உயிராக வந்த உறவு – அத்தியாயம் 11

மறுபக்கம் அலுவலகத்தின் மேல் மாடி கண்ணாடி அறையில் நின்று கொண்டிருந்த அர்ச்சனா, கீழே பரபரப்பாக இயங்கும் ஊழியர்களை பார்க்க, அவள் பார்வை அங்கு இருந்தாலும் அவள் நினைவு என்னமோ தனது வாழ்க்கையைத் தான் யோசித்துக் கொண்டு இருந்தாள்.

 சில மாதங்களுக்கு முன் வரை எல்லாம் அவள் திட்டமிட்டபடியே சென்றது.தீரன் அவளின் பக்கம் வந்த நிலையில் திருமணம் பேசப்பட்ட இரு குடும்பங்களும் சம்மதம் தெரிவித்த நேரத்தில் திருமண ஏற்பாடுகள் எல்லாம் நல்லபடியாக தான் நடந்து கொண்டிருந்தது.

பெரிய தொழிலதிபரின் மகளாக வளர்ந்த அவளுக்கு “இழப்பு” என்ற வார்த்தையே தெரியாது.அவள் விரும்பியது அவளுடையது, அவள் தேர்ந்தெடுத்தவன் அவளுக்கே சொந்தம் என்ற உரிமை உணர்ச்சியோடு வாழ்ந்தவள். ஆனால் இப்போது அந்த உறுதியின் நடுவே ஒரு பெயர் மீண்டும் ஒலித்தது அது தாரணி. அந்தப் பெயர் அவள் வாழ்க்கையில் மறக்க வேண்டும் என்று நினைத்த பெயர் அவன் வாழ்க்கையில் இருந்து சென்றுவிட்ட அந்த பெயர் மீண்டும் கேட்டதும் அவளுக்கு ஆத்திரம் தாங்கவில்லை.

தாரணி நேர்காணலுக்கு வந்த அந்த நாளிலிருந்து தீரன் கண்களில் ஒரு மாறுபாடு அர்ச்சனா கண்ணுக்கு தெரிந்தது.அது வெளிப்படையான காதல் அல்ல, ஆனால் மறைக்கப்பட்ட நினைவுகளின் ஒளி. அந்த ஒளிதான் அர்ச்சனாவுக்கு பயமாக இருந்தது. “அவள் வாழ்க்கையிலிருந்து ஒழிந்துவிட்டாள்” என்று நம்பியிருந்த இடத்தில், மீண்டும் அவள் நிழல் நுழைந்துவிட்டதே என்ற சிந்தனை அர்ச்சனாவின் அகந்தையை குத்தியது. 

பணம் இருந்தால் மனிதர்களையும் சூழ்நிலைகளையும் நகர்த்த முடியும் என்று நம்பியவள்.பதவி உயர்வு, அதிக சம்பளம், வேறு  எந்த வழியிலாவது தாரணியை விலக்க முடியும் என கணக்கிட்டாள். அவள் சிரிப்பு அழகாக இருந்தது, ஆனால் அதில் கருணை இல்லை, அது சொந்தத்தை காக்கும் போரின் முன்சிரிப்பு. “தீரன் என்னோடவன் தான்” என்று கண்ணாடியில் தன்னையே பார்த்து மெதுவாக சொன்னாள் அவள். 

ஆனால் அவள் உள்ளுக்குள் ஒப்புக்கொள்ளத் தயங்கிய உண்மை ஒன்று இருந்தது . தாரணி பணக்காரி அல்ல, ஆனால் தீரனின் கடந்த காலம் அவளோடு இருந்தது. அந்த நினைவுகளை பணத்தால் வாங்க முடியாது. அவர்கள் இரண்டு பேருக்கும் இடையே இருந்த அழகான காதல் அர்ச்சனா விற்கு நன்றாகவே தெரியும்.அந்த உணர்வே அர்ச்சனாவின் அகந்தையை தீயாக மாற்றியது, அந்த அகந்தையில் கருகுவது யார் என்று பார்ப்போம்..

அர்ச்சனா தீரனை சாதாரண விருப்பமாக அல்ல, உயிருக்கு உயிராகவே நேசித்தாள்; அவன் சிரிப்பு அவளுக்கு நிம்மதி, அவன் கோபம் கூட அவளுக்கு கவலை, அவன் வெற்றி அவளுக்கு பெருமை. ஆனால் அந்த காதலின் உள்ளே ஒரு மறைமுகமான அகந்தை வளர்ந்து கொண்டிருந்தது. பெரிய செல்வந்த குடும்பத்தில் வளர்ந்த அவளுக்கு வாழ்க்கை முழுக்க கிடைத்த பாடம் ஒன்று “பணம் இருந்தால் எல்லாம் சாத்தியம்.” அவள் விரும்பிய கார், அவள் விரும்பிய வீடு, அவள் விரும்பிய பதவி… எல்லாம் பணத்தின் வலிமையால் அவள் முன் வணங்கின. 

அதே பழக்கமே தீரனிடமும் தெரியாமல் வெளிப்பட்டது.அவனை சமமாக நின்று காதலிக்காமல், அவன் தன்னை வணங்க வேண்டும், தன் உலகத்துக்குள் நுழைந்து தன் உயரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாள். 

அவள் ஆசைப்பட்டது எல்லாம் அம்மா இல்லாத பெண் என்று அர்ச்சனாவின் அப்பா முன் நின்று நடத்தி வைப்பார். அது நல்லதோ கெட்டதோ என்றெல்லாம் ஆராய மாட்டார் தன் மகள் கேட்டால் கிடைக்கும் அவ்வளவுதான் என்ற குணமுடையவர் தான் அவரும். தன் அப்பாவிடம் அழுது காரியத்தை சாதிக்கும் பெண் அர்ச்சனா. அப்படி அழுது வாங்கிய பொருள் தான் தீரன்..

அது தீய நோக்கம் அல்ல, அது அவளுக்குத் தெரிந்த ஒரே வழி. காதலை கூட ஒரு முதலீடாக, உறவை கூட ஒரு வெற்றியாக பார்க்கக் கற்ற மனம். தீரன் தன்னிடம் நின்று “நான் உன்னை தேர்வு செய்கிறேன்” என்று சொல்ல வேண்டும் என்பதற்குப் பதிலாக, “நான் நீ இல்லாமல் இருக்க முடியாது” என்று சொல்ல வேண்டும் என்பதே அவளின் ஆசை. அவன் தன்னுடன் இணைவது அவளின் விருப்பம்,ஆனால் அவன் தன்னிடம் சாய்ந்து நிற்பது அவளின் அகந்தை.

ஆனால் தீரனும் சிறுவயதில் இருந்த கஷ்டப்பட்டவன் என்பதால் தனக்கு ஒரு பணக்கார வாழ்க்கை வேண்டும் என்று நான் அர்ச்சனாவை தேர்ந்தெடுத்தான். 

அதற்காக இவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வருபவனும் அவன் அல்ல,தன் அப்பா கம்பெனியில் வேலை வாங்கிக் கொடுத்த தனக்கு அடிமையாக அவனை வைக்க வேண்டும் என்ற திட்டம் அவனுக்கு நன்றாக புரிந்தது.அதனால் அதிலிருந்து உடனடியாக வெளியே வந்து வேறு ஒரு நல்ல கம்பெனியில் அவன் சொந்த முயற்சியில் வேலை செய்கிறான். எங்கு இருந்தாலும் தீரனை கண்காணிப்பாள் அர்ச்சனா என்று அவனுக்கு தெரியும்.

காதலை விட பணம் தான் முக்கியம் என்று நினைக்கும் அர்ச்சனா, எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் காதல் முக்கியம் என ஒரு காலத்தில் நினைக்கும் தாரணி..இவர்கள் இரண்டு பேருக்கும் இடையில் தீரன் மாட்டிக் கொண்டு அவன் எடுக்கும் முடிவு பார்க்கலாம்..

தீரன் நாற்காலியில் சாய்ந்த படி கடந்த காலத்தை நினைத்தான்..

கல்லூரி வளாகத்தில் அந்த காலை வேறு மாதிரி இருக்க,ஜூன் மாத மழை நின்று காற்றில் மண்ணின் வாசனை கலந்திருந்தது. பழைய கட்டிடத்தின் சிவப்பு சுவர்கள், பசுமையாக நனைந்த மரங்கள், புதிதாக வந்த மாணவர்களின் பரபரப்பு,அந்த சூழ்நிலையில் தான் தீரன் முதன் முறையாக தாரணியை பார்த்தான். அவனும் புதிதாக வந்த மாணவன் தான் ஆனால் பார்ப்பதற்கு அவள் அப்படி இருக்க மாட்டான்.

ஆறடி உயரம், நேராக நிமிர்ந்து நிற்கும் உடல் அமைப்பு, பரந்த தோள்கள்… வெறும் உயரம் மட்டும் இல்லை, அவன் நடையிலேயே ஒரு உறுதி இருந்தது. வெள்ளை சட்டையும் ஜீன்ஸும் போட்டிருந்தாலும் அது சாதாரண உடையாய் தோன்றாது,அவன் அணிந்தால் அது ஒரு ஸ்டைலாக மாறும். அவன் முகத்தில் எப்போதும் ஒரு அமைதியான கவனம்,சிரிக்கும் போது கன்னத்தில் சற்று தெரியும் அந்த குழி, பலரின் கவனத்தை கவர்ந்துவிடும். கருப்பாக அல்ல, வெளிர் நிறமோ அல்ல ஒரு தங்கம் கலந்த கோதுமை நிறம், வெயிலில் மின்னும்.அவன் கண்கள் தான் அவன் மிகப்பெரிய கவர்ச்சி.

அனைவரும் முதல் நாள் தங்கள் வகுப்பறையை தேடி அதில் அமர்ந்திருக்க, அந்த நாளில் தீரன் உள்ளம் ஒரு புதிய துடிப்பை உணர்ந்தது.

வகுப்பு அறையின் கதவு அருகே நின்றிருந்தாள் அவள். லேசான நீல நிற சுடிதார், வெள்ளை துப்பட்டா காற்றில் மெதுவாக அசைந்தது. அவள் தலைமுடி முழுக்க நீளமாக விழுந்து, ஒரு பக்கமாக கிளிப் வைத்திருந்தது. அவள் கண்கள் சற்று பயத்துடனும் சுற்றி பார்த்துக் கொண்டிருந்தன; 

புதிய இடம், புதிய மனிதர்கள், புதிய உலகம். அவள் உதடுகள் எதையோ மெதுவாக பேசிக்கொண்டிருந்தது.ஒரு தோழியிடம் “தன் டிபார்ட்மெண்ட் பெயரை சொல்லி கேட்க ?” அந்த தயக்கம் கலந்த சிரிப்பு… அதுதான் தீரனின் கவனத்தை பிடித்தது.

அவன் முதலில் அவளின் முகத்தை பார்த்தான். பிறகு மீண்டும் பார்த்தான். அவன் பார்வை அவளின் புருவங்களில் நின்றது.சற்று வளைந்து, அவள் கண்களின் வெளிச்சத்தை மேலும் அழகாக்கும் அளவில். அவள் பேசும்போது அவள் இதழ்கள் மெதுவாக அசைய அந்த அசைவில் அவன் மனம் நின்றது.

 “யார் இவள்?” என்ற கேள்வி அவன் உள்ளத்தில் எழ,அது சாதாரண ஆர்வம் இல்லை,காரணமே தெரியாமல் ஒருவரை நோக்கி இழுக்கப்படும் அந்த முதல் உணர்வு.

அந்த நேரத்தில் காற்று சற்றே பலமாக வீச, வகுப்பறைக்குள் வந்ததும் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து இருந்த தாரணி துப்பட்டா பறந்து அவள் முகத்தை மூட அவள் சிரித்தபடி அதை சரிசெய்ய அந்த சிறிய தருணம் தீரனுக்கு ஒரு கவிதை போல தோன்றியது. உலகம் முழுக்க சத்தம் இருந்தாலும், அவன் காதில் ஒலித்தது அவள் சிரிப்பின் சத்தம் மட்டும். அவள் அவனை கவனிக்கவில்லை; ஆனால் அவன் அவளை முழுவதும் கவனித்துக்கொண்டிருந்தான்.

 

அதன் பிறகு அனைவரும் வகுப்பறை முடிந்து மதிய உணவு நேரத்தில் கேண்டினில் தனக்கு பிடித்த உணவுகளை சாப்பிட்டு கொண்டு இருக்க,சிலர் கையில் இரண்டு புக்கை வைத்தபடி அங்கேயும் இங்கேயும் புதிதாக வந்த மாணவிகளை பார்த்துக் கொண்டு இருக்க,

தாரணிகள் தன் தோழியுடன் சென்று கொண்டிருக்கும் போது கையில் இருந்த புத்தகங்கள் கீழே விழ,அவள் குனிந்து எடுக்க முயன்ற போது, தீரன் முன்னே வந்து ஒன்றை எடுத்துக் கொடுத்தான். அவள் முதன் முறையாக அவனை நேராக பார்த்தாள். அந்த கண்கள்… ஒரு நொடி நேரம். ஆனால் அந்த நொடி அவன் வாழ்க்கையில் நீளமான நினைவாக மாறிவிட்டது. “Thank you…” என்ற அவள் மென்மையான குரல், அவன் இதயத்தில் நேராக பதிந்தது. அவன் சிரித்தபடி“Welcome…” என்றான். 

சாதாரண உரையாடல். ஆனால் அந்த நிமிடத்தில் இருவருக்கும் தெரியாமல் ஒரு அழகான காதல் கதை ஆரம்பித்துவிட்டது.

அன்று மாலை முழுக்க அவன் மனதில் அவள் முகமே சுற்றிக் கொண்டிருந்தது. அவள் சிரிப்பு, அவள் கண்களின் அமைதி, அவள் பேசும் போது வரும் அந்த மென்மை அனைத்தும் அவனை ஒரு இனிய குழப்பத்தில் ஆழ்த்த

அது காதலா என்று அவனுக்கே தெரியவில்லை; ஆனால் அந்த முதல் பார்வை அவன் மனதில் ஒரு வித விதை போல் விழுந்தது. அந்த விதை பின்னர் எவ்வளவு பெரிய மரமாக வளரும் என்று அப்போது யாருக்கும் தெரியாது.

அந்த கல்லூரி வளாகம் பல கதைகளை பார்த்திருக்கும்; ஆனால் அந்த நாள் மரங்களுக்குள் காற்று சொன்ன ரகசியம் ஒன்றே தீரனின் வாழ்க்கையில் ஒரு பெயர் புதிதாக எழுதப்பட்டது அது தாரணி.

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
உயிராக வந்த உறவு
785 10 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page