இதழ் – 13
அருவியைத் தேடிச் சென்ற ராகவன் ஒரு புதரின் பின்னால் சென்று பார்த்தான். அங்கு அவள் நின்றிருந்த கோலத்தைப் பார்த்து அதிர்ந்து நின்றான்.
ஏனெனில், அங்கு இரண்டு தடியன்களையும் அடித்து, அவர்கள் கழுத்தில் தன் இரண்டு கால்களையும் வைத்து நின்று, அவள் எதிரில் மண்டியிட்டு ஒருவன் சட்டை இல்லாமல் நிற்க, அவனை கன்னத்தில் “பளார், பளார்” என அறைந்து கொண்டிருந்தாள் அருவி.
அவன் மூக்கிலும் வாயிலும் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. மற்றொருவன் அடிபட்டு அவள் காலடியில் மயங்கிக் கிடந்தான்.
“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் சேலையைப் பிடிச்சு இழுப்ப?” என அவன் கன்னத்தில் மாறி மாறி அறைந்தாள்.
அவன், “வேண்டாம்… என்னை விட்டுடு… உன்னை கெஞ்சிக் கேட்கிறேன்” என்றான்.
“இப்படி உன்கிட்ட எத்தனை பொண்ணுங்க கேட்டிருப்பாங்க? எவ்வளவு தைரியம் இருந்தா அதை என்கிட்டயே சொல்ற? ஏண்டா!! பொண்ணுங்கனா உங்களுக்கு அவ்வளவு சீப்பா போயிடுச்சா? உன்னைப் பெத்தவளும் பொண்ணு, கூடப் பொறந்தவளும் பொண்ணு… அப்படி இருக்கும்போது எப்படி பொண்ணுங்களைப் பார்த்தா உங்களை மாதிரி பொறுக்கிகளுக்கு தப்பா நினைப்பு வருது? உங்கள எல்லாம் டிரெஸ்ஸ கழட்டி விட்டுட்டு நடு ரோட்டுல ஓட விட்டு, கல்லால அடிச்சே கொல்லணும்… அப்பத்தாண்டா உங்களுக்கு எல்லாம் புத்தி வரும்” என்றாள் அருவி ஆவேசமாக.
“வேணாம்… தயவு செய்து என்னை மன்னிச்சுடு… உன்னை கெஞ்சிக் கேட்கறேன்… எங்களை விட்டுடு… இனிமே நாங்க எந்தப் பொண்ணு கிட்டயும் வம்புக்கு வர மாட்டோம்” என்றான் வலியில்.
“நீங்க உயிரோட இருந்தா தானேடா மத்த பொண்ணுங்களை வம்புக்கு இழுப்பீங்க?” என்றவள் அவன் கண்ணைத் தன் கையால் நோண்டினாள்.
அவன் வலியில் “ஆஆஆ…” எனக் கத்தினான்.
கீழே கிடந்த ஒருவன் கையெடுத்து கும்பிட்டு, “உன்னை எங்க குலசாமியா நினைச்சு கேட்கிறேன்… எங்களை மன்னிச்சு விட்டுடு” என அவள் காலைப் பிடித்துக் கொண்டு கதறினான்.
சற்றே மனம் இறங்கிய அருவி, “இனி உங்களை எங்கேயாவது பார்த்தேன்… அது தான்டா உங்களுக்கு கடைசி நாளா இருக்கும்” என்றவள் காலை எடுத்தாள்.
அந்த இரு தடியன்களின் கழுத்திலிருந்து அவள் காலை எடுத்ததும், நின்றிருந்த அவன் கீழே கிடந்த இருவரையும் கைத்தாங்கலாக தூக்கிக்கொண்டு, மயங்கிக் கிடந்தவனை மற்ற மூவரும் சேர்ந்து தூக்கிக்கொண்டு வேகமாக அந்த இடத்தைக் காலி செய்து ஓடினார்கள்.
அவர்களை முறைத்தபடி நின்றிருந்தாள் அருவி. அப்போது அவள் பின்னால் ஒருவன் கை வைக்க, தன் கையை மடக்கி பின்னால் ஓங்கி ஒரு குத்து குத்தினாள்.
“ஐயோ!! அம்மா…” என சத்தம் கேட்டு வேகமாகத் திரும்பிப் பார்த்தவள்,
“அச்சச்சோ… என்னங்க நீங்களா!!” எனக் கேட்டாள்.
அவன் மூக்கிலிருந்து ரத்தம் வந்தது. “அடிப்பாவி!! இப்படி என் மூக்கை உடைச்சு விட்டுட்டயே” என்றான் தன் மூக்கைப் பிடித்தபடி.
“சாரிங்க… நீங்கனு தெரியாம உங்க மூக்குல குத்திட்டேன்” என்றாள் பதறியபடி அருவி.
“தெரியாதனால மூக்குல குத்துன… தெரிஞ்சிருந்தா ஆளையே காலி பண்ணிருப்ப போல.”
“என்னங்க! அது வந்து… வாங்க ஹாஸ்பிடல் போலாம்” என அருகிலிருந்து மருத்துவமனைக்கு அவனை அழைத்துச் சென்றாள்.
ராகவன் மூக்கிலிருந்த ரத்தத்தைத் துடைத்து மருந்து போட்டு, ஊசி மாத்திரை எழுதிக் கொடுத்த மருத்துவர், “எப்படி அடிபட்டுச்சு?” எனக் கேட்டார்.
அவன் அவளைப் பார்த்தான். அவள் அமைதியாக இருந்தாள்.
“நானா போய் சுவத்துல முட்டிக்கிட்டேன் டாக்டர்.”
“நீங்களா!! இல்லையே… யாரோ ஓங்கி குத்துன மாதிரி இருக்கு.”
“டாக்டர் தயவு செய்து இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க” என்று அவன் கூறியதைக் கேட்டு அருவிக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
அவளைப் பார்த்து முறைத்தான் ராகவன். மருத்துவமனையை விட்டு வெளியே வந்தார்கள்.
அவன் அமைதியாகக் கார் ஓட்டிக் கொண்டு வர,
“என்னங்க…”
“என்ன?”
“சாரிங்க… என்னை மன்னிச்சிடுங்க… தெரியாம” என்றாள் அருவி வருத்தத்துடன்.
“பரவால்ல விடு… ஆனா! ஒரு விஷயத்துக்கு உன்னைப் பாராட்டியே ஆகணும்.”
“என்ன விஷயம்ங்க?”
“ரொம்ப சூப்பரா… செம்மயா சண்டை போடுற… ஆமா!! உன்ன நான் அங்க பாறையில தான உட்கார சொல்லிட்டு வந்தேன்…”
“ஆமா!”
“அப்புறம் எப்படி நீ அந்த புதருக்கு பின்னாடி?” என ராகவன் கேட்டான்.
“அது வந்து… நீங்க போன கொஞ்ச நேரத்துல அந்த நாலு ரவுடிகளும் என் பக்கத்துல வந்து என்னைச் சுத்தி நின்னுகிட்டு தப்புத் தப்பா பேச ஆரம்பிச்சிட்டாங்க… நானும் பொறுத்துப் பார்த்தேன்… நீங்க வருவீங்கனு எதிர்பார்த்தேன்… ஆனா உங்களையும் காணோம்… அவனுங்க ரொம்ப பேச ஆரம்பிச்சிட்டாங்க… அதான் கோவத்துல ரெண்டு காட்டு காட்டுனேன்.”
“என்னது? ரெண்டு காட்டு காட்டுனயா? நிறையவே காட்டிட்ட… அவனுங்க எல்லாம் புத்தூர் கட்டு போட்டு அஞ்சு மாசம் ஆனாலும் சரியாகுறது ரொம்ப கஷ்டம்தான்” என்றான் சிரித்தபடி.
“ஆமா! உனக்கு எப்படி சண்டை போடத் தெரியும்?”
“பொம்பளப் புள்ளைங்க பாதுகாப்பா இருக்கணும்னு எங்க அப்பா நான் 12-ஆம் வகுப்பு படிக்கும்போதே என்னை கராத்தே கிளாஸ்ல சேர்த்து விட்டுட்டாங்க… உங்களுக்கு ஒன்னு தெரியுமா? நான் பிளாக் பெல்ட் கூட வாங்கியிருக்கேன்” என்றாள் பெருமையாக.
“பரவாயில்லையே… உங்க அப்பா இந்த நல்ல பழக்கத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்…”
“என்னங்க…”
“என்ன?”
“உங்களுக்கு காயம் வலிக்குதா?” எனத் தயங்கியபடி கேட்டாள்.
“இல்லையே… குளுகுளுன்னு இருக்கு” என்றான்.
வீட்டிற்கு வந்ததும் அவன் மூக்கிலிருந்த காயத்தைப் பார்த்து,
“என்னாச்சு தம்பி?” என சுப்பையாவும் கண்ணம்மாவும் கேட்டனர்.
“அது வந்து… அவர் மரத்துல போய் முட்டிக்கிட்டார்” என்றாள் அருவி.
“என்னது? மரத்துல போய் முட்டிக்கிட்டாரா?”
“நாங்க ரெண்டு பேரும் கண்ணாமூச்சி விளையாடுனோம்… அப்போ அவரு தெரியாம போய் மரத்துல இடிச்சுக்கிட்டாரு.”
அதைக் கேட்ட கண்ணம்மா விழுந்து விழுந்து சிரித்தாள்.
“அருவி ப்ளீஸ்… போதும்” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் படியாக.
“கண்ணம்மா போதும் சிரிச்சது… சின்னையா மரத்துல முட்டி ரத்தம் வந்துருச்சுன்னு சொல்றாங்க… நீ இப்படி சிரிச்சுக்கிட்டு இருக்க” எனக் கோவமாகத் திட்டினாள்.
“என்னை மன்னிச்சிடுங்க சின்னயா… தெரியாம சிரிச்சுபுட்டேன்… இப்படித்தான் நாங்க கல்யாணம் பண்ண புதுசுல இவரும் நானும் கண்ணாமூச்சி விளையாடும்போது அவரும் செவத்துல போய் இடிச்சு மண்டை ஒடஞ்சிடுச்சு” என்றார் கண்ணம்மா.
அதைக் கேட்ட ராகவனும் இப்போது சிரித்துவிட்டான். இரவு உணவை முடித்துவிட்டு அறைக்கு வந்தவுடன் சரஸ்வதி போன் செய்தார்.
“ஹலோ! சொல்லுங்க அத்தை.”
“நல்லா இருக்கியா அருவி?”
“நாங்க நல்லா இருக்கோம் அத்தை.”
“உனக்கு அங்க புடிச்சிருக்கா?”
“ஆமா அத்தை” என்றாள்.
“நல்லா சுத்திப் பாருங்க…”
“சரிங்க அத்தை.”
“ரெண்டு பேரும் மனசு விட்டு பேசுங்க… ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கோங்க… ஆமா! ராகவன் எங்க?”
அவள் எதிரில் இருந்தவன் “நான் குளிக்கறேன்னு சொல்லு” என சைகை செய்தான்.
“அவர் குளிக்கறார்… சரிங்க அத்தை” என அவள் போனை வைத்ததும்,
“அருவி” என்றான்.
“என்னங்க?”
“உன்னை அந்த இடத்துல காணாம ஒரு நிமிஷம் நான் பதறிட்டேன் தெரியுமா!” என்றான் கவலையுடன்.
அவள் அவனை அமைதியாகப் பார்த்தாள்.
“நான் உன்னை உட்கார சொல்லிட்டு போனேன்… வந்து பார்த்தபோ உன்ன காணோம்… அங்க இருந்தவங்க கிட்ட கேட்டேன்… அவங்களும் ஒண்ணும் தெரியலன்னு சொல்லிட்டாங்க… அப்போ ஒரு வயசானவர் உன்னை நாலு பேர் துரத்திட்டு போனாங்கன்னு சொன்னாங்க… நான் ரொம்ப பதறிப்போய்ட்டேன்… கொஞ்சம் தூரம் ஓடிவந்து பார்த்தேன்… உன்னுடைய வளையல் உடைஞ்சு கிடந்தது… அதுக்கப்புறம் கொஞ்சம் தூரத்துல ஒரு டீசர்ட் கிடந்தது… அப்போ எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? பதறிப்போயிட்டேன்… ஆனா நான் வந்து பார்த்தபோது நீ அவனுங்கள அடிச்சு துவைச்சிட்டு இருந்ததைப் பார்த்ததும் நான் மெய் மறந்துட்டேன்…”
அவன் தன்னைப் பாராட்டியதில் சந்தோஷத்துடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அருவி.
“ஒவ்வொரு பொண்ணும் உன்ன மாதிரி தைரியமானவங்களா இருந்துட்டா… நம்ம நாட்டுல கற்பழிப்பு அப்படிங்கற கொடுமை நடக்காது… உன்ன மாதிரி பொண்ணுங்களை தைரியமா வளர்க்கணும்… உண்மையாவே இதுக்காகவே உங்க அப்பாவைப் பாராட்டணும்” என்றான்.
“தேங்க்ஸ்ங்க” என்றாள்.
சிறிது நேரம் பேசிக்கொண்டே இருவரும் உறங்கினார்கள். அவன் நன்றாக உறங்கிவிட, அதிகாலையில் கண் விழித்து பார்க்க அருவியைக் காணவில்லை.
“இப்ப எங்க போனானு தெரியலயே!! இவ திடீர் திடீர்னு காணாமப் போயிடறா… இவளைத் தேடுவதே வேலையா இருக்கு” என்றவன் முகம் கழுவிவிட்டு வேகமாக வந்து,
“கண்ணம்மா, சுப்பையா!” எனக் கத்தினான்.
“என்னங்கய்யா?” என இருவரும் அவன் முன் வந்து நின்றனர்.
“அருவியைப் பாத்தீங்களா?”
“இல்லையா… நாங்க பாக்கல” என்றனர்.
“வீட்ல இருக்குறவங்க வெளில போனாங்களா, வந்தாங்களான்னு பார்க்கிறதை விட உங்களுக்கு என்ன வேலை?” என ராகவன் கோவமாகக் கேட்டான்.
“ஐயா அது வந்து…”
“வாட்ச்மேனை கூட்டிட்டு வா சுப்பையா.”
வேகமாகச் சென்று வாட்ச்மேனை அழைத்து வந்தான்.
“அருவி வெளிய போனாளா?” எனக் கேட்டான்.
“தெரியலங்கையா… ரொம்ப தூக்கமா வருதுன்னு… பீடி குடிக்க ஓரமா போனேன்… அந்த நேரத்துல அம்மா வீட்டை விட்டு போயிருக்கலாம்” என்றான் தலையைச் சொரிந்தபடி.
வாட்ச்மேனை முறைத்தவன், “முதல்ல போய் அருவியைத் தேடுங்க” எனச் சத்தமிட்டான்.
அவர்கள் சென்று தேடிப் பார்த்தார்கள். அவளைக் காணவில்லை.
“எங்கே போனானு தெரியலயே! இவ்வளவு சீக்கிரம் எங்கே போயிருப்பா? அவளுக்கு எதாவது ஆகியிருக்குமோ?” என யோசித்தவன் தன் போனையும் கார் சாவியையும் எடுத்துக்கொண்டு, ஹாலில் நின்றிருந்த மூவரிடமும்,
“நான் அருவியைத் தேடிப் போறேன்… அவ வீட்டுக்கு வந்த உடனே எனக்கு போன் பண்ணுங்க” என்றான்.
“சரிங்க ஐயா!” என்றனர் பயத்துடன்.
அப்போது, “என்னங்க” என்ற குரல் கேட்டு வேகமாகத் திரும்பிப் பார்த்தான் ராகவன்.
அவனைப் பார்த்துச் சிரித்தபடி, தன் சேலையைத் தோளில் போர்த்திக் கொண்டு நின்றிருந்தாள் அருவி.
வேகமாக அவளருகில் வந்தவன், “எங்கே போன?” எனக் கேட்டான்.
“அது வந்துங்க… நான்…” என அவள் கூறி முடிக்கும் முன் “பளார்” என அவன் கன்னத்தில் அறைந்தான் ராகவன்.
அவன் அடித்ததில் அதிர்ந்து நின்றாள் அருவி.
அருவி எங்கே போயிட்டு வந்திருப்பா? 🤔
தெரிஞ்சுக்க நாளைக்கு எபிஸோட் மிஸ் பண்ணாம படிங்க பிரண்ட்ஸ்!
