காலத்தின் கோட்டில் சில மாற்றங்கள் தற்செயலாக (விதி) நடந்தாலும்,
அந்த மாற்றத்தை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில் தான் நம் வாழ்க்கைப் பாதை அமைகிறது…!
உன்னில் சிறையாகிறேன் – 6
“அருவி… இன்னைக்கு நாள் ரொம்ப நல்லா இருந்ததுடி,” என்று போனில் சொல்லிக் கொண்டே பேருந்துக்காகக் காத்திருந்தாள்,
அதே நேரம், சாலையில் ஜீவாவின் கார் வேகமாகச் சென்றது, அவன் மிதுனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தான்,
கார் ஜன்னல் வழியே தமிழினி பேருந்து நிறுத்தத்தில் நிற்பதைப் பார்த்தான், கார் ஓரமாக நிறுத்தி விட்டு கண்ணாடியை இறக்கி அவளை அழைக்க வேண்டும் போல இருந்தது அவனுக்கு,
”தமிழ் மிதுனுக்கு உடம்பு முடியல, வா” என்று கத்தத் துடித்தது அவனது உள்ளம் ஆனால், அவனது கை கார் கண்ணாடியைத் தொடவில்லை, அவனது இதயம் பாரமானது,
அவனின் ஆணாதிக்க ஈகோ அவன் குரலை அப்படியே அமுக்கியது,
கார் அவளைக் கடந்து சென்றது, தமிழினிக்குத் தெரியாது, தான் தேடும் தன் உயிர் அந்த காரினுள்ளே காய்ச்சலில் துடித்துக் கொண்டிருக்கிறது என்று,
காய்ச்சல் சற்று குறைந்திருந்தாலும், மிதுன் சோர்வாக ஜீவாவின் தோள்மீது சாய்ந்திருந்தான், மிதுனை தோளில் சுமந்து வீட்டின் கதவு வரை வந்த ஜீவா தன் வீட்டின் கதவைத் திறக்க முற்படும்போது, கையில் இருந்த மருந்துப் பை கீழே விழுந்து சிதறியது,
குழந்தையை ஒரு கையில் அணைத்தபடி, குனிந்து அந்தப் பையை எடுக்க முடியாமல் ஜீவா தவித்துக் கொண்டிருந்தான், அவனது முகம் களைப்பிலும் இயலாமையிலும் சிவந்திருந்தது,
”நான் ஹெல்ப் பண்ணட்டுமா” என்று
ஒரு மென்மையான ஆனால் உறுதியான குரல் கேட்டு ஜீவா நிமிர்ந்தான், அவனது எதிர் பிளாட் கதவு திறந்திருந்தது, அங்கே நேர்த்தியான உடையில், கையில் ஒரு காபி கப்புடன் ஒரு பெண் நின்றிருந்தாள்,
ஜீவா பதில் சொல்வதற்குள், அவளே கீழே குனிந்து மருந்துப் பைகளை எடுத்து அவனிடம் நீட்டினாள்,
“தேங்க்ஸ்…” என்று முணுமுணுத்த ஜீவா, அவளை ஒரு நிமிடம் ஏறிட்டுப் பார்த்தான், அவள் முகத்தில் ஒரு துடிப்பான புன்னகை இருந்தது,
”நீங்க இங்க புதுசா, நான் போன வாரம் தான் இந்த பிளாட்டுக்கு மாறினேன், பை த வே, நான் நிகிதா” என்று அவள் இயல்பாகப் பேசினாள்,
”நான் ஜீவா, மெயின் பிரான்ச்ல மேனேஜரா இருக்கேன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்,
”ஓ கிரேட், நான் சிட்டி பிரான்ச்ல மார்க்கெட்டிங் ஹெட், ஆபீஸ் டைம்ல நீங்க வேலையில பிசியா இருக்கனுமே ஆனா குழந்தையை வச்சுட்டு இந்நேரத்துக்கு வீட்டுக்கு வர்றீங்களே” என சந்தேகமாக கேட்டாள் நிகிதா,
“நான் இன்னைக்கு லீவ் போட்டிருக்கேன், இது எனா பையன் மிதுன், அவனுக்கு உடம்பு முடியலை அதான்” என்று ஜஜவா சொல்லவும், அவள் மிதுனின் நெற்றியை மென்மையாகத் தொட்டுப் பார்த்தாள்,
”ஆமா… கொஞ்சம் ஃபீவரா இருக்கும் போல, உங்க வொய்ப் எங்க, அவங்க குழந்தைய பார்த்துக்க மாட்டாங்களா” என்று நிகிதா கேட்க,
“சி இஸ் நோ மோர்” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டான் ஜீவா, அதை புரிந்து கொண்டது போல் தலையசைத்தாள் நிகிதா
”பேச்சுலர் லைஃப்ல குழந்தையை மெயின்டெய்ன் பண்றது கஷ்டம் தான், எனிவே, ஏதாவது ஹெல்ப் வேணும்னா தயங்காம என் கதவைத் தட்டுங்க, அப்புறம் குழந்தைய நல்லா பார்த்துக்கோங்க” என்று ஒரு அழகான புன்னகையை உதிர்த்துவிட்டுத் தன் வீட்டிற்குள் சென்றாள் நிகிதா,
ஜீவா கதவைத் திறந்து உள்ளே வந்தான், இதுவரை அந்த வீடு அவனுக்கு ஒரு சுமையாகத் தெரிந்தது, ஆனால் நிகிதாவின் அந்தச் சில நிமிடப் பேச்சு அவனுக்குள் ஒரு சிறிய தெம்பைக் கொடுத்தது,
‘பேச்சுலர் லைஃப்’ என்று அவள் சொன்னது அவனது ஆழ்மனதில் ஒரு மின்னலை ஏற்படுத்தியது, தான் ஒரு விவாகரத்து பெற்றவன் என்ற எண்ணத்தை விட, தான் ஒரு ‘சிங்கிள் மேன்’ என்ற புதிய பிம்பம் அவனுக்குள் மெல்ல முளைத்தது,
மறுபுறம், தமிழினி தன் முதல் நாள் வேலை முடிந்து வந்து, பார்கவிக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தாள், ஆனால் அவளது மனம் மட்டும் எங்கோ இருந்தது,
விதி ஒரு பக்கம் தமிழினியைத் தன்னம்பிக்கை மிக்க ஆசிரியையாக்கிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஜீவாவின் வாழ்வில் ஏதோ ஒரு மாபெரும் மாற்றத்தை நிகழ்த்த வந்துள்ள நிகிதா எனும் பூங்காரிகையை கடவுள் அனுப்பி உள்ளாரோ…?
ஜீவா உள்ளே நுழைந்து மிதுனைப் படுக்க வைத்தான், மருந்தின் வீரியத்தால் மிதுன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான், ஆனால் ஜீவாவுக்கு உறக்கம் வரவில்லை, நிகிதா சொன்ன அந்த வார்த்தை “பேச்சுலர் லைஃப்” அவன் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது,
தன் அடையாளமான ஒரு மனைவியை இழந்தவனாகவோ அல்லது விவாகரத்து பெற்றவனாகவோ காட்டிக்கொள்வதை விட, ஒரு சுதந்திரமான ஆணாகக் காட்டிக்கொள்வதில் அவனது ஈகோ திருப்தி அடைந்தது,
“தமிழ் இல்லைன்னு ஏன் சொன்னேன்? ஒருவேளை என் மனசளவுல அவ இல்லாம போயிட்டான்னு நான் நினைக்குறேனோ” என்று அவன் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டான்,
மறுபுறம், மகிழருவியின் வீட்டில் தமிழினி பார்கவியைத் தூங்க வைத்துவிட்டு, அந்தப் பழைய டைரியை எடுத்தாள். அதில் அவள் ஒரு கவிதை எழுதினாள்,
”நீ இல்லாமலும் விடியும் என்று சூரியன் சொல்கிறது…!
நீ இல்லாமலும் முடிவெடு என்று என் அறிவு சொல்கிறது…!
ஆனால், என் பாதி உயிரான உன் மடி தேடி என் இதயம் மட்டும் இன்றும் அலைகிறது மிதுன்…!”
மகனுக்காக சில வரிகளை எழுதியவள் உள்ளமோ சொல்லென தாளாத துக்கத்தை சுமந்து கொண்டிருந்தது, ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு அவளை ஆட்டுவித்தது,
“மிதுன் இப்போது எப்படி இருப்பான், சாப்பிட்டானா? தூங்கி இருப்பானா? ஒருவேளை ஜீவாவால் மிதுனை சமாளிக்க முடியாமல் இருப்பானோ, அம்மா வேணும்னு சொல்லி அடம்பிடிச்சிருப்பானே,
அப்படி இருந்தும் இந்த ஜீவா மிதுனை எப்படி சமாதானப் படுத்தி இருப்பான், என் செல்லமே ராஜா உன் அம்மா உனக்காக இங்க நான் இருக்கேன்டா, ஆனா நீ தாயில்லா பிள்ளையா இருக்கியே,
நானிருந்தும் இல்லாத மாதிரி உன்னை பார்த்துக்க முடியாம போச்சே மிதுன், என்னை மன்னிச்சிடுடா மிதுன் என்னை மன்னிச்சிடுடா செல்லமே இந்த பாவி வயித்துல நீ பொறந்திருக்கவே கூடாது,
எனக்கு புள்ளையா பொறந்துட்டு நீ கஷ்டப்பட நானே காரணமா இருந்துட்டேனே” என்று அவளின் கதறலை கண்ட இருளே காலைப் பொழுதை புலரச் செய்தது,
யாருக்காகவும் எதற்காகவும் நில்லாமல் ஓடும் காலம் போல நாட்கள் வேகமாக உருண்டோடின, ஜீவாவிற்கு வாழ்க்கை ஒரு பெரும் போராட்டமாக மாறியிருந்தது , காலையில் இருந்து அலுவலகக் கோப்புகள், மாலையில் மிதுனின் அழுகை,
இடையில் வீட்டு வேலைகள் என அவன் திணறிப் போனான், ஒரு மேலாளராகப் பலரை வேலை வாங்கிய அவனுக்கு, ஒரு வீட்டைச் சீராக நடத்துவது பெரிய மலையை ம போல இருந்தது,
அன்று மாலை அலுவலகம் முடிந்து வந்த ஜீவா, வீட்டின் நிலையைப் பார்த்து அப்படியே சோபாவில் அமர்ந்துவிட்டான், துணிகள் கலைந்து கிடந்தன, மிதுன் பசியில் அழுது கொண்டிருந்தான், சமையலறையில் பாத்திரங்கள் மலை போலக் குவிந்திருந்தன,
அப்போது கதவு தட்டப்பட்டது, வேண்டா வெறுப்பாக சென்று கதவைத் திறந்து அங்கே நிகிதா நின்றிருந்தாள், அவளைப் பார்த்ததும் லேசாக புன்னகைத்தான்,
“உங்க ப்ளட்டுக்கு எதிர் ப்ளாட்ல இருக்கறதால உள்ள வான்னு கூட கூப்பிடமாட்டீங்களா சார்” என்றாள் நிகிதா,
:அச்சச்சோ அப்படி எல்லாம் ஒன்னு இல்ல, உள்ள வாங்க நிகிதா” என்றான் ஜீவா,
அவன் ஒரு மரியாதை நிமிர்த்தமாக அழைத்தான், அவளும் உள்ளே வந்து பார்த்தாள், சரியாக பராமரிக்கப்படாத காரணத்தால் வீடே அல்லோல கல்லோலமாக இருந்தது,
“என்ன சார் இது, இந்த அப்பார்ட்மெண்டோட மொத்த குப்பையும் இங்க தான் இருக்கு” என்று முகசுழிப்போடு கேட்டாள் நிகிதா,
“அய்யோ சாரி, வீட்டை க்ளீன் பண்ண டைம் இல்ல, இதோ இப்ப எல்லாத்தையும் க்ளீன் பண்ணிடுவேன்” என்றவாறு செல்ல இருந்தவனை தடுத்தாள் நிகிதா,
”ஜீவா சார் உங்களைப் பார்த்தாலே தெரியுது நீங்க ரொம்ப டயர்டா இருக்கீங்கன்னு, ஒரு மனுஷனா நீங்க எல்லாத்தையும் எப்படிச் சமாளிப்பீங்க,” என்று பரிதாபத்தோடு கேட்டாள் நிகிதா,
”தெரியல நிகிதா மிதுனைப் பார்த்துக்கவே நேரம் சரியா இருக்கு, வீட்டு வேலைகளால என்னால ஆபீஸ்ல கூட சரியா கான்சென்ட்ரேட் பண்ண முடியல” என்று தன் இயலாமையை முதன்முறையாக வெளிப்படுத்தினான் ஜீவா, நிகிதா மென்மையாகச் சிரித்தாள்.
“டோன்ட் வொரி சார், நான் எங்க வீட்டு க்ளீனிங் லேடிகிட்ட பேசி, இன்னைக்கு ஒருநாள் மட்டும் உங்க வீட்டையும் க்ளீன் பண்ண சொல்றேன், நாளைல இருந்து ஒரு சமையல்கார அம்மாவும்,
மிதுனைப் பார்த்துக்க ஒரு ஆயாவும் உங்க வீட்டுக்கு ஏற்பாடு பண்ணிடலாம், அப்படி இல்லைன்னா வீட்டையும் குழந்தையும் வச்சிட்டு நீங்க இன்னும் கஷ்டப்படனும்” என்று நிகிதா சொல்ல
ஜீவாவுக்குப் பெரும் சுமை குறைந்த உணர்வு ஏற்பட்டது,
“தேங்க்ஸ் நிகிதா, உண்மையிலேயே இது எனக்குப் பெரிய உதவி” என்றான் ஜீவா
”இதில் என்ன இருக்கு சார், பக்கத்துல பக்கத்துல இருக்கோம் இதைகூட செய்யலைன்னா எப்படி, அப்புறம நாளைக்கு வீக் எண்ட், நான் ஃப்ரீதான். மிதுனைப் பார்க்க நான் வரட்டுமா? அவனுக்கு ஒரு சின்ன சேஞ்ச் வேணும்ல” என்று அவள் உரிமையோடு கேட்டாள்,
“நீங்க எப்ப வேணாலும் வரலாம் இது உங்க வீடு மாதிரி” என்றான் ஜீவா,
மறுநாள் முதல் ஜீவாவின் வீட்டில் மாற்றங்கள் தெரிந்தன, சமையலுக்கும், மிதுனை பராமரிக்கவும் ஆட்கள் வந்ததால் ஜீவா நிம்மதி அடைந்தான்,
நிகிதா அடிக்கடி அவன் வீட்டிற்கு வரத் தொடங்கினாள், அவள் மிதுனுக்குப் புதுப் புது பொம்மைகளை வாங்கி வந்தாள், மிதுன் ஆரம்பத்தில் அவளைத் தவிர்த்தாலும்,
அவளது விளையாட்டுப் பொருட்களுக்காக அவளிடம் மெல்ல ஒட்டிக் கொண்டான், ஜீவாவிற்கு நிகிதாவின் அருகாமை ஒரு புதிய உற்சாகத்தைத் தந்தது, தமிழினியுடன் இருந்தபோது எப்போதும் பொறுப்புகள், குடும்பம், சேமிப்பு என்று ஓடிக்கொண்டிருந்த அவனுக்கு, நிகிதாவின் அந்த ‘மாடர்ன்’ அணுகுமுறை ஒரு சுதந்திரத்தைத் தந்தது,
அவளுடன் காபி குடிப்பது, அலுவலகம் பற்றிப் பேசுவது என அவன் தன் கடந்த காலத்தைத் திட்டமிட்டு மறக்கத் தொடங்கினான்,
”ஜீவா சார், நீங்க ஏன் இவ்வளவு வருஷம் ஒரு போரிங் லைஃப் வாழ்ந்தீங்கன்னு எனக்குத் தெரியல. இப்போ பாருங்க, நீங்க எவ்வளவு ஹேப்பியா இருக்கீங்கன்னு” என்று நிகிதா சொல்லும்போது,
ஜீவா அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் மனதின் ஒரு மூலையில் தமிழினியின் முகம் வந்து போனாலும், “She is no more” என்று அவன் சொன்ன அந்தப் பொய்,
அவனின் மனதிற்கு ஒரு திரையாக மாறி உண்மையை மறைத்து நின்றது,
அதனாலேயோ என்னவோ இங்கே ஜீவா தன் பலவீனங்களால் நிகிதாவின் பிடிக்குள் மெல்லச் சிக்கிக் கொண்டிருந்தான்,
மாய உலகில் கண்ணில் காண்பதெல்லாம் பெரும் மாயை…!
தொடர்ந்து வாசிப்போம் வாங்க
