இதழ் – 25
வீட்டை விட்டு வெளியே வந்த ராகவன் கால் போன போக்கில் நடந்து வர, அவன் அருகில் வேகமாக ஒரு கார் வந்து நின்றது.
அப்பொழுதும் சுயநினைவு இல்லாமல் நடந்து கொண்டிருந்தான்.
காரிலிருந்து இறங்கியவன், “டேய்! மச்சான், உன்ன தேடித்தான் நான் வீட்டுக்கு வந்துட்டு இருக்கேன். நீ என்னடா இங்க?” எனக் கேட்டபடி அவன் முன்னால் வந்து நின்றான். அவன் நண்பன் விக்னேஷ்.
ராகவன் அமைதியாக இருக்க, அவன் கண் கலங்கிய நிலை கண்டவன்,
“டேய் மச்சான், இருடா” எனக் காரில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்து முகம் கழுவச் செய்து அவனை காரில் அமர வைத்தான் விக்னேஷ்.
“டேய் விக்கி… நான்…” என்று ராகவன் தடுமாறினான்.
“இப்ப நீ எதுவும் சொல்ல வேண்டாம். வா!!” என அவனைத் தான் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான் விக்னேஷ்.
அங்கு குளித்துவிட்டு வந்த ராகவன் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.
“டேய் ராகவ்… நீ ரொம்ப ஸ்ட்ராங்கான ஆளாச்சே டா. நீ கவலைப்பட்டு கூட நான் பார்த்ததில்ல. எதுக்குடா இப்படி இருக்க? சொல்லுடா என்ன ஆச்சு?”
“நீ எப்ப டா ஊருக்கு போற?” எனக் கேட்டான் ராகவன்.
“நைட். உனக்கு மனசு சரி இல்லனு தோணுது. ஒண்ணு பண்ணலாம்… பேசாம நீயும் என் கூட பெங்களூருக்கே வந்துடுறியா?”
“இல்ல டா. எனக்கு இங்க ஒரு முக்கியமான வேலை இருக்கு.”
“சரிடா. அதுக்கு மேல உன் இஷ்டம். ஆனா!! ஒண்ணு தெரிஞ்சுக்கோ. நீயும் நானும் சேர்ந்துதான் அந்த கம்பெனி ஸ்டார்ட் பண்ணுனோம். நீ வந்தாதான் எனக்கு நிம்மதியா இருக்கும். ப்ளீஸ் புரிஞ்சுக்கடா. இப்பதான் நம்ம ஆபீஸ் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிட்டு இருக்கு. இந்த டைம்ல நீ வந்து எனக்கு சப்போர்ட் பண்ணுனா, நம்ம வேற லெவல்ல போயிடலாம்” என்றான் விக்னேஷ்.
“என்னோட அற்புதமான, அழகான வாழ்க்கையைத் தொலைச்சுட்டேன். இனிமே நான் வேலைக்கு போய் என்னடா பிரயோஜனம்?” என்றான் ராகவன் விரக்தியாக.
“நீ என்ன சொல்ற?”
“இல்ல ஒண்ணும் இல்லடா. இப்ப நீ போ. நான் இங்க ஒருத்தரை தேட வேண்டியது இருக்கு. அதுக்கு அப்புறம் நானே வரேன்” என்றான் ராகவன்.
“சரிடா” என்ற விக்னேஷ் இரவு கிளம்பி பெங்களூருக்குச் சென்றான்.
இங்கு அருவி பெங்களூருக்கு வந்து ஐந்து நாள் ஆனது. சங்கீதா அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தாள்.
“இன்னிக்காவது உன் எம்டி கிட்ட எனக்கு ஒரு வேலை கேட்டு வாடி ப்ளீஸ்” என்றாள் அருவி.
“நான் மேனேஜர் கிட்ட கேட்டுட்டேன். எங்க எம்டி கிட்ட கேட்டு பாக்கறேன்னு சொன்னார்.”
“உங்க எம்டி எனக்கு வேலை கொடுப்பாரா?”
“அவர் நல்லவர். இன்னிக்கு அவர் ஆபீஸ் வந்ததும் நான் உனக்காகக் கேட்கறேன். எனக்கு உன்னோட ஹெல்த் முக்கியம். நீ ரொம்ப உடம்பு சரி இல்லாம இருந்ததாலதான் நான் கேட்காம இருந்தேன். இப்போ உனக்கு பரவாயில்லையா?” என அக்கறையாகக் கேட்டாள் சங்கீதா.
“நான் நல்லாதான் இருக்கேன்” என்றாள் அருவி.
“என்னைப் பார்த்து சொல்லு” என அவள் முகத்தை நிமிர்த்தி தன்னைப் பார்க்க வைத்தவள்.
அவள் அமைதியாக இவளைப் பார்த்தாள்.
“உன் உடம்புல எவ்வளவு காயம் இருந்துச்சு. மனசளவுலயும் உடம்பளவுலயும் நீ எவ்வளவு வீக்கா இருந்தேன்னு எனக்குத் தாண்டி தெரியும். இந்த அஞ்சு நாள் நீ பட்ட கஷ்டத்தை என்னால சொல்ல முடியல. இப்ப நீ கொஞ்சம் நல்லா இருக்குன்னு சொல்ற. இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு. இன்னைக்கு கண்டிப்பா நான் உனக்கு ஒரு வேலை கேட்டுட்டு வரேன்.”
“எனக்கு வேலை கிடைச்சா நல்லா இருக்கும் டி. நான் இதுக்கு மேல உனக்கு பாரமா இருக்க விரும்பல” என்றாள் அருவி அவளை அணைத்தபடி.
“எதுக்கு அருவி இப்படி எல்லாம் பேசுற? நமக்குள்ள என்ன இருக்கு? நீ என்னோட பிரண்டு. சரி, டிபன் வச்சிருக்கேன். சாப்பிட்டு டேப்லெட் போட்டு நல்லா ரெஸ்ட் எடு. நான் வரேன்.”
“சரி” எனத் தலையசைத்த அருவி கட்டிலில் படுத்து அழுதபடி கண்ணீருடன் உறங்கிப் போனாள்.
அலுவலகம் வந்த சங்கீதா எம்டி அறைக்குள் நுழைந்து, “குட் மார்னிங் சார்” என்றாள் விக்னேஷைப் பார்த்து.
“மார்னிங்.”
“நீங்க என்ன இந்த ஒரு வாரம் டல்லா இருக்குற மாதிரி இருக்கு. என்கிட்ட ஏதாவது கேட்கணுமா?”
“ஆமா! சார், அது வந்து… என்னோட பிரண்டு ஒருத்தி இருக்கா. என்ன கூடதான். அவ ஃபேஷன் டிசைனிங் சேர்ந்து படிச்சா.”
“அப்படியா!”
“ஆமா சார். அவளுக்கு ஏதாவது வேலை கிடைச்சா கொஞ்சம் நல்லா இருக்கும் சார்.”
“ஓகே. கண்டிப்பா கொடுத்துடலாம். அவங்கள வர சொல்லுங்க. சர்டிபிகேட் எல்லாம் எடுத்துட்டு நாளைக்கே வர சொல்லுங்க.”
“ஓகே சார்.”
“வர சொல்லுங்க. பாத்துக்கலாம்” என்றான் அவன்.
“தேங்க்ஸ் சார்” என்றவள் தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள் சங்கீதா.
மாலை அருவி உணவு சமைத்து வைத்து அவளுக்காகக் காத்திருந்தாள்.
வேகமாக வந்த சங்கீதா, “அருவி! உனக்கு வேலை கிடைச்சிருச்சு!” என்றாள் சந்தோஷத்துடன்.
“எப்படி?”
“நான் தான் சொன்னேன்ல அவர் ரொம்ப நல்லவர்னு. நாளைக்கே உன்ன வேலைக்கு வர சொன்னார்.”
“என்னால நம்பவே முடியல டி.”
“நான் எதுக்கு உன்கிட்ட பொய் சொல்லப் போறேன்? நாளைக்கு நீ வந்து வேலை ஜாயின் பண்ணிக்கலாம்னு அவர் சொன்னார்.”
மறுநாள் அலுவலகத்துக்கு கிளம்பி வந்தாள் அருவி. அவளை எம்டி அறைக்கு அழைத்துச் சென்றாள் சங்கீதா.
“உங்க பேர் என்ன?”
“அருவி.”
“என்ன படிச்சு இருக்கீங்க?”
“பேஷன் டிசைனிங். ஒரு வருஷம் படிச்சேன்.”
“அப்படியா! ஓகே.”
“நீங்க இங்க என்ன வேலை கொடுத்தாலும் கண்டிப்பா செய்வேன் சார்.”
“சரி. இப்போதைக்கு சங்கீதா உங்களை ட்ரெயின் பண்ணுவாங்க.”
“சரிங்க சார்.”
“ஓகே. சீக்கிரம் கத்துக்கோங்க. ஆல் த பெஸ்ட்.”
“தேங்க்ஸ் சார்” என்றாள் அருவி.
வேலையில் சேர்ந்து ஒரு மாதம் ஆனது. இங்கு அவளைத் தேடித் தேடி ஊரூராக அலைந்து கொண்டிருந்தான் ராகவன்.
“கண்டிப்பா நான் உன்னைத் தேடுவேன். உன்னை நான் கண்டுபிடிக்காம விட மாட்டேன்” எனத் தனக்குள் முடிவெடுத்துக் கொண்டு அவளைத் தேடிக் களைத்து இரவு உறங்கச் சென்றவன்.
போன் அடிக்க, திரையில் விக்னேஷ் எண்ணைப் பார்த்து, “சொல்லுடா” என்றான் ராகவன்.
“எங்கடா இருக்க?”
“நான் இப்போ கேரளாவுல இருக்கேன்.”
“எதுக்குடா?”
“அது வந்து… இப்ப என்ன விஷயம் சொல்லு டா.”
“டேய்! கொஞ்சமாவது எனக்கு ரெஸ்ட் கொடுடா.”
“இப்ப என்ன தான்டா பண்ண சொல்ற?” என ராகவன் கேட்டான்.
“வேலை அதிகமா இருக்குடா. நீ வந்தா கொஞ்சம் ஹெல்ப்பா இருக்கும். ப்ளீஸ் புரிஞ்சுக்கடா. சொன்னா கேளுடா. இங்க நம்மள நம்பித்தான்டா நிறைய ஸ்டாஃப் வேலை பாக்குறாங்க. நம்மளால அவங்க கஷ்டப்படணுமா?” என்றான் விக்னேஷ்.
“சரி. நான் நாளைக்கு வரேன்” என போனை வைத்த ராகவன் ஒரு நாள் காலையில் பெங்களூருக்கு கிளம்பினான்.
காலையில் 6 மணிக்கு விக்னேஷ் வீட்டிற்கு வந்தான் ராகவன். அவனைக் கட்டி அணைத்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றான் விக்னேஷ்.
“எப்படிடா இருக்க?”
“ம்” எனத் தலையசைத்து உடை மாற்றி பெட் மீது படுத்தான் ராகவன்.
“என்னடா செய்யப் போற?” என விக்னேஷ் கேட்டான்.
“இதென்னடா கேள்வி? தூங்கப் போறேன்.”
“என்னது? தூங்கப் போறியா!”
“நீ எதுக்கு டா இவ்ளோ சாக் ஆகுற?”
“இப்பவே ஆபீஸ் கிளம்பு.”
“டேய்! நான் தூங்கி ரொம்ப நாள் ஆச்சு. இப்பதான் தூங்கணும் போல இருக்கு.”
“ராகவ், இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்குடா.”
“ம்.”
“நீயும் கண்டிப்பா அட்டெண்ட் பண்ணணும்.”
“எத்தனை மணிக்கு மீட்டிங்?”
“11 மணிக்கு.”
“சரி. நீ போடா. நான் வரேன்.”
அவன் கிளம்பிச் சென்றதும் ஒரு மணி நேரம் கழித்து எழுந்த ராகவன் குளித்து “எம்டி” போல் உடை அணிந்து கொண்டு ஆபீஸ் வந்தான்.
அப்பொழுது கேண்டீனில் டீ குடித்துக் கொண்டிருந்தனர் சங்கீதாவும் அருவியும்.
“சாப்பிடுன்னு சொன்னதுக்கு ‘வேணாம், பசிக்கலை’னு சொல்லிட்ட. இப்ப உனக்காக சார் கிட்ட பெர்மிஷன் கேட்டு உன்னை கஷ்டப்பட்டு கேண்டீன் கூட்டிட்டு வந்தா. எதும் வேணாம்னு சொல்ற” என இவளை செல்லமாகத் திட்டிக் கொண்டிருந்தாள் சங்கீதா.
அப்போது காரிலிருந்து இறங்கிய ராகவன் அவர்களைக் கடந்து செல்லும் போது, சங்கீதா எதோ கூற, அதைக் கேட்டு எப்பொழுதாவது சிரிக்கும் அருவி அன்றும் அத்திப் பூத்தது போல் கலகலவெனச் சிரித்தாள்.
இந்த சிரிப்புச் சத்தம் என்றவன் வேகமாகத் திரும்பிப் பார்த்தான். அங்கு அழகாக சங்கீதாவிடம் பேசியபடி சிரித்துக் கொண்டிருந்தாள் அருவி.
“போதும் டி. என்னால இதுக்கு மேல சிரிக்க முடியாது. நான் டீ குடிக்கறேன். அதுவும் உனக்காக” என்றாள் அருவி.
அவளைப் பார்த்ததும் ஓடிச் சென்று அவள் அருகில் பேச வேண்டும் என்று நினைத்தவன் அவளைப் பார்த்தபடி அவளருகில் வந்தான். ஆனால் அவள் அவனைப் பார்க்கவில்லை. வேகமாக அவர்கள் அருகில் சென்றவன் அருவி கூறிய வார்த்தையைக் கேட்டு அப்படியே பின்னால் வந்து அங்கிருந்த சுவற்றின் மறைவில் மறைந்து நின்று கொண்டான்.
அருவி பேசப் பேசத் தன்னை அறியாமல் தன் கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தான் ராகவன்.
“இனிமே என் வாழ்க்கையில என் புருஷனுக்கு இடமே கிடையாது. கடவுள் இருக்கிறது உண்மைனா நான் அவரைப் பார்க்கவே கூடாது” என்றாள் அருவி கண் கலங்கியபடி.
“ஏண்டி அப்படிச் சொல்ற? அவரை மன்னிக்கலாம்ல.”
“மன்னிக்கிறதா! புருஷனா இருந்தா மன்னிக்கலாம். ஆனா அவர் மனுஷனே இல்ல. என்னால அவர் கூட இருந்த வாழ்க்கையை நினைச்சு கூடப் பார்க்க முடியல. ப்ளீஸ் தயவு செய்து மறுபடியும் இதைப் பத்தி பேசாத. அப்புறம் நான் உயிரோடவே…” என்ற அருவியின் வாயைப் போர்த்தினாள் சங்கீதா.
“சரி விடு டி. இனிமே நான் அவரைப் பத்தி பேசல. இப்ப வா போலாம். டைம் ஆயிடுச்சு” என அருவியை அழைத்துச் சென்றாள்.
அருவி கூறியதைக் கேட்டு அப்படியே அதிர்ந்து உறைந்து நின்றான் ராகவன்.
