அத்தியாயம் – 14
இருவரும் மொட்டை மாடியில் தான் நின்றிருந்தனர். அந்த இடத்தில் வீசிய தென்றல் காற்று இருவரையும் கொஞ்சமும் குளிர்விக்கவில்லை. இருவரின் மனநிலையும் கொந்தளிப்பில் இருந்தது…
அவன் பேண்ட் பாக்கெட்டில் ஒரு கையை நுழைத்து, அவளையே அழுத்தமாகப் பார்த்தபடி நிற்க, அவளோ சேலை நுனியைத் திருகியபடி தலை குனிந்து நின்றாள்…
”உன்கிட்ட நான் என்ன சொன்னேன்?” குரலை உயர்த்தி அவன் தான் முதலில் பேசினான். அவளுக்குப் பதட்டமாக இருந்தாலும், அவனிடம் பயந்து பம்மிக் கொண்டு நிற்க விரும்பவில்லை…
தலையை உயர்த்தி அவனைப் பார்த்தவள், “என்னால என்னோட அம்மா அப்பா கிட்ட கல்யாணத்தை நிறுத்த சொல்ல முடியாது, முடிஞ்சா நீங்களே பண்ணிக்கோங்க,” என்றாள் மெல்லிய குரலில்…
ரிதன்யாவின் இந்தக் கூற்றைக் கேட்ட சித்தார்த்தின் கண்கள் சுருங்கிப் போயின. “ஏன்?” என்றான் இறுகிய குரலில்…
”ஏன்னு கேட்டா என்ன சொல்றது? என் அம்மா அப்பாவோட வார்த்தையை என்னால மீற முடியாது. இந்த கல்யாணத்துல தான் அவங்க சந்தோசமே அடங்கி இருக்கு. அப்படி இருக்கும் போது எப்படி என்னால இந்த சம்மதத்தை நிறுத்த முடியும்? தேவைன்னா நீங்களே நிறுத்திக்கோங்க. நான் இதுல தலையிட முடியாது,” என்றாள்.
சித்தார்த், ஆத்திரத்தில் தன் பாக்கெட்டிலிருந்து கையை எடுத்தான். ரிதன்யாவின் இந்தத் துணிச்சல் அவனுக்குக் கோபத்தை மட்டுமல்ல, தன் மீதான இயலாமையையும் அதிகரித்தது.
”எனக்கு அதெல்லாம் தெரியாது. நீ தான் பேசி இதை நிறுத்தனும்,” அவன் கட்டளை போல் சொன்னான்.
”நான் சொல்றது உங்களுக்குப் புரியலையா?” என்றாள் சற்றே குரலை உயர்த்தி. தான் இவ்வளவு தெளிவாகக் கூறியும் புரிந்து கொள்ளாமல் பேசுகிறானே என்று கோபம் தான் வந்தது அவளுக்கு…
”ஏய்! இந்தச் சத்தமா பேசுற வேலை எல்லாம் வச்சுக்காத!” அவன் விரல் நீட்டி மிரட்டிட, ரிதன்யாவுக்குள் இருந்த ஆத்திரம் எல்லை மீறியது. அவனது மிரட்டலைப் பொருட்படுத்தாமல்,
கடுமையான குரலில் “நான் சத்தமாத்தான் பேசுவேன். ஏன்னா, என் பக்கம் எந்த தப்பும் இல்ல, என் அப்பா அம்மாவோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். என்னைத் திட்டி, மிரட்டி உங்க வேலையைச் சாதிச்சுக்கப் பார்க்காதீங்க!” என்று அழுத்தமாகக் கூறினாள்…
ரிதன்யாவின் இந்தக் கூற்று, சித்தார்த்தின் முகத்தில் அறைந்தது போல் இருந்தது. அவள் தன் மிரட்டலுக்குப் பணிய மாட்டாள் என்று அவனுக்குத் தெளிவாகப் புரிந்தாலும், இந்தத் திருமண சம்மதத்தை நிறுத்த இவள் மட்டுமே ஒரே வழி என்று எண்ணினான்.
அவளே எப்படியாவது இந்தத் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்னும் எண்ணத்தில், “என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னா, நீ ரொம்பக் கஷ்டப்படுவ,” என்று மிரட்டும் தொனியில் கூறினான்.
அவளோ அவனை அமைதியாய் நோக்க, அவனோ, “நான் உன்னைக் காதலிக்க மாட்டேன். உன்னை ஒரு மனைவியா மதிக்க மாட்டேன், உன் வாழ்க்கைய நரகமா மாத்திருவேன்! உன்னை என் மனைவியா இல்லாம என் வீட்டுக்கு வந்த ஒரு வேலைக்காரியா தான் நடத்துவேன். அப்புறம் உன் அப்பா அம்மாவோட சந்தோஷம் எந்த அளவுக்கு இருக்கும்னு நீயே யோசிச்சுப் பாரு,” என்று தன் மிரட்டலை இன்னும் ஆழமாக்கினான்…
ரிதன்யாவின் முகம் சிறிது மாறியது. இந்த மிரட்டல் சற்று அத்துமீறியதாக இருந்தாலும், அவள் பதிலுக்கு அவனைப் பார்த்து, “என்ன மிரட்டுறீங்களா? இந்த மிரட்டலுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்!” என்று உறுதியுடன் கூறினாள்…
ரிதன்யாவின் இந்த தைரியம் சித்தார்த்தின் பொறுமையை உடைத்தது. இருப்பினும் ஏதாவது செய்து இந்த திருமண பேச்சை இதோடு நிறுத்தி விட வேண்டும் எனும் ஒரே எண்ணத்தில்… “சைடுல கீப்பா ஒரு பொண்ணையும் வச்சிப்பேன்! உன் முன்னாடியே அவ கிட்ட கொஞ்சி குலாவுவேன்! இதையும் அக்ஷப்ட் பண்ணிக்கிட்டு வாழ முடியும்ன்னா எனக்கும் ஓகே தான்,” தன் மிரட்டலை முடித்து விட்டு அவள் முகத்தை ஆழ்ந்து கவனித்தான்,…
ரிதன்யாவின் முகம் இப்போது அருவருப்பால் சுருங்கியது. அவன் மிரட்டல் எல்லைகளை மீறிச் சென்றிருந்தது அல்லவா! ‘என்ன மனுஷன் இவன் ச்சீ’ என்று கோபம் தான் வந்தது…
அவளது முகமாற்றத்தைக் கவனித்தவன், அவளை வெற்றிகரமாகத் தோற்கடித்துவிட்டதாக எண்ணி, ஒரு வெற்றிப் புன்னகையுடன் சட்டென்று அங்கிருந்து திரும்பி, மாடிப் படியை நோக்கி விரைந்தான், இதன் பின்பு அவள் இத்திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டாள் என்று உறுதியாக நம்பினான்,…
ரிதன்யாவோ, பலவித யோசனைக்கு பிறகு அவளும் மாடியிலிருந்து இறங்கி வந்தாள்.
சித்தார்த் வரவேற்பறைக்குள் நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்தான். அவனது முகம் இறுக்கமாகவும், அதே சமயம் ஒருவிதக் குரூரமான திருப்தியுடனும் காணப்பட்டது, ரிதன்யாவும் வந்து அமர்ந்தாள்.
மாணிக்கம் வாய் நிறையப் புன்னகையோடு “என்னப்பா, பேசிட்டீங்களா? எங்க பொண்ணை உங்களுக்குப் பிடிச்சிருக்கா?” என்று வினவ,
சித்தார்த் அவளை ஒரு கணம் எரிச்சலுடன் பார்த்தபடி, வெளியே சிரித்த முகமாக,.. “எனக்குப் பிடிச்சிருக்கு அங்கிள். உங்க பொண்ணுக்குப் பிடிச்சிருக்கான்னு கேளுங்க,” என்றான்…
அவனது அந்தக் கூற்று எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவன் சம்மதத்திற்க்காகக் காத்திருந்தவர்களுக்கு, இந்த பதில் திருப்தியை அளித்தது.
இப்போது அனைவரின் பார்வையும் ரிதன்யாவின் மீதுதான் இருந்தது.
ரிதன்யா ஒரு கணம் உறைந்தாள். மெதுவாகத் தலையை நிமிர்த்தி, சித்தார்த்தின் முகத்தினை உற்றுப் பார்த்தாள். அவன் இதழ்களில் தெரிந்த விஷமப் புன்னகை அவளுக்கு புரிந்தது, தன் பெற்றோரின் சந்தோஷத்தைக் காப்பாற்றவும், அவனுடைய ஆணவத்தை உடைக்கவும் தீர்மானித்தாள்,..
ஒரு வினாடி தயங்கியவள், பிறகு உறுதியுடனும் மெல்லிய குரலுடனும் “எனக்கு… சம்மதம்” என்றாள்.
அவள் சம்மதம் சொன்னதைக் கேட்டு அனைவரும் மகிழ்ச்சியில் பூரித்துப் போய்விட்டனர், வாசுதேவனும் மாணிக்கமும் சந்தோஷத்தில் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டனர்…
ஆனால், அவள் சம்மதம் சொன்னதில் சித்தார்த் தான் அதிர்ச்சியில் உறைந்தான். அவனுடைய கண்கள் கோபத்தில் சுருங்கின. ரிதன்யாவின் இந்த பதில் அவனுக்குப் பேரிடியாக இருந்தது. அவள் இல்லை என்று சொல்லி, இந்தத் திருமணத்தை நிறுத்திவிடுவாள் என்று எதிர்பார்த்தவனுக்கு, அவளது சம்மதத்தினால் கோபமும் அதிர்ச்சியும் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது…
ஆனால், எல்லோர் முன்னிலையிலும் அதை வெளிப்படுத்த முடியாமல், அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான். அவனால் இப்போது ஒரு வார்த்தை கூடப் பேச முடியாத நிலை…
வாசுதேவன் மகிழ்ச்சியுடன் “ரொம்ப சந்தோஷம் மாணிக்கம். மாப்பிள்ளையும் பொண்ணும் சம்மதம் சொல்லியாச்சு. இப்போ கல்யாண தேதியைப் பற்றிப் பேசிடலாமா?” என்று கேட்க, அவரும் சந்தோஷமாக தலையசைத்தார், அதன் பிறகு ஜோசியரிடமும் போன் செய்து கலந்தோசித்து விட்டு உற்சாகமாகத் தேதியைப் பற்றி விவாதிக்கத் தொடங்கினர்…
ரிதன்யாவோ, சம்மதம் சொன்ன திருப்தியையும், இனி நடக்கப்போகும் சம்பவத்தின் பயத்தையும் மனதில் சுமந்தபடி, சித்தார்த்தின் கோபம் நிறைந்த முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்…
அனைத்தும் முடிந்து
வந்தவர்கள் விடைபெற்றுச் சென்றதும், ரிதன்யா, தனது அலங்காரங்களைக் கலைத்துவிட்டு, களைப்புடன் அறையில் படுத்திருந்தாள்…
அவனது எல்லை மீறிய வார்த்தைகளை மீறி அவள் சம்மதம் சொல்லி இருக்கிறாள். ‘நான் உன்னைக் கஷ்டப்படுத்துவேன், வேலைக்காரியாய் நடத்துவேன், சைடுல கீப்பை வைத்துக் கொள்வேன், உன் முன்னாடியே அவ கிட்ட கொஞ்சி குலாவுவேன்’ என்று அவன் விடுத்த ஒவ்வொரு மிரட்டலும் அவளது காதில் எதிரொலித்தது…
’ஏன் நான் சம்மதம் சொன்னேன்?’ அவள் தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். அந்தக் கணம், அவளது தாய் தந்தையின் கள்ளங்கபடமில்லாத முகம் வந்து போனது. இன்று அவர்கள் முகத்தில் தெரிந்த சந்தோஷம் அளவில்லாதது. அதற்காக அவள் தன் அபியின் நினைவுகளை மீறியே சம்மதம் சொல்லி இருக்கும்போது, அந்த சித்தார்த் எம்மாத்திரம் என்று தான் அவளுக்கு நினைக்க தோன்றியது…
’அவன் மிரட்டியதெல்லாம் வெறும் வார்த்தைகள். ஆனா, என் அம்மா அப்பாவின் மகிழ்ச்சி நிரந்தரமானது. ஒருவேளை, அவன் சொன்னது போலவே என் வாழ்க்கையை நரகமாக்கினா கூட, நான் அவனுக்குப் பயப்பட மாட்டேன், அதை பத்தி எனக்கு கவலையும் இல்ல, என் சந்தோஷத்துக்காக வாழாம என் குடும்பத்துக்காக நான் எதையும் எதிர்கொள்ள ள் தயார்!’ என்று மனதிற்க்குள் சபதம் எடுத்துக்கொண்டாள், தன்னை வளர்த்தவர்களுக்காக இதுதான் தான் அவர்களுக்குச் செய்யும் மிகப்பெரிய கடமை என்றும் எண்ணினாள்…
தன் வீட்டிற்க்கு வந்த சித்தார்த், யாரிடமும் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் நேராகத் தன் அறைக்குச் சென்று, கதவை ஓங்கிச் சாத்தினான். அவன் உள்ளே சென்று வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை…
வாசுதேவனும் தெய்வானையும் மகனின் மௌனத்தைக் கண்டு குழப்பமடைந்தனர். “என்னங்க, சித்துவுக்கு என்னாச்சு? எல்லாம் நல்லபடியா முடிஞ்சது. அவன் ஏன் இப்படி அமைதியா இருக்கான்? அவன் முகமே சரியில்லாத மாதிரி இருக்கு?” என்று தெய்வானை கவலையுடன் கேட்டார்….
வாசுதேவன் யோசனையுடன், “என்ன இருந்தாலும் அவன் உனக்காக மட்டும் தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சி இருக்கான். கொஞ்ச நாள் இப்படி தான் இருப்பான், கல்யாணம் ஆனா சரியாகிடுவான். நீ கவலை படாம இரு,” என்று மனைவியை சமாதானப்படுத்த, அவரும் கொஞ்சம் சமாதானமாகினார்…
அறைக்குள் இருந்த சித்தார்த்தோ கோபத்தில் வெறியோடு இருந்தான். ரிதன்யாவின் அந்தச் சம்மதச் சொல், அவன் தன் வாழ்நாளில் பெற்ற மிகப்பெரிய அவமானமாகத் தெரிந்தது.
’அவள் எப்படிச் சம்மதம் சொல்லலாம்? நான் மிரட்டிய பிறகும் எப்படிச் சம்மதம் சொல்லலாம்? என் வார்த்தையை மீறும் அளவுக்கு அவளுக்கு அவ்வளவு தைரியமா?’ என்று ஆத்திரத்தில் படுக்கையை ஓங்கி உதைத்தான்…
பிடிக்காத திருமணம் ஒரு பக்கம் அவனை மனதளவில் கலங்கடிக்க, மறுபக்கம் தன் வார்த்தையை மீறிய ரிதன்யாவின் செயலாலும் அவன் கோபம் உச்சத்தை அடைந்தது.
அவனுடைய ஜானுவைப் பற்றிய பிடிவாதம் மறைந்து இப்போது ரிதன்யாவைப் பற்றிய கோபம் தான் முன்னால் வந்து நின்றது,…
நாட்கள் வேகமாக கடக்க, திருமண வேலைகள் தடல்புடலாக ஆரம்பமாகி இருந்தது. இரண்டே மாதத்தில் கல்யாண தேதியை முடிவு செய்திருந்ததால், இரு குடும்பத்தின் பெரியவர்களும் வேலைகளைத் தீவிரமாகத் தொடங்கினர்.
மாணிக்கமும் வாசுதேவனும் பத்திரிகையை அச்சிடப்பட்டு, அதனைத் தெரிந்தவர்களுக்குக் கொடுப்பதில் ஆயத்தமாகி இருக்க, தெய்வானையும் சாரதாவும் பட்டுப் புடவைகள், நகைகள் எடுப்பதில் மும்முரமாக இருந்தனர். இரு குடும்பத்தின் மனதிலும் அளவற்ற மகிழ்ச்சி…
ரிதன்யாவிற்கு அபியின் நினைவுகள் இருந்தபோதிலும், அவள் தன் பெற்றோரின் மகிழ்ச்சிக்காக அனைத்தையும் அடக்கி வைத்திருந்தாள்…
சித்தார்த்தோ திருமணத்தை நிறுத்த வழி இல்லாமல் இறுக்கத்துடனே சுற்றி திரிந்தான். அவன் தன் கோபத்தையும் விரக்தியையும் தனக்குள் மறைத்து, எந்த வேலைகளிலும் ஆர்வம் காட்டாமல் இருந்தான்..
ஜானுவின் நினைவுகள் அவனை வாட்டி வதைக்க, அந்த வலியை ரிதன்யாவின் பிடிவாதத்தின் மீது திருப்பி, அவளைப் பழிவாங்கத் துடித்தான்…
அவன் பழிவாங்குவதற்கு ஒரு சந்தர்ப்பம் தேடினாலும், அதுவும் அவன் எதிர்பார்த்து போல் அமையவில்லை,..
இந்நிலையில் திருமண வேலைகள் ஒவ்வொன்றும் அழகாக முடிந்து, பத்திரிகைகள் கொடுக்கப்பட்டு, நகைகள், ஆடைகள் என எல்லாம் தயாராகி இருந்தன. இரு குடும்பத்தின் பெரியவர்களும் எதிர்பார்த்த அந்த நாள் நெருங்கியது.
அவள் தன் பெற்றோரின் கனவுக்காகவும் சந்தோசத்திற்காவும் இந்தத் திருமணத்தை ஏற்றுக்கொண்டாள்.
அவனோ, தன்னுடைய ஜானுவை இழந்த கோபத்தை ரிதன்யா மீது பாய்ச்சத் தயாராகி கொண்டிருந்தான்,..
வெவ்வேறு உணர்வுகளோடு, எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற எண்ணங்களோடும், அவர்களது திருமண நாளும் வந்து நின்றது…