இதயம் 8

ஒரு நாள் நேத்ரா வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று அவளது சொத்தை பற்றிய பேச்சு அந்த வீட்டில் நடந்தது.

“நேத்ரா”

“என்னத்த?”

“உங்க சித்தப்பாவும், சித்தியும் நல்லா பேசுவாங்களா?”

‘ஐயோ… என்ன இது இப்படி கேக்குது? இதுக்கென்ன பதில் சொல்றது? ஏதாவது சொல்லி சமாளிப்போம்’ என யோசித்தவள்

“நல்லா பேசுவாங்க அத்தை”

“அப்படியா. நாங்க அவங்க வீட்டுக்குப் பத்திரிக்கை வைக்கப் போனப்போ அப்படி ஒன்னும் தெரியலையே” என்று சந்தேகமாகக் கேட்க

“இல்லத்த. நல்லா பேசுவாங்க” எனச் சமாளிக்க

“நாங்க கவனிச்ச வரையும் அவங்க பேசிக்கலயே” என அவள் நோண்டினாள்.

உண்மையில் அவர்களுக்கிடையே உள்ள பிரச்சனையில் இருவரும் பேசுவதில்லை.

ஆனால் இவர்களுக்கிடையில் தனது குடும்ப மானம் போய் விடுமே என்ற அச்சத்தில் நேத்ரா பதில் சொல்ல சிறிது நேரம் அவர்களுக்குள் கிசுகிசுவென்று பேச இவளுக்கு என்னவோ போல் இருந்தது.

‘என்ன தான் பேசிக்குங்க? எப்போ பார்த்தாலும் இப்படி தானா?’ என்று அவள் தடுமாறிக் கொண்டிருக்கும் போது

“நேத்ரா உங்க கடைல வர வாடகை எல்லாம் உங்களுக்குத் தானே?” என மைதிலி திடீரென்று கேட்க ஒரு நிமிடம் திகைத்தவள் “ஆமா அத்தை” என்று சமாளித்தாள்.

அன்று விடுமுறை ஆகையால் சசி உட்பட அனைவரும் வீட்டில் இருந்தனர்.

இவள் சொன்னவுடன் அவர்களுக்குள் பார்வை பரிமாற்றம் நடந்தது.

“அந்தக் கடை உங்க பேர்ல தான இருக்கு?”

‘ஐயோ… இதுக்கென்ன பதில் சொல்ல?’ எனச் சிந்திக்க

“சொல்லு நேத்ரா” என மைதிலி அழுத்தமாகக் கேட்க

“அ… அது வந்து அத்தை” என அவள் திணறும் போது

“அந்தக் கடை உன் சித்தப்பா எழுதி வாங்கிட்டாங்களாமே. அப்படியா?” என அவளைக் கூர்மையுடன் விசாரிக்க என்ன சொல்வது என்று புரியாமல் அமைதியாகி இருந்தாள்.

“கேட்கறாங்க தானே. பதில் சொல்லு” எனச் சந்திரன் மிரட்ட

“ஆமாங்க. கல்யாணத்துக்கு முன்னாடி எழுதி வாங்கிட்டாங்க”

“அதை ஏன் எங்ககிட்ட சொல்லல?” என்று சரவணன் கேட்க…

“யார் கிட்டயும் சொல்ல வேணாம்னு சொன்னாங்க”

“யார் கிட்டயும்னா? எங்க கிட்ட கூடச் சொல்ல கூடாதா அண்ணி?”

‘கடவுளே… என்ன இப்படி கேள்வி கேக்குதுங்க? எப்படி தப்பிக்கறது?’ என்று அவள் ஒன்றும் புரியாமல் திணறினாள்.

“நிச்சயம் ஆனாலே பாதிக் கல்யாணம் முடிஞ்ச மாதிரி தான். அப்போ நீ இவனை புருஷனா மதிக்கல?” என்ற மைதிலியின் அழுத்தமான குரலில் நேத்ரா அரண்டாள்.

அவள் வாயடைத்து போய் அமைதியாய் நிற்க…

“பதில் சொல்லு நேத்ரா” என்ற கத்தலில்,

“இல்லத்த. யார் கிட்டயும் சொல்ல வேணாம்னு சொன்னாங்க. இல்லேனா கல்யாணத்துல பிரச்சனை பண்ணுவாங்கனு பயத்துல உங்ககிட்ட சொல்லல” என்ற அவள் விளக்கத்தில் அமைதியாயினர்.

“நீ சொல்லி இருந்தா கல்யாணத்த சிம்பிளா கூட முடிச்சிருக்கலாம்” என்று சரவணன் கூற மைதிலியோ

“நாங்க பொண்ணு பார்க்க வந்தப்ப கடை உனக்குனு தானே சொன்னீங்க. இப்ப எங்கள ஏமாத்தறீங்களானு உங்கம்மாட்ட கேட்கட்டுமா?” எனக் கேட்க

ஏற்கனவே நேத்ரா ஒவ்வொன்றாகக் கேட்டதில் பதட்டமாக இருந்தவள் உள்ளுக்குள் நடுங்கினாள்.

“நீ கடை பத்தியும் எதுவும் சொல்லல. உங்க சித்தப்பா பத்தி கேட்டாலும் பொய் சொல்ற?”

“குடும்பமே இப்படி தானா? உங்கம்மா நீ பொய்யே சொல்ல மாட்டேனு சொல்றாங்க. டோட்டல் குடும்பமே இப்படி தான் இருக்கு” என்ற அவள் கத்தலில் நேத்ரா என்ன சொல்வதென்று புரியாமல் திகைத்தாள்.

“ஆனா உன்னை ஒரு விஷயத்துக்குப் பாராட்டலாம். குடும்ப விஷயம் யாருக்கும் தெரியக்கூடாதுனு நினைக்கறது” என்க அதில் நேத்ரா முழிக்க

“எதுக்கெடுத்தாலும் ஒண்ணும் தெரியாத மாதிரியே ஆக்ட் பண்ணு” என மைதிலி சொல்ல அவளை எல்லோரும் ஏளனமாகப் பார்ப்பது போல் தோன்ற அவள் அமைதியாகத் தலைகுனிந்தபடி நின்றாள்.

“ஏன் இப்படியே நின்னுட்டு இருக்க? போ… போய் வேலைய பாரு”

மைதிலியின் கத்தலில் மிரண்டவளாய் “சரி அத்தை” என்று அங்கிருந்து தப்பித்தால் போதும் என்ற மனநிலையில் சென்றாள்.

********

அன்று மதியம் அனைவரும் தூங்க இவளும் சிறிது நேரம் தூங்கியவள் பின்பு எழுந்து அனைவருக்கும் டீ போட்டு கொடுத்தாள்.

எல்லாருக்கும் கொடுத்தவள் சசிகலாவுக்குக் கொடுக்கவில்லை.

நேத்ரா எப்போது கேட்டாலும் அவள் டீயை கிண்டலடிப்பது போல் கூற அதனால் மற்றவர்களிடம் கேட்டவள் இவள் என்ன சொல்வாளோ எனக் கேட்காமல் இருக்க அது பெரும் பிரச்சனையானது.

“டாடி எனக்கு டீயே கொடுக்கல” என்று அவள் ஆரம்பிக்க அதில் கோபமான சரவணன்,

“நேத்ரா இங்க வா” எனக் கூப்பிட…

“என்ன மாமா?” என்று பதறியடித்தபடி ஓடி வந்தாள்.

“குட்டிமாக்கு டீ கொடுக்கலயா?”

“அ… அது வந்து மாமா”

“ஏய்… ஏன்டி என் பிள்ளைக்கு ஒரு டீ கூட உன்னால கொடுக்க முடியாதா?” என மைதிலி கத்த ஆரம்பித்தாள்.

‘நான் எப்ப டீ போடுட்டானு கேட்டாலும் எங்கம்மா போட்ட டீ தான் குடிக்கும்னு சொல்லும். அதனால தான கேட்கல’ என்று நேத்ரா நினைக்க…

“கேட்கறேன்ல. பதில் சொல்லு” என்று மைதிலி அதட்ட நேத்ரா வார்த்தை வராமல் நின்றாள்.

“உன்னால என் பிள்ளைக்கு டீ கூடப் போட முடியாதா? நீ இப்போவே கணக்கு பார்க்க ஆரம்பிச்சிட்டியா?” என்று கேட்க நேத்ராவோ அதிர்ச்சியில் விழி விரித்தாள்.

‘இதுங்க என்ன சொல்லுதுங்க? நமக்குத் தோணாதது எல்லாம் சொல்றாங்க. நம்ம என்னைக்கு அப்படி நினைச்சிருக்கோம்?’

உண்மையில் அவளை எந்த வேலையும் ஒழுங்காகச் செய்ய விடுவதில்லை.

நேத்ரா ஏதேனும் செய்யலாம் என்று நினைப்பாள். அவளை ஏதாவது திட்டி குழப்பி விடுவாள்.

சமையல் செய்யலாம் என்று நினைத்தால் அங்கு வந்து அவளைக் குறை கூறி ஒரு வழி பண்ணி விடுவாள்.

அந்தப் பதட்டத்தில் அவளுக்கு ஒழுங்காகச் செய்ய வருவதும் தப்பாகப் போகும். அதற்கும் அவள் திட்டு வாங்க நேரிடும்.

இவள் தன்னால் இயன்ற அளவு செய்யலாம் என்று நினைக்க மைதிலியோ அதில் ஏதேனும் குற்றம் கண்டுபிடித்துச் சந்திரன் அலுவலகத்தில் இருந்து வந்தவுடனே அவள் டீ போடும் இடைவெளியில் எல்லாவற்றையும் ஒப்பித்து விடுவாள்.

எந்த ஒரு சிறு செயலிலும் ஏதாவது ஒன்றை சொல்லி அதை ஊதி பெரிதாக்குவதே மைதிலியின் வழக்கம்.

மைதிலி திட்டி கொண்டிருக்க அதைக் கேட்ட நேத்ராவுக்கோ ரத்த அழுத்தத்தில் தலை சுற்றுவது போலிருந்தது.

“உனக்கு அவ்ளோ திமிராடி. என்ன நினைச்சிட்டு இருக்க?”

மைதிலி திட்ட திட்ட சந்திரன் அங்கே பார்வையாளனாய் பார்த்துக் கொண்டிருந்தான்.

நேத்ராவோ உள்ளுக்குள் இறுகி உணர்ச்சியற்றவளாய் நின்றாள்.

“நீ இரு குட்டிமா. நான் உனக்கு டீ போட்டு கொடுக்கறேன்” என மகளைக் கொஞ்சியவள் நேத்ராவை முறைத்து விட்டு சமையலறைக்குச் சென்றாள்.

‘நான் என்ன நினைச்சேன்? இதென்ன சொல்லுது? அவங்க அம்மா தான் போடணும்னு சொல்லுவானு தான அது எந்திரிச்சதுக்கு அப்புறம் போடட்டும்னு விட்டோம். ஏன் என் மேலேயே பழி போடறாங்க? நம்ம போட்டாலும் பிடிக்கலனு சொல்ல வேண்டியது?’ என்று அவள் உள்ளுக்குள் குமைந்தாள்.

மைதிலி உள்ளே சென்றதும் நேத்ராவும் உள்ளே வந்து அமைதியாக வேலை செய்து கொண்டிருந்தாள்.

நேத்ராவின் அருகில் வந்த மைதிலி, “சசி நீ இங்க இருக்கணும்னு நினைச்சா தான் நீ இங்க இருக்க முடியும். அவ அண்ணா கிட்ட ஒரு வார்த்தை சொன்னாலும் போதும். உன் சோலி முடிஞ்சது. ஞாபகம் வச்சுக்கோ” என மிரட்டலான குரலில் கூற நேத்ராவோ அதிர்ச்சியில் உறைந்தாள்.

அவளுக்கு அதிர்ச்சியில் மூளை மரத்தது போல இருந்தது. அடுத்து இதை எப்படிச் சமாளிப்பதென்று ஒன்றும் புரியவில்லை.

சிறிது நேரத்தில் சாப்பிட்டவுடன் வழக்கம் போல எல்லாரும் மேலே படுக்கச் செல்ல சந்திரன் டிவி பார்க்க நேத்ரா மற்றொரு சேரில் அமர்ந்து அவளும் டிவி பார்த்து கொண்டிருந்தாள்.

அவர்களுக்கிடையில் எந்த ஒரு பேச்சும் இன்றி அமைதியாகவே சென்றது.

கல்யாணமான நாளில் இருந்தே இப்படித் தான். அவனும் பேச மாட்டான். இவளும் அவள் மேல் உள்ள குற்றச்சாட்டில் தனக்குள்ளே புழுங்கி அவனிடம் பேச சங்கடப்பட்டு அமைதியாக இருப்பாள்.

ஒவ்வொரு நாளும் இந்த அமைதியுடனே செல்ல நேத்ரா தான் திணறினாள்.

இந்த யோசனையிலேயே உட்கார்ந்திருந்தவளுக்குத் தூக்கம் சொக்க அறையினுள் வந்து படுத்தவள் நடுவில் ஏதோ தோன்ற திடீரென்று கண் முழிக்கச் சந்திரனை பார்க்க அவன் இடைவெளி விட்டு படுத்திருந்தவனைப் பார்த்தவளுக்கு அதற்கு மேல் தூக்கம் வரவில்லை.

அன்று நடந்தது அவளுக்குத் திரும்ப நியாபகம் வந்தது.

‘அவன் என்னைக்காவது என்கிட்ட நல்லா பேசி இருக்கானா? அப்படி இருக்கப்ப இவன்ட்ட எப்படி சொத்து பிரச்சனைய சொல்லி இருக்க முடியும்?’

‘நான் என்ன சொல்ல வரேனு கூடக் கேட்டதில்லயே?’

‘அத்தை என்னன்னா அநியாயத்துக்குப் புருஷனா மதிக்கலன்னு பிட்ட போட்டுட்டாளே?’

‘இவன்கிட்ட எதையுமே ஓப்பனா பேச முடியாம நான் என்ன தான் பண்றது?’

‘இப்படியே இந்த அத்தை ஒவ்வொரு நாளும் ஏதாவது சொன்னா நம்ம நிலைமை என்ன ஆகும்?’

‘இன்னைக்கு என்ன பத்தி என்ன நினைச்சிருப்பானு தெரியலயே’

ஏதேதோ யோசித்தவள் தன்னையறியாமல் உறங்கினாள்.

அடுத்த நாள் அவளுக்கு மாத நாட்கள் ஆரம்பிக்க மைதிலி குழந்தையை எதிர்பார்த்து ஏமாந்து போனாள்.

ஒவ்வொரு மாதமும் இப்படியே இருப்பதால் அவள் குளித்து விட்டு வரவும் மைதிலி அமுதாவுக்குப் போன் செய்தாள்.

“ஹலோ”

“சொல்லுங்க அண்ணி”

“நேத்ரா இந்த மாசமும் தூரமாயிட்டா” என்று அறிவிக்க அமுதா அதிர்ச்சியானாள்.

“நீங்க அவளை உங்க ஊர்ல டாக்டர்ட்ட கூட்டிட்டு போங்க. முதல் குழந்தைக்கு நீங்க தான் எல்லாம் செய்யணும்”

“சரி அண்ணி. நான் கூட்டிட்டு போறேன்” என்று அமுதா போனை கட் செய்ய நேத்ராவை யோசனையுடன் பார்த்தாள் மைதிலி.

இந்தச் சில நாட்களில் போன் நம்பர் மாற்றியதால் பூபாலனிடம் இருந்து எந்தத் தொல்லையும் இல்லை.

அடுத்த வாரத்தில் அமுதா அவளைச் செக் அப்பிற்குக் கூட்டி சென்ற போது நேத்ராவை பரிசோதனை செய்த மருத்துவர் அவளுக்கு நீர்கட்டி இருப்பதாகச் சொல்லி அதற்கான மருந்துகளையும் வழங்கினார்.

நேத்ராவிடம் சந்திரனை பற்றிக் கேட்ட மருத்துவர் அவனையும் பரிசோதனைக்கு அழைத்து வர சொல்ல அவள் அதிர்ச்சியானாள்.

“ம்மா என்ன இந்த டாக்டர் அவரை வர சொல்றாங்க? அவங்க வருவாங்களா?”

“போன் பண்ணி பார்க்கலாம். இருடி. எப்படியும் அவங்க போன் பண்ண சொன்னாங்க தான? நீ ஃபர்ஸ்ட் போன் பண்ணு”

“சரிமா” என்றவள் சந்திரனுக்குப் போன் செய்ய அவன் எடுத்தான்.

“என்னங்க ஹாஸ்பிடல்க்கு போய்ட்டு வந்துட்டோம்”

“என்ன சொன்னாங்க?”

“நீர்க்கட்டி இருக்குனு சொன்னாங்க”

“நீர்க்கட்டியா?” என்றவன்

“டேபிளட் கொடுத்தாங்களா?”

“ஆமாங்க. டேப்ளட்ஸ் சாப்பிட்டு வர சொன்னாங்க. அப்புறம் உங்களையும் ஹாஸ்பிடலுக்கு வர சொன்னாங்க”

“என்னை எதுக்கு வர சொன்னாங்க?”

“உங்களையும் வர சொன்னாங்க. டெஸ்ட் எடுக்கணும்னு சொன்னாங்க”

“நான் எதுக்கு? என்னால வர முடியாது. எனக்கு வொர்க் இருக்கு” என்றவன்

“சரி. நான் வெச்சிடறேன். வெளிய இருக்கேன். அம்மாட்ட போன் பண்ணி சொல்லிடு” என்று போனை கட் செய்தான்.

“என்ன சொன்னாரு மாப்பிள்ளை?”

“அவரு பிஸியாம். இங்க எல்லாம் வர மாட்டாராம்” எனக் கடுப்பாகக் கூறியவள் அதே விஷயத்தையே மாமனார், மாமியார், நாத்தனார் என அனைவருக்கும் ஒப்பித்தாள்.

பின் சிறிது நேரம் அம்மாவுடன் கோன் ஐஸ், பானி பூரி எனச் சுற்றியவள் அடுத்த இரண்டு நாட்களில் கோவை செல்ல அங்கே யாரும் இல்லாத வேளை பார்த்து அடுத்த இரண்டு நாட்களில் பூபாலன் அவள் முன் வந்து நின்றான்.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page