என் இதயமோ மடுவினும் சிறிது, அதில் நீ தரும் வலிகளோ மலையினும் பெரிது, தாளாமல் தவித்து நிற்கிறேன் போதும் எனை விட்டு விடு காதலே…!
உன்னில் சிறையாகிறேன் – 15
விளக்குகளின் வெளிச்சத்தில் அருவி ஒரு தேவதையாய் ஜொலித்தாள், கையில் யாழினி, அமைதியாகத் தன் தாயின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அந்தப் பிரம்மாண்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அக்னி, வேண்டா வெறுப்பாக அருவிக்கு அருகில் நின்றிருந்தாலும், சுற்றத்தார்களுக்காக வரமறுத்த புன்னகையை வலுக்கட்டாயமாக தன் உதட்டில் பிடித்து வைத்திருந்தான், அவன் உள்ளமோ ஆற்றாமையில் கனன்று கொண்டிருந்தது,
“ஹேப்பி மேரேஜ் லைஃப் அக்னி அண்ட் மிஸஸ் அக்னி” என்று கூறி வந்தவர்கள் பரிசைக் கொடுத்து விட்டுச் சென்றனர்,
அக்னியின் திருமண விஷயம் அறிந்து சமூக ஊடங்கதாரர்கள் கூட அங்கே வந்து வாழ்த்துக்கூறி போட்டோ வீடியோ என எடுத்தனர்,
அதில் எல்லாம் ஒட்டுதல் இல்லாமல் ஒப்புக்காக நின்றவனுக்கு கோபம் தலைக்கு மேல் எகிறியது, அனைத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு சுற்றுசூழலுக்காய் அமைதி காத்தான் அக்னி,
“கேக் ரெடி சார் வாங்க வெட்டலாம்” என்ற திலீபன் சைகை காட்ட, மேடைக்கு நடுவே மூன்று அடுக்குகள் கொண்ட அந்த ரெட் வெல்வெட் கேக் கம்பீரமாக வந்து நின்றது,
அதன் மேல் படர்ந்திருந்த வெண்ணிற கிரீம் வெண்பஞ்சு போல இருந்தது, அக்னி மெல்ல நகர்ந்து அருவியின் அருகில் நின்றான், அவனிடமிருந்து வீசிய அந்தத் தீவிரமான வாசனை அருவியைத் தடுமாறச் செய்தது,
சுற்றிலும் கேமராக்களின் பிளாஷ் ஒளிகள் மின்னின, அருவி தடுமாற்றத்துடன் அவனை ஏறிட்டாள், அவன் கண்களில் தெரிந்த அந்தத் தகிப்பு அவளைச் சுட்டது,
கைகள் நடுங்க, அவள் மெல்லக் கத்தியைப் பிடிக்க முயன்றபோது, அக்னி சட்டென்று அவள் கையின் மேல் தன் கரத்தை வைத்தான், அவனது பிடி இரும்பைப் போல இறுகியது,
யாழினி ஏதும் புரியாமல் அருவியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு,
“மம்மி… கேக்” என்று மழலையில் கூவினாள், அக்னி வற்புறுத்தி வரவழைத்த புன்னகையோடு அருவியின் கரத்தோடு சேர்த்து கத்தியைச் செலுத்தினான்,
கேக் பிளவுபட்டது, சுற்றிலும் கரவொலிகள் அதிர, “ஹேப்பி மேரேஜ் லைஃப்” என்ற வாழ்த்துகள் காற்றில் மிதந்தன,
அருவி ஒரு சிறு துண்டை எடுத்து அக்னிக்கு ஊட்ட முயன்றாள்,
ஆனால் அக்னி, அவளது கையைப் பற்றித் தடுத்து, தானே ஒரு பெரிய துண்டை எடுத்து அவளது வாயில் திணிப்பது போல ஊட்டினான், அது அன்பால் ஊட்டப்பட்டதல்ல,
வேண்டா வெறுப்பாக திணிக்கப்பட்டது என்பதை அங்கிருந்த கேமராக்கள் அறியவில்லை, அருவியின் கண்களில் மெல்லியத் திரை படர்ந்தது, அந்த இனிப்பான கேக், அவளுக்கு இப்போது கசப்பாய் கசந்தது,
நேரங்கள் கரைந்தோட வந்திருந்த விருந்தினர்கள் ஒவ்வொருவராக விடைபெறத் தொடங்கினர். அக்னி இயந்திரத்தனமாகத் தலையசைத்து அவர்களை வழிஅனுப்பினான்,
கடைசி ஆளும் கதவைக் கடந்து சென்றதும், அந்த வீட்டின் பிரம்மாண்டமான ஹாலில் ஒருவிதமான நிசப்தமே பரவியது,
அருவிக்கு அந்த அமைதி, இரைச்சலை விடக் கொடூரமானதாகத் தோன்றியது,
கையில் உறங்கிக் கொண்டிருந்த யாழினியை அணைத்தபடி, அக்னியின் முகத்தைப் பார்க்கத் துணிவின்றி நின்றாள்,
அக்னி தன் கழுத்திலிருந்த டை-யை ஆக்ரோஷமாக உருவி எறிந்தான்,
“நீங்க எல்லாரும் ஆசைப்பட்ட படி எல்லாம் முடிஞ்சதுல்ல, இனி என் முன்னாடி யாரும் நிக்காதீங்க, உங்க மூஞ்சிகளை பார்க்கவே வெறுப்பா இருக்கு” என்று கர்ஜித்துவிட்டு, மாடிப் படிகளில் புயலென ஏறிச் சென்றான் அக்னி,
அவன் சென்ற திசையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அருவியின் கண்ணில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர், யாழினியின் கன்னத்தில் விழுந்தது,
திலீபன் எதுவும் பேச முடியாமல் அங்கிருந்து சென்றான், தாத்தாவும் தன் எண்ணம் நிறைவேறிய மகிழ்ச்சியில் உறங்க சென்றார்,
விளக்குகள் அணைக்கப்படாத அந்த வரவேற்பறையில், தனித்தீவில் தனித்து விட்டபட்டவள் போல் அவள் மட்டும் நின்றிருந்தாள் மகிழருவி,
அவள் மனம் முழுவதும் தன் குடும்பத்தை நினைத்து ஏங்கியது, தன் குடும்பம் மட்டும் இப்போது இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணி கலங்கினாள்,
எவ்வளவு நேரம் நின்றாளோ பின் யாழினியோடு தன்னறைக்குத் திரும்பினாள், குழந்தையை படுக்கையில் படுக்க வைத்து விட்டு பால்கனி பக்கம் சென்று அங்கே இருந்த சேரில் அமர்ந்து கொண்டாள்,
வான் நிலவு தனித்திருப்பது போல் இங்கே பெண் நிலவு தன்னை தனிமையில் தக்க வைத்துக் கொண்டு வாடியது, காலம் எவ்வளவு கொடூரமானது, ஒருநொடியில் என்னை அநாதையாக்கி விட்டதே,
யாரையும் புண்படுத்தக் கூடாது என்று நினைப்பவர்களுக்கு தான் கனவிலும் நினையாத பொல்லாதகாலம் ஆறாத ரணங்களையும் வலிகளையும் அள்ளிக் கொடுக்கின்றதோ, என்று விரக்தியோடு இருந்தாள் மகிழருவி,
அன்றிரவு அவள் தூக்கம் பறிபோனது, விடிய விடிய இரவோடு போரிட்டு விடியலைக் கண்டாள், மறுநாள் காலை கடமைக்கே என குளித்து தன்னை தயார்படுத்திக் கொண்டு,
குழந்தை எழுவதற்கு முன்பு அவளுக்காக பால் எடுத்து வரலாம் என்று கீழே இறங்கி வந்தாள், இரவு பார்ட்டி நடந்த சுவடு கூட இல்லாமல் ஹால் மிகவும் சுத்தமாக இருந்தது
வேலையாட்கள் ஆண்கள் தான் என்றாலும் வீட்டை சுத்தம் செய்வதிலும், பராமரிப்பதிலும் நேர்த்தியாக இருந்தனர், சமையல்காரரிடம் குழந்தைக்கான காலை உணவையும் பாலும் வேண்டுமென்று ஆடர் கொடுத்து விட்டு நின்றாள்,
“என்னம்மா அருவி இவ்ளோ சீக்கிரமா எழுந்துட்டே, குழந்தை எங்க தூங்குறாளா?” என்று கேட்டபடியே வந்தார் திருவாசகம்
“ஆமாம் தாத்தா, யாழினி இன்னும் தூங்கிட்டு இருக்கா, அவ எழுறதுக்குள்ள பால் எடுத்துட்டுப் போயிடலாம்னு வந்தேன,” என்ற அருவி தன் குரலில் தேங்கியிருந்த சோர்வை மறைக்க முயன்றாள்,
திருவாசகம் அவளை ஆழ்ந்து நோக்கினார், அந்தப் பெரியவரின் கண்களுக்கு அவளது தூக்கமற்ற இரவும், கலங்கிய முகமும் மறைக்க முடியாத உண்மைகளாகத் தெரிந்தன, ஒரு பெருமூச்சை வெளிவிட்டவர், அங்கிருந்த சோபாவில் அமர்ந்தார்,
”இங்க வந்து உட்காரும்மா அருவி” என்றார் வாஞ்சையோடு,
அருவி மெல்ல அவருக்கு அருகில் அமர்ந்தாள்,
”நேத்து அக்னி நடந்துகிட்ட விதம், உனக்கு கஷ்டமா இருந்திருக்கும்னு எனக்குத் தெரியும், அவன் குணம் கொஞ்சம் முரட்டுத்தனமானது தான், ஆனா அவன் கெட்டவன் கிடையாது, அவன் வளர்ந்த சூமல் அந்த மாதிரி” என்று பேச்சைத் தொடங்கினார்,
அருவி மெலிதாகப் புன்னகைத்தாள், ஆனால் அதில் வலி இருந்தது,
“அவர் கெட்டவர்னு நான் சொல்லலையே தாத்தா, ஆனா, என் மேல இருக்கிற இந்த வெறுப்பு ஏன் இவ்வளவு அதிகமா இருக்குன்னு தான் புரியல, இந்த கல்யாணத்துல எனக்கு மட்டும் என்ன விருப்பமா இருந்தது,
ஏதோ ஒரு சூழ்நிலை தானே நம்ம எல்லாரையும் இங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு, அதை புரிஞ்சுட்டு கொஞ்சம் நிதானமா கடந்து போலாமே” என்றாள் அருவி,
”உண்மைதான், அக்னி அவனோட விருப்பத்தையும் மீறி நடந்த திருமணம், அதை ஏத்துக்க முடியாத மனநிலை, அதான் இந்த ஆட்டம் ஆடுறான், ஆனா ஒன்னும்மா,
உன்னால மட்டும் தான அக்னியை மாத்த முடியும், அதை நான் மனசார நம்புறேன், இந்த வீடும், வீட்டுல இருக்கிறவங்களும் நிறைய மாறனும், எனக்கு நம்பிக்கை இருக்கு நீ மாத்திடுவ” என்றார் திருவாசகம் நம்பிக்கையுடன்,
அருவி ஜன்னல் வழியே தெரிந்த தோட்டத்தைப் பார்த்தாள்,
“நீங்க இவ்ளோ நம்பிக்கை வைக்கிற அளவுக்கு நான் எதுவும் பண்ணலையே, இருந்தாலும் என் குழந்தைய காப்பாத்தி குடுத்த உங்களுக்காக நிச்சயமா என்னால முடிஞ்ச வரைக்கும் டிரைப் பண்றேன் தாத்தா” என்றாள் மகிழருவி,
”அது போதும்மா, காலம் எல்லாத்துக்கும் மருந்து போடும், நீ எதற்கும் கலங்காதே, இந்தத் தாத்தா உனக்குத் துணையா இருப்பேன்,” என்று அவர் தைரியம் சொல்ல, அருவியின் மனதில் சிறு நிம்மதி பரவியது,
சமையல்காரர் பாலைக் கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கிக் கொண்டவள்,
“சரிங்க தாத்தா, குழந்தை எழுந்தா அழுவா நான் மேல போறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்,
அருவி சில படிக்கட்டுகள் ஏற அந்த ஹாலின் தரை அதிரும்படி கதவை திறந்து யாரோ ஒருவர் வரும் சத்தம் கேட்டது, திரும்பி பார்த்தாள் அருவி, ஒரு புயல் வீசுவதைப் போன்ற வேகத்துடன் உள்ளே நுழைந்த அந்தப் பெண்ணைப் பார்த்ததும் அருவி அப்படியே சிலையாக நின்றாள்,
நடுத்தர வயதை ஒத்த தோற்றம், ஆனால், அந்த முகத்தில் ஒரு பெண்ணுக்கே உரிய மென்மை துளியும் இல்லை, இறுகிய தாடை, எதற்கும் கலங்காத கண்கள், காற்றில் பறக்கும் நரை கலந்த கூந்தல் என அவள் நின்றிருந்தாள்,
அவள் நேராகத் திருவாசகத்தின் முன்னால் வந்து நின்றாள், திருவாசகம் அவளை எதிர்பார்த்திருந்தவரைப் போல அமைதியாக அவளையே பார்த்தார்,
“என் பையனுக்கு எங்கிட்டயே சொல்லாம கல்யாணம் பண்ணி வச்சு யாரோ ஒருத்திய எனக்கு மருமாகளா கொண்டு வந்திருக்கீங்க, இதெல்லாம் மூணாவத மனுஷி மாதிரி நியூஸ்ல பார்த்து தெரிஞ்சுக்க வேண்டியதா இருக்கு,
உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க மாமா” என்று கத்தினாள் வசந்தா, திருவாசகம் இருக்கையிலிருந்து எழுந்து நின்றார்.
“ஓஹோ நான் இன்னும் உன்னோட மாமானார்ன்னு நியாபகம் இருக்கா மருமகளே, ஆமா இப்போ எதுக்கு இங்க வந்தே, நீதான் இந்த வாசலை மிதிக்க மாட்டேன்னு சபதம் போட்டுட்டு போனவளாச்சே, போனவ அப்படியே போக வேண்டியது தானே” என்றார் திருவாசகம்
”அப்படி எல்லாம் போக முடியாது மாமா, இந்த வீட்ல எனக்கு உரிமை இல்லாம இருக்கலாம் ஆனா அக்னி எனக்கு பையன் அவன் என் ரத்தம், அவனை விட்டுக் கொடுக்க முடியாது” என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசியவள்,
தன் பார்வையை மெல்லத் திருப்பி அருவியின் மீது நிலைக்க வைத்தாள், அருவி பயத்தில் பின்வாங்கினாள், வசந்தாவின் வருகை அவளை நிலைகுலையச் செய்தது,
வசந்தா அருவியின் அருகில் நெருங்கி வந்தாள்,
”நீதானா அது நீதான என் பையனை மயக்கி கைக்குள்ள போட்டவ நீதான” என்று வசந்தா கேட்டபோது,
அருவி பதில் சொல்ல முற்படும் முன், வசந்தா அவள் கையில் இருந்த பாத்திரத்தைச் சட்டென்று தட்டிவிட்டாள்,
“உன்னால என் நிம்மதியே போச்சுடி, எத்தனை பேர் எத்தனை விதமா கேள்வி கேட்கறாங்க தெரியுமா, என்னால வெளிய தலைகாட்ட முடியலடி, இதுக்கெல்லாம் காரணமான உன்னை இந்த வீட்டை விட்டு மட்டும் இல்ல,
என் பையன் வாழ்க்கையை விட்டே துரத்த தான் வந்திருக்கேன், ஒழுங்கா நீயா போயிடு இல்ல நானே என் கையால உன் கழுத்தை பிடிச்சு வெளிய தள்ளிடுவேன்” என்று மிரட்டும் குரலில் இருந்த அதிகாரம் அருவியைத் திகைக்க வைத்தது,
அக்னியின் குணம் யாருடையது என்பது இப்போது அவளுக்குப் புரிந்தது, தந்தை வாசுதேவனின் நிழல் கூட இல்லாத அந்தப் பெண்ணின் பேச்சில், அக்னியை விடப் பல மடங்கு வேகம் இருந்தது, திருவாசகம் குறுக்கிட்டு,
“வசந்தா, நிறுத்து, அருவி இந்த வீட்டு மருமகள், அவளை ஏதாவது பண்ணா பார்த்துட்டு சும்மா இருப்பேன்னு நினைக்காத, என்னை மீறி அவளை உன்னால ஒன்னும் பண்ண முடியாது” என்று சத்தமாக கூறினார் திருவாசம்,
”என்னை இன்னும் உங்க பழைய மருமகளாவே நினைச்சுட்டு இருக்கீங்க மாமா, அந்த நினைப்பை மாத்திக்கோங்க, எனக்கும் உங்க பையனுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல, அதனால உங்க அதிகாரம் எங்கிட்ட செல்லுபடியாகாது” என்று கர்ஜித்தாள் வசந்தா,
வசந்தாவின் வரவு அருவிக்கு என்னென்ன பிரச்சனைகளைக் கொடுக்குமோ?
தொடர்ந்து வாசிப்போம் வாங்க
