அடுத்த வாரத்திலிருந்து சந்திரன் வேலைக்குச் செல்ல மைதிலி சந்திரனுக்கான வேலைகளை நேத்ராவை செய்ய விடவில்லை.
“நீ செஞ்சா அவனுக்குப் பிடிக்காது”
“நீ இப்படி பண்ணா அவன் சாப்பிட மாட்டான்” என்று ஏதோ ஒரு காரணம் சொல்லி தடுக்க முதலில் புது இடம் ஆதலால் நேத்ரா ஒன்றும் புரியாமல் திணறினாள்.
அவளது திணறலை கண்டு கொண்ட மைதிலியோ அவளை ஏதேனும் சொல்லி கொண்டே இருக்கையில்,
ஒரு நாள் சந்திரன் அலுவலகம் முடிந்து வந்தவுடன் நேத்ரா அவனுக்கு டீ போட்டு கொடுக்க
அவன் அருகில் பேசி கொண்டிருந்த மைதிலியோ டீயை பார்த்ததும் முகம் சுளித்தாள்.
“ஏய் என்ன டீ இப்படிப் போட்டிருக்க?”
‘டீ இப்படி போடாம எப்படி போடறதாம்?’
“ஏன் அத்தை?”
“அவன் களைச்சு போய் வந்திருக்கான். இப்படி தான் டீ போடுவியா?”
“நல்லா தான் போட்டேன் அத்தை” என்று அவள் பதில் சொல்ல
“ஏய் என்ன எதிர்த்து பேசறியா?” என்று மைதிலி கத்த நேத்ராவோ அதிர்ந்து போய் விழித்தாள்.
‘இதுல எதிர்த்து பேச என்ன இருக்கு? கேட்டதுக்குத் தானே பதில் சொன்னேன்’ என்று நேத்ரா யோசிக்க
“டீ கூட ஒழுங்கா போட மாட்டியாடி?” எனச் சந்திரனும் திட்ட என்ன சொல்வது என்று புரியாமல் தடுமாறினாள்.
திரும்பவும் அவனிடம் கப்பை வாங்கி டீயை போட்டவள் கொண்டு வந்து அவனிடம் கொடுக்க,
அதைக் குடித்தவன் மைதிலியுடன் பேசி கொண்டிருக்க அவள் உள்ளே வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள்.
இந்நிலையில் அலைபேசியில் குறுந்தகவல் வந்ததற்கான சத்தம் கேட்க அதை எடுத்து பார்த்தவள் அதிர்ச்சியில் உறைந்தாள்.
‘உன்னால தான நான் குடிக்கறேன். என்ன எங்க வீட்ல கேவலமா பார்க்குறாங்க. உன்னால என் இமேஜே டேமேஜ் ஆயிடுச்சு. உனக்கென்ன அழகினு திமிராடி?’ என இருந்தது.
‘இவனுக்குத் தலைல முக்கால்வாசி ஒளிவட்டம் தெரியும். பெரிய ஆணழகன்னு நினைப்பா?’ என்று பல்லை கடித்தாள்.
மேலும் அச்சில் ஏற்ற முடியாத கெட்ட வார்த்தைகள் இருக்க இந்த விஷயத்தை இதற்கு மேல் சந்திரனிடம் சொல்லாமல் இருக்க வேண்டாம் என முடிவெடுத்தவள் அன்று இரவு கண்டிப்பாகச் சொல்ல வேண்டும் என நினைத்து கொண்டாள்.
இரவு சாப்பிட்டு முடித்தவுடன் டிவி பார்த்து கொண்டிருந்தவன் அருகில் அமர்ந்த அவளைக் கவனிக்காமல் அவனோ மிக முக்கியமாக டிவியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்னங்க”
“என்ன?”
“உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசணும்”
“முக்கியமான விஷயமா?”
“ஆமா”
“சரி. சொல்லு” என்றவன் ரிமோட்டை நோண்ட இவள் எப்படி ஆரம்பிப்பது எனத் தயங்கினாள்.
‘நான் எவ்ளோ டென்ஷன்ல இருக்கேன். நீ ரிமோட்ல விளையாடிட்டு இருக்கியா?’ என மனதிற்குள் திட்டியவள்
“என்னங்க உங்க பெரியப்பா” என்று நிறுத்த
“பெரியப்பாவுக்கு என்ன?”
‘டேய் முழுசா சொல்ல விடுடா’ எனப் பல்லை கடித்தவள்
“உங்க பெரியப்பா எப்படிங்க?”
“ஏன் நல்ல மனுசன் தான். ஏதாவது ஹெல்ப் கேட்டா பண்ணுவாரு”
“ஓ…” என்றவள்
“என்னங்க என்கிட்ட அவரு பேசற விதமே சரியில்ல” என்றவள் தனக்கு வந்த குறுந்தகவல்களைக் காட்ட
அதைப் படித்துப் பார்த்தவன் பெரிதாக ஒன்றும் கோபப்பட்டது போல் தெரியவில்லை. அவன் முகத்திலிருந்து பெரிதாக ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.
“சரி. நான் இதை பார்த்துக்கறேன். அம்மா, அப்பாகிட்ட இதபத்தி எதுவும் சொல்லிடாத” என்றவன் சொல்ல
‘ஏன் இதை பத்தி அவங்க கிட்ட சொல்ல கூடாது?’ என்று அவளுக்குத் தோன்றினாலும் சரி என்பது போல் தலையசைத்தவள்
அன்றிரவு அவனுடன் விஷயத்தைப் பகிர்ந்த நிம்மதியில் உறங்கினாள்.
அடுத்த நாள் சந்திரனின் அப்பாவின் தங்கைக்குப் பேத்தி பிறந்ததாகச் செய்தி வந்தது.
இதனால் வீட்டில் இருந்த அனைவரும் கிளம்ப நேத்ராவை யாரேனும் வந்தால் அவள் இருக்கட்டும் எனச் சொல்லி இன்னொரு நாள் அவளைக் கூட்டி செல்வதாகக் கூற அவளும் சரி என்று கூறி விட்டாள்.
அவள் வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் போது லேண்ட்லைன் அடித்தது.
எடுத்தவள் “ஹலோ” என்க
“ஏன்டி நீ செல் எடுக்கலேன்னா நான் வேற எதுவும் போன் பண்ண மாட்டேனா? என்னமா இப்படி பண்றீங்களேமா?” என்று பூபாலன் நக்கலடித்தான்.
நேத்ரா என்ன பதில் சொல்வது என்று புரியாமல் அமைதியாக இருந்தாள்.
“என்ன என்கிட்ட பேச மாட்டியா?” என மிரட்ட
“உனக்கு என்ன வேணும்?” என அவள் கோபப்பட
“ஆறு மாசமா பேசிட்டு இருந்துட்டு இப்போ கழட்டி விட்டுட்டு போறியே? உனக்கு அசிங்கமா இல்ல?” என அவன் கேட்க இவளுக்கோ உள்ளுக்குள் கனன்றது.
“ஹலோ வார்த்தைய பார்த்து பேசு. என்ன? நான் உன்கிட்ட அப்பானு நினைச்சு பேசினா நீ உன் மகளை இப்படி தான் கேவலப்படுத்துவியா? வைடா போனை” எனப் போனை கட் செய்தாள்.
அவள் வைத்தவுடன் காலிங் பெல் அடிக்க வெளியே பார்க்க செங்கப்பன் நின்றிருந்தான்.
செங்கப்பன் – சந்திரனில் வீட்டில் வேலை செய்பவன். வெளியே எந்த வேலை என்றாலும் செய்பவன். எங்கேனும் சென்றால் இவனைத் தான் வீட்டில் காவலாக வைத்து விட்டுப் போவார்கள்.
“வாங்கண்ணா. கடைல ஏதோ திங்க்ஸ் வாங்கிட்டு வர சொல்றேனு சொன்னாங்க. வாங்கிட்டீங்களா?”
“வாங்கிட்டேன் நேத்ரா” என்றவன் சொல்ல திரும்பப் போன் அடித்தது.
“அண்ணா போன பாருங்க. எனக்கு வேலை இருக்கு” என்று அவள் உள்ளே செல்ல போனை எடுத்தவன் பேசிவிட்டு
“உனக்குத்தான் நேத்ரா” எனச் சொல்ல அவள் திரும்ப வாங்கிப் பேசினாள்.
“ஹலோ”
“என்ன போன் கட் பண்ற? திமிரு பண்ணாம நடந்துக்கோ” என்று கோபமான குரலில் கத்தினான்.
ஏதாவது திட்டலாம் என்றால் அந்தப் பக்கம் செங்கப்பன் ஏதோ எழுதி கொண்டிருக்க அவள் சிரித்துக் கொண்டே
“சூடு சுரண இல்லாத ஜென்மங்கங்க கிட்ட என்னால பேச முடியாது. நான் வெச்சறேன்” என்று போனை கட் செய்தாள்.
குழந்தையைப் பார்க்க போனவர்கள் மாலையில் வர அவர்களுக்குக் காபி போட்டு கொடுத்தவளுக்கு அவர்கள் பூபாலனை பற்றிப் பேசி கொண்டிருப்பது காதில் விழ அதைக் கேட்க அவளுக்கு உள்ளுக்குள் பயம் வந்தது.
அவளைக் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்த மைதிலியோ,
“நேத்ரா என்ன பூபாலன் அண்ணா பேர் எடுத்தாலே உன் மூஞ்சி எப்படியோ போகுது?” என அவளை நோண்டினாள்.
“அதெல்லாம் எதுவும் இல்ல அத்தை” என அவள் சமாளிக்கப் பக்கத்தில் அமர்ந்திருந்த சந்திரனிடம்
“அன்னிக்கு அண்ணா வந்தப்ப அவரை வாங்கன்னு கூடக் கேட்கல தம்பி” எனப் புகார் அளிக்க அவள் அதிர்ச்சியோடு சந்திரனை என்ன சொல்வானோ எனப் பார்க்க
அவனோ “ஏன் பெரியவங்க வந்தா மரியாதையா பேச தெரியாதா?” எனத் திட்ட ஆரம்பித்தான்.
“அது…” என்று அவள் ஆரம்பிக்க
“விடும்மா. இனி இப்படி பண்ண மாட்டா” எனச் சமாதானம் சொன்னான்.
ஏதோ இந்த அளவாவது சொன்னானே என்று அவள் அமைதியானாள்.
ஆனால் அந்த அமைதிக்கு ஆயுள் கம்மி என்று அவளுக்குத் தெரியவில்லை.
மைதிலி நேத்ராவையும், சந்திரனையும் யோசனையோடு பார்த்து கொண்டிருந்தாள்.
இதற்கிடையில் வார இறுதியில் சந்திரனின் வீட்டுக்கு சசிகலா வந்து கொண்டிருந்தாள்.
அவளது 2 குழந்தைகளும் துறுதுறுப்பில் வார இறுதியை அவள் சந்தோஷமாகக் கழித்தாள்.
என்ன தான் இருந்தாலும் அவள் எப்போதும் சந்திரனை பற்றிய குழப்பத்திலேயே இருந்தாள்.
அவன் என்ன பண்ணினாலும் அதை அவன் அம்மாவிடம் மட்டுமே சொன்னான்.
ஏதேனும் கேட்க வேண்டியவற்றை அப்பாவிடம் கேட்டான்.
தங்கையிடம் மணிக்கணக்காகப் பேசினான்.
ஆனால் இவளை கொஞ்சம் கூடக் கண்டு கொள்ளவில்லை.
அன்று ஆபிஸ் சம்பந்தமாக ஏதோ கேட்க
“என்ன கேள்வி கேட்கற வேலை வைச்சுக்காத” என்று முகத்தில் அடித்தாற் போல் கூற அதிலிருந்து அவளுக்கு அவனிடம் பேச்சே வரவில்லை.
‘கேள்வியே கேட்காம என்ன பேச முடியும்?’
‘இவனும் எதுவும் சொல்ல மாட்டான். எதுனாலும் இதுங்களுக்குள்ள பேசிக்குதுங்க. நேத்ரா இதை இப்படியே விடக் கூடாது’
‘ச்சே இந்தப் பக்கினாலேயே எனக்கு மூளை குழம்பி போய்டும் போல’ என அவள் தனக்குள் புலம்பிக் கொண்டிருக்கையில் நிர்மலாவிடம் இருந்து போன் வந்தது.
“ஏய் நிம்மி எப்படி இருக்கிற?” என்று சந்தோஷ கூச்சல் போட்டாள்.
“அடியேய் கத்தாத… நான் நல்லாருக்கேன். நீ எப்படி இருக்க? அண்ணாட்ட சொல்லியாட்டியாடி?” என்று அவள் வரிசையாகக் கேட்க அவளது ஸ்ருதி இறங்கியது.
“நேத்ரா ஏன்டி அமைதியாகிட்ட?” என்று அவள் பதற
“ஒண்ணும் இல்லடி. அவருகிட்ட சொன்னேன். நான் பார்த்துக்கிறேனு சொன்னாரு. ஆனா…” என்று இழுக்க
“என்னடி ஆனா? முழுசா சொல்லுடி” என்று நிர்மலா கத்த
“இல்லடி. அவங்க அப்பா, அம்மாட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னாங்க” என்று அவள் புலம்பினாள்.
“நேத்ரா அண்ணாவே சால்வ் பண்ணலாம்னு நினைச்சிருப்பாரு. டோன்ட் வொர்ரி” என்று அவளைத் தேற்றினாள்.
“சரிடி. நான் வெச்சிடறேன்” என்றபடி போனை வைத்தாள்.
அடுத்த நாள் சந்திரனுக்குப் பிறந்த நாள். அதனால் முதல் நாள் இரவே சசியின் கணவர் அவனுக்குப் பிறந்த நாள் கேக்கை வாங்கி வந்திருந்தார்.
சந்திரனோ அசதியில் தூங்கியிருக்க நேத்ராவோ ஆர்வத்துடன் இவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.
நள்ளிரவு 12 மணிக்குச் சந்திரனை எழுப்பி அவனைக் கேக் கட் செய்யச் சொல்ல அவனோ அப்போதும் தூங்க நேத்ரா திடுக்கிட்டாள்.
‘இவ்வளவு ஆசையா செய்றாங்க. பெட்ரூம்ல இருந்து எழுந்து இங்க வந்தும் தூங்கறான்?’
‘இவன் மனுசன் தானா? உணர்ச்சியே இருக்காதா?’ என்ற யோசனையில் ஆழ்ந்தாள்.
அவர்கள் எழுப்பி விட்டதும் கேக் கட் செய்தவன் ஆத்விக்கும், அஸ்வதிக்கும் ஊட்டியவன் தனது தங்கைக்குக் கொடுத்து விட்டு நேத்ராவிடம் கொடுத்தான்.
அவளும் அவனை வாழ்த்தி விட்டு புன்சிரிப்புடன் வாங்கிக் கொண்டாள்.
இடையில் அவ்வப்போது கோவிலுக்குச் சென்றார்கள்.
புது மணமக்கள் ஆதலால் விருந்துக்கும் சென்றார்கள்.
அப்படி ஒரு விருந்தினர் வீட்டிற்குச் செல்லும் போது அவன் இயல்பாகப் பேச ஆரம்பித்தான்.
அடுத்த வாரத்தில் ஆடி மாதம் தொடங்குவதால் நேத்ரா அவள் வீட்டிற்குச் செல்வதை ஆவலோடு எதிர்நோக்க,
“நேத்ரா நீ ஊருக்கு எப்போ போற? அம்மா ஏதாவது சொன்னாங்களா?” என்று விசாரித்தான்.
“அடுத்தப் புதன்கிழமை போறேங்க. நீங்க எப்போ வருவீங்க?”
“ஆடி பதினெட்டுக்கு கூப்டிருக்காங்க தானே. நான் பண்டிகையப்ப வரேன்” என்று அவன் கூற
“சரிங்க” என்று சொன்னவளிடம்
“நேத்ரா நீ ஊருக்கு போயிட்டு வா. வந்தவுடனே நாம ஸ்டார்ட் பண்ணிடலாம். நான் ஜோசியர்கிட்ட நல்ல நேரம் பார்த்துட்டேன்” என்று சொல்ல அவள் மௌனமாகத் தலையாட்டினாள்.
‘யாரையாவது லவ் பண்றானோன்னு நம்ம எவ்ளோ பயந்தோம்? அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல’ என்று சந்தோஷப்பட்டவள் மேற்கொண்டு யோசிக்கத் திணறினாள்.
ஏனெனில் அவளுக்கு அச்சம், மடம், நாணம் போன்றவை அவன் சொல்லிய போது ஒன்றும் தோன்றவில்லை.
‘நேத்ரா உனக்கென்னடி ஆச்சு? இவனோட சேர்ந்து உனக்கும் ஜடபோபியா வந்துடுச்சா?’ என்று அவள் தனக்குள் மூழ்கினாள்.
அவளையே கவனித்துக் கொண்டிருந்தவன் “நேத்ரா என்ன ஆச்சு?” என்று கேட்க
“ஒண்ணும் இல்லங்க” என்று சொல்லியபடி அவள் நழுவினாள்.
அடுத்த ஒரு வாரம் கடகடவெனச் செல்ல அவள் ஊருக்குச் செல்லும் நாளும் வந்தது.
சந்திரனுக்கு வேலையிருக்கத் தனியே புறப்பட்டவள் அவனது வரவை ஆவலுடன் எதிர் நோக்கியிருந்தாள்.
ஆனால் அவன் வருமுன் வெடிகுண்டு வந்தது.
