அன்று தாரணியின் வீட்டில் ஒரு கனமான அமைதி நிலவியது. ஆனால் அந்த அமைதிக்குள் ஒரு தாயின் இதயம் மட்டும் உடைந்து கொண்டிருந்தது.
“என் குழந்தை… என் குழந்தை எங்கே…?”என்று மீண்டும் மீண்டும் அழுதபடி தாரணி வீட்டின் எல்லா மூலையையும் பார்த்தாள். ஏற்கனவே பலமுறை பார்த்த இடங்களையே மீண்டும் பார்த்தாள். கதவைத் திறந்து வெளியில் ஓடிப் பார்த்தாள். தெருவில் யாராவது குழந்தையை பார்த்திருக்கிறார்களா என்று கேட்டாள். ஆனால் எங்கும் பதில் இல்லை.
அவள் கைகள் நடுங்கின. கண்கள் சிவந்துவிட்டது. கண்ணீர் தடுக்காமல் வழிந்தது.
அந்த நேரத்தில் நிஷா அவளை பிடித்து உட்கார வைத்து “போலீஸ்ல போய் கம்ப்ளைன்ட் பண்ணலாமா?” என கேட்கவும்
அவளோ அழுது கொண்டே இருந்தாள்.
“தாரணி… கொஞ்சம் அமைதியா இரு…” என்று மெதுவாக சொன்னாள்.
ஆனால் அவள் அந்த வார்த்தையை கேட்கவே இல்லை.
“நிஷா… என் குழந்தைக்கு ஏதாவது ஆகிட்டா என்ன செய்வேன்…?” என்று அவள் கதறி அழுதாள்.அந்த குரலில் ஒரு தாயின் உயிர் முழுவதும் இருந்தது.அதை பார்த்து
நிஷாவுக்கும் கண்களில் கண்ணீர் வந்தது. ஆனால் அவள் தன்னையே கட்டுப்படுத்திக் கொண்டாள்.
“அப்படி எதுவும் ஆகாது… கடவுள் இருக்கார்… நம்ம கண்டிப்பா குழந்தையை கண்டுபிடிப்போம்,” என்று அவள் தாரணியின் தோளில் கை வைத்து ஆறுதல் கூறினாள்.ஆனால் தாரணியின் மனம் அமைதியாகவில்லை.அவள் மீண்டும் அழுதபடி,“நான் தான் காரணம் நிஷா… இந்த வேலைக்காக வெளியே போய்… என் குழந்தையை நான் கவனிக்கல…”
அந்த வார்த்தைகள் அவள் மனதின் குற்ற உணர்வை வெளிப்படுத்தின.
நிஷா உடனே அவளின் முகத்தை தனது கைகளால் பிடித்து “தாரணி… இப்படிச் சொல்லாதே. நீ ஒரு நல்ல அம்மா. இது உன் தவறு இல்லை.”என சொல்லியபடி அவள் மெதுவாக தாரணியை தனது மார்பில் சாய்த்தாள்.அவள் ஒரே ஒரு வார்த்தையை மட்டும் சொல்லிக் கொண்டே இருந்தாள்.
“என் குழந்தை… எங்கே இருக்கே…?”
நிஷா அவளின் அருகில் அமர்ந்தபடி அவளை தழுவி ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.
ஆனால் அவர்களுக்கு தெரியாத ஒரு உண்மை இருந்தது.அந்த குழந்தை…
ஒரு பெரிய சதியின் நடுவில் சிக்கி இருந்தது.
நிஷா“தாரணி தயவு செய்து இப்படி உன்னை நீயே காய படுத்தாத,நம்ம கண்டிப்பா குழந்தையை கண்டுபிடிப்போம்,” என்று அவள் மெதுவாக சொன்னாள்.அந்த வார்த்தை கேட்டதும் தாரணி தலை தூக்கி நிஷாவை பார்த்தாள். அவள் கண்களில் வேதனை மட்டும் இல்லை… ஒரு பெரிய சுமை இருந்தது.
“நிஷா…” என்று அவள் மெதுவாக அழைக்கும் போது அவள் குரல் நடுங்கியது.
“என்ன தாரணி…?” என்று நிஷா அவள் கையை பிடித்தாள்.
சில நொடிகள் தாரணி அமைதியாக இருந்தாள். பேச வேண்டும் போல இருந்தது… ஆனால் அந்த வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக் கொண்டது.
பிறகு மெதுவாக சொன்னாள்.
“இந்த குழந்தை… என் வாழ்க்கையில இருக்க காரணம் என்னன்னு உனக்கு தெரியாது…” என்று நிஷா அதிர்ச்சியுடன் அவளை பார்த்தாள்.
“என்ன சொல்றே தாரணி?”
தாரணி கண்களை கீழே குனிந்தாள்.
“என்னோட அக்கா,என்னை விட்டுட்டு போயிட்டா…”அந்த வார்த்தை சொல்லும் போது அவள் குரல் உடைந்தது.
அவளுக்கு இந்த குழந்தை பிறந்தப்போ அவளோட வாழ்க்கை எல்லாம் சரியா இல்ல…”என சொல்லிஅவள் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.அவள் இறந்தப்போ இந்த குழந்தையை என் கையில் வைத்து ‘நீ தான் இதுக்கு அம்மா மாதிரி இருக்கணும்’ன்னு சொல்லிட்டு போயிட்டா…”என சொல்லவும்
நிஷா அமைதியாக கேட்டாள்.
“நான் நினைச்சேன் நிஷா,என் அக்கா இல்லாத இடத்தில் அவ பையனா நல்லா வளர்க்கணும்… அவன் வாழ்க்கை நல்லா இருக்கணும்…”என சொல்லும் போது அவள் குரல் நடுங்கியது.
“ஆனா இப்போ அவனையே நான் காப்பாத்த முடியல…”அந்த வார்த்தை சொன்னவுடன் தாரணி மீண்டும் கதறி அழுதாள்.
நிஷாவின் மனமும் உடைந்தது.
அவள் தாரணியை அணைத்துக் கொண்டாள்.
சில நிமிடங்கள் கழித்து நிஷா மெதுவாக கேட்டாள்.“தாரணி… நீ இப்போ சொன்னது என்ன…? ரித்விக் உன்னோட அக்கா பையனா…?”
தாரணி அமைதியாக தலையை குனிந்தபடி இருந்தாள்.
நிஷாவின் கண்கள் பெரிதாகின.
“அப்போ… இதுவரை எல்லாரிடமும் நீ சொன்னது…?” என்று அவள் திகைத்தபடி கேட்டாள்.
தாரணி மெதுவாக தலை தூக்கி அவளை பார்த்தாள். அந்த பார்வையில் சோர்வும் வேதனையும் கலந்திருந்தது.
“நான் சொன்னது பொய் தான் நிஷா…”
நிஷா ஒரு நொடி பேச முடியாமல் இருந்தாள்.
“என்னது…? அப்படின்னா… உனக்கு இன்னும் கல்யாணமே ஆகலையா…?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்.
தாரணி மெதுவாக தலையசைத்தாள்.
“இல்ல… எனக்கு கல்யாணம் ஆகல…”
அந்த வார்த்தை கேட்டதும் நிஷா முழுவதும் அதிர்ந்து போனாள்.
“அப்போ… நீ ஏன் எல்லாரிடமும் இந்த குழந்தை உன்னோட பையன் என்று சொன்னே…?”என கேட்க
தாரணி ஒரு ஆழ்ந்த மூச்சை விட்டாள்.
“ஏன்னா… வேற வழியே இல்ல நிஷா…”
அவள் கண்களில் மீண்டும் கண்ணீர் திரண்டது.
“என் அக்கா இறந்தப்போ… இந்த குழந்தையை நான் தான் காப்பாத்தணும். ஆனா ஒரு பெண் தனியா ஒரு குழந்தையை வளர்க்குறது எவ்வளவு கஷ்டம்னு உனக்கு தெரியும்…” என்று அவள் மெதுவாக சொன்னாள்.
“அதனால தான்nஎல்லாரிடமும் அவன் என் பையன் என்று சொல்லிட்டேன்…”என சொல்ல,
நிஷா இன்னும் அதிர்ச்சியில் இருந்து
வெளியே வரவில்லை.
“தாரணி… இத்தனை பெரிய விஷயத்தை நீ என்னிடம் கூட சொல்லவே இல்லையா…?” என்று அவள் வேதனையுடன் கேட்டாள்.
தாரணி மெதுவாக சிரித்தாள்… அந்த சிரிப்பில் மகிழ்ச்சி இல்லை… வேதனை மட்டும்.
“நான் யாரிடமும் சொல்ல விரும்பல நிஷா… இது என் அக்காவோட கடைசி நினைவு…”அவள் கண்ணீர் துடைத்தாள்.
அதனால தான் ரித்விக் என் பையன் மாதிரி வளரணும் என்று நினைச்சேன்…”
அந்த நேரத்தில் திடீரென்று தாரணி மீண்டும் அழ ஆரம்பித்தாள்.ஆனா இப்போ அவனையே நான் காப்பாத்த முடியல…என்று சொல்ல
நிஷா உடனே அவளை அணைத்து “இத நாம தீரன் கிட்ட சொல்லலாமா?” என கேட்க
“ப்ளீஸ் யார்கிட்டயும் எதுவும் சொல்லாத என்கிட்ட சத்தியம் பண்ணு “ நிஷாவின் கையை பிடித்து தாரணி தன் தலை மீது வைக்க
நிஷா இன்னும் அதிர்ச்சியிலிருந்து முழுமையாக வெளியே வரவில்லை. தாரணி சொன்ன உண்மை அவள் மனதில் பல கேள்விகளை எழுப்பியது.
“தாரணி… உன் அக்கா பற்றி நீ கொஞ்சம் முன்பே சொன்னியே… என்ன நடந்தது உண்மையில்…?” என்று மெதுவாக கேட்டாள் நிஷா.
தாரணி சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.
கடந்த கால நினைவுகள் அவள் மனதை மீண்டும் குத்த ஆரம்பித்தது.
எல்லாத்தையும் நான் அப்புறமா சொல்றேன் இப்போ என் பையன கண்டுபிடிக்கணும்..
“தாரணி… இப்படி உட்கார்ந்து அழுதால் பயன் இல்லை. நம்ம போலீஸ்க்கு கம்ப்ளைண்ட் கொடுக்கணும். அப்போது தான் ரித்விக்கை சீக்கிரம் கண்டுபிடிக்க முடியும்…”என சொல்ல
தாரணி ஒரு நொடி தயங்கினாள். ஆனாலும் ரித்விக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தாள்.
“சரி… போலாம்…” என்று மெதுவாக சொன்னாள்.
இரண்டு பேரும் விரைவாக தயாராகி வீட்டை விட்டு வெளியே வந்தார்கள். சாலையில் ஒரு ஆட்டோ பிடித்து போலீஸ் ஸ்டேஷன் நோக்கி கிளம்ப,ஆட்டோ நகரத்தின் சத்தத்தில் முன்னே சென்று கொண்டிருந்தது. ஆனால் தாரணியின் மனம் மட்டும் அமைதியாக இல்லை. அவள் இரு கைகளையும் இறுக்கமாக பிடித்து கொண்டிருந்தாள்.அந்த நேரத்தில் திடீரென்று அவள் மொபைல் ஒலித்தது.அவள் திரையில் பார்த்தாள்.
புதிய எண்.“யாரு இருக்குமோ…?” என்று யோசித்தபடி அவள் அழைப்பை எடுத்தாள்.
“ஹலோ…”
மறுபக்கம் சில நொடிகள் அமைதி.
பிறகு ஒரு ஆண் குரல்… குளிர்ந்த குரலில் பேச ஆரம்பித்தது.
“தாரணி…”
அவள் திடுக்கிட்டாள்.
“யார் நீங்க…?”
அந்த குரல் சிரித்தது.
“அதை நீ தெரிஞ்சிக்க வேண்டிய அவசியம் இல்லை…”
தாரணியின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.
“உனக்கு ரித்விக் வேண்டுமா…?”
அந்த வார்த்தை கேட்டதும் அவள் உடனே எழுந்து உட்கார்ந்தாள்.
“எங்க இருக்கான் என் பையன்…? யார் நீங்க…? சொல்லுங்க…!”
மறுபக்கம் குரல் மீண்டும் குளிர்ச்சியாக பேச ஆரம்பித்தது.“அவசரப்படாதே,நான் சொல்வதை கேள்…”
தாரணி மூச்சே வாங்காமல் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“நீ இப்போ போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளைண்ட் கொடுக்கப் போறே…”அப்படிதானே
அந்த வார்த்தை கேட்டதும் தாரணி முழுவதும் நடுங்கினாள்.
“நாங்க எல்லாத்தையும் பார்த்துக்கிட்டே இருக்கோம்…”என சொல்ல
தாரணி வேகமாக சுற்றி முற்றி பார்க்க,
நிஷா அவள் முகத்தை பார்த்து பதறி “தாரணி… என்னாச்சு…?” என்று மெதுவாக கேட்டாள்.
ஆனால் தாரணி அந்த குரலை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“நீ போலீஸிடம் ஒரு வார்த்தை கூட சொல்லக்கூடாது…”அந்த குரல் இப்போது கொஞ்சம் கடுமையாகியது.
அப்படி சொல்லாமல் அமைதியா இருந்தா,நாளைக்கு உன் குழந்தை உன்னிடம் வந்து சேரும்…என்று சொல்ல
தாரணியின் கண்ணீர் தானாக வழிந்தது.“ப்ளீஸ்… அவனை எதுவும் செய்யாதீங்க… நான் எதுவும் சொல்ல மாட்டேன்…”
அந்த குரல் மீண்டும் மெதுவாக சிரித்தது.“அதுதான் நல்லது…”
“இல்லேன்னா…”ஒரு நொடி அமைதி.
பிறகு அந்த குரல் மெதுவாக சொன்னது.
“அந்த குழந்தையை நீ வாழ்க்கையிலே மறுபடியும் பார்க்க முடியாது…”அதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டது.
“ஹலோ… ஹலோ…!” என்று தாரணி கத்தினாள்.
ஆனால் மறுபக்கம் அமைதி மட்டுமே இருந்தது.
அவள் கை நடுங்கிக் கொண்டே மொபைலை கீழே வைத்தாள்.
நிஷா பதறி கேட்டாள்.“தாரணி… யாரு அது…? என்ன சொன்னாங்க…?”
தாரணி கண்களில் பயம் நிரம்பியது.
“நிஷா…”அவள் மெதுவாக சொன்னாள்.
அவங்க ரித்விக் அவங்கள் கிட்ட தான் இருக்கான்.
நிஷா அதிர்ச்சியில்பார்த்தாள்.
“என்ன…?”
தாரணி குரல் நடுங்கியது.
“நான் போலீஸ்க்கு சொல்லக் கூடாதாம்,சொன்னா…”
அவள் வார்த்தையை முடிக்க முடியாமல் அழ ஆரம்பித்தாள். ரித்விக்கை நான் மறுபடியும் பார்க்க முடியாதாம்…”என அழுது கொண்டே சொல்ல
அந்த நேரத்தில் அவர்களுக்கு தெரியாமல்ஒரு கருப்பு கார் தூரத்தில் இருந்து அந்த ஆட்டோவை அமைதியாக பின் தொடர்ந்து கொண்டிருந்தது.
அந்த காருக்குள் அமர்ந்திருந்தவள்…
கண்ணில் கொடூரமான சிரிப்புடன் அந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்தாள்.
