அத்தியாயம் – 11
அன்றைய இரவு, இருவரும் உறக்கத்தைத் தொலைத்திருந்தாலும், தங்களுக்குள் ஏற்பட்டிருந்த அந்தப் புரியாத உணர்வு ஒருவித அச்சத்தையும், பிடிப்பின்மையையும் கொடுத்தது. அதைத் தவிர்க்கும் நோக்கில், தங்களை முழுவதுமாகக் கட்டுப்படுத்திக் கொண்டு, இருவருமே அதனை பற்றி நினைக்கக் கூடாது என்று ஒரு திடமான முடிவை எடுத்தனர்…
அதே போலவே, மறுநாள் காலையில் அலுவலகம் புறப்பட்ட சித்தார்த், தன்னுடைய சோர்வை மறைத்துக் கொண்டு, தன்னை முழுவதும் வேலைக்குள் புகுத்திக் கொண்டான். அவள் நினைவுகளை நினைக்காமலிருக்க அவன் கடுமையான முயற்சி எடுத்தான் ஒருவேளை ரிதன்யாவின் நினைவு வந்து எட்டிப் பார்த்தாலும், அதை உடனடியாக ஒதுக்கித் தள்ளிவிட்டு, தன் வேலையில் மட்டுமே ஆழ்ந்தான்…
அதே நேரத்தில், மறுநாள் காலையில் ரிதன்யாவும் சித்தார்த்தின் நினைவுகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளப் போராடினாள்…
அவள் சித்தார்த்தைப் பற்றி யோசிப்பதையே நிறுத்திவிட்டதாகத் தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். அவள் தன் வழமையான வேலைகளைத் துவங்கினாலும், தனிமையில் கிடைக்கும் ஒவ்வொரு நொடியையும், அந்த உணர்வைப் பற்றிய சிந்தனைகள் ஆக்கிரமிக்க வந்தன. ஆனால், சித்தார்த்தைப் போலவே, அந்த நினைவுகளை வலுக்கட்டாயமாக வெளியே தள்ளிவிட்டு, அவள் தன்னை அன்றாடப் பணிகளுக்குள் தீவிரமாகப் புதைத்துக் கொண்டாள்…
இப்படியாக, ஒரு விசித்திரமான இனம் புரியாத ஈர்ப்பு இருவர் மனதிலும் இருந்தும், இருவரும் அதை நிராகரித்து, தங்கள் வேலைகளில் மட்டுமே கவனத்தைச் செலுத்தத் தீர்மானித்தனர்…
இங்கே, சித்தார்த்தும் ரிதன்யாவும் தங்களுக்குள் ஏற்பட்ட அந்த உணர்வுகளிலிருந்து விலகும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்க, விதி வேறு ஒரு திசையில் நகர்ந்தது…
விழாவில் ரிதன்யாவைக் கண்டதுமே தெய்வானைக்கு மிகவும் பிடித்துவிட்டது அல்லவா! அவளது அடக்கமான அழகும், ரிதன்யா தங்கள் குடும்பத்தின் மீது காட்டிய மரியாதையும் தெய்வானையின் மனதைக் கவர்ந்தன. ‘இவளை ஏன் தன் மகனுக்கு மனைவியாக்கக் கூடாது?’ என்ற ஆசை அன்று அவருக்குள் ஆழமாக எழுந்தது…
அன்று இரவு, தன் கணவர் வாசுதேவன் அருகில் படுத்திருந்தபோது, தயக்கத்துடன் தன் விருப்பத்தை அவரிடம் வெளிப்படுத்தினார்,..
“இன்னைக்கு மாணிக்க அண்ணனோட பெரிய பொண்ணு ரிதன்யாவைப் பார்த்தீங்களாங்க, அமைதியான அழகான பொண்ணு, அவளை நம்ம வீட்டு மருமகளாக்கிக்கனும்னு எனக்கு ஆசையா இருக்கு,” என்று தன் மகனின் திருமண முயற்சிக்குத் தெய்வானை முதல்கட்ட வேலையை ஆரம்பித்தார்…..
வாசுதேவன் யோசனையுடன், “ம்ம்… நானும் கவனிச்சேன். நல்ல குணமுள்ள பொண்ணுதான், ஆனா நம்ம வசதிக்கு சமமா அந்தக் குடும்பம் இல்லைன்னு தோணுது,” என்றார்….
தெய்வானை உடனடியாக… “என்னங்க நீங்க! வசதியா முக்கியம்? மாணிக்கம் அண்ணன் குடும்பம் ஒன்னும் ரொம்ப ஏழ்மை நிலையில இல்ல. இருந்தாலும் பரவாயில்லைன்னு தான் நான் சொல்லுவேன். ஒரு பக்கம் நீங்க கோடி கோடியா சம்பாதிச்சு வச்சிருக்கீங்க. இன்னொரு பக்கம் உங்க பையன் சம்பாதிக்கிறான். இதுக்கு மேல நமக்கு இன்னொரு வீட்ல இருந்து வர காசு வேணுமாங்க? நம்ம பையனுக்கு குணமான மனைவி அமைவதுதான்ங்க முக்கியம்,” என்று ஆணித்தரமாகக் கூறினார்…
மனைவியின் வாதத்தில் இருந்த நியாயத்தை உணர்ந்த வாசுதேவன், “நீ சொல்வதும் சரிதான். சரி, நான் மாணிக்கத்துகிட்ட பேசிப் பார்க்கிறேன்,” என்று சொல்ல, தெய்வானைக்கோ எல்லையில்லாத சந்தோஷம்! மகனுக்கான முதல் அடியை எடுத்து வைத்த திருப்தி அவருக்குள் நிறைந்தது…
ஒரு வாரம் கடந்திருந்தது. இந்த ஒரு வார கால கட்டத்தில் ரிதன்யாவை பற்றி மெல்ல விசாரிக்க ஆரம்பித்தார் வாசுதேவன், தன் வீட்டிற்கு மருமகளாக வரப்போகும் பெண்ணைப் பற்றி விசாரிக்கும் கடமை அவருக்கு இருக்கிறதல்லவா? வெறுமனே உணர்ச்சிவசப்பட்டுத் திருமணத்தைப் பேசி முடித்துவிட முடியாதே!
விசாரித்த வரையில் ரிதன்யாவைப் பற்றி எந்தக் குறையும் இல்லை என்ற செய்தியே அவருக்குக் கிடைத்தது. அவளது கல்வி குணநலன்கள் மற்றும் பொதுவான நற்பெயர் குறித்து விசாரித்தபோது, அனைத்தும் திருப்தியளிப்பதாக இருந்தது…
வாசுதேவன் தன் விசாரணையில் திருப்தியடைந்த நிலையில், மாணிக்கத்தை நேரடியாக சந்தித்து
திருமண விஷயத்தை பற்றி கூறினார்,…
இந்த எதிர்பாராத கோரிக்கையைக் கேட்டு மாணிக்கத்திற்குக் கை கால்கள் நடுங்கின. உள்ளுக்குள் எல்லை இல்லா சந்தோஷம் எழுந்தாலும், சில வினாடிகளில் வாசுதேவனின் வசதியும், தங்கள் குடும்பத்தின் நிலையையும் எண்ணி அவர் மனதிற்க்குள் ஒரு பெரிய உறுத்தல் வந்தது…
“நீங்க கேட்டதுல எனக்கு சந்தோஷம் அண்ணா, ஆனா எங்க குடும்பத்துக்கும் உங்க வசதிக்கும் நிறைய வேறுபாடு இருக்கு” என்று தன் உள்ளத்து உறுத்தலைத் தயக்கத்துடன் வெளிப்படுத்தினார் மாணிக்கம்…
மாணிக்கத்தின் தயக்கத்தைக் கேட்ட வாசுதேவன், புன்னகையுடன் கையை உயர்த்தி அவரைத் தடுத்து… “உன்னோட பயம் எனக்குப் புரியுது மாணிக்கம், ஆனா நான் உனக்கு ஒன்னு சொல்றேன், வசதி என்பது கணக்குல சேரும் ஒரு வெறும் எண்ணிக்கை மட்டும் தான், அது மனித உறவுகளுக்குள்ள ஒருபோதும் வரக் கூடாது, என் மகனுக்கு எங்களது சொத்து இருக்கிறது, அவனோட உழைப்பில் சம்பாதித்தது இருக்கிறது. எங்களுக்கோ, பணம் இனி தேவை இல்லை. எங்களுக்குத் தேவை, நல்ல குணமும், குடும்பப் பாசமும் உள்ள ஒரு மருமக தான். அது உன் மககிட்ட இருக்குனு என் மனைவியும் நானும் நம்புறோம்
அதனால, நீ அந்தக் கவலையை விடு, உங்க மக எங்க வீட்ல எங்க மகளா இருப்பா, எங்க குடும்பத்துக்கு வந்தா அவ நிச்சயம் சந்தோசமா இருப்பான்னு நான் என் குடும்பத்தோட சார்பா உனக்கு உறுதியளிக்கிறேன்,” என்று வாசுதேவன் உறுதியுடன் கூறினார்..
வாசுதேவனின் உறுதியான, பாசம் நிறைந்த வார்த்தைகளைக் கேட்ட மாணிக்கத்தின் மனதில் இருந்த அத்தனை தயக்கமும் உடனடியாக நீங்கியது. பணம் என்பதைப் பொருட்படுத்தாமல், தன் மகளின் குணத்திற்க்கு மட்டும் மதிப்புக் கொடுத்த வாசுதேவனின் நல்லெண்ணம், அவர் மனதில் இருந்த அனைத்து உறுத்தலையும் உடனடியாக நீக்கியது…
மாணிக்கம் கண்களில் நீர் திரள, கைகளைக் கூப்பி, நெகிழ்ச்சியுடன், “உங்க மனசுதான் அண்ணா பெரிய மனசு. உங்க நம்பிக்கை வீண் போகாது. உங்க மகனுக்கு ரிதன்யாவை மணமுடிக்க எனக்கு முழு சம்மதம்,” என்று உணர்ச்சிப் பெருக்குடன் சம்மதித்தார்….
தன் மகளுக்கு இவ்வளவு பெரிய, அதே சமயம் குணத்தில் மிகவும் உயர்ந்த குடும்பம் அமைந்ததை எண்ணி அவர் எல்லையற்ற சந்தோஷம் அடைந்தார். அவர் கண்ட கனவு நிறைவேறியது போல இருந்தது…
வீட்டிற்க்கு வந்ததும், மனைவி சாரதாவிடம் இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொண்டார், வாசுதேவன் குடும்பத்தின் உயர்ந்த குணம் தெரிந்த சாரதாவிற்கும் எல்லையில்லா சந்தோஷம்…
“அடடா! தெய்வானை அக்காவுக்கும் வாசு அண்ணாவுக்கும் கூட நம்ம பொண்ணைப் பிடிச்சுப் போச்சா! ரொம்ப நல்ல விஷயம்ங்க. நம்ம பொண்ணு கொடுத்து வச்சவ!” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்…
அன்றே இருவரும் ரிதன்யாவைத் தனியாக அழைத்து, மெதுவாக விஷயத்தைச் சொல்ல, ரிதன்யாவின் காதுகளில் அந்த வார்த்தைகள் இடியாக இறங்கின…
‘அபியை மட்டுமே திருமணம் செய்ய வேண்டும்’ என்ற எண்ணத்தில் இத்தனை நாட்கள் உறுதியாக இருந்தவளுக்கு, இந்தத் திடீர் முடிவு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அவளது முகம் வெளிறிப் போனது. அந்தக் கணம் பெற்றோரின் முன் எதுவும் பேச முடியாமல், தலை குனிந்தபடி அமைதி காத்தவள் பிறகு அறைக்கு வந்து விட்டாள்,..
அன்று இரவு, ரிதன்யா படுக்கச் சென்ற பிறகு, சாரதா மகளின் அறைக்கு சென்றார், அவள் முகமே சரியில்லாதது கண்டு,.. ”என்ன ரிதும்மா ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று சாரதா தெரிந்தும் மென்மையாகக் கேட்டார், அவள் குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் இருப்பாள் என்பது புரிந்து தான் அவளை பார்க்க வந்திருந்தார்,…
ரிதன்யா தன் தாயின் மடியில் தலை வைத்து, “அம்மா… எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்மா” என்றாள்…
அவளது கேசத்தைக் கோதிவிட்டபடி, “உன்னோட படிப்பு முடிந்து ஒரு வருஷம் வரப்போகுது. இப்போவும் கல்யாணம் வேண்டாம்னா வேற எப்போ பண்ணலாம்னு இருக்க?” என்றார்.
”அம்மா… அபி…” என்று அவள் சொல்ல வர, மகள் சொல்ல வருவது புரிந்த சாரதா, அவசரமாய் அவளைத் தடுத்து.. “அன்னைக்கே உனக்கு தெளிவா சொல்லிட்டேன் ரிதுமா! சின்ன வயசுல சந்திச்சவனை இப்போ சந்திக்கிறது முடியாத காரியம். நீ நினைக்கிறது பைத்தியக்காரத்தனம்!” என்று சற்றுக் கடிந்த குரலில் கூற, அவளது கண்கள் கலங்கிப் போனது…
மகளை எழுப்பி அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டவர்,..
“உன்னோட அம்மா அப்பா உனக்கு நல்லது தான் பண்ணுவோம்னு உனக்கு நம்பிக்கை இருக்கா? இல்லையா?” அவள் கண்களைப் பார்த்துக் கேட்டார்…
ரிதன்யா தன் அழுகையை அடக்கிக் கொண்டு ஆம் என்பதாய் தலையசைத்தாள்…
மகளின் உச்சியில் பாசத்தோடு முத்தமிட்டவர்,.. “அப்புறம் என்ன? கண்டிப்பா இந்த வாழ்க்கை உனக்கு நீயே எதிர்பார்க்காத அளவுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் பாரு” என்று அவளது எதிர்காலம் குறித்த நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொன்னார்…
ரிதன்யாவின் உள்ளத்தில் இந்தத் திருமணத்தை முழுமையாக ஏற்க முடியாமல் போனாலும், தன்னை இவ்வளவு பாசமாக வளர்த்த பெற்றோருக்காகவும், அவர்கள் மீது கொண்ட மரியாதைக்காகவும், அவள் இந்த முடிவிற்க்குத் தன் மெளன சம்மதத்தைத் தெரிவித்தாள்…
சாரதா மகளின் அறையை விட்டு வெளியேறியதும், ரிதன்யாவின் கட்டுப்பாட்டுக் கோட்டை உடைந்தது. படுக்கையில் சுருண்டு படுத்துக்கொண்ட அவள், தன் மனம் இன்னமும் ‘அபி… அபி…’ என்று மட்டுமே கூவிக் கொண்திருந்ததை உணர்ந்தாள்…
தான் விரும்பியவனை அடைய முடியாத கையறு நிலையாலும், பெற்றோரின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தாலும், அவளது இமைகள் இறுக்க மூடிக் கொள்ள, கட்டுப்படுத்த முடியாத கண்ணீர் அருவியாய் வழிந்தது. அன்றைய இரவு, இந்தத் திருமண முடிவினால் அவளுக்கு உறக்கம் என்பதே கிட்டாமல் போனது…
தெய்வானை, மகனுக்குப் பெண் பார்த்துவிட்ட விஷயத்தை அவனிடம் தெரியப்படுத்த எண்ணினார். அவன் நிச்சயம் சம்மதிக்க மாட்டான் என்பது அவருக்குத் தெரியும். அதற்காக ‘சரி, போ’ என்று விட்டுவிடவும் முடியாதே..
உதவிக்காக அவர் தன் கணவர் வாசுதேவனிடம் செல்ல.. அவரோ,..
“இவன் இப்போ தான் கொஞ்சம் நெருங்கி வந்திருக்கான். மறுபடியும் தள்ளிப் போயிடப் போறான். நீயே பேசிப் பாரும்மா,” என்று மனைவியிடம் கூறினார்…
வாசுதேவனின் அச்சம் தெய்வானைக்கும் புரிந்தது. மகனின் கோபத்திற்க்கு ஆளாகாமல், அவன் மனதை மாற்றிவிட வேண்டும் என்ற உறுதியுடன், தெய்வானை தானே அவனிடம் பேசிப் பார்க்கலாம் என்று முடிவு செய்தார்…
அன்றிரவு, அலுவலக வேலைகளை முடித்துவிட்டு அவர் மகன் தனது அறையில் ஓய்வெடுக்கச் சென்றபோது, தெய்வானை அவனது அறைக்குள் மெதுவாகச் சென்றார். தாயைக் கண்டதும், சித்தார்த் வாஞ்சையுடன் “வாங்கம்மா,” என்று புன்னகையோடு அழைத்தான்…
அவரும் பதிலுக்குப் புன்னகையோடு, “உ… உன்கிட்ட கொஞ்சம் பேசணும் கண்ணா,” என்றார். அவரது குரலில் ஒருவிதத் தயக்கம் தெரிந்தது…
”நானும் பேசணும்னு நினைச்சேன்மா,” என்ற சித்தார்த் “திலகா அத்தை கால் பண்ணியிருந்தாங்க. அன்னைக்கு ஃபங்ஷனுக்கு வர முடியாம போனதைப்பற்றி ரொம்ப ஃபீல் பண்ணிப் பேசினாங்க. ஏன்மா, மாமா பஹ்ரைன்ல இருந்து கஷ்டப்படுறாரு, இங்கேயே வந்துடலாமே. நாம எல்லாரும் இருக்கோம்ல?” என்று அக்கறையுடன் கேட்டான்…
”அண்ணாகிட்ட பேசினேன்ப்பா. அவருக்கு அங்கேயே பழகிப்போச்சுன்னு சொல்றாரு. என்கிட்டயும் திலகா புலம்பினா. போதாதுக்கு நம்ம திவ்யாவும் பிளஸ் டூ படிச்சுட்டு இருக்காள்ல, இந்தப் படிப்போடு நிறுத்திட்டு, இந்தியாவுக்கு வந்து படிக்க வைக்கலாம்னு நினைக்கிறேன் அண்ணி’ன்னு சொன்னா,” என்றார் தெய்வானை…
திவ்யா என்பது, திலகா-சுரேந்தர் தம்பதி தத்தெடுத்து வளர்க்கும் பெண். அவர்களுக்குக் குழந்தை வரம் கிடைக்காததால், திவ்யா நான்கு வயதாக இருந்தபோது ஒரு ஆசிரமத்தில் அவளைத் தத்தெடுத்துக் கொண்டனர். திவ்யா வந்த பிறகுதான் அவர்களின் வாழ்விலும் உண்மையான வசந்தம் வந்தது…
திலகாவின் குடும்பத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்ததில், தான் பேச வந்த முக்கியமான விஷயமே அவருக்கு ஒரு கணம் மறந்து போனது!
சித்தார்த் இப்படிப் பேச்சை மாற்றிவிட்டானே என்ற லேசான அலுப்பு தெய்வானைக்குள் எழ,.. ஒரு பெருமூச்சை வெளிவிட்டு, மகனின் கையை மென்மையாகப் பிடித்தபடி, “நானும் பேசணும்னு வந்தேன்ல கண்ணா, நான் சொல்ல வந்த விஷயத்தை இப்பவாவது சொல்லட்டுமா?” என்று அவர் திருமணப் பேச்சைத் தொடங்கும் விதமாக ஆரம்பித்தார்…