இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா – 13

அத்தியாயம் – 13

 

ரிதன்யாவிற்க்கு ஒரு புது எண்ணிலிருந்து அழைப்பு வரவும், யோசனையுடன் அழைப்பை ஏற்றாள்…  “ஹெலோ ரிதன்யா.”
​ஒரு ஆடவனின் குரலைக் கேட்ட ரிதன்யா குழப்பத்துடன், “எஸ்… நீங்க?” என்றாள்…

“நான் சித்தார்த்” அவன் கூற,.. “எந்த சித்தார்த்?” என்றாள் அவள் இன்னும் குழப்பம் நீங்காமல்…

“உனக்கு என் கூட மேரேஜ் பேசி வச்சிருக்காங்க, இப்போதாவது தெரிந்ததா எந்த சித்தார்த்னு” அவன் சற்று எரிச்சலுடன் கூற,.. அவளுக்கும் புரியவே,.. “சொ.. சொல்லுங்க என்ன விஷயம்” என்றான்,.. இப்போது எதற்காக போன் செய்திருக்கிறான் எனும் படபடப்பு அவளிடம்,…

“நான் டைரக்ட்டாவே விஷயத்துக்கு வரேன், எனக்கு இந்த மேரேஜ்ல இண்ட்ரஸ்ட் இல்லை, என்னோட அம்மாவுக்காக சம்மதிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில இருக்கேன். என்னால இந்தக் கல்யாணத்தை நிறுத்த முடியலை. ஸோ, நீயே இந்த கல்யாண பேச்சை இதோடு நிறுத்திடு, அதுதான் நம்ம ரெண்டு பேருக்கும் நல்லது,” என்று கூறிட அதிர்ச்சியில் உறைந்தாள் ரிதன்யா.

​அவனிடமிருந்து இப்படியொரு எதிர்வினையை அவள் எதிர்பார்க்கவில்லை, அவளுக்கும் இந்தக் திருமணத்தில் விருப்பம் இல்லைதான். ஆனால், பெற்றோருக்காகச் செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள். இந்நிலையில், இவனும் இப்படிச் சொல்லவும் அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை,

அதே கணம், அவள் தாய் தந்தையிடம் மீண்டும் போய் ‘கல்யாணம் வேண்டாம்’ என்று சொல்லவும் முடியாது. அதனால், அவனே இதனைச் செய்யலாமே, எனக்கும் பெரிய உதவி செய்தது போல் இருக்கும் என்று எண்ணியவள், “நீங்களே நிறுத்தலாமே?” என்றாள்…

“இடியட்! என்னால முடியலைன்னு தானே உன்கிட்ட சொல்றேன்? உடனே உன்னோட அம்மா அப்பாகிட்டப் பேசு,” அவளைத் திட்டிவிட்டுக் கட்டளை போல் கூறிவிட்டு, இணைப்பைத் துண்டித்துவிட்டான்.
​அவளுக்கோ கோபம் சுறுசுறுவென்று ஏறியது…

‘என்ன திமிரு இவனுக்கு! சம்மதம் இல்லைன்னு சொல்றதுக்கு நான் ஏன் என் குடும்பத்து பெரியவங்ககிட்டப் பேசணும்? தைரியம் இருந்தா அவனே பேச வேண்டியது தானே, தைரியம் இல்லாதவனுக்கு கோபம் வேற வருது, ச்சே’ என்று அவனை திட்டியபடி இருந்தவள்,… ‘இப்போ நான் அப்பா அம்மாகிட்டயும் சொல்ல முடியாது, அவனே சொல்லிக்கட்டும், பெரிய இவன் மாதிரி என்னைத் திட்டுறான், நான் இதுல தலையிடப் போவதில்லை!’ என்று தன் மனதுக்குள் உறுதி செய்துகொண்டாள்…

மறுநாள் காலை, சித்தார்த் வழக்கம் போல் அலுவலகம் புறப்பட்டுச் சென்றான். ரிதன்யாவைத் திட்டியதால், அவள் பயந்துபோய் நிச்சயம் திருமணத்தை நிறுத்திவிடுவாள் என்ற நம்பிக்கை அவனுக்குள் இருந்தது…

​ஆனால், மதிய வேளையில், வாசுதேவன் மாணிக்கத்துக்கு போன் செய்து பேசினார்..

​”மாணிக்கம், என் மகனும் சம்மதம் சொல்லிட்டான், இனிமே தாமதிக்க வேண்டாம்னு பார்க்கிறேன். இந்தக் கல்யாணத்துக்காக உங்க குடும்பமும், நாங்களும் சந்திக்கணும். கல்யாண தேதியைப் பற்றிப் பேச சிம்பிளா பொண்ணு பார்க்கிற ஃபங்சன் மாதிரி வச்சிக்கலாமா” என்று வாசுதேவன் உற்சாகத்துடன் கேட்க,…”கண்டிப்பா வச்சுக்கலாம் அண்ணா” என்ற மாணிக்கமும் வாசுதேவனும் அந்த வாரத்தில் ஒரு நாளை முடிவு செய்தனர்….

சரியாகப் பெண் பார்க்கச் செல்ல இருக்கும் ஒரு நாள் முன்பு, தெய்வானை இதனைக் குறித்து மகனிடம் கூற, அவனுக்கோ அதிர்ச்சி!

​’அவ அவளோட அம்மா அப்பாகிட்டப் பேசுனாளா? இல்லையா? பொண்ணு பார்க்கிறது வரைக்கும் போயிருக்காங்க இவங்க!’ என்று கோபம் கொண்டு உடனடியாகத் தன் அறைக்கு வந்தவன், ரிதன்யாவின் எண்ணிற்க்கு மீண்டும் அழைத்தான். அவளோ, அழைப்பை ஏற்கவில்லை. அவன் எண்ணைக் கண்டு வேண்டுமென்றேதான் அவள் அழைப்பை ஏற்கவில்லை என்பது சித்தார்த்திற்க்குப் புரிந்தது, கோபம் தலைக்கேறியது.

அறையினுள்ளேயே நடை பயின்றவனுக்கு, இப்போது கோபமெல்லாம் ரிதன்யாவின் மீதே திரும்பியது, அன்றிரவு முழுவதும் பல திட்டங்களை வகுத்தான். ஆனால், எதைச் செய்தாலும் தனது பெற்றோரை அவமானப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் அவனிடம் இருந்தது,…

​அடுத்தநாள், ரிதன்யாவைப் பெண் பார்க்கச் செல்வதற்காகச் சித்தார்த்தின் தாய், தந்தை இருவரும் மிகுந்த ஆரவாரத்துடன் கிளம்பிக் கொண்டிருந்தனர். தெய்வானையின் முகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மகிழ்ச்சி துள்ளியது..

​ஆனால், சித்தார்த்தோ தாமதமாகத்தான் வீட்டிற்கு வந்தான்…

​”ஏன்டா இவ்வளவு நேரம்? போகும்போதே சொல்லித் தானே விட்டேன் சீக்கிரம் வந்திடுன்னு,” என்று மகனைச் செல்லமாய்க் கடிந்துகொண்ட தெய்வானை “சீக்கிரம் ரெடியாகிட்டு வா,” என்று அவனை அனுப்பி வைத்தார்…

தாயின் முகத்தில் இருந்த களங்கமில்லா மகிழ்ச்சியைப் பார்த்த சித்தார்த், தான் ரிதன்யா மீது வைத்திருந்த அத்தனை கோபத்தையும் உள்ளுக்குள்ளேயே புதைத்துக்கொண்டான். தன் திட்டத்தைச் செயல்படுத்த, வேறு வழியில்லாமல், அவளை நேரில் பார்த்துப் பேசிக் கொள்ளலாம் எனும் முடிவுடன் தயாராகச் சென்றான்…

ரிதன்யாவின் இல்லத்தில்,..

நீல நிறப் பட்டுப் புடவையில் தேவதையாய் தயாராகி இருந்தாள் ரிதன்யா. அவளது தாயும், தங்கையும் தான் அவளை மிகுந்த அக்கறையுடன் அழகாக அலங்கரித்திருந்தனர்…

​”அக்கா, இப்போவே கல்யாணப் பொண்ணு மாதிரி இருக்க. வரப்போற மாப்பிள்ளை இப்போவே உன்னை தாலியைக் கட்டி இழுத்துட்டுப் போகப் போறாரு பாரு!” என்று சரண்யா கிண்டல் செய்ய, ​”அம்மா, பாருங்க இவளை,” என்று சிணுங்கினாள் ரிதன்யா…

​”சும்மா இருடி, அவளுக்கு வெட்கமா இருக்கு போல,” என்று இளைய மகளை அதட்டுவது போல் அவள் தாயும் கிண்டல் செய்ய, ​”அம்மா…” என்று பாவமாக அழைத்தவளைப் பார்த்து நெகிழ்வாய் புன்னகைத்தவர், “சும்மாடா,” என்று சமாதானப்படுத்தினார்…

அதன் பின் மகளுக்குத் திருஷ்டி கழித்த சாரதா, “அக்கா கூட இரும்மா,” என்று இளைய மகளை மூத்த மகளுக்குத் துணையாக வைத்துவிட்டு வெளியே வர, “என்னம்மா, ரிது தயாரா?” என்று கேட்டார் மாணிக்கம்…

​”ஆமாங்க… ரெடியாகிட்டா. அவங்க கிளம்பிட்டாங்களாமா?” சாரதா வினவ, “வாசு அண்ணா இப்போ தான் கால் பண்ணாரு, கிளம்பிட்டதா சொன்னாரு,” என்றார் மாணிக்கம். அவருடைய முகத்திலும், சாரதாவின் முகத்திலும் ஒரு பூரிப்பு தெரிந்தது…

​மறுபுறம்.. வாசுதேவன், தெய்வானை, மற்றும் சித்தார்த் ஆகியோர் மாணிக்கத்தின் வீட்டுக்குக் கிளம்பினர். வாசுதேவன் மிகுந்த உற்சாகத்திலும், தெய்வானை மகிழ்ச்சியிலும் காணப்பட்டனர். ஆனால், காரின் டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்த சித்தார்த்தோ, எரிமலையாய் குமுறிக் கொண்டிருந்தான்…

ரிதன்யாவின் மீதான கோபம் அவன் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. ‘நான் சொன்னதை செய்யாம, இந்தச் சந்திப்புக்கு அவளும் சம்மதித்திருக்கிறாளா? நான் தான் சம்மதிக்க முடியாதுன்னு சொன்னேனே! போய் பேசிக்கிறேன்’ ஆவேசமாக நினைத்துக் கொண்டான்…

சிறிது நேரத்தில், கார் மாணிக்கத்தின் வீட்டின் முன் வந்து நின்றது. வாசுதேவனும், தெய்வானையும் மிகுந்த மரியாதையுடன் வரவேற்கப்பட்டனர். ஆனால், விருப்பமே இல்லாத நோக்கத்துடன் வந்த சித்தார்த், முகத்தில் ஒரு புன்னகையும் இல்லாமல், இறுக்கமான அமைதியுடன் உள்ளே நுழைந்தான், யாருடைய உபசரிப்பையும் அவன் ஏற்கும் நிலையில் இல்லை…

வாசுதேவனும் மாணிக்கமும் வீட்டின் முற்றத்தில் அமர்ந்துகொண்டு, திருமணப் பேச்சுக்கு முன்னதாக, கலகலப்போடு மற்ற விஷயங்களைப் பற்றிப் பேச்சை ஆரம்பித்தனர், அவர்களுக்கு குடிக்க நீர் வழங்கிய சாரதாவும் தெய்வானையோடு பேச ஆரம்பித்துவிட, சித்தார்த்தோ போனை பார்த்தபடி மனதினுள் குமுறியபடி அமர்ந்திருந்தான்,..

உள் அறையில் இருந்த ரிதன்யாவுக்கோ பிடித்தமின்மையை தாண்டிய ஒருவிதப் பதட்டம் தொற்றிக் கொண்டிருந்தது…

அவனுக்கும் இந்தத் திருமணத்தில் இஷ்டம் இல்லை என்று தெரிந்து கொண்டவளுக்கு, இன்று என்ன நடக்குமோ என்ற பயம் வேறு. நேற்று அவன் திட்டியதிலிருந்து ஏனோ அவன்மீது கோபம் தான் வந்தது. இப்போது, அவன் முன்னிலையில் போய் நிற்கவே அவளுக்குச் சற்றும் விருப்பமில்லை…

“அக்கா… டென்ஷனா இருக்கியா?” அவளை கவனித்துக் கொண்டிருந்த சரண்யா வினவ.. 
“எனக்கு விருப்பமே இல்லடி இந்தக் கல்யாணத்துல. டென்ஷனை விட எரிச்சல் தான் நிறைய இருக்கு” என்றாள் அவள்…

​”இரு, அப்பா அம்மாகிட்ட சொல்றேன்,” என்று கூறிப் போக எத்தனித்தவளின் கரத்தைப் பற்றி நிறுத்திய ரிதன்யா, “அம்மாவும் அப்பாவும் ரொம்ப சந்தோசமா இருக்காங்க. அவங்க சந்தோஷம் என்னால கெட வேண்டாம்,” என்றாள்…

​”எனக்கு உன்னோட நிலைமை புரியுதுக்கா. ஆனா, நீயும் பிராக்டிகலா யோசியேன்,” அவள் கூற, ஒரு பெருமூச்சொன்றை விட்டவள் தாயின் வரவைக் கண்டு இதழ்களில் புன்னகையை வரவழைத்துக் கொண்டாள்…

​”உன்னை கூப்பிடுறாங்க, வாடா,” என்று மகளின் தோளைப் பற்றி சாரதா தான் அழைத்துச் சென்றார். 
பட்டுப் புடவையில் அழகிய பதுமையாய் வந்து நின்ற பெண்ணவளை ஆசையாகப் பார்த்தார் தெய்வானை. சித்தார்த்தும், ரிதன்யாவைப் பார்த்தான். அவள் அழகாக இருந்தாள். ஆனால், அவன் கண்களில் இப்போது அந்தக் கணம் முன்பு இருந்த ஈர்ப்பு இல்லை கோபம் மட்டுமே இருந்தது,..

ரிதன்யாவோ, நேற்று இவன் திட்டிய வார்த்தைகளால் ஏற்பட்ட கோபத்தை அடக்கிக் கொண்டு, அவனைப் பார்க்க பிடிக்காமல் தலை குனிந்து நின்றிருந்தவள்,..

தாய் சொல்லித் தந்ததுபோல் கைகூப்பி வணங்கியவளின் கையில், வீட்டில் அப்பொழுதைக்­கு வேலை செய்ய வந்த பணிப்பெண் காபி டம்ளர்கள் நிறைந்த ட்ரேயை நீட்ட, தயக்கத்துடன் வாங்கிக் கொண்டாள் அவள்…

​”எல்லாருக்கும் கொடுமா,” சாரதா கூற, சிறு தலையசைப்புடன் ரிதன்யா ஒரு பெரிய காரியத்தைச் செய்வதுபோல், மெதுவாக அனைவருக்கும் காபி கொடுக்க ஆரம்பித்தாள்…

​வாசுதேவன், தெய்வானை, மாணிக்கம், என அனைவருக்கும் காபி வழங்கியவள், டிரேயில் இருந்த கடைசி கோப்பையுடன் சித்தார்த்தை நெருங்கினாள்…

அவனுடைய கோபப் பார்வையை அவள் உணர்ந்தாலும், அவளது முகத்தில் இருந்த புன்னகை மாறவில்லை. மெல்லக் குனிந்து அவள் ட்ரேயை அவனிடம் நீட்டியபடி இருக்க, அவனோ கோப்பையை வாங்காமல், அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்…

​அவளுக்கு மட்டுமே தெரியும் அந்தப் பார்வை எச்சரிக்கும் கோபத்தின் நெருப்பு என்று, 
மற்றவர்களோ, அவளை அவன் ஆசையுடன் பார்க்கிறான் என்றுதான் நினைத்தனர்…

​”பொண்ணைப் பார்த்தது போதும், காபியை எடுத்துக்கப்பா,” என்று தெய்வானை சிறு நகைப்புடன் சொல்ல, எரிச்சலை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் கோப்பையை சித்தார்த் எடுத்துக் கொள்ள, அவளும் நிம்மதிப் பெருமூச்சோடு நகர்ந்து கொண்டாள்…

“இங்கே வாம்மா, என் பக்கத்துல வந்து உட்காரு,” தெய்வானை கனிவுடன் சொல்ல, அவளும் மறுக்க முடியாமல் மெல்லிய புன்னகையுடன் அவரருகில் வந்து அமர்ந்து கொண்டாள்…

​வாசுதேவன், அவள் சங்கடப்படுகிறாளோ என்று நினைத்து, “ஃப்ரீயா இருமா… இனி நாங்களும் உங்க குடும்பம்தான்,” என்று சொல்ல, அவளும் மெல்ல புன்னகைத்துக் கொண்டாள்…

​சந்திப்பு இனிதே தொடர்ந்தது, நிறைய பேசிக் கொண்டார்கள், தெய்வானை பேசி பேசியே ரிதன்யாவை தன்னோடு ஓரளவு இயல்பாக்கி கொண்டார்,..

வாசுதேவன் மகிழ்ச்சியுடன், “ரொம்ப சந்தோஷம் மாணிக்கம். இப்போ கல்யாண தேதியைப் பத்தி பேசிடலாமா?” என்று கேட்க, அப்போது, அந்த அமைதியைக் கிழித்தபடி, “நான் பொண்ணு கூட தனியா பேசணும்,” என்றான் சித்தார்த்.

​வாசுதேவனும் தெய்வானையும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள, ரிதன்யாவிற்கோ பதட்டமானது. ‘கடவுளே, என்ன பேசப் போறான் இவன்!’ என்று அவள் புலம்பிக்கொள்ள,
​மாணிக்கம், “தாராளமாகப் பேசுங்க தம்பி. ரிதுமா, தம்பியை மாடிக்கு அழைச்சிட்டு போம்மா,” என்று சொல்ல, அவளோ என்ன சொல்வாள், திணறலுடன் தலையசைத்தாள்….

​அவளை அழுத்தமாகப் பார்த்தபடி எழுந்துகொண்டவனோ, அவனே  மாடிப் படியை நோக்கிச் சென்றான். அவள் தயக்கத்துடன் அவனைப் பின்தொடர்ந்தாள்…

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page