உயிராக வந்த உறவு – அத்தியாயம் 6

அவனின் நினைவில் மூழ்கியவள் மெதுவாக வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.வீட்டுக்குள் வந்ததும் தாரணி கதவை மெதுவாக திறந்தாள்,அவளை கண்டதும் அந்த பிஞ்சு உள்ளம் அம்மா ம்மா.. என்று மழலை மொழியில் சொல்லிக் கொண்டு வேகமாக ஓடி வந்து அவள் காலை கட்டிக் கொண்டது. இவ்வளவு நேரம் தன்னுள் இருந்த அனைத்து வலியும் அந்த அமைப்பில் அவளுக்கு காணாமல் போக,அவள் ரித்விக்கை தூக்கி கொண்டு சுவரில் சாய்ந்து நின்றாள். உடம்பு அசைவற்றிருந்தாலும், மனம் மட்டும் இன்னும் பேருந்தில், இன்னும் அந்த போன் கால் முடிந்த இடத்திலேயே சிக்கி இருக்க,

நிஷா அவளின் முகத்தைப் பார்த்த நொடியில் ஏதோ நடந்திருக்கிறது என்று புரிந்துகொண்டாள். “என்னாச்சு தாரு?” என்று கேட்டதும், தாரணியின் கட்டுப்பாடு சிதறி மெதுவாக சோபாவில் உட்கார்ந்தாள். கண்ணீர் வரவில்லை, ஆனால் நெஞ்சு நிறைந்திருந்தது. “அவன்… கால் பண்ணான்,” என்று சொன்ன அந்த ஒரு வரியிலேயே அவள் குரல் உடைந்தது. நிஷா பேசவில்லை. அவள் அருகில் வந்து உட்கார்ந்தபடி “யார சொல்ற தாரு?” என்று கேட்க 

 தாரணி மெதுவாக ரித்விக்கிடம் ஒரு பொம்மை ஒன்றை கொடுத்து கீழே விளையாட விட்டுவிட்டு, “அதான் நான் யாரை பார்க்க கூடாது நினைச்சேனோ, என் வாழ்க்கையில யாரு இதுக்கு மேல இல்லன்னு நினைச்சேனோ, அவனை திரும்ப பார்த்தேன். அதுவும் அவன் கிட்ட ஒரு வேலைக்காக போய் நிக்கிற சூழ்நிலைக்குக்கு நான் வந்துட்டேன் பாத்தியா”என அவள் கண்ணீர் விடும் நொடியில் புரிந்து கொண்டால் அவள் தோழி.

“என்னடி சொல்ற தீரன்னா பார்த்தியா? எங்க எப்படி?” என நிஷா ஒரு ஆச்சரியத்துடன் கேட்க

“நீ எதுக்கு இவ்வளவு ஆச்சரியமா கேக்குற?” என்று அவள் கேட்கவும்

ஏய் அவனுக்கு கல்யாணம் முடிஞ்சு அமெரிக்காவிலேயே செட்டில் ஆயிட்டாங்கன்னு நம்ம பிரண்டு தான்டி ஒருத்தன் சொன்னான். அதனால தான் கேட்கிறேன் அவன் இப்ப சென்னைல இருக்கனா?உன்கிட்ட கூட அவனுக்கு கல்யாணம்ன்னு சொன்னேன் சொல்லிட்டு இருந்தான் என்று அவள் சொல்ல சொல்ல நடந்த பழைய நிகழ்வுகள் அனைத்தும் அவள் கண் முன் வர ஆரம்பிக்கவும் 

ஏய் அவனுக்கு கல்யாணம் முடிஞ்சா என்ன, அவன் என்ன பண்ணுனா எனக்கு என்ன வந்துச்சு என்று பொய்யாக கோபத்தை முகத்தில் வர வைத்துவிட்டு வேகமாக ஒரு அறைக்குள் சென்று கதவை தாழிட்டால்..

கண்ணாடி முன் போய் நின்றவள் அவனின் குரல், அவன் சொன்ன வார்த்தைகள், போனை துண்டித்த அந்த நொடி… எல்லாவற்றையும் நினைத்து முடிக்கும்போது அவள் கண்கள் வறண்டிருந்தன. “ நான் இன்னும் அவனை காதலிக்கிறேன் போல தான் இருக்கு,” என்று அவள் மெதுவாக சொன்னதும், அவள் உள்ளுக்குள் ஏதோ ஒன்று நொறுங்கியது. “ஆனா அதைவிட அதிகமா பயமா இருக்கு… அவன் என் வாழ்க்கையை மீண்டும் காயப்படுத்திடுவானோன்னு, எனக்கு என்னோட குழந்தை மட்டும் போதும்* என்று அவள் உள்ளுக்குள் கரைந்து கொண்டிருந்தாள். 

அவள் கையை யாரோ பிடிப்பது போன்ற ஒரு உணர்வு,அந்த ஒரு தொடுதல் தான் தாரணிக்கு ஆறுதலாக இருந்தது. நான் உடையக்கூடாது, என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டாள். திடீரென குழந்தை கத்தும் ஒரு சத்தம் கேட்க,தாரணி வெளியே வந்து திரும்பிப் பார்க்க,அந்த சிறிய முகத்தை பார்த்த நொடியில், அவள் கண்ணில் ஒரு வைராக்கியம் இந்த வாழ்க்கை என் குழந்தைக்காக,அது தீரனுக்காக அல்ல; என்று நினைத்தாள்.

அந்த இரவு தாரணி நிஷாவிடம் பேசிக்கொண்டே இருந்தாள். வார்த்தைகளுக்கிடையில் அவள் மனம் அழுது கொண்டே இருந்தது.சத்தமில்லாமல், யாருக்கும் தெரியாமல்.

இரவு மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தது. வீட்டுக்குள் ஒரு விதமான அமைதி இருந்தாலும், அந்த அமைதிக்குள் கேட்கப்படாத கேள்விகள் அலைந்துகொண்டிருந்தன. நிஷா தாரணியை கவனமாகப் பார்த்தாள். அவள் கண்களில் இருந்த சோர்வும், வார்த்தைகளுக்குள் மறைந்திருந்த தடுமாற்றமும், அவளுக்கு ஒரே ஒரு உண்மையைச் சொன்னது.தாரணியின் வாழ்க்கையில் ஏதோ மிகப் பெரிய ஒன்று நடந்திருக்கிறது. “தாரு…” என்று மெதுவாக ஆரம்பிக்க,“நீ எதையோ சொல்லாம இருக்கே. மூன்று வருஷமா என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியல. இந்த குழந்தை… அவன்…” என்று அவள் கேட்டுக்கொண்டே போக

ப்ளீஸ் உனக்கு வேலை இருந்தா போய் பாரு,ரித்வி தூங்கிட்டான், நானும் தூங்க போறேன் என்று தாரணி சொல்லவும்

அவள் தாரணியை வலுக்கட்டாயமாகக் காயப்படுத்த விரும்பவில்லை. ஆனால் அந்த மௌனம் அவளை இன்னும் அதிகமாகக் குத்தியது.

வேகமாக தன்மகனின் அருகே போய்ப்படுத்தவள் இரண்டு கைகளையும் நெஞ்சின் மேல் வைத்தபடி அவள் விரல்கள் ஒன்றோடொன்று சிக்கிக்கொண்டிருந்தன. அவளுக்கு ஓராயிரம் கேள்விகள்.ஒவ்வொரு கேள்வியும் அவள் உள்ளுக்குள் புதைத்திருந்த நினைவுகளைத் தட்டி எழுப்பியது. சொல்லிவிட்டால் நிம்மதி வரும் என்று அவள் அறிந்திருந்தாலும், சொல்ல முடியாத ஒரு பயம் அவளை கட்டிப்போட்டிருந்தது. சொன்னா… எல்லாம் மீண்டும் உயிர் பெறும், என்ற எண்ணம் அவளை தடுத்தது. “ஒன்னும் இல்ல தாரு எல்லாம் சரியா போயிடும்,” என்று அவள் அருகே ஒரு  குரல் சொன்னது.. முடிஞ்ச விஷயத்தை ரொம்ப யோசிக்காத என்று அந்த அந்த குரல் அவளிடம் சொன்னது” அந்த வார்த்தைகள் பொய்யாக இருந்தாலும், அவள் அதை நம்ப முயல,

 “இது முடிஞ்ச விஷயம் இல்ல. உன் முகம், உன் கண்கள்… எல்லாமே இன்னும் அந்த கதையைச் சொல்லுது,” என்று அவள் மனசாட்சி மெதுவாகச் சொல்ல

 அவள் குழந்தையை நோக்கிப் பார்க்க,அந்த சின்ன முகத்தில் எந்தக் கேள்வியும் இல்லை,எந்த சந்தேகமும் இல்லை. அதுதான் அவளுக்கு இப்போது இருக்கும் ஒரே நிம்மதி. 

 இவனுக்காக நான் பேசாம இருக்கணும் அவன் கிட்ட என்று அவள் மனதில் முடிவு  செய்து புரண்டு படுக்க,அந்த இரவு தாரணிக்கு தூக்கம் இல்லை. கண்களை மூடியபோதெல்லாம், அவள் மனம் திறந்து கொண்டே இருந்தது. மூன்று வருடங்களாக பூட்டி வைத்திருந்த ஒவ்வொரு உண்மையும், ஒன்றொன்றாக அவள் நினைவுக்குள் வந்து நின்றது. தீரனின் சிரிப்பு, அவன் கோபம், அவனுடன் கழித்த சந்தோஷமான நாட்கள், அவன் முன்னே உடைந்து போன தருணங்கள் எதையும் தவிர்க்க முடியவில்லை.

எதையும் யோசிக்காமல் நிம்மதியா தூங்கு உனக்காக நான் இருக்கேன் என்று அவள் நெற்றியில் ஒரு கை தடவி விட்டது. அந்த கை, அந்த குரல் எப்போதெல்லாம் அவள் சோர்ந்து போய் இருக்கிறாளோ  அப்போதெல்லாம் அவள் முன் வரும்.அது கனவு என்று தெரிந்தும் கனவிலேயே அந்த குரலுக்கு அடிமையானால். 

அவளின் குழந்தை அவள் அருகில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. அந்த சின்ன மூச்சுச் சத்தம் தான் அவளை இன்னும் உடையாமல் தடுத்துக் கொண்டிருந்த ஒரே காரணம். நான் தாங்கணும், என்று அவள் மனசுக்குள் சொல்லிக்கொண்டே கண்களை மெதுவாக மூட கண்ணீர் மெதுவாக தலையணையில் விழுந்தது. அந்தக் கண்ணீரை ஒரு கை துடைத்து விட்டபடி,” கண்மணி உனக்கு நான் இருக்கேன் தூங்கு” என குரல் சொன்ன வாக்கில் அவளுக்கு மெதுவாக கண்கள் இருண்டு உறங்கினாள்.

மறுநாள் காலையில் சூரியன் உதித்திருந்தாலும், தாரணியின் மனதில் இன்னும் இரவு தான். நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தாள். மொபைல் திடீரென்று ஒலிக்க, அவள் கண்ணைத் தன் உள்ளங்கையை வைத்து துடைத்தபடி திறந்து திரையைப் பார்த்தவுடன், நெஞ்சு திடீரென்று இறுகியது. அது ஒரு புதிய எண், ஒரு நொடி அவள் அதை எடுக்காமல் விட, ஆனால் அந்த ஒலி அவளை விடவில்லை. மனதில் ஒரு பயமும், ஒரு எதிர்பார்ப்பும் ஒன்றாக எழுந்தது. அவள் அழைப்பை ஒரு பயத்தோடு எடுத்தால் மீண்டும் தீரனும் இருப்பானோ என்று..

“தாரணி…”அந்த குரல்.

அந்த ஒரே குரல்.

இது நேற்றைய கோபக் குரல் அல்ல. அலுவலகத்தின் உள்ளிருந்து வரும், கட்டுப்படுத்தப்பட்ட, அதிகாரம் கலந்து இருக்கும் தீரனின் குரல். அவள் பேசவில்லை. அவள் அமைதியே அவனுக்குப் பதிலாக இருந்தது. “நேத்து நடந்தது… ப்ரொஃபஷனலா இல்ல,” என்று அவன் ஆரம்பித்தான். அந்த வார்த்தைகள் அவளுக்கு வலியை தர,

உன்கிட்ட பேச இஷ்டம் இல்லை என அவள் சொல்லவும்

“நீ எமோஷனலா ரியாக்ட் பண்ணிட்ட நேத்து,” என்று அவன் தொடர

 

அவள் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க

உன் குவாலிஃபிகேஷனுக்கு, இங்க ஒரு இடம் இருக்கு என அவன் பேசிக்கொண்டே இருந்தான்.பதவி, வாய்ப்பு, எதிர்காலம் என்று. ஆனால் அந்த வார்த்தைகளுக்குள் அவள் கேட்டது வேறொன்றே. 

நீ இன்னும் என் கட்டுப்பாட்டுக்குள் வரணும்.தாரணியின் கைகள் நடுங்கின. அவள் குழந்தையை பார்த்தாள். அந்த சின்ன முகம் எந்த சதியையும் அறியாத அமைதியில் இருந்தது. “எனக்கு அந்த வேலை வேண்டாம்,” என்று அவள் மெதுவாகச் சொல்ல

மறுபக்கம் ஒரு நொடி அமைதி. பின்னர் தீரன் சொன்னான், “இதை இப்போ முடிவு பண்ணாதே. இன்றைக்கு அலுவலகம் வா. நேருக்கு நேர் பேசலாம்”என்று சொல்ல

அவள் மூச்சை இழுத்தபடி நான் இப்போ பேசினா, மீண்டும் சிக்கிக்குவேன், என்று அவள் மனம் எச்சரித்தது. “எனக்கு பேச எதுவும் இல்ல,” என்று சொல்லிவிட்டு அவள் போனை மெதுவாக வைத்தாள்.

அழைப்பு முடிந்ததும், அவள் சுவரில் சாய்ந்து நின்று இரவு முழுக்க அவள் நினைத்த உண்மைகள், இப்போது இன்னும் கனமாக அவள் மார்பில் இறங்கின. தீரன் திருந்தவில்லை. அவன் மாறவில்லை. அவன் வந்தது காதலோடு இல்லை,கட்டுப்பாட்டோடு. அந்த உண்மை தான் தாரணியை உறுதியாக்கியது. கண்ணீரை துடைத்து கொண்டு குழந்தையை எடுத்து மார்போடு அணைத்துக்கொண்டாள். இனி நான் உடையக்கூடாது, என்று அவள் மனத்தில் தீர்மானம் எடுத்தாள்.

அவள் சமையலறைக்குச் சென்று தேநீர் வைக்க முயன்றாலும் கைகள் இன்னும் நடுங்கின. அப்போதுதான் கதவு திறக்கும் சத்தம் கேட்க,

பதறிப் போய் திரும்பி பார்த்தவள் நீதான் வந்திருக்கியாடி என்று அவளை பார்த்து சொல்ல 

உடனே நிஷா,” ஆமா டி வாக்கிங் எல்லாம் முடிச்சுட்டு இப்ப  தான் வரேன். ஏன் என்ன ஆச்சு?தாரிணியின் முகத்தைப் பார்த்தவுடனே அவளுக்கு புரிந்தது.இது சாதாரண சோர்வு இல்லை என்று.

“இன்னும் அவன்…?” என்று கேட்க நிஷாவின் குரல் தயங்கியது.

தாரணி எதுவும் சொல்லவில்லை. ஒரு சின்ன தலை அசைவு மட்டும். இப்போ சொல்ல முடியாது… இன்னும் இல்லை… என்று அவள் உள்ளம் சொல்ல

அந்த நேரம் தான், தாரணியின் மொபைல் மீண்டும் ஒலித்தது. அதே எண்ணே என்று நினைத்து அவள் பயத்தோடு திரையை பார்க்க,

ஆனால் அது தீரன் இல்லை.ஒரு பெண் பெயர்.அவளுக்கு அந்த பெயர் பழகியது போல் இருந்தது. இதயம் திடீரென்று வேகமாக துடிக்கத் தொடங்கியது. நிஷா அவள் முகத்தில் மாறிய நிறத்தை கவனித்தாள். “யார் தாரு?”

தாரணி பதில் சொல்லாமல் அழைப்பை எடுத்தாள்.

“தாரணி… நான் அர்ச்சனா பேசுறேன்.”

அந்த பெயர் கேட்ட அந்த நொடியில், தாரணியின் கால்கள் பலவீனமானது.

அவள்…? இப்போ ஏன்…? மனதில் ஓராயிரம் கேள்விகள் தொடர்ந்தது..

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
உயிராக வந்த உறவு
788 10 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page