இதயம் 15

 

அடுத்த நாள் இரவு நேத்ரா காய் வெட்டி கொண்டிருக்கும் போது மைதிலி செல்லுக்குப் போன் வர எடுத்து பேசியவள் அதிர்ச்சியில் உறைந்தாள்.

“என்ன சொல்றீங்க?”

“பாட்டிமா இறந்துட்டாங்க”

“எப்படி?”

“பாத்ரூம் போயிட்டு வரேனு போனாங்க. போயிட்டு வரப்ப கீழ விழுந்துட்டாங்க. அப்புறம் செக் பண்ணா இறந்துட்டாங்கனு சொல்றாங்க” என அமுதா அழ மைதிலி விஷயத்தை நேத்ராவிடம் சொல்ல அவளோ “அம்மா” என்று கதறி அழ ஆரம்பித்தவள் நிறுத்தவில்லை.

அவர்கள் வீட்டிற்குச் சென்ற போது அமுதா நேத்ராவை கூட்டி சென்றவள் அழ ஆரம்பித்தாள்.

பத்மாவதியை கண்ணாடி பெட்டிக்குள் பார்த்த போதும் கூட நேத்ராவுக்கு அவர் ஏதோ தூங்கி கொண்டிருப்பது போலத் தான் தோன்றியது.

அமுதா நேத்ராவை சமாதானப்படுத்த நேத்ராவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. என்ன தான் பார்த்தாலும் கூட அவள் மனம் நம்ப மறுத்தது.

சாந்தமூர்த்திச் சென்னையில் இருந்ததால் அவன் அடுத்த நாள் காலையில் வர பத்மாவிற்கு இறுதி யாத்திரை நடந்தது.

பத்மாவின் நகைகளை வாசவன் கொடுக்க அதை அமுதா எடுத்து வைத்திருந்தாள்.

பத்மாவிற்குச் சாமி கும்பிட்ட ஏழாம் நாள் சாந்தமூர்த்திப் பிரச்சனை பண்ண ஆரம்பித்தான்.

ஊருக்கு கிளம்ப ஆரம்பித்தவன் நேத்ராவை கூப்பிட்டு “பாட்டிமாவோட நகைய வாங்கிட்டு வா” எனச் சொல்ல நேத்ரா அமுதாவிடம் கேட்க அவளோ நேத்ராவிடம் வளையலை கொடுக்கச் சாந்தமூர்த்தி வானத்துக்கும், பூமிக்கும் குதித்தான்.

“மீதி நகை எல்லாம் எங்க?”

“விசாக்கா வாங்கிட்டு போயிட்டாங்க”

“நீ என்ன எங்கம்மா நகைய எனக்குக் குடுக்கறது? நான் தான் குடுக்கணும்”

“இங்க தனியா வெச்சிட்டு இருக்கறது சேஃப் இல்லனு அவங்க எடுத்து போயிட்டாங்க” என அமுதா உறுதியாகச் சொல்ல சாந்தமூர்த்திக் கண்டபடி கத்த நேத்ரா இதற்கான காரணம் புரியாமல் திணறினாள்.

அமுதாவை மாறி மாறி கேள்வி கேட்டு கொண்டிருந்தவன் அவனது சித்தியையும் போன் செய்து திட்டினான்.

விசாலாட்சி பத்மாவதியின் தங்கை. ஏற்கனவே சாந்தமூர்த்தி யாருக்கும் தெரியாமல் சொத்தை பிரித்ததில் கடும் கோபத்தில் இருந்தவர் நகைகளிலும் ஏதேனும் குளறுபடி செய்து விடுவானோ என்று நகைகளை வாங்கிச் சென்று விட்டார்.

அவன் ஏற்கனவே பத்மாவதி நியாபகமாக வளையல் கேட்டிருக்க அது மட்டும் வீட்டில் இருந்தது.

அமுதாவோ ‘இன்னும் இவன் என்னென்ன அடிச்சிட்டு போலாம்னு பிளான் பண்றானோ? ஊருக்கு வந்தப்ப அத்தை கீழ விழுந்தப்ப என்னனு கூடக் கேட்கல. ஆனா வளையல் மட்டும் வேணுமா?’ எனத் திட்டியவள் எதுவும் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க இவளிடம் இருந்து ஒன்றும் வாங்க முடியாது என்று அவளைத் திட்டியபடியே அங்கிருந்து கிளம்பினான்.

“ஏன்மா இதை பத்தி முன்னாடியே சொல்லல?” என நேத்ரா சொல்ல

“நீ ஏதாவது அவங்க கேட்டா எதுவும் ஒளறிட்டா என்ன பண்றது?”

“அதுக்குன்னு சொல்ல கூட மாட்டியா?”

“ஆமாடி. நீ இப்படி தான் அந்த ஆள்ட்ட சொத்த பத்தி உளறின”

“ம்மா நான் என்ன நினைச்சு அந்த ஆள்ட்ட பேசினேன். அந்தப் பொறுக்கிய பத்தி பேசாத” என்று அவள் கடுப்பாக.

“ஆனா உன் சித்தப்பா எப்படி இவ்ளோ மாறினாங்க? பணம்னா இப்படியா? அவங்ககிட்ட இல்லாத பணமா?”

“நிறையப் பேர் இருக்காங்க. செய்ய முடியல. ஹோட்டல்ல வாங்கலாம்னு இப்படி கணக்கு பார்க்கறாங்க. நம்மன்னா இவங்களுக்குக் கேவலம் தான்” என அமுதா புலம்ப

“விடும்மா. தேவையில்லாம யோசிக்காத” எனச் சொன்னவள் அடுத்து என்ன செய்வது எனச் சிந்திக்க ஆரம்பித்தாள்.

பிறகு இரண்டு பேரும் 16ம் நாள் உறவினர்களைக் கூப்பிட்டு சாமி கும்பிட்டவுடன் நேத்ரா கோவைக்குக் கிளம்பினாள்.

உண்மையில் அவளுக்கு அமுதாவை விட்டு செல்ல மனமே இல்லை. ஆனால் சந்திரன் வீட்டில் ஏதேனும் சொல்வார்களோ எனக் கிளம்பி விட்டாள்.

அமுதாவிற்குத் துணையாக மலர்க்கொடி வந்து படுத்துக் கொள்ள நாட்கள் அதன் போக்கில் சென்றது.

நேத்ரா சென்ற முதல் ஒரு வாரம் அமைதியாகச் சென்றது. அவளுக்கு எங்குப் பார்த்தாலும் பத்மாவின் நியாபகமாக இருக்க நேத்ரா திணறி போனாள்.

நேத்ரா வந்த அடுத்த வாரம் சசி அங்கு வர அவளிடம் பேசி கொண்டிருந்தவள்…

“ஏன் அண்ணி இப்படியே எவ்ளோ நாள் இருக்கப் போறீங்க?” எனக் கேட்க நேத்ரா அவளைப் புரியாமல் பார்த்தாள்.

“இன்னமும் கூட வேலை கரெக்டா செய்ய மாட்டேங்கறீங்களே” என்றவள்

“உங்க பாட்டிமா மாதிரி உங்கம்மாவும் திடீர்னு செத்து போயிட்டா என்ன பண்ணுவீங்க?” எனக் கேட்க நேத்ரா அதிர்ச்சியில் உறைந்தாள்.

“இவளுக்கு எல்லாம் தனியா அனுபவிச்சா தான்டி தெரியும். அவன் தலைவலின்னு படுத்தா கூட இவ என்ன எதுனு கேட்க மாட்டா. இவ எல்லாம் தனியா அனுபவிக்கணும்”

“பாட்டிமா இறந்தாங்கனு வீட்டுக்கு போய்ட்டு வந்தா. அதுக்கப்பறமாவது ஒழுங்கா வேலை செய்யறாளா? இனி இவளை பொள்ளாச்சி பக்கமே போக விடக் கூடாது” என்றவள் நேத்ராவின் பக்கம் வந்து அவளை அடித்தாள்.

“இனி உன்னை கேட்க யார் இருக்கா? உங்க பாட்டி என்ன பேச்சுப் பேசினுச்சி. அதான் அமைதியா இருந்தோம். இனி இருக்குடி உனக்கு” என்றவள் இன்னும் அவளை ஒரு அடி வைக்க நேத்ரா எந்தவித உணர்வும் காட்டாமல் இருந்தாள்.

அடுத்த நாள் நேத்ரா அவசரமாகச் சாப்பிட்டவள் கடைசி வாயை சாப்பிட்டுக் கொண்டே உள்ளே செல்ல அதைக் கவனித்த மைதிலி சந்திரனை கூப்பிட்டவள் “அவளை என்னனு கேளு” எனக் கேட்க

“ஏய் இங்க வாடி” எனச் சந்திரன் கூப்பிட நேத்ரா அவன் அருகில் செல்லவும்

“உனக்கு எத்தனை முற சொன்னாலும் புரியாதாடி?” என்றவன் அவளை ஓங்கி அறைய அவள் தடுமாறி கீழே விழுந்தாள்.

“சொல்றத கரெக்டா ஃபாலோ பண்ணு. இல்லேனா என்ன பண்ணுவேனு தெரியாது” என்றவன் வெளியே செல்ல…

“உன்னை எத்தனை டைம் சொல்லிருக்கேன். சாப்பிட்டுட்டு வராதேனு. உனக்கு அவன் தான் கரெக்ட்” என்றவள்…

“அடிச்சத நீ யார்கிட்டயும் சொல்ல முடியாது. உன் சித்தப்பாவும் உன்னை ஒண்ணும் கண்டுக்கல. பாட்டிமாவும் இல்ல. அதை நியாபகம் வச்சிக்கோ” எனச் சொல்ல நேத்ராவுக்குத் தன்னைத் தனியே விட்டுப் போன பாட்டியின் மீது கோபம் வந்தது.

ஏனெனில் நேத்ராவை சின்ன வயதிலிருந்து பத்மா செல்லமாக வளர்த்தார். எதென்றாலும் பாட்டிமாவிடம் போனால் உடனே கிடைத்து விடும்.

ஆனால் அதே சமயம் அவளைக் கட்டுப்பாட்டுடன் வளர்த்தனர்.

நேத்ரா சிறு வயதில் இருந்தே சரியாகச் சாப்பிட மாட்டாள். அதே சமயம் மெதுவாகச் சாப்பிடுவாள்.

என்ன தான் சாப்பிட முயற்சி செய்தாலும் தாமதமாவதால் அவள் சாப்பிட்டபடி நடந்து வர அதுவும் அவளுக்கு வினையாகி போனது.

சந்திரன் அவளை அடித்து விட்டு விலகி செல்ல ‘இதுக்கெல்லாம் கூட அடிப்பாங்களா?’ என நேத்ரா விக்கித்துப் போய் நின்றாள்.

அன்று காலையில் நேத்ரா காலையில் கூட்டி கொண்டிருக்கும் போது மைதிலி குளிக்கச் சொல்ல நேத்ராவோ தயங்கினாள்.

ஏனெனில் சந்திரன் கிளம்பும் நேரமாதலால் அவள் அமைதியாய் வேலை செய்ய அதனைக் கவனித்த மைதிலி

“ஏன்டி நான் உன்னை குளிக்கச் சொன்னனே?”

“இல்லத்த. அவரு குளிக்கப் போவாரு”

“ஏன் நான் சொன்னா கேட்க மாட்டியா நீ?” என்றவள் தோசை கரண்டியால் தலை மேல் அடித்தாள்.

“அவன் குளிக்கப் போறதுக்கு முன்னாடி குளினு தான உன்னை சொன்னேன்? நான் சொல்றத கேக்காம தான் நீ உன் இஷ்டத்துக்குப் பண்ணுவியா?” எனத் திட்டியபடியே ஒவ்வொரு அடியும் வைக்க நேத்ரா அவள் அடித்த அடியில் அதிர்ந்து அமைதியாய் இருக்கத் திடீரென்று அவளுக்குத் தலை மேல் ஏதோ ஊறுவது போல் இருக்க அங்கிருந்து தண்ணீர் போல் ஏதோ வருவது போல் இருந்தது.

முதலில் ஒன்றும் புரியாமல் இருந்த நேத்ரா சிகப்பாக அது இருக்கவும் தான் அது இரத்தம் என்றே உணர்ந்தாள்.

மைதிலி நடு மண்டையில் அடித்த அடியில் தலையில் இருந்து ரத்தம் ஒழுகி அவள் உடையையும் நனைத்தது.

நேத்ரா என்ன செய்வதென்று புரியாமல் நிற்க “போ. போய் டிரஸ் துவைச்சு போடு” என்று சொல்ல அங்கிருந்து நேத்ரா வெளியேறினாள்.

இயந்திரத்தனமாய்த் துவைத்து விட்டு அடுத்த வேலைகளைச் செய்தவள் இறுக்கத்துடன் அமைதியாக இருந்தாள்.

அன்று முழுவதும் யாருடனும் பேசாமல் இருந்தவள் அனைவரும் உறங்கியதும் கதறி அழ ஆரம்பித்தாள்.

அப்போது இருந்த இறுக்கத்தில் அவளுக்கு எந்த வலியும் தெரியவில்லை. ஆனால் தனிமையில் அந்த வலியை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

பாட்டின்மாவும் இல்லாமல் அம்மா தனியாக என்ன செய்ய முடியும் என்ற பயம் வந்தது.

இதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தவள் வெகு நேரம் கழித்தே உறங்கினாள்.

அடுத்த நாள் அமுதா போன் செய்யும் போது கூட அவளால் இதைச் சொல்ல முடியவில்லை.

அமுதா தனியாக இருப்பதால் வீணாக இந்த விஷயத்தைச் சொல்லி நேத்ரா அவளைக் கலவரப்படுத்த விரும்பவில்லை.

அவள் எந்த வேலை செய்தாலும் ஏதாவது ஒரு குற்றம் கண்டுபிடித்து “உன்னை யார் கேட்கறதுக்கு இருக்கா?” என்று சொல்லியே அடிக்க நேத்ராவுக்கு வாழ்க்கை மிகவும் வெறுத்துப் போனது.

‘ஏன் வாழ்கிறோம்?’ என்று சிந்திக்க ஆரம்பித்தவள் ஏதேனும் காய் வெட்டும் போது கத்தியை பயன்படுத்தினால் கூட ‘இப்படி வெட்டலமா? அப்படி வெட்டலாமா?’ எனச் சிந்திக்க ஆரம்பித்தாள்.

‘இல்ல. எங்காயாவது மலைல இருந்து கீழ குதிச்சிடலாமா?’ என ஏதோதோ யோசனை வந்தது.

அந்த முயற்சி செய்யவும் பயமாகி போக அதைக் கை விட்டாள்.

நடுவில் அமுதா பொங்கலுக்குக் கூப்பிட அப்போதும் அவளை அனுப்பவில்லை.

ஏறக்குறைய அவள் ஊருக்கு சென்றே ஆறு மாதமாகி இருந்தது.

இதனால் அவளைப் பார்க்க முடியாமல் தவித்த அமுதா நேத்ராவை கூட்டி வர உறவினருடன் சென்றாள்.

வந்தவர்களை வரவேற்றவர்கள் பொதுவான விஷயங்களைப் பேசியவுடன் நேத்ராவின் மாமா விஸ்வநாதன் தான் ஊருக்கு கூட்டி செல்வதாகத் தெரிவிக்க அங்கே பெரும் பிரச்சனை உண்டானது.

“எதுக்கு அவளை ஊருக்கு கூட்டிட்டு போகணும்னு சொல்றீங்க? நாங்க அவளை ஊருக்கு அனுப்பறதா இல்ல” எனச் சரவணன் எகிறினான்.

“என்னங்க இப்படி சொல்றீங்க? அத்தை இறந்தப்ப அவ வந்தது. அதுக்கப்பறம் வரவே இல்ல. அக்காவும் அவ கூட இருக்கணும்னு நினைப்பாங்க இல்ல?”

“அதெல்லாம் அவளை விட முடியாதுங்க. இன்னும் ஒரு வேலை கரெக்டா செய்ய மாட்டேங்கறா”

“என்னம்மா கொஞ்சமாவது யோசிச்சு பேசுங்க”

“கண்ணாலம் ஆகி 3 வருஷம் ஆகியும் என்ன அவளுக்கு அம்மா வீடு? அப்படி அவளை கூட்டிட்டு போறதா இருந்தா அவளை உங்க வீட்லயே வச்சுக்கோங்க” என மைதிலி கத்த

“ஏங்க கொஞ்சம் பெரியவங்க மாதிரி பேசுங்க”

“அவளை கரெக்டா நடந்துக்கச் சொல்லுங்க. அப்புறம் நாங்க அமைதியா இருக்கோம்”

இந்த ரீதியில் உரையாடல் இருக்க ஏறக்குறைய 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அவளை அனுப்ப அமுதாவும் நேத்ராவும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

அமுதா அவளைக் கூட்டி சென்றது கூடப் பத்மாவிற்கு 6ம் மாதம் சாமி கும்பிட. 4, 5 நாட்கள் அவளோடு இருக்கலாம் என்ற ஆசையில் அவள் கூட்டி செல்ல வர அதற்கே அவர்களிடம் 2, 3 மணி நேரம் போராட வேண்டி இருந்தது.

அந்த ஒரு வாரத்தில் கொஞ்சம் ரிலாக்ஸானாவள் பத்மாவிற்குச் சாமி கும்பிட்டவுடன் அங்கிருந்து கிளம்ப அடுத்த வாரத்தில் அவளது சின்னத் தாத்தா இறந்ததாக அமுதாவிடமிருந்து செய்தி வந்தது.

“ஹலோ”

“நேத்ராவோட தாத்தா இறந்துட்டாங்க அண்ணி”

“ஒடம்பு சரியில்லாம இருந்தாங்களே அவங்களா?”

“ஆமா அண்ணி”

“சரி. இப்போவே 10 மணி ஆகிடுச்சு. நாளைக்கு அனுப்பறேன். நாங்க சன்டே வரோம். இங்க ஆத்விக் பர்த்டேக்கு எல்லாம் அரேன்ஜ் பண்ணிட்டோம். அதனால நாளைக்குச் சசி வீட்டுக்கு போறோம்” எனச் சொல்லியவள் போனை கட் செய்தாள்.

நேத்ரா அவளது தாத்தா இறந்த அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க

“என்னடி பார்க்கற? அவன் கிட்ட கேட்டுட்டு ஊருக்கு போ” எனச் சொல்ல நேத்ராவோ அதிர்ச்சியில் வாய் வராமல் நின்றாள்.

“என்ன திமிரு உனக்கு? அவன்கிட்ட கேட்க மாட்டியா?” என நேத்ராவின் அருகில் வந்தவள் அவளை அறைந்தாள்.

“அவன்கிட்ட கேளுடி” என்றவள் சந்திரனிடம்…

“டேய் அவ கேட்டா அனுப்பு. இல்லேனா அனுப்பாத” என்றவள் உடனடியாக அமுதாவுக்குப் போன் செய்தாள்.

“ஹலோ ஒங்க புள்ள நாளைக்கு ஊருக்கு வரதுக்குக் கேளுன்னா அதுக்குக் கூட வாய் திறக்க மாட்டேங்கறா. இப்போ அவ ஒரு அடி வைச்சிதுக்கப்புறம் தான் வாயே திறக்கறா” எனச் சொல்ல

“என்ன அடிச்சிங்களா?” என ஒரு நிமிடம் துணுக்குற்றவர் பின் சுதாரித்து “அவ கேப்பாங்க. அவளை நாளைக்கு அனுப்பி விடுங்க” எனச் சொல்ல

“உங்க புள்ள எதுக்கும் வாயே துறக்க மாட்டா. நாங்க எல்லாம் செய்யணுமா?” என மைதிலி அமுதாவை திட்ட அமைதியாக இருந்தவள்

“நான் வெச்சிடறேன்” எனப் போனை கட் செய்தாள்.

‘கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் பேசறாங்களே இப்போ கூட’ என நினைத்த நேத்ரா சந்திரனிடம் “என்னங்க நான் நாளைக்கு ஊருக்கு போகட்டுமா?” எனக் கேட்க அவனும் “போய்த் தொலை” என்று வெறுப்பாகக் கூறினான்.

அதில் மனம் வெறுத்துப்போன நேத்ரா ‘எங்கயாவது தொலைஞ்சு போய்டறேன்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

அன்று இரவு முழுவதும் தூக்கம் வராமல் தவித்தவள் அடுத்த நாள் காலையில் சீக்கிரமாகக் கிளம்பிச் செல்ல சந்திரன் வீட்டினர் அதற்கடுத்த நாள் வந்து சேர்ந்தனர்.

சந்திரன் வீட்டினர் வந்தவுடன் சிறிது நேரம் இருந்தவர்கள் பிறகு நேத்ராவை கூட்டிக் கொண்டு கிளம்பி விட்டனர்.

நேத்ராவுக்கு அவள் அம்மாவை தனியாக விட்டுச் செல்ல மனமில்லை. ஆனால் மைதிலி கூப்பிட்டவுடன் வேறு வழியில்லாமல் அவர்களுடன் சென்று விட்டாள்.

ஏறக்குறைய அடுத்த ஆறு மாதங்களும் இதே நிலைமையில் செல்ல பத்மாவதிக்கு முதலாமாண்டு சாமி கும்பிட மட்டுமே அவளால் அங்குச் செல்ல முடிந்தது.

ஆனால் இந்த ஆறு மாதங்களும் அவள் தனது வாழ்க்கையைப் பற்றிய யோசனையிலேயே இருந்தாள்.

முதலில் இரண்டு நாட்கள் முன்னரே நேத்ரா செல்ல சந்திரன் வீட்டினர் சாமி கும்பிடும்போது வந்தனர்.

ஆனால் நேத்ராவுக்கோ இந்த முறை தனது வீட்டிலேயே கூட அமைதியாக இருக்க முடியவில்லை. அங்குப் போக வேண்டுமே என்று ஒரே இறுக்கமாக இருந்தாள்.

சாமி கும்பிட்டு முடித்தவுடன் மைதிலி நேத்ராவை அவர்களுடன் கிளம்பச் சொல்ல அவள் எதுவும் கிளம்பாமல் அமைதியாக இருந்தாள்.

இது பார்த்த அமுதாவோ அவர்களுடன் நேத்ராவை கிளம்பச் சொல்ல அவள் சொன்ன பதிலில் அமுதா உட்பட எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றார்கள்.

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page