இதயம் 5

நேத்ரா முதலிரவு அறைக்குள் நுழையும் போது அவனோ செல்போனை நோண்டி கொண்டிருந்தான்.

அவள் தயங்கி நிற்க “என்ன?” என்று கேட்டான்.

“அத்தை உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்க சொன்னாங்க”

“அப்படியா” என்றவன் எழுந்து நிற்க அவள் காலில் விழுந்து வணங்கினாள்.

அவள் அப்படியே நின்று கொண்டிருப்பதைப் பார்த்து திரும்ப “என்ன?” என்று கேட்க

“பால் குடிக்கச் சொல்லி சொன்னாங்க” என்று சொல்ல

“சரி. கொடு” என்று குடித்தவன் அவளிடம் கொடுத்தான்.

அவள் என்ன செய்வதென்று புரியாமல் நின்றாள்.

“என்ன யோசிச்சிட்டு இருக்க? உட்காரு” என்றவன்

“வேலை எல்லாம் செய்யத் தெரியுமா?”

“ஓரளவுக்குச் செய்வேங்க”

“அம்மாகிட்ட எல்லாம் கேட்டுக்கோ” என்றவன்

“சசி பசங்க மேல ஏதாவது கை வச்சா என்ன பண்ணுவேம்னு தெரியாது. அம்மா, சசிக்கப்புறம் தான் நீ. புரிஞ்சுதா?”

அவனை உணர்ச்சியற்ற பார்வை பார்த்தவள் சரி என்பது போல் தலையாட்டினாள்.

“சரி. தூங்கு” என்றவன் படுத்துக் கொள்ள இவளும் கட்டிலின் ஒரு மூலையில் குறுக்கி படுத்து கொண்டாள்.

ஏற்கனவே பூபாலனின் பிரச்சனையில் இருந்தவளுக்கு இவனின் பேச்சும் சேர்ந்து எதிர்காலத்தை நினைத்து மிரண்டாள்.

ஏதேதோ யோசித்தபடியே படுத்தவள் எப்பொழுதும் தூங்கினாள் என்று தெரியவில்லை.

ஆனால் சீக்கிரம் முழிப்பு வந்து விட்டது.

வெளியே சென்றால் யார் என்ன கேட்பார்களோ? என்ற பயத்தில் அமைதியாகப் படுத்திருந்தாள்.

சிறிது நேரத்தில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்க கதவை திறக்க போன நேத்ராவைத் தடுத்தவன்

“நில்லு” என்றவுடன் தயங்கினாள்.

“தலைல இருக்கற பூ எடுத்து விடு. அப்புறம் பொட்டு அழி”

அவன் சொல்ல சொல்ல அவள் அதைச் செய்தாள்.

“ஓகே. இப்போ போ. அம்மா கேட்டா நடந்துடுச்சுதன்னு சொல்லு” என்று சொல்ல

‘ஃபர்ஸ்ட் நாளே ஆக்டிங்கா… அம்மாக்காகத் தான சொல்றான். நல்லவன் தான் போல’ என்று நினைத்தபடியே கதவை திறந்தாள்.

வெளியே வந்தவள் ப்ரஷ் செய்து குளித்து ரெடியாகி வர அவள் மாமியார் அருகே வந்தாள்.

“சந்தோஷமா இருந்தீங்களா நேத்ரா?” என விசாரிக்க முதலில் திகைத்தவள் சிரித்துக் கொண்டே மழுப்பினாள்.

மைதிலியும் சந்தோஷமாகச் சென்று விட்டாள்.

‘ஆரம்பமே இப்படி. இன்னும் என்னென்ன நடக்கப் போகுதோ’

சிறிது நேரம் கழித்துச் சந்திரன் கிளம்பி வந்தவுடன் சாப்பிட்டு விட்டு இருவரும் கோவிலுக்குச் சென்றனர்.

“அம்மா ஏதாவது கேட்டாங்களா?”

“கேட்டாங்க. நீங்க சொன்ன மாதிரியே சொல்லிட்டேன்”

“ஓகே. இப்படியே மெய்ன்ட்டெயின் பண்ணு” என்று சொல்ல அமைதியாகத் தலையாட்டினாள்.

அடுத்த இரு நாட்களில் கிடா விருந்து நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

2 நாள் பிஸியில் நேத்ரா போனை பார்க்காமல் இருந்தவள் இன்று பார்க்க அவளுக்குக் கோபம் அதிகமாகியது.

‘உன்னால நான் இந்த ரெண்டு நாளா குடிக்கிறேன்’

‘புது ஆள் வந்தவுடனே என்ன கழட்டி விட்டுட்டியா’

அவளுக்குக் கோபம் சுறுசுறு வென்று ஏற

‘உங்க மக செத்துட்டா. இதுக்கு மேல மெஸேஜ் வந்தா விளைவு விபரீதமா இருக்கும்’ என்று அனுப்பியவள் மேற்கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் நின்றாள்.

இதற்கிடையில் அதற்கடுத்த நாள் கிடா விருந்துக்கு முன் தினமே குடும்பத்தோடு பூபாலன் வந்து விட்டான்.

அவனை வரவேற்க மனமில்லாமல் அமைதியாய் இருந்தாள்.

ஏதேச்சையாக வாட்சப் செக் செய்ய அவன் அச்சில் ஏற்ற முடியாத வார்த்தையாக அவன் அனுப்பியிருந்தான்.

ஏற்கனவே வீட்டை பிரிந்து வந்த பிரிவு, சந்திரனால் உண்டான குழப்பம், அதோடு சேர்ந்து இந்தக் குறுந்தகவல்களைப் பார்த்ததும் அடக்க முடியாமல் கதறி அழுதாள்.

வெளியே உறவினர்கள் இருக்கத் தன்னை மறந்து அழுதவள் சுதாரித்துக் கொண்டு வெளியே வர மைதிலி முறைத்து கொண்டாள்.

“நேத்ரா”

“என்ன அத்தை?”

“நீ அண்ணாவ வாங்கன்னு சொன்னியா? இல்லையா?”

“அ… அது… அத்தை” என்று அவள் திணற

“என்னோட அக்காவோட புருஷன். அண்ணா எவ்வளவு முக்கியமானவரு? இதை தான் உங்க வீட்ல சொல்லிக் கொடுத்தாங்களா?”

“என்ன நினைச்சிட்டிருக்க நீ? மரியாதைன்னா என்னனே தெரியாதா?” என்று திட்ட ஆரம்பித்திருந்தாள்.

‘இவனுக்கு எதுக்கு மரியாத?’ என்று அமைதியாக இருக்க அவனோ மைதிலி திட்டுவதைப் புன்சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான்.

‘ச்சே… இந்த வீட்டுக்கு வந்து இன்னும் என்னென்ன அவமானப்படணுமோ?’ என்று நினைத்தபடி மனம் வெம்பினாள்.

“போ… போய் அண்ணாக்கு ஸ்வீட் கொண்டு வந்து கொடு” என்று நேத்ராவை விரட்டியவள்

“சின்னப் பொண்ணு அண்ணா. எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க” என்று மைதிலி சமாதானம் சொன்னது காதில் விழ பல்லைக் கடித்தபடி உள்ளே சென்றாள்.

நேத்ராவுக்கு ஒவ்வொரு இரவும் பயத்தோடும், நடுக்கத்தோடும் கழிந்தது.

அடுத்த நாள் கோவிலுக்கு அனைத்து உறவினர்களையும் அழைத்து விருந்து வைத்தார்கள்.

நேத்ராவின் வீட்டிலிருந்து அவளுடைய சொந்தங்களும் வந்திருந்தார்கள்.

கிடா வெட்டியவுடன் சாமி கும்பிட்டு விட்டு சமைக்க ஆரம்பித்தார்கள்.

சமையலுக்கு ஆட்கள் வேலை செய்ய எல்லாரும் பேசி கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரத்தில் மைதிலி கூப்பிடுவதாக யாரோ சொல்ல அவள் உள்ளே செல்ல பூபாலனும் உள்ளே சென்றான்.

யாரோ பின்னால் வருவது போல் இருக்க, திரும்பி பார்த்தவள் பூபாலன் வருவதைப் பார்த்தவள் திடுக்கிட்டாள்.

‘இவன் எங்க பின்னாடி வரான்?’

“எனக்கு மரியாத கொடுக்கலேன்னா என்ன நடக்கும்னு தெரிஞ்சிக்கிட்டியா?” என்று அவன் புன்னகையுடன் கேட்க அவளோ இறுகிய போய் அமைதியாக நின்றிருந்தாள்.

“ஏய் பதில் சொல்லுடி” என்று கேட்டவனை ஒரு புழுவைப் போலப் பார்த்தவள் அங்கிருந்து வெளியேறினாள்.

அவள் வெளியே செல்லும் போது மைதிலி நேத்ராவை தேடி கொண்டிருந்தாள்.

“எங்க போன நேத்ரா? உன்னை எவ்ளோ நேரம் தேடுறது?” என்று கேட்க பின்னால் பூபாலன் வந்து நின்றான்.

“நான் தான் பேசிட்டு இருந்தேன்” என்று நேத்ராவை பார்த்துக் கண் சிமிட்டினான்.

“ஓ… அப்படியா” என்றவள் “போய் வேலைய பாரு” என்று திட்டியபடியே அங்கிருந்து அகன்றாள்.

பூபாலன் நேத்ராவை வன்மமாகப் பார்த்தபடி அங்கிருந்து சென்றான்.

விழா முடிந்து அன்றிரவு வந்தவர்கள் அடுத்த மூன்று நாட்கள் கோவையில் இருந்தார்கள்.

சந்திரன் அவன் அம்மாவுடன் பேசினான். தந்தையிடம் பேசினான். சசியிடம் பேசினான்.

அவனைச் சுற்றி யாரோ ஒருவர் உடன் இருந்தார்கள். அவனுடன் சரியாகப் பேச முடியவில்லை.

‘எங்காவது கடத்திட்டு போயிடலாமா? போன்ல தான் எதுவும் ஒழுங்கா பேசலேனா, நேர்ல அதுக்கு மேல இருப்பான் போலயே’

இருந்த பிரச்சினையில் அவனுடனாவது இருக்க மாட்டோமா என்று அவள் ஏக்கமாக யோசித்தாள்.

ஆனால் அவளால் யோசிக்க மட்டுமே முடிந்தது.

இந்த நிலையில் நேத்ராவின் அம்மா அவளுடன் பேச போன் பண்ண அவளோ சைலண்ட்டில் போட்டிருக்கப் போனை எடுக்க முடியாமல் போனது.

நம்பர் பார்த்ததும் அவள் டயல் செய்ய அமுதா போனை எடுத்தாள்.

“ஹலோ” என்ற அமுதாவின் குரலில் நேத்ராவுக்கு அழுகை வரும் போலிருந்தது.

“ம்மா…”

“நல்லாருக்கியா அம்மு?”

“நல்லாருக்கேன்மா. அங்க எல்லாரும் நல்லாருக்காங்களா?”

“நாங்க நல்லாருக்கோம். நீ சந்தோஷமா இருக்கியா?”

“சந்தோஷமா இருக்கேன்மா. அப்புறம் ஒரு விஷயம்மா. அந்தப் பூபாலன் இருக்கான்ல அந்த ஆள் சரியில்லமா. நீங்க அந்த ஆள்ட்ட பேசறப்ப கரெக்டா பேசுங்கமா” என்றாள்.

“என்னடி சொல்ற?” என அமுதா அதிர்ச்சியாகக் கேட்க

“ஆமாமா”

“சரிடி. நீ குழப்பிட்டு இருக்காத”

“சரிமா. நீங்களும் கவனமா இருங்கமா. நான் போன் வைச்சிடுறேன்” என்று சொல்லியவள் போனை கட் செய்தாள்.

அன்று மாலை சினிமாவுக்குச் செல்லுங்கள் என்று மைதிலி சொல்ல நேத்ரா சந்தோஷமாகக் கிளம்பினாள்.

‘ஹப்பா… நாங்க 2 பேர் மட்டும் போறோம்’ என்று அவள் பூரிக்கக் கிளம்பும்போது சசி, அவளது கணவன், 2 குழந்தைகள் எனக் கிளம்பினார்கள்.

ஒரு நிமிடம் அதிர்ந்தவள்

‘சின்னப் பசங்கள விட்டு எப்படி போக முடியும்? அதான் இவங்களும் வராங்க போல’

‘ஆனா இவன் எப்ப பார்த்தாலும் அந்தப் பசங்களையே கவனிச்சிட்டு இருக்கான். இவ ஹாயா இருக்கா’

‘இதுல பெருமை வேற. இங்க வந்தா அண்ணனே பசங்களை கவனிச்சிக்குவானு’

‘ஆனா கொஞ்சம் கூட மேரேஜ் ஆகிடுச்சு. தனியா விடணும்னு யோசிக்க மாட்டாங்களா?’

ஒவ்வொன்றாக யோசித்தபடியே அந்தத் திரைப்படத்தைப் பார்த்து முடித்தாள்.

அந்த வார இறுதியில் சந்திரனும், நேத்ராவும் சசியின் வீட்டுக்குச் சென்றார்கள்.

பூபாலன் தனது குறுந்தகவல்களை நிறுத்தவில்லை. அதைப் படிக்கப் படிக்க இவளுக்கு அடிவயிறு கலங்கியது.

சந்திரனிடம் சொன்னால் தன்னை நம்புவானா எனத் தயக்கம்.

‘வீட்டுக்கு வந்தவுடனே அக்கா குடும்பத்தைப் பிரிச்சிட்டானு பழி வருமோ’ எனக் குழப்பம்.

இதையெல்லாம் நினைத்து குழம்பியவள் ஆலோசனை கேட்பதற்காகத் தனது தோழிக்கு போன் செய்தாள்.

“ஹலோ”

“ஹேய் புதுப் பொண்ணு எப்படி இருக்க?”

“ம்ம்… ஏதோ இருக்கேன்டி”

“ஏன்டி இப்படி பேசற? என்னாச்சு?”

“ஒரு பிரச்சனைடி. உங்கிட்ட என்ன பண்ணலாம்னு கேட்கலாம்னு தான் போன் பண்ணேன்”

“சொல்லுடி” என்றதும் பூபாலனை பற்றிக் கூறியவள்

“எனக்கு இந்தப் பிரச்சனையில என்ன பண்றதுனு பயமா இருக்குடி. நம்மள எதுவும் தப்பா புரிஞ்சிப்பாங்களா?”

“நேத்ராமா நீ சொல்லிடுடா. அந்தப் பொறுக்கி அனுப்பின மெஸேஜ் அண்ணாகிட்ட காமி. அவரு ஸ்டெப் எடுப்பாரு. அவருகிட்ட எதையும் மறைக்காம சொல்லிடு”

“ஓ… அப்படினா சரிடி. நான் அவர்ட்ட பேசறேன். ரொம்பத் தேங்க்ஸ்டி”

“எதுக்குத் தேங்க்ஸ் சொல்ற பக்கி. நான் இருக்கேன். தைரியமா இரு. எதுனாலும் ஃபேஸ் பண்ணிக்கலாம்”

“எதுனாலும் எனக்குக் கூப்டிடுடி”

“சரிடி” என்றவள் அவனிடம் சொல்வதற்கான சந்தர்ப்பத்தை எதிர் நோக்கியிருந்தாள்.

 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
உன் கையில் என்னை கொடுத்தேன்
405 13 1
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page