அடுத்த வாரத்தில் வீட்டிற்குப் போனவள் தனது அம்மாவுடனும், பாட்டியுடனும் இனிமையாகப் பொழுதை கழித்தும் அவ்வப்போது அமுதாவை வம்பிழுத்தும் பத்மாவிடம் கொஞ்சி கொண்டும் இருந்தாள்.
நேத்ரா என்ன தான் தனது மனதை மாற்ற நினைத்தாலும் பூபாலனது தொல்லை விடவில்லை.
இவள் எடுக்காவிட்டால் அமுதாவின் செல்லிற்குப் போன் செய்தான்.
“நேத்ரா இந்த ஆள் எதுக்குப் போன் பண்றான்?”
“ம்மா போன அட்டெண்ட் பண்ணாத”
“ஏன்டி பேசாம போன அதுக்கு உங்க மாமியார் எதுவும் சொல்ல போறாங்க?”
“ம்மா நான் சொல்றது கேளு. தயவுசெய்து போன அட்டெண்ட் பண்ணாத” எனக் கத்தினாள்.
“கத்தாத. அதான் பேசல இல்ல” எனச் சமாதானம் செய்தாள்.
“சரிம்மா” என்றவள் யோசனையில் ஆழ்ந்தாள்.
இவர்கள் இருவரும் போனை தவிர்க்க அமுதாவின் செல்லுக்குக் குறுந்தகவல் வந்து கொண்டே இருந்தது.
‘நீ இப்போ எங்கிட்ட பேசலேன்னா நான் என்ன பண்ணுவேனு தெரியாது. நீ இன்னும் கொஞ்ச நேரத்துக்குள்ள என்கிட்ட பேசியாகணும்’
இந்த ரீதியில் குறுந்தகவல்கள் வர நேத்ரா ரொம்பவே பயந்து போனவள் சந்திரனுக்குப் போன் செய்ய அவன் எடுக்கவில்லை.
திரும்ப ஒரு முறை கூப்பிட்டவள் திட்டினால் என்ன செய்வது எனப் போனை வைத்து விட்டாள்.
சந்திரனுக்கு வேலை நேரத்தில் போன் செய்வது பிடிக்காது. திரும்பவும் அவனே கூப்பிடுவான்.
இல்லையென்றால் அதற்கும் ஒரு திட்டு விழும். அதனால் அமைதியாகப் போனை கட் செய்தாள்.
சிறிது நேரத்தில் போன் வர பார்த்தால் சந்திரன் என்று இருந்தது.
“ஹலோ”
“கூப்டிருந்தாயா நேத்ரா? நான் ஆஃபிஸ் போயிட்டு இருந்தேன். நான் திரும்பப் போன் பண்றதுக்குள்ள என்ன அவசரம்?” என்று அவன் திட்ட ஆரம்பிக்க
“இல்லைங்க. அம்மா செல்லுக்குத் தப்பு தப்பா மெஸேஜ் பண்றாங்க உங்க பெரியப்பா”
“என்ன சொல்ற?” என்றவன் கேட்க நடந்ததைச் சொன்னவள்
“என்னங்க அம்மாவையும், சித்தப்பாவையும் வெச்சு கூடத் தப்பா அனுப்பறாங்க. தயவு செய்து என்னன்னு கேளுங்க. அம்மாவுக்கு இதெல்லாம் தெரியாது” எனச் சொல்ல
“சரி. சொல்லீட்டில்ல. ஃபர்ஸ்ட் அந்த மெஸேஜ் எல்லாம் டெலிட் பண்ணிடு. உன்னுதுல எதுவும் இருந்தா அதையும் டெலிட் பண்ணிடு” என்றவன்
“ஓகே. நான் வெச்சிடறேன்” என்று சொல்லி கட் செய்ய அவன் சொல்வதைக் கேட்டு நேத்ரா உறைந்து போய் அமர்ந்திருந்தாள்.
‘ஏன் போன்ல மெஸேஜ் டெலிட் பண்ண சொல்றாங்க?’
‘அம்மா, அப்பாட்டயும் சொல்ல கூடாதுனா இதுக்கென்ன தான் சொல்யூஷன்? கடவுளே… நான் எப்போ பார்த்தாலும் பயந்திட்டு தான் இருக்கணுமா?’
சந்திரனது ஒவ்வொரு நடவடிக்கையும் பார்க்கும் போது அவளுக்குப் பயத்தை ஏற்படுத்தியது.
இருந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் நாட்களைக் கடத்தி கொண்டிருந்தாள்.
ஒரு வழியாக ஆடி பதினெட்டன்று அவன் வர மாப்பிள்ளையாக அவனைக் கொண்டாடினார்கள்.
சந்திரனை விழுந்து விழுந்து கவனித்தவர்கள் நேத்ராவை கண்டு கொள்ளவில்லை.
சந்திரன் வந்தவுடன் அவளுடைய அறைக்குக் கூட்டி வந்தவளிடம் அவளை இருக்கச் சொல்லி சொன்னவன் அவளிடம் ஒரு பார்சலை நீட்டினான்.
“என்னங்க?” என ஆவலாகக் கேட்க
“பிரிச்சி பாரு” எனப் புன்னகைத்தான்.
அதில் இளம்பச்சை நிறத்தில் காட்டன் புடவை அழகாக இருந்தது.
“சூப்பரா இருக்குங்க. அட… ஜாக்கெட் கூட இருக்கு. எப்படிங்க?” என உற்சாக மிகுதியில் கேட்க
“உன்னோட பீரோல இருந்து அளவு ஜாக்கெட் எடுத்தேன்” என்று சொல்ல அவள் இன்னும் சந்தோஷமானவள் அதைத் தனது குடும்பத்தாரிடம் காட்ட அவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.
“ஏங்க ஆழியார் டேம் போலாமா? அங்க சூப்பரா இருக்கும்” என நேத்ரா ஆசையாகக் கேட்க
“இன்னைக்கு ஈவ்னிங் நான் ஊருக்கு போகணும். டயர்ட்டாயிடும். அதனால வேண்டாம்” என அவன் மறுக்க அவள் சந்தோஷம் எல்லாம் துணி கொண்டு துடைத்தாற் போல் ஆனது.
அவளது அறையிலிருந்து வெளியே வந்தவள் அமைதியாக யோசித்தாள்.
‘உண்மையாலுமே இவன் சேரி எடுத்துட்டு வந்தானா? இல்ல அதயும் இவங்க அம்மா சொல்லி செஞ்சானா?’
‘அப்புறம் வெளிய போலாம்னா வேண்டாம்னு சொல்றான். இந்த அம்மா கல்யாணம் பண்ணி என்ன புலம்ப விட்ருச்சே?’ என அவள் அம்மாவை திட்ட அமுதா அவள் முன்னே வந்து நின்றாள்.
“இங்க உட்க்கார்ந்து என்ன பண்ணிட்டு இருக்க? போய் மாப்பிள்ளைய கவனி” எனச் சொல்ல
“நீயே போய் உன் மாப்பிள்ளைய கவனி. மனுசன கடுப்பேத்தாம அமைதியா போமா” என அவள் கத்த
“எதுக்குடி இப்ப கத்தற? மாப்பிள்ளை என்ன நினைப்பாரு?” எனக் கேட்க
“சரி ஆத்தா. இனி எதுவுமே பேசல. போ” என்று நேத்ரா கத்த அமுதா அவளைத் திட்டிக் கொண்டே அங்கிருந்து அகன்றாள்.
ஆடி மாதம் முடிந்தவுடன் அவள் சந்திரன் வீட்டுக்கு போக அவளை வழக்கம் போல எந்த உணர்வும் இன்றி எதிர் கொண்டான்.
அன்றைய இரவில் எந்த விதமான சத்தமும் இல்லாமல் முதல் கூடல் அமைதியாக நடந்தது.
‘எப்படியோ இனி தன் மாமியாரிடம் உரிய பதிலை சொல்லலாம்’ என நேத்ரா மனதுக்குள் நினைக்க விதியோ அவளைப் பார்த்துச் சிரித்தது.
ஏனெனில் மைதிலி ஒவ்வொரு மாதமும் குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்தாள்.
மைதிலி நினைத்ததற்கு மாறாக நடக்க நேத்ரா தான் அவள் வாயில் அரைபட்டு கொண்டிருந்தாள்.
இப்பொழுது எந்தக் கேள்வி கேட்டாலும் உறுத்தல் இல்லாமல் பதில் சொல்லலாம் என நிம்மதியாக இருந்தது.
அடுத்த நாள் இரவு அவள் வேலை செய்யும் போது வந்தவன்,
“நேத்ரா உன்னோட பழைய சிம் வைச்சிருக்கியா?”
“இல்லைங்க”
“இந்தா என்கிட்ட இருக்கற சிம்ம யூஸ் பண்ணு” என்று அவளிடம் கொடுத்தான்.
பூபாலன் குறுந்தகவல் அனுப்புவது குறையாததால் அவளைச் சிம் மாற்ற சொல்லி கொடுத்தவன் ஏற்கனவே அவனது நம்பரை பிளாக் செய்யச் சொல்லி இருந்தான்.
ஆனால் அவனது போன் கால்களும், குறுந்தகவல்களும் குறைந்தபாடில்லை.
‘இதெல்லாம் பண்ண தெரியுது. ஒரு வார்த்தை என்னன்னு கேட்க தோணலயா?’ எனத் தோன்றினாலும் அமைதியாகச் சிம்மை வாங்கினாள்.
இந்த நிலையில் சரவணனின் நெருங்கிய உறவினர் பையனின் கல்யாணம் வர அவர்கள் சென்னைக்குக் கிளம்பினர்.
“என்னங்க அத்தை சென்னைக்குக் கிளம்பறாங்க. நம்பர் மாத்தினது பத்தி அவங்க கிட்ட ஒண்ணும் சொல்லலையே?” எனக் கேட்க
“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ அம்மா கேட்டா போன் ரிப்பேர்னு சொல்லு” என்றவன் சொல்ல
“என்ன ரிப்பேர்னு கேட்டா?”
“போன் ஸ்பீக்கர் ரிப்பேர். அதனால போன்ல பேச முடியாதுனு சொல்லு” என ஐடியா கொடுத்தான்.
‘நல்லா ஃபிராடு வேலை எல்லாம் தெரியுதே?’ என்று யோசித்தவள்,
“ஓகேங்க” என்று சொல்ல அவன் வெளியேறினான்.
‘இன்னும் இதுல என்னென்ன நடக்கப் போகுதோ?’ என யோசித்தபடி இருந்தாள்.
சென்னை சென்றவர்கள் அடுத்த ஒரு வாரம் அங்கு இருக்கச் சமையல் வேலைகள் அனைத்தும் அவள் செய்தாள்.
மைதிலி ஊரில் இல்லாத நாட்கள் மட்டும் ஏதோ கொஞ்சம் பேசினான்.
ஆனால் அதுவும் அளவோடு தான் இருந்தது.
“நேத்ரா தோசை போடு”
“நேத்ரா காபி போட்டுட்டியா?”
“உடம்பு சரியில்லையா? ஓகே. நான் பார்த்துக்கறேன்” என இந்த ரீதியில் இருந்தது அவர்களின் உரையாடல்கள்.
மைதிலியோ அவ்வப்போது போன் செய்து விசாரித்துக் கொண்டிருந்தாள்.
“அவனுக்குத் தோசை மெல்லிசா இருந்தா தான் பிடிக்கும். தோசைய கருக்கிடாத”
“அவனுக்கு எங்க வீட்டு சமையல் தான் பிடிக்கும். எதுனாலும் அண்ணிய கேட்டு செய்” என ஏகப்பட்ட குறிப்புகள்.
அவளுக்கு அந்த வாரம் முழுவதும் நாளொரு குறிப்பும், பொழுதொரு போனுமாகச் சென்றது.
இப்படியே ஒரு வாரம் செல்ல அவர்கள் சென்னையில் இருந்து வந்தவுடன் சசிகலா ஊரிலிருந்து வந்தாள்.
அப்போது அமுதா மைதிலியின் செல்லுக்குப் போன் செய்தவள் நேத்ராவிடம் பேசி கொண்டிருந்தாள்.
“நேத்ரா எப்படி இருக்க?”
“நல்லா இருக்கேம்மா”
“வேலை எல்லாம் கரெக்டா செய்றியா?”
“செய்றேமா”
“நேத்ரா பவி வந்திருக்கா. அவ கிட்ட குடுக்கறேன். பேசு” எனச் சொல்ல நேத்ரா சந்தோஷமானாள்.
பவதாரிணி அவளது பெரியம்மா பெண். எந்த விஷயம் என்றாலும் அவளிடம் சொல்பவள் இங்கு வந்ததிலிருந்து யாருடனும் பேசுவதில்லை.
அவளுக்குப் போன் அருகே செல்லவே பயமாக இருக்கையில் அவள் யாரை தொடர்பு கொள்ள?
அதனால் அவளது அம்மாவே மைதிலி செல்லுக்குக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார்.
“அக்கா எப்ப வந்தீங்க?” எனச் சந்தோஷ கூச்சலிட
“நான் இன்னைக்கு வந்தேன் நேத்ரா. நீ நல்லாருக்கியா?”
“நல்லாருக்கேன் கா. எவ்ளோ நாள் இருப்பீங்க?”
“ஒரு வாரம் இருப்பேன் நேத்ரா”
“ச்சே… நான் இப்போ தான்கா அங்கிருந்து வந்தேன். திருப்பி எப்போ பார்க்க முடியுமோ தெரியலையே” என அவள் வருத்தப்பட்ட
“நெக்ஸ்ட் டைம் நீ வரப்ப போன் பண்ணு. நான் வரேன்” என்று சொல்ல
“சூப்பர்க்கா” என்று சொல்லி கொண்டிருந்தவள் சட்டென்று “அக்கா நான் வெச்சிடறேன்” எனப் போனை கட் செய்தாள்.
நேத்ரா போன் பேசி கொண்டிருக்கும் போது ஏதேச்சையாகச் சசிகலாவை பார்க்க அவளோ நேத்ராவை முறைத்துக் கொண்டிருக்க அதில் அதிர்ந்தவள் அப்படியே போனை கட் செய்தாள்.
“என்ன அண்ணி நாங்க வேலை செஞ்சிட்டு இருக்கோம். நீங்க போன் பேசிட்டு இருக்கீங்க?” எனக் கடுப்பாகக் கேட்க
“அது… இல்ல அண்ணி. அக்காட்ட பேசி ரொம்ப நாளாச்சா? அதான்” என விளக்கம் கொடுக்க
“வேலைய பாருங்க” என்று நேத்ராவுக்குக் கட்டளையிட அமைதியாக வேலை செய்ய ஆரம்பித்த நேத்ராவின் மனமோ உள்ளுக்குள் குமுறியது.
‘அம்மாவும், புள்ளையும் ஒரு மணி நேரமா பேசறாங்க. நான் தான் பேச கூடாதாமா?’
‘அக்கா கிட்ட பேசி எவ்ளோ நாளாச்சு? சந்தோஷமா ஒரு நிமிஷம் பேச கூட முடியல’ என யோசனையிலேயே அன்றைய பொழுதை கழித்தவள் சந்திரனிடம் இதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.
பொதுவாக அவனும் எந்த விஷயத்தையும் சொல்வதில்லை.
இவள் சொன்னால் எல்லாம் குற்றம் சொல்வது போல் இருக்கும் என அமைதியாக இருக்க அதுவும் அவளுக்கு வினையாகிப் போனது.
