உன்னில் சிறையாகிறேன் – 7

முழுதாய் சிதைக்க வந்த 

கஷ்டங்களுக்கு நடுவில்,

“உனக்காக நான் இருக்கிறேன்” என்ற ஒற்றை வார்த்தை அன்பின் 

மாபெரும் சக்தியே…! 

உன்னில் சிறையாகிறேன் – 7

மகிழருவியின் வீடு அன்று உற்சாகமாக இருந்தது, தமிழினி பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள், 

“இன்னைக்கு ஆபீஸ்ல உனக்கு ஏதோ முக்கியமான மீட்டிங் இருக்குன்னு சொன்னியே, கவலைப்படாமப் போயிட்டு வா அருவி, கவியையும் யாழினியையும் நான் ஸ்கூல்ல விட்டுடுறேன்” என்று தமிழினி சொல்ல,

“உனக்கு எதுக்கு சிரமம், குழந்தைங்களை நானே ஸ்கூல்ல விட்டுட்டு அப்புறமா ஆபீஸ் போயிக்கறேனே, நீ கிளம்பு தமிழ் நான் பார்த்துக்கறேன்” என்று மகிழருவி கூற

“எனக்கு ஒரு சிரமமும் இல்ல அருவி நீ முதல்ல கிளம்பு நானே கொண்டு போய் விடுறேன்” என்று இருவரும் மாறி மாறி சொல்லிக் கொண்டிருக்க,

“நீங்க இரண்டு பேரும் எங்கள யார் கொண்டு போய் ஸ்கூல்ல விடுறதுன்னு பேசி ஒரு முடிவெடுங்க அதுவரைக்கும் நாங்க வெயிட் பண்றோம்” என்றாள் யாழினி,

“ஹேய் வாயாடி இப்பவே என்ன பேச்சு பேசுற” என்று கன்னத்தைக் கிள்ளினாள் மகிழருவி, 

“ஸ்ஸ்ஆஆஆ வலிக்கிதும்மா” என்று யாழினி முகத்தை சுருக்கியதும் உடனே கிள்ளிய இடத்தை தடவிக் கொடுத்து முத்தமிட்டாள் மகிழருவி,

“சரி சரி, இன்னைக்கி தமிழே உங்கள கொண்டு வந்து விடட்டும்,  ஈவ்னிங் நீங்க இரண்டு பேரும் வரும் போது உங்க இரண்டு பேருக்கும் பிடிச்சதை சமைச்சு வைக்கிறேன் சரியா பை பை” என்று கூறி விடைபெற்றாள் மகிழருவி, 

தமிழினியே குழந்தைகள் இருவரையும்  பள்ளிக்கு அழைத்துச் சென்றாள்,

​அன்று மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது, பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் சிறுவர்கள் வண்ணத்துப் பூச்சிகளாய் ஓடிக் கொண்டிருந்தனர், 

யாழினியும் பார்கவியும் ஒருவரை ஒருவர் துரத்திப் பிடித்து விளையாடினர்

​”கவியக்கா எங்கே என்னைப் பிடி பார்க்கலாம்” என்று யாழினி ஓட, பார்கவி அவளைச் சிரித்துக் கொண்டே துரத்தினாள்,

​”இதோ பிடிச்சிட்டேன்” என்று பார்கவி அவளைத் தொட்ட போது, இருவரும் சிரிக்க அந்த மைதானமே அவர்களின் மழலைச் சிரிப்பால் நிறைந்திருந்தது, 

யாழினியின் முகம் உற்சாகத்தில் செழுமையாகவும் வனப்போடும் மின்னியது, ஆனால், அந்த உற்சாகம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை, திடீரென்று யாழினி ஓடுவதை நிறுத்தினாள், 

அவளது பார்வை மங்கியது, தலை சுற்றுவது போலத் தோன்ற, தன் பிஞ்சு விரல்களால் தலையைப் பிடித்துக் கொண்டாள்,

​”யாழி என்னாச்சு யாழி” என்று பார்கவி பதற்றமாகக் கேட்பதற்குள், அந்தத் தங்கமகள் ஒரு சருகைப் போல அப்படியே தரையில் சரிந்தாள்,

​”மிஸ் யாழினி பாப்பா விழுந்துட்டா வாங்க மிஸ்” என்று பார்கவி அலற, அந்த இடமே பரபரப்பானது,

​அதே சமயம், மகிழருவி தன் வீட்டில் யாழினிக்கும் பார்கவிக்கும் பிடித்தமான உணவைச் சமைத்துக் கொண்டிருந்தாள், தமிழினி வேலை முடிந்து வரும் போது பிள்ளைகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே அவளது எண்ணம்,

​அப்போது அவளது அலைபேசி அலறியது, திரையில் பள்ளித் தலைமையாசிரியர் என்று வந்ததைக் கண்டதும் அருவியின் உள்ளம் ஏனோ ஒரு கணம் திடுக்கிட்டது, 

​”ஹலோ மேடம், சொல்லுங்க” என்று கேட்டாள்,

​”மகிழருவி மேடம், ஒரு அவசரமான விஷயம், யாழினி இப்போ மைதானத்துல விளையாடிட்டு இருக்கும்போது திடீர்னு மயங்கி விழுந்துட்டா, நாங்க இப்போ அவளை சிட்டி ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டு போறோம், நீங்க உடனே அங்க வர முடியுமா?” என்று தலைமையாசிரியரிடம் இருந்து கேட்ட,

​அந்த வார்த்தைகள் அருவியின் காதுகளில் நெருப்புக் குழம்பை ஊற்றியது போல இருந்தது, கையில் இருந்த கரண்டி நழுவி கீழே விழுந்தது, 

“மயக்கமா, என் யாழிக்கு என்னாச்சு, இதோ இதோ கிளம்பி வர்றேன், அதுவரைக்கும் என் குழந்தைய பாத்துக்கோங்க மேடம்” என்று கூறி பதற்றத்துடன் போனை வைத்தாள்,

​அவளது கைகள் நடுங்கியது, தமிழினிக்கு இப்போது இந்தத் தகவலைச் சொல்லிவிட்டு, ஒரு தாயாகத் தன் மகளைப் பார்க்க மருத்துவமனைக்கு விரையத் தயாரானாள் அருவி, மாலை மெல்லச் சாயந்து கொண்டிருந்தது, 

சிட்டி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு (ICU) வாசலில் விளக்குச் சிவப்பாக எரிந்து கொண்டிருந்தது, அந்த இடமே ஒருவித மருந்து நெடியுடனும், நிசப்தமான பதற்றத்துடனும் நிறைந்திருந்தது, 

உள்ளே தன் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்பதை நினைக்கும்போது மகிழருவியின் கால்கள் அவளது பாரத்தைத் தாங்க மறுத்து பின்னிக் கொள்ள,

​”யாழிம்மா என் தங்கமே” என்று சுவரோரம் சாய்ந்து அமர்ந்திருந்தாள் அருவி,

​அவள் அங்கு வந்தபோது பார்த்த காட்சி அவளது இதயத்தை உறைய வைத்திருந்தது, வெள்ளை நிற ஸ்ட்ரெச்சரில், அசைவற்று, முகம் வெளுத்துப் போய் கிடந்த தன் மகளைக் கண்டபோது, அவளுக்கு உலகமே இருண்டுவிட்டது, 

ஆக்சிஜன் மாஸ்க் அணிவிக்கப்பட்டு, அவசரம் அவசரமாக அவளை உள்ளே தள்ளிக் கொண்டு சென்ற டாக்டர்களின் முகத்தில் இருந்த அந்தத் தீவிரம், நிலைமை எவ்வளவு மோசம் என்பதைச் சொல்லாமல் சொல்லியது,

​பள்ளித் தலைமையாசிரியர் அருவியின் அருகில் வந்து நின்றார், 

“நிதானமா இருங்க அருவி, விளையாடிட்டு இருந்தப்போ திடீர்னு மூச்சு விடக் கஷ்டப்பட்டு மயங்கி விழுந்துட்டா, நாங்க முதலுதவி செஞ்சோம், ஆனா…” என்று அவர் இழுக்க, அருவிக்கு அழுகை பீறிட்டது,

​”என் பொண்ணுக்கு இதுவரை ஒரு சின்ன தும்மல் கூட வந்ததில்லை சார் அவ எப்படித் திடீர்னு…” என்று அருவி கேவிக் கொண்டிருந்தபோதே, தமிழினி அங்கே ஓடி வந்தாள்,

​”அருவி! யாழிக்கு என்னாச்சு, இப்போ எப்படி இருக்கா” என்று படபடப்புடன் கேட்டபடி அருவியைக் கட்டிக்கொண்டாள் தமிழினி, 

தமிழினியின் கைகள் கூ நடுங்கிப் போனது, பார்கவியைப் பாதுகாப்பாகத் விட்டுவிட்டு வந்தவள், இப்போது யாழினிக்காகத் துடித்துக் கொண்டிருந்தாள்,

​அப்போது ஐசியூ கதவு திறக்கப்பட்டது, ஒரு செவிலியர் அவசரமாக வெளியே வந்து, 

“குழந்தைக்கு உடனே பிளட் அரேஞ்ச் பண்ணனும், பிளட் டெஸ்ட் ரிப்போர்ட்ல ஹீமோகுளோபின் ரொம்பக் குறைவா இருக்கு, மத்த விஷயங்களை டாக்டர் வந்து சொல்லுவார்” என்று சொல்லிவிட்டுப் பதற்றமாக ஓடினார்,

​அந்த வார்த்தைகள் அங்கிருந்த சூழலை இன்னும் ரணமாக்கியது, அங்கிருந்த நர்ஸ்கள் ஓடுவதும், வார்டு பாய்கள் மருந்துகளைத் தூக்கிக்கொண்டு விரைவதும் அந்த மருத்துவமனையையே போர்க்களம் போல மாற்றியிருந்தது,

​”டாக்டர் என் பொண்ணு பிழைச்சுடுவாள்ள, அவளுக்கு என்னாச்சுன்னு சொல்லுங்க” என்று வெளியே வந்த சீனியர் டாக்டரின் கைகளைப் பிடித்துக் கெஞ்சினாள் அருவி, ​டாக்டர் முகத்தைத் துடைத்துக்கொண்டு, 

“நாங்க எங்களால முடிஞ்சவரைப் போராடிட்டு இருக்கோம் மேடம், ஆனா குழந்தையோட கண்டிஷன் ரொம்பவே கிரிட்டிக்கலா இருக்கு, இப்போதைக்கு எதுவுமே சொல்ல முடியாது, டெஸ்ட் ரிப்போர்ட்ஸ் வரட்டும்” என்று சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே சென்றார் 

​அருவி அப்படியே தரையில் மண்டியிட்டு அமர்ந்தாள், தன் மகளின் சிரிப்பு, அவளது சின்னச் சின்ன அடம், “அம்மா” என்ற அந்த அழைப்பு என எல்லாம் அவளது மனக்கண்ணில் நிழலாடின, 

தமிழினி அவளைத் தேற்ற முயன்றாலும், அந்தச் சூழலில் வார்த்தைகள் எல்லாம் மௌனமாகிப் போயின,

​விதி ஒரு பக்கம் தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது. 

மருத்துவமனையின் அந்த நீண்ட வழவழப்பான நடைபாதையில் அருவி ஒரு நடைபிணமாக அமர்ந்திருந்தாள், நிமிடங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு யுகமாக நகர்ந்தன,

சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, ஐசியூவின் கதவுகள் மெல்லத் திறந்தன, ​டாக்டர் சிவகுமார் வெளியே வந்தபோது, அவரது முகம் வழக்கத்தை விட அதிகக் கவலையைச் சுமந்திருந்தது, அருவியும் தமிழினியும் பதற்றத்துடன் அவரை நோக்கி ஓடினர்,

​”டாக்டர் என் யாழிக்கு இப்போ எப்படி இருக்கு, அவ கண் முழிச்சுட்டாளா, நான் போய் பார்க்கலாமா” அருவியின் குரல் உற்சாகமாக இருந்தது, ​டாக்டர் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுவிட்டு, 

“மேடம் நீங்க கொஞ்சம் தைரியமா இருக்கணும், நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க” என்றார், 

அந்தத் தொடக்கமே அருவியின் அடிவயிற்றில் பயத்தை உண்டாக்கியது, ​அவர் ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்டை நீட்டினார், 

“குழந்தைக்குத் தலையில ஒரு ரேர் நியூரோ டிசாடர் இருக்கு, இது பிறக்கும் போதே இருந்திருக்கலாம், ஆனா இப்பதான் அது தீவிரம் அடைஞ்சிருக்கு, மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில ரத்தக் கசிவு ஏற்படத் தொடங்கியிருக்கு, 

இதை இப்போவே கவனிக்கலைனா குழந்தையை காப்பாத்துறது ரொம்பக் கஷ்டம்” ​அருவிக்குத் தலை சுற்றியது, 

“என்ன சொல்றீங்க டாக்டர், இதுக்குத் தீர்வே இல்லையா, எதுவானாலும் செய்யுங்க டாக்டர், என் உயிரை வேணும்னாலும் எடுத்துக்கோங்க” என்று கதறினாள்,

​”தீர்வு இருக்கு மேடம் ஆனா அது சாதாரண விஷயம் இல்லை, இதுக்கு ஒரு மேஜர் சர்ஜரி பண்ணனும், அமெரிக்காவில் இருந்து ஒரு ஸ்பெஷலிஸ்ட் டீம் வரணும், 

அவங்க கேக்குற மெடிக்கல் எக்யூப்மென்ட்ஸ், மெடிசின்ஸ், அப்புறம் இந்த ஆபரேஷன். எல்லாத்துக்கும் சேர்த்துச் சுமார் ஒரு கோடிக்கும் மேல செலவாகும், 

இது ஒரு அனுமானம் மட்டும் தான், பில் செட்டில் பண்ணும் போது  இன்னும் அதிகமாகவும் வாய்ப்பிருக்கு” என்று டாக்டர் தயக்கத்துடன் சொல்ல,

அந்தத் தொகையைக் கேட்டதும் அருவி அப்படியே நிலைகுலைந்து சரிந்தாள், ​ஒரு கோடி ரூபாயா, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அவளுக்கு அந்தத் தொகை என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒரு மலை,

​”ஒரு கோடியா டாக்டர், நான் எங்க போவேன் இந்த பணத்துக்கு, என் குழந்தைய உயிர் பிழைக்க வைக்க அவ்வளவு பணம் வேணுமா” என்று அருவி சுவரில் முட்டிக்கொண்டு அழத் தொடங்கினாள்,

​தமிழினிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. புதிதாக வேலை சேர்ந்து முதல் மாத சம்பாத்தியத்தை எதிர்பார்க்கும் ஒரு பெண்ணாகத் தானும், ஒரு சாதாரண வருமானத்தில் குடும்பம் நடத்தும் அருவியும் இவ்வளவு பெரிய தொகையை எப்படிக் கொண்டு வருவோம் என்று புரியாமல் தவித்தாள்,

​”டாக்டர் இன்னும் எவ்வளவு நாளில் ஆப்ரேஷன் பண்ணனும்” என்று தமிழினி கம்மிய குரலில் கேட்டாள்,

​”அதிகபட்சம் இன்னும் ஒரு வாரம் தான் மேடம், அதுக்குள்ள எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமா பணத்தை ரெடி பண்ணிடுங்க, 

உடனே ஆபரேஷன் பண்ணியாகணும். இல்லைன்னா ஐம் சாரி” என்று சொல்லிவிட்டு டாக்டர் அங்கிருந்து நகர்ந்தார்,

​அருவி அங்கேயே மண்டியிட்டு அமர்ந்து, ஐசியூ கதவைப் பார்த்து, 

“யாழி அம்மா உன்னை எப்படிக் காப்பாத்துவேன், உன்னைத் தொட்டுப் பார்க்கிறதுக்கு கூட எனக்குப் பணம் இல்லையேடி” என்று மாரடித்து அழுதாள்,

​அந்த நள்ளிரவில், மருத்துவமனையின் விளக்குகளுக்குக் கீழே ஒரு தாயின் அழுகுரல் அநாதையாக ஒலித்தது, 

அருவி இந்த மிகப்பெரிய தொகையை திரட்டி தன் உயிரினும் மேலான உயிரை காப்பாற்றுவாளா?

தொடர்ந்து வாசிப்போம் வாங்க 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page