உயிராக வந்த உறவு – அத்தியாயம் 5

“எதுக்கு கால் பண்ணினீங்க?”என

தாரணி கேட்ட அந்த கேள்வி கடினமாக இருந்தாலும்,அவள் குரலின் உள்ளே

ஒரு நொடி உடைந்து விடப் போகும் நடுக்கம் ஒளிந்திருந்தது.

மறுபக்கம் தீரன் மூச்சை இழுத்தபடி, “உன்னை நான் பார்ப்பேன் நினைக்கல நீ என் வாழ்க்கையில் இருந்து போயிட்ட நெனச்சேன், ஆனா என்னமோ திரும்ப நீ வந்ததும் நடந்ததெல்லாம் கிடைச்ச மாதிரி தோணுது. அதை எப்படி உன்கிட்ட சொல்லி புரிய வைக்கிறது தெரியல.. ஆமா உனக்கு இன்னும் கல்யாணம் ஆகல தானே”? என்று அவன் கேட்ட அந்த நொடியில், அவள் நெஞ்சுக்குள் அந்த கேள்வி ஏதோ ஒன்று பண்ண

அவன் கேட்ட அந்த வார்த்தை காதலாகவும் இல்லை,கட்டளையாகவும் இல்லை.ஆனால் அவள் மனதை கிழிக்கும் அளவுக்கு பழைய நெருக்கம் மீண்டும் உயிர்பிக்க ஆரம்பித்தது..

“எனக்கு பேச விருப்பமில்லை,”

என்று அவள் சொல்ல நினைத்தாள்.

ஆனால் வாயிலிருந்து வெளியே வந்தது

ஒரு ஆழ்ந்த மூச்சு மட்டுமே.

“தாரணி… நீ இப்படிச் செய்தது”அவன் சொல்ல ஆரம்பித்ததும்,அவள் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.இல்ல, இன்னும் ஒரு வார்த்தை சொன்னா நான் உடைஞ்சிடுவேன் என்று மனதிற்குள் நினைத்தாள்.

பேருந்து திடீரென்று பிரேக் போட,அவள் உடல் முன்னே சாய்ந்தது.அவள் கையில் இருந்த போன்இன்னும் அவன் குரலைத் தாங்கிக் கொண்டிருந்தது.அந்த குரல்

அவளை மூன்று வருடங்கள் பின்னோக்கி இழுக்க முயற்சித்தது. அவன் தோளில் சாய்ந்த அந்த தாரணிக்குத் திரும்ப. “ப்ளீஸ்… போனை வையுங்க” என்று அவள் மெதுவாக சொன்னாள்.

அந்த இரண்டு வார்த்தைகளுக்குள்

அவள் சொல்லாத ஆயிரம் வலிகள் அடங்கியிருந்தன.

“நீ போனை வைச்சா” என்று மறுபுறம்

அவன் சொன்னதும்,அவள் கைகளின் நடுக்கம் அதிகரித்தது.இதயம் படபடவென துடித்தது அது துடிக்கும் ஓசை அவளுக்கு கேட்டது. 

ஒரு நொடி தயங்கியவள் இதற்கு மேலும் பேச்சை வளர்க்க கூடாது என நினைத்து

அவள் விரல் ஸ்கிரீன் மேல் நின்றது.அந்த நொடி முழுக்க அவள் மனம் அவனோடு சண்டை போட்டது.

இன்னும் பேசணுமா?அல்லது இப்போ முடிக்கணுமா? பேருந்தின் ஜன்னலில்

அவள் முகம் பிரதிபலித்தது.

கண்ணில் கண்ணீர்,கையில் போன்,

அவள் மெதுவாக போனை காதிலிருந்து எடுத்து ஒரு ஆழ்ந்த மூச்சு விட்டபடி தன் மனசுக்குள் மட்டும் சொன்னாள்.

’எனக்கு உன்னோட அன்பு வேண்டாம் தீரன், தயவு செஞ்சு திரும்ப என் வாழ்க்கையில் நீ வந்திராத.நீ தொலைந்து போனவன் என் வாழ்க்கையில இருந்து, அப்படியே இருந்துக்கோ..நான் கஷ்டப்படும்போது எனக்கு கிடைக்காது அன்பு அதுக்கப்புறம் கிடைச்சும் எனக்கு எந்த பயனும் இல்லை என்னை விட்டு போ தீரன்’ என்று மனதில் சொன்னபடி அந்த சிவப்பு பட்டனை அவள் அழுத்த“கால் எண்ட்”போன் அமைதியானது.

அவள் மனமும் அமைதியாகவில்லை,

ஆனால் உறுதியாக இருந்தது. இன்னும் எனக்கு இவன் தேவையில்லை என்று மட்டும் உறுதியாக இருந்தாள் 

போன் திடீரென்று அமைதியான அந்த நொடி, தீரனின் முகத்தில் இருந்த கோபம் சிதறியது. அவள் அழைப்பை துண்டித்தது அவனை வலிக்கவில்லை,அது அவனை அவமானப்படுத்தியாதாக நினைத்தான். தன்னை பார்த்து கூட நிமிர்ந்து பேச முடியாதவளாக இருக்க வேண்டியவள், தன்னைப் பார்த்து திரும்பி நின்று போன் வைக்கத் துணிந்த அந்த தாரணியின் தைரியம் அவனுக்குள் கொதித்தது. அவன் இரண்டு கைகளையும் இறுக்கிய படி மேசையின் “என்ன நினைச்சுட்டா?” என்ற கேள்வி அவன் மனத்தில் எரிந்தது. 

காதலின் வலி அந்த நொடி அதிகாரத்தின் முகமூடியை அணிந்து கொண்டது. அவளை இழந்ததற்கான கோபம், அவள் தன்னை நிராகரித்ததற்கான ஈகோ, என்று இரண்டும் சேர்ந்து அவனுக்குள் ஒரு தீர்மானமாக உருவானது. எப்படியாவது அவளை விடக்கூடாது. அவன் முன் கைகோர்த்து நடந்த தாரணி இப்போது அவன் முன் தலைகுனிந்து நிற்க வேண்டுமென்று அவன் மனம் கோரியது.

அவன் நாற்காலியிலிருந்து எழுந்து ஜன்னலுக்கு அருகே நடந்தான்.வெளியே நகரம் வழக்கம்போல இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அவன் மனம் ஒரே இடத்தில் சுழன்றது.

தாரணி “நீ  என்ன விட்டு போகலாம் நினைக்கிறா. ஆனா நான் விட மாட்டேன்.” அவன் உள்ளுக்குள் சொல்லிக்கொண்டான். அவளை மீண்டும் தன் வாழ்க்கைக்குள் கொண்டு வர காதலை பயன்படுத்த முடியவில்லை. அதனால் அதிகாரத்தைப் பயன்படுத்த முடிவு செய்தான். அவளை தன் அலுவலகத்திற்குள் கொண்டு வர வேண்டும், அவன் கண் முன், அவன் கட்டுப்பாட்டுக்குள். அவள் எங்கே போனாலும், அவன் பெயர் தான் அவள் வாழ்க்கையில் ஒலிக்க வேண்டும். “இந்த வேலை உலகம் என்னோட கையில் தான் இருக்கு,” என்று சொல்லி  அவன்  மனதிற்குள் சிரித்தான்.

 அவளைத் தன் கீழே பணி புரிய வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் ஒரு பிடிவாதமாக மாறியது.அவளை தண்டிக்க அல்ல, அவளை விட முடியாத தன் பலவீனத்தை மறைக்க.

அந்த தீர்மானத்துடன் அவன் மேசை மீது கை வைத்தபடி, அவளின் நினைவில் கரைந்தான். அவன் காதல் இப்போது வழி தவறியிருந்தது. ஆனால் அந்த காதல் அவளை விடத் தயங்கியதால், அது அதிகாரமாகவும் பிடிவாதமாகவும் மாற, அந்த நொடி தீரன் முடிவு செய்தான் 

அறை முழுக்க அமைதியாக இருந்தாலும், தீரனின் மனம் மட்டும் ஏதோ யோசனை செய்து கொண்டிருந்தது.தாரணியை இழந்தது அவனை பலவீனப்படுத்தவில்லை,

அவனை இன்னும் ஆபத்தானவனாக மாற்றியது. எப்படியாவது அவளை மீண்டும் என் வட்டத்துக்குள் கொண்டு வரணும், என்று அவன் மனம் தீர்மானித்தது. நேரடியாக பிடிக்க முடியாத காதலை, சுற்றிவளைத்து பிடிக்க நினைத்தான். அவள் வேலை தேடி வந்தது அவனுக்குக் கிடைத்த வாய்ப்பாகத் தோன்றியது. அவள் தன்னை விட்டு தப்பிச்செல்ல நினைத்த ஒவ்வொரு வழியையும் அவன் மூட நினைத்தான். நீ என் கூட தான் இருக்கணும் உனக்கு வேற ஆப்ஷனும் இல்ல என்று நினைத்தவன், 

அவள் தகுதி, அவள் சூழ்நிலை, அவள் பொறுப்புகள் என எல்லாவற்றையும் ஆயுதங்களாக மாற்ற முடியும் என்று அவன் எண்ணினான். வேலை வேண்டாம்னு சொன்னா, வேற எங்கும் அந்த வேலை கிடைக்காம பண்ணலாமே, என்ற எண்ணம் அவனுக்குள் மெதுவாக வேரூன்றியது. அவளைத் தொட முடியாத தூரத்தில் வைத்துக் கொண்டே, அவன் பெயரை அவள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாற்ற வேண்டும் என்ற சதி அவன் மனதில் உருவானது. அவள் தன்னை வெறுக்கலாம், எதிர்க்கலாம்,ஆனால் அவனைத் தேடி தான் வர வேண்டிய நிலைக்கு அவளை கொண்டு வர வேண்டும் என்பதே அவன் திட்டம். 

காதல் தோற்ற இடத்தில் அதிகாரம் பேசும் என்று அவன் நம்பினான். ஒரு நாள் நீயே வந்து என் முன் நிற்பே… வேலைக்காக, பாதுகாப்புக்காக, இல்லன்னா வாழ்க்கைக்காக, என்று அவன் உள்ளுக்குள் எண்ணி கசப்பாக சிரிக்க,அந்த சிரிப்புக்குள் காதல் இல்லை.அவளை விட முடியாத ஒரு ஆழமான பலவீனம் மட்டும் இருந்தது. 

தீரன் அவளை மீண்டும் தன் வலையில் சிக்க வைக்க நினைத்தது அவளை காயப்படுத்துவதற்காக அல்ல, தன்னை மீண்டும் தனிமையில் இருந்து காப்பாற்றிக்கொள்ள..

அவளுடன் இருக்கும் போது தனிமை என்ற கொடுமை அவனுக்கு கிடைத்ததே இல்லை.ஆனால் அவள் ஏன் மீண்டும் இப்போது இங்கு வந்தால் என்று அவன் மனம் யோசித்தது. எதற்கு வந்திருந்தாலும் அவளை தன்னவளாக மீண்டும் மாற்ற வேண்டும் என்று நினைத்தான்.அவளுடன் கைகோர்த்து அந்த காதல் பயணம் தன் வாழ்வில் மீண்டும் தொடர வேண்டும் எனத் துடித்தான். அவள் கழுத்தில் சங்கிலியாக மாற வேண்டும் என்று நினைத்தான்.அவளை முழுவதும் தன் வசமாக்கியவன் அவளை ஏதோ ஒரு சூழ்நிலையில் விட்டு விட இப்போது மீண்டும் விட முடியாத நிலையில் தவித்துக் கொண்டிருந்தான்.

அந்த தவிப்பு இவனிடம் மட்டும் இருந்தால் போதுமா,அவன் ஒரு முறை  இழந்தால் மீண்டும் பெறுவதற்கு தாரணி என்ன உயிர் இல்லாத பொருளா??

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page