உயிரென வந்தாயோ- 1

அத்தியாயம் 1

“டேய் சத்யா… அந்த எட்டாம் நம்பர் ஸ்பானர் எடுத்துக் கொடுடா” என்று அந்த மெக்கானிக் செட்டின் முதலாளியும், நம் கதையின் நாயகனுமான வளவன் தன்னிடம் வேலை செய்யும் பன்னிரெண்டு வயது சிறுவன் சத்யாவிடம் கேட்டான். 

“இந்தாங்கண்ணே..” என்று நீட்ட, வளவனும் அதை வாங்கி, இரு சக்கர வாகனம் ஒன்றிற்கு பழுது பார்த்துக் கொண்டிருதான். 

“இந்த வண்டி ரெண்டு நாளா குடைச்சல் கொடுத்துட்டே இருக்கு. நானும் முடிக்கலாம்னு பாக்குறேன். இழுத்துட்டே போகுதுடா. ச்ச.” என்று சத்யனிடம் புலம்பிக் கொண்டே அந்த வேலையைப் பார்த்தான்.

அப்படியே மதியம் வரை வேலை நெட்டித் தள்ள, ஒரு வழியாக அந்த வண்டியை சரி பார்த்து முடித்தான். 

“ஸ்ப்பாடா.. ஒரு வழியா இதை முடிச்சாச்சு. நான் வீட்டுக்கு கிளம்புறேன்டா. வண்டி ஓனர் வந்தா, வண்டி சாவியைக் கொடுத்துட்டு, அமௌன்ட் எனக்கு GPay பண்ண சொல்லிருடா.” என்றவன் அவனது பழைய இத்துப்போன வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்க்குச் கிளம்பினான். 

ஒரு பத்துக்கு பத்து அறை. அதில் வண்டிகளை பழுது பார்க்க தேவையான சாதனங்கள் இருந்தது. வெளியே வண்டிகள் நிறுத்துவதற்கு செட் போட்டு நிறுத்தப்பட்டிருந்தது. 

வளவனின் தாய் பரிமளம், தந்தை மார்த்தாண்டம். வளவன் அவன் சிறு வயதாக இருக்கும் போதே, தந்தை மாரடைப்பால் இறந்து விட்டார். பரிமளமோ வளவனை வைத்துக்கொண்டு செய்வதறியாது நிற்க, தன்னுடைய பிறந்த வீட்டிற்கு இடம் பெயர்ந்தார். 

அங்கு, பரிமளத்தின் தமையன் பசுபதிக்கு தங்கையின் மேல் அலாதிப் பிரியம். தங்கையின் நிலைகண்டு கலங்கி அவரை அங்கேயே இருக்கச் சொல்ல, பசுமதியின் மனைவி கோமதி கொதித்து எழுந்து விட்டார். 

ஒரு கட்டத்தில், பசுபதிக்கும் கோமதிக்கும் வாக்குவாதம் அதிகரித்துக் கொண்டேப் போக, தன்னால் அவர்களுக்குள் பிரச்சனை எதுவும் வேண்டாம் என்று நினைத்த பரிமளம் தன் அண்ணனிடம் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பப் போக, அந்நேரம் பார்த்து சரியாக கோமதியின் அன்னை அங்கு வந்தார். 

அவரும் என்ன ஏது என்று விசாரிக்க, நடந்த கதையை விளக்கிக் கூறினார் பசுபதி. 

“ஒரு நிமிஷம் இருங்க மாப்பிள்ளை.” என்று அவரிடம் கூறி விட்டு, தன் மகள் கோமதியை தனியே அழைத்து, “அடியேய் கோமதி, என்ன காரியம்டி பண்ண பார்த்த.. எதுக்குடி அவங்கள வீட்டை விட்டு வெளிய அனுப்புற. பேசாம இங்கயே ஒரு மூலையில இருந்துட்டு போகட்டுமே” என்று அவர் கூற, 

கோமதியோ, “அட நீ வேற ஏன்ம்மா?? எதுக்கு தேவை இல்லாம அந்த சனியன்களை இங்க இருக்க வச்சிக்கிட்டு, அதுங்களுக்கும் சேர்த்து நான் இங்க பாக்கணுமா?? அது எல்லாம் முடியாது. அனுப்பி வச்சிட்டு தான் எனக்கு மறுவேலை.” என்றாள் கோமதி. 

“அடி கூறுகெட்டவளே, நீ ஏண்டி அப்படி நினைக்கிற. உனக்கே வேலை செய்ய உடம்பு வ;வளைய மாட்டீங்குது. அதுக்குத் தான் நான் இங்க வரேன். எனக்கும் வயசாகிக்கிட்டு இருக்கு. பேசாம, நீ இந்த வீட்டுக்கு ராணி மாதிரி இருந்துகிட்டு இதுங்கள சம்பளம் இல்லாத வேலைக்காரியா வச்சிக்கோ” என்றார் கோமதியின் தாய்.

அவளும் சிறிது நேரம் யோசித்துவிட்டு, “நீங்க சொல்றதும் சரிதான்.  இப்பவே போய் அந்த ஆளுகிட்ட சொல்றேன்.” என்றவர், உடனே தன் கணவர் பசுபதியிடம் சென்று, “சரி சரி அவங்க இங்கயே இருக்கட்டும்.” என்று கூறிவிட்டு ஒய்யாரமாக நடந்து வீட்டின் உள்ளே சென்றவர், தன் தாயைப் பார்த்து கட்டை விரலை தூக்கிக் காட்டியபடி, நமட்டு சிரிப்புடன் சென்றார். 

கோமதியின் அன்னையோ, “அப்பாடா.. நம்ம ஒரு வழியா தப்பிச்சோம்” என்று கூறியபடி அங்கிருத்து நகன்றார்.

பசுபதியோ, ஒரு பெருமூச்சுடன் இரு பக்கமும் தலையை ஆட்டியபடி, “நீ வாம்மா உள்ள போகலாம்.” என்று அழைத்துச் சென்றவருக்கு அப்போது தெரியவில்லை. இனிதான் இவர்களுக்கு நேரப்போகும் கஷ்டங்கள் பற்றி. 

அன்றில் இருந்து, பரிமளம் அந்த வீட்டின் சம்பளம் இல்லா வேலைக்காரி ஆகிப் போனார். பாவம் அவரும் என்ன தான் செய்வார். தன் பிறந்த வீடு என்று வேலைகளை அவரே எடுத்து செய்யப் போக, அது அவருக்கே எதிர்வினையாய் மாறிப் போய்விட்டது.

பன்னிரெண்டாம் வகுப்பு வரை, பசுபதியே வளவனின் படிப்புக்கான செலவுகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டார்.

அதற்குப் பிறகு, அவனைப் படிக்க வைக்க பணம் தரப் போவதில்லை என்று கறாராக கோமதி கூறியதால், அதற்கு மேல் அவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. 

அவரின் சங்கடத்தை உணர்ந்த வளவனோ, “மாமா, எனக்குப் படிக்க ஆர்வம் எல்லாம் இல்ல. நான் வேலைக்குப் போறேன், எனக்கும் அம்மாவுக்குமான ஆகுற செலவை நான் கொடுத்துருறேன்” என்று கூற, “அட என்னடா, உங்க ரெண்டு பேருக்கும் நான் பார்த்துக்க மாட்டேனா?? பெரிய மனுஷன் போல பேசுறியே??” என்று அவனிடம் கேட்டார் பசுபதி. 

“இத்தனை நாள் நீங்க பார்த்துக்கிட்டீங்க. நான் இனி வேலைக்குப் போனால் நான் பார்த்துகிறது தான் சரியா இருக்கும். நீங்க எதுவும் நெனச்சிக்காதீங்க மாமா. உங்களுக்கும் அத்தைக்கும் இடையில எந்த பிரச்சனையும் வேண்டாம்.” என்று கூற, அந்த வயதில் அவனிடம் இருக்கும் பொறுப்பு உணர்ச்சியை கண்டு பூரித்து தான் போனார். 

நாட்கள் நகர நகர, சிறுவனாக இருந்த வளவன் இளைநன் ஆக மாறினான். அப்பொழுது தான் அவனின் வேலை செய்யும் திறம் கண்டு, அவன் வேலைப் பார்த்த மெக்கானிக் செட்டின் உரிமையாளர் அவனிடம் அதை விற்று விட்டு வெளியூருக்குப் பயணம் செய்து விட்டார். 

அன்றில் இருந்து இன்று வரை அவனுக்கு அவனது தாயும், அவனது மெக்கானிக் செட்டும் மட்டும் தான். 

இதற்கு இடையில், அவனுக்கென்று தனியாக வருமானம் வந்ததால், தனது தாயை அழைத்துக் கொண்டு, அங்கிருந்து சென்று வேறு வீடு வாடைகைக்கு எடுத்து தங்கிக் கொள்ளல்லாம் என்று நினைத்துக் கொண்டிருத்த நேரத்தில், அவனது மாமா அவனிடமும் தங்கையிடமும் இங்கிருந்து செல்லக் கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொண்டார். 

அது போக, வளவன் செல்ல வேண்டிய இடத்திற்கு, அவன் போக முடியாத சூழ்நிலையால், பசுபதி சென்றிட, எதிர்பாராத விதமாக, விபத்தில் காலமாகி விட, அவரது குடும்பதையும் இப்பொழுது இவனே சேர்த்துப் பார்த்து கொள்ளும்படி சூழ்நிலை ஆகி விட்டது. 

வளவன் நினைத்து இருந்தால், அவன் தன் தாயை மட்டும் அழைத்துக்கொண்டு சென்று இருக்கலாம். ஆனால், தன் தாயிற்கும், தனக்கும் அடைக்களம் கொடுத்து இருந்ததால், அவருக்கு செலுத்தும் நன்றிக் கடன் பொருட்டும், தன் தாயின் வேண்டுகோளுக்கு இணங்கவும், தனது மாமாவின் குடும்பத்தையும் சேர்த்து பார்த்துக் கொள்கிறான் இந்த வளவன். 

மாமாவிற்கு மூன்று பிள்ளைகள். மூத்தவள் ராணி. அவளுக்கு அவனது வசதிக்கு ஏற்ப, திருமணம் செய்து வைத்து விட்டான். 

இளையவள் கௌரி. அவள் கல்லூரி படிப்பை முடித்து விட்டு, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருகின்றாள். 

இறுதியாக குமார். அவன் கல்லூரி இறுதி வருடம் படித்துக் கொண்டிருக்கின்றான். இளையவர்கள் இருவருக்கும் அப்படியே அவர்களது அன்னை கோமதியின் குணம் தான், வெடுக்கு வெடுக்கென்று தான் வளவனிடமும் அவனது அன்னையிடமும் பேசுவர்.

ஆனால், ராணி அப்படி இல்லை. தந்தை பசுபதியின் குணம். இவர்கள் இருவரிடமும் அன்புடன் நடந்து கொள்வாள். 

முப்பத்தி ஐந்து வயது ஆகிவிட்டது.. இன்னும் திருமணம் இல்லை. அவனுக்கும் அந்த ஆசை எல்லாம் இல்லை. அப்படியே ஆசை இருந்தாலும் அதில் பெரிய சிக்கல் ஒன்று உள்ளது. பரிமளம், ராணிக்கும் அவனுக்கும் திருமண பேச்சை எடுக்கும் போது கூட, அவன் முற்றிலுமாக மறுத்து விட்டான். அதுபோக, கோமதிக்கு வளவனுக்கு பெண்ணைக் கொடுப்பதில் துளி அளவு கூட விருப்பம் இல்லாததால், “சொந்தத்துல ஒன்னும் முடிக்க வேண்டாம், என் பொண்ணுக்கு வெளிய வரன் பாருங்க.” என்று சொல்லி விட்டார்.  அது என்னவென்று கதையின் போக்கில் பார்போம்.

பசுபதி இறந்தப் பிறகு, கோமதியின் ஆட்டம் எல்லாம் அடங்கி விட்டது. 

இருந்தாலும், இப்பொழுதும் வீட்டில் வேலை எதுவும் செய்யாமல், மூன்று வேலையும் உண்பது உறங்குவது என்று தலையாய கடமையாக உள்ளார். 

ஆனாலும், வளவனை காணும் போது எல்லாம், அவனை ஏதாவது சொல்லிக் கொண்டு தான் இருப்பார். 

அன்று இவன் சென்று இருந்தால், இப்பொழுது தன் கணவர் உயிரோடு தன்னுடன் இருந்து இருப்பார் அல்லவா என்ற ஆதங்கம் இப்பொழுதும் வரைக்கும் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. 

அது வளவனுக்குமே குற்ற உணர்ச்சியாக, உள்ளுக்குள் இன்று வரைக்கும் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. 

அதனால், கோமதி அதைப் பற்றி பேசும் போது அவன் அமைதியாக இருந்து விடுவான். 

வீட்டிற்குச் சென்ற வளவன் வண்டியை சைடு ஸ்டான்ட் போட்டு நிறுத்தி விட்டு, உள்ளே செல்ல, அவனுக்காகவே காத்துக் கொண்டு இருந்தார் அவனின் தாய் பரிமளம். 

“வாப்பா. என்ன இவ்ளோ நேரம் ஆகிருச்சு. உனக்கு எவ்ளோ நேரமா காத்துக்கிட்டு இருக்கேன். வா..வந்து சாப்பிடு.” என்றவர் அவனுக்கு சாப்பிட எடுத்து வைத்தார். 

“நீங்க சாப்டீங்களாம்மா?” என்று வளவன் கேட்டிட, 

“நான் சாப்டேன்ப்பா. வெளிய கடைக்குப் போகணும். நீ வந்துட்டா, உனக்கு சாப்பிட எடுத்து வச்சிட்டு போகலாம்னு தான் இருந்தேன்.” என்றார்.

“ஒரு வண்டி சரிப்பாக்க லேட் ஆகிருச்சும்மா. அதான் வர கொஞ்சம் தாமதம். சரி இந்த வெயில்ல எங்கப் போக போறீங்க. ஏதாவது வாங்கணும்னா என்கிட்ட சொல்லி இருந்தா, நான் வாங்கி கொடுத்து இருப்பேன்ல. நீங்க எதுக்கு அலையுறீங்க?” என்று கேட்டான். 

“ரேஷன் கடைக்குப் போகணும். அது நான் பார்த்துகிறேன். அங்க போய் எதுக்கு நீ கூட்டத்துல நின்னுகிட்டு. அந்த நேரத்துக்கு அங்க கடையில், ஏதாவது வண்டியை  சரிப் பார்த்துட்டு இருக்கலாம்.” என்றார் பரிமளம். 

“அத்தை எங்க போனாங்க?” என்று கேட்டிட, 

“அவங்க சாப்பிட்டு தூங்குராங்கப்பா,” என்றிட, அவனும் ஒரு பெருமூச்சுடன், சாபிட்டு முடித்து விட்டு கையைக் கழுவிக் கொண்டு வீட்டில் இருந்து புறப்பட்டு, மீண்டும் அவனது செட்டிற்குச் சென்றான். 

 

தொடரும்…

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page