நிழல் தேடும் பாதையில்
தொலைந்து போனது நிஜமல்ல…
உன்னோடு நான் வாழ்ந்த
ஒவ்வொரு நொடிகளும் தான்!”
உன்னில் சிறையாகிறேன் – 2
” சத்தமா பேசாதே தமிழ் பசங்க முழிச்சுக்கப் போறாங்க, நான் என்ன சொன்னேன்னு உனக்குப் புரியல, அவங்க சின்ன குழந்தைங்க, அவங்களுக்கு ‘டைவர்ஸ்’னா என்னன்னு தெரியாது” என்று ஜீவா அடக்கிப் பேச முயன்றான்,
”தெரியாது தான் ஆனா கவி அப்பா ஏன் வீட்டுக்கு வரலைன்னு அவ கேள்வி கேட்டா ஒரு அம்மாவா என்னால பதில் சொல்ல முடியாது, இந்த விவாகரத்து உங்களுக்கு வேணும்னு நீங்கதானே பிடிவாதம் பிடிச்சீங்க, இப்போ குழந்தைகிட்ட பதில் சொல்ல மட்டும் ஏன் தயங்குறீங்க” என்றாள் தமிழினி
“நான் மட்டும் தான் கேட்டேனா நீயும் தானே டிவோர்ஸ் வேணும்னு சொன்ன இப்போ எல்லாத்தையும் என் மேல பழியைப் போட்டுட்டு நீ மட்டும் தப்பிச்சுக்கப் பார்க்காதே தமிழ்” என . ஜீவா ஆத்திரத்தில் கத்தினான்,
”ஆமா உங்க கூட வாழவே முடியாதுன்னு தெரிஞ்ச அப்புறம் நான் வேற என்ன பண்ண முடியும், என் வாழ்க்கையே ஒரு நரகமா மாறிடுச்சு” என்றாள்,
அமைதியாகத் தொடங்கிய அந்தப் பேச்சு, பழைய காயங்களைக் கிளறி, ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் பெரும் சண்டையாக மாறியது,
அந்த வீட்டின் ஜன்னல் வழியே வீசிய குளிர்ந்த காற்றைக் காட்டிலும், அவர்களின் வார்த்தைகள் அதிமான வெப்பத்தை தாக்கி ஒருவரை ஒருவர் காயப்படுத்திக் கொண்டிருந்தனர்,
வார்த்தைகள் தடித்தன. பழைய கோபங்கள் அனைத்தும் எரிமலையாய் வெடித்தன,
”எல்லாத்துக்கும் நான் தான் காரணமா? நீ செஞ்சதெல்லாம் உனக்குத் தெரியாதா தமிழ்” என்று ஆத்திரத்தில் கத்தினான் ஜீவா,
”நானா, நான் என்ன செஞ்சேன் இந்த வீட்டை, உன் குழந்தைகளை, உன்னை கவனிச்சுட்டு என்னோட கேரியரை விட்டது தான் நான் செஞ்ச தப்பா” என்று கேட்டு தமிழினி ஆவேசமாக ஒரு படி முன்னே வந்தாள்,
“நிப்பாட்டு தமிழ் உன்னோட இந்த பேச்சால தான் இன்னைக்கு நாம இங்க வந்து நிக்கிறோம்” என்ற ஜீவாவின் வார்த்தை அவளைச் சுட்டது, ஆத்திரத்தின் உச்சியில் இருந்த தமிழினி, டீபாயின் மேல் இருந்த பூ ஜாடியை ஓங்கித் தரையில் அடித்தாள், அது பல துண்டுகளாகச் சிதறிய சத்தம் அந்த நள்ளிரவின் அமைதியைத் தவிடுபொடியாக்கியது,
”உடை எல்லாத்தையும் தூக்கிப் போட்டு உடை உனக்கு இதுதான் தெரியும், வேற என்ன தெரியும், நல்லா கத்தி கத்தி சண்டை போடுவ மீறிப் போனா வீட்ல இருக்குற பொருளை எல்லாம் உடைச்சுட்டு அழுவ இதுக்கு மேல வேற என்ன தெரியும், இப்போ நம்ம உறவையும் இதோ இந்த ஜாடி மாதிரி உடைச்சுட்ட” என்று ஜீவா கத்த, தமிழினி அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினாள்,
”என்ன சொன்ன? நான் தான் உடைச்சேனா என் மனசும் வாழ்க்கையும் தானே இங்க உடைஞ்சு கிடக்கு, அதுக்கும் நான்தான் காரணம்ன்னு சொல்லுவியா, சொல்லுடா” என்ற தமிழினியின் கேள்வியில் ஜீவாவின் பொறுமை எல்லை தாண்டியது,
உச்ச கட்ட கோபத்தில் இருந்த தமிழினி, அவள் பிடியில் இருந்த ஜீவாவின் சட்டையை உலுக்கினாள், அப்போது தலைக்கேறிய ஆத்திரத்தில் தன் கையை ஓங்கி அவளை அடிக்கப் போனான் ஜூவா,
அந்த நொடி சட்டையில் இருந்த கையை எடுத்த தமிழினி பயத்தில் கண்களை இறுக மூடிக்கொண்டாள், ஆனால், அவன் கை அவள் முகத்திற்கு அருகில் நடுங்கியபடி அப்படியே நின்றது,
அவளை அடிக்க அவனுக்கு மனமில்லை, ஆனால் அந்த ஆத்திரத்தைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை, அவளை விட்டு திரும்பி தன் கையைச் சுவரில் ஓங்கி குத்தினான்,
”ச்சை…!” என்று அலறியபடி ஜீவா சோபாவில் சரிந்து அமர்ந்து, தன் தலையைத் தாங்கிக் கொண்டான்,
தமிழினிக்கு அந்த நிமிடம் மூச்சு முட்டியது, பயத்திலும், அவமானத்திலும், வலியிலும் அவளது பிடிவாதம் தளர்ந்தது,
அதுவரை கோபமாக இருந்தவள், அப்படியே தரை விரிப்பில் அமர்ந்து தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள்,
அவளது அழுகைச் சத்தம் அந்த வீட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவியது,
ஜீவாவின் கண்களிலும் கண்ணீர் ததும்பியது, ஒரு காலத்தில் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்த அதே கைகள், இன்று ஒருவரை ஒருவர் காயப்படுத்த ஓங்கியது தான் அவர்களுக்குப் பெரிய தோல்வியாகத் தெரிந்தது,
இனிமையான கனவுகளுடன் தூங்க வேண்டிய அந்த இரவு, சிதறிய கண்ணாடித் துண்டுகளுக்கு நடுவே ஒரு நரகமாக மாறியிருந்தது,
காதலின் முடிவில்லாப் போரில்
தோல்வி என்பது ஏது?
💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘
அதிகாலைப் பொழுதில், ஒரு பழமையான ஆனால் நேர்த்தியான வீட்டின் சாளரம் வழியே வந்த சூரிய ஒளி தங்கமகளின் முகத்தில் பட்டு துயிலெழுப்ப அந்த வதனத்தின் வனப்பும் செழுமையும் அதே சமயம் எதற்கும் அஞ்சாத ஒரு அமைதியும் குடி கொண்டிருந்தது,
படுக்கையில் தனக்கருகில் மென்மையாக உறங்கிக் கொண்டிருந்த யாழினியைப் பார்த்ததும், அருவியின் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது, யாழினி – அவளது உலகம், அவளது சுவாசம்.
”யாழிமா என் குட்டிமா பட்டுத் தங்கம் எழுந்திரு” என்று அருவி கொஞ்சலாக அவளது கன்னத்தைத் தட்டினாள்,
யாழினி தூக்கத்திலேயே மெல்ல நெளிந்து, அருவியின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்,
“இன்னும் கொஞ்ச நேரம்மா” என்று மழலையில் சிணுங்கினாள்,
”முடியாது இன்னைக்கு ஸ்கூல்ல உனக்கு புடிச்ச டிராயிங் க்ளாஸ் இருக்கே சீக்கிரம் எழுந்தாத்தான் அம்மா உனக்கு புடிச்ச அந்தப் பட்டாம்பூச்சி ஜடையைப் போட்டு விடுவேன்” என்று அருவி சொன்னதும் தான் எழுந்து உட்கார்ந்தாள் யாழினி,
குழந்தையை குளிப்பாட்டி, சீருடை அணிவித்து, அவளது தலைமுடியைச் சிக்கெடுத்துப் பின்னுவதற்குள் அந்த வீடே அவளது மழலைச் சிரிப்பால் நிறைந்திருந்தது,
தமிழினியின் வீட்டில் இருந்த அந்த மௌன யுத்தம் இங்கே இல்லை, இங்கே இருப்பது இரு ஜீவன்களுக்கு இடையிலான அசைக்க முடியாத பிணைப்பும் ஆத்மார்த்தமான அன்பும் மட்டுமே,
”அம்மா இன்னைக்கு ஈவினிங் சீக்கிரம் வருவீங்களா, நாம பார்க் போலாமா,” என்று யாழினிகேட்க
“நிச்சயமா தங்கம், அம்மா சீக்கிரம் வந்துடுவேன், நாம இரண்டு பேரும் ஜாலியா பார்க் போய் விளையாடலாம் சரியா” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டாள் அருவி,
தனிமரமாக நின்றாலும், அந்த மரத்தின் ஒரே கிளையாகத் திகழும் யாழினிக்காகவே அவள் ஒவ்வொரு நாளையும் புன்னகையோடு எதிர்கொள்கிறாள், அந்த வீட்டின்ச் சுவர்களுக்குத் தெரியும், மகிழருவி கடந்து வந்த பாதையில் எத்தனை முட்கள் இருந்தது என்று,
ஆனால் யாழினியின் முன்னால் அவள் எப்போதுமே ஒரு கம்பீரமான சிங்கப்பெண் தான், குழந்தையோடு தானும் வேலைக்குச் செல்ல கிளம்பத் தயாரானாள் அருவி மகிழருவி,
(பேரழகியே பெரும் பண்பைப் பெற்றவளே இனி உன்னோடு என் பயணம் இனிதே தொடங்கியது)
💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘
அந்திப் பொழுது மெல்லச் சரிந்தது. வெளிச்சத்திற்கும் இருளுக்கும் இடையிலான அந்தப் போராட்டத்தில், இருள் மெல்ல வெற்றி பெறத் தொடங்கியது,
மனதின் பாரத்தைத் தாங்க முடியாமல், எங்கு செல்வதென்று தெரியாமல் தமிழினி ஒரு பழமையான கோவிலின் பிரகாரத்தில் அமர்ந்திருந்தாள்,
விவாகரத்துத் தீர்ப்பு வந்த அந்த முதல் நாள் இரவு அவளைச் சிதைத்துப் போட்டிருந்தது, கண்களில் நீர் வற்றிப்போய், வெறுமையோடு தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்,
அப்போது ஒரு மெல்லிய சந்தன வாசனையுடன் அவளருகே ஒரு நிழல் வந்து நின்றது, “தமிழ்…” என்று அழைத்த அந்தத் தேன் குரலைக் கேட்டதும் ஏதோ ஒரு சக்தி கிடைக்கப் பெற்றவள் போல் சட்டென நிமிர்ந்தாள் தமிழினி, அங்கே மகிழருவி நின்றிருந்தாள்,
கையில் சிறு பூக்கூடையுடன், முகத்தில் அந்த மாறாத அமைதியுடன் நின்றிருந்த தன் நெருங்கிய தோழியைக் கண்டதும் தமிழினிக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது, சட்டென்று எழுந்து அருவியைக் கட்டிக்கொண்டு விம்மி அழத் தொடங்கினாள்,
அருவி அவளைப் பேச விடவில்லை, அவள் முதுகை மென்மையாகத் தடவிக் கொடுத்து, அவளது அழுகை ஓயும் வரை காத்திருந்தாள்,
”முடிஞ்சு போச்சு அருவி… எல்லாமே முடிஞ்சு போச்சு, அந்த ஒன்பது வருஷ வாழ்க்கைக்கு இன்னைக்கு ஒரே ஒரு பேப்பர்ல முற்றுப்புள்ளி வச்சுட்டாங்க” என்று தமிழினி தேம்பினாள்,
அருவி அவளை ஒரு தூணின் அடியில் அமர வைத்தாள்,
“தமிழ், ஒரு காகிதம் உன் வாழ்க்கையை முடிச்சுடும்னு நினைக்கிறியா, அந்தப் பேப்பர் நீ ஜீவாவுக்குப் பொண்டாட்டி இல்லைன்னு தான் சொல்லுது, ஆனா, நீ தமிழினிங்கிறதை அது மாத்திடுமா உன்னோட திறமை, உன்னோட அறிவு, உன் குழந்தைகளோட அம்மாங்கிற உன்னோட அடையாளம் இதெல்லாம் இன்னும் உன்கிட்ட தானே இருக்கு” என்று மென்மையாக கேட்டாள் மகிழருவி
“தெரியல அருவி ஆனா அந்த வீட்ல இனிமே நான் எப்படி தனியா இருப்பேன் கவி கேக்குற கேள்விக்கு என்ன பதில் சொல்லுவேன்னு எனக்குத் தெரியல, தன்னம்பிக்கையே போயிடுச்சு” என்று கூறி தமிழினி கலங்கினாள்,
மகிழருவி அவள் கைகளைப் பற்றிக் கொண்டாள்,
“இங்க பாரு தமிழ் எனக்கும் யாழினிக்கும் யாரு இருக்கா, ஒரு பொண்ணா, அதுவும் ஒரு குழந்தைக்குத் தாயா இந்தச் சமூகத்துல நான் தனியா நிக்கிறப்போ, பல பேர் பல விதமா பேசினாங்க, ஆனா நான் யாருக்காகவும் என் தலையைக் குனியல, யாழினி முகத்தைப் பார்த்தேன், எனக்கான பாதையை நானே செதுக்கினேன்,
ஒரு கதவு அடைச்சா, கடவுள் இன்னொரு திறந்து வைப்பார்னு சொல்லுவாங்க, ஆனா நான் சொல்றேன், நீயே ஒரு புதிய வாசலை உருவாக்கிக்கோ, ஜீவா கூட வாழ வேண்டாம்ன்னு நீ எடுத்து முடிவு,
அது உன்னோட தனிப்பட்ட விருப்பம்,
அதுல தலையிட எனக்கு மட்டுமில்ல யாருக்குமே உரிமை இல்லை, இனிமே நீ யார் உன்னால என்ன பண்ண முடியும்ன்னு தான் நீ யோசிக்கனும்” என்ற அருவியின் வார்த்தைகளில் இருந்த அந்த உறுதி தமிழினியின் மனதிற்குள் ஒரு சிறு ஒளியைத் தந்தது,
”நீ ஒரு படிச்ச பொண்ணு தமிழ், நல்ல வேலையைத் தேடு உன் வலிகளை வாழ்க்கையா மாத்து, நீயும் உன் குழந்தைகளும் சந்தோஷமா வாழ என்ன தேவையோ அதை நீயே ஏற்படுத்திக்க, முதல்ல உனக்குள்ள இருக்குற அந்தத் தமிழினியைத் தேடி எடு,” என்று அருவி சொன்னபோது, தமிழினியின் கண்களில் முதல்முறையாக ஒரு தெளிவு தெரிந்தது,
”அருவி நீ எப்படி இவ்வளவு தைரியமா இருக்க” என்று தமிழினியின் கேள்விக்கு
அருவி மெலிதாகச் சிரித்தாள்,
“வாழ்க்கை எனக்கு வேற வழி எந்த பாதையையும் காட்டல தமிழ், போராட்டமே வாழ்க்கையா மாறினப்போ, ஜெயிக்கிறது மட்டும்தான் நமக்கு இருக்குற ஒரே ஆப்ஷன்,
எவ்வளவு அழ முடியுமோ அவ்வளவையும் இப்பவே அழுது முடிச்சுட்டு கண்ணைத் துடைச்சிட்டு வா, இனி நீ எப்பவுமே அழக்கூடாது உன் குழந்தைகளுக்காக இனி நீ நீயா இருக்கனும் ஓகேவா, உனக்காக எப்பவுமே நான் இருக்கேன் தமிழ் டோண்ட்வொரி” என்ற மகிழருவியின் வார்த்தைகளில் மனமுருகினாள் தமிழினி,
இரு தோழிகளும் அந்தப் பிரகாரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, மேற்கே மறைந்த சூரியன், நாளை ஒரு புதிய விடியலோடு சந்திப்போம் என்று சொல்வது போலத் தோன்றியது,
நல்ல நட்பு ஆயிரம்
உறவுகளுக்குச் சமம்…!
💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘
தொடர்ந்து வாசிப்போம் வாங்க
