது பயன்பாட்டில் இல்லாத அந்தப் பாதையில் துரும்புகள் மண்டிக்கிடந்தன…
தண்டவாளத்தில் காது வைத்து, “இங்க தான் இரயிலே போகாதே, ஏன் சத்தம் கேட்குதுன்னு பாரு!” என்று பொய்யான சவால் விடுவது, உடைந்த சிறிய கற்களை வைத்துத் தண்டவாளத்தில் விளையாடுவது… இவையெல்லாம் அவளது ரகசிய உலகமாக இருந்தது. அபி, இத்தனை எளிமையான விஷயங்களில் இவ்வளவு மகிழ்ச்சி இருக்கிறதா என்று வியந்தான்…
அவள் அடுத்து அவனைக் கூட்டிச் சென்றது, தெருவின் கடைசி மூலையில் இருந்த பெரிய ஆலமரம் ஒன்றின் அடியில் இருந்த சிறிய மாரியம்மன் கோயிலுக்கு தான், தாயின் பிரிவுக்குப் பிறகு, சண்முகம் அவளை அங்கேதான் அமைதிக்காக அழைத்துச் செல்வது வழக்கம். அந்த மரத்தின் வேர்கள், விளையாட ஏற்ற மேடைகளாகவும், நிழலான திண்ணையாகவும் அவர்களுக்குப் பயன்பட்டன…
ஜானு அபியிடம், “இந்த ஊர்ல இதுதான் ரொம்ப ஸ்பெஷல் இடம், நான் உனக்கு மட்டும் தான் காட்டியிருக்கேன்!” என்று உற்சாகத்துடன் சொன்னாள்…
அபி ஒரு நிமிடம் அமைதியாக அவளைப் பார்த்து… “எனக்கு உன்னைப் ரொம்ப பிடிச்சிருக்கு ஜானு, நீ என் பெஸ்ட் ஃப்ரெண்ட்,” என்று மனப்பூர்வமாகச் சொன்னான்…
அவன் கைகளில் இருந்த விலையுயர்ந்த பொம்மைகள், வீடியோ கேம்ஸ் என எல்லாவற்றையும்விட, இந்தப் பழைய தண்டவாளமும், ஆலமரத்தின் நிழலும்தான் அபியின் மனதில் ஆழமாகப் பதிந்தது. ஜானு, அந்த சிறிய நகரத்தின் எளிமையையும் பாசத்தையும் தனது நட்பின் மூலம் அவனுக்குக் கற்றுக்கொடுத்தாள்….
அவர்கள் இருவரும் ஆலமரத்தின் அடியில், பெரிய வேர்களின் நிழலில் அமர்ந்திருந்தனர். இத்தனை நாட்கள் தங்கள் வாழ்வில் இருந்த அனைத்து விஷயங்களைப் பற்றியும் பேசினார்கள். ஆனால், அபிக்கு ஒரு விஷயம் மட்டும் உறுத்தியது…
அன்று அதனை கேட்க நினைத்தவன், ஜானுவின் பெயரை மென்மையாக அழைத்து… “உன்னோட அம்மாவைப் பத்தி மட்டும் நீ எதுவும் சொல்லவே இல்லையே ஜானு?” என்று வினவினான்….
அந்த கேள்வியைக் கேட்ட கணமே, ஜானுவின் துறுதுறுப்பான முகம் சடுதியில் வாடி விட்டது. அதுவரை மகிழ்ச்சியாக இருந்த அவள் முகத்தில், ஒரு கணம் இருள் கவிழ்ந்தது, அவள் தன் கைகளை இறுக்கிக் கோர்த்துக் கொண்டாள்…
அவளது மெளனத்தைப் பார்த்த அபி… “என்னாச்சு?” என்று குழப்பத்துடன் வினவினான்.
அந்தக் கேள்வி, பூட்டியிருந்த ஒரு பழைய நினைவின் சாவியாக இருந்தது, இதுநாள் வரை தன்னுடைய முதிர்ச்சியாலும், தந்தையின் கஷ்டம் தெரியக்கூடாது என்ற எண்ணத்தாலும் அடக்கி வைத்திருந்த தாயின் இழப்பு, இப்போது நண்பனின் பரிவான கேள்வியின் முன் எழுந்து நின்றது. அவளுக்கோ அந்தக் கணம் தாயின் நினைவில் அழுகை வந்துவிட, தன்னை கட்டுப்படுத்த முடியாமல்
சட்டென்று தலையைக் கவிழ்த்துக் கொண்டு, ஓவென்று அழுது விட்டாள். அது ஒரு சிறுமியின் இயலாமை மட்டுமல்ல தாயைப் பிரிந்த துயரம், தந்தையின் தியாகம் என அத்தனை பாரங்களும் சேர்ந்து வெளிவந்த பெருங்கண்ணீர்….
அபி பதறிப்போனான், ஒரு வாரம் முழுவதும் அவனுடன் உற்சாகமாக விளையாடி, சிரித்துப் பேசிய தோழி இப்படி உடைந்து அழுவதைப் பார்க்க முடியவில்லை, அவளது கண்ணீரைப் பார்க்கச் சகிக்காமல், அவளை என்ன சொல்லித் தேற்றுவது என்று தெரியாமல் திகைத்துப் போனவன், மெதுவாக அவள் தோளைத் தொட்டு… “ஜானு அழாதே! நான் தெரியாமக் கேட்டுட்டேன். ப்ளீஸ்” என்றான்…
ஜானு பேச முடியாமல் விம்மினாள், சில விநாடிகளுக்குப் பிறகு, அழுகைக்கு நடுவே “அம்மா… அம்மா இப்போ எங்கூட இல்லை. ஒரு நோயால இறந்துட்டாங்க”
அந்த உண்மை அபிக்கு அதிர்ச்சி அளித்தது, அவன் இதனை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை,..
தன் கைக்குட்டையை எடுத்து, அவளது கண்ணீரைத் துடைத்து விட்டவன்… “சாரி ஜானு… எனக்குத் தெரியாது” என்றான். அந்தப் பன்னிரண்டு வயதுப் பையனின் மனதில், முதல் முறையாக தான் வாழும் வசதியான உலகிற்கு வெளியே இருக்கும் சோகத்தின் ஆழம் உறைத்தது…
அவள் கைகளைப் பிடித்துக்கொண்ட அபி.. “நான் இருக்கேன் ஜானு, நான் உனக்கு எப்போதும் இருப்பேன்” என்று உறுதி அளித்தான்….
அந்த நட்பு, வெறுமனே விளையாட்டினால் பிணைக்கப்பட்டதல்ல இப்போது அது துயரத்தாலும், பரஸ்பர நம்பிக்கையாலும் பிணைக்கப்பட்டிருந்தது…
அவனது அக்கறை நிறைந்த வார்த்தைகளில், அவளது கண்ணீரும் நின்று போனது. தாயின் இழப்பிற்க்குப் பிறகு முதல் முறையாக, தனது துயரத்தைப் புரிந்துகொள்ளும் ஒரு துணை கிடைத்தது போன்ற உணர்வு.
கலங்கிய கண்களுடன் நிமிர்ந்து அவனது முகத்தைப் பார்த்தவள்,.. “நிஜமாவே நீ எப்போதும் என் கூடவே இருப்பியா அபி?” என்று கேட்டாள். தந்தை மட்டுமே உலகமாக இருந்த அந்தச் சிறுமிக்கு, இப்போது அபியின் உறுதிமொழி, உலகின் மிகப் பெரிய ஆறுதலாக ஒலித்தது…
இத்தனை நாட்கள் தந்தையிடம் கூடப் பகிராத அந்தப் பெரிய துயரத்தை, அவளது புதிய நண்பன் ஏற்றுக்கொண்டது அவளுக்கு ஒரு பெரிய பலமாக இருந்தது….
“சத்தியமா நான் உன் கூட இருப்பேன்” என்றான் அபி…
அவள் இதழ்களிலோ புன்னகை மலர்ந்தது. அது அவள் துயரத்தில் இருந்து வெளியே வந்ததற்கான முதல் மகிழ்ச்சியான புன்னகை. அடுத்த கணம், அது காணாமல் போக, “என்னாச்சு?” என்றான் அபி அவளது முகத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தைக் கண்டு…
”நீ லீவ் முடிஞ்சதும் உன்னோட ஊருக்குப் போயிடுவள்ல?” அவளது குரலில் சோகம் இழையோடியது,…
அபிக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. கடந்த சில நாட்களாக ஜானுவுடன் கழித்த மகிழ்ச்சி, அவனது பெரிய நகர வாழ்க்கையில் கிடைக்காததல்லவா…
“எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு, ஆனா நான் குவாட்டர்லி எக்ஸாம் லீவுக்கு வந்திடுவேன்” என்றான்… அவள் முகம் மீண்டும் மலர்ச்சி அடைந்தது….
அபியின் உறுதி, அவளுக்கு ஆறுதலாக இருந்தாலும், அந்தப் பிரிவு அவளைத் துரத்த,… “பெரியவனா போன அப்புறமும் என்னை பார்க்க வருவியா?” என்று கேட்டாள் தன் மனதின் பயத்தைப் போக்கிக்கொள்ளும் விதமாக….
அபி சிரித்தான். “ஹாங்! வருவேனே. நான் என்னோட அப்பா மாதிரி பெரியவனா போயிட்டா உன்னை என் கூடவே அழைச்சிட்டுப் போயிடுவேன்,” அவன் சொல்ல அவள் முகத்திலோ பேரானந்தம்…
இருவரின் நட்பின் ஆழமும், எதிர்காலம் குறித்த நம்பிக்கையும் அந்த ஆலமரத்தின் கீழ் ஆழமாக வேரூன்றியது…
ஆனால், குழந்தைப் பருவத்து உறுதிகள், கால மாற்றத்தால் எளிதில் மறக்கப்படலாம் இல்லையென்றால் சந்தர்ப்ப சூழ்நிலையால் மாறிப் போகலாம் என்பதை அவர்கள் இருவரும் அறிந்திருக்கவில்லை…
இப்படியே அந்த விடுமுறை நாள் முழுவதையும் இருவரும் ஒன்றாகவே கழித்தார்கள். விளையாட்டுகள், சிரிப்பு, தின்பண்டப் பரிமாற்றங்கள், ரகசியப் பேச்சுக்கள் என அந்த நாட்கள் அவர்களுக்கு ஒரு யுகமாகவே நீடித்தது. ஜானுவின் மனதில் இருந்த தாயின் இழப்பு ஏற்படுத்திய வெறுமையை, அபியின் நட்பு நிரப்பியது. அபியின் மனதிலோ, பெரிய நகரத்தின் தனிமையை, ஜானுவின் இயல்பான பாசம் போக்கியிருந்தது…
அன்றைய நாள் இரவு…
அபியின் அத்தை திலகா, அவனை நோக்கி… ”அபி கண்ணா, இன்னைக்கு மட்டும் தான் இந்த அத்தை கூட இருக்க போற, நாளைக்கு ஊருக்கு கிளம்புறள்ல, மறுபடியும் இந்த அத்தையை பார்க்க வருவியா?” என்று ஏக்கத்தோடு கேட்டார்..,
அந்த வார்த்தைகள், கோடை விடுமுறையின் இனிமையைச் சட்டென்று ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது. அவனுக்கு அத்தையின் ஏக்கத்தை காட்டிலும் ஜானுவின் முகம் தான் நினைவில் ஓடியது, அபியின் மனதில் ஜானுவின் சோகம் மீண்டும் வந்து போயிற்று. தான் புறப்படுகிறேன் என்ற செய்தியை அவள் எப்படித் தாங்கிக்கொள்வாள்?
அடுத்த நாள் அபி புறப்பட இன்னும் கொஞ்சம் நேரமே இருந்தது, அவன் ஜானுவைப் பார்ப்பதற்காக வாசலிலேயே காத்திருந்தான்,..
அன்று அவள் தகப்பனுடன் கோயிலுக்கு போய்விட்டதால் தாமதமாக தான் வந்தாள்,
வழக்கமான புன்னகையோடு வந்தவள்,.. “அபி… கோயிலுக்கு போயிட்டு பிரசாதம் வாங்கிட்டு வந்தேன்,” என்று கூறி தன் கையில் இருந்த விபூதியை எடுத்து, அவனது நெற்றியில் வைத்து விட்டாள். இதுதான் அவள் பாசத்தைப் பரிமாறும் முறை…
அவளது அன்பில் நெகிழ்ந்தவன், கண்கலங்குவதைப் போல் உணர்ந்தான். “இன்னைக்கு ஊருக்குப் போறேன் ஜானு,” என்று மெதுவாகச் சொன்னான்.
அவன் சொன்னதும், அவள் முகம் சடுதியில் வாடிவிட்டது….
அதனை கண்டு வருந்தியவன்,..
”இன்னும் மூணு மாசத்துல லீவு விடுவாங்க, நான் வந்திடுவேன். நீ ஃபீல் பண்ணாதே ஜானு,” என்று அவளைத் தேற்றினான். பிறகு, தன் கையில் கட்டியிருந்த சிவப்பு நிற சில்வர் வாட்சை கழற்றி, “இது உன்கிட்ட என் ஞாபகமா இருக்கட்டும்!” என்று சொல்லி, ஜானுவின் கையில் கட்டி விட, அதனை ஆசையாக வருடியவள்,… “சீக்கிரம் வந்திடு அபி” என்றாள்.
அவனும்… “ம்ம்” என்று தலையசைத்தான். சரியாக அந்த நேரம், அவன் கிளம்ப வேண்டிய கார் வந்து நின்றது. அவளுக்கு அந்தக் காரைப் பார்த்து அன்று எழுந்த ஆசை கூட எழவில்லை. அபி போகிறான் என்ற வருத்தம் மட்டுமே இருந்தது….
”அபி கண்ணா” என்று அவனது மாமா அவனை அழைக்க, “நான் போயிட்டு வரேன் ஜானு” என்று சொன்னவன், தன் மாமாவோடு காரில் ஏறிக்கொண்டான்.
கார் மெல்ல நகர, அபியின் மனம் அவளை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட, காரின் கண்ணாடியைத் திறந்து விட்டு, அவன் வெளியே எட்டிப் பார்த்தான், ஜானு கலங்கிய கண்களுடன் அவனுக்கு டாட்டா காட்டினாள்.
அவனது கண்களும் கலங்கிப் போய்விட, கையசைத்து டாட்டா காட்டினான், கார் புறப்பட்டிருந்தது.
ஜானு பேச வார்த்தையின்றி, கண்ணீருடன் அவன் கொடுத்த வாட்சைப் பார்த்தாள், அவள் கையில் அது அபியின் அன்பின் சின்னமாக கனத்தது.
அந்த நட்பு, விளையாட்டினால் பிணைக்கப்பட்டதல்ல அது துயரத்தாலும், காலத்தால் மறக்க முடியாத சத்தியத்தாலும் பிணைக்கப்பட்டிருந்தது.