உயிராக வந்த உறவு – அத்தியாயம் 20
நாட்கள் செல்ல அலுவலகத்தில் வேலை முடிந்து அனைவரும் மெதுவாக கிளம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் தாரணி மட்டும் இன்னும் தனது மேசையில் அமைதியாக அமர்ந்திருந்தாள். கணினி திரை முன்னால் இருந்தாலும் அவள் பார்வை அதில் இல்லை. மனம் மட்டும் பல எண்ணங்களில் சிக்கிக் கொண்டிருந்தது.
அர்ச்சனா சொன்ன வார்த்தைகள் இன்னும் அவள் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.
“தீரன் இப்போ என் பக்கத்துல இருக்கான்…”அந்த ஒரு வாக்கியம் அவளது மனதை மீண்டும் மீண்டும் கிழித்துக் கொண்டே இருந்தது.
தாரணி மெதுவாக கண்களை மூடி ஆழமாக மூச்சை விட்டாள்.
“இதெல்லாம் தேவையில்லாத வலி…”
என்று அவள் மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.
மூன்று வருடங்களுக்கு முன்பு அவள் எடுத்த முடிவை மீண்டும் நினைத்தாள்.
அவன் வாழ்க்கையில் இருந்து விலகி சென்றது அவளே.அப்போது எடுத்த முடிவு சரிதான் என்று அவள் தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டாள்.
இப்போவும் அதே தூரம் தான் நல்லது…
என்று மனதில் சொல்லிக்கொண்டாள்.
அந்த நேரத்தில் அவள் பார்வை தனக்கு தெரியாமல் தீரன் இருக்கும் அறையை நோக்கி சென்றது.அந்த கதவு இன்னும் மூடியே இருந்தது.அவன் இல்லாத அந்த அறையை பார்த்தவுடன் அவளது இதயம் மீண்டும் வலித்தது.ஒரு காலத்தில் அவளுக்காக உருகியவன் இப்போது வேறொருவரின் அருகில் இருப்பான் என்று நினைத்ததும் அவள் மனம் உடைந்து போனது.தாரணி திடீரென்று எழுந்தாள்.அவள் கண்களில் ஒரு தீர்மானம்.“இங்க நான் இருக்கக்கூடாது…”என சொல்லிஅவள் மெதுவாக தன் பையை எடுத்தாள்.
பிறகு கணினியை அணைத்துவிட்டு ஒரு வெற்று காகிதத்தை எடுத்தாள்.
சில நொடிகள் பேனாவை கையில் பிடித்தபடி அவள் யோசித்தாள்.
அந்த காகிதத்தில் என்ன எழுதப் போகிறாள் என்பது அவளுக்கே தெரியும்.ராஜினாமா கடிதம்.
அவள் மெதுவாக எழுத ஆரம்பித்தாள்.
ஒவ்வொரு எழுத்தும் அவளது இதயத்தில் இருந்து கிழித்து எடுக்கப்பட்ட மாதிரி இருந்தது.
“நான் தனிப்பட்ட காரணங்களால் இந்த வேலையில் இருந்து விலக விரும்புகிறேன்…”என்று எழுதிக்கொண்டிருந்தபோது அவளது கண்களில் கண்ணீர் வழிந்தது.
ஆனால் அவள் அதை துடைத்துவிட்டு எழுதிக் கொண்டே இருந்தாள்.
சில நிமிடங்களில் அந்த கடிதம் முடிந்தது.அவள் அதை மடித்து ஒரு கவரில் வைத்தாள்.அதை தீரனின் மேசையில் வைக்க வேண்டும்.
அதற்காக அவள் மெதுவாக அவன் அறை கதவிற்கு நடந்தாள்.அவள் கை கதவு கைப்பிடியை தொட்ட நொடியில் அவள் மனதில் ஏதோ ஒரு நினைவு வந்தது.
ஆனால் இந்த முறை அவள் கண்ணீரை அடக்கிக் கொண்டு கதவை திறந்தாள்.
அறை அமைதியாக இருந்தது.
அவள் மெதுவாக உள்ளே சென்று அந்த கடிதத்தை அவன் மேசையின் மீது வைத்தாள்.சில நொடிகள் அவள் அங்கேயே நின்றாள்.அவள் பார்வை அந்த நாற்காலியை பார்த்தது.ஆனால் மனம் முழுக்க வலியோடு நின்றாள்
இரண்டு பேருக்கும் இடையே தூரம் என்பது இல்லாமல் இருந்தது ஒரு காலத்தில்..அதேவன் இப்போது அவளுக்கு இவ்வளவு தூரம்.
“இது தான் சரி…”என்று அவள் மெதுவாக சொல்லிக்கொண்டாள்.பிறகு திரும்பி கதவின் அருகே சென்றாள்.அந்த அறையை விட்டு வெளியேறும்போது அவள் மனதில் ஒரு உணர்வு.
இந்த கதவை மீண்டும் திறந்து உள்ளே வர மாட்டேன் என நினைத்துஅவள் மெதுவாக வெளியே வந்து கதவை மூடினாள்.
அந்த நேரத்தில்,அலுவலகத்தின் வெளியே ஒரு கார் வந்து நின்றது.
அதில் இருந்து தீரன் அவசரமாக இறங்கினான்.அவன் நேராக அலுவலகத்திற்குள் நடந்தான்.
அவனுக்கு தெரியவில்லை…
அவன் மேசையின் மீது இப்போது ஒரு கவரில் கிடப்பது
தாரணியின் ராஜினாமா கடிதம்.
அந்த கடிதத்தை மேலாளரிடம் கொடுத்து விட்டு வெளியே வர முயன்ற போது…
அதே நேரத்தில் அலுவலக கதவு திறந்து தீரன் உள்ளே வந்தான்.தாரணியை பார்த்ததும் அவன் சற்றே ஆச்சரியப்பட்டான்.
“தாரணி… ஒரு நிமிஷம்…” என்று அவளை அழைத்தான்.
தாரணி நின்றாலும், அவன் முகத்தை பார்க்கவில்லை.நான் இப்போ பேச முடியாது சார்… என்று அமைதியாக சொன்னாள்.”நீ என்னை தவறாக புரிந்து கொண்டிருக்கிறாய்…” என்று தீரன் மெதுவாக சொன்னான்.
அப்போது தாரணி சிரித்தாள்… ஆனால் அந்த சிரிப்பில் வலி இருந்தது.
“நான் எதையும் தவறாக புரிஞ்சுக்கல சார்… எல்லாமே தெளிவா பார்த்துட்டேன்…”என சொல்லி அவள் ராஜினாமா கடிதத்தை அவன் கையில் கொடுத்தாள்.
தீரன் அதிர்ச்சியுடன் அவளை பார்த்தான்.
“இது என்ன தாரணி…?”
“இது தான் நல்லது… உங்களுக்கும்… எனக்கும்…” என்று சொல்லி திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.
அந்த நேரத்தில் தீரன் சத்தமாக சொன்னான்…
“அர்ச்சனா என் மனைவியாக போறாள் தாரணி…!”என்று சொல்ல
அந்த வார்த்தை கேட்டவுடன் தாரணி திடீரென நின்றாள்.அவள் மெதுவாக திரும்பி தீரனை பார்த்தாள்.
அவள் கண்களில் குழப்பம்…இதெல்லாம் என்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என சொன்னாள்
இல்ல நீ தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் ஒன்னு இருக்கு என அவன் ஆரம்பித்தான்..
மறுபக்கம் மருத்துவமனையில் சில நாட்கள் சிகிச்சை பெற்ற பிறகு அர்ச்சனா டிஸ்சார்ஜ் ஆனாள்.ஆனால் அவள் மனதில் ஒரு விஷயம் மட்டும் எரிந்து கொண்டே இருந்தது…
தாரணி.”என் வாழ்க்கையில எல்லாம் கெடச்சதுக்கு காரணம் அவ தான்…” என்று அவள் கோபமாக நினைத்துக் கொண்டாள்.அதே நேரத்தில் அலுவலகத்தில் தாரணி தனது வேலைக்கு ராஜினாமா கொடுத்து வெளியே வர தயாராக இருந்தாள்.
அவள் மனம் உடைந்திருந்தது.
“இங்க இருந்து போயிட்டா எல்லாம் மறந்து போயிடும்…” என்று நினைத்துக் கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியே நடந்தாள்.
அலுவலகம் வெளியே காரில் உட்கார்ந்து கொண்டிருந்தாள் அர்ச்சனா.
அவள் கண்கள் முழுக்க கோபம்.
“இன்று தான் முடிவு… இன்று தாரணி உயிரோட இருக்கக் கூடாது…” என்று அவள் மனதில் தீர்மானித்தாள்.
தாரணி மெதுவாக சாலையை கடக்க முயன்றபோது அந்த நேரத்தில்
அர்ச்சனா காரை ஸ்டார்ட் செய்தாள்.
அவள் கண்களில் ஒரு பயங்கரமான தீர்மானம்.
“போய் விடு தாரணி… என் வாழ்க்கையிலிருந்து என்றும்…” என்று சொல்லி காரை வேகமாக தாரணியின்
பக்கம் ஓட்டினாள்.திடீரென்று அங்கிருந்த ஒருவர் கத்தினார்…
“தாரணி… கவனமா…!”
அந்த சத்தம் கேட்டதும் தாரணி திரும்பிப் பார்த்தாள்.அதே நேரத்தில் ஒரு கையை பிடித்து அவளை இழுத்து பக்கத்துக்கு தள்ளினான்…
தீரன்.
கார் வேகமாக வந்து அருகில் நிற்கும் சுவரில் மோதி நின்றது.
அர்ச்சனா அதிர்ச்சியில் காருக்குள் உட்கார்ந்திருந்தாள்.தாரணி நடுங்கிக் கொண்டிருந்தாள்.தீரன் கோபமாக அர்ச்சனாவை பார்த்தான்.
“நீ என்ன பண்ணப் போனே அர்ச்சனா…?”என கேட்க
அர்ச்சனா சிரித்தபடி,”அவ உயிரோட இருந்தா தான் உனக்கு சந்தோஷமா இருக்கும் இல்ல… அதான், அவளை கொலை பண்ண போறேன்…!”என சொல்ல
அதை கேட்டதும் தாரணி அதிர்ச்சியில் தீரனை பார்த்தாள்.இப்போது தான் அவளுக்கு புரிய ஆரம்பித்தது…
தீரன் மற்றும் அர்ச்சனாவின் திருமணம் இரண்டு பெரிய குடும்பங்களின் ஒப்புதலுடன் நிச்சயிக்கப்பட்டது. எல்லா ஏற்பாடுகளும் முடிந்து, திருமண நாள் கூட பேசப்பட்டு விட்டது. ஆனால் அந்த நேரத்தில் தீரன் மனதில் ஒரு குழப்பம் இருந்தது. திருமணம் என்பது ஒரு பெரிய முடிவு; தன்னால் உண்மையாக அந்த வாழ்க்கையை ஏற்க முடிகிறதா என்று அவன் யோசித்தான். அதனால் அவன் திடீரென ஒரு முடிவு எடுத்தான். “இப்போதே திருமணம் வேண்டாம்… கொஞ்சம் காலம் தள்ளிப் போடலாம்” என்று வீட்டாரிடம் சொன்னான். காரணமாக அவன் தனது வேலை, புதிய திட்டம், வெளிநாட்டு வாய்ப்பு போன்றவற்றை முன் வைத்து, இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று கூறினான்.
ஆனால் அந்த முடிவின் பின்னால் வேறு யாரும் இல்லை; அது முழுக்க முழுக்க தீரனின் மனதில் ஏற்பட்ட தயக்கம் தான்.
அதே நேரத்தில், அந்த காலகட்டத்தில் தாரணி தீரன் வேலை செய்த அலுவலகத்தில் சேர்ந்திருந்தாள். அவள் நேர்மையாகவும் அமைதியாகவும் வேலை செய்ததால், பலர் அவளை பாராட்ட ஆரம்பித்தார்கள். இதை பார்த்த அர்ச்சனாவின் மனதில் சந்தேகம் தோன்றியது.
“தீரன் திருமணத்தை தள்ளி வைத்தது இந்த தாரணியால்தான்…” என்று அவள் மனதில் முடிவு செய்து கொண்டாள்.
அந்த நாள் முதல் தாரணியை அவள் வேறு கண்களால் பார்க்க ஆரம்பித்தாள்.
வெளியில் சிரித்து பேசினாலும், உள்ளுக்குள் தாரணியை வெறுக்க ஆரம்பித்தாள்.அந்த வெறுப்பு தினமும் தினமும் வளர்ந்து, ஒரு நாள் அது பகை மற்றும் சதித் திட்டமாக மாறியது.அர்ச்சனாவுக்கு ஒரே எண்ணம் மட்டும் தோன்றியது…
“என் வாழ்க்கை கெட காரணம் அவள் தான்… அவள் இல்லாதா தான் எல்லாம் சரியாகும்…”என நினைத்தாள்
அந்த எண்ணமே அவளை ஒரு பயங்கரமான முடிவின் பாதைக்கு இழுத்துச் சென்றது… அந்த இடத்தில் மூவரும் நின்றிருந்தார்கள்.
அர்ச்சனாவின் கண்களில் இன்னும் கொந்தளிப்பு. கையில் இருந்த கத்தி மின்னியது.
“இப்போ சொல்லு தாரணி… நீ தீரனை ஏமாத்திட்டு இன்னும் அவன் வாழ்க்கைக்குள்ள வர நினைக்கிறியா…?” என்று அர்ச்சனா சீறினாள்.
தீரன் அமைதியாக தாரணியை பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கண்களில் கேள்வி… கோபம்… வேதனை… எல்லாமே கலந்திருந்தது.
அந்த பார்வை தாரணிக்கு தாங்க முடியவில்லை.ஒரு கணம் அவள் கண்களை மூட,பிறகு திடீரென்று தலை நிமிர்ந்து பார்த்தாள்.
“ஆமாம்… நான் ஏமாத்தினேன்…” என்று அவள் அதிரும் குரலில் சொன்னாள்.
“என்ன…?” என்று தீரன் அதிர்ச்சியுடன் கேட்டான்.
“ஆமாம் தீரன்… உனக்கும் எனக்கும் இப்போ எந்த சம்பந்தமும் இல்லை. நான் ஏற்கனவே கல்யாணம் ஆயிட்டேன்… எனக்கு ஒரு குழந்தையும் இருக்கு.”
அந்த வார்த்தை காற்றை கிழித்தது போல அங்கே விழுந்தது.
தீரன் அந்த இடத்திலேயே உறைந்து நின்றான்.“தாரணி… என்ன பேசுறே நீ…?” அவன் குரல் மெதுவாக இருந்தாலும் அதில் அதிர்ச்சி தெளிவாக இருந்தது.ஆனால் தாரணி அவனை நேராக பார்க்கவில்லை.அவள் பார்வை நேராக அர்ச்சனாவைத் தான் பார்த்தது.
“இப்போ உனக்கு சந்தோஷமா…?” என்று அவள் கேட்க
“நீ எப்போமே நினைச்சது நடந்துடுச்சு. தீரன் வாழ்க்கையில் நான் இல்லை. நான் என் வாழ்க்கையை பார்த்துட்டேன்.”
அர்ச்சனா ஒரு கணம் குழம்பினாள். ஆனாலும் அவள் சிரித்தாள். இது எல்லாம் உன் வாயில இருந்து வரணும் தானா இப்படி பண்ணினேன்..
“அடா… இதுக்கு தான் இவ்வளவு நாடகம்…? நீ கல்யாணம் ஆயிட்டேன்னு முன்பே சொல்லியிருக்கலாமே.”
தாரணி அந்த வார்த்தையை கேட்டதும் கண்களில் கண்ணீர் மிளிர்ந்தது. ஆனால் அவள் அதை மறைத்தாள்.
“என் வாழ்க்கையை யாருக்காவது விளக்கணும் என்று நான் நினைக்கல.”
பிறகு மெதுவாக சொன்னாள்.
“இந்த வேலைக்கு நான் வந்ததே என் குழந்தைக்காக தான். அவன் நல்லா படிக்கணும்… நல்ல வாழ்க்கை இருக்கணும்… அதுக்காக தான்.”
தீரன் அந்த வார்த்தையை கேட்டதும் உள்ளே ஏதோ உடைந்தது போல உணர்ந்தான்.
“அப்படின்னா… நம்ம காதல்…?” என்று அவன் மெதுவாக கேட்டான்.
தாரணி அந்த கேள்வியை கேட்டு ஒரு கணம் நடுங்கினாள்.ஆனால் அடுத்த நொடியில் அவள் சிரித்தாள்.
“அது எல்லாம் கல்லூரி வயசு தீரன்… அந்த வயசுல எல்லாரும் பண்ணும் பைத்தியம் தான் காதல்” என சொல்ல
அந்த வார்த்தை தீரனின் இதயத்தை நேராக குத்தியது.அவன் கண்ணில் கோபம் மின்ன
அர்ச்சனா அந்த காட்சியை பார்த்து உள்ளுக்குள் சந்தோஷப்பட்டாள்.
தாரணி திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.
அவள் இரண்டு அடிகள் நடந்த பிறகு திடீரென்று நின்றாள்.
திரும்பி பார்க்காமல் சொன்னாள் .
“இனிமேல் என் வாழ்க்கையிலும்… என் குழந்தை வாழ்க்கையிலும்… யாரும் வர வேண்டாம்.”என்றாள்
“என் மனதில் நீங்களும் இல்லை… உங்கள் நினைவுகளும் இல்லை.”
அதை சொல்லிவிட்டு அவள் மெதுவாக அந்த இருளில் நடந்து போனாள்.
தீரன் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.அவள் சொன்ன “குழந்தை” என்ற ஒரு வார்த்தை அவன் மனதில் மறு முறை ஒலித்துக் கொண்டே இருந்தது.ஆனால் அவனுக்கே தெரியாமல் அவன் மனதில் ஒரு கேள்வி எழுந்தது
“தாரணி உண்மையிலேயே கல்யாணம் ஆயிட்டாளா…?அல்லது… இன்னும் ஏதோ மறைக்கிறாளா…?”
மறுபக்கம்…
அர்ச்சனாவின் கண்களில் ஒரு புதிய சந்தேகம் மின்னியது.
