அத்தியாயம் – 12
“என்னம்மா சொல்லுங்க,” என்றான்.
தொண்டையைச் சரிசெய்துக் கொண்டவர் மிகுந்த தயக்கத்துடன், “அது வந்துப்பா.. உனக்குப் பொண்ணு பார்த்திருக்கோம் நானும் உன்னோட அப்பாவும்,” என்று மெல்லச் சொல்ல அவன் முகம் சட்டென்று இறுகியது…
”நான் தான் எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்னு சொன்னனேம்மா,” என்றான் உறுதியுடன்…
”இப்படி சொன்னா எப்படி சித்து? எங்களுக்கும் ஆசை இருக்காதா? எங்க மருமகளைப் பார்க்கணும், பேரன் பேத்திகளைக் கொஞ்சணும்னு,” என்று ஆதங்கமாகக் கேட்டிட, “நான் என்ன கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னா சொல்றேன்? டைம் கொடுங்கன்னு தானே கேட்கிறேன்,” என்றான்…
”எதுக்காகடா உனக்கு டைம் தேவை? அடுத்த வருஷம் பண்ணிக்கிற கல்யாணத்தை இப்போதே பண்ணிக்கிட்டா என்ன? உனக்கே தெரியும், காலம் காலமா ஜோசியர் சொல்வது போலத்தான் நம்ம குடும்பத்துல எல்லாம் நடக்குது. எங்களால இதை சின்ன விஷயமா எடுத்துக்க முடியாது. அதனால தான் நாங்க பொண்ணு பார்த்துட்டு உன் கிட்ட சொல்லலாம்னு இப்போ சொல்றேன்,” என்றார் அழுத்தமாக..
”இல்லம்மா, என்னால இப்போ நீங்க பார்க்கிற பொண்ணையெல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது,” அவன் உறுதியாகக் கூற, “ஏன்டா? ஏன் பண்ணிக்க முடியாது?” என்றார் அவரும் குரலை உயர்த்தி.
”நான் என்னோட ஜானுவை மட்டும்தான் கல்யாணம் பண்ணிப்பேன்,” அவன் கூற, தெய்வானை அதிர்ந்தார்…
”ஜானுவா? யாருடா ஜானு?” என்றார் அவர்…
”என்னோட சின்ன வயசுத் தோழி,” அவன் கூற, அவருக்கும் புரிந்தது. இன்னும் அவளை மறக்கவில்லையா? என்று அதிர்ச்சியாகவும் இருந்தது…
”எங்கே இருக்கா அவ? அவளைப் பார்த்துட்டியா என்ன?” என்றார்…
”இல்ல… சீக்கிரம் கண்டுபிடிச்சிடுவேன்,” அவன் கூற, அவருக்கோ கோபம் தலைக்கேறியது…
“பிராக்டிகலா யோசி சித்து!” என்று கோபத்துடன் குரலை உயர்த்தியவர், “அந்தப் பொண்ணை உன்னால எப்படிடா கண்டு பிடிக்க முடியும்? இப்போ அவ வளர்ந்திருப்பா, உனக்கு அடையாளம் கூட காண முடியாது,” என்றார்…
”அதெல்லாம் முடியும், எனக்கு நம்பிக்கை இருக்கு,” என்றான் சித்தார்த்.
”பைத்தியம் மாதிரி உளறாத! அவளை நினைச்சுக்கிட்டு உன்னோட லைஃபை ஸ்பாயில் பண்ணிடாத! உன்னோட வாழ்க்கை நல்லபடியா அமைந்தா தான் எங்களால நிம்மதியா இருக்க முடியும், புரியலையா உனக்கு?” என்றார் உள்ளத்தின் வலியை வார்த்தைகளில் கொட்டி…
”ப்ச்… அம்மா, நீங்க என்ன சொன்னாலும் என்னால இப்போ கல்யாணம் பண்ணிக்க முடியாது. தயவுசெய்து என்னை விட்டுடுங்க,” அவன் சற்று கோபத்துடனே கூறிட, அவருக்கோ மகன் இவ்வளவு உறுதியாகப் பேசியதைக் கேட்டு கண்கள் கலங்கி அழுகையும் வந்து விட்டது…
”இப்போ எதுக்குமா அழறீங்க?” தாயின் கண்ணீரைக் கண்டு அவன் பதட்டத்துடன் அவர் கண்ணீரைத் துடைத்துவிட வர, “என் பக்கத்துல வராதடா!” என்று கோபமாகக் கத்தியவர், “என் பேச்சைக் கேட்க மாட்டேங்கிறல்ல? போடா! என்கிட்ட எப்போவும் பேசாத!” என்று சொல்லிவிட்டு, கலங்கிய கண்களுடன் அறையை விட்டு வேகமாக வெளியேறிவிட்டார்…
அறைக்கதவு அடைக்கப்பட்ட பிறகும், தாயின் கோபமான வார்த்தைகளும், கண்ணீரும் சித்தார்த்தின் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தன. அவன் நெற்றியை நீவியபடி அங்கேயே சிலையாக அமர்ந்திருந்தான்.
தாயின் அழுகை, அவன் மனதை ஒரு கணம் பிசைந்தாலும், ஜானுவைத் தவிர வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் முடிவிற்கு மட்டும் அவனால் வர முடியவில்லை…
அன்றைய இரவும் சித்தார்த்திற்க்கு உறக்கம் பறிபோனது. அதிகாலையில் எழுந்தவன், தாயை சமாதானப்படுத்த நினைத்தான். ஆனால், அடுத்த நாள் காலையில் அவன் கண் முன்னாலேயே தெய்வானை வரவில்லை. வழக்கமாகச் சாப்பாடு பரிமாற வரும் தாயைக் காணாமல், அவனும் சாப்பிடப் பிடிக்காமலே அலுவலகம் புறப்பட்டு விட்டான்…
அலுவலக வேலையில் அவன் மூழ்கிப் போனாலும், மனதின் ஒரு ஓரத்தில் தாயைப் பார்க்காத ஏக்கமும், அவரது கோபமும் உறுத்தலாக இருக்கத் தான் செய்தது…
அன்றைய மாலை, அவன் வழக்கத்தை விட நேரத்துக்கே வீடு வந்துவிட்டான். ஹாலிலும் சமையலறையிலும் தாயைக் காணாமல், அவர் அறைக்குச் சென்றான். அங்கே தெய்வானை கட்டிலில் போர்வையால் போர்த்தியபடி படுத்திருந்தார்…
’இந்த நேரத்தில் எல்லாம் படுக்க மாட்டாங்களே’ என்ற உறுத்தலுடன் “அம்மா,” என்று அழைத்தபடி அவரருகே செல்ல, அவரோ கண் மூடி இருந்தார்…
”அம்மா… என்னாச்சு?” என்றவன் அவரது கரத்தைத் தொட்டான். அதுவோ நெருப்பாய்ச் சுட்டது. பதறிப் போனவன் அவரது நெற்றியில் கை வைத்துப் பார்க்க அங்கேயும் நெருப்பாய்க் கொதித்தது…
“அம்மா… அம்மா…” என்று அவர் கன்னத்தைத் தட்டி எழுப்பிப் பார்த்தான். அவர் விழிகளைத் திறக்கவே இல்லை. அந்த அன்பு மகனுக்குப் பெரும் பயம் உண்டானது…
உடனடியாகத் தன் பர்சனல் டாக்டரை அழைத்து, நிலைமையின் அவசரத்தை உணர்த்தி உடனடியாக வரச் சொன்னவன், மறுபுறம், தந்தைக்கும் விஷயத்தைத் தெரியப்படுத்தினான்….
பணிப்பெண்ணிடம் நீரை எடுத்து வரச் சொன்னவன், தாயின் முகத்தில் நீரைத் தெளித்தபடி, “அம்மா, எப்போதிலிருந்து இப்படி இருக்காங்க? என் அம்மாவைக் கவனிக்கவே இல்லையா இங்கே யாரும்?” என்று கோபமாகக் கத்தினான்…
”மேடம் காலையிலேயும் சரியாச் சாப்பிடலை சார். மதியமும் சாப்பிட வரலை. கூப்பிட்டுப் பார்த்தேன், ஆனா பசிக்கலன்னு சொல்லிட்டாங்க,” என்று அந்தப் பணிப்பெண் பயந்து பயந்து தயக்கத்துடன் கூறினாள்…
”இடியட்! இதைப்பத்தி ஏன் எனக்கு சொல்லல?” என்று கோபத்தில் அந்தப் பெண்ணிடம் கத்தியவன், சுயநினைவின்றிப் கிடந்த தாயின் நிலைகண்டு, உள்ளம் துடித்துப் போனான். தான் நேற்று பேசிய சொற்கள் தான் இதற்குக் காரணம் என்ற குற்ற உணர்ச்சி அவனை வாட்டியது…
சற்று நேரத்தில் விரைந்து வந்த மருத்துவர் உடனடியாகத் தெய்வானையைப் பரிசோதிக்க ஆரம்பித்தார். அவசர சிகிச்சையாக குளுக்கோஸ் ஏற்றுவதற்கும், ஃபீவர் குறைவதற்கும் மருந்துகள் கொடுப்பதற்கும் ஏற்பாடு செய்தார்…
சித்தார்த்தோ அறையின் ஓரத்தில் சிலை போல நின்று கொண்டிருந்தான். “என்னாச்சு டாக்டர்?” என்று பதட்டத்துடன் கேட்டான்…
”வெரி ஹை ஃபீவர் சித்தார்த். பயப்படும்படி எதுவும் இல்லை. சோர்வும், சரியான நேரத்துக்கு சாப்பிடாததாலும் இப்படி ஆயிட்டாங்க. கவலை, மன அழுத்தம் இதெல்லாம் கூடக் காரணமா இருக்கலாம்” என்று டாக்டர் மெதுவாகக் கூறினார்…
’கவலை, மன அழுத்தம்’ என்ற வார்த்தைகள் சித்தார்த்தின் செவிகளில் சுத்தியலாய் இறங்கின. தன் பிடிவாதம் தான் தன் தாயை இந்த நிலைக்குக் கொண்டு வந்துவிட்டது என்ற குற்ற உணர்ச்சி அவனது உயிரையே பிசைவது போல வலித்தது. இப்போது ஜானுவின் மீதான உணர்வுகளை விட, தாயின் உயிருக்குப் பயந்த உணர்வுதான் அவனுக்குள் மேலோங்கி இருந்தது….
அதே சமயம், சித்தார்த்தின் பதட்டமான அழைப்பைக் கேட்டு, வாசுதேவனும் வீட்டுக்கு விரைந்து வந்திருந்தார். பதற்றத்துடன் அறைக்குள் நுழைந்தவர், கட்டிலில் படுத்திருந்த மனைவியையும், அருகில் இருந்த மருத்துவரையும் கண்டதும் உடைந்து போனார்…
”தெய்வானை! எ.. என் மனைவிக்கு என்னாச்சு டாக்டர்?” என்று பதறியபடி வாசுதேவன் கேட்டார்.
டாக்டர் வாசுதேவனிடம் நிலைமையை விளக்கினார். ‘கவலை, மன அழுத்தம்’ என்ற வார்த்தைகளைக் கேட்டதும், தன் மனைவியின் இந்த நிலைக்குக் காரணம் என்னவென்று வாசுதேவனுக்குத் தெளிவாகப் புரிந்தது. அவர் அழுத்தமாக மகனைப் பார்க்க, சித்தார்த்தோ குனிந்த தலையுடன், வார்த்தை பேச முடியாமல் குற்ற உணர்ச்சியில் உறைந்து போயிருந்தான்…
அவர் மகனுடன் கோபமாக எதுவும் பேசவில்லை. அமைதியாகத் தனது மனைவியின் அருகில் வந்து, அவர் கேசத்தை வருடி கொடுத்தபடி அமர்ந்து கொண்டார்…
மருத்துவர் மருந்துச்சீட்டை வாசுதேவனிடம் நீட்டியபடி, “வாசுதேவன் சார், ஃபீவர் குறைய ஆரம்பிசிச்சுடும், குளுக்கோஸ் ஏறுனதும் கொஞ்சம் தெளிவு வரும், முழு ஓய்வு ரொம்ப முக்கியம், மனசும் உடம்பும் ரொம்ப சோர்வாக இருக்கு, நான் எழுதிக் கொடுத்திருக்கிற மருந்துகளைச் சரியாக் கொடுத்திடுங்க, நைட் ஒரு தடவை வந்து செக் பண்ணிட்டுப் போறேன்,” என்று விளக்கியவர் விடைபெற்றுக் கொண்டார்….
வாசுதேவனின் முகத்தில் மனைவியின் உடல்நிலையை எண்ணி கவலையும், அவரது துயரத்திற்கான வலியும் தெளிவாகத் தெரிந்தது. அவர் மெளனமாக அமர்ந்திருந்தாலும், கண்கள் கலக்கத்தை காட்டியது…
சித்தார்த்தோ, ஒரு மூலையில் நின்று, தாயையும் தந்தையையும் மாறி மாறிக் கவனித்தான். தந்தையின் துயரத்தையும், கட்டிலில் கண்மூடி படுத்திருந்த தாயின் நிலையையும் பார்த்தபோது மனதில் அழுத்தம் உண்டானது…
மெதுவாகத் தந்தையின் அருகில் வந்தவன், குற்ற உணர்ச்சியுடன் “ஸாரிப்பா,” என்றான்.
வாசுதேவன் மகனைக் கோபமாகப் பார்க்கவில்லை. மெதுவாகத் தலையைக் குனிந்தபடி வேதனையுடன்,.. “நேத்து நைட்லாம் ஒரே அழுகை. ‘பார்த்துக்கலாம் விடு’ன்னு நான் எவ்வளவோ சொல்லியும் கேட்கலை. காலையில உம்முன்னு தான் இருந்தா. ஆனா, நல்லா தான் இருந்தான்னு நானும் ஆபிஸ் கிளம்பிட்டேன். இப்போ தான் தெரியுது, அவ ரொம்ப மன அழுத்தத்துல இருந்திருக்கான்னு…” தன் மனைவியின் கேசத்தை வருடிவிட்டபடி கூறினார்,..
சித்தார்த்தோ தாயின் கரத்தைப் பற்றியபடி, குற்ற உணர்ச்சியுடன் அவரருகிலேயே அமர்ந்து விட்டான்…
சிறிது நேரத்திலேயே, மருந்தின் உபயத்தால் காய்ச்சலும் முழுதாகக் குறைந்திருக்க, தெய்வானை மெல்ல விழிகளைத் திறந்தார், விழித்ததும் அவர் பார்த்தது அருகில் அமர்ந்து தன் கையைப் பற்றிக் கொண்டிருந்த மகனைத்தான்…
அவர் அவன் முகத்தைப் பார்க்காமல் திரும்பிக் கொண்டு, அவனிடமிருந்து தனது கரத்தை உருவிக் கொள்ள முயல, தாயின் செயல் புரிந்து அழுத்தமாகப் பற்றிக் கொண்டவன், “ஸாரிமா,” என்றான்…
”என்கிட்ட யாரும் ஸாரி சொல்ல தேவை இல்லை. என் கையை விட்டாப் போதும். விடச் சொல்லுங்க,” என்று தெய்வானை வாசுதேவனிடம் கோபமாகக் கூறினார்…
வாசுதேவனோ, நீங்களே பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள் எனும் விதமாய், ஒரு பெருமூச்சோடு அமைதியாகவே இருந்துவிட்டார்.
சித்தார்த் தாயின் கோபம் குறையாததைக் கண்டு, “அம்மா ப்ளீஸ்மா,” என்று கெஞ்சினான். அவரோ அவன் பேசுவது காதில் விழாதது போல் இருந்தார்…
தாயின் பிடிவாதத்தை கண்ட சித்தார்த் நீண்ட மூச்சை இழுத்து விட்டு,… “இப்போ என்னம்மா உங்களுக்கு? நான் நீங்க பார்த்திருக்கிற பொண்ணைக் கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லணும் அவ்வளவு தானே? சரி சம்மதிக்கிறேன்!” என்று அழுத்தமாகக் கூறினான்…
அந்த வார்த்தைகளைக் கேட்ட பிறகுதான், தெய்வானையின் முகம் மலர்ந்தது. கண்ணில் தெரிந்த கோபம் விலகி, மகனின் முகத்தை மென்மையான புன்னகையுடன் நோக்கினார்..
”நிஜமாத்தான் சொல்றியா?” என்றார்,..
”சத்தியமா,” அவன் உறுதியாய் கூற, அவர் முகத்திலோ பழைய புன்னகையும் மலர்ச்சியும் திரும்பியிருந்தது. அந்த நொடி, அவருக்கு இருந்த காய்ச்சல், மன அழுத்தம், கோபம் அனைத்தும் மாயமாக மறைந்தன…
அவன் சம்மதம் சொன்னதைக் கேட்டதும், தெய்வானை மெல்ல எழுந்து மகனைப் பாசத்துடன் இறுக்க அணைத்துக் கொள்ள, அவனும் தாயைத் தாங்கிக்கொண்டபடி அணைத்துக்கொண்டான்…
அவர் முகத்தில் மீண்டும் உண்மையான புன்னகையைப் பார்த்த பிறகுதான் அவனுக்கு நிம்மதியே வந்தது…
அதே சமயம், தான் பல ஆண்டுகளாக மனதிற்குள் வைத்திருந்த ஜானுவின் நினைவுகள், நிரந்தரமாகத் துண்டிக்கப்பட்டுவிடுமோ என்ற கசப்பும் மனதின் ஒரு மூலையில் மெல்ல எழ ஆரம்பித்த அடுத்த கணம், ‘இல்லை, அப்படி எதுவும் நடக்காது,’ என்று அழுத்தமாய் தன்னில் உரைத்துக்கொண்டவன், எப்படியாவது இந்தத் திருமணத்தை நிறுத்திவிட வேண்டும் என்று ரகசியமாகக் கணக்குப் போட்டான்…
தெய்வானை முழுவதும் இயல்புக்குத் திரும்பியதை உறுதிப்படுத்திய பிறகு, சித்தார்த் மெதுவாகத் தன் தாயைவிட்டு விலகினான். அவன் முகத்தில் புன்னகை இருந்தாலும், அதில் ஒரு நாடகம் கலந்திருந்தது…
“நீங்க இப்போ சந்தோஷமா இருக்கீங்கல்லமா? அது போதும்,” என்று சொல்லியவன், தன் திட்டம் செயல்பட முதல் அடியை எடுக்கும் திட்டத்துடன் “பொண்ணை பத்தி சொல்லலையே” ஆர்வமாக கேட்பதுபோல் பாசாங்கு செய்தான்…
தெய்வானை, மகனின் கேள்வி மகிழ்ச்சிக்குரியது என்று நினைத்து, மிகுந்த உற்சாகத்துடன், “மாணிக்க அண்ணனோட மூத்த பொண்ணு ரிதன்யா தான்ப்பா, ரொம்ப அழகான அமைதியான பொண்ணு, உனக்கு ஏத்த ஜோடி, அன்னைக்கு ஃபங்சன்க்கு கூட வந்தாளே” என்று நினைவுபடுத்த, சித்தார்த்திற்க்குத் தூக்கி வாரிப் போட்டது!
’அவளா!’ என்று அவன் ஆச்சரியத்தில் உறைந்தான்.
அவள் தானே அவனுக்குள் இனம் புரியாத தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாள்! தன் தூக்கத்தைக்கூட அவளால் தொலைத்திருந்தானே! சில கணம் ஸ்தம்பித்த நிலையில் இருந்தவன், “என்னப்பா, அம்மாவும் அப்பாவும் உனக்கு ஏத்த சரியான ஜோடியை தானே தேர்ந்தெடுத்திருக்கிறோம்,” என்ற அன்னையின் குரலில் சுயம் பெற்று, “ம்ம்,” என்று தலையசைத்தான்.
அதே கணம் அவன் மனம், ‘அவளிடம் பேசி முதலில் இந்தக் கல்யாணத்தை நிறுத்தணும்’ எனவும் கணக்குப் போட்டது..