இதுவும் கடந்து வாழவே – அத்தியாயம் 1

  இதுவும் கடந்து வாழவே – 1   

         காலை கதிரவன் அந்த மலையின் நடுவில் வீட்டிருக்கும் முருகப் பெருமானின் கோவிலின் எழில் அழகை உலகிற்கு காட்டிக் கொண்டிருந்த வேளையில் நம் நாயகன் ராமும் நாயகி தேவியும் அந்த மலைக் கோவிலின் முருகர் சந்நிதியில் சுற்றம் சூழ மணக்கோலத்துடன் நின்று கொண்டிருந்தனர்.

       தேவி கணமில்லா பச்சைவண்ண பட்டுடுத்தி மிகை இல்லா அலங்காரத்தோடும் அபரணத்தோடும் ஒப்பனையோடும் மிளிர்ந்தாள். அவளை உரசியபடியே ராம்மும் நின்றிருக்க தேவியிடம் திருமணம் குறித்த பதற்றம், அது அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. ராம் அதை கவனித்து ரசித்தபடி மற்றவர்களிடம் பேசிக் கொண்டு இருக்க அவர்களின் உறவுக்கார இளசுகளும் நண்பர்களும் கிண்டல் செய்து சிரித்துக் கொண்டிருந்தனர்.

       திருமணத்திற்கு வந்த ஊர்க்காரர்களும் மணமக்களை பார்த்து அவர்கள் பங்குக்கு பேசினர், ஒருவர் “ஜோடிப் பொருத்தம் நல்லாத்தானையா இருக்கு… கையுல வெண்ணைய்ய வச்சுக்கிட்டு நெய்க்கு அலஞ்சது மாதிரில சரவணன் அண்ண சொந்ததுலேயே மாப்புளைய வச்சுக்கிட்டு எத்தன வருஷமா மகளுக்கு அசல மாப்பிளைக்கு தேடி அளஞ்சிருக்காரு”

        இன்னொருவர், “எது இருந்தாலும் நேரம் கூடி வந்தா தான் நமக்கு கண்ணுல காட்டி கொடுக்கும். இப்ப தான அவங்க அக்கா பையன் கல்யாணத்துக்கு ஒத்துருக்கான்… அதான் சடச்சடன்னு கல்யாண ஏற்பாடு பண்ணிட்டாவ…”

       “என்னையா வந்த காரியத்தை விட்டுட்டு வேரேதோ பேசிக்கிட்டு… பத்திரிக்கைல போட்ட முகூர்த்த நேரமே முடியப் போகுது இன்னும் தாலி கட்ட ஏற்பாடு செய்யல, அதை என்னன்னு பாப்பியா… அதை விட்டுட்டு, எல்லாத்துக்கும் ஆயிரம் சோலி கிடக்கு, வந்தோமா கல்யாணத்தை பாத்தோமா சாப்ட்டோமா மொய் வச்சோமான்னு இல்லாம கண்டதை பேசிக்கிட்டு” என்று ஒரு பெரிய மனிதர் எரிச்சலுற்றார்.

      மற்றொருவர், “இந்த பொசுப்பொசுப்பு தொடங்கியாச்சில்ல… அண்ணாச்சி இவுக எல்லாம் பெரிய இடம் நம்ம அவசருத்துக்கு எல்லாம் அவகளை கேக்க முடியுமா… கல்யாணம் வச்ச அவங்களுக்கு தெரியாதா முகூர்த்த நேரம் நெருங்கிடுச்சுண்ணு… இப்ப நீங்க எங்க போகப் போரீரு மலைய சாய்க்கவா இல்லல்ல வீட்டுல தின்னைல தான கிடக்க போறீரு சும்மா இரும், கல்யாணம் நடக்கும் பந்தி போடுவாக சாப்பிடலாம். அவங்க வேற யாருக்கோ காத்து இருக்காப்புல தெரியுது.”

        “யாருக்கு காத்துக்கிடக்கும் முக்கியமான நாம எல்லாம் இங்க தான இருக்கோம்” என்று மறுபடியும் அந்த பெரிய மனிதர் பேச… ‘அதுசரி’ என்று அவரை சுற்றி இருந்தவர்கள் பார்க்க, அப்போது கட்சி கொடி பறக்க மூன்று கார்கள் வந்து நின்றன. அதிலிருந்து இறங்கிய அந்த மாவட்டத்தின் எம். பி. ராஜமாணிக்கம் அவர் மனைவி பிள்ளைகளோடு தன் கட்சி ஆட்கள் சூழ திருமணம் நிகழும் இடத்தை நோக்கி நடந்துவற அவரை ராமின் தந்தை சந்திரமூர்த்தியும் தேவியின் தந்தை சரவணனும் அவள் பெரியப்பா குமாரவேலும் ஓடிச்சென்று வரவேற்றனர்.

       கூட்டத்தில் ஒருவர், “இவரத்தான் ஆறுமுகம் ஐயா குடும்பமே ஒதுக்கி வச்சுடுச்சுன்னு பேட்டி எல்லாம் குடுத்தாங்கலே இவர் என்னடான்னா இங்க நிக்குறாரு”

     இன்னொருவர், “அது பொண்ணு வீட்டு பக்கம்… இப்ப மாப்பிள்ளை பேச்சுதான எடுபடும், மாப்பிள்ளை இவர கூப்பிட்டா தான் தாலியே கட்டுவேன்னு சொல்லிட்டான் போல அதான் போய் கூப்பிட்டு வந்திருக்காங்க இவரும் கட்சி வேலையும் எலக்சன் பிரச்சாரமும் ஆறுமுகம் ஐயா குடும்பம் செஞ்சாதான் வருவேன் சொல்லிருக்காரு, அதுக்கும் ஆறுமுகம் ஐயா குடும்பம் ஒத்துகிட்டாங்க ஒரு பொம்பலபுள்ள வாழ்க்கைன்னு வந்தவுடனே கொள்கையாவது கூந்தலாவது அப்படின்னு தூக்கிப்போட்டாச்சு” என்று சிரித்தார். அங்கிருந்தவர்கள், “இது என்ன ஆறுமுகம் ஐயா குடும்பத்துக்கு வந்த சோதனை” என்று அங்களாய்த்துக் கொண்டனர்.

                            *****

         ஆறுமுகசாமி, இவர் அந்த குடும்பத்தின் முக்கியப்புள்ளி. இவரை கொண்டுதான் அந்த குடும்பத்திற்கு அரசியல் அறிமுகம். தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் திருச்செந்தூர் அருகில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர். அந்த வட்டாரத்திலேயே மிகப் பெரிய செல்வந்தர். சிறு வயதிலேயே அவருக்கு அரசியல் தலைவர்களின் மேடை பேச்சை கேட்டு அரசியல் மேல் நாட்டம் வந்தது, அதனால் வளர்ந்த பின் தன்னை அப்போது ஆளும் தேசிய கட்சியில் இணைத்துக் கொண்டார். அதற்கு பிறகு, மக்களுக்கு கட்சியின் பெயரில் தொண்டாற்றி கட்சியிலும் தென் மாவட்ட மக்கள் மனதிலும் தனக்கான இடத்தை பிடித்து கொண்டார்.

            அவர் தந்தைக்கு பிறகு சொத்துக்களை கவனிக்கும் பொறுப்பும் இவருக்கு வந்து சேர, அதையும் செவ்வனே செய்து, பெருக்கவும் செய்து இருந்தார். அரசியலிலும் தொழிலிலும் சிறந்து விளங்கியதால் அவரை தேடி கட்சி பதவியும் அரசாளும் பதவியும் வந்தது. முதலில் எம். எல். ஏ. ஆக ஆரம்பித்தது, பின் 3 முறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சில காலம் முதலமைச்சராக கூட பதவி வகித்திருக்கிறார்.

            இப்படிப்பட்ட அரசியல்வாதிக்கு குடும்பத்தின் ஆதரவு இல்லை எனில் ஒருக்கை உடைந்த நிலைதான். ஆனால் அவர் குடும்பம் அவருக்கு மேலும் பலம் சேர்க்கும் விதமாக இருந்தனர். மனைவி செல்லத்தாயி கணவரின் சொல்லுக்கினங்க பண உதவி, பசிக்கிறது என்று வருவோருக்கு இல்லை என்று என்றுமே சொன்னது கிடையாது. அது போல பிள்ளைகளும் தந்தையின் பதவியை காட்டி குறுக்கு வழியில் எதையும் செய்தது இல்லை, அதுதான் ஆறுமுகத்தின் விருப்பமும் கூட. சொத்தை கவனிக்க அவர் இருக்க மகன்கள் தாங்களாக அவர்கள் படிப்புக்கு ஏற்ற வேலை தேடிக் கொண்டார்கள்.

          அவர் மூத்த மகன் குமரவேல் வி.ஏ.ஓ. ஆக இருந்து இப்போது ஓய்வில் இருக்கிறார். மனைவி வேலம்மாள், மூத்த மகன் விநாயகம் மனைவி குழந்தையுடன் பெற்றோருடன் வசித்து வருகிறான். மகள் கிருஷ்ணவேணி வெளியூரில் கணவர் குழந்தைகளுடன் இருக்கிறாள். கடைசியாக மகன் சுரேஷ் சமீபத்தில் தான் காதல் திருமணம் செய்து இருந்தான்.

            ஆறுமுகசாமியின் மூத்த மகள் ராஜேஸ்வரி, அவர் கணவர் சந்திரமூர்த்தி, சென்னையில் கன்ஸ்டிரேக்சன் கம்பெனி நடத்துகிறார். அவர்களுடைய மூத்த மகன் ரகுராம் தந்தையுடன் இணைந்து பணி செய்கிறான், மனைவி பிரியா இரு பிள்ளைகள். இளைய மகன் ஶ்ரீராம் அனிமேஷன் அண்ட் வீடியோ கேம்ஸ் கம்பெனி நடத்துகிறான். சொல்ல மறந்துவிட்டேன் இவன் தான் முன்பு சொன்ன கதாநாயகன்.

       அடுத்த மகன், சரவணன், இ.பி.யில் பணியாற்றுகிறார். மனைவி மீனாட்சி அவர் இயற்க்கை எய்தி சில வருடங்கள் ஆகிறது. இந்த தம்பதிக்கு இரு மகள்கள். மூத்தவள் துர்கா திருமணமாகி கணவன் குழந்தைகளுடன் உள்ளூரில் வசிக்கிறாள். இளையமகள் தேவிகா, நம் கதாநாயகி.

        ஆறுமுகத்தின் கடைசி மகள் சீதாலட்சுமி, இவர் கணவர் மகள் சுஜா மகன் அர்ஜுன். மதுரையில் வாழ்கிறார்கள், சுஜாவுக்கு திருமணம் ஆகிவிட்டது.

           தந்தை எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்பதுபோல் குமரவேலும் சரவணனும் தங்கள் பிள்ளைகளை வளர்த்தனர். ஆறுமுகசாமி வாரிசு அரசியலில் நாட்டம் கொண்டவர் இல்லை. அது போல கட்சியில் இருந்தாலும் எந்த மகன்களும் பேரன்களும் கட்சியில் இருந்தாலும் பதவிக்கும் ஆசைப்படவில்லை முழுநேர அரசியலிலும் ஈடுபடவில்லை.

          ஆறுமுகசாமிக்கு பின்னர் அந்த மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர் தான் இந்த ராஜமாணிக்கம். ஆறுமுகசாமியின் ஒன்றுவிட்ட தம்பி மகன், ஆறுமுகசாமியிடம் நன்மதிப்பை பெற்று கட்சியிலும் வளர்ந்தார். அதனால் ஆறுமுகசாமிக்கு பின்னர், கட்சி பதவியும் எம்.பி. பதவியும் அவரை தேடி வந்தது, அதை கொண்டு நேர்மையற்ற வழியில் நிறைய சம்பாதித்துக் கொண்டார்.

          என்னதான் பெரிய பதவியில் இருந்தாலும் சொந்த ஊரிலும் சுற்று வட்டாரத்திலும் ஆறுமுகசாமி அலை இன்றும் ஓயவில்லை. அதற்கு அவர் குடும்பம் இன்றுமே அவர் பெயரில் செய்யும் கொடையின் தாக்கம் தான் காரணம், அது என்றுமே மறையாது. அந்த மக்களுக்கு ஊழல் செய்யும் ராஜமாணிக்கத்தைவிட தந்தைக்காக அவர் வாழ்ந்த வீட்டையே மணிமண்டபமாக்கி அழகு பார்க்கும் மகன்கள் ஒருபடி மேல்தான். விளைவு அவர்கள் யாருக்கு ஓட்டு போடச் சொல்லி பிரச்சாரம் செய்கிறார்களோ அவர்களுக்குத்தான் மக்கள் வாக்களித்து பழகி இருந்தனர். இதனால் ராஜமாணிக்கத்திற்கு சொந்த ஊரில் கதாநாயகனாக வலம் வர முடியாத நிலை.

           அவர் என்னதான் ஊழல்வாதியாக இருந்தாலும் கட்சிக்காகவும் குடும்ப உறுப்பினர் என்பதாலும் கூடுதல்லாக ஆறுமுகத்தின் மரியாதைக்காகவும் அவருக்காக ஆறுமுகத்தின் மகன்கள் அவர்கள் கட்சி சின்னத்தில் ஓட்டு கேட்பர். அதன்படி தொடர்ந்து 2 முறை எம்.பி. ஆக இருந்த ராஜமாணிக்கம் இப்போது ஒன்றியத்தில் கேபினட் மினிஸ்டர் ஆகிவிட்டார்.

           ஆனால் சமீபத்தில் அந்த மாவட்டத்தில் நடந்த ஒன்றிய அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சி போராட்டத்தில் மக்களை துப்பாக்கிமுனையில் களைக்க முனைந்த காவல்துறை கடைசியில் சிலரை சுட்டுக் கொன்றிருந்தது. இதை கண்டு பதறினர் ஆறுமுகசாமி குடும்பம், அவர்களுக்கு அந்த மக்களை நன்கு தெரியும். இதை செய்ய காரணம் மத்தியில் ஆளும் அவர்கள் கட்சியும் ஆணை பிறப்பித்தது ராஜமாணிக்கம் என்றும் தெரியவர கட்சியிலிருந்து வெளியேறிவிட்டோம் எனவும் இனி ராஜமாணிக்கம் எங்கள் குடும்ப உறுப்பினர் கூட இல்லை எனவும் பகிரங்கமாக அறிவித்தனர். கட்சி எவ்வளவோ முயன்றும் அவர்கள் முடிவை நேற்றுவரை மாற்றவில்லை.

           ஆனால் இன்று ராஜமாணிக்கம் உறவினராக மட்டுமில்லாமல் கட்சி சார்பாவும் அந்த திருமணத்தில் கலந்துக் கொள்ள முழு காரணம் அந்த குடும்பத்தில் ராம் தான்.

           ராஜமாணிக்கத்தை கண்டதும் திருமண சடங்குகள் அதிவிரைவாக நடந்தன. எல்லோரும் அங்கு பரபரத்துக் கொண்டிருக்க தேவிக்கு இருந்த பதட்டம் ராமிற்கும் தொடங்கியது. இத்தனை நேரம் சாதாரணமாக பேசியாகி விட்டது இன்னும் சற்று நேரத்தில் இல்லறத்தில் இணைய உள்ளதால் ஏற்பட்ட பதட்டம், ‘சரிவருமா’ என்னும் பதட்டம், இது காலம் முழுக்க இருக்க போகும் பதட்டம் தானே, பாவம் அவர்களுக்கு தெரியவில்லை அவர்கள் இந்த நேரத்தை கடந்தால் போதும் என்று நினைத்திருந்தநர்.

         ஐயர் மந்திரம் ஓதி ராம் முன் தட்டை நீட்ட அவனுக்கு அந்த தாலியை தொடுவதற்கே சங்கடமாக இருந்தது. மனதில் அத்தனை சிந்தனைகள், ‘இனி எல்லாம் இவள்தானா? இஷ்ட்டப்படி இருக்க முடியாதே… எல்லாவற்றிற்கும் இவளிடம் பதில் சொல்ல வேண்டுமே… கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை கால்ல சலங்கை கட்டி திங்குதிங்குன்னு ஆடிச்சாம்… இரு இப்ப சம்பந்தமில்லாமல் இந்த சென்டன்ஸ் (sentence) ஏன் என் மைண்ட்ல (mind) வருது’ என்று அவன் சிந்தனை எங்கெங்கோ போக அதன் போக்கை நிறுத்தும் வண்ணம் அவன் அருகில் இருந்த அவன் தாய் ராஜி அவனை உழுக்கினார். 

    “மாப்பிள்ளை அதுக்குள்ள கனவுக்கு போய்ட்டாரு” என்று யாரோ கிண்டல் செய்து சிரிக்க, அதற்கு சுரேஷ், “தாலிய தொடுறதுக்கு முன்னாடி எதிர்காலம் கண்ணுல வந்து போகுமா இல்லையா, டேய் மாப்புள கடந்தகாலத்தில நடந்த சந்தோஷமான நினைவ நினச்சுக்கோடா இனி அது மட்டும்தான் நமக்கு இருக்க போகுது” என்று எல்லோரையும் கையடித்து சிரிக்க வைத்தான். ஆனால் அங்கே ஒரு ஜீவன் மட்டும் அவனை பார்த்து முறைத்தார், அது தான் தேவியின் தந்தை சரவணன்.

     எல்லோரும் இப்படி இருக்க தேவி இந்த உலகத்திலேயே இல்லை. அவள் கைகள் வியர்த்து இருந்தது, வயிற்றில் பயப்பந்து உருண்டுக்கொண்டிருக்க அது எப்போது வேண்டமானாலும் அதன் வேலையை காட்டிவிடும் என்ற நிலையில் அவள் மூச்செடுக்கவே மறந்திருந்தாள். என்னதான் சொந்தத்தில் திருமணம், அத்தைமகன், அவளை மகளாய் பாவிக்கும் ராஜி அத்தை வீட்டுக்கு தான் செல்ல போகிறாள் என்றாலும் அவளுக்கு ஏனோ அந்த சூழ்நிலை அழுத்தமாகத்தான் இருந்தது.

      ‘கெட்டிமேளம் கெட்டிமேளம்’ என்று கத்த, மேல வாத்தியம் முழங்க, கணநேரத்தில் தாலியை எடுத்து தேவியை பார்க்காமல் ராம் அவள் கழுத்தில் இரு முடிச்சிட மூன்றாவது முடிச்சிட்டாள் சுஜா. தேவி குணிந்திருந்ததால் கழுத்தில் விழுந்த தாலியை பார்க்க, “முடிஞ்சுடுச்சு” என்று வாய்விட்டே சத்தமே இல்லாமல் சொல்லிவிட்டு நிமிர்ந்தவளின் நெற்றியில் குங்குமம் வைத்தான் ராம். அந்த நொடி இருவர் கண்களும் சந்தித்துக் கொள்ள அது உண்மையில் தர்மசங்கடமாக உணர்ந்த இருவரும் சட்டென பார்வையை வேறெங்கோ திருப்பினர். ‘இவ்வளவு நேரம் நல்லாதான பேசிட்டு இருந்தோம் இப்ப என்னாச்சி’ என்று அவள் நினைக்க, அவன் மனதிலோ, ‘யு கான்ட் மேரி அ பென்சன் ஹூ யு ஜஸ்ட் மெட் (you can’t marry a person who you just met)’ என்ற வரி அடியாழத்தில் தோன்றியது.

       மொத்த சொந்தமும் சிரிப்பும் கேலியுமாக அவர்களை கோயிலைவிட்டு வெளியே அழைத்து வந்தனர். அவளை அம்மியில் கால் வைக்க சொல்லி அவனிடம் மெட்டியை கொடுத்தார்கள். ராம் குனிந்து ஒற்றை கால் நிலத்தில் பட மண்டியிட்டு, இடக்கையால் அவள் பாதவிரல் பற்ற, அது தானாக மடங்கி நீண்டது. அவன் சட்டென அவள் முகம் பார்க்க அதுவோ எல்லாவித எதிர்மறை உணர்ச்சிகளையும் அப்பட்டமாக காட்டியது. ‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நம்மக்கிட்ட வாய் பேசிட்டு இருந்தவ இவதானா’ என்ற சந்தேகப் பார்வை அவன் வீச, அவள் அவனை நோக்கினாள்.

       “சாரி… கேன் ஐ (can I)…” அவன் கேட்க அவள் புரியாமல் நின்றாள். 

       சந்திரமூர்த்தி (ராமின் தந்தை), “நல்ல நேரம் முடியபோகுது என்ன பண்ற ராம்” என்று எல்லாம் சரியாக நடக்க வேண்டும் இல்லை அவர்தான் ராஜமாணிக்கத்திற்கு பதில் சொல்ல வேண்டும் என்கிற பதட்டத்தோடு கேட்டார்.

      ராம் அவர் புறம் திரும்பவே இல்லை, மாறாக அவன் இடக்கையை தூக்கிக் காட்டி, “காலை பிடிச்சுப் போடலாமான்னு கேட்டேன்” அவளின் விழிகளுக்கு பதிலுரைத்தான்.

     அவளுக்கு அதிர்ச்சியில் விழி விரிய, அங்கிருந்த சிரியவர்களோ, “ஓஹான்னானா….” என்றபடி சிரிக்க, பெரியவர்களுக்கு கூட வெட்கம் வந்தது.

      “தேவி மெட்டி போடக் கூட உன் புருஷன் உன்கிட்ட பெர்மிஷன் (permission) கேக்குறான், இனி எல்லாம் உன் விருப்பம்தான் சொல்லாம சொல்லிட்டான்” என்று சீதாலஷ்மி அன்போடு சொன்னார்.

     “நல்லாத்தான் ஸ்கோர் (score) பண்ற தம்பி, ஆனா உன்னால நாங்க தான் இப்போ நல்லா சிக்கிட்டோம்” என்று தேவியின் அக்கா துர்கா கணவன் ஹரி சொல்ல, துர்கா அவனை முறைத்தாள்.

       சுஜா அருகில் இருந்த அர்ஜுனின் தலையில் தட்டி, “கத்துக்கோடா அண்ணங்கிட்ட இருந்து… ஆஃபீஸ்ல ஒரு பொண்ண கரெக்ட் பண்ண துப்பில்ல… வளர்ந்த குழந்தை” என்று திட்டினாள்.

      தேவி சுற்றி பேசுவதை பார்த்து சிரித்துக் கொண்டு இருக்க, கிருஷ்ணவேணி, “சரி இப்படியே பேசிக்கிட்டு இருந்தா எப்படி… தேவி ராமுக்கு பதில் சொல்லு அவன் எவ்வளவு நேரம் அப்படியே இருப்பான்” என்று எல்லாருக்கும் ஞாபகப்படுத்தினாள்.

       தேவி சட்டென திரும்பி பார்க்க அவள் எண்ணத்தை பிரதிபலித்தாள், ரேஷ்மா (தேவியின் தாய் வழி சொந்தம் அவள் தாய்மாமன் மகள்), “அவ பதிலுக்கு வெயிட்டிங் (waiting)?… அப்போ அவ வேண்டாம்னு சொன்னா விட்டுறுவீங்களா? தேவி வேண்டாம் சொல்லு மாப்பிள்ளை மூக்க உடச்சிரலாம்” என்று ஹைபை (hifi) கொடுக்க கையை உயர்த்த தேவி மென்சிரிப்புடன் அவள் உயர்த்திய கையைப் பிடித்து இறக்கிவிட, ராம் அதை பார்த்துவிட்டு தேவியின் பாதம் பற்றி மெட்டி அணிவித்துவிட்டு எழுந்தான்.

       ரேஷ்மா, “அவதான் பதில் சொல்லலையே அப்பறம் எப்படி போட்டீங்க” 

       “எனக்கு தேவையான ரியாக்ஷன் (reaction) கிடச்சிடுச்சு அவ நார்மல் (normal) ஆயிட்டா அது போதாதா… தவிர என் மூக்க உடைக்க அவளுக்கு விருப்பமில்லைனு உங்க கைய இறக்கிட்டா… இதுக்குபிறகும் அவ சொல்லித்தான் ஆகனும்னு எனக்கு அவசியமில்லை”

        “அட அட அட.. இதுவல்லவோ கெமிஸ்ட்ரி… குடுத்து வச்சவ தேவி நீ… நாங்க எல்லாம் வாய தொறந்து சொன்னா கூட புரியாது” என்று விநாயகம் மனைவி சரண்யா கணவனை முறைத்தாள்.

        இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ரகுராம் (ஶ்ரீராமின் அண்ணன்) அவன் அருகில் இருந்த மனைவி பிரியாவிடம், “ராம்க்கு தேவிய பிடிச்சிருக்கு போல அதான் இப்படி நடந்துக்குறான் நான் கூட ரொம்ப பயந்தேன்… எப்படியோ அவனும் அவளும் நல்ல இருந்தா சரி” என்று அவன் மனதில் பட்டதை அவள் காதில் கிசுகிசுக்க, அவள் சட்டென அவனை நோக்கி திரும்பி, “உங்க தம்பிய நீங்க நம்புறீங்களா… இது எல்லாம் உண்மைனு நீங்க உங்க ஆழ் மனசுல நம்ப வச்சுக்கோங்க ஆனா என்ன நம்ப வைக்க பாக்காதீங்க… ராம்க்கு ஆஸ்கார் அவார்ட் வாங்குற அளவுக்கு நடிக்கத் தெரியும்னு எங்களுக்கு தெரியும்… எனக்கு அந்த பொண்ணுக்கு பாவம் செய்றோம்னு தோணுது… உண்மையிலேயே தேவி பாவம்” என்று அவள் சொல்லி முடிக்கவில்லை, அவள் சொன்ன கடைசி வார்த்தைகளை மட்டும் அவர்களை கடந்து போன அர்ஜுன் காதில் விழ, “என்ன தேவி பாவமா… அவ ஹீரோயின் வேஷத்துல இருக்குற வில்லி… அவகிட்ட வம்பு வச்சுகிட்டோம் அவ்வளவுதான்… நான் விளையாட்டுக்கு சொல்லல… என்ன பொறுத்தவரைக்கும் ராம் தான் பாவம்” என்று அவன் முடித்துவைத்தான்.

 

❤️ Loading reactions...
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
இதுவும் கடந்து வாழவே...
54 0 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page