சந்திரன் தலைமுடியை பற்ற அதில் பதறிய மைதிலி அவனை விடுவிக்கச் சொன்னவுடன் நேத்ரா தடுமாறி விழ சந்திரனிடம்,
“நீ அவளை அடிக்காத தம்பி. நானே இனி அவளை அடிக்கறேன். என்ன திமிரு அவளுக்கு?” எனப் பல்லை கடித்தபடி கூறினாள்.
“இப்பவே போன் போடுடி உன் அம்மாக்கு” என மைதிலி சொல்ல நேத்ரா இன்னும் பதட்டமானாள்.
“ஏய் போடுனு சொல்றேன் இல்ல. இன்னும் என்ன அங்கயே நிக்கற?” என அதட்ட அதில் அதிர்ந்து போனவள் அலைபேசியை எடுத்து டயல் செய்தாள்.
மறுமுனையில் அமுதா நேத்ராவின் எண்ணை பார்த்ததும் சந்தோஷமாக “நேத்ரா” எனக் கூப்பிட அவளுக்குப் பேச்சே வரவில்லை.
“அம்மா…”
“நேத்ரா எப்படி இருக்கற?” என்று கேட்க அவள் என்ன சொல்வது எனத் தெரியாமல் திணறினாள்.
“உங்க அம்மாட்ட சொல்லுடி. நீ என்ன பண்ணேன்னு” என மைதிலி பேசவே விடவில்லை.
அந்தப் பக்கமோ அமுதா கேட்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியவில்லை.
இவள் எதுவும் பேசாமல் இருப்பதைக் கவனித்த மைதிலி “போனை கொடு” எனச் சொல்ல போனை அவளிடம் நீட்டினாள்.
“அண்ணி” என அமுதா கூப்பிட
“உங்க பொண்ணு என்ன நினைச்சிட்டு இருக்கா? போன வாரம் சசி ஊருக்கு வந்தப்பயே டீ போடலன்னு நான் சொன்னேன் இல்ல. அன்னைக்கு நீங்களும் அவ்ளோ தூரம் சொன்னீங்க தானே?”
“இன்னைக்கும் நேத்ரா சசிக்கு டீ கொடுக்கல” எனச் சொல்ல இதைக் கேட்ட அமுதாவோ அதிர்ச்சி அடைந்தாள்.
“என்ன சொல்றீங்க?”
“ஆமா. அந்தப் பசங்களுக்குக் கூடப் பால் தராம கொடுமை பண்றா. இவளை என்னனு கேட்க ஆளில்லாம தானே இவ இந்தத் திமிருல இருக்கா?” என்று அவள் பொரிந்தாள்.
“நான் அவகிட்ட என்னனு கேட்கறேன் அண்ணி. போன குடுங்க” என்று அமுதா சொல்ல நேத்ராவிடம் போனை கொடுத்தாள் மைதிலி.
“எப்போ இருந்து நீ இப்படி இருக்க? வீட்டுக்கு வந்தவங்களுக்கு டீ குடுக்கணும்னு கூடத் தெரியாதா?”
“அம்மா… இல்லம்மா” என அவள் சொல்ல,
“அந்தப் பசங்களுக்குக் கூடக் கொடுக்காம இருப்பியா? அவ்ளோ கொழுப்பாடி” எனத் திட்டி கொண்டே போக நேத்ரா அதிர்ச்சி அடைந்தாள்.
‘அவங்களுக்குத் தான் என்ன பத்தி தெரியாது. ஓகே. நீ கூட ஏம்மா இப்படிப் பேசற?’ என மனதிற்குள் மறுகியவள் வெளியே அமைதியாய் கேட்டு கொண்டிருந்தாள்.
“உங்கம்மா கேட்கறாங்க இல்ல. பதில் சொல்லு” என இந்தப் பக்கம் மைதிலி திட்ட ஆரம்பித்தாள்.
“ம்மா” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தவள் பின் அமைதியானாள்.
‘சொல்ல ஆரம்பித்தால் எல்லாம் சொல்ல நேரிடும். ஏற்கனவே பொய் பேசறன்னு சொல்லிட்டாங்க. இப்போ சொன்னா அம்மாட்டயும் பொய் சொல்றியானு சொல்லுவாங்க. பேசி மட்டும் என்ன ஆகப் போகுது’ என்று யோசித்தவள் அமைதியானாள்.
ஆனால் உள்ளுக்குள் சொல்லொன்னா ரணம் எழ யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
அதற்கும் மைதிலி கண்டித்தாள்.
“உன்னை யாராவது திட்டினா யார் கிட்டயும் பேசாம மூஞ்ச தூக்கி வைச்சிக்குவியா நீ? உன் வீட்டுக்கு வந்தா நீ இப்படி தான் பிஹேவ் பண்ணுவியா?” எனக் கேட்க
‘ஹா… ஹா… இது என் வீடா? யாராவது இங்க நான் இருக்கேன்ற மாதிரி சொல்றாங்களா? எப்போ பார்த்தாலும் பதட்டதோட மட்டும் தான் இருக்கேன்’
‘முன்ன அந்த ஆள் என்ன சொல்லுவானோனு பயந்திட்டு இருந்தேன். இப்போ இது பிரச்சனைய ஸ்டார்ட் பண்ணி விட்டுடுச்சு’
‘அவரு அதுக்கு மேல. இங்க இருந்து எங்கயாவது போய்ட மாட்டோமானு தான் தோணுது. இன்னைக்கு நடந்தத நினைச்சா’ என ஏதேதோ யோசித்தபடி வேலை செய்து கொண்டிருந்தாள்.
அவள் வேலை செய்கையில் நேத்ராவை பார்த்தபடி ஒருவருக்கொருவர் நேத்ராவுக்குத் தெரியாமல் கண்களால் பேசினர்.
பின்னர்ச் சிறிது நேரத்தில் இரவு உணவு பரிமாறப்பட அனைவரும் சாப்பிட்டு முடித்தவுடன் நேத்ரா எல்லாச் சாமான்களையும் விளக்கி விட்டு படுத்தாள்.
இன்றைக்கு விழுந்த அடியில் ஒழுங்காக எந்த வேலையும் செய்ய முடியவில்லை. கஷ்டப்பட்டு அனைத்து வேலைகளையும் அவள் முடித்தாள்.
எல்லாவற்றையும் முடித்து விட்டு அப்பாடா என்று படுத்தவளுக்கு இன்றைய சம்பவங்கள் நினைவில் வந்து கண்களில் கண்ணீர் நிறைந்தது.
பக்கத்தில் சந்திரன் படுத்திருக்க ஓசையில்லாமல் அழுதாள்.
அவளது குமுறலை அவள் தலையணை மட்டுமே கேட்டது.
நேத்ரா அழுது கொண்டிருக்கும் போது அவள் மேல் ஒரு கை விழ திடுக்கிட்டவள் அந்தக் கை செல்லும் இடங்களை உணர்ச்சியற்ற தன்மையுடன் எதிர் கொண்டாள்.
வழக்கம் போல வேலை முடிந்தவுடன் சந்திரன் தள்ளி படுக்க நேத்ராவுக்குத் தான் கோபம் வந்தது.
ஏதேதோ யோசித்தவள் அலாரம் சத்தத்தில் எழுந்து வாசலை பெருக்கி கோலம் போட்டாள்.
அன்று காலை சாப்பிடும் போது மைதிலி கல்யாணத்திற்குச் செல்வது பற்றிய பேச்சை ஆரம்பித்தாள்.
சரவணனின் தங்கை பையனின் கல்யாணம் திருத்தணியில் கோயிலில் அரேன்ஜ் செய்திருந்தார்கள்.
அதைப் பற்றிய விவாதம் நடந்து கொண்டிருந்தது.
“குட்டிமா அடுத்த வாரம் நீ எப்ப வர?”
“நம்ம எப்போ கிளம்புவோம் மம்மி?”
“மேரேஜ் வியாழக்கிழமை. நம்ம இங்க இருந்து புதன் கிழமை காலைல கிளம்பினா தான் சரியா இருக்கும்”
“கொஞ்சம் முன்னாடி கிளம்பினா தான் பசங்கள ரெடி பண்றதுக்கு சரியா இருக்கும் குட்டிமா” என்றவள்
“உன் அண்ணிய என்ன பண்றது? நானும் இவ ஒவ்வொரு மாசமும் நல்ல நியூஸ் சொல்லுவானு பார்க்கறேன். பத்து நாள் ஆனாலும் தூரம் மட்டும் ஆகிடறா. ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து ஏமாற்றமா தான் இருக்கு” எனப் புலம்பியவள்,
“ஹாஸ்பிடல் போகச் சொல்லி சொன்னா உங்க அண்ணாவ ஏதோ செக் பண்ண சொல்லி சொல்றாங்கனு சொல்றா”
“மீ எதுனாலும் அவங்கள செக் பண்ண சொல்லி சொல்லுங்க. அப்படினா அண்ணிய அவங்க அம்மா வீட்ல விட்டறலாம்”
“ஆமா குட்டிமா. எனக்கென்னவோ இந்த மாசம் கன்ஃபார்ம் ஆகிடுமோனு டவுட்டா இருக்கு” என்றவள் ஒரு வழியாக முடிவு செய்து நேத்ராவை அடுத்த வாரத்தில் அவள் அம்மா வீட்டில் விட்டார்கள்.
நேத்ரா சந்தோஷமாக அந்தத் திங்கள் அன்றே அம்மா வீட்டிற்குக் கிளம்பி விட்டாள்.
ஆனால் மைதிலி என்ன சமையல் பண்ண? என்ன பண்ணிட்டிருக்க? என்ற விசாரணை செய்து கொண்டே இருந்தாள்.
‘இங்க வந்து கூட நிம்மதியா விட மாட்டேங்குதே’ என்று யோசித்தவளின் கண்களில் ரமணிச்சந்திரனின் என்றென்றும் உன்னோடு தான் நாவல் கண்ணில் பட்டது.
அதைப் படிக்க எடுத்தவள் கதை சுவாரஸ்யத்தில் முழுவதும் படித்து முடித்து விட்டாள்.
ஆனால் அவளுக்குக் கடைசியில் ஏக்கம் தான் மிதமிஞ்சி இருந்தது.
அந்தக் கதையில் ஹீரோ, ஹீரோயினின் ஆழமான காதல் பற்றி விவரிக்கப்பட்டிருந்தது.
அதுவும் கடைசி அத்தியாயங்களில் என்ன தான் அவளை நம்பாமல் கோபமாகப் போனாலும் ஹீரோ ஹீரோயின் மேல் உள்ள காதலினாலே அவளைத் தேடி வந்து தற்கொலையில் இருந்து காப்பாற்றுவது போல வந்தது.
அந்த அத்தியாயங்களைத் திரும்பத் திரும்பப் படித்தவள் தன்னுடைய வாழ்க்கையை எண்ணி ஏக்கம் கொண்டாள்.
தனது திருமண வாழ்க்கையில் காதல் என்ற ஒரு சொல்லுக்கே இடம் இல்லை என்பது மட்டும் அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது.
தனது வாழ்க்கை மேற்கொண்டு என்ன ஆகுமோ என்று யோசனையில் ஆழ்ந்து போனாள்.
அவளைத் தேடி வந்த அமுதா “இங்க என்ன பண்ணிட்டு இருக்க?” எனக் கேட்ட போது,
“ஒண்ணும் இல்லமா” என்று சொல்லியவள்,
“ம்மா நீ இங்க உக்காரும்மா. நான் கொஞ்ச நேரம் உன் மடில படுத்துக்கறேன்” என்று சொல்ல அமுதா உட்கார்ந்தவுடன் அவள் மடியில் படுத்தவளின் தலையை அமுதா தடவி கொடுக்க அந்தச் செயலில் நேத்ராவின் மனம் அமைதியடைய அப்படியே கண்ணை மூடியவள் உறங்கினாள்.
அதற்கடுத்து நேத்ரா தேவையில்லாமல் எந்த மனக் குழப்பமும் அடையாமல் தன்னை மாற்றிக் கொண்டாள்.
அம்மா வீட்டில் இருக்கற வரையும் ஆவது சந்தோஷமா இருப்போம் என்று முடிவு எடுத்தவளுக்கு அதற்கும் ஆப்பு வந்தது.
“நேத்ரா உன் மாமனார் போன் பண்ணாங்க”
“என்னவாம்மா?”
“இன்னைக்கு மேரேஜ் முடிஞ்சு கிளம்பி வந்திட்டு இருக்காங்களாம். உன்னை கூட்டிட்டு போக” என்று சொல்ல
“என்னமா சொல்ற?” என்று நேத்ரா அதிர்ச்சியானாள்.
“ஆமாடி. உங்க மாமியார் சொன்னாங்கனு சொன்னாங்க”
“ம்மா பொய் சொல்லாதம்மா”
“ஏன்டி நீ வேற? நான் இப்போ தான் உங்க அத்தைக்குப் போன் பண்ணி வர சொன்னேன். அவங்களுக்கு டிபன் பண்ண வேணாம்?”
“அப்போ உண்மை தானா?” என்றவள் யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியானாள்.
நேத்ரா ஊருக்கு போக வேண்டும் என்று சொன்னதிலிருந்து சோகமாகவே இருந்தாள்.
இதைக் கவனித்த பத்மினி, “ஒன்னும் கவலைப்படாத. பத்திரமா போய்ட்டு வா” என அவள் தலையைத் தடவி கொடுத்தபடி தேற்ற நேத்ரா அமைதியானாள்.
மைதிலியை தவிர அனைவரும் வர அவர்கள் சாப்பிட்டவுடன் நேத்ராவை அழைத்துக் கொண்டு கிளம்பினார்கள்.
சந்திரன் காரை மெதுவாக ஓட்ட அது எந்த வித குலுக்கலுமின்றி அமைதியாகச் சென்றது.
‘எதுக்குக் கார் இவ்ளோ ஸ்லோவா போகுது? ஓட்டி வந்த டயர்டோ’ என்று யோசித்தவள் அமைதியாக வேடிக்கை பார்த்தபடி சென்றாள்.
அடுத்த நாள் எப்போதும் போல் விடிய நேத்ரா வேலை செய்து கொண்டிருக்கும் போது அமுதா போன் செய்தாள்.
“ம்மா சொல்லுமா”
“நாள் தள்ளி போனதால தான் உன்னை கார்லயே கூட்டிட்டு போனாங்க நேத்ரா” எனச் சொல்ல
“ஓ… அப்படியா” என்று கேட்டு கொண்டாள்.
“என்ன செஞ்சிட்டு இருக்க?”
“பருப்பு சட்னி மா”
“சரி. சீக்கிரம் செய். நான் வச்சிடறேன்” எனச் சொல்ல சிந்தனையில் ஆழ்ந்தபடி வேலை செய்தாள்.
இவள் வேலை செய்து கொண்டிருக்கும் போது சந்திரன் சமையல் அறையின் உள்ளே வந்தான்.
திருமணத்திற்குப் போய் விட்டு வந்ததில் அவன் அன்று விடுப்பு எடுத்திருந்தான்.
“என்னங்க”
“சொல்லு”
“அது… நம்ம அத்தைய ஏமாத்தறமோனு கஷ்டமா இருக்குங்க”
“இதுல என்ன இருக்கு?”
“இல்லைங்க. ஒவ்வொரு மாசமும் அவங்க எதிர்பாத்திட்டே இருக்காங்க”
“அதுக்கு நம்ம என்ன பண்ண முடியும்? ஏதாவது சொல்லி சமாளி” என்றவன் அந்த இடத்தை விட்டு அகன்றான்.
‘ஒன்னாம் நம்பர் நடிகன்டா நீ. எல்லாத் தெரிஞ்சும் அப்புறம் ஏன் ஒன்னும் தெரியாத மாதிரி அவ்ளோ ஸ்லோவா ஓட்டிட்டு வந்த? எல்லாம் என் தலையையே உருட்டுங்கடா’ என நேத்ரா உள்ளுக்குள் புலம்பினாள்.
இதற்கிடையில் நேத்ரா ஊரில் இருந்து வந்த இரு நாட்களில் தூரம் ஆக அவளுக்குத் தான் தனது மாமியாரை எதிர் கொள்ளக் குற்ற உணர்வாக இருந்தது.
மைதிலியிடம் சொல்ல அவள் மிகவும் ஏமாற்றமாக உணர்ந்தாள்.
அடுத்த இரு நாட்களில் மைதிலி திருமண வீட்டிலிருந்து வந்தாள்.
வந்தவள் நேத்ராவை சமையல் அறையில் அது சரியில்லை, இது சரியில்லை எனத் திட்ட நேத்ராவுக்குத் தான் என்ன செய்வது என்று புரியவில்லை.
‘குறை சொல்லணும்னே சொல்வாங்களோ?’ என்ற யோசனை தான் வந்தது.
அடுத்த நாள் காலை சந்திரன் வேலைக்குச் செல்வதற்காக நேத்ரா காய் அறுத்துக் கொண்டிருக்கும் போது அவளை நோக்கி கத்தி பறந்து வந்தது.
