நேத்ரா அன்று வேலை முடிந்து வரும் போது அமுதாவை பார்க்க அவள் முகம் சரியில்லாதது போலத் தோன்ற, “என்னம்மா?” என்று கேட்டவளிடம் லெட்டரை காட்ட அதைப் பார்த்த நேத்ரா அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.
அது டைவர்ஸ் நோட்டிஸ். சந்திரன் வக்கீல் மூலமாக அனுப்பியிருந்தான்.
அதைப் பார்த்தவுடன் அமுதாவுக்கு அதை எப்படி எதிர் கொள்வது என்ற பயம் வந்தது.
நேத்ரா அதைப் பார்த்ததும் முதலில் அதிர்ச்சியானவள் பின் சுதாரித்து,
“இது எப்படினாலும் நடக்கப் போறது தானே மா? இதுக்கு ஏன்மா ஃபீல் பண்ற?”
“ஏய் அவங்க பெரிய ஆளுங்கடி. நம்ம எப்படிடி சமாளிக்கறது?”
“சமாளிச்சுக்கலாம். விடு. தேவையில்லாம புலம்பாத”
“போன வாரத்துல கூடப் போன் பண்ணாங்க நேத்ரா. மன்னிப்பு கேட்டுட்டு அங்க போய் இரேன். பொண்ணுங்க புருஷன் வீட்ல இருந்தா தான்டி மதிப்பு” என அமுதா சொல்ல
“ஏம்மா உனக்கு அறிவில்ல. உன் முன்னாடியே அவன் என்ன அடிக்க வந்தான். மனசாட்சியே இல்லாம அவன் கூடச் சேந்து வாழுனு சொல்ற?” எனக் கோபத்தில் கத்த
“சொன்னா புரிஞ்சிக்க நேத்ரா” என்றவளை ஒரு பார்வை பார்த்தவள்…
“உனக்குப் பாரமா இருக்கேன்னு புரியுது. நீ ஒண்ணும் ஃபீல் பண்ணாத” என்று அமைதியாகப் படுத்தவளுக்கோ மனதில் கொஞ்சம் கூட அமைதியில்லை.
அமுதா அடிக்கடி இதைச் சொல்லியே வற்புறுத்த நேத்ரா அப்போதைக்குக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இப்போதும் இப்படிச் சொல்ல இதை எப்படி எதிர்க்க என்ற யோசனையில் ஆழ்ந்தாள்.
‘அம்மாவுக்கு நம்ம பாரமா இருக்கோமோ? நம்ம இங்க வந்து அம்மாவுக்குத் தொல்லை குடுக்கறமோ?’ என்ற சிந்தனை ஆட்கொள்ள நேத்ரா தலையணையில் கண்ணீர் விட்டபடி அழுகையை அடக்கி கொண்டு தூங்குவது போல் பாசாங்கு செய்தபடி படுத்தாள்.
அடுத்த நாள் இதே மனநிலையில் அலுவலகம் கிளம்பியவளை அமுதா சாப்பிட சொல்ல வேண்டாம் என மறுத்தவள் அங்கிருந்து கிளம்பினாள்.
நேத்ரா அலுவலகம் வந்தாலும் அவளால் வேலையில் ஒன்ற முடியவில்லை.
அவளறியாமல் அவளது கண்களில் கண்ணீர் வடிந்தது. அதை யாரும் அறியாமல் துடைத்தபடி அவள் வேலை செய்து கொண்டிருக்க, அதைக் கவனித்த கதிரோ திடுக்கிட்டான்.
‘என்னாச்சு? வந்ததுல இருந்து ரெஸ்ட்லெஸ்ஸாவே இருக்கா’ என அவன் யோசிக்கச் சிறிது நேரத்தில் அவனிடம் வந்தவள்…
“கதிர் எனக்கு இன்னைக்கு லீவ் வேணும்”
“என்னாச்சு பேபி? எனி பிராப்ளம்?” என அவன் கேட்க கண்களில் எட்டாத முறுவலை கொண்டு வந்தவள்
“ஒண்ணும் இல்ல கேட். சும்மா தான்” எனச் சொல்ல
“நீ சும்மா லீவ் போடுவியா? நம்பற மாதிரி இல்லயே?” எனத் துருவ அதில் கடுப்பானவள்…
“இட்ஸ் மை பர்ஸனல் கேட். உங்ககிட்ட சொல்லணும்னு அவசியமில்ல” என்று அவள் முகத்தில் அடித்தது போல் பேச அதில் ஒரு கணம் அடிபட்டது போல் முகம் மாறியவன் பின் சுதாரித்து,
“ஓகே டா. டேக் கேர்” எனச் சிரித்தபடி சொல்ல அவளோ இவன் முக மாற்றம் எதையும் கவனிக்காத மன நிலையில் இருந்தாள்.
அவனிடம் இருந்து விடைபெற்றவள் எங்குப் போவதென்று தெரியாமல் ஏதோ ஒரு பேருந்திலேற அது பீச் பக்கமாகச் செல்ல பீச்சை பார்த்ததும் பேருந்திலிருந்து இறங்கி தனியாக ஓரிடத்தில் அமர்ந்தவளுக்கோ சிந்தனை எங்கெங்கோ செல்ல கண்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தாள்.
தன் நிலையை நினைத்து ஒரு மூச்சு அழுதவள் பின் ஏதோ தோன்ற எதையும் யோசிக்காது வேகமாகக் கடலை நோக்கி செல்ல, “நேத்ரா என்ன பண்ற?” என ஒரு குரல் கேட்க திடுக்கிட்டு திரும்பியவள் கண்களில் கதிர் ரௌத்ரமாக இருப்பது தெரிய அவனோ இருந்த கோபத்தில் அவளை அறைய நேத்ரா அவன் கைகளில் மயங்கி விழுந்தாள்.
இதை எதிர்பாராதவனோ அவளைத் தாங்கி பிடித்தவன் “பேபி பேபி” எனக் கன்னம் தட்ட அவளோ விழிக்காமல் இருந்தாள்.
அதில் திடுக்கிட்டவன் அவள் முகத்தில் தண்ணீர் தெளித்தும் விழிக்கவில்லை என்றதும் பதட்டம் அடைந்தவன் அவளை மருத்துவமனையில் சேர்க்க பரிசோதனை செய்த மருத்துவரோ சரியாகச் சாப்பிடாததால் அவள் மயங்கி விழுந்ததாகச் சொல்ல அதில் சற்று ஆசுவாசமடைந்தான்.
மருத்துவமனையில் ட்ரிப்ஸ் ஏற கதிரோ கலங்கிய கண்களுடன் அவள் கையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தான்.
இந்த ஒரு மாதமாக ஓரளவுக்கு அவள் பேசியதில் அவள் அவனை நண்பனாகாவாவது ஏற்றுக் கொண்டாள் என அவன் சந்தோஷப்பட்டிருக்க அவளோ அது கூட இல்லை என்பதைத் தனது செயலின் மூலமாக உணர்த்த அதில் ஏற்கனவே அடிபட்டு போனவன் கடற்கரையில் அவள் சாவை நோக்கி சென்றதும் அவன் தன்னைக் கட்டுபடுத்த முடியாமல் அடிக்க அதில் அவள் மயங்கி விழுந்ததும் அவனைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
உண்மையில் நேற்றிரவிலிருந்து இருந்த மன உளைச்சலில் அவள் சாப்பிடவில்லை. அவன் அறைந்ததும் எல்லாம் சேர்ந்து அவளை மயக்கத்தில் ஆழ்த்தியது.
கதிருக்கு அவள் விடுப்பு கேட்ட போது அவளை அனுப்பி விட்டாலும் அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.
அவள் கண்ணீருக்கான காரணம் புரியாமல் அவளைத் தனியே விட மனமில்லாமலும் கதிர் நேத்ராவை தொடர்ந்து செல்ல அவளை அவன் பெரும் விபரீதத்திலிருந்து காப்பாற்ற முடிந்தது.
மருந்தின் வீரியத்தில் அப்படியே சிறிது நேரம் உறங்கியவள் பிறகு கண் விழிக்க அங்கே கதிரோ கலங்கிய கண்களுடன் அமர்ந்திருந்தான்.
“பேபி ஆர் யு ஓகே?” எனக் கேட்க நடந்த அனைத்தும் நியாபகம் வந்து அவள் முகம் கசங்கியது.
“என்ன ஏன் காப்பாத்தினீங்க கதிர்? அப்படியே செத்து போகட்டும்னு விட்ருக்கலாம்ல?” என அவள் இயலாமையில் கத்த
“நேத்ரா என்ன பேசறோம்னு யோசிச்சு பேசு. வீணா என் பொறுமைய சோதிக்காத” எனக் கதிர் இறுகிய குரலில் சொல்ல
“ஆமா கதிர். நான் யோசிச்சு தான் பேசறேன். யாருக்கும் பாரமா இருக்க விரும்பல”
“பேபி நீ ஏதோ போட்டுக் குழப்பிட்டிருக்க. வாட் யூ ஈட்னு எனக்குப் புரியல. அஸ் ஏ ஃப்ரெண்டா கூட என்னை நினைக்கலையா பேபி?” என அவன் குரலில் வலியுடன் கேட்க
“அப்படி இல்ல கதிர். நேத்து டிவோர்ஸ் நோட்டீஸ் அவன் அனுப்பியிருந்தான்”
“அதுக்கும் நீ சாக டிரை பண்ணதுக்கும் என்ன சம்பந்தம்?”
“அம்மா…” என்று ஆரம்பித்தவளுக்கு அழுகை வந்தது.
“என்னனு சொல்லு பேபி?”
“அம்மா லாஸ்ட் வீக் கூட அவங்க வீட்ல போன் பண்ணி சாரி கேட்டாங்க. இப்போ இருக்கற சிட்சுவேசன்ல நம்ம ரெண்டு லேடீஸ் மட்டும் என்ன பண்ண முடியும்? போய் அவனோட வாழுன்னு சொல்றாங்க”
“அங்க போனா என்ன அடிச்சே கொன்றுவாங்க. அவன் பெரியப்பா என்கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணான். அதுக்கே அவன் நான் பொய் சொல்றேன்னு என்ன நம்பல. நான் அங்க போக மாட்டேன். எனக்குப் பயமா இருக்கு” என்றவள் விக்கி விக்கி அழ அவள் சொல்லியதில் கதிர் அதிர்ச்சியில் உயிர் வரை உறைந்து போனான்.
பின் ஒரு சில நிமிடங்களில் சுதாரித்தவன் நேத்ராவை அள்ளி அணைத்துக் கொள்ள அவள் அவன் மார்பில் கதறி அழுதாள்.
“பேபி ஒண்ணும் இல்லடா. அம்மா அப்படியெல்லாம் அங்க விட மாட்டாங்க. நான் பார்த்துக்கிறேன்” என அவள் முதுகை வருடியபடி ஆறுதல் சொல்ல
“இல்ல. எனக்குப் பயமா இருக்கு. நான் அங்க போனேன்னா செத்திடுவேன். என்ன விட்ருங்க” எனப் பயத்தில் உடல் நடுங்க அவள் கதற அவன் என்ன செய்வதென்று புரியாமல் திணறிவன் அவளிடம்,
“பேபி கூல். ஒண்ணும் இல்ல. நீ ஒண்ணும் பயப்படாத. நான் பார்த்துக்கறேன்”
“இல்ல. நான் யாரையும் இந்த விஷயத்தில நம்ப மாட்டேன். என்ன அங்க போகச் சொல்லிருவீங்க”
“பேபி. இங்க பாரு. என் கண்ண பாரு. நான் பொய் சொல்ற மாதிரி இருக்கா?” என் கேட்க அவளோ இல்லை எனத் தலையாட்டினாள்.
“இதுக்கு மேல நீ இந்த விஷயத்த பத்தி யோசிக்காத. அமைதியா இரு” என்று அவன் அப்படியே தட்டி கொடுக்கக் கொஞ்சம் கொஞ்சமாக அவள் அழுகை நின்றது.
ஆனால் அவளுக்கு இருந்த பயத்தில் அவள் கோழி குஞ்சை போல அவன் மார்பில் ஒண்டியவள் அவளை விட்டு சிறிதும் நகரவில்லை.
அவன் தட்டி கொடுக்க அதில் அமைதியடைந்தவள் அப்படியே உறங்கி போனாள்.
“பேபி” என அவன் கூப்பிட்டதில் சத்தம் வராமல் போக அவளைக் கவனிக்க அவள் அவன் மார்பில் உறங்கி இருந்தவளை கவனித்தவன் அவளைப் படுக்கையில் உறங்க வைத்தவுடன் அவன் வெளியே செல்ல அவளோ அவன் கையைப் பிடித்தாள்.
“என்னடா?” என்று அவன் கனிவாகக் கேட்க
“நீ… நீங்க இங்கயே இருங்க. எனக்குப் பயமா இருக்கு” எனத் தயங்கியபடி அவள் சொல்ல
“நான் எங்கேயும் போகலடா. இங்க தான் இருக்கேன்” எனச் சொல்ல நேத்ரா அவன் கைகளை இறுக பற்றியபடியே உறங்கினாள்.
கதிர் நேத்ராவின் அருகில் அமர்ந்தவன் அவளைப் பற்றிய யோசனையில் ஆழ்ந்தான். சந்திரனை பற்றி நினைத்தவனுக்கோ அவனைக் கொன்று விடும் வெறி வந்தது.
இவன் யோசித்துக் கொண்டிருக்கும் போது அவள் கண் விழிக்க…
“பேபி ஒரு ஃபைவ் மினிட்ஸ். நான் டாக்டரை பார்த்திட்டு வந்தறேன். நம்ம வீட்டுக்குப் போகலாம்” எனச் சொல்ல அவளோ…
“வீட்டுக்கா? அம்மாட்ட என்ன பதில் சொல்றது?” என அவள் அதற்கும் பயந்தாள்.
“நான் பார்த்துக்கிறேன்டா. நீ ஒண்ணும் வொர்ரி பண்ணிக்காத” என்று சொல்லி விட்டு டாக்டரை பார்க்க சென்றவன் சற்று நேரத்தில் வந்து வீட்டுக்குக் கிளம்பச் சொன்னான்.
அவளும் அமுதாவிடம் என்ன சொல்வது என்ற யோசனையோடு செல்ல கார் வேறொரு வீட்டின் முன் நின்றது.
“யார் வீடு இது?”
“நம்ம வீடு தான் பேபி” எனச் சொல்ல அவள் அதிர்ச்சியாய் அவனைப் பார்த்தாள்.
“கூல்டா. நீ இப்போ ரிலாக்ஸா இருக்கணும். தேவையில்லாம யோசிக்காத” என்றவன்
“நான் ஸ்டே பண்றதுக்காக வாங்கின ஃபிளாட் தான் பேபி. உள்ள வா” எனத் தயங்கியவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
“உட்காருடா. வந்தறேன்” என்றவன் சிறிது நேரத்தில் கையில் ஜூஸீடன் வந்தான்.
“ஃபர்ஸ்ட் ஜூஸ் குடி பேபி” எனக் கொடுக்க அவளோ அவனைக் கேள்வியாய் பார்த்தாள்.
“குடிடா. நான் சாப்பிட ஏதாவது ப்ரிப்பேர் பண்ணிட்டு வரேன்” எனச் சொல்ல
“இல்ல. பரவால்ல. அதெல்லாம் வேணாம்” எனச் சொல்ல இப்போது அவனுக்கு நிஜமாகவே கோபம் வரும் போலிருந்தது.
“ஏன் நேத்ரா என்னைன அவாய்ட் பண்ற மாதிரியே பேசற? உன்னை பொறுத்த வரையும் நான் என்ன தப்பு பண்றேன்னே புரிய மாட்டேங்குது? ஏன் நேத்ரா இப்படி இருக்க?” எனக் கோபத்தோடு ஆரம்பித்து ஆதங்கத்தோடு முடிக்க அவளுக்குக் கஷ்டமாக இருந்தது.
“அது… மேரேஜ்க்கு முன்னாடி சித்தப்பாவ நம்பினேன். கரெக்டா மேரேஜ் அப்போ சொத்தை எழுதி வாங்கி ஆப்பு வச்சாங்க. மேரேஜ்க்கு அப்புறம் ஹஸ்பெண்ட நம்பினேன். ஆனா அவங்க அம்மா பேச்ச தான் நம்பினாங்க”
“இடையில அடிச்சப்பவே சித்தப்பாட்ட தான் ஃபர்ஸ்ட் சொன்னேன். அப்போ உனக்கு ஏதாவது ப்ராப்ளம் வந்துட்டா என்ன பண்றதுனு கேட்கறாங்க. நான் ப்ராப்ளம்ல இருக்கறது யார் கண்ணுக்குமே தெரியல”
“அப்புறம் அவனோட பெரியப்பா கேவலமா மெஸேஜ் பண்ணான். என்னனு கூடக் கேட்கல. அந்த ஆள்ட்ட நான் அப்பா மாறி பழகினேன். என்னை யாரை நம்பச் சொல்றீங்க கதிர்?”
“அதெல்லாம் கூடப் பரவால்ல. அம்மாக்கு நான் எவ்ளோ கஷ்டப்பட்டேனு தெரியும். அம்மா முன்னாடியே அவன் அடிக்க டிரை பண்ணான். அப்பவும் நான் அவங்ககிட்ட மன்னிப்பு கேட்டுட்டுப் போகணுமாம். நான் என்ன பண்றது?”
“அதுவும் இந்த ஒன் மந்த்தா எத்தனை டைம் சொல்லிருப்பாங்க. எனக்கு எவ்ளோ டிஸ்டர்ப்டா இருந்தது தெரியுமா?” எனச் சொல்ல அவனோ அவளை முறைத்தான்.
“ஏன் மொறக்கிற?”
“டிஸ்டர்ப்டா இருந்தா மனசு விட்டு பேச வேண்டியது தானே?” என்று ஆரம்பித்தவன்
“ஓ மை காட். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு. வந்தறேன்” என்று சமையலறையில் உருட்ட ஆரம்பித்தவன் சிறிது நேரத்தில் சாதத்தோடு வர நேத்ரா அதிர்ச்சியாகப் பார்த்தாள்.
“சாப்டு பேபி. நான் ஃபர்ஸ்ட்டே எடுத்துட்டு வந்துருக்கணும். லேட் பண்ணிட்டேன்” என்றவன் அவள் கைகளில் கொடுக்க அவளோ வேண்டாம் என்று சொல்ல கதிர் கடுப்பானான்.
“பேபி நீ ஃபர்ஸ்ட் எதுக்கெடுத்தாலும் ஃபீல் பண்றத நிறுத்து. டிஸ்டர்ப் பண்ணா தான் ஃபிரண்டே. புரிஞ்சிக்கோ” என்றவன்
‘டேய் கதிர் ஆனாலும் நீ ரொம்பப் பாவம் டா. இவ உன் ஃபிரண்ட்ஷிப்க்கே இப்படி யோசிக்கறா? இதுல நீ லவ் சொல்லி, மேரேஜ் பண்ணி… ஒரு வேளை உனக்கு ஸ்ட்ரெயிட்டா அறுபதாவது கல்யாணம் தானா?’ என அவன் ஆயாசமானான்.
“கதிர்” என்று கூப்பிட
“என்னம்மா?” என்றவன்
“ஃபர்ஸ்ட் நீ சாப்பிடு” என ஊட்ட வர அவள் திகைத்துப் போய்ப் பார்த்தாள்.
“சாப்டு பேபி. நான் வந்தவுடனே உனக்கு ஃபர்ஸ்ட் சாப்பிட தான் குடுத்திருக்கணும். உன்கிட்ட ஆர்க்யூ பண்ணி லேட் பண்ணிட்டேன்டா. சாரி” என்றவன் உணவை நீட்ட அவள் எதுவும் பேசாமல் மௌனமாகச் சாப்பிட்டாள்.
இவன் செய்கையில் அவளது மனம் சந்திரனை நினைக்க அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.
“பேபி இப்போ எதுக்குத் திரும்ப அழற? நீ அழுத வரையும் போதும்” என்றவன்
“திரும்ப நீ டேம்ம திறந்து விட்டினா நான் எல்லாத்தையும் வந்து தண்ணி பிடிக்கச் சொல்லுவேன்” எனக் கிண்டல் அடிக்க என்ன என்பது போல் பார்த்தவள் அவனை அடிக்க ஆரம்பித்தாள்.
“உனக்கு நான் அழறது கிண்டலா இருக்கா?”
“கிண்டல் மட்டும் இல்ல. சிரிப்பா கூட இருக்கு. அவன் உனக்கு வேண்டாம் தான?” என் அவன் கேட்க ஆமாம் எனத் தலையாட்டினாள்.
“அதுக்கு அப்புறம் எதுக்கு அதைப் பத்தி யோசிச்சி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க? போய்ப் பொழப்பு பாரு எரும” எனச் சொல்ல
“என்ன நான் எருமையா?”
“ஆமா மாடு” என்று பதில் சொன்னவனை அவள் விசித்திரமாகப் பார்த்தாள்.
“என்ன பார்க்கற?”
“ஆபிஸ்ல ஃபார்த்தா இங்லேண்டுலயே பொறந்து வளந்த மாதிரி இங்கிலீஷ்ல பேசற. இங்க வந்தா எருமை, மாடுனு எல்லாம் சொல்ற. உன்னை என்ன பண்றது?”
“ஹலோ மேடம் அது ஆஃபிஸ். அதனால நான் அங்க கெத்து மெயிண்டெயின் பண்ணி தான் ஆகணும். பட் இது தான் நம்ம ஒரிஜினல்”
“கேட்கறா பாரு டவுட். ஃபிரண்ட்ஸ்க்குள்ள மரியாதை குடுத்தா அப்புறம் எதுக்கு ஃபிரண்ட்ஷிப்? உனக்குக் கோபம் வந்தா 4 அடி அடிச்சிக்கோ. நான் வேணா திருப்பி 8 அடி அடிச்சிக்கறேன்” என்று அவன் கண்ணடிக்க
“அடேய். ஆனாலும் உனக்குக் கொழுப்பு ஜாஸ்திடா” என அவள் வார
‘இப்படியே மெய்ட்டெய்ன் பண்ணு பேபி. எனக்கு அதான் வேணும்’ என நினைத்தவன் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.
“பேபி எனக்கொரு டவுட்”
“என்ன?”
“இந்த 2கே யுகத்துல கூடப் பிராண நாதான்னு யாராவது உயிர் விடுவாங்களா பேபி? அவன் அடிச்சானா அவனை திருப்பி அடிக்க வேண்டியது தான? அது விட்டுட்டு எப்போ பார்த்தாலும் டேம்ம திறந்து விடுவியா?” என அவன் கேட்க அவளோ கொலைவெறியுடன் அவனைப் பார்த்தாள்.
