இதயம் எனும் சிறு கூட்டில் அடையும் ராட்ஷத பறவையோ காதல்…
அதன் மகத்துவ சக்தியால் மாபெரும் பிரபஞ்சத்தையே கட்டி ஆளாகிறதே…!
உன்னில் சிறையாகிறேன் – 20
அருவியும் தமிழினியும் கேன்டீனில் அமர்ந்திருந்தனர், தமிழினி ஆசையாக ஒரு சமோசாவை எடுத்து கடிக்கப் போக, அருவி அதைத் தடுத்தாள்,
“ஹேய், இப்பதானே சொன்ன, இனிமே இதெல்லாம் சாப்பிடக் கூடாது, ஹெல்தியானது மட்டும் தான் சாப்பிடனும், இரு நான் போய் உனக்கு ஜூஸ் வாங்கிட்டு வர்றேன்” என்று அக்கறையுடன் ஓடினாள் அருவி
அவள் ஜூஸ் வாங்கி விட்டுத் திரும்பும் போது, அங்கே ஒருவன் வழி மறித்து நின்றிருந்தான்,
“ஹாய் அருவி” என்று புன்னகையுடன் அவளுடன் படிக்கும் ரோஹித்,
“ஹாய் ரோஹித்” என்று பதிலுக்கு புன்னகைத்தாள்,
“உங்கிட்ட கொஞ்சம் தனியா பேசனும், ஈவ்னிங் க்ளாஸ் முடிஞ்சதும் நாம மீட் பண்ணலாமா” என்று அவன் தயக்கத்துடன் கேட்க,
“ஓ ஸ்வேர் மீட் பண்ணலாம் ரோஹித்” என்று இவள் சொன்னதும் அவன் முகம் பிரகாசமானது,
“தேங்க்யூ தேங்க்யூ அருவி, நா… நான்” என்று அவன் திக்க,
“ஓகே ரோஹித், ஜூஸ்ல போட்ட ஐஸ் கரையறதுக்குள்ள தமிழ்கிட்ட குடுக்கனும் இல்லன்னா திட்டுவா, நாம ஈவ்னிங் பேசிக்கலாம்” என்று அவள் நாசூக்காக சொல்ல,
அதை புரிந்து கொண்ட ரோஹித் சிரிப்போடு விலகி நின்று வழி விட்டான், அருவியும் ஜூஸை தமிழுக்கு கொடுக்க அதை வாங்கிக் கொண்ட தமிழ்,
“அந்த ரோஹித்துக்கு என்னவாம் ஏதோ சொல்லிட்டு இருந்தான்” என்று தமிழ் கேட்க,
“அதுவா அவனுக்கு எங்கூட தனியா பேசனுமாம், ஈவ்னிங் மீட் பண்ணலாமான்னு கேட்குறான்” என்று அருவி சொன்ன அருவி சமோஷாவை ஒரு கடி கடிக்க,
“பதிலுக்கு நீ முடியாதுன்னு சொல்லிட்டியா” என்று கேட்டாள் தமிழ்,
“இல்ல இல்ல, ஈவ்னிங் மீட் பண்ண ஓகேன்னு சொல்லிட்டேன், அப்போ அவன் முகத்தை பாக்கனுமே கரன்டே இல்லாம ஆயிரம் வாட்ச் பல்ப் எரிஞ்சுது தெரியுமா” என்று சொல்லி சிரித்தாள் அருவி,
“ஏய் என்னடி சொல்ற அவன் கூப்பிட்டதும் நீ வர்றன்னு ஒத்துக்கிட்ட, முடியாதுன்னு சொல்ல வேண்டியது தான, இந்த மாதிரி பசங்க தனியா கூட்டிட்டு போய் என்ன பேசுவாங்கன்னு தெரியாதாடி” என்று தமிழ் கோபமாக கேட்க,
“எல்லாமே தெரியும் தமிழ், ஆனா அதுக்காக பயந்து ஒதுங்கி போறது தான் தப்பு, என்ன இருக்கோ அதை பேஸ் பண்ணனும் இல்லன்னா அதுவே நாளைக்கு பெரிய பிரச்சனையா வந்து நிற்கும்,
அவன் கொஞ்ச நாளா என்னையே பாலோப் பண்ணிட்டு இருந்தான், அப்பவே அவனை கூப்பிட்டு பேசனும்னு இருந்தேன், இப்ப அவனா வர்றான், போய் பேசிதான் பார்ப்போமே இதுல என்ன இருக்கு” என்றாள் அருவி,
“சரி நீ ஏதோ சொல்ற, நான் வேணா உங்கூட துணைக்கு வர்றேன் சரியா நீயே தனியா போகத” என்று தமிழ் சொல்ல,
“இல்லடி பரவாயில்ல நானே போய் பார்த்து பேசிக்கறேன், நீ ஈவ்னிங் ஜீவா கூட ஹாஸ்பிட்டல் போய் செக்கப் பண்ற வேலையை பாரு, இவனை நான் டீல் பண்ணிக்கறேன்” என்றாள் அருவி,
அதற்கு மேல் அவளிடம் வாதிட முடியாது என்று அறிந்த தமிழ், வீணாக வாதம் செய்யாமல் அமைதியாக ஜூஸை உறிஞ்சினாள்,
மாலை நேர சூரியன் மேற்கில் ஆதிக்கம் செலுத்த கல்லூரியின் பரபரப்பு மெல்ல அடங்கத் தொடங்கியது,
தமிழினி, ஜீவாவுடன் மருத்துவமனைக்குக் கிளம்ப, அருவி மட்டும் கல்லூரி வளாகத்தின் பூங்காவின் பெஞ்சில் அமர்ந்து ரோஹித்திற்காகக் காத்திருந்தாள்,
”ஸாரி அருவி, ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிட்டேனா?” என்று மூச்சிரைக்கக் கேட்டவாறு வந்தான் ரோஹித்.
”இல்ல ரோஹித், இப்பதான் வந்தேன், நீ ஏன் இப்படி மூச்சு வாங்குற” என்று கேட்டபடியே
தன்னிடம் தண்ணீர் பாட்டிலை அவனுக்கு கொடுக்க, அதை வாங்கியவன் ஒரே மூச்சில் குடித்து முடித்தான்,
“சரி சொல்லு, என்ன விஷயம்? எதுக்கு மீட் பண்ணலாம்னு சொனான” என்று நேரடியாகவே விஷயத்திற்கு வந்தாள் அருவி,
”மீட் பண்ணலாமான்னு நான் கேட்டதும் ஓகே சொன்னியே அதுக்காக முதல்ல ஒரு தேங்க்ஸ் சொல்லிக்கறேன் தேங்க்ஸ் அருவி” என்ற ரோஹித் கால்கள் தரையில் படாமல் தடுமாறியது,
“தேங்க்ஸ் சொல்றது இருக்கட்டும் முதல்ல ஸ்டேபிளா இரு, ஏன் இவ்ளோ பதற்றமாகுற” என்று அருவி கேட்க
“எனக்கு உன்னைப் பார்த்தாலே பேச வரமாட்டேங்குது அருவி, நெஞ்செல்லாம் படபடன்னு ஒரு மாதிரியா இருக்கு” என்றான் ரோஹித், அருவி மெல்லிய புன்னகையுடன் அவனைப் பார்த்தாள்,
“ரோஹித், இப்படிப் பதற்றப்பட்டா அப்புறம் எப்படிப் பேச முடியும், நான் என்ன அவ்வளவு பெரிய ராட்சசியா, நிதானமாச் சொல்லு,” என்று அவனைத் தேற்றினாள்,
ரோஹித் ஒரு நீண்ட மூச்சை இழுத்துவிட்டு, அவளது கண்களை பார்க்கும் திராணி இல்லாமல் தரையைப் பார்த்து தலை குனிந்து கொண்டு வராத தைரியத்தை துணைக்கு இழுத்தான்,
”நீ ராட்சசி இல்லை அருவி, நீ ஒரு தேவதை, நான் உன்னை முதல் தடவை பார்த்தப்பவே ஏதோ ஒன்னு என்னை உன்கிட்ட இழுத்துச்சு, உன்னோட அந்தச் சிரிப்பு, யாருக்கும் பயப்படாத அந்தத் துணிச்சல், உன் குடும்பத்தைப் பத்தி நீ பெருமையா பேசும்போது உன் கண்ணுல தெரியுற அந்த வெளிச்சம்,
இது எதுன்னு சரியா சொல்ல தெரியல அருவி, ஆனா என்னவோ ஒன்னு என் மனசுல புகுந்தெ உன்னை பார்க்கனும் பேசனும் பழகனும்னு சொல்லிக்கிட்டே இருக்கு” என்று மடைதிறந்த வெள்ளமாய் கொட்டத் தொடங்கினான்,
அருவி குறுக்கிடாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
”நான் சுத்தி வளைச்சுப் பேச விரும்பல அருவி, ‘ஐ லைக் யூ’. உன்னோட எல்லாமே எனக்குப் பிடிச்சிருக்கு, எல்லாமே மீன்ஸ் உன் கள்ளமில்லா சிரிப்பு, குறும்புத்தனமான பேச்சு, தமிழ் கூட உனக்கிருக்கிற நட்பு,
எல்லாமே எல்லாமே எனக்கு பிடிச்சிருக்கு, இது காதலா இல்லையான்னு கூட எனக்கு சொல்லத் தெரியல, ஆனா உன் நிழலா உன் கூடவே இருக்கனும்னு ரொம்ப ஆசைப்படுறேன்,
எனக்கும் உன்னைப் பத்தித் தெரியும், உன் குடும்பத்தைப் பத்தியும் தெரியும். உன்னை எப்பவுமே சந்தோஷமா வச்சுப்பேன் அருவி” என்று கூறியவன் தலை மட்டும் நிமிரவே இல்லை,
அவனையே மௌனமாக பார்த்த அருவி, மூச்சிழுத்து விட்ட படியே பேசலானாள்,
“இங்க பாரு ரோஹன், முதல்ல என் முகத்தை பார்த்து எதா இருந்தாலும் தைரியமா பேசு” என்று சொல்ல நிமிர்ந்து பார்த்தவன் ஒரு நிமிடம் கூட முழுதாக அவளைப் பார்க்க முடியாமல் தவித்தான்,
“நம்ம வயசுல இருக்கிற எல்லாருக்குமே ஹார்மோன் சேன்ஜஸ்னால இப்படி தோன்றது சகஜம் தான் ரோஹன், ஒரு ஆணுக்கு பெண் மேல, பெண்ணுக்கு ஆண் மேலன்னு வர்ற அதே ப்லீங் தான்,
அதை தப்புன்னு யாருமே சொல்ல முடியாது, ஆனா நமக்கு பிடிச்சவங்களுக்கும் நம்மள விரும்பனும்னு கம்பல் பண்றது தான் மிகப்பெரிய தவறு,
உன்னோட மனசில இருந்ததை மறைச்சு மனசுக்குள்ள வச்சுக்காம ஓப்பானா பேசினது ரொம்ப நல்ல விஷயம், அதே நேரம் எனக்கும் அதே விருப்பம் இருக்கனும் இல்ல” என்று அவள் கேட்க,
“ஏன் அருவி என்னை உனக்கு பிடிக்கலையா, நான் எப்படி இருந்தா உனக்கு பிடிக்கும்னு சொல்லு நான் உனக்காக மாறுறேன் இது சத்தியம் அருவி ப்ளீஸ் என்னை நம்பு” என்று அவன் உருக,
“யாரும் யாருக்காகவும் மாறக் கூடாது ரோஹன், நாம எப்படி இருக்கோமோ அது தான் நம்மளோட ஒரிஜினல் வெர்சன், அதை யாருக்காகவும் மாத்திக்க கூடாது, அது நிரந்தரமா இருக்காது,
சோ நீ எப்படி இருக்கியோ அப்படியே இரு, ஆனா எனக்கு தான் இந்த கமிட்மென்ஸ்ல விரும்பம் இல்ல, எனக்குன்னு நிறைய ட்ரீம் இருக்கு ரோஹன், அதை எல்லாம் நான் செய்யனும்னு ஆசைப்படுறேன்” என்றாள் அருவி,
“உன்னோட ட்ரீம் எதுவ இருந்தாலும் அது தான் என்னோட ட்ரீமும், உனக்கு சப்போர்ட்டா உன்கூட நான் இருக்கேன் அருவி” என்று ரோஹன் சொல்ல,
“இதெல்லாம் கேட்க தான் நல்லா இருக்கும் ரோஹன், லைஃப்புக்கு செட் ஆகாது, என்னோட ட்ரீம்ம நானே பார்த்துப்பேன், நீ உன் லைஃப்ல பத்தி யோசி, காலேஜ் முடிஞ்சுது அடுத்து என்ன பண்ணலாம்னு யோசி” என்று அருவி சொல்ல,
“எனக்கு இருக்கிற ஒரே ட்ரீம் உன் கூட வாழ்றது மட்டும் தான் அருவி, அதைத் தான்டி என்னால எதையும் யோசிக்க முடியல” என்று தலையில் கை வைத்துக் கொண்டான்,
“நீ தப்பு புரிஞ்சுட்டு இருக்க ரோஹன், உன் சின்ன வயசில இருந்து எவ்வளவோ விஷயத்துக்கு ஆசை பட்டிருப்ப அதெல்லாமே கிடைச்சுதா,
இல்லல்ல, சில விஷயம் கிடைச்சிருக்கும், சில விஷயம் கிடைச்சிருக்காது, அப்படி கிடைக்கததுக்காக நீ வருத்தப்பட்டிருப்பியே தவிர, அதை ஈசியா கடந்து வந்திருப்ப,
அதே மாதிரி தான், உனக்கு நானும் கொஞ்ச நாள் கஷ்டமா தான் இருக்கும், அதுவும் செமஸ்டர் எக்ஸாம்ஸ் முடிஞ்சு இந்த காம்பௌன்டுக்கு வெளிய போனா, நிச்சயமா எல்லாமே மாறிடும்,
நீ நல்லபடியா எக்ஸாம்ஸ் எழுதி, பெரிய கம்பெனில வேலை கிடைச்சு போனத்துக்கு அப்புறமா பாரு, அருவி ன்னு ஒருத்தி இருந்ததே உன் நியாபகத்துல இல்லாம போயிடும்” என்று அருவி சொல்ல,
“அதெல்லாம் இல்ல, நான் எங்க இருந்தாலும் உன் நினைப்பு மட்டும் தான் எனக்குள்ள இருக்கும், நீ ஏதேதோ பேசி என் மனசை கலைக்க பாக்குற,
நீ என்ன சொன்னாலும் நானி மாற மாட்டேன், நான் உன்னை விரும்புறது நிஜம், உங்கூட லைஃப் லாங் வாழனும்னு ஆசைப்படுறது நிஜம், அதை யாராலையும் அழிக்க முடியாது” என்று
சிறுபிள்ளை அடம்பிடிப்பது போல் பேசினான் ரோஹன், அவனை எப்படி சமாளிப்பது என யோசித்தாள் அருவி ஒரு மெல்லிய பெருமூச்சை விட்டுவிட்டு, பெஞ்சில் இருந்து எழுந்து பூங்காவின் புல்வெளியை நோக்கியபடி நின்றாள்,
”ரோஹன், இங்கே வா…” என்று அழைக்க, அவன் தயக்கத்துடன் அவள் அருகில் வந்து நின்றான்,
”அந்தத் தூரத்துல தெரியுற மரத்தைப் பாரு அது எத்தனை அழகா இருக்கு, அதே மாதிரி இங்க சுத்தியும் பாரு அதி விட அழகான பூக்கள், உயரமான மரம், நமக்கு பிடிச்ச ப்ரன்ஸ்ன்னு,
நம்ம ரசிக்கவும், நம்மள ரசிக்கவும் இந்த இடத்தைச் சுற்றிலும் அவ்ளோ விஷயம் இருக்கு அதை எல்லாம் விட்டுட்டு, அந்த மரம் தான் முக்கியம் அது மட்டும் தான் அழகுன்னு சொல்லி பிடிவாதமா இருந்தா,
மத்த விஷயங்கள் நம்ம பார்வையில படாமலே கூட மறைஞ்சிரும், அதே மாதிரி நம்ம வாழ்க்கையும் அப்படித்தான் ரோஹன்,
நாம எதை நோக்கிப் போறோம்னு தெரியாம, கண்ணுல தெரியுற ஒரு அழகான விஷயத்துக்காக மத்த எல்லாத்தையும் விட்டுடக் கூடாது.
நீ இப்போ என்கிட்ட பேசுறதுக்கு எவ்வளவு தைரியத்தை வரவழைச்சிருப்பன்னு எனக்குத் தெரியும்,
ஆனா, அந்தத் தைரியத்தை உன் கெரியர்ல காட்டு உன் போகஸ்ஸ படிப்புல வை உன் ஒட்டுமொத்த லைஃப்பும் நல்லா இருக்கும்” என்று அவள் அறிவுறுத்த,
“அப்போ என்மேல உனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லையா அருவி” என்று அவன் ஆரம்பித்த இடத்திற்கே வந்து நிற்க,
“நீ ரொம்ப நல்ல பையன், உன்னை ஒரு நல்லா ப்ரண்டா பிடிக்கும் ரோஹன், ஆனா என் லைஃப்க்கு லவ் செட் ஆகாது, அதனால நீயே புரிஞ்சுப்பேன்னு நம்பறேன் ரோஹன்” என்றவள் குரலில் தெரிந்த உறுதியை உணர்ந்த ரோஹன்,
“ஓகே அருவி, இப்ப வேணா என் லவ் உனக்கு பிடிக்காம போகலாம், ஆனா நான் எப்பவுமே உனக்காக கடத்திட்டு இருப்பேன், என் லைஃப்லயும் மனசுலயும் உன் ஒருத்திக்கு மட்டும் தான் இடம்” என்று சொல்லி,
அவளைக் கடந்து நான்கைய்ந்து அடி நடந்தவன், என்ன நினைத்தானோ மீண்டும் திரும்பி அவளிடம் வந்தான், அவள் கண்ணைப் பார்த்து நிமிர்ந்து நின்றவன்,
உனக்கு சொந்தமானது எங்கிட்ட இருந்தா அது சரியா இருக்காது, அதனால அதை உங்கிட்டயே ஒப்படைக்கிறேன் அருவி, நீ பத்திரமா பார்த்துக்கோ” என்று கூறி
தன் பேக்கில் இத்தனை நாட்களாக மறைத்து வைத்திருந்த டைரி ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டினான்,
“இது உன்னைப் பார்த்த நாள்ல இருந்து உனக்காக நான் எழுதினது, யாருக்கும் தெரியாம இவ்ளோ நாளா என் உயிரா நினைச்சு பத்திரமா வச்சிருந்தேன்” என்று சொன்னவன் கண்களில் அவ்வளவு காதல் நிரம்பி வழிந்தது,
அதை அருவியால் உணர்வுபூர்வமான உணரவும் முடிந்தது, அவன் வந்ததும் கண் பார்த்து நேராக பேசியிருந்தால், அவளால் நிச்சயமாக இவ்வளவு நேரம் பேசியது போல் பேசியிருக்க முடியாது என்பதே நிதர்சனம்,
அவனிடம் இருந்த டைரியை வாங்கும் போது அவள் கைவிரல்களே நடுங்கியது, அவன் கடமை முடிந்ததென சென்று விட்டான்,
தனக்கு விருப்பம் இல்லாவிடினும் அவனின் அன்போ காதலோ பொய்யென்று அவளால் எதிர்க்க முடியாது, உண்மையான காதலுக்கு முன்னால் மௌனமாகிப் போனாள்,
நமக்கு விருப்பம் இல்லாதவர்களாக இருந்தாலும் அன்போ காதலோ நேருக்கு நேராக சந்திக்க நேர்ந்தால், அந்த அன்பின் முன் அனைவருமே ஆயுதமற்ற நிராயுதபானி தான்…!
தொடர்ந்து வாசிப்போம் வாங்க
