இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா – 4

அத்தியாயம் – 4

​14 வருடங்களுக்குப் பிறகு…

​”அக்கா! அக்கா!” என்று வெகு நேரமாகத் தூங்கிக் கொண்டிருந்த தமக்கையை எழுப்பிக் கொண்டிருந்தாள் சரண்யா,…

​அவள் தமக்கையோ தலையணையில் முகம் புதைத்து, “அபி… அபி… எப்போ என்னைப் பார்க்க வருவ?” என்று உறக்கத்திலேயே பிதற்றிக் கொண்டிருந்தாள், அந்தப் பெயரும் பெயருக்கு சொந்தகாரனும் தான் இன்றும் அவளது கனவுகளை ஆக்கிரமித்திருந்தான்…

​அவள் குரல் காதில் விழுந்த சரண்யா, சலிப்புடன் தலையசைத்து, “இந்த அக்காவுக்கு எப்போவும் இதே வேலையாப் போச்சு,” என்று முணுமுணுத்துக் கொண்டு, “அக்காஆ!” என்று அவள் தோள்களைப் பற்றி வலுவாகக் குலுக்கினாள்…

அவள் உலுக்களில் ​உறக்கத்திலிருந்து மீண்டு, தன் மான்விழிகளை மெல்லத் திறந்த ரிதன்யா, தன் முன் இடுப்பில் கரங்களை ஊன்றியபடி, விழிகளைச் சுருக்கிக் கொண்டு நின்றிருந்த தங்கையைக் கண்டு, “ப்ச்… என்னடி?” என்றாள் அழுப்புடன்…

​பின்னே! தன் அபியுடன் கனவில் இருக்கும்போது வந்து தொந்தரவு செய்தால் கோபம் தானே வரும்!

​”டைம் சிக்ஸ் தேர்ட்டி!” சரண்யா சொல்ல… “அதுக்கு என்ன இப்போ?” என்றாள் அவள்…

​”எட்டு மணிக்கு முகூர்த்தம்!” சரண்யா அதே டோனில் சொல்ல,.. “ப்ச்… அதுக்கு இப்போ என்னடி?” என்றாள் இன்னும் தெளிவு பெறாமல்…

​”உன்னைக் கொல்லப் போறேன் பாரு! என் க்ளோஸ் ஃபிரண்டோட அக்காவுக்கு இன்னைக்கு மேரேஜ்! போகணும்னு நைட்டே சொன்னேன்ல?” என்றாள் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு…

​”போயிட்டு வா! யாரு வேணாம்னு சொன்னது?” ரிதன்யா வினவ, “அக்காஆ!” என்று பற்களைக் கடித்தவள், “நான் மட்டும் தனியாப் போவேனா? நீயும் வரேன்னு நைட் சொல்லிட்டு, இப்படி கும்பகர்ணி மாதிரி தூங்கினா என்ன அர்த்தம்?” என்று அவள் கேட்ட பிறகுதான், ரிதன்யாவிற்கு அனைத்தும் நினைவுக்கு வந்தது….

​”ஆமால!” அவள் வினவ, “என்ன நோமால, நீ ரொம்பப் பண்ணுறக்கா! சீக்கிரமா எழுந்து ரெடியாகு, நாம டிராவல் பண்ணிப் போகவே ஹாஃப் அன் அவர் ஆகும், என் ஃபிரண்ட் என்னைத் திட்டப் போறா, உன்னை நம்பி இருந்தேன் பாரு,” என்ற தங்கையின் புலம்பல்களைச் சட்டை செய்யாமல், சோம்பல் முறித்து எழுந்தவள், முதலில் சென்றது தன் அலமாரியை நோக்கித்தான்….

​அலமாரியைத் திறந்தவளிடம், “அக்கா!” என்று சரண்யா பாவமாக விழிக்க, அவளோ அவளைக் கண்டுகொள்ளாமல், அபி தன்னிடம் கொடுத்துச் சென்ற வாட்சைத்தான் கையில் எடுத்து ஆசையாக வருடினாள்…

​அந்த வாட்சின் ஓசை பல வருடங்களுக்கு முன்பே நின்றிருந்தாலும், அது ரிதன்யாவின் இதய ஓசையை அவளுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தது…

​’எங்கே இருக்க அபி?’ மானசீகமாகக் கேட்டுக் கொண்டவளுக்கு, கடந்த காலத்தில் அவனோடு சேர்ந்திருந்த நாட்கள் நினைவில் ஓடிட, அந்தக் நினைவில் இருந்து அவள் விடுபட மிகவும் சிரமப்பட்டாள்….

“அக்கா” என்ற சரண்யாவின் குரலில், ஆழமாக ஒரு மூச்சை இழுத்து விட்டுக் கொண்டவள், அந்த வாட்சை அழுத்தமாக முத்தமிட்டுவிட்டு, அதனைப் பத்திரமாக அலமாரிக்குள் இருந்த அந்தச் சிறிய பெட்டியில் வைத்தாள்…

​”ரிதன்யா அக்கா! உனக்காகத் தான் வெயிட்டிங்!” சரண்யாவின் கூச்சல், அவளை நிகழ்காலத்துக்கு இழுக்க,.. ​”வந்துட்டேன்டி!” என்று சொல்லிவிட்டு குளியலறைக்குள் நுழையப் போனவளின் கரம் பற்றி நிறுத்தினாள் சரண்யா.

அபியைப் பற்றித் தங்கையிடம் கூறி இருந்தாள் ரிதன்யா, அதனால் தான், சரண்யா பொறுக்க முடியாமல்… “இன்னும் எவ்வளவு நாட்களுக்குத் தான் அந்த வாட்சையே பார்த்துட்டு இருக்கப் போறக்கா? இப்போ காலம் மாறிப் போச்சு,” என்றாள்…

​”இந்த உலகமே மாறினாலும், என்னோட அபியை என்னால மறக்க முடியாதுடி,” என்றாள் ரிதன்யா ஒரு மெல்லிய உறுதியுடன்….

​சரண்யா ஒரு பெருமூச்சோடு அவள் கரத்தை விடுவிக்க, ரிதன்யாவும் குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்….

சுமார் ஒரு மணி நேரத்தில், ஒரு அழகான மேக்ஸியில் தயாராகி இருந்தாள் ரிதன்யா, சிறு ஒப்பனைகளோடு, உடைக்கு ஏற்ப ஆபரணங்களுடன் பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தாள்…

துப்பட்டாவை ஒரு சைடாகப் போட்டவள், கண்ணாடியில் ஒரு முறை தன்னைப் பார்த்து விட்டு, அறையை விட்டு வெளியே வர, அவளை முதலில் எதிர்கொண்டது சாரதா தான், ​மகளின் அழகைக் கண்டு மனம் நெகிழ்ந்து போனார்….

இவள் வந்த பின்னர்தானே அவரது மனதில் இருந்த பெரும் துயரம் நீங்கி இருந்தது முதல் மகளை இழந்து நின்ற அந்தத் தாயின் வாழ்வில், ரிதன்யாவாக ஜானு வந்து இன்பத்தை மீண்டும் பூக்கச் செய்திருந்தாள்…

சாரதா, ரிதன்யாவைத் தன் வயிற்றில் சுமந்து பெற்ற பிள்ளையாகத்தான் இதுநாள் வரையில் பார்த்து வருகிறார். அவரும் சரி, அவரது கணவரும் சரி, சரண்யாவையும் ரிதன்யாவையும் ஒரே போலத்தான் பாவித்தனர்…

தாய், தந்தையை இழந்து நிர்க்கதியாய் நின்ற அந்தச் சிறுமி, தன் புதுத் தாய் தந்தையரின் அன்பில், தான் சந்தித்த பழைய துயரங்களையும் மறக்கக் கற்றுக்கொண்டாள்…

அவர்களே அவளின் உலகமாகிப் போனார்கள், சரண்யாவும் அவர்களுக்குக் குறைந்தவள் இல்லை, இவள் தன் உடன்பிறக்காதவள் என்பது தெரிந்தாலும், அவள் மீது அளவுகடந்த அன்பைக் காட்டினாள், இருவரும் உடன்பிறந்த சகோதரிகளைப் போலத்தான் இன்றைய நாள் வரை இருந்து வருகின்றனர்….

​”ரிதும்மா… சூப்பரா இருக்க போ!” என்று மகளின் முகத்தை வழித்து, நெட்டி முறித்தவர்  “என் செல்லம்! கண்ணு படப் போகுது, பத்திரமாப் போயிட்டு வா!” என்று கூற,.. தாயின் அன்பில் நெகிழ்ந்தவள், “ம்ம்” என்று புன்னகையோடு தலையசைத்து அவரை அணைத்துக் கொண்டாள்…

அவள் எப்போதும் இப்படித்தான், எங்கு செல்வதாக இருந்தாலும் தாயை அணைத்து, அவரது ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்ட பிறகே புறப்படுவாள்…

அதே நேரம், வாசலில் இருந்து வியர்வையுடன் உள்ளே நுழைந்த மாணிக்கம், “என்னம்மா கிளம்பியாச்சா?” என்று கேட்டார்.

தாயை விட்டு மெல்ல விலகியவள்,.. தந்தையிடம்​”ஆமாப்பா,” என்று சொன்னவள்… “நைட்டே லேட்டா தான் தூங்கினேன்ப்பா, காலையில தூங்க விடாம சீக்கிரமே என்னை வந்து எழுப்பினா, எங்கே அவளைக் காணோம்?” என்று சரண்யாவைக் காணாமல் வினவ…

​”உன் தங்கச்சியைப் பற்றி உனக்குத் தெரியாதா? கடைசி நேரத்துல இப்படித் தானே லேட் பண்ணுவா, நீ உட்காரு, காபி எடுத்துட்டு வரேன்,” என்று சாரதா சொல்ல, அவளும் தந்தையோடு சோபாவில் அமர்ந்து கொண்டாள்….

​”ஜாக்கிங் எல்லாம் முடிந்ததாப்பா?” என்று கேட்ட மகளிடம், “ஆமாடா… ஜாக்கிங் போகாம அன்றைய நாள் எனக்குச் சரியாவே ஓடாதே,” என்று பாசத்துடன் மகளின் தலையை வருடியவர்,… “படிப்பு முடிந்தது, அடுத்து என்ன பண்ணுறதா பிளான்” என்றார்,…

​”பிளான் என்ன இருக்கப் போகுது? அடுத்து கல்யாணம்தான்!” என்று கிண்டலாகச் சிரித்தபடி வந்த தங்கையைச் செல்லமாக முறைத்தவள், “இப்போதைக்குக் கல்யாணம் வேண்டாம்ப்பா,” என்றாள் தந்தையிடம் திரும்பி…

​”ஏன்க்கா? யாரையாவது லவ் பண்ணுறியா?” சரண்யா கண்சிமிட்டி வினவ, ‘இவ ஏன் அப்பா முன்னாடி இப்படிப் பேசிக்கிட்டு இருக்கா?’ என்று மனதில் தவித்தவள், கேள்வியாகத் தன்னைப் பார்த்த மாணிக்கத்திடம், “அப்படியெல்லாம் இல்லப்பா,” என்றாள் வேகமாக….

​”இருந்தாலும் ப்ராப்ளம் இல்ல, அப்பா கட்டி வச்சிடுவாரு, இல்லப்பா?” என்று சரண்யா தகப்பனிடம் வினவ…
​பெரிதாய் சிரித்த மாணிக்கம், “என் பொண்ணுங்களோட விருப்பமும் சந்தோஷமும் தான் எனக்கு முக்கியம், பையன் நல்லவனா இருந்தா கண்டிப்பா பண்ணி வச்சிடலாம்,” என்றார்…

​”ஸோ ஸ்வீட்ப்பா நீங்க!” என்று தந்தையைச் செல்லம் கொஞ்சிய சரண்யா, “லவ்வு கிவ்வு இருந்தா இப்போவே சொல்லிடுக்கா,” என்று ரிதன்யாவிடம் புன்னகையுடன் கூற… “நீ அடிதான் வாங்கப் போற பாரு,” என்றாள் ரிதன்யா….

​அந்த நேரம்… “அவளை ஏன்டி சீண்டிக்கிட்டு இருக்க?” சரண்யாவை அதட்டியபடி வந்த சாரதா, “சீக்கிரம் காபியை குடிச்சிட்டு கிளம்புங்க, லேட்டாகுதுல,” என்றார்…

​”ஐயோ ஆமாமா! மறந்தே போயிட்டேன்,” என்ற சரண்யா, காபியை எடுத்துப் பருகத் தொடங்கி இருந்தாள்…

​தங்கையை கண்கள் சுருங்க நோக்கி விட்டு ரிதன்யாவும் காபியை எடுத்துக் கொள்ள, தமக்கையின் பார்வையை கண்டு அவளுக்குப் பழிப்பு காட்டியவள், ‘எப்படி மாட்டி விட்டேன் பார்த்தியா?’ என்று ஜாடையில் சொல்ல, ‘நீ வெளிய வா, உன்னைக் கவனிச்சிக்கிறேன்’ என்றாள் ரிதன்யாவும் ஜாடையில்…

சற்று நேரத்தில், இருவரும் காபி அருந்திவிட்டு, வீட்டின் வாசலுக்கு வந்தனர்…

​மாணிக்கம் சொந்தமாக ஒரு பெரிய ஜவுளிக்கடை வைத்திருக்கிறார், அந்த வருமானத்தின் மூலம் இப்போது வரை வசதியாகத் தான் இருக்கிறார், சொந்தமாக ஒரு காரும் இருக்கிறது. கோடீஸ்வரர் இல்லையென்றாலும், நடுத்தர வர்க்கத்தை விட்டு சற்று உயர்ந்த தரத்தில் இருப்பவர்கள் தான் அவர்கள்…

​வீட்டில் இருந்த காரில் ட்ரைவருடன் சகோதரிகள் இருவரும் புறப்பட்டனர், இன்று அவர்கள் செல்லவிருக்கும் திருமண மண்டபம், வசதியான புறநகர் பகுதிக்கு அருகில் இருக்க, இருவரும் உரையாடியாபடியே அவ்விடத்தை நோக்கி பயணித்தனர்,…

அதே நேரம், இங்கு அந்த தெருவில் காலடி எடுத்து வைத்தாலே, அது சாதாரணமானவர்களின் குடியிருப்பு அல்ல என்று எவரும் உணர்ந்துவிட கூடியதாக இருக்கும் அந்த வீதிகள், சத்தங்கள் இன்றி, வாகனப் போக்குவரத்து குறைவாக மிகுந்த அமைதியுடன் காணப்பட்டன…

தெருவின் இருபுறமும் வரிசையாக நின்றிருந்த மரங்கள், தெருவிளக்குகளின் மஞ்சள் ஒளியில் மேலும் பசுமையாகத் தோன்றின….

​வீட்டு வாயில்கள் அனைத்தும் உலோகத்தால் ஆன உயரமான கதவுகளாலும், செங்குத்தான சுவர்களாலும் பிரிக்கப்பட்டு, வெளியாட்களின் பார்வையைத் தடுத்தன, ஒவ்வொரு வீடும் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில், நவீன கட்டிடக்கலையுடன், மாளிகைகள் போலான வடிவமைப்புடன் நின்றிருந்தன…

அந்தப் பகுதி முழுவதும், பணத்தின் செழிப்பையும், பாதுகாப்பையும் பறைசாற்றும் வகையில் இருந்தது….

அந்தத் தெருவிலேயே தனிச்சிறப்புடன் கம்பீரமாக எழுந்து நின்றது வீடு என்று சொல்ல முடியாத அளவிற்கு விரிந்து நின்ற அந்த மாளிகை, முழுக்க முழுக்க வெள்ளை நிற கிரானைட் கற்களால் அலங்கரிக்கப்பட்ட அதன் முகப்பு பிரம்மாண்டமானதாகவும், செழுமையின் உச்சமாகவும் இருந்தது…

அந்த வீட்டின் உள்ளே இருந்த முதல் தளத்தின் விசாலமான அறையில் நிலைக்கண்ணாடி முன்பு தனது டையைச் சரி செய்து கொண்டிருந்தான் சித்தார்த் அபிமன்யு…

​ஆறடி உயரத்தில் வசீகரத் தோற்றத்துடன் இருந்தான், தினசரி உடற்பயிற்சியினால் அவனது உடலமைப்பு துல்லியமான கட்டுக்கோப்புடன் காணப்பட்டது, விலையுயர்ந்த சூட் அவனது தோற்றத்தை மேலும் மிடுக்காகக் காட்டியது, ​அவனுடைய கூர்மையான கண்கள், உறுதியான தாடைக்கோடு மற்றும் சற்றே இறுக்கமான முகபாவனை ஆகியவை எதிரில் நிற்பவர்களைத் தடுமாற வைத்துவிடும் தன்மை கொண்டிருந்தன,

பெண்கள் மயங்கும் தோற்றத்தில் அவன் இருந்தாலும், அவனது பார்வையைத் தாண்டி அவனை நெருங்கவே அஞ்சுவர் பலர், அவனது தோற்றத்தில் கவர்ச்சியும், அதே சமயம் அணுக முடியாத ஒரு அதிகாரத் தோரணையும் கலந்திருந்தது….

தனது வழவழப்பான ஷுவையும் அணிந்து முடித்தவன், அந்த வீட்டின் அகன்ற மாடிப் படிக்கட்டுகளில் ‘தடக் தடக்’ என்ற காலடி ஓசையுடன் கம்பீரமாக இறங்கினான், அந்த ஓசை வீட்டில் இருந்த அமைதியைக் கிழித்தெறிந்தது…

​அவனது காலடி ஓசையை வைத்து, மகன் வருவதை அறிந்து கொண்ட அவன் தாய் தெய்வானை சமையலறையிலிருந்து வெளிவந்தார், வீட்டில் பல வேலையாட்கள் இருந்தாலும், கணவனுக்கும் மகனுக்கும் பிடித்தமான உணவுகளை அவர் கையால் சமைப்பதில் அவருக்குத் தனி திருப்தி….

“குட் மார்னிங் கண்ணா!” என்று பாசத்துடன் அவர் மகனை வரவேற்க, அவ்வளவு நேரம் இறுகி இருந்த சித்தார்த்தின் முகம் தாயைக் கண்டதும் கனிந்து புன்னகைத்தது…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page