உன்னில் சிறையாகிறேன் – 4

சமையலறையில் இருந்து வரும் அந்த அம்மாவின் மணமும், “மிதுன்… இங்க வாடா சாப்பாடு ஊட்டிவிடுறேன்” என்ற அந்த அழைப்பும் அங்கே இல்லை, பார்கவியுடனான சிறு சிறு மோதல்களும் விளையாட்டுகளும் இல்லை தனித் தீவில் தனித்து நின்றதைப் போல் ஆனான் மிதுன்,

​நேரம் கடந்து செல்ல மிதுனின் மொத்த உற்சாகம் வடிந்தது, அவனுக்கு பசி எடுத்தபோது ஜீவா வெளியே இருந்து வாங்கி வந்த உணவைக் கொடுத்தான், 

“மிதுன் உனக்கு பிடிச்ச பீட்சா சாப்பிடுடா” என்று தட்டில் வைத்துக் கொடுத்தான் ஜீவா ​மிதுன் அந்தத் தட்டைத் தள்ளி வைத்தான்,

“எனக்கு இது வேண்டாம்ப்பா அம்மாவோட பருப்பு சாதம் தான் வேணும், அம்மா தான் ஊட்டிவிடணும்” என்று அடம் பிடிக்கத் தொடங்கினான்,

​”அம்மா வரமாட்டாங்க மிதுன், இப்போதைக்கு நான் தான் உனக்கு எல்லாம் சமத்தா சாப்பிடு” என்று ஜீவா சற்று அதட்டலாகச் சொல்ல, மிதுனின் கண்கள் கலங்கின,

​”இல்ல எனக்கு அம்மா தான் வேணும் கவி வேணும், நான் வீட்டுக்குப் போறேன்” என்று தரையில் அமர்ந்து தேம்பித் தேம்பி அழத் தொடங்கினான்,

​ஜீவா அவனைக் கட்டியணைத்துச் சமாதானப்படுத்த முயன்றான், ஆனால், அந்தப் பிஞ்சு மனம் பிரிவின் வலியை உணரத் தொடங்கிவிட்டது, இரவு நெருங்க நெருங்க மிதுனின் அழுகை இன்னும் அதிகமானது,

தூக்கத்திலேயே “அம்மா… அம்மா…” என்று அவன் அலறியது ஜீவாவின் மனசாட்சியை ஒரு நிமிடம் சுட்டது,

​’நாம் செய்தது சரிதானா’ என்ற கேள்வி அவன் மனதில் ஒரு கணம் எட்டிப் பார்த்தது, ஆனால் தமிழினியின் மீதான அவனது கோபமும் ஈகோவும் அந்த நியாயத்தை மறைத்தது,

​”ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும் போகப் போக எல்லாம் சரியாயிடும்,” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் ஜீவா, 

ஆனால், தன் தாயைத் தேடித் தவிக்கும் அந்தப் பிள்ளையின் கண்ணீருக்கு அவனிடம் எந்தப் பதிலும் இல்லை,

​அங்கே ஒரு தாயின் மடி இல்லாமல் ஒரு மழலை தவித்துக் கொண்டிருக்க, 

இங்கே ஒரு மகனின் நினைவால் ஒரு தாய் சிதைந்து போயிருந்தாள். விதி இவர்களை வைத்து ஒரு கொடூரமான விளையாட்டை ஆடிக் கொண்டிருந்தது,

அமைதியான அந்த நள்ளிரவில், ஜன்னல் வழியே நிலவின் ஒளி மென்மையாகத் தமிழினியின் முகத்தில் விழுந்தது, விளையாடிக் கலைத்துப் போய் உறங்கிய குழந்தைகள் இருவரின் தலை கோதி, சத்தமில்லா ஒரு முத்தத்தை பதித்து விட்டு தமிழினியின் அருகே வந்த அருவி அவளின் தோளைத் தொட்டாள்,

​”தமிழ் இன்னும் எவ்வளவு நேரம் ஜன்னலையே பார்த்துட்டு இருப்ப, மிதுன் இப்போ ஜீவா கூட பத்திரமா இருப்பான், ஜீவா ஒரு கோபக்காரனா இருக்கலாம், ஆனா ஒரு அப்பாவா அவன் மிதுனைத் தன் உயிரா நினைக்கிறவன்,” என்றாள் அருவி,

​தமிழினி பெருமூச்சு விட்டாள்,

“தெரியும் அருவி ஆனா ஒன்பது வருஷம் அவன் கூட இருந்த நினைவுகள் என்னைச் சுத்தி நிக்குது, அவன் ஏன் இப்படி மாறினான், அந்தப் பிடிவாதம் தான் பெருசுன்னு நினைச்சுட்டானே”

​அருவி அவளை ஆழமாகப் பார்த்தாள் 

“ஜீவாவைப் பத்தி எனக்கும் தெரியும் தமிழ், அவன் என் கூடப் பிறந்தவன் மாதிரி, உங்க ரெண்டு பேருக்கும் இடையில அன்பு இல்லாமப் போகல, புரிதல் தான் குறைஞ்சிடுச்சு, அதுதான் இப்போ உனக்கும் ஜீவாவுக்கும் எதிரா ஒரு விரிசலை உண்டு பண்ணிடுச்சு,

உங்க இரண்டு பேருக்குமே ஒரு தோழியா இருந்திருக்கேன்னு நம்புறேன், அந்த உரிமையில உனக்கு நான் சொல்ல விரும்புறது ஒண்ணுதான், நடந்ததை நினைச்சு அழுதுட்டே இருந்தா, கவி பாப்பா இன்னும் பயந்துடுவா” என்று அருவி சொல்ல

​”அப்போ நான் என்ன பண்ணனும் அருவி, நான் இருக்கிற மனநிலையில என்னால எதையுமே மறக்க முடியல, நடந்தது ஒவ்வொன்னும் என் கண்ணுக்குள்ள நிற்குது” என்றாள் தமிழினி

​”நீ முதல்ல நீயா மாறணும் தமிழ், நீ ஒரு படிச்ச பொண்ணு, இந்த ஒன்பது வருஷமும் உன் குடும்பத்துக்காகவும், குழந்தைகளுக்காகவும் உன்னோட கேரியரைத் தொலைச்சுட்ட, இப்போ உனக்கான நேரம் கிடைச்சிருக்கு, 

ஜீவாவையோ, உன் குழந்தையையோ மறக்கச் சொல்லல ஆனா, உன்னை நீயே மீண்டும் மீட்டெடு, நீ தைரியமான ஒரு பொண்ணா மாறினாத்தான், ஜீவாவுக்கே ஒருநாள் நீ யாருன்னு புரியும், 

போராட்டங்கள் நீதிமன்றத்துல மட்டும் நடக்குறது இல்ல தமிழ், அது நம்ம மனசுக்குள்ளயும் நடக்கணும், உனக்கான ஒரு வேலையை தேடிக்க, உனக்காக உன்கூட எப்பவுமே நான் இருக்கேன் தமிழ், என்னோட தமிழ் இனி எப்பவுமே கலங்கக் கூடாது” என்று

​தமிழினி அருவியின் கைகளைப் பற்றிக் கொண்டாள்,

“நிஜமாவே என் மேல உனக்கு எவ்வளவு அக்கறை அருவி, ஆனா ஜீவா, அவன் இப்போ என்ன பண்ணிட்டு இருப்பான் மிதுன் அழுதான்னா அவனால தாங்க முடியாதே, அவனை எப்படி சமாளிப்பானோ தெரியல அருவி” என்றவளைப் பார்த்து​ மெலிதாகச் சிரித்தாள் அருவி,

“ஜீவா கஷ்டப்படுவான் தமிழ், அவனோட ஈகோ இப்போதைக்கு அவனுக்குப் பெருசா தெரியலாம், ஆனா மிதுன் அழும்போது தான் அவனுக்கு உன் அருமை புரியும், நீ கவலைப்படாதே, அவனையும் நான் நேர்ல பார்த்துப் பேசுறேன், 

இப்போதைக்கு நீ நிம்மதியா தூங்கு, உன்னோட அந்தத் தன்னம்பிக்கை தான் உனக்கு எல்லாத்தையும் திரும்பக் கொண்டு வரும்” என்ற ​அருவியின் அந்தத் தெளிவான பேச்சு தமிழினியின் மனதுக்குள் இருந்த கனமான பாரத்தை மெல்லக் குறைத்தது, 

‘பகைமையை பாராட்டுவதை விட, தன்னம்பிக்கையோடு முன்னேறுவதே சிறந்தது’ என்று அவள் உணரத் தொடங்கினாள், 

மௌனத்தின் மறுபக்கம்

​மகிழருவியின் வீட்டில் தமிழினிக்குத் தேவையான ஒரு அமைதியான சூழல் கிடைத்தது, ஆனால், அந்த அமைதி அவளுக்குப் பழகவில்லை, ஒவ்வொரு முறை சமையலறையில் பாத்திரங்கள் மோதும் சத்தம் கேட்கும்போதும், 

“அம்மா… பசிக்குது” என்று ஓடி வரும் மிதுனின் குரல் அவள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது,

அருவி கொடுத்த தன்னம்பிக்கை ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு தாயின் இதயம் தன் பாதி பிள்ளையைத் தேடித் தவித்தது,

அதே நேரம், ஜீவாவின் நிலை இன்னும் மோசமாக இருந்தது, அந்தத் தனிமை, சுதந்திரம் இரண்டுமே அவனுக்குத் தேவையில்லாமல் தெரிந்தது, அலுவலகம் முடிந்து வந்த அவனுக்கு மிதுனின் அழுகை முகமே வரவேற்பு தந்தது,

​”டாடி நாம எப்போ வீட்டுக்கு போவோம், எனக்கு அம்மா கிட்ட போகணும் டாடி” என்று மிதுன் அழுது அழுது ஓய்ந்து போயிருந்தான்,

​ஜீவாவுக்குத் தெரியும், தான் செய்வது மிதுனைப் பாதிக்கிறது என்று ஆனால், தமிழினியிடம் தான் தோற்றுவிடக் கூடாது என்ற அந்த ஆணாதிக்க ஈகோ அவனைத் தடுத்தது, 

தமிழினியிடம் ஒரு வார்த்தை பேசிவிடலாம் என்று பலமுறை போனை எடுத்தான், ஆனால் அவளுடனான கசப்பான விவாதங்கள் அவனது விரல்களைத் தடுத்து நிறுத்தியது,

மேலும் சில நாட்கள் கடந்த நிலையில் ​தமிழினிக்கு ஒரு மெசேஜ் வந்தது, அது அருவியிடமிருந்து அல்ல, ஜீவாவிடமிருந்து,

​”கவி எப்படி இருக்கா, மிதுன் இங்க நல்லா இருக்கான் இப்ப தூங்கிட்டான், கவலைப்படாதே,”

​அந்த சில வார்த்தைகளைப் பார்த்ததும் தமிழினியின் கண்கள் மீண்டும் நனைந்தன,

‘கவலைப்படாதே’ என்று சொல்லும் அவனுக்கு, அவளது கவலைக்குக் காரணமே அவன்தான் என்பது புரியவில்லையா, அல்லது புரிந்தும் புரியாதது போல் நடிக்கிறானா,

​தமிழினி பதில் அனுப்பவில்லை, மௌனமே ஒரு பதிலானது, 

அவள் இப்போது தன் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்தாள், அருவி சொன்னது போல, தன் மனபாரத்தை எழுத்தாக்கத் தொடங்கினாள், வலிகளை வரிகளாக்கினாள் சற்றே மனதின் அழுத்தம் குறைந்தது போலிருந்தது,

மேலும் நாட்கள் நகர்ந்தன, வலிகள் மறையவில்லை என்றாலும், அந்த வலிகளோடு வாழத் தமிழினி பழகப் போராடிக் கொண்டிருந்தாள், 

மகிழருவியின் வீட்டில் யாழினியும் பார்கவியும் தங்களின் தாயிகளைப் போல நல்ல தோழிகள் ஆயினர், இது தமிழினிக்குச் சற்று நிம்மதியைத் தந்தது,

​ஒரு காலைப் பொழுதில், கையில் காபி கோப்பையுடன் வந்த அருவி, “தமிழ், இன்னைக்கு ஒரு முக்கியமான செய்தி இதோ பார்” என்று செய்தித்தாளை நீட்டினாள்,

அதில் ஒரு பிரபல கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் பணிக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் இருந்தது,

​”தமிழ் நீதான் படிச்சிருக்கியே அப்புறமா ஏன் இந்த வேலைக்கு முயற்சி பண்ணக்கூடாது” என்றாள் அருவி.

​தமிழினி தயங்கினாள்,

“அருவி, நான் ஒன்பது வருஷமா வீட்டுக்குள்ளயே இருந்துட்டேன், இப்போ போய் ஒரு வேலை பார்க்க முடியுமான்னு தெரியல, எனக்குப் பயமா இருக்கு” என்றாள்

​”பயம் எதுக்கு தமிழ் உன்கிட்ட திறமை இருக்கு அந்தப் பயத்தை உடைச்சு வெளிய வர்றதுதான் உன்னோட முதல் வெற்றி, நீ வேலைக்குப் போனாத்தான் கவியோட தேவைகளை நீயே கவனிச்சுக்க முடியும்யோசிச்சுப் பார்”

​அருவியின் வார்த்தைகள் தமிழினியின் மனதில் ஒரு உத்வேகத்தை அளித்தன, 

அன்று மதியமே மகிழருவியின் பழைய லேப்டாப்பைத் தூசு தட்டி எடுத்து, தன் ரெஸ்யூமை (Resume) தயார் செய்தாள், பல வருடங்களுக்குப் பிறகு தன் பெயருக்குப் பின்னால் இருந்த பட்டப்படிப்பை அவள் பார்த்தபோது, அவளுக்கே ஒரு பெருமிதமாக இருந்தது,

​மறுநாள், ஒரு நேர்த்தியான சுடிதாரில், நெற்றியில் சிறிய பொட்டுடன் கிளம்பிய தமிழினியைப் பார்த்து அருவி கண் கலங்கினாள்,

“வாழ்த்துகள் தமிழ், கண்டிப்பா உனக்கு இந்த வேலை கிடைக்கும்”

​நேர்முகத் தேர்வில்  (Interview) தமிழினி அமர்ந்திருந்தபோது, அவளது மனதில் ஜீவாவின் முகம் ஒரு நிமிடம் வந்து சென்றது, 

“நீ எதுக்கும் லாயக்கில்லை” என்று அவன் ஊடலின் நடுவே சொன்ன வார்த்தைகள் அவளது காதுகளில் இப்போது ஒலித்தது

​”இல்ல இல்ல நான் லாயக்கானவள் தான், அதை நான் நிரூபிப்பேன்” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள்,

​நேர்முகத் தேர்வு நடத்துபவர் அவளது ரெஸ்யூமை பார்த்துவிட்டு  

“மிஸஸ் தமிழினி இங்க விளையாட்டை விட குழந்தைகளோட படிப்புக்கு தான் நாங்க முக்கியத்துவம் கொடுக்கிறோம், அதை புரிஞ்சு நடந்துப்பீங்கன்னு நம்பறோம், நாளைக்கே நீங்க ஜாயின் பண்ணலாம் ” என்றார்,

அந்த நிமிடம் தமிழினியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளித்தது, ஒன்பது வருடங்களுக்குப் பிறகு, அவளுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருந்தது, அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள அவள் முதலில் அழைத்தது அருவியைத்தான்,

“ஹலோ அருவி, நீ சொன்ன மாதிரியே இங்க எனக்கு வேலை கிடைச்சிருச்சு, நாளைக்கே வந்து ஜாயின் பண்ண சொல்லிட்டாங்க, எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா, 

என்னோட இந்த சந்தோஷத்திற்கு எல்லாம் நீதான்டி காரணம்” என்கையில் அவளுக்கு கண்ணீரே வந்தது, 

அவள் அப்படி அருவியிடம் பேசிக் கொண்ட வந்தவள், தற்செயலாகப் பார்த்த ஒரு காட்சி அவளை உறைய வைத்தது. சாலையின் மறுபுறம், ஒரு ஐஸ்கிரீம் கடையில் அழுது கொண்டிருந்தான் மிதுன்,

​அவன் முகம் வாடிப்போய் இருந்தது, 

“அம்மா… அம்மா…” என்று அவன் அடம் பிடிப்பது தூரத்திலிருந்து பார்த்த தமிழினிக்குக் கேட்டது,

“தாயுள்ளம் பிள்ளைக்காக எதையும் தாங்கும், ஆனால் அதே பிள்ளைக்கு 

ஒன்று என்றால் எதையும் செய்யும்”

 

தொடர்ந்து வாசிப்போம் வாங்க 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page