என் துணை – 6

திடீரென்று ஒருநாள் சாந்தி, “இன்னைக்கு உன்ன பொண்ணு பாக்க மாப்ள வீட்ல இருந்து வர்றாங்கடி. ஒழுங்கா நான் சொல்ற பையனுக்கு கழுத்தை நீட்டி கல்யாணம் பண்ணிட்டு போற வழிய பாரு. இந்த குடும்பத்தோட மானமே உன் கைல தான் இருக்கு” என்று அதட்டினார்.

“ம்மா ப்ளீஸ் மா, நான் படிக்கணும்மா. சின்ன வயசுல இருந்தே போட்டோகிராஃபர் ஆகணும்ங்குறது தான் என்னோட ஆசை. எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படிலாம் பண்ணலாமாம்மா?”

“இங்க பாருடி! உன் நியாயம் தருமம் எல்லாம் எனக்கு தெரியாது. நான் காட்டுறவன நீ கல்யாணம் பண்ணிக்கணும். அது தான் எனக்கு வேணும். ஒழுங்கா போய் ரெடியாகி வா” என கூறிவிட்டு அவர் அடுக்களை பக்கம் சென்றார்.

ஏக்கமாய் அவரையே பார்த்துக் கொண்டு நின்ற திரவ்யா, அழுது கொண்டே அறைக்குள் சென்று கதவடைத்தாள்.

“சரி உங்ககிட்ட பேசுனா தான என்னை படிக்க விட மாட்டிங்க. என்னை பார்க்க வர்ற மாப்ள கிட்டையே பேசிக்கிறேன்” என மனதில் நினைத்துக் கொண்டவளுக்கு புதுவித நம்பிக்கை பிறந்தது.

தன் பயத்தை எல்லாம் போக்கிக் கொண்டு அவளது அன்னை கூறியது போல் நல்ல பெண்ணாக தயாராகி நின்றாள். அவளை வந்து பார்த்த சாந்தி அவள் எந்த மறுப்புமின்றி தயாராகியிருப்பதை கண்டு நிம்மதி அடைந்தார்.

“என் தங்கம்! நீ எங்க முரண்டு புடிப்பியோன்னு நினைச்சேன். அம்மா பேச்ச கேட்டு அப்டியே நடந்துக்கிட்ட. இன்னிக்குன்னு பார்த்து எம்புட்டு அழகா இருக்கு எம்புள்ள!” என கூறி அவளை நெற்றி முறித்து திருஷ்டி கழித்துவிட்டு சென்றார்.

“ஆமா ஆமா, இப்போ மட்டும் தங்க பிள்ள. படிக்கணும்ன்னு சொன்னா மட்டும் பித்தள பிள்ள. போமா…” என்று எரிச்சலாக கூறினாள்.

சற்று நேரத்தில் அவர்கள் பார்த்து வைத்திருந்த மாப்பிள்ளை வீட்டாரும் வந்துவிட அனைவருக்கும் தேநீரும், பலகாரங்களும் கொடுக்கப்பட்டிருந்தது.

அவற்றை உண்டு கொண்டே பெரியவர் ஒருவர், “பொண்ணு எங்கப்பா? வர சொல்லுங்க பாப்போம்” என்று கூற திரவ்யாவை அழைத்து வந்து அனைவரின் முன்பாகவும் நிறுத்தினர்.

பெண்ணிடம் தனியாக பேச வேண்டும் என மாப்பிள்ளை கூற வீட்டின் பின் கட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இருவரும். அவன் உப்பில்லாத குடும்ப பெருமை பற்றி பேசிட, திரவ்யாவே தன் ஆசையை கூற விழைந்தாள்.

“என்னை கல்யாணம் பண்ணிட்டு மேற்கொண்டு படிக்க அனுப்புவீங்களா?”

“கல்யாணம் பண்ணிட்டு படிக்கணுமா? ஊர்ல உள்ளவனுங்க சிரிச்சிற மாட்டானுங்களா? உன்ன படிக்க அனுப்புறதுக்கா நான் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போறேன்?” என்று கூற, இந்த காலத்தில் இப்படி ஒரு முட்டாளா என்று அதிர்ந்து போனாள் திரவ்யா.

அவனோ நிறுத்தாமல், “எங்க அம்மாக்கு வயசாயிடுச்சு. அவங்களுக்கு வீட்ல இருந்து கூட மாட இருந்து ஒத்தாச பண்ண ஆள் வேணும்னுதான் நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். நீ படிக்கணும் வேலைக்கு போகணும்ன்ற எண்ணத்தோட என் வீட்டுக்கு காலடி எடுத்து வச்சிராத ஆத்தா. பொண்ணுன்னா வீட்டுக்குள்ள இருக்கணும். தெருவுல இறங்கி ஆம்பளைத்தனமா நடந்துக்க கூடாது. படி தாண்டாம இருந்தவங்கள தான் நம்ம பெரியவங்க அந்த காலத்தில பத்தினின்னு சொல்லி வச்சிருக்காங்க” என கூறினான்.

அவனின் கடைசி வார்த்தைகளில் கோபத்தின் உச்சிக்கு சென்றவள், அதனை கட்டுக்குள் கொண்டு வந்து கேள்விகள் கேட்க ஆரம்பித்தாள்.

“அப்போ உங்க வீட்ல வேலை பாக்குறதுக்கு தான் என்ன கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போறீங்களா?”

“ஆமா… பொம்பள வீட்டு வேலை செய்யிறதும், ஆம்பளை சம்பாதிச்சு போடுறதும் தான மரியாதையான குடும்பத்துக்கு அழகு? வீட்டு வேலைய பார்க்காத பொம்பளயால குடும்பம் விளங்குமா சொல்லு? உன்ன பத்தியும், உங்க அக்காவை பத்தியும் ஊருக்குள்ள விசாரிச்சேன். என்ன விட்டா உன்னை போல ஒருத்தியை யார் கல்யாணம் பண்ணுவானு நினைக்கிற?”

“ஓ, நீங்க எனக்கு வாழ்க்கை பிச்சை போட போறீங்களா?”

“இல்லையா பின்ன?” என்றவன், அருகே இருந்த கொடியில் காய்ந்த சுடிதாரை சுட்டிக்காட்டி, “என் வீட்டுக்கு வந்த பிறகு இந்த மாதிரி துணி எல்லாம் போட கூடாது. ஒழுங்கா எட்டு முழ சேலைய கட்டிக்கணும், இப்ப இருந்தே பழகு. எங்க போறதா இருந்தாலும் அத தான் கட்டணும். அப்போ தான் என் ஊர்க்காரன் என்ன மதிப்பான்” என்று கூற ஆத்திரம் தலைக்கேறிய திரவ்யா சுற்றி முற்றி பார்த்தாள்.

அங்கு அடுப்பெரிக்க வைத்திருந்த விறகு கட்டை ஒன்றை கண்டவள், அதை கையில் எடுத்து அவனை தாறுமாறாக அடிக்க ஆரம்பித்தாள்.

“ஏன்டா நாயே! உன் வீட்டுக்கு வேலைக்காரி வச்சு வேலை செய்றதுக்கு பதிலா என்னை கூட்டிட்டு போய் வேலை வாங்கலாம்ன்னு பாக்குறியா? உனக்கு வேலை செய்ய நான் தான் கிடைச்சனா? நீ என்னை கல்யாணம் பண்றியா, உன் ஊர்க்காரனை கல்யாணம் பண்றியாடா? அவன் பேசுவான் இவன் பேசுவான்னு சொல்ற? படிப்ப பத்தி உனக்கு என்னடா தெரியும்? படிச்சா கவுரவ குறைச்சல்ன்னு சொல்ற… உன் வீட்டுக்கு வந்தா படி தாண்ட கூடாதாமே. தாண்டுனவங்க தப்பானவங்களா? அப்போ உன் அம்மா ஏன்டா என்னை பார்க்க உன் வீட்டு படி தாண்டி இங்க வந்துருக்கு? அவங்களும் தப்பானவங்களா? பேசுறான் பாரு பேச்சு, படிக்காத முட்டா பய. உன்ன நான் கல்யாணம் பண்ணிக்கணுமா? போடா வெளிய… பொம்பள புள்ள எது செஞ்சாலும் தப்புனு நினைக்கிற நீயெல்லாம் உசுரோடவே இருக்க கூடாது, நேரா போய் தண்டவாளத்துல தலை வச்சு படுத்துடு.”  

அவள் கத்தியதில், வீட்டுக்குள் இருந்த அத்தனை பேரும் வெளியே ஓடி வந்தனர்.

மாப்பிள்ளை, “பொண்ணா இவ? சரியான பஜாரி. அடக்க ஒடுக்கமா இருக்கணும்னு சொன்னதுக்கு அடிக்க வர்றா. பைத்தியம் புடிச்சதெல்லாம் சங்கிலிய போட்டு வீட்டோட கட்டி வைக்காம, எங்க தலையில கட்ட பாக்குறீங்களா?”

ஆத்திரம் அடங்காத திரவ்யா, “உன் அளவுக்கு எனக்கு பைத்தியம் முத்திடலடா முட்டாளே” என அவனை விரட்டி விரட்டி அடித்தாள்.

சாந்தி எவ்வளவு தடுத்தும் நிறுத்தாமல் அவர்கள் வசித்த தெருவின் முனை வரை சென்று அடித்து துரத்தினாள். அதைப் பார்த்த உறவினர்கள் அனைவரும் சாந்தியின் முன்பே ஒவ்வொரு விதமாக பேச ஆரம்பித்தனர்.

“இது எங்க கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்த போகுது?” என்றார் ஒருவர்.

இன்னொருவர், “இது தான் படிப்பு படிப்புன்னு சொல்லிட்டு இருக்கே. இத புடிச்சி கல்யாணம் பண்ணி வச்சு யார் வாழ்க்கைற கெடுக்க போற நீ?” என சாந்தியிடம் கேட்டார்.

“இவளுக்கு இப்போ கல்யாணம் பண்ணி வைக்கிறத விட படிக்கவே வையேன் சாந்தி. நான் எதுக்கு சொல்றேன்னா நாள பின்ன கல்யாணம் பண்ணி வைக்கிற வீட்லயும் இப்படி நடந்துக்கிட்டான்னா யாருக்கு அசிங்கம்? அதுவுமில்லாம இந்நேரம் தெருமுனை வர வந்த மாப்ளயை அடிச்சி தொரத்தி விட்டுட்டான்னு ஊருக்கே தெரிஞ்சிருக்கும். இதுக்கு மேல உன் பொண்ண கேட்டு யார் வர போறாங்க? அதுவே படிச்சு வேலைக்கு போனா, சம்பளத்துக்கு ஆசைப்பட்டு ஒருத்தர் ரெண்டு பேர் வர வாய்ப்பு இருக்கு” என மற்றொருத்தி சொல்ல, சாந்தி என்ன செய்வது என புரியாமல் விழித்தார்.

உறவுக்காரர்கள் ஒவ்வொருவரும் அவரவர்கள் வீட்டிற்கு சென்ற பின், அவள் தந்தை தான் திரவ்யாவை அழைத்து பேசினார்.

“நீ ஏன்மா இன்னைக்கு அந்த பையன் கிட்ட இப்படி நடந்துக்கிட்ட? உன் கிட்ட சொல்லிட்டு தான நாங்க அந்த பையன பாக்க வரச் சொல்லி ஏற்பாடு பண்ணுனோம்?”

“நானும் அவன் கிட்ட பொறுமையா பேசி பாத்தேன்ப்பா. ஆனா அவன் ஐநூறு வருஷத்துக்கு முந்தி பொறந்தவன் மாதிரி பேசுறான். அவன் கேட்குற காசு பணத்தை தந்து அவன் வீட்டுக்கு நான் கொத்தடிமையா போகணுமா? அதுக்கு பதிலா இங்கேயே என்னை கொன்னு பொதச்சிடுங்க” என கூறியவள் தந்தையின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். அவர் ஆடிப் போயிருந்தார்…

சாந்தி, “அதுக்கு மாப்ளய அடிப்பியாடி? அவங்க போனதுக்கு பிறகு எங்க கிட்ட அவன பிடிக்கலைன்னு சொல்லி இருக்கலாமே? இப்போ நீ பார்த்து வச்சிருக்க வேலைக்கு ஊர்க்காரங்க என்னென்ன பேசுவாங்கன்னு தெரியுமா?” என கேட்க,

“பொண்ணு பார்க்க கூப்பிடாதீங்கன்னு எத்தனை தடவை சொன்னேன். கேட்டீங்களா? இல்ல, மாப்பிள்ளை வேண்டாம்ன்னு சொன்னா மட்டும் உடனே சரின்னு சொல்ல போறீங்களா?” என்றதும் சாந்தியால் எதுவும் பேச முடியவில்லை. ஏனென்றால் அவள் என்ன முடிவு சொன்னாலும் இந்த கல்யாணத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தார் அவர்.

“எப்போ பாரு ஊரு ஊருன்னு ஊருக்கு பயந்து தான் வாழணுமா? நான் அப்படி என்ன தப்பா ஆச பட்டுட்டேன். படிக்கணும்ன்னு தான நினைச்சேன். அது அவ்வளவு பெரிய பாவமா? அக்கா கல்யாணம் பண்ணிட்டு போனப்போவும் இதான் பேசுனீங்க. இப்போவும் இத தான் சொல்றீங்க. எப்போ தான்மா ஊர்க்காரங்க வாய மூடுவாங்க? நம்மால அவங்க வாய அடைக்க முடியுமா? யார் யாருக்காகவோ யோசிக்கிறீங்களே. நீங்க பெத்த பொண்ணு நான். என்னோட ஆசைய ஒரு நிமிஷம் யோசிச்சி பார்க்க மாட்டிக்கிறீங்களே” என ஆதங்கத்தில் அழுதாள் திரவ்யா.

அவளின் கண்ணீரை கண்ட ஆறுமுகம் மகளை அரவணைத்து சமாதானம் செய்தார்.

“சரி இப்போ என்ன? உனக்கு படிக்கணும், அவ்வளவு தான?” என்று கேட்க,

“ஆமாம்” என கூறியவள் அவரின் முகத்தையே ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருந்தாள்.

“நான் உன்ன படிக்க வைக்கிறேன். ஆனா அக்கா மாதிரி அதே தப்ப நீயும் பண்ண மாட்டேன்னு சத்தியம் பண்ணி குடு…” என்றார்.

“யோவ் உனக்கென்ன புத்தி கெட்டு போச்சா? அவதான் காரியமா பேசுறானா, நீ பாட்டுக்கு யோசிக்காம சரின்னு சொல்ற” என்ற சாந்தியை, திரவ்யா முறைத்தாள்.

“விடு சாந்தி, மாலதி பண்ணுன தப்புக்கு இவளுக்கு எதுக்கு தண்டனை குடுக்கணும்? ஒருவேள இவ இவளோட விருப்பப்படி படிச்சு பெரிய ஆளா ஆகிட்டான்னா அது நமக்கும் தான பெருமை?” என கூறிய தந்தையின் கழுத்தை கட்டிக் கொண்டாள் திரவ்யா.

கண்ணீர் மல்க, “ரொம்ப தேங்க்ஸ் அப்பா. சத்தியமா நான் யாரையும் லவ் பண்ண மாட்டேன். நீங்க பாக்குற மாப்ளைய தான் கல்யாணம் பண்ணிப்பேன். உங்கள தலைகுனிய விட மாட்டேன்ப்பா, என்னை நம்புங்க. எனக்கு படிச்சா மட்டும் போதும்‌, உங்களுக்கு செலவு வராதபடி பார்ட் டைம் வேலைக்கு போய் சம்பாதிக்கிறேன். எனக்கு போக பர்மிஷன் மட்டும் கொடுங்க. நான் நிச்சயமா உங்க பேரை காப்பாத்துவேன். இது உங்க மேல சத்தியம்” என கூறி அவரின் தலையில் சத்தியம் செய்தாள்.

“ஹான் இப்படி அழுது நடிச்சு தான் அவளும் படிக்க வைக்க சொன்னா. ஆனா கடைசில என்ன நடந்ததுன்னு பார்த்தீல்ல?” என்று சாந்தி கேட்டாள்.

“நடந்து முடிஞ்சத பத்தி பேசாத. இனி இவள எப்படி படிக்க வைக்க போறோம்ன்னு மட்டும் யோசிப்போம்” என்றவர் மகளிடம், “ஏம்மா பக்கத்து ஊர்ல இருக்குற பொம்பள புள்ளைங்க படிக்கிற காலேஜ்ல உன்ன சேர்த்து விட்றவா?” என கேட்க,

“அப்பா அந்த படிப்பு இங்க உள்ள காலேஜ்ல எல்லாம் கிடையாதுப்பா. அது படிக்க சென்னைக்கு போகணும்.”

“ஆத்தி அவ்வளவு தொலவுலையா? பக்கத்து ஊர்ல படிக்க வச்சவளே அப்படி போய்ட்டா. உன்ன எங்கையோ கண் காணாத தொலைவுக்கு அனுப்பிட்டு நீ எப்படி இருக்க என்ன ஏதுன்னு நாங்க இங்க வயித்துல நெருப்பை கட்டிட்டு இருக்கவா? நீ இதுவரைக்கும் படிச்சு கிழிச்சதே போதும். சிவனேனு வீட்டோட இரு!” என்றார் உறுதியாக…

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
🌙 நிலவின் கனவு! ✨​
223 40 0
இராவணின் வீணையவள்
45 0 0
ஆரெழில் தூரிகை
304 15 1
வேண்டினேன் நானுன்னை
532 6 0
நீ எந்தன் நிஜமா?
374 8 1
என்துணை நீயல்லவா?
449 12 0
கற்றது காதல்
211 1 0
நிழலென தொடர்கிறேன்
210 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page