இதழ் – 4
என்ன? நாம பேசிட்டே இருக்கோம், இவ சத்தத்தையே காணோம் என திரும்பி பார்த்த ராகவன் தலையில் அடித்துக் கொண்டான்.
ஏனெனில்!! அருவி அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
“நான் சொல்வதை கேட்காம இப்பவும் தூங்கிட்டா. இவளை என்ன பண்றதுனே எனக்கு தெரியலையே” என தன்னைத்தானே நொந்து கொண்டவன், அவளது நகைகளை எல்லாம் டிரெஸ்ஸிங் டேபிளில் எடுத்து வைத்துவிட்டு சோபாவில் சென்று படுத்தான்.
அவனுக்கு சோபாவில் படுத்து பழக்கம் இல்லாததால் தூக்கம் வராமல் நெடுநேரம் “புரண்டு, புரண்டு” படுத்துக் கொண்டிருந்தவன், நடு இரவில் பெட்டின் ஒரு ஓரத்தில் படுத்துக் கொண்டான் ராகவன்.
சற்று நேரத்தில் அவள் அவன் மேல் கையை தூக்கி போட, கையை எடுத்து விட்டான்.
சற்று நேரத்தில் அவள் காலை தூக்கி அவன் வயிற்றில் போட, எரிச்சலுடன் அவளது காலை எடுத்து விட்டான். இப்படியே அவள் செய்து கொண்டிருக்க, அவனும் எடுத்து எடுத்து போட்டுக் கொண்டு ஒரு கட்டத்திற்கு மேல் அவனும் நன்றாக உறங்கி விட்டான்.
விடியற்காலியில் கண்விழித்தவனால் அசைய கூட முடியவில்லை. நன்றாக கண்விழித்து பார்த்தவன் திடுக்கிட்டான்.
ஏனெனில்!! அவன் மார்பில் அவள் தலை வைத்து, அவனது இடுப்பில் அவள் கையை வைத்து இறுக்கி பிடித்துக் கொண்டு, அவன் கால்களுடன் தன் கால்களை பின்னிக்கொண்டு சேலை இல்லாமல் பாவாடை ஜாக்கெட் உடன் அவனை இறுக்கி கட்டி பிடித்து படுத்துக் கொண்டிருந்தாள் அருவி.
அவளது கோலத்தை பார்த்ததும் அவனால் “மூச்சு” கூட விட முடியவில்லை.
“இவளை என்ன செய்றது? காலங்காத்தாலே இப்படி டென்ஷன் ஆக்கறாளே!!” என அவன் நினைக்க.
அவள் அசந்து தூங்கிக் கொண்டிருக்க, “அருவி… அருவி…” என்னை விடு என்றான்.
“ப்ளீஸ்மா… இன்னும் கொஞ்ச நேரம் தூங்குகிறேன். நாளைக்கு தானே எனக்கு கல்யாணம்? எதுக்காக என்னை இப்படி எழுப்பிக்கிட்டு இருக்கீங்க? உங்களுக்கு கொஞ்சம் கூட என்னை பார்த்தா பாவமா தெரியலையா!!!” என உளறினாள்.
“தயவுசெய்து கண்ணை முழிச்சு பாரு.”
“மாட்டேன்… 7 எட்டு தானே ஆகுது? பத்து மணிக்கு எழுப்புங்க” என்றாள்.
“நான் 9 மணிக்கு ஆபீஸ் போகணும்… இவ இப்படி பன்றாளே” என அவளை உதறி விட்டு எழுந்தான்.
அவள் அசைந்தபடி மீண்டும் உறங்க.
“நான் இப்படி தள்ளி விடுறேன்… இன்னும் தூங்கிக்கிட்டு இருக்கா? இவளை என்னதான் பண்றது?” என அவன் நினைத்துக் கொண்டிருக்க,
இப்பொழுது அவளது பாவாடை சற்று மேலே ஏறி இருந்தது. அவள் இடுப்பு அழகாக அவன் கண்களுக்கு காட்சியளிக்க, தலையை வேகமாக உதறியவன், போர்வையை எடுத்து அவளுக்கு முழுவதுமாக போர்த்தி விட்டு, மணியை பார்க்க “4:30” என காட்டியது.
வேகமாக கிளம்பி ஜாக்கிங் சென்றான். அப்பொழுது வழக்கம் போல் அவனுடன் அவனது நண்பனும் ஜாக்கிங் வந்தான்.
ராகவனை பார்த்து, “ஹாய்! மச்சான்” என்றான்.
“ஹாய் டா” என தலையசைத்தான் ராகவன்.
“என்னடா மச்சான்? காலையில் இந்த பக்கம்?”
“ஏன்? இத்தனை நாள் மத்தியானமா நான் ஜாக்கிங் வந்தேன்? காலையில தானே வந்தேன்? இன்னைக்கு என்னடா புதுசா கேக்குற?”
“அது இல்லடா மச்சான்… இத்தனை நாளா கல்யாணம் ஆகாம இருந்துச்சு.”
“சரி… இப்போ?”
“இப்ப உனக்கு கல்யாணம் ஆயிடுச்சுல.”
“கல்யாணம் ஆனா என்ன?”
“கல்யாணம் ஆனதும் இப்படி சீக்கிரம் எந்திரிக்க முடியாதுடா.”
“ஏன்?”
“அது எப்படி டா? தெரியாத மாதிரியே கேட்கிற” என்றான் அருண்.
“டேய்! ஏற்கனவே நான் டென்ஷன்ல இருக்கேன்… நீ என்ன ரொம்ப டென்ஷனாகாத… பேசாம ஒழுங்கா வாயை மூடிக்கிட்டு வா” என்றான் ராகவன்.
அவன் கண்கள் சிவந்து இருப்பதை பார்த்த அருண் சிரிக்க.
“இப்ப எதுக்கு டா சிரிக்கிற?”
“சொன்னா கோச்சுக்க கூடாது.”
“சொல்லு.”
“கல்யாணமே வேணாம்னு சொன்ன… இப்ப கண்ணெல்லாம் சிவந்திருக்கு.”
“கல்யாணம் வேணாம்னு சொன்னதுக்கும் இப்ப கண்ணு சிவந்துருக்குறத்துக்கும் என்னடா சம்பந்தம்?” என ராகவன் புரியாமல் கேட்க.
“நைட் எல்லாம் கண் விழித்து…” என அருண் இழுக்க.
“டேய்! உன்ன கொன்னே போட்டுருவேன்.”
“ஏன்டா?”
“அவ நைட்ல என்ன வச்சு செஞ்சிட்டா?” என்றான் எரிச்சலுடன்.
“என்னடா சொல்ற!” என அருண் வாய் பிளந்து கேட்க.
“அடச்சீ!! வாய மூடு டா… நான் என்ன சொல்ல வரேன்னு கேட்காம நீயா தப்பு தப்பா நினைச்சுகிட்டு பேசாத டா.”
“நம்பிட்டேன்டா… நீ சொல்றதெல்லாம் நான் நம்பிட்டேன்” என அவன் கூறிக் கொண்டிருக்க, ஒரு இடத்தில் அமர்ந்தான் ராகவன். அவன் அருகில் அமர்ந்தான் அருண்.
இப்பொழுது மெதுவாக சாதாரணமாக பேசினான் அருண்.
“ஏன்டா மச்சான் இவ்வளவு டென்ஷனா இருக்கா காலையிலேயே?”
“இல்லடா… அம்மா, அப்பா சொன்னாங்கன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.”
“சரி.”
“இப்ப எனக்கு ரொம்ப டென்ஷனா இருக்குடா.”
“ஏன்?” என அருண் கேட்க.
“அவளை பார்த்தாலே எனக்கு கோவம் கோவமா வருது.”
“அப்படி சொல்லாதடா!”
“அந்த பொண்ண பார்த்தா ரொம்ப நல்ல பொண்ணா தெரியுதுடா… நேத்து கூட கல்யாணத்துல இவ்ளோ அமைதியா இருந்தாங்க… நீயே யோசிச்சு பாரு… இதுவே நம்ம கூட படிச்ச பொண்ணுங்களா இருந்தா ஆட்டம் பாட்டம்னு இருந்திருக்கும். ஆனா அந்த பொண்ணு கொஞ்சம் கூட தல நிமிரலடா… உன் முகத்தைக் கூட சரியா பாக்கல. அப்படிப்பட்ட நல்ல பொண்ண தான் உங்க அம்மா அப்பா உனக்கு கல்யாணம் பண்ணி இருக்காங்க. தயவுசெய்து உன் மனசுல தேவை இல்லாதத போட்டு குழப்பிக்கிக்காம… அந்த பொண்ணு கூட சந்தோஷமா வாழ பாருடா… உன் லைஃப் நல்லா இருக்கும்” என்றான் அருண், ராகவனின் மேல் உள்ள அக்கறையில்.
“டேய்! உங்களுக்கு நான் சொல்றது புரியுதா? இல்லையா? எனக்கு பொண்ணுங்களை பிடிக்காது.”
“ஏன் டா?”
“எனக்கு எந்த பொண்ணையும் பிடிக்காது.”
“எந்த பொண்ணுமே பிடிக்காதுனா என்னடா அர்த்தம்?”
“நான் தான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கேன்ல டா… என்னோட பிரண்டு மாதவன் அவன் ஒரு பொண்ண லவ் பண்ணி ஏமாத்திட்டா… அதனால எனக்கு பொண்ணுங்களை பிடிக்காது” என ராகவன் கூற.
“லூசு மாதிரி பேசாத ராகவ். ஒரு பொண்ணு ஏமாத்திட்டா… எல்லா பொண்ணுங்களையும் நீ எப்படி டா தப்பா சொல்லுவ?”
“இல்லடா! என்னை பொறுத்தவரைக்கும் எல்லா பொண்ணுங்களும் ஒரே மாதிரி தான். அவங்கள பொறுத்தவரைக்கும் லவ் பண்ற மாதிரி நடிக்க தான் செய்வாங்க… பசங்கள மாதிரி அங்களுக்கு உண்மையா காதலிக்க தெரியாது… என்னை கேட்டா உங்களுக்கு காதல்னா அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது” என்றான் ராகவன்.
“போதும்… நிறுத்துடா!! ரொம்ப பேசுற நீ” என்றான் அருண்.
“நான் பாட்டுக்கு சும்மா தான் இருந்தேன்… நீ தான்டா என் வாய கிளறி விட்ட.”
“ஒண்ண தெரிஞ்சுக்கடா! நம்மளா தேடி போறத விட… நம்மளை தேடி வர லவ் தான் பெஸ்ட்டா இருக்கும்… கடவுளா பார்த்து உனக்கு ஒரு நல்ல பொண்ண மனைவியாக்கி இருக்காரு… தேவையில்லாத நினைச்சு உன்னோட லைஃப் நீயே கெடுத்துக்காத… நான் சொல்லிட்டேன்.”
“எனக்கு தெரியும்… உன் வேலைய பாத்துட்டு போடா” என்றான் ராகவன் கோவமாக.
மெல்ல அவனருகில் வந்த அருண், “அப்புறம் மச்சான்” என்றான்.
“என்னடா?”
“எனக்கு ஒரு சந்தேகம்.”
“மறுபடியும் என்னடா சந்தேகம்?”
“உன் கண்ணு ரொம்ப சிவந்து இருக்கு… இதோட தான் இன்னைக்கு நீ ஆபீஸ் போக போறியா!!” என அருண் சிரித்தபடி கேட்க.
“மவனே உன்னை…” என ராகவன் அவனை அடிக்க விரட்ட, சிரித்துக் கொண்டே ஓடி விட்டான் அருண்.
“இவனே நம்மளை இவ்வளவு கேள்வி கேட்கிறானே! அங்க வீட்ல என்ன நிலைமையோ?” என்றவன் வீட்டிற்கு சென்றான் ராகவன்.
இங்கே வீட்டில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த அருவி, கண் திறந்து பார்க்க அவனை காணவில்லை.
“கண்ணை மூடி தூங்கும்போது இருக்காரு… கண்ணை திறந்தா!!! காணாம போயிடுறார்… இது கனவா!! என்னனே தெரியல” என்றவள் புலம்பிக்கொண்டே குளித்து ரெடியாகி கிச்சனுக்கு வந்தாள்.
கிச்சனில் சரஸ்வதி சமைத்துக் கொண்டிருக்க, தோட்டத்தில் சேதுராமன் ஃபோன் பேசிக் கொண்டிருந்தார்.
தன் மருமகளை பார்த்த சரஸ்வதி, “குட் மார்னிங் அருவி” என்றார்.
“குட் மார்னிங் அத்தை” என்றாள்.
“அழகா இருக்க” என்று அவளை திருஷ்டி கழித்தார்.
“போய் பூஜை ரூம்ல போய் விளக்க ஏத்திட்டு வா… அருவி.”
“சரிங்க அத்தை” என்றவள் பூஜை அறையில் சென்று சாமி கும்பிட்டு விளக்கேற்றி விட்டு வந்தாள்.
“அருவி.”
“என்னங்க அத்தை?”
“இனிமேல் காலைல சீக்கிரம் எழுந்து நீ தான் சாமிக்கு விளக்கேத்தணும்.”
“சரிங்க! அத்தை.”
அப்போது அங்கு வந்த சேதுராமன், “சரஸ்வதி” என அழைக்க.
“சொல்லுங்க.”
“எனக்கு பூரியும் மசாலாவும் பண்ணி வச்சிடு.”
“சரிங்க.”
“இன்னைக்கு ஆபீஸ்ல முக்கியமான வேலை இருக்கு… நான் சீக்கிரம் கிளம்பனும்.”
“சரிங்க” என்றவர், “அருவி நீ எனக்கு சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சு கொடு.”
“சரிங்க அத்தை.”
“ஆமா! உனக்கு சமைக்க தெரியுமா?” என சரஸ்வதி கேட்க.
“கொஞ்சம் கொஞ்சம் தெரியும்” என்றாள்.
“இல்லையே!! உங்க அம்மா என் பொண்ணு நல்லா சமைப்பானு சொன்னாங்களே!!”
“தெரியும்… ஆனா உங்க அளவுக்கு தெரியாது அத்தை.”
“ஒன்னும் தெரியாத பொண்ணுங்களே நல்லா சமைக்க தெரியும் னு சொல்லுவாங்க… ஆனா நீ நல்லா சமைக்க தெரிஞ்சும் இப்படி தெரியாதுன்னு தன்னடக்கமா சொல்ற” என்றவர் பூரியை சுட.
“அத்தை அவர காணோம்.”
“அவனா! வழக்கம் போல ஜாக்கிங் போய் இருப்பான்” என்றார் சரஸ்வதி.
அப்பொழுது சமையல்காரம்மாவின் மகள் அகிலா வர, “என்ன அகிலா? உங்க அம்மா கனகா வேலைக்கு வரலையா?” என்றாள்.
“இல்லம்மா.”
“அம்மாக்கு உடம்பு சரியில்ல… அதனால என்னை வேலைக்கு போக சொன்னாங்க.”
“சரி வா… வந்து மிச்சம் வேலையை பாரு” என்றார் சரஸ்வதி.
அகிலா அருவியை பார்க்க, அவள் அழகாக சிரித்தாள் அகிலாவை பார்த்து. அகிலாவிற்கு அருவியை மிகவும் பிடித்து விட்டது. அவளும் சினேகமாக புன்னகைத்தாள். இருவரும் ஒரே வயது உடையவர்கள் தான்.
“அகிலா நீ உன் புருஷன் வீட்டுக்கு போயிட்டேன்னு உன் அம்மா சொன்னாங்க… எப்ப வந்த?”
“அந்த கொடுமையை ஏம்மா கேக்குறீங்க… என் புருஷன் குடிச்சிட்டு வந்து என்னை போட்டு அடிச்சான்… அதனாலதான் புள்ளைய கூட்டிட்டு அம்மா வீட்டுக்கு வந்துட்டேன்” என்றாள் கண் கலங்க.
“படிச்சுக்கிட்டு இருந்த உன்னை ஏன் இப்படி சொந்தக்கார பையன், தெரிஞ்ச பையன் னு சொல்லி உங்க அம்மா கல்யாணம் பண்ணி வச்சுச்சு?” என சரஸ்வதி கூற.
“எல்லாம் என் தலை விதி” என்றாள் அகிலா.
“என்னத்த சொல்ல… சரி சரி வேலையை பாரு” என கூற.
“அத்தை” என்றாள் அருவி.
“ம்.”
“நாளைக்கி நான் சீக்கிரமா எழுந்துடறேன்.”
“சரி.”
“இன்னக்கி உங்க புள்ளையால தான் நான் லேட்டா எழுந்தேன்… அவர் தான் என்னை தூங்கவே விடல” என்றாள் அருவி சாதாரணமாக.
அவள் கூறியதை கேட்ட சரஸ்வதி அமைதியா இருக்க, அகிலா தன்னை மறந்து சிரித்து விட்டாள்.
அப்பொழுதுதான் வீட்டிற்கு வந்த ராகவன் அருவி கூறியதை கேட்டு அதிர்ந்து நின்றான்.
