இதயம் 3
அடுத்த நாள் சொத்து விஷயத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட நேத்ராவின் சொந்தங்கள் அவர்களை விசாரித்தனர்.
அவர்கள் எல்லாருக்கும் சாந்தமூர்த்தி மீது கோபம் வந்தது.
எல்லோரும் அருகிலே இருக்க யாரையும் கூப்பிடாமல் சொத்தை பிரித்தது அவர்களைக் கொந்தளிக்கச் செய்தது.
அதுவும் ஒரு தலை பட்சமாகப் பிரித்ததில் அவளது சொந்தங்கள் நேத்ராவின் வீட்டில் வந்து சண்டையிட்டனர்.
“என்ன பெரியம்மா? ஏன் இப்படி பண்ணீங்க?” என்று ஜெயந்தி கேட்க
“அவன் கிட்ட ஒண்ணும் சொல்ல முடியல”
“நீங்க சொல்லிருந்தா எல்லாம் கேட்ருப்பாங்க பெரியம்மா?”
“அவன் ஏதாவது ஆரம்பிச்சாலே திட்றான் மலர்”
மலர்க்கொடியும், ஜெயந்தியும் பத்மாவதியின் கணவரின் தம்பி பிள்ளைகள். அவர்களுக்கு ஒரு தம்பியும் உண்டு.
எந்த ஒரு விஷேசமோ, துக்கமோ எங்கே போனாலும் ஒன்றாகச் செல்வார்கள். உள்ளூரிலேயே இருப்பதால் எந்தப் பிரச்சனை என்றாலும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கலந்து கொள்வார்கள்.
அப்படி இருக்கும்போது சாந்தமூர்த்தியின் செயல் அவர்களைக் கோபப்படுத்தியது.
“அம்மு நீ எதுவும் கேட்கலயா?”
“கேட்டேன் மலர். அவங்க கரெக்டா இருக்கும்னு சொல்லிட்டாங்க”
“ராஜா கூட அப்படி தான் சொன்னாரா?”
“ஆமா அக்கா. நான் ஏதாவது கேட்கலாம்னு பார்த்தா நேத்ரா எதுவும் கேட்க விட மாட்டேங்கிறா?”
“ஏன் நேத்ரா இப்படி பண்ற? அம்மாவ ஏன் கேட்க வேணாம்னு சொன்ன?”
“அத்தை அவங்க இப்ப சொத்து பிரிக்கிறேன்னு சொன்னதே ஷாக். மறுபடியும் கல்யாணத்துல பிரச்சனை பண்ணா என்ன பண்றது? அதான் அமைதியா இருக்கச் சொன்னேன்”
“எவடி இவ? இப்போ மட்டும் என்னாச்சு? என்னைய எல்லாம் வில்லி மாதிரி பார்க்கறாங்க?”
“ஏன் இப்படிச் சொல்ற? என்னாச்சு அம்மு?” என்று மலர் கேட்க
“அது ஏன் மலர் கேட்கற? வீணாகிட்ட போன் பண்ணி கேட்டா அவ ஃபர்ஸ்ட் சைன் போடாதீங்கனு சொன்னா. அதை இவங்க பாட்டிமா அப்படியே தம்பிட்ட சொல்லிட்டாங்க. அவன் என்ன குற்றவாளி மாதிரி கேள்வி கேக்குறான்”
“அதெல்லாம் சாந்தமூர்த்தித் தெளிவா தான் வந்திருக்கான். வர்றப்பவே ஜீவாட்ட ரிஜிஸ்டரேஷன் பத்தி பேசிட்டு வந்திருக்கான். நாங்க தான் அசால்ட்டா இருந்திட்டோம்” என்று ஜெயந்தி சொல்ல அமுதா அதிர்ச்சியானாள்.
“என்னக்கா சொல்றீங்க?”
“ஆமா அம்மு. அவன் சென்னைல இருக்கறப்பவே இந்த டீடெய்ல்ஸ்ல கேட்ருக்கான்”
“ஜீவா உங்க அண்ணாக்கு போன் பண்ணி கேட்டான். இவரு அப்படி எதுவும் இல்லன்னு சொல்லிட்டாரு”
“அதெல்லாம் இருக்கட்டும். நீங்க ஏன் எனக்குப் போன் பண்ணல?”
“எங்கக்கா போன் பண்றது? அவங்க பண்ற ஆர்ப்பாட்டத்துல… இதுல மாப்பிள்ளை வீட்ல இதை பத்தி வாயே துறக்கக் கூடாதுனு சொல்றான்கா” என்று சொன்னவளை நம்ப முடியாமல் பார்த்தார்.
“என்ன சொல்ற அம்மு? இவன் முன்ன இப்படி இல்லையே? எப்படி இப்படி மாறி போனான்?” என்று பொரிந்து தள்ளினார்.
“கையெழுத்து போடாம வீட்ல கூடச் சாப்பிடல அக்கா. நேத்ரா தான் வெளில வாங்கிட்டு வந்து கொடுத்தா”
“ஏன் நேத்ரா வாங்கிட்டு வந்து கொடுத்த? அந்த ஆள சாப்பிடாமயே சாவுன்னு விட்ருக்கணும்”
“சுரேஷ்னால தான் அவனை பத்தி தெரிஞ்சதுனு அவனாவே புரிஞ்சிகிட்டு எங்கள எதிரி மாதிரி பார்க்கறான்? அவன் அவங்க வீட்ல தங்கினதே தப்பு மாதிரி”
“எங்கள எல்லாம் மனுசங்களா கூட மதிக்கிறது இல்ல. வீணாவை அன்னைக்குச் சென்னைல கடைல பாத்தோம்… அவ ஒரு வார்த்த கூடப் பேசாம போறா”
“அதெப்படி உங்களுக்கு வீடு. அவனுக்குக் கடையாமா?”
“அவனுக்குச் சென்னைல கம்பெனி இல்லயா? இல்ல வீடு தான் பங்களா மாதிரி இல்லயா? அவன்கிட்ட என்ன இல்லன்னு இப்படி அநியாயம் பண்றான்” என்று பொரிந்து தள்ளினார்.
“தீக்ஷித் கிட்ட எதுவும் சுரேஷ் பேசினானா அக்கா?”
“அவனுங்க பேசிட்டு தான் இருக்காங்க. ஆனா இதை பத்தி ஒன்னும் பேசின மாதிரி காணோம்” என்று ஒன்றும் புரியாமல் ஜெயந்தி சொன்னார்.
இதில் சாந்தமூர்த்திக் குடும்பமும், ஜெயந்தி குடும்பமும் ரொம்ப நெருக்கமாகப் பழகினார்கள்.
இவர்கள் யாருக்காவது உடம்பு சரியில்லாமல் சென்னைக்குப் போகும் போது சாந்தமூர்த்தியும், வீணாவும் பார்த்துக் கொண்டார்கள்.
அதே போல எங்கயாவது சுற்றுலா சென்றாலும் சேர்ந்தே சென்றார்கள். தீக்ஷித், முகிலன், சுரேஷ், அஸ்வதி ஆகிய நான்கு பேரும் ஒரே வயதையொத்தவர்கள்.
அஸ்வதி சுரேஷின் அக்கா. அதிலும் சுரேஷ் சென்னையில் படித்ததால் இவர்களுக்குள் உறவு முறையைத் தாண்டிய நட்பு முறை இருந்தது.
சுரேஷ் சில நாட்களில் தீக்ஷித் உடனே தங்கி கொள்வான். அப்படி அவன் தங்குகையில் ஏதோ சரியில்லை என்று தோன்ற போய் எங்கோ முடிந்தது.
அதனால் சாந்தமூர்த்திக்கு சுரேஷின் மூலம் கோபம் அதிகம். சுரேஷால் தான் தன்னைப் பற்றித் தெரிந்தது என்று ஜெயந்தியின் குடும்பத்திடம் அதிகம் வைத்து கொள்வதில்லை.
அதுவும் போக நன்றாகப் பேசி கொண்டிருந்த வீணாவும் சரியாகப் பேசாததால் எல்லாமாகச் சேர்ந்து ஜெயந்தி குமுறினார்.
இவர்கள் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்க மலர் யோசனையில் இருந்தார்.
“நீ என்ன யோசிச்சிட்டு இருக்க மலர்?”
“ஏக்கா அப்படினா எங்களையும் கடைய காலி பண்ண சொல்லிடுவாங்களா?”
“நம்ம ஊர்ல வேற கடையே இல்லையா? நீங்க ஏன் இதெல்லாம் யோசிக்கறீங்க?”
“அவரு எல்லாம் பிளான் பண்ணி தான் பண்றாரு. படிக்க வச்சாருன்ற ஒரே காரணத்துக்காகத் தான் அமைதியா இருக்க வேண்டியதா இருக்கு. விடுங்க அத்தை. பார்த்துக்கலாம்” என்று நேத்ரா ஆறுதல் கூறினாள்.
மலர்க்கொடியின் கணவன் வாசவன் நேத்ராவின் கடையில் தான் வாடகைக்குக் கடை வைத்திருந்தார்.
இப்பொழுது கிரயம் ஆனதில் ஆளாளுக்கு ஒவ்வொரு மன நிலையில் இருந்தனர்.
எல்லோரும் சாந்தமூர்த்தியின் செயலால் அடுத்து என்னென்ன நடக்குமோ என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனையில் இருந்தனர்.
சென்னை சென்ற சாந்த மூர்த்தி அடுத்த இரு வாரங்களில் பணத்தை எடுத்துக் கொண்டு வந்தார்.
அவரிடம் வாங்கிய பணத்தை நேத்ராவின் குடும்பம் வங்கியில் டெபாசிட் செய்தது.
இதற்கிடையில் பொள்ளாச்சியில் திருமணத்திற்காக நகை எடுத்தவர்கள் அப்படியே குல தெய்வ கோயிலுக்கும் சென்று வந்தார்கள்.
வழக்கம் போலச் சந்திரன் பேசியவன் சீக்கிரமாக வைத்து விட்டான்.
“ஹலோ”
“ஹலோ”
“என்ன பண்ற?”
“சும்மா தான். பெரியப்பா வந்தாங்க. பத்திரிக்கை அடிச்சிட்டு எடுத்துட்டு வந்தாங்க”
“ஓகே”
“எங்க இருக்கீங்க?”
“டிவி பார்க்கறேன்”
“சரி. டயர்டா இருக்கு. தூங்க போறேன்” என்றவனிடம்
“ஹலோ…” என்று ஆரம்பிக்க
“என்ன?”
“ஒண்ணும் இல்லங்க. குட் நைட்” என்று போனை வைத்து விட்டாள்.
ஆக மொத்தம் அவனிடம் எதுவும் சொல்ல முடியாமல் போனதில் அவளுக்குக் கலக்கமானது.
‘என்னன்னு கூடக் கேட்க மாட்டாங்களா? குரலை வச்சே கண்டுபிடிப்பாங்கனு கேள்விப்பட்ருக்கோம். அவ்வளவு தூரம் கூடப் போக வேணாம். இவன் நம்ம கிட்டையே யோசிச்சு பேசற மாதிரி பேசறப்ப நம்ம எப்படிப் பேசறது?’
‘இப்ப இருக்கற சிட்சுவேஷன்ல கல்யாணம் ஆகறது தான் பரவால்ல. நடக்கறது நடக்கட்டும்’ என்று மனதை அமைதியாக்கினாள்.
கல்யாண வேலைகள் பரபரவென்று சென்று கொண்டிருக்கப் பூபாலன் எப்போதும் போலக் குறுந்தகவல்கள் அனுப்பிக் கொண்டிருந்தான்.
இடையில் ஒரு முறை குறுந்தகவல் அனுப்பும் போது அவள் கோவையில் இருக்கும் போது,
“வீட்டுக்கு யாரும் இல்லாதப்ப வரேன்” என்று அனுப்பி இருந்தான்.
அப்போதே ‘என்ன இப்படி அனுப்பிருக்கான்?’ என்று யோசித்தாள். ஆனால் அதை அவள் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
ஆனால் இந்த நான்கைந்து நாட்களில் அந்த ஆள் சரியில்லை என்று உள்ளுக்குள் ஒரு குரல் ஒலித்துக் கொண்டிருந்தது.
மகள் போல என்று பேசியவன் இப்போது காதலி மாதிரி பேசி கொண்டிருந்தான்.
அவ்வப்போது “அழகாக இருக்க” என்று கூடக் குறுந்தகவல் வரும்.
ஆனால் இவள் எதையும் தப்பான கண்ணோட்டத்தில் எடுக்கவில்லை.
அவள் இத்தனை வருட ஒட்டு மொத்த ஏக்கத்தையும் தீர்ப்பது போல அவனிடம் பேசி கொண்டிருந்தாள்.
குறுந்தகவல்களில் ‘டி’ போட்டு பேச ஆரம்பித்தான்.
இவள் ஏதோ ஒரு கடையில் இருப்பதாகச் சொல்ல யார் யாருடனோ இணைத்துத் தப்பு தப்பாக அனுப்பினான்.
அவளால் இவற்றைக் கொஞ்சமும் ஜீரணிக்க முடியவில்லை.
வீட்டிலும் இதைப் பற்றி ஒன்றும் சொல்ல முடியவில்லை.
அவனுடைய குறுந்தகவல்களைப் பார்க்கும் போது சந்திரன் அனுப்புவதை எல்லாம் இவன் அனுப்பிக் கொண்டிருக்கிறானோ என்று பயந்தாள்.
கல்யாணம் நெருங்குகையில் கடைசி ஒரு வாரம் சந்திரன் சரியாகப் போன் செய்யவுமில்லை.
அவன் பத்திரிக்கை வைக்க அங்கும், இங்கும் அலைந்து கொண்டிருப்பதாகச் சொன்னான்.
ஏற்கனவே வீட்டில் இருந்த பிரச்சனையில் அவளால் இந்த விஷயத்தில் யாரிடமும் ஆலோசனை கேட்க முடியவில்லை. அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தாள்.
ஆனாலும் கல்யாணம் ஆகி விட்டால் எல்லாப் பிரச்சனையும் முடிந்து விடும் என உறுதியாக நம்பி கொண்டிருந்தாள்.
ஏனெனில் அவர்கள் வந்து சென்ற அன்று பாதுகாப்பாக உணர்ந்தாள்.
இனி தன் கவலை எல்லாம் மறைந்து விடும் என்று நம்பிக்கை இருந்தது.
ஆனால் ஏனோ அது இப்போது ஆட்டம் காண ஆரம்பித்திருந்தது.
