கனவிலும் மன்னிக்க முடியாத கணங்கள், இங்கே
மறக்க முடியாத வலிகளைச் சுமந்து வாழுதே…!
உன்னில் சிறையாகிறேன் – 9
“எஸ்க்யூஸ் மீ சிஸ்டர், ஒரு நிமிஷம்,” என்று பரபரப்பாக இருந்த நர்ஸை அழைத்தாள் தமிழினி.
“உள்ள இருக்க எங்க குழந்தைக்கு என்னாச்சு? ஏன் டாக்டர்கள் உள்ள போறாங்க? குழந்தைக்கு ஒன்னும் இல்லல்ல,” என்று கலவரமாக கேட்டாள்.
“அந்த குழந்தைக்கு நீங்க என்ன வேணும்?” என்று நர்ஸ் கேட்க,
“நான் நான் அவளோட ரிலேஷன் தான், ஏன் கேட்கறீங்க? அவளுக்கு ஒன்னும் இல்லல்ல. எதுவா இருந்தாலுமா சொல்லுங்க ப்ளீஸ்” என்று நடுக்கத்தோடு கேட்டாள் தமிழினி.
“அப்போ உங்களுக்கு விஷயம் தெரியாதா? இன்னும் கொஞ்ச நேரத்துல குழந்தைக்கு ஆப்ரேஷன் நடக்கப் போகுது. அதான் டாக்டர்ஸ் வந்து செக் பண்ணிட்டு இருக்காங்க” என்று நர்ஸ் சொல்ல,
“ஆப்ரேஷனா, எனக்கு புரியல நாங்க இன்னும் பணமே கட்டலையே அப்புறம் எப்படி ஆப்ரேஷன் நடக்கும்” என்று தமிழினி அதீத குழப்பத்தில் கேட்க,
“நேற்றே காலையிலேயே ஆபரேஷனுக்கு தேவையான பணத்தை கட்டியாச்சு, ஸ்பெஷல் டாக்டர்ஸ் வர லேட்டாயிடுச்சு, இப்ப தான் எல்லாரும் வந்தாங்க,” என்ற பேரதிர்ச்சித் தகவலைத் தெரிந்து கொண்ட தமிழினிக்கு பேச்சே இன்றி திகைத்து நின்றாள்.
நேற்று காலையில் சென்ற அருவியே இன்னும் வரலை. இதற்கிடையில் நேற்றே பணம் கட்டியாச்சு. இன்னைக்கு ஆபரேஷன்னு சொல்றாங்களே, இது எப்படி சாத்தியம்?
கடந்த ஒருவார காலமாக இருந்த ஒரு கோடி ரூபாய் பணத்திற்க்கு என்ன செய்யப் போகிறோம் என்ற கலக்கம் மறைந்து, அருவிக்கு என்ன ஆனது, அவள் எப்படி? எங்கு? இருக்கிறாள்,
அவள் நலமாகத்தான் இருக்கிறாளா, அல்லது அவள் சொன்னது போல கிறுக்குத்தனமாக தனமாக எதையாவது செய்திருப்பாளா? இப்போது யாரிடம் கேட்பது, அவளை எங்கு சென்று தேடுவது என்ற பதற்றத்தில் இருந்தாள் தமிழினி.
அடுத்த சில நிமிடங்களில் யாழினியை ஸ்டெக்சரில் படுக்க வைத்து ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றனர். இதழ் விரியாத மலர் மொட்டைப் போல் கண் திறவாமல் இருந்தவளைக் காணவே வேதனையாக இருந்தது.
இந்நிலையில் குழந்தையை தனியாக விட்டுச் செல்லவும் முடியாமல், அருவியை தேடிச் செல்லவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்தாள் தமிழினி.
அறுவை சிகிச்சை அரங்கின் உள்ளே குழந்தையை அழைத்துச் சென்ற சிறிது நேரத்திலேயே வெளியே சிவப்பு விளக்கு ஒளிரச் செய்தது.
மூடப்பட்ட கதவையும் ஒளிரும் சிவப்பு மின் விளக்கையும் மாறி மாறி பார்த்தவளுக்கு தவிப்பும் பயமும் ஒருசேர கூடி இருந்தவளின் தோளில் ஒரு நடுங்கிய கரம் பதிய, வெடுக்கென திரும்பி பார்த்தாள், அதிர்ந்தாள் தமிழினி.
“அரு…வி அருவி” என்றவள் வாய் குளறியது. அவளுக்கு எதிரே நின்றவளின் கோலம் தமிழினிக்கு அதிர்ச்சியை கொடுக்க உறைந்து போனாள்.
விலையுயர்ந்த பட்டு சேலையுடுத்தி, கழுத்தில் புதுத்தாலிக் கொடி மின்ன தேவலோக மங்கையாக நின்றவளின் கண்களில் ஒளியில்லை. அதற்கு மாறாக அனைத்தையும் இழந்த வலிதான் மிகுதியாகத் தெரிந்தது.
அவளிடம் வார்த்தைகள் இல்லை; மௌனங்களே எஞ்சி இருந்தது. விம்மி வெடித்து அழ கண்ணீர் கூட இல்லாமல் வற்றிப் போக உணர்ச்சிகளற்ற வெறும் கூடாய் நின்றாள்.
தமிழ் அவளை கேள்விகளால் உலுக்கிக் கொண்டிருக்க, அவள் பதிலுரைக்கும் நிலையில் இல்லை.
“என்ன கோலம் இது, என்ன பண்ணிட்டு வந்திருக்க, இந்தக் கழுத்துல இருக்குற தாலிக்கு என்ன அர்த்தம் அருவி, பதில் சொல்லு அருவி” என்று கேட்டாள்.
அருவி எவ்வித சலனமுமின்றி அறுவை சிகிச்சை அறையின் கதவையே பார்த்துக் கொண்டிருந்தாள், அவளது மௌனம் தமிழினியின் ஆத்திரத்தை இன்னும் அதிகமாக்கியது,
”ஏதாவது பேசு அருவி, ஒரு கோடி ரூபாய்க்கு உன்னையே நீ வித்துட்டியா, யாரது இந்த நிலைமையில உன்னோட இந்த அவசரத்தைப் பயன்படுத்திக்கிட்ட அந்த ஜென்மம் யாரு,
இதுக்காகவா இத்தனை வருஷம் கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்த? சொல்லு, அருவி, உன் கல்யாணத்தைப் பத்தி பேசினாலே சண்டை போடுவியே. இப்ப ஏன்டி அவசரப்பட்ட?” என்று புலம்பி அழுதாள் தமிழினி.
அருவி மெல்லத் தலை நிமிர்ந்தாள், அவளது கண்களில் தெரிந்த வலி தமிழினியை ஒரு நிமிடம் நடுங்கச் செய்தது, மெதுவான, ஆனால் உறுதியான குரலில் அருவி பேசத் தொடங்கினாள்,
”அவரைப் பத்தி தப்பா பேசாதே தமிழ், அவர் ஒரு வியாபாரி, அவருக்குத் தேவை நான் எனக்குத் தேவை என் மகளோட உயிர்,
இங்கே சரி எது தப்பு எதுன்னு பேசுறது எல்லாம் பார்க்க நேரமில்ல ஐசியூ கதவுக்குப் பின்னாடி உயிருக்குப் போராடுற ஒரு குழந்தையோட தாய்க்கு, முன்னாடி எல்லாமே வெறும் வார்த்தைங்க தான் தமிழ்.”
“இருந்தாலும் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்க வேணாமே அருவி, வேற வழியே இல்லையா, நாம இன்னும் கொஞ்ச நேரம் பொறுமையா இருக்கலாமே” என்று அவள் முடிக்கும் முன்னரே,
”பொறுமையாயிருக்கவா, என் குழந்தை செத்த பிறகு நான் வச்சுக்கப் போற இந்த பொறுமை என்னை வாழ விடுமா தமிழ், என் யாழியோட ஒவ்வொரு மூச்சும் எனக்கு முக்கியம் தமிழ்,
அவ பிழைக்கணும்கிறதுக்காக நான் பிணமா மாறவும் தயார். இப்போ நான் கட்டியிருக்கிறது தாலி இல்ல தமிழ். என் மகளோட உயிரை காப்பாத்தின அஸ்திரம்,” என்று அருவி விரக்தியோடு சொல்ல,
தமிழினி பேச வார்த்தைகளின்றி அப்படியே தரைமண்ணில் சரிந்தாள், அருவி அவளது அருகில் அமர்ந்து தமிழினியின் கைகளைப் பற்றிக் கொண்டாள்,
”என்னை மன்னிச்சுடு தமிழ், உன்கிட்ட சொல்லிட்டுப் போயிருந்தா நீ என்னை தடுத்திருப்ப. ஆனா, என் மகளோட விதியை மாத்த எனக்கு முன்னாடி இருந்த ஒரே வழி இதுதான்,
ஒரு கோடி ரூபாய், அதுதான் என் மகளை காப்பாத்தும். அதை எப்படியாவது கொண்டு வந்து என் குழந்தையை காப்பாத்தணும். அதுக்காகத்தான் தான் இந்த முடிவையே எடுத்தேன், தமிழ்,” என்றாள் அருவி.
இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு அந்த மருத்துவமனை வராண்டாவில் அழுதனர், ஒருத்தி தியாகத்தின் வலியிலும், இன்னொருத்தி தோழியின் நிலையைக் கண்டும் தவித்தும் இருந்தனர்,
அறுவை சிகிச்சை அரங்கின் வாசலில் ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக நகர்ந்து கொண்டிருந்தது, அருவியின் கழுத்தில் இருந்த அந்தப் புதுத் தாலி அவளது மூச்சுக் குழாயை நெரிப்பது போல் இருந்தாலும்,
உள்ளே இருக்கும் தன் மகளுக்காக அந்த வலியையும் அவள் இன்முகத்தோடு சகித்துக் கொண்டாள்.
சுமார் நான்கு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அறுவை சிகிச்சை அறையின் முன் இருந்த சிகப்பு விளக்கு அணைந்தது, கதவுகள் மெல்லத் திறக்கப்பட்டன,
அருவியும் தமிழினியும் ஒருசேர எழுந்து ஓடினர், வெளியே வந்த தலைமை மருத்துவர், முகக்கவசத்தைக் கழற்றிவிட்டு ஒரு நிமிடம் ஆழ்ந்து மூச்சு விட்டார்,
”டாக்டர்… டாக்டர்… என் குழந்தை… என் யாழி எப்படி இருக்கா” என்ற அருவியின் குரலில் பயமும் ஒரு மெல்லிய நம்பிக்கையும் கலந்தே இருந்தது,
மருத்துவர் மெலிதாகப் புன்னகைத்தார்,
“கவலைப்படாதீங்க, மிஸஸ் அருவி. ஆபரேஷன் சக்சஸ். நீங்க சரியான நேரத்துக்குப் பணத்தைக் கட்டிட்டீங்க. அந்தச் சின்னக் குழந்தைக்கு இப்போ முழுசா சரி பண்ணிட்டோம். இன்னும் கொஞ்ச நேரத்துல அவளுக்கு நினைவு வந்திடும்,” என்ற டாக்டரின்
அந்த வார்த்தைகளைக் கேட்ட அடுத்த கணம், அருவி அப்படியே தமிழைக் கட்டிக் கொண்டாள் இத்தனை நாட்களாக அவளது நெஞ்சில் பாரமாய் இருந்த ஒரு பெரும் பாறை உருண்டு ஓடியது போன்ற உணர்வு,
”கேட்டியா தமிழ் என் யாழி பிழைச்சுட்டா, என் செல்லம் இனிமே நல்லா இருப்பா, அவளுக்கு ஒன்னும் ஆகாது” என்று
தமிழியை கட்டிக் கொண்டு கதறி அழுதாள், இது வலியில் வந்த கண்ணீர் அல்ல, வேதனையின் கோரப்பிடியில் இருந்து மீண்ட விடுதலையின் வெளிப்பாடு.
”நீ ஜெயிச்சுட்ட அருவி, உன் நல்ல மனசுக்கு தப்பா எதுவும் நடக்காது” என்று தமிழினி அவளைத் தேற்றினாள்,
சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த நிலையில் யாழினியை வார்டுக்கு மாற்றினார்கள், கண்ணாடிக் கூண்டுக்குள் படுத்திருந்த தன் மகளைப் பார்த்த போது,
அருவிக்கு எதுவுமே ஒரு பொருட்டாகவே தெரியவில்லை; அவளது மௌனமான புன்னகைக்கு முன்னால், தான் இழந்த தன்மானம் எல்லாம் தூசியாகத் தோன்றியது.
ஐசியூ வார்டின் மெல்லிய அமைதியில், மருத்துவ உபகரணங்களின் சீரான ‘பீப்’ சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது; அந்தச் சத்தம் இப்போது அருவியின் காதுகளுக்கு ஒரு சங்கீதம் போல ஒலித்தது.
அது அவளது மகளின் இதயம் துடிப்பதற்கான சாட்சி.
மருத்துவர் அனுமதி கொடுத்ததும், அருவியும் தமிழினியும் காலணிகளைக் கழற்றிவிட்டு, கிருமிநாசினி தெளித்துக்கொண்டு மெல்ல உள்ளே நுழைந்தனர்,
வெள்ளை நிற மெல்லிய போர்வையினுள், தேவதைக் குட்டியாய் யாழினி படுத்திருந்தாள், மருந்தின் வீரியத்தில் மூடியிருந்த அவளது இமைகள், இப்போது மெல்ல அதிர்ந்தன,
ஒரு வாரமாக அந்தத் தாய் தவம் கிடந்த அந்த வினாடி இதோ நிகழ்ந்தது.
யாழினி மெல்லக் கண்களைத் திறந்தாள். இன்னும் முழுமையாகத் தெளியாத பார்வையில் தன் தாயைத் தேடினாள்,
”யாழி குட்டி அம்மா இங்க இருக்கேன்டா” அருவியின் குரல் கம்மியது, அவளது கைகள் நடுங்கிக் கொண்டிருந்தது,
யாழினி தன் தாயின் குரலைக் கேட்டு, மெலிதாகத் தன் பிஞ்சு விரல்களை அசைத்தாள், அருகிலிருந்த தமிழினியைப் பார்த்து ஒரு மில்லி செகண்ட் யோசித்தவள்,
பின் அருவியைப் பார்த்து இதழ் விரிய ஒரு சிறு புன்னகையை உதிர்த்தாள். அந்தப் புன்னகையில் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான நிம்மதி ஒளிந்திருந்தது.
(நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் நம் சுவாசம் நமக்கானது அல்ல, நம் பிள்ளைகளுக்கானது.)
”அம்மா…” என்று மிக மெல்லிய குரலில் அவளது பிஞ்சு உதடுகள் முணுமுணுத்தன, தமிழினியின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டியது,
“அருவி, பாரு நம்ம பாப்பா பேசிட்டா, இனி அவளுக்கு எந்தக் குறையும் வராது,” என்று கூறிய தமிழினிக்கு கண்ணீர் வழிந்தாலும் கூட உதட்டில் ஒரு சிரிப்பும் படர்ந்தது.
அருவி குனிந்து யாழினியின் நெற்றியில் ஒரு நீண்ட முத்தத்தைப் பதித்தாள், அந்த முத்தத்தில் தன் மகளுக்காகத் தான் செய்த தியாகம், இனி வரப்போகும் போராட்டங்கள், தன்மான இழப்பு என அனைத்தும் கரைந்து போயின,
”இனிமே உனக்கு எந்த வலியும் இருக்காதுடா செல்லம். அம்மா உன்னைப் பார்த்துப்பேன்” என்று சொல்லி அவளது குட்டிக் கைகளைப் பற்றிக்கொண்டாள் அருவி,
தாயை விட ஒரு பெரிய சக்தியை இந்த உலகம் இதுவரை கண்டதுமில்லை காணப்போவதுமில்லை.
நம் நாயகன் இன்னும் வரவில்லை என்று எதிர்பார்பவர்களை ஏமாற்றாமல் நாளை வருவானா? (அக்னியன் எ அக்னி)
தொடர்ந்து வாசிப்போம், வாங்க.
