இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா – 8

அத்தியாயம் – 8

​”ரிது… ரிது… ரிதும்மா!” சாரதா பல முறை அழைத்தும் காதில் விழாது எங்கோ வெறித்துப் பார்த்தபடி ஆழ்ந்த யோசனையில் இருந்தாள் ரிதன்யா…

​’என்னாச்சு இவளுக்கு?’ என்று குழம்பியவரோ அருகில் வந்து அவள் தோள் தொட, அவரின் தொடுதலில் சுயம் வந்தவள் சாரதாவைக் கண்டு, “என்னம்மா? கோயிலுக்குப் போயிட்டு வந்திட்டீங்களா?” என்று கேட்டாள்…

​”நான் வந்து பத்து நிமிஷமாச்சு. உன்னை ரொம்ப நேரமா கூப்பிடுறேன், உன் காதுல விழவே இல்ல. அப்படி என்னடி ஆழ்ந்த யோசனை?” என்று அவர் வினவ…
​தாயின் தோளில் சாய்ந்து கொண்டவள், அவரது கரத்தைப் பற்றிக் கொண்டு, “அம்மா… சின்ன வயசுல எனக்கு அபின்னு ஒரு ஃபிரண்ட் இருந்தான்,” என்றாள்…

​”அது தான் தெரியுமே. சொல்லி இருக்கியே,” அவர் கூற…
​”ம்ம்… சொல்லி இருக்கேன் தான். ஆனா முழுசா சொல்லலையே. எனக்கு அவன்னா ரொம்பப் பிடிக்கும். எந்த அளவுக்குன்னா, இப்போ அவனைத் தேடி கண்டுபிடிச்சு கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிற அளவுக்கு அவன் என் மனசு முழுக்க நிறைஞ்சு போயிருக்கான்மா” என்றாள் ரிதன்யா மிகுந்த தயக்கத்துடன்…

​சாரதாவிற்கு தூக்கி வாரிப்போட்டது. ஒரு விநாடி பேச்சற்று போனவர், மகளை நிதானமாகப் பார்த்தார். “ரிதும்மா! என்னடி பேசுற? நீ அவனைப் பார்த்து இத்தனை வருஷம் ஆச்சு. அவன் எங்க இருக்கான்? என்ன பண்றான்னு எதுவும் தெரியாது. ஒரு தடயமும் இல்லைன்னு நீயேதானே சொன்னே? இப்போ இப்படி பேசுற? என்னடி ஆச்சு உனக்கு?” என்று அதிர்ச்சியுடன் வினவினார்…

​ரிதன்யாவிற்கு, தன் தாயின் கவலை புரிந்தது, ஆனாலும் அவளால் அந்தப் பிடிவாதத்தை விட முடியவில்லை. “தெரியும்மா. ஆனா, எனக்கு இந்தத் தேடலை நிறுத்தவே மனசு வரலை. அவன் எங்கேயோ இருக்கான்னு என் மனசு சொல்லுது. எனக்கு வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லைம்மா,” என்றாள் தாயின் மடியில் முகம் புதைத்து…

​சாரதாவின் மனதில், மகளின் பாசத்தைக் கண்டு கவலையும், கோபமும் கலந்த ஒரு கலவை உருவானது. அன்றைய இரவு கணவனிடமும் இதனைப் பற்றிக் கூறிப் புலம்பினார்…

​”சீக்கிரம் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு தோணுதுங்க. சின்ன வயசுல பார்த்தவனை இப்போ வரை நினைச்சுட்டு இருக்கா. இதெல்லாம் எனக்குச் சரியாவே படல,” என்றவர்… ​”இப்போ அந்தப் பையன் நல்லவனா இருக்கானா இல்ல கெட்ட பழக்கத்தோட சுத்திக்கிட்டு இருக்கான்னு நமக்குத் தெரியாது. இத்தனை வருட காலத்தில் எப்படி வேணும்னாலும் மாறி இருக்கலாம் இல்லையா? இல்லைனா கல்யாணம் கூட ஆகி இருக்கலாம்,” என்று தனது அச்சத்தை வெளிப்படுத்தினார்…

​”நீ சொல்றதும் சரி தான் சாரதா… நம்ம பொண்ணை இப்படியே விட முடியாது. நான் தரகர் கிட்ட பேசுறேன்,” என்றார் மாணிக்கம்…

​ரிதன்யாவின் விருப்பம் எதுவாக இருந்தாலும், அவளின் எதிர்காலப் பாதுகாப்பே முக்கியம் என்று முடிவெடுத்த சாரதாவும் மாணிக்கமும், அவசரமாகத் திருமண ஏற்பாடுகளைத் தொடங்க முடிவெடுத்தனர்….

இரண்டு நாட்கள் கடந்திருக்கும். வீட்டிற்குத் தரகர் வந்திருந்தார். ரிதன்யாவின் திருமண விஷயத்தைப் பற்றி மாணிக்கமும் சாரதாவும் பேசிக் கொண்டிருந்த நேரம், ரிதன்யாவும் அங்கு வந்திருந்தாள்…

​”அட! இதோ கல்யாணப் பெண்ணே வந்தாச்சே,” தரகர் கூறியதைக் கேட்டு அதிர்ந்த ரிதன்யா, சாரதாவைப் பார்க்க… அவரோ, “வாம்மா… வந்து உட்காரு,” என்றார் மகளின் எதிர்ப்பை இப்போதே தவிர்க்க எண்ணியபடி…

​தரகரின் முன்பு எதுவும் பேச முடியாததால், ரிதன்யாவும் அமைதியாக வந்து அமர்ந்தாள். ரிதன்யாவின் புகைப்படத்தைத் தரகரிடம் ஒப்படைத்தார் மாணிக்கம். அதோடு சில உரையாடல்களும் நிகழ்ந்தது. மணமகன் குடும்பத்தின் எதிர்பார்ப்புகள், சீர் வரிசைகள், திருமணச் சடங்குகள் என நீளும் அந்த உரையாடல்கள், ரிதன்யாவிற்கு அந்த அறையில் ஒரு அந்நிய உணர்வை அளித்தது.

​அவள், தனக்கு விருப்பமில்லாத ஒரு வாழ்க்கையை நோக்கித் தள்ளப்படுகிறாள் என்ற எண்ணம் அவளுக்குள் கனமாக இருந்தது. ஒரு மூலையில், அபி என்ற அவளது கனவு மௌனமாக அழுதுகொண்டிருந்தது. அந்த உரையாடலின் ஒவ்வொரு வார்த்தையும், அவளது தேடலின் கதவை மூடும் சத்தம் போல ஒலித்தது…

தரகர் சென்றதும், சமையலறைக்குள் நுழைந்த தாயைப் பின் தொடர்ந்து சென்றவள், “அம்மா…” என்று கண்ணீருடன் அழைக்க… மகளின் கலங்கிய குரலில் திரும்பியவர், “இப்போ எதுக்கு அழறடி?” என்று சற்று கோபமாகவே வினவினார்.

​”நான் தான் சொன்னேன்ல அபியைப் பத்தி,” அவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வினவ…

​”சொன்னே… ஆனா அவன் இப்போ எங்கே இருக்கான்னு தெரியாதுன்னும் தானே சொன்ன? சின்ன வயசுல பார்த்தவனை இப்போ எங்கே போய்த் தேட சொல்ற? அந்த வயசுல ஏற்படுற நட்பு, பாசம் எல்லாம் அந்த வயதோட முடிஞ்சிடும்மா. அதையே பிடிச்சுத் தொங்காதே,” என்றார் சாரதா மகளுக்குப் புரியவைக்கும் தொனியில்…

​”அப்படி இல்லம்மா. அது சாதாரண நட்பு மட்டுமே இல்ல. என்னால இப்போ வரைக்கும் அவனை மறக்க முடியலம்மா,” என்றாள் ரிதன்யா கண்களில் கண்ணீருடன்.

அந்த அன்பு, காலத்தின் சோதனைக்கு உட்பட்டும் மாறாமல் இருப்பதை அவளால் உணர முடிந்தது…

​”இது தான் எனக்குப் பயமா இருக்கு ரிதும்மா,” என்று நிதானம் இழந்த சாரதா, மகளின் கன்னத்தைத் தொட்டு, “உன்னோட வாழ்க்கையை நீயே அழிச்சுக்கிற மாதிரி இருக்கு. தெரியாத ஒரு ஆளுக்காக, கல்யாணமே வேணாம்னு சொல்றியே? நாளைக்கு ஒரு குடும்பம், கணவன், குழந்தைகள்னு ஒரு வாழ்க்கை இருக்குல்ல? அந்தப் பந்தங்கள் உனக்கு அபியை மறக்க உதவும். நீ நல்லா வாழணும்னு தான் நாங்க ஆசைப்படுறோம். எங்க பேச்சைக் கேளும்மா,” என்று உருக்கத்துடன் பேசினார்…

​ரிதன்யா, தாயின் அன்பையும் கவலையையும் உணர்ந்தாலும், மனம் மட்டும் அபியைத் தேடும் பிடிவாதத்தை விடவில்லை…

​”நாம தேடலாமே?” என்றாள் இன்னும் அதே நம்பிக்கையுடன்.

​”எப்படித் தேடுறது நீயே சொல்லு?” அவர் வினவ, அவளிடம் அதற்கான பதில் இல்லை. ஒரு தெளிவான திட்டம் இல்லை என்பதை ரிதன்யாவின் அமைதி வெளிப்படுத்தியது…

​அவரோ மேலும், “அந்த அபி உன் முன்னாடி வந்து நின்னாலும் உன்னால கண்டுபிடிக்க முடியாது. இதுதான் நிதர்சனம், புரிஞ்சுக்கோ. அவனை மறந்துட்டு ஒரு நல்ல வாழ்க்கையை வாழ ஆரம்பி. நாங்க உனக்குப் பார்க்கும் பையன், உன்னை சந்தோஷமா வச்சுப்பான், உனக்கும் வயசாகிக் கொண்டே போகுது. இனியும் தாமதிக்க வேண்டாம்,” என்று அறிவுரை கலந்த கட்டளையாகப் பேசினார்…

​சாரதா பேசும் ஒவ்வொரு வார்த்தையும், ரிதன்யாவின் மனதைத் துளைத்தன. அபி என்ற ஒருவனைக் காணும் வாய்ப்பே இனி இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள அவள் மனம் மறுத்தாலும், தாயின் வாதங்களில் இருந்த உண்மை அவளைச் சுட்டது. அவள் அந்தச் சமையலறையை விட்டு வெளியேறி, தன் அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டவள்… அலமாரியைத் திறந்து வாட்சைக் கையில் எடுத்தாள்…

அபியைக் கண்டுபிடிக்க இந்த வாட்ச் மட்டுமே அவளுக்கு இருக்கும் ஒரே ஆதாரம். அந்த வாட்சைக் கையில் வைத்துக்கொண்டு, அதில் பொறிக்கப்பட்டிருந்த மங்கலான பெயரின் முதல் எழுத்துக்களை வருடிக் கொடுத்தாள். இந்த வாட்சின் மூலம் அபியின் குடும்பப் பின்னணியையோ அல்லது அவன் இருக்கும் இடத்தையோ கண்டுபிடிக்கலாம் என்று அவள் சிறு வயதில் நம்பினாள்.

ஆனால், இதைமட்டும் வைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது என்பது இப்போது உரைத்தது. அவள் கையில் வைத்திருந்த ஒரு சிறிய, பழைய வாட்ச்சால், இந்த உலகத்தில் எங்கோ இருக்கும் ஒருவனை எப்படித் தேட முடியும்? நம்பிக்கைக்கும் நிஜத்திற்கும் உள்ள இடைவெளி மிக அதிகம் என்பதை அவள் உணர்ந்தாள். அந்த வாட்சை மார்போடு அணைத்தபடி, இத்தனை வருடத் தேடலின் முடிவை எண்ணி ரிதன்யா கண்ணீர் வடித்தாள்…

​நாட்கள் கடக்க, சித்தார்த்திற்கு தெரியாமலேயே அவனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்திருந்தனர் அவன் தாய் தந்தை. மகன் திருமணத்தில் நாட்டம் இல்லாமல் இருந்தாலும் ஜோசியரின் வார்த்தை மீதான பயத்தால், வாசுதேவன் திருமண ஏற்பாடுகளை அவசரமாகத் தொடங்கினார்…

​அவர்கள் ஒரு எண்ணத்தில் இருக்க, சித்தார்த்திற்கோ சில நாட்களில் வர இருக்கும் தன் தாய் தந்தையின் முப்பதாம் ஆண்டு திருமண விழாவை விமர்சையாகக் கொண்டாட வேண்டும் எனும் ஆசை எழ, அதனைப் பற்றி தனது தாயிடம் பேசினான்…

​அவரோ, “அதெல்லாம் எதுக்குப்பா?” என்று சொல்ல… ​”எனக்கு ஆசையா இருக்கும்மா. அப்பாகிட்ட கேளுங்க,” என்றான்…

​”நீயே கேட்டுடேன். அவர்கிட்ட நீ சரியா பேச மாட்டேங்கிறேன்னு ஒரே புலம்பல்,” என்று கூற… ​”என்ன திடீர்னு? ஆரம்பத்துல இருந்தே நாங்க இப்படித்தானே?” என்று கேட்டவனோ,..”நீங்களே கேட்டு சொல்லுங்க” என்பதோடு நகர்ந்து விட்டான்.,..

அன்றைய இரவு தெய்வானை கணவனிடம் இதனைப் பற்றிக் கூற… வாசுதேவனோ, “ஏன் இதை அவன் என்கிட்ட வந்து கேட்க மாட்டானாமா?” என்றார் தனது வழமையான கண்டிப்பிற்க்குப் பின்னால் இருந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தியபடி…

​”நீங்கதானே ஆரம்பத்துல இருந்து கண்டிச்சு வளர்த்தீங்க. அதான் இப்போ உங்ககிட்ட மனம் விட்டுப் பேசத் தயங்குறான். ஆனா, அவன் மனசுல உங்க மேல எவ்வளவு பாசம் இருக்குன்னு இந்த விஷயத்தைப் பார்த்து புரிஞ்சிக்கோங்க, உங்க மேல நிறைய பாசம் இருக்குங்க, ஆனா வெளிக்காட்ட மாட்டேங்கிறான்” என்றார் தெய்வானை வாசுதேவனின் கைகளைப் பிடித்து…

​”என்னவோ போ! அவனுக்கு அவ்வளவு பெரிய ஆசை இருக்கும்போது, நான் வேணாம்னு எப்படிச் சொல்றது? சரி, ஏற்பாடு பண்ணச் சொல்லு…” என்றார் வாசுதேவன். மகனிடமிருந்து எதிர்பாராதவிதமாகக் கிடைத்த இந்த அன்பு வெளிப்பாடு, அவருக்குக் கிடைத்த ஒருவித அங்கீகாரமாகத் தோன்றியது…

சித்தார்த், தனது நிறுவனத்தின் அதிகாரிகளைக் கொண்டு விழாவிற்கான ஏற்பாடுகளைத் தொடங்கி இருந்தான், வாசுதேவனும் தெய்வானையும் தங்களின் உறவினர்கள் மற்றும் நட்பு வட்டாரத்தில் அழைப்பு விடுவிக்க, விருந்துப் பத்திரிக்கைகள் பலரிடம் போய்ச் சேர்ந்தன…

அந்த நேரம் தான் வாசுதேவன் தற்செயலாக மாணிக்கத்தையும் சந்திக்க நேரிட்டது. மாணிக்கத்தின் தமையனின் நண்பன் தான் வாசுதேவன். அந்த முறையில் வாசுதேவனை மாணிக்கத்திற்க்கு நன்கு தெரியும், மாணிக்கத்தின் தமையன் இப்போது உயிரோடு இல்லை. அவர் மறைவிற்குப் பிறகு, அவர் குடும்பம் தனியாக ஒதுங்கிவிட்டது, ஆனால் தமையன் மூலமாக வாசுதேவனுடன் அவருக்கு இருந்த பழைய அறிமுகம், இன்று அவர்களுக்குள் மீண்டும் ஒரு தொடர்பை உருவாக்கியது…

வாசுதேவன் மாணிக்கத்தை ஒரு ரெஸ்டாரண்டில் தான் பார்த்தார். பல மாதங்களுக்குப் பிறகு சந்தித்த இருவருக்கும் ஆனந்த அதிர்ச்சி தான்…

​”என்ன மாணிக்கம், ஆளையே பார்க்க முடியல. ரொம்ப பிஸியா?” என்று வாசுதேவன் இயல்பாக வினவ, மாணிக்கமும் மரியாதையுடன் பதிலளித்தார்…

​பேச்சின் இடையே, வாசுதேவன் தன் திருமண ஆண்டு விழாவைப் பற்றி கூறியவர்,.. “எனக்கும் தெய்வானைக்கும் முப்பதாவது திருமண ஆண்டு விழா. என் பையன் சித்தார்த் தான் எல்லாத்தையும் ரொம்ப கிராண்டா ஏற்பாடு பண்ணிருக்கான்.”
​தனது மகனின் பிரம்மாண்டமான ஏற்பாடுகளை விவரித்த வாசுதேவன், அவரை குடும்பத்தோடு கட்டாயம் வருமாறு அழைக்க, மாணிக்கமும் நிறைவான புன்னகையோடு தலையசைத்தார்…

​”தலையாட்டிட்டு வந்திடாம இருந்திடாத மாணிக்கம். என்னோட குடும்பத்தை உனக்கு அறிமுகப்படுத்தவும் வாய்ப்பு கிடைக்கல. இந்த சான்ஸை பயன்படுத்திகிட்டு நம்ம குடும்பத்தை அறிமுகப்படுத்திக்கலாம். இத்தனை காலம் பிஸ்னஸ் பிஸ்னஸ்னு அது பின்னாடியே ஓடிக்கிட்டு இருந்துட்டேன். யாரையும் நினைவு வச்சுக்க கூட டைம் இல்ல. இந்த ஃபங்ஷன்ல எல்லாரும் ஒன்னா கலந்துக்கலாம்,” என்று வாசுதேவன் உறுதியாகக் கூற…

​வாசுதேவனின் இந்த அணுகுமுறை மாணிக்கத்திற்கு ஒருவித மரியாதையைத் தந்தது. “கண்டிப்பா அண்ணா. மறக்காம வந்துடுறோம்,” என்றார் மாணிக்கம். அதன் பிறகு இருவரும் போன் நம்பர் பரிமாறிக் கொண்டு விடைபெற்றுக் கொண்டனர்,…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page