ஏகா காதலன் – 5
அத்தியாயம் 5
வீட்டிற்குள் சோர்வாக நுழைந்தாள் இளங்கிளி..
மதிய வேளையில் குடோனுக்குள் நுழைந்தவளுக்கு வேலை பெண்டை நிமிர்த்தது..
வேலை செய்து பழகாத உடல் இல்லை.. ஆனால் வேண்டுமென்றே அவளின் மேல் திணிக்கப்பட்ட வேலையால் உடல் பலமிழந்துக் காணப்பட்டது..
அவளுக்காகவே காத்திருந்த விஸ்வநாதன் கண்ணில், அவளின் சோர்வு தப்பாமல் பட்டது..
“முதல் நாளே இவ்வளவு வேலையா?..” என ஒரு வித நெருடல் அவருக்குள் இருந்துக் கொண்டேயிருந்தது..
“ரொம்ப வேலையா ம்மா?..”என கேட்ட விஸ்வநாதனைப் பார்த்து, அமைதியா சிறு புன்னகை மட்டும் செய்தாள்..
யாரிடமும் அவளுக்குப் பெரிதாக ஒட்டுதல் இல்லை.. ஆர்த்தி, சம்யுக்தாவைப் பார்த்தால் மட்டுமே பேச வேண்டும் என்று அவளுக்குத் தோன்றுகிறது..
அவளின் அமைதியே சொல்லாமல் சொன்னது, அவளுக்கு இங்கே இருக்கப் பிடிக்கவில்லை என்று..
“சரிம்மா.. நீ போய் ரெஸ்ட் எடு..” என அவளை அறைக்குள் அனுப்பி வைத்தார்..
“வந்தனா..” என குரல் கொடுக்க,
“சொல்லுங்க மாமா..” என்றபடி சமையலறையில் இருந்து வந்தார்..
“அந்தப் புள்ளைக்கு ஒரு ஜூஸ் மட்டும் போட்டு கொடும்மா.. முகமெல்லாம் வாடிப் போய்க் கிடக்கு..” என்றார் சற்று நலிந்த குரலில்,
அவளின் முகத்தைப் பார்த்தவருக்கு ஒரு வித குற்றவுணர்ச்சியாக இருந்தது..
“ஏற்கனவே போட்டு வச்சிட்டேன் மாமா.. அவ வெளியே வந்தவுடனே கொடுத்துடுறேன்.. இல்லை நானேக் கொண்டு போய் கதவை தட்டிக் கொடுத்துட்டு வந்துடுறேன்.. கவலைப்படாதிங்க.. திருப்பதி மாமா பேத்தின்னா, அவளுக்கு இந்த வீட்ல கண்டிப்பா மரியாதை கிடைக்கும்.” என்றவர், சிரித்த முகமாக சென்று விட,
அவர்கள் பேசியதை வாசலில் நின்று கோணல் சிரிப்புடன் கேட்டுக்கொண்டிருந்தான் வளன்.
“திருப்பதி மாமா பேத்திக்கு, இந்த வீட்ல மரியாதையா?.. நிச்சயமாக கிடைக்காது.. கிடைக்கவும் நான் விடமாட்டேன். திமிர் பிடிச்சவ.. என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்தாளா?.. அவ அப்பன் வீட்டு கடை மாதிரி விருட்டு விருட்டுன்னு வந்து சேர்ந்துட்டா.. இவளை நான் தேடணுமா?..”
“அவன் ஏன் அவளை தேடினான்?.. என்று அவனுக்கேப் புரியவில்லை..”
வேகமாக தன்னறைக்குச் சென்று நீருக்கடியில் நின்றான்..
அதே நேரம் குளித்து முடித்து வெளியே வந்தாள் இளங்கிளி..
அவளின் முன்பாக ஜூஸை நீட்டினார் வந்தனா..
அவளின் உடம்பிற்கு, மனதுக்கும் அந்த ஜூஸ் தேவைப்பட்டது போல.. வேகமாக வாங்கிக் குடித்தாள்..
“ஈவ்னிங் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிடுறீயா?..” என்றவரைப் பார்த்து, இல்லை எனும் விதமாய் தலையாட்டியவள், வீட்டை ஒரு முறை பார்வையால் சுழற்றினாள்..
அங்கு சோபாவில் அமர்ந்திருந்த விஸ்வநாதனை தவிர வேற யாருமில்லை..
மணி ஆறாகுது.. இன்னும் யாரும் வரலையா?.. என மனதுக்குள் நினைத்தபடி, பார்வையால் வீட்டை அலசிக் கொண்டே, வெளியே வந்தாள்..
அவளுக்குத் தெரியாதே 5 மணிக்கு வந்த அனைவரும், ஷாப்பிங் சென்று விட்டனர் என்பது..
ஏனோ இயற்கையோடு ஒன்றி வளர்ந்தவளுக்கு, இங்கு எதுவுமே ஒட்டாத தன்மை..
ஓட்டு வீட்டில் இருந்த நிம்மதியும், சந்தோஷம் அவளுக்கு இங்கே கிடைக்கவில்லை..
அவர்களின் தோட்டம் தான் ஞாபகத்திற்கு வந்தது..
காலார நடந்து வரலாம் என அங்கே சென்றாள்..
அதுவும் அவர்களின் தோட்டத்தில் போட்டிருந்த ஊஞ்சல் இவளை சற்று அசைத்துத்தான் பார்த்தது..
மெதுவாக சென்று அதில் அமர்ந்தாள்..
காற்றில் கால்களை அழுத்தமாக ஊன்றி, சலங்கை அணிந்த மெட்டிசைக்க, ஊஞ்சல் மெதுவாக ஆட ஆரம்பித்தது..
மெதுவாக ஆடினாள்.. காற்றுக்கும் நோகாத வண்ணம்..
மனதிற்கு ஒரு வித இதமாக இருந்தது..
காலையில் இருந்தே நோவு கண்ட உடலுக்கு, இந்த அமைதி மனதிற்கு புது வித தெம்பைக் கொடுத்தது..
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனோடு தான் ஆட..
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனோடு தான் ஆட..
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட
இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லையே கூட..
இளைய கன்னியின் இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட….
இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லையே கூட..
இளைய கன்னியின் இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட….
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ..ஓ
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ…ஓ
“அப்படி யார் மேல ஆசை வச்ச?..” என்ற கணீர்க்குரலில், ஊஞ்சலில் தலைசாய்த்து அமர்ந்திருந்தவள் பட்டென்று கண்களை திறந்தாள்..
அவளின் முன்பாக தீயாய் முறைத்தபடி நின்றிருந்தான் வளன்..
“சொல்லுடி.. யார் மேல ஆசை வச்ச?.. இப்படி உருகி உருகிப் பாடிட்டு இருக்கிற?.. யாரு அந்த ராசபாண்டி மேலேயா?..” என நக்கலாக கேட்டவனைக் கண்டு மெளனமாகவே நின்றாள்..
அவனை எதிர்த்து என்ன பேசினாலும், காயப்படப் போவது அவள் தான் என அறிந்தவள், அமைதியாக நின்றுக் கொண்டிருந்தாள்..
“யார் மேல டி ஆசை வச்ச?..” என்றவனை விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தவள்,
“வார்த்தையை அளந்துப் பேசுங்க.. என்னை டி போட்டுக் கூப்பிடுற உரிமையை நான் உங்களுக்கு கொடுக்கலை?..” என கோபத்தில் கண்கள் சிவக்க சொன்னவளைக் கண்டு, வானம் அதிர சிரித்தான் வளன்..
அவனின் சிரிப்பில், இவளின் கண்கள் இடுங்கியது.
‘எதற்கு இப்படி சிரிக்கிறான்?.. ஒரு வேளை லூசாக இருப்பானோ?..’ என நினைத்துக் கொண்டே, அங்கிருந்து வேகமாக வெளியே செல்ல முயன்றாள்..
தனக்கு பதில் சொல்லாமல் செல்பவளின் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தியிருந்தான் வளன்..
அவன் கைப்பிடிக்கவும் சற்று பதறிப் போனாள்..
“விடுங்க கையை.. என்ன பண்றீங்க?..” என்றவள், அவன் கைகளுக்குள் சிறையிருந்த தன கையை மீட்டெடுக்கப் போராடினாள்..
“வளன்ன்ன்.” என்ற கீச்சுக்குரலில், இருவரும் வேகமாக திரும்பிப் பார்க்க, அங்கு கோபத்தில் மூக்கு விடைக்க நின்றிருந்தாள் இதயா..
“என்ன வளன் பண்றீங்க?..” என்றாள் சிவந்த முகத்துடன்..
“நத்திங் இதி.. நீ போ.. நான் வர்றேன்..” என்றான் வளன்..
“வளன், எதுக்கு அந்தப் பொண்ணு கையைப் பிடிச்சிருக்க?.. விடு அவளை..” என்றாள் இதயா அதட்டலாக,
“நத்திங்னு சொன்னேன் இதிஈஈ.. ந்நீ போ.. நான் வர்றேன்..” என அழுத்தமாக சொன்னவனின் முகம் லேசாக கோபத்தைத் தத்தெடுத்தது.
“இல்லை வளன்.. நான்..” இதயாவிற்கு மனமே ஆறவில்லை..
இன்னமும் அவன் கையோடு இளங்கிளி கை அகப்பட்டுத்தான் கிடந்தது..
“இதிஈஈஈ..” என பல்லைக் கடித்தான்..
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் அவனிடமிருந்து தன் கைகளை உருவிக் கொண்டு ஓடினாள் இளங்கிளி..
“ஏய்ய்ய்..” என காற்றில் கைகளை வீசினான் வளன்..
தன்னறைக்குள் நுழைந்தவளுக்கு, வளனின் மேல் அப்படியொரு கோபம் வந்தது..
அவளைப் பொறுத்தவரை ராசபாண்டியும் ஒன்று தான், வளனும் ஒன்று தான்..
அவளிடம் வம்பை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஒருவன் ஆசையில் வளர்க்கிறான்.. இன்னொருவன் கோபத்தில் வளர்க்கிறான் என்பது தெளிவாக புரிந்தது..
ஏனோ அங்கு இருக்கவே பிடிக்கவில்லை..
இளங்கிளி சென்ற பின்பும், கோபம் சற்றும் குறையாமல் எரிச்சலுடன் நின்றிருந்தான் வளன்.
அவனையே கண்கள் இடுங்கப் பார்த்தாள் இதியா.
“என்ன வளன்?.. அவ கையெல்லாம் பிடிக்கிற?.. நீ இதுவரைக்கும் எந்தப் பொண்ணுக்கிட்டையும் இந்த மாதிரி நடந்துக்கிட்டதே இல்லையே?..” என்றாள் ஒரு வித சந்தேகப் பார்வையுடன்..
“இங்கே பாரு, நீ என்னை சந்தேகப்படுற அளவுக்கு, அவ வொர்த் இல்லை.. எனக்கு அவளைப் பார்த்தாலே பிடிக்கலை..” என்றவன், கடுமை நிறைந்த முகத்துடன் வேகமாக அங்கிருந்து வீட்டிற்குள் நுழைய,
அவனை வழிமறித்தாற் போன்று நின்றிருந்தார் விஸ்வநாதன்..
அவரின் முகத்திலும் அவ்வளவு கடுமை..
“உங்களுக்கு என்ன தாத்தா வேணும்?.. இப்படி வழியை மறைச்சு நிக்குறீங்க?.. ஆளாளுக்கு ஏன் என் உயிரை எடுக்குறீங்க?..” என்றான் சிடுசிடுப்புடன்,
“நான் உன் வழியில நிக்கலை.. நீ தான் இளங்கிளியோட வழியில நிக்கிற?.. உனக்கு அவ மேல அப்படி என்ன வெறுப்பு?..” என்றார் கோபமாக,
“ஓஹ்.. அவ என் மேல கம்ப்ளைன்ட் பண்ணிட்டுப் போனாளா?..” என்றான் எகத்தாளம் நிறைந்த குரலில்,
அவனை அதிர்ந்து தான் பார்த்தார் விஸ்வநாதன்..
இதுவரை எந்தப் பெண்ணிடமும் வம்பிழுக்காத தன் பேரனா இது?..
இதயாவை நேசிப்பதைக் கூட முதலில் அவரிடம் தானே கூறினான்.. அப்பேற்ப்பட்ட பேரன் தன்னை எதிர்த்து நிற்கிறானா?.. என நினைக்கும் போதே உள்ளுக்குள் ஒரு வித தடுமாற்றம்..
“நீ பண்றது தப்பு வளன்?.. எப்படியாவது தன் பேரனை இளங்கிளியிடம் இருந்து விலக்கி வைத்து விட்டால், போதும்” என்ற நிலைமையில் அவர் இருந்தார்..
“சரி நான் தப்பு பண்றேன்.. அதுக்கென்ன இப்போ?..” என்றான் எரிச்சலுடன்,
“நான் அந்தப் பொண்ணை நல்லபடியா வாழ வைக்கணும்னு நினைக்கிறேன் வளன்.. உனக்குப் புரியுதா?.. இல்லையா?..” என்றார் எச்சரிக்கும் குரலில்,
“ஓஹ்.. வாழ வைக்கணுமா?.. வச்சிட்டாப் போச்சு.. எப்படி வாழ வைப்பீங்க?.. நல்ல மாப்பிள்ளை பார்ப்பீங்களா?.. இல்ல நம்ம சொத்துல பாதியை அவளுக்கு எழுதி வைப்பீங்களா?” என இளக்காரமாக கேட்டவனைக் கண்கள் சிவக்க பார்த்த விஸ்வநாதன்,
“இப்போ சொல்லுறேன்.. என் சொத்துல ஒரு பங்கு கண்டிப்பா இளங்கிளியைப் போய்ச்சேரும்.. அதை யார் நினைச்சாலும், தடுக்க முடியாது..” என ஆணித்தரமாக, வளனின் கண்களைப் பார்த்து சொல்லிவிட்டுச் சென்றவரைக் கண்டு அதிர்ந்து நின்றான் வளன்..
தன் அறைக்குள் நுழைந்த விஸ்வநாதனுக்கு மனமே ஆறவில்லை..
தன் பேரனின் செய்கை இரண்டு நாட்களாக சுத்தமாக சரியில்லை என்பதை உணர்ந்திருந்தார்..
வேகமாக தன் போனை வக்கீல் சண்முகத்திற்கு அழைத்தார்.
“சொல்லுங்க சார்..” என்றார் சண்முகம்,
“சண்முகம்.. என் சொத்துல யார், யாருக்கு என்ன பங்குன்னு சொல்லியிருந்தேன்ல..”
“ஆமா சார்.. சொல்லியிருக்கீங்க?..”
“அதுல சின்ன மாற்றம்.. என் சொத்துல, என் பேர்ல இருக்கிற T.V.ஸ்டோர்ஸை இளங்கிளிங்குற பேர்க்கு உயில் எழுதிடுங்க..”
“சார்..” என அதிர்ந்தார் சண்முகம்..
“என்ன சார் சொல்லுறீங்க?.. T.V.ஸ்டோர்ஸ் உங்க உழைப்போட ஆரம்பம் சார்.. அது தான் சார் நீங்க முதல்ல ஆரம்பிச்சது.. அதுக்கப்புறம் தான் மத்த ப்ரென்ஞ் எல்லாம் தொடங்குனீங்க.. உங்க வாழ்க்கையோட மூலதனமே அங்கே இருந்து தான் தொடங்குனீங்க..
இப்போ சென்னையில மட்டுமே நீங்க 13 இடத்துல ப்ரென்ஞ் தொடங்கியிருக்கீங்கன்னா, அது சும்மா இல்லை சார்.. உங்க அசுர உழைப்பு மட்டும் தான்..
அப்பேறப்பட்ட உழைப்பை இன்னொருத்தருக்கு தூக்கிக் கொடுக்கச் சொன்னா, எப்படி சார்?” என்றார் ஆற்றாமை நிறைந்த குரலில்,
“நீங்க சொல்றது எல்லாம் உண்மை தான் சண்முகம்.. ஆனா என் நண்பன் கொடுத்த 5 லட்சத்தை முதலீடா வச்சித்தான் இந்தக் கடையே ஆரம்பிச்சேன்..
அவன் அவனோட வீட்டை அடமானம் வச்சித்தான் எனக்குப் பணம் கொடுத்தான்னு எனக்கு தெரியாது சண்முகம்..
எனக்குக் கொடுத்த காசுக்காக, அவன் வட்டிக்கட்டி பத்திரத்தை மீட்டான்..
அந்தக் காசு மட்டும் இருந்திருந்தா அவன் பொண்ணை நல்ல இடத்துல கட்டிக் கொடுத்திருப்பான்..
ஒரு குடிகாரனுக்கு கட்டிக் கொடுத்திருக்க மாட்டான்.. அந்தக்குடிகாரன், பாவம் சத்யா (இளங்கிளியின் தாய்) குடிகாரன் கையில் சிக்கி சின்னாபின்னாமாகி செத்துப் போயிட்டா.. 5 வயசுப்பிள்ளையை கையில வச்சருந்தப்பக் கூட, என்கிட்ட காசை திருப்பிக் கேட்கலை..
சாகுற வரைக்கும், அவன் எனக்கு நண்பனா தான் இருந்தான்.. ஆனா நான்.. என்றவருக்கு துக்கம் தொண்டையடைத்தது..
இப்போ சொல்லுங்க சண்முகம்.. அப்பேற்ப்பட்ட நண்பனோட பேத்தி இப்போ அனாதையா நிக்கிறா..
அவளுக்கு நான் சொத்து எழுதி வைக்குறதுல என்ன தப்பு?..
“சரி சார்.. நீங்க சொல்லுற மாதிரியே பண்ணிடுறேன்..” என்றார் சண்முகம்..
சொத்தை வைத்து பேரனை அடக்கலாம் என அவர் நினைத்தார்?.. அவனோ இளங்கிளியின் வாழ்க்கையை சின்னாபின்னாமாக்கி விடுவான் என்பதை அறியாமல்
அறைக்குள் நுழைந்தவன், தன் பீரோலின் பின்னால் மறைத்து வைத்திருந்த சரக்கு பாட்டிலைக் கையிலெடுத்தான்..
எப்பொழுதாவது குடிக்கும் பழக்கம் அவனிடம் உண்டு..
சிகரெட், குடி எல்லாமே அவன் கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கும்.. ஆனால் இளங்கிளியைப் பார்த்ததில் இருந்தே, எதுவுமே அவன் கட்டுப்பாட்டுக்குள் இல்லை..
எல்லாமே தன்னை மீறிச் செல்கின்ற ஒரு உணர்வு..
தன் கைகளில் இருந்த பாட்டிலின் மூடியை வாய் கொண்டு திறந்தவன், அப்படியே தொண்டையில் சரித்தான்..
கண்களில் அதீத கோபம், மூக்கு விடைத்து சிவந்து நின்றிருந்தான்..
“யாரு சொத்தை?.. யார் அனுபவிக்கிறது?.. நான், எங்க அப்பா, எங்க தாத்தா ன்னு வழி வழியா வேர்வை சிந்தி உழைச்சு சம்பாதிப்போமோ, பிச்சைக் காசு 5 லட்சத்தை அவ தாத்தா கொடுத்துட்டா.. அவளுக்கு இந்த சொத்துல பங்கு கொடுத்துருவோமோ?.. முடியாது.. அவளுக்கு இங்கிருந்து ஒரு குண்டூசி கூட கிடைக்க விடமாட்டேன்..” என உள்ளுக்குள் கறுவிக் கொண்டே இன்னும் மதுவை தன் வாயில் சரித்துக் கொண்டான்..
ஒருவன் தன் மேல் தீரா பகையைக் கொண்டிருக்கிறான் என்பதைக் கூட அறியாமல், பாலாஜியிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள் இளங்கிளி..
