அத்தியாயம் – 9
வாசுதேவனின் வீட்டு விழாவிற்காகத்தான் தயாராகிக் கொண்டிருந்தனர் மாணிக்கத்தின் குடும்பம்….
அந்த நேரம்… ”அப்பா, நானும் வந்து தான் ஆகணுமா?” என்று கேட்டாள் சரண்யா…
”ஆமாடா… உங்க எல்லாரையும் பார்க்கணும்னு வாசு அண்ணாக்கு ஆசை. குடும்பத்தோட வரணும்னு சொன்னாரு. போயிட்டு வந்திடலாமே,” என்றார் மாணிக்கம் கட்டாயப்படுத்தும் தொனியில்லாமல்…
”அம்மாவையும் அக்காவையும் மட்டும் அழைச்சிட்டு போங்களேன். எனக்கு அசைன்மென்ட் எழுதுற வேலை இருக்கு,” சரண்யா சொல்ல…
அப்போது தலையிட்ட ரிதன்யா, “அவ வரலைனா நானும் வரலப்பா,” என்று வேகமாகச் சொன்னாள்…
சரண்யா தமக்கையை செல்லமாக முறைக்க, அவளோ ஈ என்று பற்களைக் காட்டினாள்…
”ஏன்க்கா இப்படி? அப்புறம் அந்த சொட்டைத் தலை புரொபசர் கிட்ட நான் தான் திட்டு வாங்கணும்,” சரண்யா இப்போது பாவமான முகத்துடன் சொல்ல…
”டோன்ட் வொர்ரி… நைட் முழுக்க உட்கார்ந்து நான் உனக்கு எழுதி தரேன்,” என்றாள் ரிதன்யா.
இதை கவனித்துக் கொண்டிருந்த சாரதா “என்னடி, இன்னைக்கு அதிசயமா இருக்கு? எப்போதும் அவ தான் எங்கேயாவது போக ரெடியானா வர மாட்டேன்னு நச்சரிப்பா. இப்போ இவ நச்சரிக்கிறா,” என்று புலம்பினார்,…
”அதானே! என்னக்கா இன்னைக்கு சைலண்டா ரெடியாகி வந்துட்ட?” என்றாள் சரண்யாவும் சந்தேகமாக..
”அப்பா என்னைப் பத்தித் தெரிஞ்சு ரெண்டு நாள் முன்னாடியே சொல்லிட்டாரு. அதனால என்னால மறுக்க முடியல,” ரிதன்யா கூற…
”ஓஹோ…. அப்போ அப்பா ஏதோ ஐஸ் வச்சி இருக்காரு. அக்காவுக்கு மட்டும் என்னப்பா வாங்கி கொடுத்தீங்க?” என்று சரண்யா மாணிக்கத்திடம் வினவ… சிரித்தவரோ, “ஒன்னும் இல்லையே,” என்றார்…
”உங்க சிரிப்பிலேயே பொய் சொல்றீங்கன்னு தெரியுது, சொல்லுங்க,” அவள் வினவ…
”ம்ம்… எனக்கு டைமண்ட் நெக்லஸ் வாங்கி கொடுத்தாரு, போதுமா?” என்றாள் ரிதன்யா…
”அதெல்லாம் இருக்காது. அதையெல்லாம் நீ விரும்ப மாட்டன்னு எனக்குத் தெரியும். ஒழுங்கா பொய் சொல்லாம சொல்லுக்கா, ஐஸ்கிரீம் தானே அப்பா வாங்கி கொடுத்தாரு?” என்று சரண்யா வினவ… “இல்லையே,” என்றாள் அவள் மழுப்பலாக…
”பொய் சொல்லாதக்கா,” அவள் சொல்ல…
“என்னடி இப்போ உனக்குப் பிரச்சனை? ஆமா ஐஸ்கிரீம் தான் வாங்கிக் கொடுத்தாரு. அதுக்கு என்ன இப்போ?” என்றார் சாரதா மகள்களின் செல்ல சண்டையில் தலையிட்டபடி…
”அப்போ எனக்கு?” என்று அவள் பாவமாகக் கேட்க… “உனக்கு சைனஸ் ப்ராப்ளம் இருக்கு, சாப்பிடக் கூடாதுன்னு தெரியாதாடி?” என்றாள் ரிதன்யா.
”அதெல்லாம் முடியாது எனக்கும் வேணும்,” அவள் சிறு பிள்ளை போல் பிடிவாதம் செய்ய… ”அப்பா, நீங்களே சமாளிச்சுக்கோங்க,” என்று தந்தையை மாட்டிவிட்டு ரிதன்யா நகர்ந்து விட…
”இப்படியெல்லாம் தனியா விட்டுப் போகக் கூடாது ரிதும்மா,” மாணிக்கம் சொல்ல… சாரதாவோ நெற்றியில் அறைந்து கொண்டு தயாராகச் சென்றுவிட்டார்…
அதன் பிறகு இளைய மகளிடம் மாட்டிக் கொண்டு விழித்தார் அந்த அன்புத் தந்தை. இந்த இனிமையான சலசலப்புடன் மாணிக்கத்தின் குடும்பம் வாசுதேவன் வீட்டு விழாவிற்காகப் புறப்பட்டது…
வாசுதேவனின் மாளிகை போன்ற வீடு, அந்த இரவு நேரத்தில் மின்விளக்குகளின் அலங்காரத்தில் ஜொலித்தது. வானத்தில் நட்சத்திரங்கள் மின்ன, பூமியில் அந்த மாளிகை அதனினும் பிரகாசமாகப் பிரகாசித்தது. ஒவ்வொரு சாளரத்திலும் தெரிந்த பிரகாசமான விளக்குகள், அதன் செல்வச் செழிப்பைக் காட்டின. வாசலில் கட்டப்பட்டிருந்த வண்ணமயமான தோரணங்கள், செதுக்கப்பட்ட மர வேலைப்பாடுகள், பிரம்மாண்டமான நுழைவாயில் என அனைத்தும், ஒரு ராஜ மாளிகையின் கம்பீரத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தின…
வீட்டின் முன்னால் இருக்கும் விசாலமான பகுதியில், விழாவிற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாகச் செய்யப்பட்டிருந்தன. நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற பந்தல்கள், உள்ளே இருந்த மெல்லிய வெளிச்சம், விருந்தினர்கள் அமர வசதியாகப் போடப்பட்டிருந்த மேசைகளும் நாற்காலிகளும், அவற்றின் மீது மின்னிய பூந்தொட்டிகள் என அனைத்தும் ஒரு நட்சத்திர ஹோட்டலின் தரத்திற்கு நிகராக இருந்தன. மேடையின் ஒரு ஓரத்தில், மெல்லிய இன்னிசையை இசைக்க ஒரு இசைக்குழு தயாராக இருந்தது…
விழாவிற்கு, நகரின் முக்கியப் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் வாசுதேவனின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரும் திரண்டிருந்தனர்..
ஆண்களின் உடைகளில் தெரிந்த கம்பீரமும், பெண்களின் ஆடைகளில் ஜொலித்த ஆபரணங்களும், விழாவின் தரத்தைக் காட்டின. சிரிப்பும், கலகலப்புமான பேச்சுகளும், வாழ்த்துகளும் அந்த இடத்தைச் சூழ்ந்திருந்தன. ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் வாழ்த்தி, வாசுதேவன் – தெய்வானை தம்பதியின் முப்பதாம் ஆண்டு திருமண விழாவைச் சிறப்பித்துக் கொண்டிருந்தனர்…
மாணிக்கத்தின் குடும்பமும் அவர்களின் வீடு வந்து சேர்ந்தனர். பிரதான நுழைவாயிலின் வழியாக உள்ளே வந்த அவர்கள், அங்கு நிலவிய பிரம்மாண்டத்தைப் பார்த்து, ஒரு கணம் பிரமித்து நின்றனர்…
அந்த வீட்டைப் பார்த்து, அவர்களின் மகள்கள் மட்டும் அல்ல, அவர்களுமே அசந்து போய் நின்றுவிட்டனர். இது ஒரு சாதாரண வீட்டு விழா அல்ல, பெரும் பணக்காரர்களின் உலகம் என்பதை அவர்கள் உடனடியாக உணர்ந்தனர்…
’அம்மாடியோவ் இது வீடா இல்லை அரண்மனையா? நல்லவேளை வந்தேன், இல்லைனா இந்த மாதிரி அரண்மனை வீட்டை நேர்ல பார்க்கிறதை மிஸ் பண்ணி இருப்பேன்’ என்று நினைத்துக் கொண்டாள் சரண்யா,..
ரிதன்யாவிற்கோ, உள்ளே செல்லவே தயக்கம். இவ்வளவு ஆடம்பரமான இடத்தில், தான் ஒரு அந்நியரைப் போல் உணர்வதாக அவளுக்குத் தோன்றியது.
மேலும், அங்கே சுற்றிக் கொண்டிருந்த ஆடவர்களுள் யாரோ ஒருவன் அபியாக இருக்கலாம் என்ற நப்பாசை இருந்த போதும், இந்த பிரம்மாண்டம் தன்னுடைய அபியின் உலகமாக இருக்க முடியாது என்ற எண்ணம் அவளை சுற்றி இருப்பவர்களை பார்க்கவே தயங்க வைத்தது…
மாணிக்கமுமே முதல் முறையாக வாசுதேவனின் வீட்டிற்கு வருகிறார். இத்தனை பெரிய மாளிகையைக் கண்டதும், அவருக்குள்ளும் ஒரு சிறு தயக்கம் ஏற்பட்டது உண்மையே, ஆனால் அதெல்லாம் வாசுதேவனை கண்ட பின் காணாமல் போய்விட்டது…
மாணிக்கத்தைக் கண்ட வாசுதேவன், மற்ற விருந்தினர்களிடம் இருந்து விலகி, அவரையும் அவர் குடும்பத்தையும் ஆர்ப்பாட்டமாக வரவேற்றார், தனது மனைவி தெய்வானையை அறிமுகம் செய்து வைத்தார், மாணிக்கமும் தனது குடும்பத்தை அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார்,…
தெய்வானை… ரிதன்யா, சாரதா, சரண்யா ஆகியோரைக் கனிவுடன் பார்த்து, அவர்களை உபசரித்தார். ரிதன்யாவைப் பார்த்ததும், தெய்வானைக்கு ஏனோ மிகவும் பிடித்து போய்விட்டது, அவளது ஆர்ப்பாட்டம் இல்லாத அழகும் மென்மையான பேச்சும் அவரை வெகுவாய் ஈர்த்தது…
”உங்களுக்கு ஒரு பையன் இருந்தான்ல?” மாணிக்கம் வினவ… ”ஆமா மாணிக்கம். இரு கூப்பிடுறேன்,” என்ற வாசுதேவன், மகனை அந்தக் கூட்டத்தில் தேட… அவனோ அவர் பார்வையில் படவில்லை. விழா ஏற்பாடுகளில் பிஸியாக சுற்றிக் கொண்டிருந்தான்…
அதனை புரிந்து கொண்ட மாணிக்கம்… ”பிஸியா இருக்காரு போல. வரும்போது பார்த்துக்கலாம்,” என்று சொல்ல…
வாசுதேவனுக்கு வந்திருக்கும் விருந்தினர்களை உபசரிக்கும் கடமை இருந்ததால், மகனைத் தேடுவதை நிறுத்தியவர், சர்வரிடம் சொல்லி பானம் மற்றும் சிற்றுண்டிகளைக் கொண்டு வர சொல்லி உபசரிப்பில் ஈடுபட்டார்…
மாணிக்கத்தின் குடும்பம், அந்த உயர்தரமான சூழலுக்குள் மெதுவாகத் தங்களை இணைத்துக் கொள்ள ஆரம்பித்தனர்,..
ரிதன்யாவின் கவனம் மட்டும், இன்னும் அந்த விழாவுக்குள் வரவில்லை. இத்தனை ஆடம்பரத்திற்கும் மத்தியில், தன் அபி எப்படி இருப்பான்? அவன் தன்னைத் தேடி வருவானா? என்ற பழைய ஏக்கமே அவளது கண்களில் நிறைந்திருந்தது…
”அக்கா, வரியா? நாம அப்படியே ஒரு சுத்து சுத்திட்டு வரலாம்,” என்று சரண்யா ஆசையாக அழைக்க… “சும்மா இருடி, அதெல்லாம் வேண்டாம்,” என்றாள் ரிதன்யா. அந்தச் சூழலில் அத்தனை பேருக்கு மத்தியில் சுற்றுவதற்கு அவளுக்குத் தயக்கம் இருந்தது…
அவர்கள் கூறியது தெய்வானையின் காதில் விழுந்தது, ரிதன்யாவின் தயக்கத்தைப் புரிந்துகொண்டவர், “இது உங்க வீடு மாதிரிமா, போய் பாருங்க,” என்று கனிவுடன் கூறினார்…
தெய்வானையின் அந்த அன்பான வார்த்தைகள், ரிதன்யாவிற்கு ஆறுதலாக இருந்தது. அதன் பிறகு அவளாலும் மறுக்க முடியவில்லை.
”தேங்க்ஸ் ஆன்ட்டி,” என்று மெல்லிய குரலில் கூறிவிட்டு, சரண்யாவுடன் அந்தப் பிரமாண்டமான அரங்கினுள் மெதுவாக நடந்து சென்றாள்….
சுற்றி இருந்த ஆடம்பரமும், அலங்காரங்களும் அவளைச் சற்றும் ஈர்க்கவில்லை. அவளது தேடல், அத்தனை விருந்தினர்களுக்கு மத்தியிலும், இன்னும் அபி என்ற ஒரு பிம்பத்தின் மீது மட்டுமே குடிகொண்டிருந்தது…
சரண்யா தான் உற்சாகமாக அந்த இடங்களைப் பார்த்து, என்னென்னவோ பேசிக் கொண்டு வந்தாள். ரிதன்யா அவளது பேச்சைக் காதில் வாங்காதது போலவே, கூட்டத்திற்க்குள் தன் பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்தாள்…
அந்த நேரம், உள்ளே இருந்த அறையிலிருந்து வெளியே வந்தான் சித்தார்த். சிகப்பு நிற கோட்-சூட்டில், கட்டுமஸ்தான உடலுடன், ஜெல் வைத்து அடக்கிய கேசம் மற்றும் கூர்மையான விழிகளுடன், ஒரு மாஸ் ஹீரோ போல அவன் கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு வெளிப்பட்டான்…
அவனது கம்பீரமான நடையும், அதிகாரத் தொனியும், சுற்றியிருந்த அத்தனை விருந்தினர்களின் கவனத்தையும் அவன் பக்கம் திருப்பியது…
அவனுடைய கவனம் முழுவதும், விழா ஏற்பாடுகளைப் பற்றிய அதிகாரியின் பேச்சின் மீது இருந்ததால், ரிதன்யா எதிரே வருவதை அவன் கவனிக்கவில்லை…
ரிதன்யாவோ எதிரே வருபவர்களை கவனிக்காமல், தன் தேடலில் ஆழ்ந்திருந்தபடியே, கூட்டத்தின் ஊடே வேகமாகத் திரும்பினாள். அவள் மனம் முழுவதும் ‘அபி’ என்ற பிம்பத்தை மட்டுமே தேடிக் கொண்டிருந்ததால், நிஜ உலகின் அசைவுகளை அவள் உணரவில்லை…
அந்த வேகத்தில், அவள் நேராகச் சென்று சித்தார்த்தின் திடமான மார்பில் ‘படக்’ என்று இடித்து விழுந்தாள்.
சற்றும் எதிர்பாராத இந்தத் தாக்குதலால், அவள் நிலைதடுமாறி கீழே விழப் போன அடுத்த கணம், மின்னல் வேகத்தில், சித்தார்த் தன் கையை நீட்டி, அவளது இடையைப் பிடித்துத் தாங்கினான்…
ரிதன்யா முற்றிலும் அதிர்ச்சியில் உறைந்தாள். ஒரு இரும்புச் சுவர் போல் அவளைத் தாங்கிப் பிடித்திருந்தான் அவன். அவனது திடமான கரங்களின் தொடுதலில், அவளது நீண்ட கால ஏக்கமும், மனதின் அமைதியற்ற தேடலும் திடீரென ஒரு கணம் நின்றுபோனது. கண்களை அகல விரித்துப் பார்த்தவள், அவனது நெருக்கத்தில், சில நொடிகள் சுயநினைவை இழந்தாள்…
அவளது ஆழ்ந்த ஏக்கமும், தேடலும் இப்போது இந்தச் சூடான கைகளின் பிடியில் வந்து நின்றது. இந்த நெருக்கம், இதற்கு முன் எங்கும் உணராத ஓர் அலாதியான உணர்வைத் தந்தது…
அவளைத் தாங்கிய அவன் கைகள், அவளது மெல்லிய இடை அழகையும், மென்மையையும் உணர்ந்தன. எதிர்பாராத இந்தத் தொடுதலில், சித்தார்த்தின் மனதில் ஒரு கணம் ஒருவித சொல்ல முடியாத உணர்வு மின்னி மறைந்தது, அந்த உணர்வின் அழுத்தத்தால், அவன் விழிகள் அவளது விழிகளுடன் ஊடுருவின…
காலம் உறைந்து நின்ற அந்த சில வினாடிகள், சுற்றியுள்ள உலகை மறந்து இருவரும் ஒருவரையொருவர் ஆழ்ந்து நோக்கினார்கள். பிறகு, மெல்ல சுயநினைவு திரும்பிய உணர்வு இருவரையும் சூழ, மெல்ல ஒருவரையொருவர் விட்டு விலகிக் கொண்டார்கள்…
”ஸா.. ஸாரி” தன்னை மீட்டுக் கொண்டு முதலில் ரிதன்யா தான் பேசினாள். அவளது குரல் ஒருவித தடுமாற்றத்துடன் ஒலித்தது…
சித்தார்த்தால் உடனடியாக வார்த்தைகளை மீட்க முடியவில்லை. அவள் கண்களைப் பார்க்காமல், அங்கிருந்து விலகிச் செல்ல முயலும் ஆவேசத்தைத் தன்னுள்ளே அடக்கிக் கொண்டு,… “இட்ஸ் ஓகே” என்றவன் அவளை தாண்டி நடந்தான்,..
சில அடிகள் எடுத்து வைத்தவன், ஏதோ ஒருவித உள்ளுணர்வின் தூண்டுதலால், சட்டென்று திரும்பி அவளைப் பார்த்தான். அந்தக் கணம், அவளும் அதேபோல் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
இருவருக்கும் இடையே மீண்டும் அதே இனம் புரியாத ஆழமான உணர்வு ஒரு மின் அலை போலப் பாய்ந்தது. அந்த பார்வையில் வார்த்தைகளால் பேச முடியாத ஒரு மௌன ஒப்பந்தம் நிகழ்ந்தது…
அந்தப் பார்வையின் தீவிரம் தாங்காமல், ஒரு கனத்த பெருமூச்சுடன் சித்தார்த் தன் பார்வையை விலக்கிக் கொண்டு வேகமாக நடக்கத் தொடங்கினான்.
அவன் சென்று மறையும் திசையையே சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தவளும் அதேபோல ஒரு கனத்த பெருமூச்சுடன் யதார்த்தத்திற்குத் திரும்பினாள்…