அத்தியாயம் – 18
குளித்து உடை மாற்றி வந்த ரிதன்யா, கூந்தலை உலர்த்திப் பின்னிவிட்டு, நெற்றி வகிட்டில் குங்குமத்தை வைத்துக் கொண்டு சின்ன சின்ன ஆபரணங்கள் மட்டும் அணிந்து தயாராகி இருந்தவளுக்கு கீழே சென்று அவனை எதிர்கொள்ள விருப்பம் இல்லாமல், அப்படியே கட்டிலில் அமர்ந்துவிட்டாள். சித்தார்த்தின் கோபம், அவனது இழிவான வார்த்தைகள், அவளது மனதில் ஆழமாகப் பதிந்திருந்தன.
மணி பதினொன்றைத் தாண்டி இருந்தது. அவளுக்கே புரிந்தது அதிகம் நேரமாகிவிட்டது என்று.
கீழே உறவுக்காரப் பெண்மணிகள் எதுவும் சொல்வார்களோ என்று உறுத்தலாக இருந்தது. தெய்வானையை எண்ணி அவளுக்குப் பயம் இல்லை, அவள் அம்மா போலவேதான் அவரும் அவள் மீது பாசத்தை அள்ளிக் கொட்டுகிறார்.
ஆனால் மற்றவர்களை நினைத்து தான் பயம், அவளுக்குத் தான் அனைவரும் கிளம்பிச் சென்ற விஷயம் தெரியாதே ‘புது மருமகள் இப்படி சூரியன் உச்சிக்கு வந்த பிறகும் தூங்குகிறாளே என்று தவறாக நினைப்பார்களே’ என்று அவள் கவலைப்பட்டாள்…
சிறிது நேரம் யோசனையுடன் அமர்ந்திருந்தவளுக்கு, இப்படியே அமர்ந்திருப்பது சரியில்லை என்பது புரிபட, தனது குடும்பக் கடமையைத் தொடங்க வேண்டும் என்று தீர்மானித்தவளாய் மெல்ல எழுந்தாள்.
தயக்கத்துடன் அறையை விட்டு வெளியேறி, மாடிபடியிலிருந்து இறங்கினாள். கீழே, ஹாலில், சித்தார்த் சோபாவில் மடிக்கணினியுடன் அமர்ந்திருப்பது அவள் பார்வையில் பட்டது.
அவனைப் பார்த்ததும், நேற்றிரவு சந்தித்த அவமானம் மீண்டும் நினைவுக்கு வந்தது. அவள் அவனை முறைத்துவிட்டு, அவனைக் காணப் பிடிக்காமல், சுற்றி வீட்டை நோட்டமிட்டபடி இறங்கினாள்.
வீடு, நேற்றுபோல் உறவினர்கள் சூழக் கலகலப்பாக இல்லை. வேலை செய்பவர்கள் தான் அவள் கண்ணில் பட்டார்கள். இது அவளுக்குச் சற்று நிம்மதியை அளித்தது…
லேப்டாப்பில் மூழ்கி இருந்தவனுக்கு, அவளது கால் கொலுசொலி கேட்டிருக்க வேண்டும். மெல்லத் தலையை உயர்த்தியவனுக்கு, அவளைக் கண்டதும் முகம் இறுக்கத்தைத் தத்தெடுத்துக் கொண்டது…
அவன் தன்னைப் பார்க்கிறான் என்பதை உணர்ந்தும், அவள் அவனைப் பார்க்கவில்லை. அவனது இருப்பை முழுமையாகப் புறக்கணித்து, நேராக சமையலறைப் பகுதியை நோக்கிச் செல்லத் தயாரானாள். அவளது இந்த அலட்சியம், சித்தார்த்தின் ஆணவத்தை மிக மோசமாகச் சீண்டியது…
அவன் தனது லேப்டாப்பை மூடிவிட்டு, சோபாவில் இருந்து எழுந்து, அவளை நோக்கி நடக்க, சரியாக அதே நேரம், “ரிது, வாம்மா எழுந்துட்டியா?” என்று கனிவாகக் கேட்டபடி வந்த தாயின் வருகையால், அவன் கால்கள் ஸ்விட்ச் போட்டது போல நின்றுவிட்டது…
தெய்வானை அங்கே இருக்கும்போது, அவளது எதிரில் ரிதன்யாவை நெருங்க முடியாது என்பதை புரிந்து மீண்டும் சோபாவில் வந்து அமர்ந்துவிட்டான். அவனது முகம் ஆத்திரத்தில் இறுக்கம் கொண்டிருந்தது…
தன்னிடம் கரிசனமாகக் கேட்ட மாமியாரிடம், ரிதன்யா பணிவுடன்.. “ஸாரி அத்த, நைட் சரியா தூங்கல, அதனாலதான் ரொம்ப நேரம் தூங்கிட்டேன். இனிமே இப்படி நடக்காமப் பார்த்துக்கிறேன்,” என்றாள்…
”இதுல என்னமா இருக்கு? இதுக்கு ஏன் ஸாரிலாம்? இது உன் வீடு, நீ எவ்வளவு நேரம் வேணும்னாலும் தூங்கலாம். யாரும் உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்க,” என்று தெய்வானை பாசத்துடன் கூற, அவளும் மென்மையாக புன்னகைத்தாள்…
”சரி, உனக்குக் காபி எடுத்து வரட்டுமா, இல்லன்னா சாப்பாடு சாப்பிடுறியா?” அவர் வினவ,
”ஐயோ அத்த, அதையெல்லாம் நான் பார்த்துகிறேன்,” என்றாள் அவள் சங்கடத்துடன். தன் மாமியார் தனக்கு உணவு பரிமாறுவதை அவள் விரும்பவில்லை.
”எதுக்குடா சங்கடப்படுற? நீ என் மருமக மட்டுமில்ல, என்னோட மகளும் கூட! நீயும் என்னை உன்னோட அம்மா மாதிரி நினைச்சுக்கோ. என்ன வேணுமோ, தயங்காம கேட்கணும். அப்புறம், என்னோட அன்பையும் மறுக்காம பெற்றுக்கனும்” என்று கூற, அவர் அன்பில் நெகிழ்ந்துதான் போனாள் பெண்ணவள். தெய்வானையின் பாசமான வார்த்தைகள், ரிதன்யாவின் மன காயங்களை ஆற்றுவது போல இருந்தது…
அதன் பிறகு, ரிதன்யா தெய்வானையுடன் ஐக்கியமாகி விட்டாள். மாமியாரும் மருமகளும் சேர்ந்து பல கதைகள் பேசிக் கொண்டார்கள். மகள் இல்லாத குறையை ரிதன்யா கொஞ்சம் கொஞ்சமாகப் போக்கிக் கொண்டிருந்தாள்.
ரிதன்யாவும், தனது அம்மாவிடம் உணர்ந்த கனிவையும், நிம்மதியையும் தெய்வானையிடம் உணர்ந்தாள். சித்தார்த்தின் வெறுப்பிலிருந்து தப்பிக்க, தெய்வானையின் அருகாமை ஒரு பாதுகாப்புக் கவசமாக இருந்தது அவளுக்கு…
சித்தார்த், சிரித்து சிரித்து ஏதாவது ஒன்றைப் பேசிக் கொண்டே இருக்கும் இருவரையும் விழிகள் சுருங்கப் பார்த்தான்.
அன்று மதிய நேரத்தின்போது, டைனிங் அறையிலும் இப்படித்தான் சிரித்துப் பேசிக் கொண்டார்கள். வாசுதேவனுக்கு இருவரையும் இப்படி பார்க்கவே சந்தோஷமாக இருந்தது,..
அந்த நேரம் ரிதன்யா சித்தார்த்திற்கு பரிமாற வர,.. “ரொம்ப சிரிக்காதடி. அப்புறம் ரொம்ப கஷ்டப்படுவ.” சற்று குனிந்து, ரிதன்யாவுக்கு மட்டும் கேட்கும் குரலில் பேசினான்.
அந்த வார்த்தை, அவளது காதில் கத்தியைப் போலத் துளைத்தது.
அவள் சிரிப்பு சில நொடிகள் நின்று போனாலும், அவள் உடனடியாகச் சுதாரித்துக் கொண்டு மாமியார் மாமனாருக்காக உதட்டில் மீண்டும் புன்னகையை வரவழைத்துக்கொண்டு அவனது கண்களைப் பார்த்தவள், இனிமையான அதே சமயம் அழுத்தமான குரலில், அவன் காதில் மட்டுமே கேட்கும் விதமாக “சந்தோஷமா இருக்கு. அதனால சிரிக்கிறேன். உங்களுக்கு ஏன் பொறுக்க மாட்டேங்கிது, என்னோட சிரிப்பை எல்லாம் கண்ட்ரோல் பண்ண நினைக்காதீங்க மிஸ்டர் சித்தார்த்.” என்று சொன்னவள், வாசுதேவன் ஏதோ சொல்லவும் அவள் சிரிப்பை இன்னும் அதிகரித்து பதில் கூறினாள்…
அவள் தன்னை பொருட்படுத்தாமல், தெய்வானையோடும் வாசுதேவனோடும் கலகலப்போடு பேசியது சித்தார்த்திற்கு மேலும் எரிந்தது,..
சித்தார்த், அவளது இந்த அடங்காத பதிலைக் கேட்டு ஆத்திரத்தில் நெளிந்தான். இவளது சிரிப்பு, அவனது மனதின் அமைதியைக் குலைத்தது போல் இருக்க, அவள் தனியாக மாட்டும் நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தான்,..
ஆனால், அன்று முழுக்க அவள் அவன் அருகில் வரவே இல்லை. அவள் அவனை தவிர்ப்பதில் கவனமாக இருந்தாள். வீட்டைச் சுற்றிப் பார்ப்பது, பணிப்பெண்களுடன் பழகுவது, சில சமயம் மாமனார் மாமியாருக்குப் பிடித்த சமையலைச் செய்து கொடுப்பது என்று அந்த நாளை கலகலப்புடன் செலவிட்டாள்…
அவள் தன் பெற்றோரின் கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக இந்த வீட்டில் ஒரு பொறுப்புள்ள மருமகளாகத் தன்னைப் பதிவு செய்தாள்.
மாலை வரை, ரிதன்யாவின் நாள் அமைதியாக, தெய்வானையின் பாசப் பிணைப்பிற்குள் கடந்தது.
இரவு உணவிற்குப் பிறகு, அவளுக்கு கணவனின் அறைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் வந்தது,…
அவ்வளவு நேரம் புன்னகை முகமாக இருந்தவளுக்கு மாடிப்படிகளில் ஏறும்போது, அந்தச் சிரிப்பு மெல்ல மெல்லக் கரைந்துபோனது. அவளது முகத்தில் இறுக்கமும், இதயத்தில் பயமும் கலந்த ஒருவித போராட்ட உணர்ச்சி தோன்றியது…
மாடி ஏறி, அந்தப் பிரமாண்டமான அறையின் வாசலில் நின்றாள். நேற்றிரவு பால்கனியில் உறைந்த வலியும், அவன் பேசிய இழிவான வார்த்தைகளும் நினைவுக்கு வந்தபோது, உள்ளே செல்லவே அவள் தயங்கினாள்.
ஆனால் இங்கே இப்படியே நிற்க முடியாது என்பதை புரிந்து கொண்டு மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு, அவள் மெதுவாகக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள்…
சித்தார்த், அறையில் உள்ள சோபாவில் அமர்ந்து, போனில் யாரிடமோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தான்…
ரிதன்யா, அவன் தன்னை கவனிக்கவில்லை என்ற நிம்மதியில், மெல்ல அவனைக் கடந்து குளியலறைக்குள் செல்ல நினைத்தவள், திடீரென்று அவனது அழுத்தமான கரம் அவளது மணிக்கட்டை பற்றவும் திடுக்கிட்டு தான் போனாள்,…
அவளது உடல் முழுவதும் ஒரு மின்னதிர்வு ஏற்பட்டது. அவன் போனைத் தனது காதிலிருந்து எடுத்து, அதை சோபாவின் மீது வீசினான். அவனது பிடி இரும்பைப்போல் இருந்தது…
அவளது கரத்தை விடுக்காமலேயே எழுந்தவன், அவளை இழுத்துத் தன்னருகே நிறுத்தினான். அவனது கையில் அவளது மென்மையான மணிக்கட்டு, இரும்பைப் போலப் பிடிபட்டிருக்க, அவளை கனலாய் நோக்கியவன் ஆவேசமான குரலில், “டைனிங் டேபிள்ல வச்சு என்ன சொன்ன?” என்று உறுமினான்…
எச்சில் விழுங்க நின்றவள், அவன் கண்களைச் சந்திக்கும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “நா… நான் என்ன சொன்னேன்?” என்றாள்.
”ஏய், என்னடி நடிக்கிறியா?” அவனது பிடி மேலும் இறுக, அவள் வலியில் நெளிந்தாள். அவளது முகம் வேதனையில் சுருங்கியது…
அவனோ, அவளது வலியைப் பொருட்படுத்தாமல்,..”சிரிச்சி சிரிச்சி என் அம்மா அப்பாவை உன் வலையில் விழ வைக்க பார்க்கிறியா?” என்று அடுத்த குற்றசாட்டை வைத்தான்,…
ரிதன்யாவுக்கு அந்தக் குற்றச்சாட்டைக் கேட்டதும் கோபம் வந்தது. ஆனால், வலியின் காரணமாக அவள் குரல் தணிந்தே வந்தது…
”அ.. அவங்கள என் வலையில விழ வச்சு நான் என்ன பண்ணப் போறேன்?” என்று கேட்டவள், “வலிக்குது… கையை விடுங்க ப்ளீஸ்,” என்றாள்.
”வலிக்கட்டும்டி!” என்று உறுமியவனோ,.. அவளது முகத்தை உற்றுப் பார்த்து… “இனிமே உன் உதட்டுல இருந்து சிரிப்பே வரக் கூடாது! நீ இந்த வீட்ல இருக்கணும்னா, உன் புன்னகையை நிரந்தரமா அழிச்சுட்டு தான் இருக்கணும், இல்லைன்னா, நீ வெளியேற வேண்டியிருக்கும். புரிஞ்சுதா?” என்று குரலை உயர்த்தி அதிகாரமிட்டான்,…
அவளுக்கோ, ‘இவன் என்ன மனுஷன்? நான் சிரிச்சா இவனுக்கு ஏன் வயிறு எரியுது?’ என்று தான் நினைக்கத் தோன்றியது. அவனது இந்த அநாகரிகமான உத்தரவு அவளது உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது…
அவன் சொல்லை மீறி திருமணத்திற்குச் சம்மதம் சொன்னதற்காகச் சிரிக்கக் கூடக் கூடாது என்று சொல்வதுதான் அவளுக்குக் கோபத்தைத் தந்தது. இருந்தாலும், ‘இப்போது ஏதாவது பேசினாலும், தேவை இல்லாமல் கத்துவான், கோபம் கொள்வான்’ என்று எண்ணியவள் அமைதியாகவே நின்றாள்.
அவளது அமைதி, அவனுக்கு மேலும் கோபத்தைத் தூண்டியது. அவள் மௌனமாக இருப்பது, அவன் அதிகாரத்தைப் புறக்கணிப்பது போல அவனுக்குத் தோன்றியது….
”வாயைத் திறந்து சொல்லுடி!” என்று அவள் கரத்தை மேலும் அழுத்த, வலி தாங்க முடியாமல், ரிதன்யா சட்டென்று அவனைப் பிடித்து தள்ளி விட்டாள்…
மெல்லிய தேகம் கொண்ட பெண்ணவள் தள்ளிவிட்டதால், அந்தக் கம்பீர ஆடவன் விழவெல்லாம் இல்லை. ஆனால், தன் கட்டுக்குக் கீழ் இருக்க வேண்டிய ஒரு பெண், தன்னையே தொட்டுத் தள்ளிவிட்டாள் என்ற ஆத்திரம், அவனது கோபத்தை இரட்டிப்பாக்கியது…
“உனக்கு எவ்வளவு தைரியம்டி? அடங்கவே மாட்டேங்கிறள்ல? என் மேலையே கை வைக்கிற? உன் லோ-கிளாஸ் தைரியத்தை என்கிட்ட காட்டாதே!” என்று கத்தியவன்,.. அவளது கையை மீண்டும் பற்றி அத்தனை பலமாக முறுக்கினான். ரிதன்யாவால் வலியால் சத்தம் போடக்கூட முடியவில்லை. அவளது கண்ணில் நீர் திரண்டு விட…
“எதுக்கு இப்படி நடந்துகிறீங்க? நான் என்ன பாவம் பண்ணேன் உங்களுக்கு? உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது தான் உங்க ப்ராப்ளம்னா, என்னை வெளியே அனுப்பிடுங்க!” என்றாள்.
அவளால் வேறு என்னதான் செய்ய முடியும்? விட்டால், அவள் கை எலும்பையே முறுக்கும் அளவிற்குப் பற்றி இருக்கிறான். வலியில் அழுகையும் ஆதங்கமும் ஒருங்கே வர, அந்த கணம் அவனது தொந்தரவைத் தாங்க இயலாமல், பட்டென்று அந்த வார்த்தைகளைக் கூறிவிட்டாள்..
அவனோ, அவளது கரத்தை மெல்ல விடுவித்தான்.
அவள் கூறிய வார்த்தைகள், சித்தார்த்தின் கோபத்தை ஒரு கணம் நிறுத்தியது. அவனுக்கு இதுதானே வேண்டும்? அவள் தன் வாழ்க்கையை விட்டுப் போக வேண்டும் என்பதுதானே அவனின் ஒரே எண்ணம்.
அவளை ஆழ்ந்து பார்த்தவன், “ஸோ… என் லைஃபை விட்டுப் போயிடுற?” என்று கேள்வியாய் நிறுத்தினான்…
வலித்த தனது மணிக்கட்டைப் பற்றி வருடியவளுக்கு, அவன் கேட்ட பின்னர்தான், தான் என்ன வார்த்தை சொல்லி இருக்கிறோம் என்பது புரிந்தது.
அவளுக்கு அவனின் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு அவனோடு வாழ்வதில் விருப்பம் இல்லைதான். ஆனால், அவளுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லையென்றாலும், அவள் குடும்பத்திற்காக வாழ்ந்துதானே ஆக வேண்டும்? தன் வாழ்வில்தானே அவள் குடும்பத்தின் சந்தோஷம் அடங்கி இருக்கிறது..
ஆனால், அதனைப் பற்றி இப்போது அவனிடம் சொன்னால் புரிந்து கொள்ளவா போகிறான், மேலும் தன் குடும்பத்தை பற்றி தான் ஏதாவது தவறாக பேசுவான் என்பதை அறிந்தவள், கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, அக்கணம் அவனை அமைதிப்படுத்தும் எண்ணத்தில், “ம்ம்… போயிடுறேன்,” என்றாள்…
அவன் முகத்திலோ ஆழ்ந்த திருப்தி தெரிந்தது, அவன் முழுதாக சந்தோஷம் கொள்ளும் முன்னரே அவள்.. “ஆ… ஆனா, இப்போ என்னால போக முடியாது. எனக்கு டைம் வேணும்,” என்றாள். அவன் விழிகள் சட்டென்று சுருங்கியது.
“இப்போ நான் வீட்டை விட்டுப் போனா, என் குடும்பத்தோடு சேர்ந்து, உங்க குடும்பமும் வேதனைப்படும், எல்லாரும் கல்யாணம் ஆகி ஒரே நாள்ல, என்னாச்சு இவங்களுக்கு?’னு பேசுவாங்க. அது உங்க அப்பா அம்மாவுக்கும் கஷ்டமா இருக்கும். அதனால, கொஞ்ச நாள் நான் இங்கே இருந்துட்டுப் போறேன்.”
அவள், தனது வெளியேற்றத்திற்கு அவகாசம் கோரினாள்.
அவள் சித்தார்த்தின் பெற்றோரின் கௌரவத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தினாள். அவளுக்குத் தேவைப்பட்டதெல்லாம், அங்கிருந்து கண்ணியத்துடன் வெளியேற, தனது அடுத்த நகர்வுக்குச் சிந்திப்பதற்குச் சிறிது காலம்!
அவள் கேட்ட கால அவகாசம், சித்தார்த்திற்க்குச் சிறு எரிச்சலைத் தந்தாலும், தனது பெற்றோரின் கௌரவத்தையும் கருத்தில் கொண்டு யோசித்தவனுக்கு மறுக்கவும் முடியவில்லை. அதனால், அவன் வேறு வழியின்றி சம்மதம் தந்தான், அவளுக்கோ அவன் சம்மதம் தந்த பிறகு தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது, சிறிது நாட்கள் அவன் தன்னை தொந்திரவு செய்ய மாட்டான் என்று நம்பிக்கையுடன் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டாள்,…