இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா – 17

அத்தியாயம் 17

 

​நேரம் காலை எட்டு மணியை கடந்திருந்தது. அது குளிர்காலம் என்பதால், அறைக்குள் சூரிய ஒளி நேரடியாகப் பரவவில்லை. மாறாக, அதிகாலை மூடுபனியின் குளிர்ச்சி மெல்லிய வெளிச்சமாக அறைக்குள் சூழ்ந்திருந்தது.
​சித்தார்த், மெதுவாகக் கண் விழித்து எழுந்தான்….

இரவு அவளை பால்கனியில் தள்ளி கதவைப் பூட்டிவிட்டு வந்து படுக்கையில் படுத்தவனுக்குக் கோபம் அடங்கவே இல்லை. விழிகள் மூடிக்கிடந்தவன், எப்போது தூங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை.

​படுக்கையிலிருந்து எழுந்தவனுக்கு, படுக்கையை அலங்கரித்திருந்த பூ அலங்காரங்களைப் பார்க்கவே எரிச்சலாக வந்தது. இரவே முடிந்த வரையில் அதனை கலைத்து விட்டுத்தான் படுத்தான்.

​பால்கனி கதவு கண்ணாடியால் சூழப்பட்டவை. உள்ளே இருந்து பார்த்தால் பால்கனியைத் தெளிவாகப் பார்க்க முடியும். சித்தார்த், திரைச்சீலையை விலக்கிவிட்டு வெளியே பார்க்க,
​அங்கே, உடலைக் குறுகிக் கொண்டு, புடவை முந்தானையால் தன்னை மூடிக் கொண்டு, சுவரோடு சுவராக அமர்ந்திருந்தாள் ரிதன்யா.

அவளது முகம் வெளிறிப் போயிருந்தது. நடுங்கிய உடலை வலுக்கட்டாயமாகக் கட்டுப்படுத்திக் கொண்டு, கண்கள் மூடிய நிலையில் அமர்ந்திருந்தாள். இரவின் குளிர் அவளை வாட்டியிருக்க வேண்டும்…

​அவனுக்கு அவள் மீது கோபம் எரிமலையாய் இருந்தாலும், அவள் படும் வேதனையைக் கண்டபோது, அவன் மனமும் கொஞ்சம் வருத்தப்படத்தான் செய்தது. அவன் ஒன்றும் இரக்கமற்றவன் இல்லையே, ஒரு பெண்ணை மணவறை அறையில் இப்படித் தனிமையில், குளிரில் விட்டது அவனது மனசாட்சியை லேசாகத் தட்டியது…

பால்கனி கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். அவன் வெளியே வந்தபோதும், ரிதன்யா விழிகள் மூடி தான் அமர்ந்திருந்தாள், அவள் உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்தன, இரவு புத்தம் புது ரோஜாவாய் மலர்ந்து போயிருந்தவள், இப்போது வாடிய மலராய் கிடந்தாள்…

​சித்தார்த், அவளது நிலையைப் பார்த்தான். அழகிய அந்த முகத்தின் வெளிறிய நிறமும், அவளது மெல்லிய உடல் நடுங்குவதும் அவனது கண்களில் பதிந்தது. அவனது கோப நெருப்பில் ஒரு சிறு துளி ஈரம் கலந்தது போல இருந்தது…

​”ஏய்,” என்று அழைத்தான் அவளை. ​அவளோ அவனது குரல் கேட்டு, சோர்வுடன் மெல்ல விழிகளைத் திறந்தாள். விழிகளெல்லாம் சிவந்து போயிருந்தது. குளிரின் காரணமாகவும், இரவெல்லாம் அழுது வாடியதாலும் அவளது கண்கள் சோர்ந்திருந்தன. ஏற்கனவே கல்யாணக் களைப்பில் இருந்தவள் இரவு எடுத்த குளிரினால் மேலும் பலவீனமாகிப் போயிருந்தாள்…

சித்தார்த் அருகில் வந்து நின்றபோதும்கூட, அவளால் அசையக்கூட இயலவில்லை. உடலெல்லாம் மரத்துப்போன உணர்வுதான். விழிகளையும் சில நொடிகளுக்கு மேல் திறக்க முடியவில்லை சொறுகிக்கொண்டு போனது.

​உண்மையில், அவளது நிலைகண்டு அவன் பயந்துதான் போனான். அவளது கண்கள் சிவந்து, உடல் கடுமையாக நடுங்கிக் கிடப்பதைக் கண்டபோது, அவனது கோபம் சட்டென்று மறைந்து மனித குணம் வெளிப்பட்டது.

​”ஏய், என்னாச்சுடி?” என்று பதற்றத்துடன் அவளருகில் குத்துக்காலிட்டு அமர்ந்தான்.
​அவளோ பேசும் நிலையில் இல்லை. அவளது இதயம் மட்டும் பலவீனமாகத் துடித்துக்கொண்டிருந்தது. ஏதோ பேச முயன்றாள், ஆனால் வார்த்தைகள் உளறலாக வெளிவந்தன…

​லேசாக அவளை நெருங்கி, “என்னடி சொல்ற?” என்று கேட்டான். ​அவளோ, “தூ… தூக்கம் வருது…” என்று உளறல் குரலில் கூற, அவளது தலையோ சாய்மானத்தில் இருந்து சாய்ந்து விழுந்தது…

​அவளது நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டவன், அடுத்த கணம் தாமதிக்காமல் அவளைத் தூக்கிக்கொண்டு அறைக்குள் நுழைந்து படுக்கையில் அவளைப் படுக்க வைத்தான்.

அவன் கைகள் அவளைத் தாங்கியபோது, அவனது மனதில் ஒரு மனிதான்பிமான உணர்வு மட்டுமே இருந்தது…

​அறைக்கு வந்த பின்னரும் அவள் குளிரில் நடுங்க, அவளுக்கு போர்வையைப் போர்த்திவிட்டவன், ஓடிக்கொண்டிருந்த ஏசியை அணைத்துவிட்டு, அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, அறையை விட்டு வெளியேறி விட்டான்,…

ரிதன்யாவோ, உடலின் சோர்வும் இரவின் குளிரும் தந்த பலவீனத்தால், எதையும் உணராமல், உடனடியாக ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருந்தாள்…

சித்தார்த், அவளைப் படுக்கையில் விட்டு, தனது மனக்குழப்பத்துடனும் ஆத்திரத்துடனும் அறையை விட்டு வெளியேறி, கீழே இறங்கிச் செல்ல, அவனை முதலில் எதிர்கொண்டது அவன் தந்தை வாசுதேவன்தான்…

மகனை மேலிருந்து கீழ்வரை ஆராய்ச்சியாய்ப் பார்த்தவர், மகனின் முகத்தில் இருந்த சோர்வையும் இறுக்கத்தையும் கவனித்தார்…

​”குட் மார்னிங் சித்து,” என்று வாசுதேவன் சொல்ல,.. ​”குட் மார்னிங்,” சலிப்புடன் சொன்னபடி அவருக்கு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தவன், “வள்ளி அக்கா காபி எடுத்துட்டு வாங்க,” என்றவாறு அந்தப் பக்கமாக சென்ற அந்த வீட்டில் வேலை செய்பவரிடம் கூற, அவரும் “சரிங்க தம்பி,” என்றவாறு சமையலறை நோக்கி விரைந்தார்…

​வாசுதேவன் இன்னமும் மகனை ஆராய்ச்சியாய்ப் பார்க்க, பல டென்ஷனில் இருந்தவன் அவரின் பார்வையை கவனித்து, “எதுக்கு என்னையே குறுகுறுன்னு பார்க்கிறீங்கப்பா?” என்று நேரடியாகவே கேட்டுவிட்டான்…

​”அப்படியெல்லாம் பார்க்கல, கேஸுவலாதான் பார்த்தேன்,” என்று சொல்லிவிட்டு, மகனின் வார்த்தைகளைக் காதில் போட்டுக்கொள்ளாமல், செய்தித்தாளில் கவனத்தைத் திருப்பிக் கொண்டார்….

​அப்போது, “குட் மார்னிங் கண்ணா,” என்ற காலை வணக்கத்துடன், கையில் மகனுக்கான காபியை எடுத்துக் கொண்டு வந்தார் தெய்வானை. அவன் காபி கேட்ட நேரம் அவர் சமையலறையில் தான் இருந்தார், அதனால் அவரே அவனுக்குக் காபி எடுத்து வந்தார்…

​”ம்ம்,” என்றவன், தாய் நீட்டிய காபியை எடுத்துக் கொள்ள, அவரோ, “என்ன சீக்கிரம் வந்துட்ட இன்னும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்திருக்கலாமே,” என்றார்.

​”இப்போவே டைமாச்சுமா… வழக்கமா நான் இதை விட ஏர்லியாவே எழுந்திடுவேன்,” என்று கூறியபடி அவன் காபியை ஒரு மிடறு குடித்தான்…

​”ரிது எங்கே?” அவர் வினவ, சித்தார்த் முகத்தில் எந்தவித உணர்வையும் காட்டாமல், “தூங்கிக்கிட்டு இருக்கா,” என்றான்.

​”அப்படியா… சரி நல்லா தூக்கிட்டு மெதுவா எழுந்துக்கட்டும்,” என்றார் தெய்வானை. அக்கணம் அவரின் மனம், ‘பரவாயில்லை, மனைவியோட சோர்வு புரிந்து டிஸ்டர்ப் பண்ணாம தூங்கவிட்டு வந்திருக்கான்’ என்று நினைத்து மெச்சிக் கொண்டது…

​வாசுதேவனும் மனைவியின் எண்ணம் போலவே மகனைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தார். ஆனால், சித்தார்த்தின் முகத்தில் இருந்த இறுக்கம், ஏதோவொன்று சரியாக இல்லை என்று அவருக்குச் சொல்லாமல் சொல்லியது…

எனவே,.. “ஏதாவது ப்ராப்ளமா சித்து” என்று கேட்டார்,…
தந்தை தன் முகத்தை கண்டு, நிலைமையைக் கப்பென்று புரிந்து கொண்டார் என்பது புரியவே, சித்தார்த் தனது எரிச்சலை மறைக்கவில்லை “ம்ம்… ப்ராப்ளம் தான்ப்பா. இன்னைக்கு நான் ஆபீஸ் போகணும், போலாமா?” என்றான்…

​”நேத்து தான்டா கல்யாணம் ஆகிருக்கு, இன்னைக்கு ஆபீஸ் போவியா நீ?” என்று தெய்வானை சிறு அதட்டலுடன் கேட்டார்.

​வாசுதேவனோ, மகனின் மனநிலையைப் புரிந்துகொண்டு, சற்று சமாதானப்படுத்தும் விதமாக, “நாளைக்குப் போ சித்து இன்னைக்கு ஒரு நாள் மட்டும் வீட்ல இருக்கலாமே,” என்றார்.

அவனுக்கு இதுவே போதும் என்றிருந்தது, ​”ஓகே,” என்று கூறிவிட்டு, தனது போனைப் பார்க்க ஆரம்பித்துவிட்டான். அவன் தனது கோபத்தை மறைக்க முயன்று டிஜிட்டல் உலகில் மூழ்கினான்…

​திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் எல்லாம் விடியற்காலையிலேயே புறப்பட்டு விட்டனர். அதனால், நேற்று போல் வீடு கலகலப்போடு இல்லாமல், அமைதியாக வெறுமையாகத்தான் இருந்தது.

​சித்தார்த்திற்குக் அவர்கள் சென்றதில் ஒருவித நிம்மதி. இருந்தால் ஏதாவது பேசி நச்சரித்துக் கொண்டே இருப்பார்கள் அல்லவா? அனைவரும் இன்றே கிளம்பி சென்றது சற்று ஆசுவாசத்தைக் கொடுத்தது…

நேரம் செல்ல, சித்தார்த் அதே சோபாவில் வெகுநேரம் அமர்ந்திருந்தான். அவனது தந்தை வாசுதேவனும், காலை உணவை முடித்து விட்டு உள்ளே சென்றுவிட்டார்…

சித்தார்த்திற்கோ, ரிதன்யா படுத்திருக்கும் அறைக்குச் செல்லவே பிடிக்கவில்லை, அவன் தாயும் வேறு சாப்பிட வாவென்று அழைத்துக் கொண்டே இருந்தார், பல் விலக்காமல் தான் காபியை பருக்கினான், இது அவனின் பழக்கம் இல்லை என்றாலும் இருக்கும் டென்ஷனில் காபி குடிக்க வேண்டும் என்று தோன்றியதால் குடித்து விட்டான்,…

இப்படியே சாப்பிடவும் முடியவில்லை, ஒரு கட்டத்திற்கு மேல் அங்கே இருக்கவும் முடியவில்லை,

அதனால், வேறு வழியின்றி அறையை நோக்கித்தான் விரைந்தான். ​அவன் கதவைத் திறந்து உள்ளே நுழைய அறைக்குள் இன்னும் அமைதிதான் நிலவியது. ரிதன்யா, இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில்தான் இருந்தாள், ​அவன் அவளது அருகில் செல்லவில்லை. தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான்.

குளித்து முடித்து, சுத்தமான உடை அணிந்து அவன் வெளியே வந்தபோது, நேரம் காலை ஒன்பது மணியை எட்டி இருந்தது, அவன் மீண்டும் ஒருமுறை ரிதன்யாவைப் பார்த்தான். அவள் அசையாமல் படுத்திருந்தாள்…

​’இவ்வளவு நேரம் தூங்குகிறாளே! இவள் உடல்நிலை சரியாக இருக்கிறதா?’ என்று ஒரு சிறு எண்ணம் அவன் மனதில் ஓடியது. ஆனால், உடனடியாக அந்த எண்ணத்தைக் கழட்டிவிட்டு, அறையை விட்டு வெளியேறி விட்டான்,..

காலை உணவை முடித்துக் கொண்டவன்,… தனது மடிக்கணினியுடன் ஹாலிலேயே அமர்ந்து விட்டான்,.. வாசுதேவன் சிறு வேலையை மட்டும் முடித்து விட்டு வருகிறேன் என்று அலுவலகம் புறப்பட்டுவிட்டார்.

​அவனது தாய் தெய்வானையோ, மகன் அறைக்குச் செல்லாமல், திருமணமான முதல் நாள் காலையே ஹாலில் அமர்ந்திருப்பதைக் கண்டு, எதுவோ உறுத்தியது. எனவே, சமையலறையிலிருந்து வெளிவந்தவர், “ரூம் போகலையா சித்து? ரிது தனியா இருப்பாளே,” என்றார்…

​”அவ தூங்குறான்னு சொன்னனேம்மா,” அவன் மடிக்கணினியைப் பார்வையிட்டவாறே சலிப்புடன் சொல்ல, தெய்வானை விடவில்லை. “இருக்கட்டுமே… நீ ரூம்லயே இருக்கலாமே,” என்றார்.

​”எனக்கு அடிக்கடி போன் கால் வரும். அவளுக்குச் ஸ்லீப் டிஸ்டர்பன்ஸ் ஆகும்,” என்று சமாளித்தான். இதைத் தவிர வேறு எப்படித் தாயை சமாளிப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை.

​அவனது இந்தச் சாமர்த்தியமான பதிலைக் கேட்ட தெய்வானை, மகனைப் பெருமையாய்ப் பார்த்து. ‘என் மகன் எவ்வளவு அக்கறையாக இருக்கிறான்!’ என்று நினைத்துக் கொண்டார்…

​”சரிப்பா… நீ உன் வேலையைப் பாரு. ஆனா கொஞ்ச நேரத்துல போய் அவளை எழுப்பி விடு. ரொம்ப நேரம் வெறும் வயித்தோட தூங்கக் கூடாது,” என்று சொல்லிவிட்டு நகர, அவன் ஒரு பெருமூச்சோடு மீண்டும் தனது வேலையைக் கவனிக்க ஆரம்பித்தான்…

​ரிதன்யாவோ, உடல் முழுவதும் போர்த்தியிருந்த போர்வைக்குள், அந்த அறையின் சூட்டில் மெதுவாக உறக்கத்திலிருந்து மீண்டாள். ஆழ்ந்து தூங்கி எழுந்ததால், இரவின் களைப்பும் சோர்வும் சற்று நீங்கி இருந்தது.

​அவளுக்கு இரவு நடந்த அனைத்தும் நியாபகம் இருந்தது. அவன் தன்னைக் குளிரில் அவஸ்தைப்பட வைத்தது கூட அவளுக்குப் பெரிதாகத் தெரியவில்லை, தாய் தந்தையை இழிவாக ஏசியதைத்தான் தாங்கவே இயலவில்லை, இப்போதும் மனம் வலித்தது…

​காலையில் அவன் தன்னைத் தூக்கிக்கொண்டு வந்து மெத்தையில் படுக்க வைத்ததை எல்லாம் உணர்ந்துதான் இருந்தாள், ஆனால் தடுக்க முடியாத நிலையில் அப்போது இருந்தாள். ‘நைட் அப்படிப் பேசிட்டு உதவி பண்ண வந்துட்டான்’  என்று வருத்தெடுத்து விட்டு, மெல்லப் படுக்கையை விட்டு எழுந்தாள்.

அறையைச் சுற்றும் முற்றும் பார்த்தாள். அவன் அறையில் இல்லாதது அவளுக்கு நிம்மதியாகவும் இருந்தது. அவளுக்கும் இப்போதைக்குத் தனிமை தேவைப்பட்டது…

​தனது போனை எடுத்துப் பார்த்தாள், அவளுடைய வீட்டிலிருந்து நிறைய அழைப்புகள் வந்திருந்தன. முதல் வேலையாக,  உடனடியாக அவர்களுக்கு தான் அழைத்து பேசினாள்…

​அவளது பெற்றோர், அவள் சந்தோஷமாக இருப்பதை உறுதிசெய்து கொள்ள, அவளும் நிம்மதியோடு இணைப்பை துண்டித்தாள்,…

பேசி முடித்த பிறகு, அவள் தனது உடை நிறைந்த பெட்டியைத் திறந்தாள், அவளது கண்களில் பட்டுச் சேலைகளும், விலை உயர்ந்த ஆபரணங்களும் தெரிந்தாலும், அவள் கையில் முதலில் அகப்பட்டது அந்தச் சிறு மரப்பெட்டிதான்…

​அதனுள் தான் அபி அவளுக்காகக் கொடுத்த வாட்சைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தாள். அந்தப் பெட்டியைத் திறந்து, அந்த வாட்சை மென்மையாக வருடினாள்…

​’அபி, இப்போ எங்கு இருக்கிறானோ?’ அவள் கண்களில் மீண்டும் நீர் கோர்த்தது.

​அவளுக்குத் தெரியும், அனைத்தும் அவள் கைமீறிப் போய் விட்டிருந்தது. இனி அபி கிடைத்தாலும், அவள் ஆசைப்பட்டதைப் போல அவனுடன் அவளால் வாழ முடியாது. தான் வேறொருவனுக்கு மனைவியாகிவிட்டோம். இந்த உண்மை, அவளது இதயத்தில் ஒரு கூர்மையான கத்தியைப் போலத் தைத்தது.

அந்த வாட்சை தன் நெஞ்சோடு அழுத்திக் கொண்டு ஒரு மூச்சு அழுது தீர்த்தவள்,.. ​அந்த வாட்சை மீண்டும் பெட்டிக்குள் வைத்து மூடி, அந்தப் பெட்டியைத் பாதுகாப்பான ஒரு இடத்தில் மறைத்து வைத்து விட்டு, புடவை ஒன்றை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்,..

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page