ஏகா காதலன் – 6
அத்தியாயம் 6
பாலாஜியிடம் பேசிய பின்பு தான் மனம் லேசானது இளங்கிளிக்கு..
பாலாஜி வேறு யாருமல்ல இளங்கிளியின் பால்ய கால நண்பன்..
சிறு வயதில் இருந்தே இருவருக்குள்ளும் நல்ல நட்புறவு இருந்தது..
இளங்கிளியின் எதிர் வீட்டில் வசிப்பவன் தான் இந்த பாலாஜி..
திருப்பதிக்கு இளங்கிளியை பாலாஜிக்கு மணம் முடிக்கும் எண்ணமும் இருந்தது..
ஆனால் அதற்கெல்லாம் இடைஞ்சலாக இருந்தது பாலாஜியின் அன்னை சாந்தா..
அவருக்கு இளங்கிளியைப் பார்த்தாலே பிடிக்காது..
அவளின் ஏழ்மை நிலை.. திருப்பதியின் தாராள குணம் என எதுவுமே சாந்தாவிற்கு பிடிக்காது..
சாந்தாவின் கணவர் ஒரு குடிகாரர்.. தன் தேவைக்கு குடித்து விட்டு எங்கேயாவது மட்டையாகி விடுவார்..
அவருக்கு இருக்கும் ஒரே ஆதரவு பாலாஜி மட்டுமே..
பாலாஜியின் வருமானம் அவருக்கு மிகவும் தேவைப்பட்டது..
அதனாலேயே சிறு வயதில் இருந்தே பாலாஜியை படிக்கக்கூட அனுப்பாமல், மெக்கானிக் செட் ஒன்றிற்கு எடுபிடியாக அனுப்பி விட்டார்..
பாலாஜிக்கு எல்லாரும் படிக்கும் வயதில், தான் மட்டும் இப்படி வேலைக்குச் செல்வது வருத்தமாக இருக்கும்..
அதை இளங்கிளியிடம் மட்டும் சொல்லி வருத்தப்படுவான்.. அவளுமே தன் நண்பனுக்காக வருத்தப்படுவாள்.
பாலாஜியின் இரு தங்கைகளும் பருவம் ஏய்தி இருக்கும் வேளையில், அவர்களுக்கு கல்யாணம் செய்து வைக்க பணம் வேண்டுமென்றே, பாலாஜியை துபாயில் அடிமை வேலைக்கு அனுப்பி விட்டார் சாந்தா.
பிரியவே மனமில்லாத பாலாஜி அழுதுக் கொண்டு தான் துபாய்க்கு சென்றான்..
வேறு வழியில்லையே அவனுக்கு..
அங்கு அவனின் வேலை சொல்லில் மாளாது..
மூன்று வருடங்களில் பெரிய தங்கைக்கு 20 பவுன் நகை போட்டு திருமணம் செய்து வைத்து விட்டான்..
ஓட்டு வீடாக இருந்த வீட்டை கார வீடாக மாற்றினான்..
கல்யாணத்திற்காக ஒரு வாரம் வந்தான்.. அப்பொழுது தான் இளங்கிளியின் போன் நம்பரையும் வாங்கிக் கொண்டு சென்று விட்டான்..
பாலாஜி துபாயில் இருந்து வருவதற்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருந்தது..
திருப்பதி இறந்த செய்தியை சாந்தாவின் மூலம் அறிந்துக் கொண்டவன், உடனே இளங்கிளிக்கு அழைத்து விட்டான்..
சிறிது நேர நலம் விசாரிப்பு, சிறிது நேரம் ஆறுதல், சில துளி கண்ணீருக்கு பிறகு போனை அணைத்த இளங்கிளியின் மனமோ சற்று ஆறுதலாக உணர்ந்தது..
பாலாஜியிடம் பேசிய பின்பே நித்திரை சுகமாக வந்தது.
அடுத்த நாள் காலை தாத்தாவின் முன்பாக வந்து நின்றாள் இளங்கிளி..
“தாத்தா..” என்றவளுக்கு, அவரிடமே பேசவே சற்று தயக்கம் தான்..
ஆனால் பேசியாக வேண்டிய கட்டாயம் அவளுக்கு..
“சொல்லு ம்மா..”
“நான் தனியாவே வேலைக்குப் போயிடுறேன்.. உங்க பேரனோட போக எனக்கு இஷ்டமில்லை..” என்றவளைக் கண்டு அதிரவெல்லாம் இல்லை.
அவர் நினைத்தது தானே இதுவும்.. இளங்கிளிக்கும், வளனுக்கும் ஒத்துப்போகவில்லை என்பதை அவரும் அறிந்திருந்தார்..
“சரிம்மா, நான் நீ போயிட்டு வர்றதுக்கு உனக்கு கார் ஏற்பாடு பண்றேன்..”
“இல்லை தேவையில்லை..” என்றாள் பட்டென்று..
“ஏன் மா?..” அவளின் பதிலில் விஸ்வநாதனின் முகம் வாடி விட்டது..
“இல்லை தாத்தா, எனக்கு தனியா போயிட்டு வர்றது தான் வசதி.. உங்க பேரனோட என்னால இயல்பா இருக்க முடியலை..” என்றாள், மனதில் இருப்பதை மறையாமல்,
“சரி ம்மா.. நீ தனியா போயிட்டு வா.. இன்னைக்கு ஒரு நாள் நான் முத்துவை பஸ் ஸ்டாண்டுக்கு வழிகாட்டச் சொல்றேன்..” என்றவர், “முத்து..” என்றழைக்க.. வேகமாக வெள்ளை பேன்ட், வெள்ளை சட்டை சீருடையில் ஒருவன் வந்து நின்றான்.
“இன்னைக்கு ஒரு நாள் இளங்கிளிக்கு பஸ் ஸ்டாண்ட் எங்கே இருக்குன்னு காமி.. கூடவே போயிட்டு வழியைக் காமிச்சிட்டு வா.. நாளைக்கு அவளே தனியா போயிப்பா..” என்றவருக்கு மனம் கனத்துப் போனது..
தன் நண்பனின் பேத்தி, தன் வீட்டுடன் ஒன்ற முடியாமல் தவிப்பதை அவரும் பார்த்துக் கொண்டு தானிருக்கிறார்..
அந்தக் கவலை அவரின் முகத்தில் அப்படியே தெரிந்தது..
முத்துவுடன் இணைந்து இளங்கிளி கேட்டை விட்டுப் போவது மாடியில் நின்றுக் கொண்டிருந்த வளனின் கண்களுக்கு தப்பாமல் பட்டது..
“இருவரும் சேர்ந்து எங்கேச் செல்கிறார்கள்?..” என நினைத்துக் கொண்டே கருப்பு நிற சட்டையை மடக்கி விட்டபடி படிகளில் இருந்து வேகமாக இறங்கினான்..
“வளன்..” என அழைத்தபடி வந்த, இதயாவின் குரல், அவன் செவியில் சிறிதும் விழவில்லை..
வேகமாக ஓடி வந்த வளன், “அவுங்க ரெண்டு பேரும் எங்கே போறாங்க?..” என்றான் விஸ்வநாதனிடம் சற்று மூச்சு வாங்கியபடி,
“இளங்கிளி வேலைக்குப் போறா?..”
“முத்துக்கு அவக்கூட என்ன வேலை?..” என்ற பேரனை வித்தியாசமாகப் பார்த்தார் விஸ்வநாதன்..
“அதை எதுக்கு நீ கேட்கிற?..” என்றார் விஸ்வநாதன் கடினக்குரலில்,
“தாத்தாஆஆ.. என்னை நீங்க கேள்விக் கேட்காதிங்க.. நான் கேட்குறதுக்குப் பதில் சொல்லுங்க..” என்றான் சட்டமாக,
“சொல்ல முடியாது..” என்றவரை திரும்பிப் பார்த்து முறைத்தவன்,
“நீங்க அவளுக்காகப் பேசுறதைப் பார்க்க பார்க்க பத்திக்கிட்டு வருது..” என்றவன், தன் கார் சாவியை எடுப்பதற்காக வீட்டிற்குள் சென்றான்.
“என்ன வளன்?.. கூப்பிட கூப்பிட, காதுலேயே வாங்காம போற?..” என்ற இதயாவின் புறம் திரும்பியவன்,
“நான் என்ன உன் வீட்டு நாய்க்குட்டியா?.. நீ கூப்பிட்ட குரலுக்கு எல்லாம் திரும்பிப் பார்க்க?.. என்னதான் உன் பிரச்சினை?.. மனுஷனை இம்சை பண்ணிக்கிட்டு..” என்றவனை அதிர்ந்து பார்த்தாள் இதயா..
தன்னிடம் எரிந்து விழுந்துச் செல்லும் வளனை கண்ணீர் மல்க பார்த்தாள் இதயா..
இதுவரை தன்னிடம் இது போன்ற வார்த்தைகளை அவன் பேசியதே இல்லையே?.. என நினைக்கும் போதே வலித்தது..
அவனோ கார் சாவியை எடுத்துக் கொண்டு வாசலுக்கு விரைந்தான்..
அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த விஸ்வநாதனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
அவனைப் பிடிக்காத பிள்ளை பின்னாடி ஓடுறான்.. அவன் காதலிக்கிற பிள்ளையை விரட்டுறான்.. ஒன்னும் சரியா படலையே?..” என சிந்தித்தபடி, அவர் வீட்டுக்குள் நுழைந்தார்..
வளனோ காரை எடுத்துக் கொண்டு அந்த தெருவின் முனையைத் தாண்டுவதற்குள், அவன் கண்ட காட்சி அவன் முகத்தில் அனலை அள்ளி வீசியதைப் போன்று தகித்தது..
சிரித்துக் கொண்டு போகும் இருவரையும் பார்க்கும் பொழுதே, அமிலத்தை அள்ளி முகத்தில் வீசினாற் போன்று, முகமெல்லாம் தகித்தது..
“இவனுடன் சிரித்து சிரித்துப் பேசும் அளவிற்கு வந்து விட்டாயா?..” என நினைத்துக் கொண்டு அவர்களின் பின்னால் காரை உருட்டிக் கொண்டுச் சென்றான்..
“இது தான் இளங்கிளி பஸ் ஸ்டாண்ட்.. இங்கே இருந்து டி.நகர்க்கு அரை மணி நேரம் தான்.. வா..” என்றழைத்தபடி, இருவருமே பஸ்சிற்காக காத்திருக்க ஆரம்பித்தனர்..
மூன்று நாட்களாக புன்னகை தழுவாத இளங்கிளியின் முகம், முத்துவிடம் சிரித்து சிரித்துப் பேசியது..
“தாத்தா இறந்துட்டாங்கிற துக்கம் கொஞ்சமாவது இருக்கா?.. சிரிச்சு சிரிச்சுப் பேசிட்டு இருக்கிறா?..” என உள்ளுக்குள் அனலாய் கனன்றுக் கொண்டிருந்தான் வளன்..
ஐந்து நிமிடத்திலேயே ஒரு பஸ் வர, இருவரும் ஒன்று போல் வண்டியில் ஏறினார்கள்..
முத்துவின் தோளும், இளங்கிளியின் தோளும் தாராளமாக உரசிக் கொண்டது..
அதைப் பார்த்தவன் பல்லைக் கடித்தான்..
“ஆம்பிளை ஒருத்தன் உரசுறான்?.. சூடு, சொரணை கொஞ்சமாவது இருக்கா?.. வெட்கங்கெட்டவ.. எவன் எப்போ உரசுவான்னு காத்துக் கிடப்பா போல..” என உள்ளுக்குள் அப்பொழுதும் இளங்கிளியைத் தான் சாடினான்..
பஸ் புறப்படவும், வளன் தன் காரிலேயே பஸ்சை பின் தொடர்ந்தான்..
அலுங்காமல், குலுங்காமல் அரை மணி நேர பயணத்தில் டி.நகர் வந்து விட்டது..
“இது தான் நீ இறங்க வேண்டிய பஸ் ஸ்டாண்ட். இந்த ரோட்டை க்ராஸ் பண்ணிப் போ.. அங்கே இருக்குப் பாரு.. நம்ம கடை..” என முத்து கை நீட்டிய திசையைப் பார்த்தவள், லேசான புன்னகைத்தாள்..
ஆம்.. அங்கு 9 மாடிக் கட்டிடம் வெள்ளை நிற பளிங்கு மாளிகையைப் போன்று மின்னிக் கொண்டிருந்தது.. T.V.ஸ்டோர்ஸ் என்ற பெயர்ப் பலகையை சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்தாள்..
“சரி அண்ணா.. இனி நான் பார்த்துக்கிறேன்..”
“சரி ம்மா.. பார்த்துக்கோ.. அப்புறம் என் நம்பரை நோட் பண்ணிக்கோ.. என்னைக்காவது பஸ் மிஸ் பண்ணிட்டா, எனக்குப் போன் பண்ணு.. நானே உன்னை அழைச்சிட்டுப் போக வருவேன்..” என்ற முத்துவை கனிவுடன் பார்த்தாள்..
“கண்டிப்பா அண்ணா.. நம்பர் சொல்லுங்க..” என தன் போனில் ஷேவ் பண்ணிக் கொண்டாள்..
அவர்கள் பேசியது வளனுக்கு கேட்கவில்லை என்றாலும், அவர்கள் நம்பர் பரிமாறிக் கொள்வது வளனின் கண்களில் தப்பாமல் பட்டது..
“கண்டவன் கூட இளிச்சி, இளிச்சிப் பேசுறதைப் பாரு..” என உள்ளுக்குள் அவளை இளக்காரமாக நினைத்தபடி, தன் ஸ்டோர்ஸை நோக்கி காரை திருப்பினான்..
காரை பார்க்கிங்கில் விட்டு விட்டு, பின் பக்கம் இருக்கும் குடோன் வழியாக தான் கடைக்குள் நுழைந்தான் அவன்..
அவன் லிப்ட்டில் ஏறுவதற்கும், வேகமாக இளங்கிளி வருவதற்கும் சரியாக இருந்தது..
லிப்ஃட்டில் நுழைந்த இளங்கிளிக்கு அடுத்த நொடியே கண்கள் விரிந்தது..
ஆம். லிப்ஃட்டில் இளங்கிளி, வளனைத் தவிர வேறு யாருமில்லை..
ஒரு நிமிடம் உடல் அதிர, ஓரக்கண்ணால் வளனைப் பார்த்தாள்..
ஆனால் அவனோ, கடைக்கண் போட்டு எல்லாம் பார்க்கவில்லை.. அவளையே சுட்டெரிப்பதை போல் முறைத்துக் கொண்டிருந்தான்..
“எதுக்கு இப்படி முறைக்கிறான்?.. ஒரு வேளை நாம லேட்டா வந்துட்டோமா?..” என நினைத்தபடி வாட்சை திருப்பிப் பார்க்க.. சொன்ன நேரத்தில் இருந்து 5 நிமிடம் முன்னதாகவே வந்து விட்டாள்..
“நாம கரெக்டான டைம்க்கு தானே வந்திருக்கிறோம்..” என உள்ளுக்குள் நினைத்தபடி, 4 வது நம்பரை அழுத்தச் சென்றாள்.. அதற்குள் 9 வது நம்பரை அழுத்தி விட்டான் வளன்..
இளங்கிளிக்கோ என்ன சொல்வதென்றே தெரியவில்லை..
“இப்போ நாம நம்பரை அழுத்தலாமா?.. வேண்டாமா?.. சரி அவனே முதலில் போகட்டும்..” என நினைத்தவள், அமைதியாக கைகளை கட்டியபடி நின்றாள்..
கைக் கட்டியிருந்தாலும், உடலில் ஒரு வித நடுக்கம் தெரிந்தது..
“அப்புறம், உன் பாய் ப்ரெண்டோட பஸ் பயணம் எப்படி இருந்திச்சு?..” என்றவனை புரியாமல் பார்த்தாள் இளங்கிளி..
“என்னடி வட்டக்கண்ணை விரிக்கிற?.. அதான் முத்துக்கூட ஜோடியா சிரிச்சு, சிரிச்சுப் பேசிட்டு இருந்தீயே?..” என்றான் கடுப்பாக..
இளங்கிளிக்கோ சுர்ரென்று கோபம் வந்தது..
யார் இவன்?.. என்னையும் முத்துவையும் இணைத்துப் பேசுவதற்கு?.. அவன் சொன்ன ஜோடி என்கின்ற வார்த்தை அவளுக்கு அப்படியொரு கோபத்தைக் கொடுத்தது..
முறைத்துக் கொண்டே முன்னே திரும்பிக் கொண்டாள்..
அவளின் அமைதி இவனுக்குக் கோபத்தைத் தான் கொடுத்தது..
“நான் பேசிட்டே இருக்கேன்.. நீ முகத்தை திருப்புனா என்னடி அர்த்தம்?..” என்றவளின் கொடுங்கையைப் பற்றி தன் புறம் திருப்பினான்..
அவனின் திடீர் செய்கையில் விதிர்விதிர்த்துப் போனாள் இளங்கிளி..
“என்ன பண்றீங்க?.. கையை விடுங்க.. இப்படி வயசுப்பொண்ணுக் கிட்ட அத்து மீறுறீங்களே, விடுங்க என்னை.. தயவு செஞ்சு விடுங்க..” என்றாள் கெஞ்சுதலான குரலில்,
“அவன் தோள் உரசும் போது இந்த பயம் எல்லாம் எங்கே போச்சுடி?..” என்றவனைப் புரியாமல் பார்த்தாள்..
“என்னடி அப்படிப் பார்க்குற?.. பஸ் ஏறும் போது, அவனை நீ உரசலை..” என்றவனின் கண்களோ கோபத்தில் வெகுவாய் சிவந்திருந்தது..
“அவர் எனக்கு அண்ணா மாதிரி?..” என்றாள் நடுங்கிய குரலில்,
“ஓஹ்.. உனக்கு அண்ணா தோள்ல உரசிக்கிட்டு, பஸ் ஸ்டாண்ட்ல பக்கத்துல பக்கத்துல இடிச்சிக்கிட்டு வருவீயா டி?..” என்றவனை கோபத்துடன் முறைத்தாள் இளங்கிளி..
அவளின் நடத்தையை சந்தேகப்படுவதைப் போல் பேசுபவனைக் கண்டு எரிச்சல் தான் வந்தது..
அதற்குள் 9 வது தளம் வந்தது..
லிஃப்ட் கதவு திறந்ததும், அங்கு ராம் நின்றிருந்தான்..
ராமை பார்த்ததுமே இளங்கிளியின் கையைப் பிடித்து வேகமாக லிஃப்ட்டிற்குள் தள்ளி விட்டவன், லிஃப்ட்டை விட்டு வெளியேறினான்..
அவன் தள்ளிய வேகத்தில் லிஃப்ட்டின் கண்ணாடியின் மேல் மோதி கீழே விழுந்தாள் இளங்கிளி..
