அத்தியாயம் – 19
’இவன் சம்மதிச்சதே பெரிய விஷயம். ஆனா, எவ்வளவு நாளைக்குத் தொந்தரவு கொடுக்காம இருப்பான்னு தெரியலையே,’ அவள் மனதினுள் யோசித்தபடி நிற்க, அவனோ, “எவ்வளவு டைம் எடுத்துப்ப?” என்று தான் கேட்டான்.
அவன் கேள்வியில் திணறியவள், “எ.. எனக்குத் தெரியல,” என்றாள்.
சித்தார்த்தோ.. “இரண்டு மாதம் தான் டைம். அதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட இந்த வீட்ல நீ இருக்கக் கூடாது!” என்று கறாராக கூறிட,..
அவளால் என்ன சொல்ல இயலும்? “சரி,” என்றுதான் தலையசைத்தாள்…
“என் அம்மா அப்பாகிட்டருந்து தள்ளியே இரு, ஓவரா அட்டாச்டா இருக்காத!” எனவும் எச்சரித்தான். அவனது இந்த எச்சரிக்கை, அவளது மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இருக்க, அவளால் அந்த இடத்தில் மௌனமாக இருக்க வேண்டிய நிலை.
அவன் அதன் பிறகு எதுவும் பேசாமல் படுக்கையை நோக்கி விரைந்துவிட, இரவு உடையாக டாப் மற்றும் பட்டியாலா பேண்ட் ஒன்றை அணிந்து வந்தவளுக்கு, இன்றும் பால்கனியில் தான் இருக்க வேண்டுமா என்ற அழுப்பு ஏற்பட்டது.
ஒரு பெட்சீட்டை எடுத்துக் கொண்டு அவள் பால்கனி கதவைத் திறக்க, அவனோ, “அங்கே எங்க போற?” என்றான்.
ரிதன்யா விரக்தியுடன் “எனக்கான இடம் அதுதானே?” என்று சொல்ல,..
“அதான் போறேன்னு சொல்லிட்டல்ல, இங்கேயே இரு,” என்று மெத்தையைப் பார்வையால் காட்டினான்.
அவனுடன் ஒரே கட்டிலில் படுக்க வேண்டுமா என்று சங்கடமாக இருந்தாலும், வெளியே இருக்கும் குளிருக்குப் பயந்து, அவள் வலது பக்கம் வந்து படுத்துக் கொண்டாள். விசாலமான கட்டில் என்பதால், இருவருக்கும் இடையில் நிறைய இடைவெளி இருக்க, அவள் சிறு பாதுகாப்பிற்காக நடுவில் தலகாணி ஒன்றையும் வைத்துக் கொள்ள, அவன் அதற்கு எதுவும் சொல்லாமல் இருந்ததுதான் ஆச்சரியம்.
அதற்கு காரணம், அவனுக்கும் அவளுடன் ஒன்றாகப் படுப்பதில் நெருடல். நேற்றுபோல் அவளைக் குளிரில் கஷ்டப்படுத்த விரும்பவில்லை அவன், அதனால் தான் கட்டிலிலேயே படுக்கச் சொல்லிவிட்டான்…
தனிப்பட்ட முறையில் அவனுக்கு அவள் மீது கோபம் எதுவும் இல்லையே, இந்தத் திருமணத்தால் தானே கோபம் வருகின்றது? இப்போது அவளே போகிறேன் என்று சொன்ன பிறகு, கோபம் கொள்ள அவசியம் இல்லை என்றே தோன்றியது. இந்த இரு மாதம் அவன் அவளைப் புறக்கணிக்கலாம், ஆனால் கொடுமைப்படுத்த அவசியம் இல்லை என்று நினைத்தான்..
அடுத்த நாள் காலை, பனி மூட்டம் விலகிய வெளிச்சம் ஜன்னல் வழியே அறைக்குள் தவழத் தொடங்கியது. நேற்று எப்படிப் படுத்திருந்தாளோ, அதே நிலையில் தான் படுத்திருந்தாள் ரிதன்யா. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். நடுவில் வைக்கப்பட்டிருந்த தலையணை அவர்களின் தனிமையின் எல்லையாக இருந்தது.
அவளை ஒரு பார்வை மட்டும் பார்த்தவனுக்கு அவள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, மேலும் எந்தத் தொந்தரவும் கொடுக்க விரும்பவில்லை. எழுந்து வழக்கமான தனது ஜாக்கிங்கிற்குச் சென்றுவிட்டான்.
அவன் போன கொஞ்ச நேரத்தில் எல்லாம் ரிதன்யாவும் விழித்துக் கொண்டாள், மணி காலை ஆறை காட்டியது, அருகில் அவனைக் காணாததைக் கண்டு விழிகளைச் சுருக்கியவள், மேலும் அவனைப் பற்றி யோசிக்க விரும்பாமல், படுக்கையை விட்டு எழுந்து
குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள். அவள் வெளியே வந்தபோது, நேரம் ஆறரை மணியைத் தொட்டிருந்தது…
கண்ணாடியின் முன்பு நின்று, துண்டைக்கொண்டு கூந்தலை உலர்த்திக் கொண்டிருந்தவளுக்கு, நேற்று அவன் போட்ட நிபந்தனைகள் மனதை நெருடத்தான் செய்தது.
’என் அப்பா அம்மா எவ்வளவு ஆசை, கனவுகளோடு எனக்கு இந்தக் கல்யாணத்தைப் பண்ணி வச்சாங்க! அவங்களுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா துடிச்சே போயிடுவாங்களே…’ என்று நினைத்தவளுக்கு வலி மட்டுமே மிஞ்சியது. அவளது கண்களின் ஓரம் லேசாக ஈரமாகியது…
சரியாக அந்த நேரம் தான், ஜாக்கிங் முடித்துவிட்டு சித்தார்த்தும் அறைக்குள் நுழைந்தான். அவள் கண்ணாடியின் முன்பு நின்றிருக்க, அவனோ அவளை ஏறெடுத்தும் பார்க்காமல், குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்…
ரிதன்யா ஒரு நீண்ட நெடிய மூச்சை விட்டுக் கொண்டு கீழே சென்றாள்.
அன்றும் தெய்வானை தான் அவளைக் கனிவுடன் வரவேற்றார். “காபி தரட்டா ரிதும்மா?” என்று கேட்டவரிடம், அவள் பணிவுடன்
“நீங்க குடிச்சிட்டீங்களா அத்த?” என்றாள்.
”இன்னும் இல்லமா… இப்போதான் உன் மாமாக்குக் கொடுத்துட்டு வந்தேன்,” அவர் சொல்ல, “சரி, நீங்க உட்காருங்க அத்த, நானே உங்களுக்கும் எனக்கும் எடுத்துட்டு வரேன்,” என்று கூறி அவள் சமையலறையை நோக்கிச் சென்றாள்.
சித்தார்த், தன் தாய் தந்தையிடமிருந்து விலகி இரு என்று கூறி இருந்தாலும், அவளால் தெய்வானையின் அன்பை உதாசீனப்படுத்த விரும்பவில்லை.
அவளுக்கு இந்த வீட்டில் ஆறுதலே அவர்களின் அன்புதானே! இந்த இரு மாதத்தின் பின்பு நிலைமை எப்படி மாறும் என்பது அவளுக்குத் தெரியாது. ஆனால், இருக்கும் வரைக்கும் அவள் அவர்களின் அன்பை ஏற்றுக்கொண்டு, அவர்களுடன் பாசத்தைப் பரிமாறிக்கொள்ளவே விரும்பினாள். இந்த இரு மாத அவகாசத்தில் அது தான் அவளுக்குக் கிடைத்த ஒரே பலம்.
சமையலறைக்குள் நுழைந்தவள், இரண்டு கோப்பைகளில் காபியை எடுத்துக்கொண்டு, தெய்வானை அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தாள்.
தெய்வானை, மருமகள் எடுத்து வந்த காபியை மிகுந்த அன்புடன் வாங்கிக் கொண்டார்.
“சித்து குளிக்கப் போயிட்டானாடா?” என்று அவர் வினவ, “ஆமா அத்த,” என்றாள் அவள்…
”சரிடா… நீ டீ குடிச்சிட்டு அவனுக்கும் எடுத்துட்டுப் போ. அவனுக்கு எல்லாம் கரெக்ட் டைமுக்கு கொடுக்கணும், இன்னைக்கு ஆபீஸ் வேற போறேன்னு சொன்னான், இன்னும் ரெண்டு நாளாவது லீவு போடுடான்னு சொன்னா, கேட்க மாட்டேன்னுட்டான், நீதான்மா அவனை மாத்தணும். ஆபீஸ், ஆபீஸ்னு எப்போ பாரு அது பின்னாடியேதான் ஓடிக்கிட்டு இருக்கான். இனியாவது அவன் குடும்பப் பொறுப்புக்குள்ள வரட்டும்,” என்று சொல்ல,
ரிதன்யாவோ.. ‘நான் அவன்கிட்ட சொன்னா ஏறி மிதிக்க வருவான்’ என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.
ஆனால் மாமியாரிடம் எதுவும் சொல்லாமல், “சரிங்க அத்த,” என்பதோடு முடித்துக்கொண்டாள்..
அந்த நேரம் தான் வாசுதேவனும் வந்தார். “என்னம்மா, காலையிலயே மாமியாரும் மருமகளும் ஊர்க் கதை பேச ஆரம்பிச்சுடீங்க போல?” என்றார் சிரித்தபடி…
“ஊர்க் கதையெல்லாம் இல்லைங்க. உங்க மகன் கதையைத்தான் பேசிக்கிட்டு இருந்தேன். சாரதாவும் நேத்து பேசினாங்க. ‘பொண்ணு மாப்பிள்ளை எப்போ மறுவீட்டுக்கு வராங்க’ன்னு கேட்டாங்க. இவன்கிட்ட கேட்டா, அதெல்லாம் தேவை இல்லைனு சொல்றான்,” என்று புலம்பலாய்க் கூறினார்.
“உன் பையன் எதுக்குத்தான் ஒத்துக் கிட்டு போயிருக்கான்?” என்று அலுத்துக் கொண்டவர், மருமகளைப் பார்த்து… “நீயாச்சும் சொல்லலாமேம்மா,” என்றார்…
அவளோ… “நானா?” என்று விழித்தவள், “சொல்லிப் பார்க்கிறேன் மாமா,” என்றாள்
அதன் பிறகு, தெய்வானையின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, அவனுக்குக் காபி எடுத்துச் சென்றாள். அப்போது சித்தார்த் குளித்து முடித்து வந்து ஷர்ட் பட்டனை மாட்டிக் கொண்டிருந்தான்.
கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தவள், “காபி,” என்று மெல்லிய குரலில் கூற, “உன்கிட்ட நான் கேட்டேனா?” முகத்தில் அடித்தார் போன்று கேட்டான் அவன்,…
அவளோ அதற்கெல்லாம் கவலை கொள்ளவில்லை. “அத்தை தான் கொடுக்கச் சொன்னாங்க,” என்றாள்.
“லிஸன்… எனக்கு நீ எதுவும் செய்யத் தேவை இல்லை, இங்க இருக்கிற வரைக்கும் நீ உன் வேலையை மட்டும் பாரு, நான் என் வேலையை மட்டும் பார்க்கிறேன்,” என்றான். அவனது நோக்கம் தெளிவாக இருந்தது, அவனது வாழ்க்கையில் அவள் இல்லை.
’நல்லதா போச்சு,’ என்று முணுமுணுத்தவள், “இந்த காபியை என்ன பண்ணுறது?” என்றாள்.
”நீயே குடி,” என்றவன், கபோர்டைத் திறந்து தனது பிளேஸரை எடுத்தான்…
ரிதன்யாவும் ஒரு காபி அடிக்டட் என்பதால், கீழே அத்தைக்கு பதில் சொல்ல வேண்டுமே எனும் எண்ணத்தில், அங்கேயே மெத்தையில் அமர்ந்து அந்தக் காபியையும் பருகத் தொடங்கினாள்.
அவள் போய்விட்டாளா எனும் எண்ணத்தில் திரும்பியவன், ஆர அமர்ந்து காபி அருந்திக் கொண்டிருப்பவளைக் கண்டு, ஒரு கணம் குழப்பமடைந்தான். பின், அவளது மௌனமான கீழ்ப்படியாமை அவனுக்கு எரிச்சலைத் தரவில்லை. அவள் நிபந்தனைப்படி, அவனது வேலையில் குறுக்கிடவில்லை. அதனால், எதுவும் பேசாது தனது உடையை அணியும் வேலையை மட்டும் கவனித்தான்…
காபி குடித்துக் கொண்டிருந்த ரிதன்யாவிற்க்கு, மறுவீடு போவதைப் பற்றித் தெய்வானை கேட்டது நினைவில் வந்தது. அவளுக்கும் தன் குடும்பத்தைப் பார்க்க வேண்டும் எனும் ஏக்கம் இருக்க, கேட்டுப் பார்க்கலாம் எனும் எண்ணத்தில் தொண்டையைச் செருமிக் கொண்டவள் தயக்கத்துடன்.. “அத்தையும் மாமாவும் மறுவீட்டுக்குப் போறத பத்தி கேட்டாங்க…” என்று மெல்ல ஆரம்பிக்க, அவனோ… சட்டென்று, “போயிட்டு வா.. யார் வேணாம்னு சொன்னது?” என்றான்.
’இவன்கிட்ட கேட்டதுக்கு கேட்காமலேயே இருந்திருக்கலாம்,’ என்று நினைத்துக் கொண்டவள், மேலும் அவனுக்கு புரிய வைக்கும் விதமாக,.. “ரெண்டு பேரும் சேர்ந்து தானே போகணும்? நான் மட்டும் எப்படி போறது?” என்றாள்.
அவளது கேள்வி, சித்தார்த்தின் கோபத்தைக் கிளறியது. அவன் அவளது குடும்பத்தை எதிர்கொள்ளத் தயாராக இல்லை.
எனவே.. “என்னால உன்கூடலாம் எங்கேயும் வர முடியாது. முக்கியமா உன் வீட்டுக்கு வரவே முடியாது.” என்றான் அழுத்தம் திருத்தமாய்,..
அவளுக்குக் கோபம் வந்தாலும், அவனது நிபந்தனையின் கீழ் இருப்பதால், அந்தக் கோபத்தை வெளிப்படையாகக் காட்ட முடியாத நிலையில் தான் இருந்தாள். அவன் மறுவீட்டுப் பயணத்திற்கு வரமாட்டான் என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும். அதற்கு மேல் அவனிடம் பேச விரும்பாமல் அமைதியாக வெளியேறினாள்,…
டைனிங் டேபிளில் காலை உணவிற்காக அனைவரும் ஒன்றாகக் கூடினர். சித்தார்த்திற்கு ரிதன்யா தான் பரிமாறினாள்.
அனைவரின் முன்பு அவனால் அவளை மறுக்க முடியாததால், அமைதியாக அவள் பரிமாறியதை சாப்பிட்டான். அவனது கண்களில் அவளைப் புறக்கணிக்கும் உணர்வு மட்டுமே இருந்தது.
அந்த நேரம் வாசுதேவன், “மறுவீட்டு ஃபங்சனுக்கு போயிட்டு வரலாமே சித்து,” என்றார்.
மகன் மறுக்கிறான் என்பதற்காக அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை. அவர் மனைவியும் வேறு, ‘இந்த விஷயத்துக்கு மட்டும் அவனை ஒத்துக்க வைங்க. பாவம் அந்தப் பொண்ணு. அவளுக்கும் ஆசை இருக்கும்ல, புருஷன் கூட வீட்டுக்கு ஒன்னா போகணும்னு,’ என்று புலம்பலாய் கூறி இருக்க, அவரும் பேசும் முடிவிற்கு வந்திருந்தார்.
தந்தையின் கேள்வி அவனுக்கு எரிச்சலைக் கொடுத்தாலும், “இது ஒன்னும் ரொம்ப இம்பார்டன்ட் இல்லையேப்பா,” என்றான்.
“இம்பார்டன்ட் தான்ப்பா. உனக்குத்தான் புரிய மாட்டேங்குது. இந்த ஒரு விஷயத்துக்கு மட்டும் உன் பிடிவாதத்தை விடு,” என்றார்.
சித்தார்த், மனதிற்குள் ‘இவங்களால ரொம்ப டிஸ்டர்பண்ஸா இருக்கு’ என்று அலுத்துக் கொண்டான். இந்த விஷயத்தில் பெற்றோரின் தொந்தரவு மேலும் அதிகரிக்கும் என்று நினைத்தவன், சற்று இறங்கி வர எண்ணி… “நெக்ஸ்ட் வீக் போலாம்ல,” என்றான்.
மகன் இந்தளவு இறங்கி வந்ததே பெரிய விஷயம் என்று நினைத்த அவன் தாய் தெய்வானை, “ஓகேப்பா… நெக்ஸ்ட் வீக்கே போயிட்டு வாங்க,” என்றார் சந்தோசத்துடன்…
ரிதன்யா இதிலெல்லாம் தலையிடவில்லை, அவன் சம்மதித்ததில் அவளுக்கு நிம்மதி கிடைத்தாலும், அவனது பிடிவாதமான குணம் அவளை கடுப்பேற்ற தான் செய்தது, ‘இவன் மிகவும் ஆணவம் பிடித்தவன் போல,’ என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டாள்…