உன்னில் சிறையாகிறேன் – 3

நிழல் தேடும் பாதையில்

தொலைந்து போனது நிஜமல்ல

உன்னோடு நான் வாழ்ந்த

அந்த ஒற்றை நொடிதான்!

காலம் எப்போதும் எல்லா நேரமும் மகிழ்ச்சியை மட்டுமே கொண்டு வருவதில்லை, தமிழினிக்கு நடப்பதெல்லாம் மலிமிகுந்த கனவாகத் தெரிந்தது, மகிழருவி கொடுத்த தைரியம் அவளுக்குள் இருந்தாலும், கண் முன்னே தன் ரத்தமும் சதையுமான இரு குழந்தைகள் பிரியப் போவதை நினைத்தபோது அவளது ஆன்மாவே வாய்விட்டுக் கதறியது,

மனதளவில் இரும்பென இறுகிய நிலையில்​ ஜீவா பெட்டிகளில் தனக்கும் தன் மகன் மிதுனுக்கும் தேவையான துணிகளை அடுக்கிக் கொண்டு பெட்டிகளோடு வெளியே வந்தான், குழந்தைகள் இரண்டும் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்க அப்போது ஹாலுக்கு வந்த ஜீவா குழந்தைகளை அழைத்தான், 

“கவி மிதுன் இரண்டு பேரும் இங்க வாங்க,” என்று அவன் அழைத்த குரலில் எந்தவித நடுக்கமும் இல்லை, ​குழந்தைகள் இருவரும் ஆர்வமாக ஓடி வந்தனர்,

“டாடி டாடி டிரஸ் எல்லாம் பேக் பண்ணி இருக்கீங்களே எங்க போகப் போறோம், நாம எல்லாரும் வெக்கஷன் போறோமா, ஹைய்யா ஜாலி ஜாலி, டேய் மிதுன் டாடி நம்ம எல்லாரையும் வெக்கேஷனுக்கு வெளிய கூட்டிட்டு போறாரு, நாம ஜாலியா என்ஜாய் பண்ணலாம்” என்று 

கண்கள் விரிய மகிழ்ச்சியாக பார்கவி சொல்லவும் உற்சாகமான மிதுன் தன் பிஞ்சு விரல்களால் ஜீவாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்தான்,

​ஜீவா தமிழினியை ஒருமுறை ஏளனமாகப் பார்த்துவிட்டு, குழந்தைகளிடம் திரும்பினான், 

“கவி செல்லம் அப்பாக்கு ஆபீஸ்ல பெரிய வேலை கிடைச்சிருக்கு, அதனால அப்பாவும் மிதுனும் மட்டும் கொஞ்ச நாள் வெளியூர் போறோம், கவி குட்டி அம்மாவோட இங்க இருப்பியாம் கொஞ்ச நாள்ல அப்பா திரும்பி வந்திடுவேனாம் சரியா” என்று அடுக்கடுக்காகப் பொய்களைச் சொன்னான்,

​”ஏன் டாடி எங்களை மட்டும் விட்டுட்டு போறீங்க, நானும் அம்மாவும் உங்க கூடவே வர்றோமே, எங்களையும் கூட்டிட்டு போங்க டேடி ப்ளீஸ் டேடி” என்று பார்கவி அழத் தொடங்கினாள்,

​”இல்லம்மா உனக்கு ஸ்கூல் இருக்கே, மிதுனுக்கு இன்னும் லீவ் இருக்கு, அதனாலதான் அவன் வர்றான், நீ அழாம சமத்தா இருடா அப்பாவும் மிதுனும் சீக்கிரமா வந்துடுவோம்” என்று ஜீவா அவளைச் சமாதானப்படுத்த முயன்றான்,

​தமிழினி இதைக் கேட்டு சிலையென நின்றிருந்தாள்,

“ஜீவா எதுக்கு இந்த நாடகம், உண்மையைச் சொல்லிடுங்க குழந்தைகளைப் பிரிக்காதீங்க ப்ளீஸ்” என்று அவள் கெஞ்சிய குரல் அவனுக்கும் மட்டும் கேட்கும்படி இருந்தது,

​”உண்மையைச் சொன்னா அவங்க தாங்க மாட்டாங்க தமிழ், இப்போதைக்கு இதுதான் சரி, மறுபடியும் வாதாடி சண்டை போடாதே,” என்று கறாராகச் சொன்னவன், மிதுனின் கையைப் பிடித்துக் கொண்டான்,

​மிதுன் எதையும் அறியாமல், 

“அம்மா நான் போயிட்டு வரவரட்டுமா, கவி நான் திரும்பி வரும் போது உனக்கு நிறைய சாக்லேட் வாங்கிட்டு வரேன், நீ அழாத என்ன” என்று மழலையில் சொன்னபோது தமிழினிக்கு இதயம் வெடித்துவிடும் போலிருந்தது, தன் மகனை வாரி அணைத்து முத்தமிட்டாள், 

அது ஒரு பிரிவின் முத்தம் என்பதை அந்தச் சிறுவன் அறியவில்லை,

ஜீவா பெட்டிகளை காரில் வைக்க மிதுன் தமிழினியிடம் இருந்து குதித்து காரினுள் ஏறிக் கொண்டான், விபரம் அறியா பிஞ்சு தாயையும் தமங்கையையும் நிரந்தரமாக பிரிய போகிறோம் என்று அறியாமல் மகிழ்ச்சியோடு இருந்தான்,

காரின் கதவு சாத்தப்பட்டது, மிதுன் ஜன்னல் வழியாகக் கையசைக்க, பார்கவி “டாடி… மிதுன்…” என்று கத்தியபடி காரின் பின்னால் ஓடினாள், 

தமிழினி அவளை ஓடிச் சென்று பிடித்துக் கொண்டாள்,

​கார் மெல்லக் கண்ணை விட்டு மறைய, பார்கவியின் அழுகைச் சத்தம் அவ்விடம் எங்கும் எதிரொலித்தது, தமிழினி அப்படியே தரையில் மண்டியிட்டு அமர்ந்தாள், 

ஒருபுறம் காதல் கணவன் போனது கூடத் தெரியவில்லை, ஆனால் தன் மகனைப் பிரிந்த வலி அவளைப் பைத்தியமாக்கியது, ஒரு தாயாக தான் தோற்று விட்டுமோ என்று எண்ணி நெருப்பிலிட்ட புழுவாய் துடித்தாள்,

நடப்பது எதையும் தடுக்க முடியாமல், ஒரு கையறு நிலையில் தன் மகளை அணைத்தாள் தமிழினி, ஆழிக்காற்றில் சிக்கிய சிறு படகுபோல் அவள் தத்தளித்தாள் தமிழினி,

“எந்த ஒரு செயலையும் ஆராய்ந்து பார்க்கும் முன் முடிவெடுக்காதே” அதன் விளைவு எதுவாகக் கூட இருக்கலாம், இங்கே காதலுக்காக திருமணம் செய்து ஆசைக்காக குழந்தைகளை ஈன்று, கோபத்திற்காக இரு உயிர்களை பிரித்து வேதனைக் கடலில் தள்ளியாயிற்று, 

மணமுறிவு என்ற பெரிய முடிவெடுக்கும் பொழுது சுயநலமாக தங்களை மட்டுமே எண்ணினரே, பாவம் அந்த இளம் பிஞ்சுகள் விபரம் அறியா வயதிலே தாய், தந்தை, உடன்பிறந்த ரத்த பந்தத்தை விட்டு வலுக்கட்டாயமான பிரிவு எனும் கோரப்பிடியில் சிக்கி மனதளவில் சிதையும் என்ற சிறு சிந்தனை அற்ற செயலால் தவிப்பும் வேதனையும் மட்டுமே மிஞ்சியது, 

நாம் எந்த வழியை தேர்ந்திடுக்கிறோமோ அவ்வழியில் தான் காலம் நம்மை வழி நடத்தும், இறுதியில் முடிவு எவ்வாறு அமையப்பெறும் என்பது ஆதியில் நாமெடுத்த முடிவாகத் தானிருக்கும், அனைவரின் நலனையும் கொஞ்சம் சிந்தித்து சரியான முடிவெடுப்பதே சிறந்தது,

பார்கவியின் அழுகைச் சத்தம் அந்த வீட்டில் ஓய்ந்தபாடில்லை, தமிழினியின் கண்களில் கார் மறைந்த காட்சியே படமாக ஓடிக் கொண்டிருக்க சுவற்றை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் 

அவளது மனமோ சித்தம் கலங்கியவள் போல் ஏதேதோ பிதற்றிக் கொண்டிருந்தது, தன் பாதியைப் பறி கொடுத்த ஒரு பறவையைப் போல அவள் அங்கே நிலைகுலைந்து கிடந்தாள்,

​”தமிழ்…” என்று அப்போது ​அந்தக் குரல் கேட்டதும் தமிழினி மெல்லத் தலையைத் திருப்பினாள், அங்கே கவலை தோய்ந்த முகத்துடன் மகிழருவி நின்றிருந்தாள், 

தமிழினிக்குத் தன் பிள்ளையைப் பிரிந்த செய்தியை யாரிடம் சொல்லி அழுவதென்று தெரியவில்லை, ஆனால் அருவியைக் கண்டதும் மீண்டும் அவளது துக்கம் பீறிட்டது,

​”அருவி அருவி என் மிதுனை கூட்டிட்டு ஜூவா போயிட்டான் அருவி, அவனை என்கிட்ட இருந்து பிரிச்சுட்டான்” என்று அலறியபடி அருவியைக் கட்டிக்கொண்டு அழுதாள், மகிழருவி தமிழினியை அணைத்துக் கொண்டாள். 

“தமிழ் முதல்ல நீ அழாம இரு, கவி குட்டி எப்படி பயந்து போய் இருக்கா பாரு, இப்படி நீ அழுதுட்டே இருந்தா என்ன அர்த்தம்” என்று அதிகாரமும் அன்பும் கலந்த குரலில் அவளை சமாதானப் படுத்தினாள் மகிழருவி, பின் பார்கவியைத் தூக்கித் தன் மடியில் அமர வைத்துக் கொண்டாள்,

​”கவிம்மா… அழக்கூடாதுடா. மிதுன் குட்டி அப்பா கூட வேலைக்குத் தான போயிருக்கான், சீக்கிரம் வந்துடுவான், நீ அழுதுட்டு இருந்தா அம்மா ரொம்பக் கஷ்டப்படுவாங்கள்ள, நீங்க ரெண்டு பேரும் என்கூட வீட்டுக்கு வர்றீங்களா, 

அங்க யாழினி பாப்பா உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பா, நான் வரும் போதே கவி குட்டிய கூட்டுட்டு தான் வருவேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன் தெரியுமா” என்று குழந்தையைத் தேற்றினாள்,

​குழந்தையையும் சமாதானப்படுத்திவிட்டு, தமிழினியின் அருகே வந்த அருவி, அவளது தோளைப் பிடித்து உலுக்கினாள்,

​”தமிழ் இங்க பாரு ஜீவா தானே மிதுனை கூட்டிட்டுப் போயிருக்கான், மிதுன் உனக்கு மட்டும் இல்ல ஜீவாவுக்கும் அவன் குழந்தை தானே, நிச்சயமா ஜீவா மிதுனை நல்லபடியா பார்த்துப்பாரு, 

நீ அழுதுட்டே இருந்தா இங்க எதுவும் மாறப் போறது இல்ல, விவாகரத்துன்னு ஒரு பெரிய இடி உன் வாழ்க்கையில வந்திருச்சு, இனிமே அதை எப்படி கடந்து பண்றதுன்னு யோசி” என்றாள் அருவி 

“என்னால ஒரு தாயா எதையும் கடக்க முடியல அருவி, கண்ணெதிர்க்கவே பெத்த புள்ளைய விட்டுட்டு ஜடம் மாதிரி நின்னேனே அதை நினைச்சாலே எம்மேல எனக்கே கோபம் கோபமா வருது, நானெல்லாம் தாயா இருக்கவே தகுதி இல்லாதவ” என்று விரக்தியின் உச்சத்தில் பேசினாள் தமிழினி 

 

​”இப்படி எல்லாம் தேவையில்லாம யோசிச்சு, உன்னை நீயே தாழ்த்திக்காத தமிழ், இந்த மாதிரி நேரத்துல நீ தனியா இருந்தா, அது சரியா இருக்காது, கொஞ்ச நாளைக்கி நீயும் கவியும் எங்கூட வந்து இருங்க, நீ எப்ப தெளிவான ஒரு நிலைக்கு வர்றியோ அப்போ நீ இங்க வா, அது வரைக்கும் ப்ளீஸ் எங்கூட வா தமிழ்” என்று அருவி சொன்னபோது தமிழினியின் அழுது வீங்கிய கண்களோடு பாவமாக பார்த்தாள் தமிழினி,

“இல்ல அருவி நான் வரல இங்கயே இருக்கேன், என்னால உனக்கு எதுக்கு சிரமம், என் விதி நானே எழுதினது இதையெல்லாம் நானே அனுபவிச்சுக்கறேன், என்னை இப்படியே விட்டிரு அருவி” என்றாள் தமிழினி,

“ஏய் என்னடி பிரிச்சு பேசுற, ஏன் எனக்கு ஒரு கஷ்டம் வந்தா நீ பார்த்துட்டு எப்படியோ போன்னு விட்டுட்டு போயிடுவியா, இல்லல்ல அது மாதிரி தான் உனக்கு ஒண்ணுன்னா நானே வருவேன்டி,

இப்ப நீ கிளம்பி எங்கூட வர்ற, கொஞ்ச நாளைக்கி எங்கூட தான் இருக்க, நானா உன்ன அனுப்புற வரைக்கும் நீ அங்க தான் இருக்கனும் சரியா” என்று ஏதோ குழந்தையை அதட்டுவது போல் அதட்டி கண்களைத் துடைத்து விட்டாள்,

தன்னிடம் எதுவுமே இல்லை என்ற நிலை வந்தாலும் ஒரு உண்மையான நட்பிருந்தால் போதும் எவ்வளவு பெரிய இடர் என்றாலும் அதை துணிந்து கடந்து விடலாம், 

​குழந்தைக்கும் தமிழினிக்கும் தேவையான உடமைகளை மட்டும் எடுத்துக் கொண்டு இரு தோழிகளும் பார்கவியுடன் அந்த வீட்டிலிருந்து வெளியேறத் தயாராகினர், ஆழிக்காற்றில் சிதைந்த படகு, இப்போது நட்பு எனும் துடுப்பின் உதவியால்  கரையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது,

நகரத்தின் இரைச்சலில் இருந்து வெகு தொலைவில் இருந்த ஒரு நவீன அடுக்குமாடி குடியிருப்பில் ஜீவா தன் மகன் மிதுனுடன் வந்து இறங்கினான், 

அது அவனது அலுவலகத்திற்குச் சொந்தமான வீடு வசதிகள் அனைத்தும் இருந்தது, ​கார் நின்றதும் உற்சாகமாக இறங்கிய மிதுன், அந்தப் புதிய இடத்தைப் பார்த்ததும் சட்டென்று அமைதியானான், 

“அப்பா இது யாரு வீடு, அம்மா எப்போ வருவாங்க, கவி எங்கே” அந்தச் சிறுவனின் முதல் கேள்வியே ஜீவாவிற்குத் தர்மசங்கடத்தைத் தந்தது,

​”இதுதான் நம்ம புது வீடு மிதுன், கொஞ்ச நாள் இங்கதான் இருக்கப்போறோம், அம்மா வேலையை முடிச்சுட்டு வருவாங்க” என்று வழக்கமான பொய்யைத் தட்டிவிட்டான் ஜீவா, அதையும் நம்பியது குழந்தை,

உள்ளே நுழைந்ததும் மிதுன் ஒவ்வொரு அறையாக ஓடிப் பார்த்தான், புது வீட்டில் ஆரம்பத்தில் கொஞ்சம் சந்தோஷமாக இருந்த மிதுன் நேரம் செல்ல செல்ல அவனது பிஞ்சு மனம் தாயைத் தேடியது, 

தாயைப் போன்றதொரு தெய்வம் இவ்வுலகில் உண்டோ, கண்டார் யாருமில்லையே…! நிதர்சனம் புரிந்து தாயையும் பிள்ளையும் இணைப்பானா ஜீவா?

 

தொடர்ந்து வாசிப்போம் வாங்க 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page