இதயம் 2
அடுத்த மாதத்தில் ஒரு நாள் நேத்ராவின் வீட்டில் திருமண ஜவுளிகள் எடுக்கக் கோவை சென்றனர்.
சந்திர பிரகாஷின் வீட்டில் அவனது பெரியப்பா பூபாலன், அத்தை, சசிகலாவின் குடும்பம் என ஒரு பட்டாளமே வந்திருந்தது.
நேத்ராவின் வீட்டில் அவளது சித்தப்பா, அத்தை, அம்மா என இவர்களின் வீட்டில் இருந்து சிலர் சென்றனர்.
இதற்கிடையில் சந்திரனின் சித்தப்பா நேத்ராவுக்குக் குறுந்தகவல்கள் அனுப்பினார்.
அவர் மகள் என்று பேச நேத்ராவும் அப்பா என்று பேச தொடங்கினாள்.
நேத்ராவின் அப்பா சிறு வயதிலேயே இறந்ததால் அவளுக்கு அப்பாவை நினைத்து பெரும் ஏக்கம் உண்டு.
பூபாலன் அப்பா என்று கூப்பிட சொல்ல அது அவளுக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாக்கியது. ரொம்பவும் நிம்மதியாக உணர்ந்தாள்.
ஏனெனில் என்ன தான் சாந்தமூர்த்திச் செய்தாலும் அவளுக்கு அவரிடம் பயம் அதிகம். அவரிடம் பேசும் போது அவளுக்குத் தந்தியடிக்கும்.
அவர் ஒவ்வொரு பண்டிகைக்கும் செய்வார். ஆனால் அவர் தேர்ந்தெடுப்பதை இவளுக்குப் பிடிக்கும்படி கூறிவிடுவார்.
இவளும் வேறு வழி இல்லாமல் ஆமாம் என்று தலையாட்டி விடுவாள்.
எல்லா விஷயத்திலும் நேத்ராவும், அமுதாவும் அமைதியாக இருந்து விடுவார்கள். அவர் எல்லா விஷயத்திலும் அவர்களுக்கு உதவியாக இருந்தார். நேத்ராவை படிக்க வைத்தது உட்பட. அதனால் அவரை மீறி இவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள். செய்யத் துணிவும் கிடையாது.
அதனால் அவள் பூபாலனிடம் நன்றாகப் பேச ஆரம்பித்திருந்தாள். முதலில் ஒரு சில குறுந்தகவல்கள் அனுப்பியவர் பின் வந்த நாட்களில் முழு நேரமாகக் குறுந்தகவல்கள் அனுப்பினார். இவளும் அவருக்குப் பதிலளிக்க ஆரம்பித்தாள்.
நேத்ராவுக்குச் சந்திர பிரகாஷ் சரியாகப் பேசாதது உறுத்தி கொண்டே இருந்தது. அவள் சில சமயம் என்ன செய்வதென்று புரியாமல் தவித்தாள்.
அவள் பார்த்த வரையில் கல்யாணம் நிச்சயமானவுடன் போன், மெஸேஜ் என்று எப்போதும் பிஸியாக இருப்பதைத் தான் பார்த்திருக்கிறாள்.
இவனோ போன் பேசும் போது,
“ஹலோ”
“ஹலோ சொல்லுங்க”
“இப்போ தான் ஆஃபிஸ்ல இருந்து வந்தேன்”
“ஓ… ஓகேங்க…”
“திரும்ப வெளிய போகணும்”
“ஓகேங்க. இங்க அத்தை வந்தாங்க. அப்படியே அத்தை பொண்ணோட போய்த் தேவையான திங்க்ஸ் வாங்கிட்டு வந்தேன்”
“ம்ம்”
“சித்தப்பா அடுத்த வாரத்தில மேரேஜ் ட்ரெஸ் எடுக்கப் போகலாம்னு போன் பண்ணாங்க. உங்க கிட்ட எதுவும் பேசினாங்களா?”
“தெரியல. அப்பாட்ட பேசிருப்பாங்க”
“சரிங்க” என்றவள் மேற்கொண்டு என்ன பேச என்று தயங்கினாள்.
எப்போதும் நேத்ராவுக்கு அவள் தான் ஏதோ சொல்ல வருவது போலத் தோன்றும். அவன் அதிகப்படியாக ஒன்றும் கேட்க மாட்டான்.
இதைத் தாண்டி அதிகமாக அவன் பேசுவதும் கிடையாது. ஒரு செல்ல சீண்டல், ஒரு சிரிப்பு, உரிமையான ஒரு பேச்சு என்று அவனிடத்தில் இருந்து எதுவும் வராது.
ஒவ்வொரு முறையும் போன் வைக்கும் போது குழப்பமாக இருக்கும். ஆனால் கல்யாணம் முடிந்தால் சரி ஆகிவிடும் என்று மனதை தேற்றிக் கொள்வாள்.
இவள் இவ்வாறு குழப்பமாக இருந்த போது தான் பூபாலன் குறுந்தகவல்கள் அனுப்பினார். அவளும் அவனுடைய சொந்தத்திடமாவது பேச முடிகிறதே என்று பேசி கொண்டிருந்தாள்.
முதலில் பட்டுச் சேலை எடுத்தார்கள். ப்ரௌன் கலரில் தங்க பார்டருடன் அவள் பட்டு சேலையை மேலே எடுத்து போட்டபடி காட்ட சந்திரன் நன்றாக இருக்கிறது என்று சொன்னான்.
அது அவளுக்கு வானத்தில் பறப்பது போல இருந்தது.
பிறகு பூபாலனிடம் காட்ட அவரும் நன்றாக இருக்கிறது என்று சைகை காட்டினார்.
எல்லோருக்கும் அந்தக் கலர் பிடித்துப் போனதால் அதையே தேர்ந்தெடுத்தார்கள்.
பிறகு ரிஷப்ஷன் புடவை, வேஷ்டி சட்டை, கோட் சூட் மற்றும் பிற புடவைகள் என்று அந்த நாள் முழுவதும் ஷாப்பிங்கிலேயே முடிந்தது.
எல்லாம் எடுத்து முடிந்ததும் இரவு ஹோட்டலுக்குச் சாப்பிட சென்றார்கள்.
எல்லோருக்கும் ஆர்டர் செய்து சாப்பிட ஆரம்பிக்கும் போது ஆத்விக் குறும்பு செய்ய ஆரம்பித்தான்.
நூடுல்ஸ் அவனுக்கு ஆர்டர் செய்திருக்க அந்த வாண்டு தானே சாப்பிடுவேன் என்று அடம்பிடித்து மேலும் கீழும் சிந்திக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தது.
அதனால் கடுப்பான சசிகலா அவனைத் திட்ட ஆரம்பித்தாள்.
நேத்ராவின் பக்கத்தில் அமர்ந்திருந்த சந்திரன் திடீரென்று கத்த ஆரம்பிக்க நேத்ரா விலுக்கென்று நிமிர்ந்தாள்.
“ஏய் ஏன்டி அவனை திட்டற?”
“அவனை பாருண்ணா எப்படி சிந்திட்டு சாப்பிடுறான்னு. நான் ஊட்டி விடறேன்னு சொன்னாலும் கேட்கல”
“அவனை ஏதாவது திட்டினா என்ன பண்ணுவேன்னு தெரியாது” என்று கர்ஜித்தவன் ஆத்விக்கை மடியில் உட்கார வைத்து சிறிது ஊட்ட அவன் கொஞ்சம் சமாதானமானவுடன் நேத்ரா அவனுக்கு ஊட்டினாள்.
உண்மையில் இவனது கத்தலை நேத்ரா சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவள் அதிர்ந்து போய் அமர்ந்திருக்க அவனோ ஆத்விக்கை கொஞ்சி கொண்டிருந்தான்.
இதற்கும் அவள் ஃபேமிலி பாண்டிங் என்று சந்தோஷப்பட ஒரு கட்டத்தில் அது அவளுக்கு உச்சந்தலையில் அடித்தது போல் உணர வைத்த போது எல்லாம் அவள் கையை மீறிச் சென்றிருந்தது.
இந்தச் சம்பவத்தோடு அன்றைய நாள் முடிவுற்றது. எல்லாரும் அலைந்த களைப்பில் அடித்துப் போட்டது போல உறங்கினார்கள்.
அடுத்து வந்த நாட்கள் எப்போதும் போலச் சென்றது.
சசிகலாவும், மைதிலியும் மணிக்கணக்கில் பேச அவனோ எப்போதும் போலப் பேசினான்.
அவளுக்கு இதை நினைத்து சிரிப்பாக இருக்கையில் அவளது வாழ்க்கையையே பணயம் வைக்குமளவு சம்பவம் நடந்தது.
நிச்சயத்திற்கு வந்த சாந்தமூர்த்திப் பின்பு அடுத்து வந்த பதினைந்து நாட்களில் பத்திரிகை அடித்து எடுத்துக் கொண்டு ஊருக்கு வந்தார்.
பொதுவான கல்யாண வேலையைப் பற்றிப் பேச ஆரம்பித்தவர் பின் சிறிது நேரத்தில் சொத்தை பிரிப்பது பற்றிப் பேச ஆரம்பித்தார்.
“என்னடா சொல்ற? இப்போ ஏன் சொத்து பிரிக்கணும்னு சொல்ற? கல்யாணம் முடிஞ்சதுக்கப்புறம் செய்யலாமேடா” என்று பத்மாவதி அதிர்ச்சியாகக் கேட்டார்.
“நேத்ரா கல்யாணம் பண்ணி போயிட்டா அவகிட்ட கையெழுத்து வாங்க முடியாது. கோவையில் இருந்து எதுவும் அப்போஸ் பண்ணுவாங்க. அதான் இப்பவே பிரிச்சிடலாம்னு பார்க்கறேன்” என்று விளக்கம் கொடுத்தார்.
“எனக்கென்னவோ இது சரியா படலடா”
“நான் செஞ்சா சரியா இருக்கும்னு உங்களுக்குத் தெரியாதா? இதை ஒத்துக்கற வரையும் நான் சாப்பிட மாட்டேன்” என்று ஆத்திரத்துடன் எழுந்து சென்று விட்டார்.
பத்மாவதி திகைத்து போய் அமர்ந்து விட்டார். சாந்தமூர்த்தியிடமிருந்து அவர் இந்தச் செய்கையை எதிர்பார்க்கவில்லை.
அதுவும் கல்யாணம் நெருங்கி கொண்டிருக்கும் போது என்ன செய்வது என்று புரியாமல் தவித்தார்.
மற்ற இருவரிடமும் இது பற்றிச் சொன்ன போது அவர்கள் உறைந்து போய் நின்றார்கள்.
சாந்தமூர்த்தி அவர்களிடம் எதுவும் பேசாமல் மேலே மாடிக்கு சென்று தங்கி கொண்டார். அவர் எப்போது வந்தாலும் மாடியில் தான் தங்குவது. அது இந்த முறை அவருக்கு வசதியாகப் போயிற்று.
பத்மாவதி சாப்பிட கூப்பிட அவர் எதுவும் சாப்பிடவில்லை. இந்த நிலை 2,3 நாட்கள் தொடர்ந்தது.
நேத்ராவை கூப்பிட்டுப் பிரட், இட்லி போன்றவை வாங்கி வர சொன்னார்.
நேத்ராவுக்கு எப்போதும் அவர் சொல் மீறி பழக்கமில்லாததால் அமைதியாகப் போய் வாங்கி வந்தாள்.
இந்த நிலை நீடிக்கப் பத்மா மனம் கேளாமல் கையெழுத்துப் போடுவதாக ஒத்துக் கொண்டார்.
அவருக்கு நேத்ராவின் தாத்தா நாகப்பன் இருந்த போது அப்போது அவர் சொத்துப் பிரிக்கலாம் என்று சொன்ன போது வேலை என்று நழுவியவர் இப்போது அடம் பிடிப்பது ஏன் என்று புரியவில்லை.
எது எப்படி இருந்தாலும் அவருக்குத் தனது மகனையும் விட்டு கொடுக்க முடியவில்லை. மற்ற இருவரிடமும் கையெழுத்து போடும்படி சொல்லி கொண்டிருந்தார்.
தனது அம்மா சம்மதித்ததில் சந்தோஷமான சாந்தமூர்த்தி ஏற்கனவே ரெடியாக வைத்திருந்த பைலை எடுத்து காட்டினார்.
அப்போது அவருடன் நேத்ராவின் குடும்ப நண்பரான ராஜசேகர் இருந்தார்.
சாந்தமூர்த்திப் பேப்பரை பார்த்தபடி சொல்லி கொண்டிருந்தார்.
“இங்க பாரும்மா கடை அமௌண்ட் 75 லட்சம், வீடு 50 லட்சம்… உங்களுக்கு 50, எனக்கு 50. மீதி 25 பாதிய பிரிச்சு உங்களுக்கு அந்த அமௌண்ட்டை பேங்க்ல போட்டுடறேன்” என்று விளக்கம் சொல்ல நேத்ராவுக்கு உள்ளூர உறுத்தியது.
‘என்ன கடை இவங்க வச்சிட்டு வீடு நமக்கா? கடை இருக்கற இடம் மெயின் ப்ளேஸ் இல்ல. எப்படி அந்த வேல்யூ கம்மியா வரும்னு சொல்றாங்க?’ என்று அவள் குழம்பினாள்.
ஆனால் வாய் திறந்து எதுவும் கேட்கவில்லை.
அமுதா இந்த விஷயத்தை எப்படிச் சமாளிப்பது என்று குழம்பி கொண்டிருந்தார்.
தீவிர யோசனைக்குப் பின் சாந்தமூர்த்தியின் மனைவியான வீணாவிடம் ஆலோசனை கேட்கலாம் என்று தீர்மானித்தாள்.
“அத்தை கையெழுத்து போடுங்க. எல்லாம் கரெக்டா தான் இருக்கு” என்றவர் மற்ற இருவரிடமும் அதையே சொல்ல அவர்கள் சரி என்பது போல் தலையாட்டினார்கள்.
எல்லாவற்றையும் விளக்கிய பின் கடைசியாக “இதுபற்றி எதுவும் சந்திரனுக்கோ, அவங்க பேமிலி மெம்பர்ஸ்க்கோ தெரிய கூடாது” என்று சாந்தமூர்த்திக் கட்டளையிடும் குரலில் கூறினான்.
அவர்கள் கல்யாணத்தில் எதுவும் பிரச்சனை வரக் கூடாது என்று அதற்கும் சரி என்றனர்.
அது அவருக்கு இன்னும் வசதியாகப் போயிற்று.
முக்கியமாக இந்தப் பேச்சு வார்த்தையை அவன் தனது சொந்தங்கள் யாருக்கும் சொல்லாமல் கமுக்கமாக முடித்துக் கொண்டான்.
இதனாலேயே நேத்ராவின் குடும்பத்தினர் யாரிடமும் உதவி கேட்க முடியாமல் போயிற்று.
அன்று வேலையெல்லாம் முடிந்த பின் வீணாவிற்குப் போன் செய்தார்.
“ஹலோ”
“சொல்லுங்க அண்ணி. எப்படி இருக்கீங்க?”
“நல்லாருக்கேன் வீணா. நீ எப்படி இருக்க? தீக்ஷி, முகில் எல்லாம் நல்லா இருக்காங்களா?”
“எல்லாம் நல்லா இருக்கோம் அண்ணி. என்ன விஷயமா போன் பண்ணீங்க?”
“அது தம்பி சொத்து பிரிக்கலாம்னு எல்லாம் சொல்லிட்டிருந்தாங்க. அதுதான் போன் பண்ணேன். உனக்கு இது பத்தி தெரியுமா வீணா?”
“இல்லண்ணி. எனக்கு அதுபத்தி ஒண்ணும் தெரியாது. ஏன் அண்ணி கேட்கறீங்க?”
“வீடு எங்களுக்கும், கடை உங்களுக்கும்னு பிரிக்கப் போறதா சொன்னாங்க. அதான் கையெழுத்து போடலாமா வீணா?”
“அய்யோ வேண்டாம் அண்ணி. போட்டுராதீங்க. அந்த ஆள நம்ப முடியாது” என்று வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாகப் பேசினாள் வீணா.
“ஏன் வீணா?” என்று அதிர்ந்து போய்க் கேட்க
“அந்த ஆள் ஏமாத்திடுவான் அண்ணி. ஜாக்கிரதையா இருங்க” என்று கூறியபடி போனை வைத்தாள்.
அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த நேத்ரா என்ன என்பது போல் அமுதாவை பார்த்தாள்.
“என்ன சொன்னாங்க சித்தி?”
“கையெழுத்து போட வேணாம்னு சொல்றாங்க”
“ஏம்மா?”
“எனக்கும் இது ஒண்ணும் சரியா படல. நான் சமமா பிரிச்சு தாங்கன்னு கேட்க போறேன்” என்று சொல்ல நேத்ரா சத்தமிட்டாள்.
“நீ கேட்டா மட்டும் உடனே ஓகேனு சொல்லிடுவாங்களாக்கும். ஏன்மா நீ வேற? இதுக்கே இந்த 2, 3 நாள்ல எவ்ளோ ஆர்ப்பாட்டம்?”
“ம்மா அவங்க நம்ம சொன்னா ஒத்துக்க மாட்டாங்க. பிரச்சனை தான வரும். அமைதியா இரு”
“ஆனா ஏன் இந்தப் பாட்டிமா கூட ஒண்ணும் கேட்கல. ச்சே” என்று சோர்வாக முடித்தாள்.
நாளை மறுநாள் ரிஜஸ்ட்ரேஷன் என இருக்க அதற்கான வேலைகள் மும்முரமாகச் சென்றது.
அவர்கள் மூவரும் மனதில் எவ்வளவு வருத்தம் இருந்தாலும் அமைதியாகக் கையெழுத்திட்டனர்.
இந்நிலையில் பத்மா பேச்சு வாக்கில் சாந்தமூர்த்தியிடம் முதலில் அமுதா கையெழுத்து போட யோசிப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.
அதைக் கேட்டவர் அமுதாவை கோபமாக அழைத்தார்.
“என்ன தம்பி?”
“கையெழுத்து போட யோசிச்சிங்களாமே? யாரு கையெழுத்து போட வேண்டாம்னு சொன்னாங்க? உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லையா?” என்று கோபமாகக் கேட்டான்.
“இல்ல தம்பி. நான் அப்படி எதுவும் சொல்லலியே” என்று சமாளிக்க இது சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.
ஒரு கட்டத்தில் நீங்க சொன்னா தான் ஊருக்கு போவேன் என்று அழுத்தமாக அமர்ந்திருக்கப் பத்மா உண்மையை உடைத்தார்.
“ஏன் தயங்கற? வீணா தான் சொன்னான்னு சொல்லு” என்று சொல்லி விட்டார்.
“என்னது வீணா சொன்னாளா? அவ சொல்றத நம்பறீங்க? என்ன நம்ப மாட்டீங்களா?” என்று ஒரு மூச்சுச் சண்டை போட்டவன் அப்போதே கோபமாகச் சென்னை கிளம்பினான்.
இதற்கிடையில் சாந்த மூர்த்திப் போன் செய்து தீக்ஷ்த்திடம் சொல்ல அடுத்தச் சண்டை ஆரம்பமாகியது.
வீணா தான் கையெழுத்து போட சொன்னதாக அப்படியே பேச்சை மாற்ற எல்லாப் பழியும் அமுதா மேல் வந்தது.
தீக்ஷித் மற்றும் முகிலன் கூட அமுதாவிடம் சண்டைக்கு வந்தனர்.
இந்தப் பிரச்சனை இரு குடும்பத்துக்குள்ளும் பெரிய புயலை உண்டாக்கியது.
அன்று இரவு நேத்ராவின் வீட்டில் யாரும் உறங்கவில்லை.
கல்யாணம் என்ற ஒன்று ஏன் தனக்கு அமைந்தது என்று யோசித்தபடி மனதிற்குள் குமைந்தாள் நேத்ரா.
