உன்னில் சிறையாகிறேன் – 10

கடல் தந்த முத்துக்களைக் கண்டவன் உண்டு,

மனம் கொண்ட மௌனத்தின் ரகசியத்தைத்

தொட்டவர் இவ்வுலகில் எவரும் உண்டோ?

உன்னில் சிறையாகிறேன் – 10

​நாட்கள் மெல்ல நகர்ந்தன, மருத்துவமனையின் அந்த வெள்ளைச் சுவர்களுக்குள்ளும், மருந்து நெடிகளுக்கு மத்தியிலும் யாழினியின் சிரிப்பு சத்தம் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியது, 

அருவியின் தியாகமும், தமிழினியின் அரவணைப்பும் வீண் போகவில்லை, அந்தப் பிஞ்சு இதயம் இப்போது எவ்விதத் தடையுமின்றி சீராகத் துடித்துக் கொண்டிருந்தது.

​பத்தாம் நாள் காலை, மருத்துவர் யாழினியைப் பரிசோதித்துவிட்டு, 

“இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடலாம், அருவி. இனி பயப்பட எதுவுமே இல்லை,” என்று சொன்ன போது அருவியின் முகம் ஒரு கோடி சூரியப் பிரகாசத்தோடு மின்னியது.

சிட்டி மருத்துவமனையின் வாசலில் பால் போன்ற வெள்ளை நிற (Toyota Vellfire) கார் வந்து நின்றது, அதன் கதவுகள் மெல்ல தானாகவே விலக, உள்ளிருந்து ஒரு வயதான தோற்றத்தில் திருவாசகம் இறங்கினார், 

அவரின் தோரணையே அந்த மனிதரின் அதிகாரத்தை மௌனமாகப் பறைசாற்றியது; அவர் நடக்க, அவரை நிழலென பின் தொடர்ந்த இரு ஆட்களை கையசைவில் நிறுத்தி விட்டுத் தனியாக சென்றார்.

“அம்மா அருவி பாப்பா இப்போ எப்படி இருக்கா” என்று கனிவாகக் கேட்டவாறு உள்ளே நுழைந்தார் திருவாசகம், அவரை அங்கே அந்நேரத்தில் எதிர்பாராத ​அருவி திகைத்தாள்,

“என்னம்மா இப்படி திகைச்சுப் பாக்குற, நான் தான்மா பயப்படாதே,” என்றார்.

“இப்ப நல்லா இருக்கா? அவ உயிர் பிழைச்சதுக்கு காரணமே நீங்க தான். ரொம்ப நன்றி” என்று தலைகுனிந்து கூறினாள். அப்போது தான் தமிழினுக்கு வந்தவர் யாரென்றே விளங்கியது.

​”எனக்கு எதுக்குமா நன்றி எல்லாம் சொல்லி பிரிச்சுப் பார்க்கிற” என்று கூறிய அவர் மெல்ல குனிந்து யாழினியின் கன்னத்தைக் கிள்ளினார், 

“சரிம்மா, நான் டாக்டர்கிட்ட பேசிட்டேன். இன்னைக்கே வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லிட்டார். அப்புறம் என்ன? நாம நம்ம வீட்டுக்கு போலாமா?” என்று 

திருவாசகம் கேட்டதும் தான் அவர் வந்ததன் நோக்கமே அவளுக்குப் புரிந்தது. உடனே கலவரமானவள் தமிழை திரும்பி ஏறிட்டாள். தமிழ் அதைப் புரிந்து கொண்டு அவளுக்காக பரிந்து பேச வந்தாள்.

“குழந்தைக்கு இன்னும் முழுசா குணமாகலை. இந்த மாதிரி நேரத்துல அருவிய கூட்டிட்டு போனீங்கன்னா குழந்தை ரொம்ப ஏங்கிடுவா. அவளுக்கு உடம்பு முழுசா சரியாகிற வரைக்குமாவது அருவி குழந்தை கூட இருக்கட்டுமே ப்ளீஸ் சார்” என்று கெஞ்சுதலாக கேட்டாள் தமிழினி.

“அதெல்லாம் முடியாது. இப்பவே இன்னிக்கே அருவி எங்கூட வந்தாகணும்,” என்றார் திருவாசகம். அருவிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. தமிழுக்கு பேச்சே வரவில்லை. அழுகை தான் வந்தது. 

“இப்ப எதுக்கு கலங்குற அருவி? இந்தச் செல்லக் குட்டியும் நம்ம கூடவே வீட்டுக்குத் தானே வரப்போறா? உன் குழந்தையை நீ விட்டுட்டு தனியா வரணும்னு நான் ஒருபோதும் சொல்ல மாட்டேன் அருவி. 

ஒரு தாய் தன் பிள்ளையோட இருக்கும் போது தான் அவள் முழுமையா பெண்ணா இருப்பா. என் வீட்டு மருமகளா நீ வரும் போது, யாழினிகுட்டி நிச்சயமா அந்த வீட்டுச் செல்ல மகளா இருப்பா” என்று வாக்கு கொடுத்தார் திருவாசகம். 

​அருவிக்கு ஒரு நிமிடம் அழுகை பீறிட்டுவந்தது, ஒரு கோடி ரூபாய் கொடுத்தவர், தன் மகளையும் தன்னுடன் இருக்க அனுமதிக்கிறார் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை,

“குழந்தை இல்லாம நீ மட்டும் வந்தா போதும்ன்னு நான் என்னைக்காவது எங்கயாவது சொல்லியிருக்கேனா? இல்லையே. நீ எதைப் பத்தியும் வொரி பண்ணிக்காம வாம்மா.

எல்லாத்தையும் நான் பார்த்துப்பேன் அருவி, 

இப்போதைக்கு நீ குழந்தையை அழைச்சுக்கிட்டு என்கூட வீட்டுக்கு வாம்மா, மத்ததை எல்லாம் காலமும் கடவுளும் பார்த்துப்பாங்க,” என்று கூறியவரை,

மகிழருவி, தமிழினி இருவரும் கடவுளின் மொத்த உருவமாகப் பார்த்தார்கள். பணத்தைக் கொடுத்து உயிரைக் காத்ததே பெரிது என்ற நிலையில், வாழ்க்கையும் கொடுத்து வாழவும் வைப்பேன் என்கிறாரே என்று மனதிற்குள் கோவில் கட்டினர். 

அருவி, குழந்தை இருவரையும் மற்றொரு காரில் ஏற்றிக்கொண்டு கொண்டு புறப்பட்டார் திருவாசகம். 

​தமிழினி தூரத்தில் நின்று இதைப் பார்த்துக் கொண்டிருந்தாள், தன் தோழியின் வாழ்க்கை நல்லபடியாக அமைந்ததில் பெரும்நமகிழ்ச்சி அடைந்தாள், 

அருவி ஒரு பெரும் மாளிகைக்குள் நுழைகிறாள்; அது அவளுக்குப் புகலிடமா அல்லது போராட்டக்களமா என்பது அந்தப் பெரியவருக்கே வெளிச்சம்.

அருவியின் கால்கள் அந்தப் பிரமாண்டமான மாளிகையின் போர்டிகோவில் தடம் பதித்தபோது, அவளுக்குள் ஒருவித நடுக்கம் பரவியது,

ஆகாயத்தைத் தொடும் அளவுக்கு உயர்ந்த அந்த மாளிகை, அதன் கலைநயம் மிக்கத் தூண்கள் என அனைத்தும் அவளை மிரளச் செய்தன. தோளில் இருந்த யாழினி, தன் தாயின் சேலையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு, புது இடத்தைப் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

​திருவாசகம் காரிலிருந்து இறங்கி கம்பீரமாக முன் நடக்க, அருவி அவரைப் பின்தொடர்ந்தாள், அங்கே அவளுக்கு முதல் அதிர்ச்சி காத்திருந்தது, அந்தப் பெரிய வீட்டில் எங்கு நோக்கினும் ஆண் வேலையாட்களே தென்பட்டனர், 

தோட்டத்தைப் பராமரிப்பவர் முதல், வாசலில் வரவேற்பவர் வரை ஒரு பெண் கூட கண்ணில் படவில்லை, அது ஒரு வீடா அல்லது ஆண்களுக்கான கோட்டையா என்று அவளுக்குத் தோன்றியது.

​திருவாசகத்தின் ஒரு சிறு அசைவில், அங்கிருந்த வேலையாட்கள் அனைவரும் வரிசையாக நின்று தலைகுனிந்து மரியாதை செய்தனர்,

​”உள்ளே வாம்மா அருவி இது இனி உன்னோட சாம்ராஜ்யம்” என்று கூறிய திருவாசகம் கனிவாக அழைத்துச் சென்றார்,

​வீட்டின் பிரமாண்டமான ஹாலில் நுழைந்தபோது, அங்கே ஒரு சோபாவில் அமர்ந்து கொண்டிருந்தார் வாசுதேவன், திருவாசகத்தின் மூத்த மகன்,

அவரது முகத்தில் தெரிந்த அந்த அதிகாரத் தோரணையும் கண்கள் வெளிப்படுத்திய ஒருவித அலட்சியமும் அருவியை ஒரு நிமிடம் பின்வாங்கச் செய்தன.

​”வாசு இதுதான் அருவி, இவ தான் இனி நம்ம வீட்டு மருமக, என் செல்ல பேரனோட பொண்டாட்டி” என்று திருவாசகம் அறிமுகம் செய்து வைத்தார்,

​வாசுதேவன் கையில் இருந்த டீக்கோப்பையை மெல்லக் கீழே இறக்கி, அருவியையும் அவளது தோளில் இருந்த குழந்தையையும் ஏறிட்டுக் பார்த்தார், அந்தப் பார்வையில் வரவேற்பு இல்லை, 

மாறாக, ஒரு ஏற்ற இறக்கமாக மட்டுமே இருந்தது. அருவியிடம் மட்டுமல்ல, தன் தகப்பனாரிடமும் அவர் எதுவும் பேசவில்லை. ஒரு நொடி அருவியின் கண்களை உற்றுப் பார்த்துவிட்டு, தன் கையில் இருந்த வாட்ச்சைப் பார்த்தவர், மெல்ல எழுந்து நின்றார்.

​ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல், தன் தந்தைக்கும் அருவிக்கும் ஒரு சிறிய தலையசைப்பைக் கூட வழங்காமல், காரின் சாவியை எடுத்துக் கொண்டு விறுவிறுவென வெளியேறினார், 

அடுத்த சில வினாடிகளில் வெளியே கார் கிளம்பும் சத்தம் மட்டுமே கேட்டது, அதற்கே ​அருவி திகைத்து நின்றிருக்க, அப்போது அங்கே ஒரு அமைதியான உருவம் வெள்ளை நிறக் கதர் குர்தாவும், நெற்றியில் திருநீறுமாகத் தெய்வீகக் களையோடு வந்தது,  

திருவாசத்தின் இளைய மகன் அசோகன், அவர் கையில் ஒரு ஜெபமாலை இருந்தது, ஒரு பக்திமானுக்குரிய அமைதி அவரிடம் தென்பட்டது, திருவாசகம் அவனைப் பார்த்து, 

“அசோகா, இது அருவி, நம்ம வீட்டு மகாலட்சுமி,” என்று சொல்லத் தொடங்கும் முன்பே, அசோகன் தன் கைகளை உயர்த்தித் தடுத்தான்.

​அவனது பார்வையில் வெறுப்பு இல்லை, ஆனால் ஒருவிதமான விலகல் இருந்தது, 

அருவியின் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்காமல், ஒரு நிமிடம் கண் மூடி எதையோ வேண்டிக் கொண்டவன், யாரிடமும் எதுவும் பேசாமல் வாசலை நோக்கித் தன் நடையைத் தொடர்ந்தான்.

​அந்தப் பிரமாண்டமான ஹாலில் இப்போது திருவாசகமும், அருவியும், யாழினியும் மட்டுமே நின்றனர், அருவிக்கோ ஒன்றுமே புரியவில்லை குழப்பத்தோடே நின்றாள்,

​”குழப்பமா இருக்கா அருவி, இந்த வீட்ல இருக்குற ஆண்கள் எல்லாரும் ஒவ்வொரு விதம், அவங்க யாரையும் நீ இப்போதைக்குக் கண்டுக்காதே, காலமும் அன்பும் எல்லாரையும் மாத்திடும்” என்றார் திருவாசகம் ஒரு பெருமூச்சோடு,

​ஆனால் அருவியின் மனமோ படபடத்தது, ஆண்களே நிறைந்த இந்த மாளிகையில், தன்னை ஒரு அந்நியப் பொருளாகப் பார்க்கும் இவர்களுக்கு மத்தியில், அவளும் அவளது குழந்தையும் எப்படி வாழப் போகிறோமோ,

தன்மானத்தை விட்டு விட்டு வந்த இடத்தில், தனக்கான அங்கீகாரம் எங்கே இருக்கிறது, என்று தேடும் நிலையானதே என்று ​அருவி நொந்து போனாள், 

வாசுதேவனும் அசோகனும் சென்ற பிறகு, அந்த மாளிகையில் நிலவிய நிசப்தத்தை ஒரு கனமான காலடிச் சத்தம் கலைத்தது. மாடியின் படிகளில் இருந்து கேட்ட அந்தச் சத்தம் ஒவ்வொரு முறை கேட்கும் போதும், 

ஹாலில் நின்றிருந்த அருவியின் இதயத் துடிப்பு எகிறியது.

​அவன் இறங்கி வந்தான், 

அவன் தான் அக்னியன், அக்னி…!

​பெயருக்கு ஏற்றார் போலவே தகிக்கும் தேகம், 

கற்சிலையெனச் செதுக்கப்பட்ட உடல்வாகு, டீப் ஆக்ஸ்பிளட் நிற கோட்டில் அவனது அகன்ற தோள்களை இறுக்கிப் பிடித்து அவனது கம்பீரத்தைப் பறைசாற்றியது,

சீவியும் அடங்காத அவனது தலைமுடி நெற்றியில் சிலுசிலுவென விழ, அதையும் மீறி அவனது கண்கள் கூர்மை வாளைப் போல் குத்திக் கிழித்தது.

​அவன் படிகளில் இறங்கி வந்த வேகம், ஒரு வேட்டைக்குத் தயாராகும் சிங்கத்தின் கர்ஜனையை நினைவுபடுத்தியது, அழகும், திமிரும் சரிபாதியாகக் கலந்த முகம், எதையும், எவரையும் துச்சமாகத் தூக்கி எறியும் அலட்சியப் பார்வை, 

உலகமே தன் காலடியில் என்று நினைப்பவனுக்குத் தான் இத்தனை நிமிர்வு இருக்க முடியுமோ?

​அருவி மூச்சடைத்துப் போய் நின்றாள், அவனது காந்த விசை அவளை அறியாமலேயே அவளை ஈர்த்தாலும், அவனது கண்களில் தெரிந்த அந்தத் தகிப்பு அவளைப் பயமுறுத்தியது,

​படிக்கட்டின் கடைசிப் படியில் கால் வைத்த அக்னியன், அங்கே நின்றிருந்த அருவியையும் யாழினியையும் ஒரு கணம் பார்த்தான், அந்தப் பார்வை அவளை ஊடுருவிச் சென்றது, 

ஆனால், அவன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை, ஒரு மேகத்தை உரசிச் செல்லும் போல காற்றைப் போல, எவ்விதச் சலனமும் இன்றி அவளைக் கடந்து சென்றான்,

​அவனது உடலிலிருந்து வீசிய அந்தர் வாசனை அருவியின் நாசியைத் தாக்கியது, அவன் ஹாலைக் கடந்து செல்லும் போது, அங்கிருந்த காற்று கூட அவனுக்கு வழிவிடுவது போல் இருந்தது,

புயலென கடந்து ​அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்த அருவியின் தோளில் கை வைத்தார் திருவாசகம்,

ஆண்கள் வாழும் குகையில் கூகைக் குஞ்சாய் நுழைந்தவளின் நிலை என்னவோ?

தொடர்ந்து வாசிப்போம் வாங்க. 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page