அத்தியாயம் – 16
பிங்க் நிற சாஃப்ட் ஷேரியில் எழிலாய் அலங்கரிக்கப்பட்டிருந்தாள் ரிதன்யா. தங்க நகைகள் இன்றி மிகக் குறைவான, ஆனால் நேர்த்தியான அலங்காரத்தில், அவளது இயல்பான அழகு பிரகாசமாக வெளிப்பட்டது. அவள் ஓர் தேவதை போலக் காட்சியளித்தாள். அனைவரின் பார்வையும் அவளது அழகை கண்டு வியந்தது…
”இன்னைக்கு நம்ம சித்து, ரிது அழகுல மயங்கத் தான் போறான்,” என்று உறவுக்காரப் பெண்மணி ஒருத்தி கிண்டலுடன் கூற, சுற்றி இருந்தவர்கள் கலகலவென்று சிரித்தனர்…
ரிதன்யாவிற்கோ, அந்தக் கேலிகளைப் கேட்டு வலுக்கட்டாயமாகக் கூடச் சிரிக்க முடியவில்லை. அவளையும் மீறிய பதட்டம் அவளைச் சூழ்ந்தது. அவன் வார்த்தையை மீறி, தன் தாய் தந்தைக்காக இங்கே வரை வந்து நின்று விட்டாள். ஆனால், இனி என்ன நடக்குமோ என்று அவளுக்கு பீதி கிளம்பியது…
தெய்வானை, பாசத்துடன் அவளது அருகில் வந்து, ”என் மருமக மேல யார் கண்ணும் பட்டுடக் கூடாது,” என்று கூறி அவளுக்கு திருஷ்டி கழித்தார்…
பிறகு, தெய்வானை பால் நிறைந்த செம்பை அவளிடம் நீட்டிட,
ரிதன்யா அதை தயக்கமாக வாங்கிக் கொண்டாள்….
அப்போது, உறவுக்கார மூத்த பெண் ஒருத்தி, சிரித்தபடி அவளிடம்
“இன்னும் ரெண்டு மாசத்துல நல்ல செய்தியா சொல்லிடணும்!” என்று மகிழ்ச்சியுடன் கூற, அந்த வார்த்தை ரிதன்யாவின் மனதை மேலும் உலுக்கியது…
அதன் பின்னர், பெண்கள் சூழ்ந்து அவளை சித்தார்த்தின் அறைக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் பேசிய கிண்டலும், கேலியும் அவளது காதுகளில் ஒலித்தாலும், அவள் மனம் முழுக்க இருந்த பதட்டம் காரணமாக அவளைக் கொஞ்சமும் அது பாதிக்கவில்லை..
அவள் சித்தார்த்தின் அறை வாசலிலேயே தயங்கி நின்றுவிட, பெண்களில் ஒருவளோ, “உள்ளே போ ரிதன்யா, மாப்பிள்ளை உனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருப்பாரு,” என்று கூற…
அவளைத் தொடர்ந்து, மற்றொரு பெண்ணும்… “ஆமாம், அப்புறம் உன்னை காணோம்னு அவரே வந்திடப் போறாரு,” என்று கூறி சிரித்தவள், அவள் இன்னமும் போகாமல் நின்றிருப்பதை கண்டு, கதவைத் திறந்து உள்ளே அவளைத் தள்ளிவிட்டு, கதவைச் சாத்திவிட்டு, மற்றவர்களுடன் சிரிப்புச் சத்தத்துடன் அங்கிருந்து சென்றாள்…
ரிதன்யாவோ சிங்கத்தின் குகையில் மாட்டிக் கொண்டது போல மிரண்டு விழித்தாள், பார்வையால் அவ்விடத்தை சுழற்றினாள், குட்டி அரண்மனை போல் இருந்த அறையில் அலங்காரங்கள் மின்ன, பூக்களின் வாசம் கமழ,
அவனை தான் காணவில்லை,…
அவள் நிம்மதிப் பெருமூச்சு விட்ட கணம், பின்னால் தாழ்ப்பாள் போடும் சத்தம் கேட்க பதட்டத்துடன் திரும்பினாள்.
சித்தார்த் தான் நின்றிருந்தான், அவன் எப்போது அறைக்குள் வந்தான் என்றே அவளுக்குத் தெரியவில்லை…
அவளைப் பார்த்தபடியே, தாழ்ப்பாளைப் போட்டவனின் பார்வை மிகக் கூர்மையாக இருந்தது. அது ஒரு கொடூரமான வேட்டையாடும் பார்வையைக் கொண்டிருந்தது. அதில் வெறுமையும், ஏளனமும் கலந்து இருந்தது…
அவளது பதட்டமான முகம், அவனுக்கு ஒருவிதமான குரூரமான திருப்தியைக் கொடுத்தது.
சித்தார்த், மெதுவாக அவள் அருகில் வர, அவளின் கால்களோ தன்னிச்சையாக பின்னால் நகர்ந்தது, அவனோ ஒரு எட்டில் அவளை நெருங்கி இருந்தவன், அவளது தாடையை அழுத்தமாக பற்றி அருகில் இருந்த சுவற்றோடு சாய்த்தான், அவனது பிடி இரும்பைப் போல இருந்தது. சுவரோடு சாய்ந்த ரிதன்யா வலி தாங்க முடியாமல், கண்களை இறுக்க மூடினாள்…
அவள் தாடையில் எழுந்த வலி, அவளது இதயத்தில் இருந்த வேதனையை விடவும் குறைவாக இருந்தது. சித்தார்த்தின் சுவாசம், அவளது காதுகளில் சூடாகத் தட்டியது…
“தப்பு பண்ணிட்ட பெரிய தப்பு பண்ணிட்ட” அவனது குரலில் ஓர் அபாயச் சங்கிலியின் எச்சரிக்கை ஒலித்தது. அவள் கண்களை மெதுவாகத் திறந்தாள். அவனது கண்களில், கோபமும் ஆத்திரமும் தீஞ்சுவாலையாய் மின்னியது,…
அவன் பார்வை, அவளை எரித்துச் சாம்பலாக்கிவிடும் என்பது போல இருந்தது…
”என் வார்த்தையை மீறி, என் மிரட்டலை மீறி என் ரூம் வரைக்கும் வந்து இருக்க, உன்னை என்ன பண்ணனும்?” பற்களுக்கிடையில் கடிபட்டு வந்தன அவன் வார்த்தைகள்.
அவன் பேச்சில் இருந்த வெறியும், கண்களில் எரிந்த நெருப்பும் ரிதன்யாவின் பதட்டத்தை மேலும் அதிகப்படுத்தியது…
”இன்னொரு பொண்ணை கீப்பா வச்சுப்பேன்னு சொல்றேன், அப்படி இருந்தும் நீ என்னை கல்யாணம் பண்ணி இருக்கேன்னா நீ எப்படிப்பட்ட பொண்ணா இருப்ப?” என்றான்..
அவன் தன் கேரக்டரை அசிங்கப்படுத்துவதை ஏற்க முடியாமல், தன் பயத்தையும் மீறி, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “என்னைத் தப்பா பேசுற உரிமை உங்களுக்கு இல்லை!” என்றாள் சற்று கோபமாய்.
அவளது எதிர்பேச்சில் மேலும் கோபம் கொண்டவன், அவளது தாடையின் பிடியை இன்னும் இறுக்கினான். “தப்பானவளைத் தப்பா தானேடி பேசணும்! எதுக்குடி என்னை கல்யாணம் பண்ண? என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா சொகுசா வாழலான்னு தானே பண்ணின?” என்றான்…
”என் அம்மா அப்பா வார்த்தையை மீறி என்னால எதுவும் பண்ண முடியாதுன்னு நான் அன்னைக்கே தெளிவா சொல்லிட்டேன்! தேவை இல்லாம பேசாதீங்க!” என்று கோபத்தில் சிவந்தாள்,…
”உன்னோட அம்மாவும் அப்பாவும் கோடீஸ்வர வீட்டு மாப்பிள்ளைய விடக் கூடாதுன்னு நினைச்சிருப்பாங்க, இந்தக் கல்யாணத்தால அவங்களும் பெருமை பட்டுக்கலாம்ல, லாபத்தோட கணக்குப் போட்டுத்தான் உன்னை எனக்கு கல்யாணம் பண்ண நினைச்சிருக்காங்க, எல்லாம் பக்கா பிளான்,” என்று அவன் விஷத்தைக் கக்கும் வார்த்தைகளால் பேசினான்…
அவளது பெற்றோரை அவன் இப்படி இழிவுபடுத்துவதை அவளால் தாங்க முடியவில்லை. அவள் எடுத்த தியாகத்தின் அடிப்படையையே அசைப்பதைப் போல உணர்ந்தவளுக்கு கண்களும் கலங்கிவிட்டது.
தன் வலிமையின் கடைசி அணுவையும் திரட்டியவள், தனது தாடையைப் பற்றியிருந்த அவனது கரத்தை ஆவேசமாக தள்ளி விட்டபடி,.. “என் அம்மா அப்பாவைப் பற்றிப் பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை!” என்று கண்ணீருடன் கத்தினாள். அவளது குரலில் இருந்த வலி, சித்தார்த்தை ஒரு கணம் உலுக்கியது…
ஆனால், அவன் தனது கோபத்தை இழக்க விரும்பவில்லை… “உரிமை இருந்தாலும் இல்லைனாலும் நான் பேச தான்டி செய்வேன்! கோடீஸ்வர வீட்ல வசதியா வாழலாம்னு தான் நீயும் உன்னோட அப்பாவும் அம்மாவும் பிளான் பண்ணி இருக்கீங்க,” என்று மீண்டும் அதையே அழுத்திச் சொன்னான்…
அவன் தன் பெற்றோரைக் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாமல் கோபத்துடன் அவனை எதிர்கொண்டவள்,.. உறுதியான, சற்றும் தளராத குரலில் “அது உண்மையில்ல! உங்க அப்பா தான் முதல்ல வந்து என் அப்பா கிட்ட இதை பத்தி பேசினாரு! நாங்களா ஒன்னும் பேச வரல!”
அவள் மூச்சைப் பிடித்துக்கொண்டு மேலும் பேசினாள்.
“அது மட்டும் இல்லாம, உங்க அப்பா பேச வருவதற்கு முன்னாடியே எனக்கு இன்னொரு வீட்ல இருந்தும் சம்மந்தம் வந்திருந்தது! உங்க அளவுக்கு அவங்களும் கோடீஸ்வரங்க தான்! ஆனாலும், பணக்கார வீட்டு சம்மந்தமே வேண்டாம்னு நான் சொன்னதால, அப்பாவும் அம்மாவும் அந்தச் சம்மந்தத்தை தட்டி கழிச்சுட்டாங்க!”
அவள் கண்களில் இருந்த கண்ணீர், அவளது வார்த்தைகளுக்கு மேலும் வலு சேர்த்தது.
“உங்க அப்பா நிறைய பேசி, என்னோட அப்பாவை கன்வின்ஸ் பண்ணி இருக்காரு! அதனால தான் அப்பா இதுக்குச் சம்மதிச்சாரு, நாங்களும் சம்மதிச்சோம்!” என்றாள்…
ரிதன்யா, தனது பெற்றோர் பணத்திற்காகத் திருமணத்திற்க்கு சம்மதிக்கவில்லை என்பதை அழுத்தமாக கூறியும், சித்தார்த்தின் மனதில் இருந்த கோபம் ஒரு துளிகூடக் குறையவில்லை…
தான் திருமணத்தை நிறுத்தச் சொல்லி கூறியும், அவள் நிறுத்தாமல் போன அந்தப் பிடிவாதம் தான் அவனை கோபத்தின் உச்சத்திற்குக் கொண்டு சென்றது…
“நீ என்ன வேணும்னாலும் கதை சொல்லு, நான் நம்பப் போறதில்லை,” என்று ஆரம்பித்து, “உங்களை மாதிரி லோ-கிளாஸ் ஆட்களுக்கு, பணக்கார வாழ்க்கை கிடைக்கிறப்போ அதை விட்டுட்டு எப்படிப் போவீங்க? நீங்கள்லாம் கௌரவம்னு பேசினாலும், உள்ளுக்குள்ள பணத்துக்குத்தான் ஆசைப்படுவீங்க!” என்று இழிவான தொனியில் பேசினான்.
ரிதன்யா உணர்ச்சிவசப்பட்ட குரலில், கண்களில் நீர் ததும்ப, தன் குடும்பத்தின் மீதான அபாண்டத்தைப் பொறுக்க முடியாமல்.. “உங்களை மாதிரி பணக்காரங்க தான் எங்களை லோ-கிளாஸ்ன்னு முத்திரை குத்தி, எங்க உழைப்பையும் கௌரவத்தையும் மதிக்காமப் பேசுவீங்க! நீங்க நினைக்கிற மாதிரி பணமும் வசதியும் தான் வாழ்க்கைன்னு நாங்க நினைக்கலை! அதுமட்டும் இல்லாம, இந்தளவுக்கு மட்டம் தட்டி பேசுற அளவுக்கு நாங்க கீழ்படிஞ்சவங்களும் இல்லை! என் அப்பாவும் சொந்தமா பிசினஸ் பண்ணுறாரு! இப்போ வரைக்கும் நாங்க வசதில குறை இல்லாம தான் வாழ்ந்திட்டு இருக்கோம்!” என்று அழுத்திச் சொன்னவள்,
”உங்களைக் கல்யாணம் பண்ணிகிட்ட பாவத்துக்காக என்னை எவ்வளவு இழிவாகவும் பேசிக்கிருங்க, நான் பொறுத்துகிறேன், ஆனா என் குடும்பத்தைப் பத்தி பேசுரத இதோடு நிறுத்திக்கோங்க!” என்றாள் மிரட்டும் தொனியில்…
அவளது மிரட்டும் தொனி, அவனது கோபத்தை மேலும் அதிகப்படுத்த… ”என்னடி கை நீட்டி மிரட்டி பேசுற!” என்று ஆவேசமாகக் கத்தியவன், அவளது கரத்தைப் பற்றி முறுக்க, அவள் அவ்வளவு நேரம் பிடித்து வைத்திருந்த பால் செம்பு, கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து, பால் அனைத்தும் சிதறியது…
அவன் அதையெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. அவளது கரத்தை விடாமல் முறுக்க, அவளுக்கோ வலித்தது. வலியின் காரணமாக, “விடுங்க!” என்றாள்.
அவனோ, அவளது வலியைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், அவளது கரத்தை விடாமல் பற்றி, தரதரவென்று இழுத்துக்கொண்டு போய், அறையின் பால்கனியில் தள்ளியவன்,.. “நைட் ஃபுல்லா குளிர்ல வெளியவே கிட! இதுதான் உனக்கு நான் தர பனிஷ்மெண்ட்!” என்று கூறி, இரக்கமே இல்லாமல், பால்கனி கதவையும் பூட்டிவிட்டான்…
ரிதன்யா, மெல்லிய சேலையில், நடுங்கும் அந்த இரவுக் குளிரில், பால்கனியில் நின்றிருந்தாள், தன் தாடை மற்றும் கை வலி கூட அவளுக்கு அவ்வளவு வலிக்கவில்லை, அவன் தன் பெற்றோரை இழிவாக பேசியதை தான் தாங்கவே இயலவில்லை, அந்தக் கௌரவத்தின் வலி தான் உடலின் வலியைவிடப் பல மடங்கு இருந்தது, கண்ணீர் அருவியாய் கொட்டியது…
’கோடீஸ்வர மாப்பிள்ளைக்காக என் பெற்றோர் ஆசைப்பட்டார்கள் என்று இவன் எப்படிச் சொல்லலாம்? என் பாசத்திற்காக, என் எதிர்காலத்திற்காகத்தானே அவர்கள் இவ்வளவு பெரிய முடிவை எடுத்தார்கள்? என் அப்பாவின் உழைப்பையும், அம்மாவின் பாசத்தையும் இவன் எப்படி லோ-கிளாஸ் என்று முத்திரை குத்திப் பேசினான்?’ என்று நினைத்து அவள் விம்மினாள்…
தன்னால் தான் தன் பெற்றோருக்கு இவ்வளவு கெட்டப்பெயரோ? தான் அவர்களின் வாழ்வில் வராமல் போயிருந்தால், அவர்களை இவ்வளவு இழிவாய்த் திட்டுவதற்கு இவனுக்குத் தேவையே வந்திருக்காதோ? என்பதை எண்ணி மருகிப் போனாள். அவள் நிற்கக்கூடப் பலமில்லாமல், அங்கேயே சுவரோரமாக அமர்ந்துவிட்டாள்…
ஒரு பக்கம், இரவின் குளிர் உடலை ஊசியாய்க் குத்த, மறுபக்கம் அவன் வார்த்தையின் வீரியம் அவளது மனதைக் கொன்றது…