கண்மணியே காதலில் கரைந்திட வா

அத்தியாயம் ஒன்று    

 

காலை சூரியன் தன் இருப்பை காட்டிக்  கொள்ள தன்னுடைய பொன்னிற கதிர்களால் பூமகளை அலங்கரித்துக்கொண்டு இருந்தது. அருகில் இருந்த கோவிலில் இருந்து  “கல்லானாலும் திருச்செந்தூரில் கல்லாவேன்” என்ற TMS ஸின் கணீர் குரலில் முருகன்பாடல்  ஒலித்துக் கொண்டிருக்க கவிதா தன் பிள்ளையை எழுப்பிக்கொண்டிருந்தாள்.கௌரி, கௌரி எழுந்திரு! 10மணிக்கு நேர்முக தேர்வுக்கு போகணும் சொன்னியே! மணி இப்பவே 8 ஆகிடுச்சு, சீக்கிரம் எழுந்திரு என்று கவிதா எழுப்ப, மாதாஜி கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேனே, ராத்திரி படுக்க நேரம் ஆயிடுச்சி, ப்ளீஸ் மா! என்று கெஞ்ச, நாளைக்கு தூங்கு, இப்போ நீ எழுந்திருக்கிலேனா நான் வெளியே வாசல் தெளித்து கோலம் போடறதை உன் முகத்திலேயே போட்டுருவேன் என்று மிரட்டவும் சடாரென்று படுக்கையை  விட்டு எழுந்து, அம்மா தாயே! வேண்டாமா! நீ போய் வாசலிலேயே கோலம் போடு என்று  இரு கைகளையும் தேய்த்து அதில் தன் முகத்தை பார்த்து பின் குளியலறை நோக்கி சென்றான்

காலை கடன்களை முடித்து விட்டு வெளியே வரும்போது கவிதா சுட சுட காபியை அவன் முன் நீட்டி உன்னை எத்தனை தடவை தான் எழுப்பறது கௌரி? எப்ப தான் உனக்கு பொறுப்பு வரும்? என்று செல்லமாக அதட்ட, அம்மா என்னை கௌரி சொல்லி கூப்பிடாதே என்று எத்தனை தடவை தான் சொல்லறது? ஏம்மா என் பெயர் கௌரி சங்கர் தானே! சங்கர்னு கூப்பிடலாம்லே! எப்ப பார்த்தாலும் கௌரி கௌரினு பொம்பள பேரு வச்சு கூப்பிடறயே! எனக்கு ரொம்ப சங்கடமாய் இருக்கு,அதும் எவ்வளவு பழைய பேரு என்று அவன் சிணுங்க, என்னடா பண்றது, எனக்கும் உங்க அப்பாவுக்கும் பொம்பளை பிள்ளைனா ரொம்ப பிடிக்கும். முதல் குழந்தை பெண் குழந்தையாய் இருக்கணும்னு  ரொம்ப ஆசைப் பட்டோம். ஆனா பிறந்தது உன் அண்ணன் விக்னேஷ் தான் மூன்று வருடம் கழித்து நான் கர்ப்பமா இருந்தப்ப இந்த தடவை கண்டிப்பா பொண்ணு தான் பிறக்கும் என்று இரண்டு பேரும் ஆசையாய் இருந்தோம், ஆனா மறுபடியும் பிள்ளையா நீ பிறந்தே! அதான் உனக்கு கௌரி சங்கர்னு பெயர் வைத்து உன்னை கௌரி கௌரினு கூப்பிட்டு எங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறோம் என்று கூற, நல்ல வேளை என்னை பொண்ணு மாதிரி துணி போட்டு  சடை வளர்த்து, பொட்டு  வைச்சு, வளையல்போட்டு வளர்க்கல !  அதுவரைக்கும் நான் தப்பித்தேன்.  இல்லைடா, உன்னை ஐந்து வயசு வரைக்கும் அப்படி தான்டா வளர்த்தோம்,உனக்கு மொட்டை கூட அடிக்கலே தெரியுமா? அப்புறந்தான் நீ பள்ளிக்கூட பசங்க எல்லாரும் கேலி செய்யிறாங்க எனக்கு புடிக்கலேனு அழுகவும் தான் விட்டுட்டேன். அப்பாடா தப்பித்தேன், இல்லையனா இந்த ஆம்பிள சிங்கத்தை ஒரு பெண் சிங்கியா மாத்தி இருப்பே! பெண் சிங்கி இல்லடா அது பெண் சிங்கம். சிங்கத்தை சுருக்கி சிங்கினு சொன்னேம்மா, ஹி ஹி ! இப்போ நீ  இங்கிருந்து கிளம்பலான ஆண் சிங்கம் அசிங்கமா ஆகிடுவே! பாத்துக்கோ! சீக்கிரம் கிளம்புடா! என்று அவன் அன்னை விரட்ட, தன் பைக்கை எடுத்துக் கொண்டு விரைவாக அங்கிருந்து கிளம்பினான்.

இவன் நேர்முக தேர்வுக்கு போய் சேரத்துக்குள்ள இவனை பத்தி ஒரு intro பாத்துலாமா மக்களே! இவன் தான் நம் கதையின் நாயகன். 6அடி உயரம். நம் கார்மேக கண்ணனின் நிறம். வெள்ளை நிறம் மட்டும் தான் அழகு என்று சொல்றவங்க எல்லாரும் இவனை பார்த்தால் கண்டிப்பாக தன் கருத்தை மாதிப்பாங்க! கூறிய கண்கள், நீண்ட எடுப்பான மூக்கு, கன்னத்தில் சிறிய தாடி,அதை அழகாக ட்ரிம் செய்து வைத்துஇருந்தான். புகை வாசம் இல்லாத அழகிய உதடுகள், அதன் மேல் தடித்த திருத்திய மீசை, உடற்பயிற்சி செய்த கட்டு மஸ்தான உடம்பு, நீண்ட கால்கள், மிடுக்கான ஆண்மை நிறைந்த அழகு  என்று பக்கா இன்றைய கதாநாயகன் போல இருப்பாங்க. இவன் கணினி பொறியியலில் முதுகலை பட்டம் பெற்று மேலும் சில கணினி சம்பந்தமான படிப்புகளையும் படித்து இருந்தான். அவனுடைய இப்போதைய லட்சியமே வெளிநாட்டில் சென்று வேலை செய்து சம்பாதிக்க வேண்டும் என்பதுதான், அவனுடைய தந்தை மாசிலாமணி வருமான வரித்துறையில் வேலை செய்து தற்போதுதான் வேளையில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு பல வழிகளில் வருமானம் வர சந்தர்ப்பம் இருந்தபோதிலும் நேர்மையாக இருக்க வேண்டும் என்ற உறுதி உடன் வாழ்பவர். 

ஏனென்றால் மாசிலாமணி யின் தந்தை தியாகி சேதுராமன் அவர்கள். அவர் தன் இளமை காலத்தில் காந்தி வழியை பின்பற்றி பல போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர். அவருடைய பிள்ளைக்கு நேர்மை சொல்லி தர வேண்டுமா என்ன?

 மாசிலாமணியின் மனைவி கவிதாவும், கணவனுக்கு ஏற்ற மனைவியாக விளங்கினார் . கணவன் கொண்டு வரும் பணத்திலேயே சிக்கனமாக இருந்து தன் இரு பிள்ளைகளையும் நன்றாக படிக்கவைத்தார். மூத்த பிள்ளை விக்னேஷை வழக்கறிஞராகவும் கௌரி சங்கரை கணினி முதுகலை பட்டதாரியாகவும்  ஆக்கிய பெருமை இவரையே சாறும். ஏன்னென்றால் மாசிலாமணி தன் முழு சம்பளத்தையும் மனைவியிடம் தந்து விடுவார். தன்னுடைய சொந்த செலவுக்கு கூட தினமும் மனைவியிடம் தான் வாங்கிச் செல்வார். தன் மனைவி எது செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்று நினைப்பவர்.   

கவிதாவின் தந்தை ஞானசேகரன் சிறு பலசரக்கு கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். அவர்களுக்கு கவிதா மற்றும் வெங்கட்ராமன் என்ற இரு பிள்ளைகள்தான். அன்னை சுசீலா ஒன்றும் தெரியாத அப்பாவி பெண். அவர்களுக்கு வீடு, கணவன், பிள்ளைகள் விட்டால் அவர்களது பல சரக்கு கடை, இதை தவிர வேறு ஏதும் தெரியாது. பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள் எனபது கூட தெரியாது. நன்றாக சமைப்பாள். குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்வாள். இதை விட்டால் வேறு எதும் தெரியாது. கணவன் இல்லாமல் வெளியில் எங்கும் சென்றது கூட கிடையாது. தேவைக்கு ஏற்ப வருமானம் இருந்ததால் பணத்துக்கு பஞ்சமில்லை. ஆனால் இரு பிள்ளைகளுக்கும் படிப்பில் அவ்வளவு நாட்டம் இல்லை. கவிதா பள்ளி இறுதிவரை தான் படித்தாள், அதுவே அந்த காலத்தில் பெரிய படிப்பாக கருதி அவளை அத்தோடு நிறுத்திவிட்டார்கள். அவளுக்கும் பெரிதாக கல்வியில் நாட்டம் இல்லாதலால் அவளை மாசிலாமணிக்கு திருமணம் செய்து விட்டார்கள். 

இன்னோர் பிள்ளை வெங்கட்ராமனை தனக்கு உதவியாக தன் கடையிலேயே வைத்துக் கொண்டார். வெங்கட்ராமனுக்கு ஒரே பெண் தான். தான் நன்றாக படிக்கவில்லை என்பது அவருக்கு மிக பெரிய குறை. எனவே தன் பெண் மதுமதியை அவள் விரும்பும் வரை அவளை படிக்க வைக்க வேண்டும் என்பது அவரின் ஆசை. அவளும் அவரின்  ஆசைக்கு ஏற்ப உளவியல் துறையில் முதுகலை படித்துக்கொண்டிருந்தாள். அதில் அவள் முனைவர் பட்டம் பெற வேண்டும் என்பது அவளின் கனவு.

கவிதா தன் இருபிள்ளைகளுக்கும் தன் இனத்தில் தான் பெண் எடுக்கக்கவேண்டும் என்ற தீர்மானத்தில் உறுதியாக இருந்தாள். குறிப்பாக தன் அண்ணன் மகள் மதுமதியை  தன் வீட்டிற்கு மருமகளாக கொண்டு வர வேண்டும் என்பதில் அவருக்கு மிகுந்த ஆசை. விக்னேஷ் தற்போது  பெரிய வழக்கறிஞர் ஒருவரிடம் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறான்.  தனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என்றும், தான் தனியாக ஒரு வழக்கை எடுத்து நடத்தும் அளவுக்கு பயிற்சி பெற்ற பிறகு தான் திருமணம் என்று உறுதியாக சொல்லிவிட்டான். கௌரி சங்கரும் இப்போது வேலை தேடி கொண்டிருப்பதால் கவிதா சில காலம் கழித்து தன் அண்ணனிடம் பெண் கேக்கலாம் என்ற யோசனையுடன் இருந்தாள். 

விக்னேஷ் அப்படியே உருவமும் குணமும் கௌரி சங்கருக்கு எதிர்பதம். விக்னேஷ் தன் அம்மாவின் வெளிர் மஞ்சள் நிறத்தை கொண்டிருந்தான். கௌரி போல் ஆறு அடி இல்லையென்றாலும் ஐந்தரை அடிக்கு குறையாமல் பார்ப்பதற்கு நன்றாக தான் இருப்பான். ஆனாலும் இருவரும் ஒன்றாக செல்லும்போது அனைவரும் தன் தம்பி இடத்தில் தான் கவனம் செலுத்துகிறார்கள், அவனிடத்தில் தான் எல்லாரும் பேசுகிறார்கள் என்ற எண்ணம் எப்போதும் உண்டு. ஆனால் உண்மை என்னவென்றால் கௌரி சங்கர் ஒருவரை பார்த்தவுடனே புன்னகை புரிந்து உடனே பேச ஆரம்பித்து விடுவான். அந்த குணமே அனைவரையும் அவன்பால் இழுத்து விடும்.  ஆதலால்  அவனிடத்தில் நண்பர்கள் கூட்டம் அதிகம். எப்போதும் நண்பர்கள் படை சூழ தான் அமர்ந்து இருப்பான். அவனுடைய நண்பர்கள் அவனை எப்போதும் ஜி.எஸ். என்று சுருக்கி அழைப்பதுண்டு.ஆனால் விக்னேஷ் அப்படியல்ல. தனக்கு காரியம் ஆகவேண்டும் என்றால் மட்டும் தான் மற்றவர்களிடம் பேசுவான். ஆதலால் அவனுக்கு நண்பர்கள் அவ்வளவாக இல்லை. ஏனோ சிறு வயதிலிருந்தே கௌரி சங்கரை கண்டாலே விக்னேஷுக்கு பிடிக்காது.  தன் தம்பி பிறந்தவுடன் தன் அம்மா தன்னை விட தன் தம்பியிடம் தான்  அன்பாக இருக்கிறார் என்று குழந்தைகளுக்கே உண்டான பொறாமையே தன் மனதிலேயே வளர்த்துக் கொண்டு வந்திருக்கிறான்.கவிதா தன் மகனிடம் எவ்வளவோ எடுத்து சொல்லி கண்டித்த போதிலும் விக்னேஷ் தன் குணத்தில் இருந்து மாறவே இல்லை.  சிறு வயதில் யாரும் பக்கத்தில் இல்லாத போது குழந்தையை கன்னத்தில் கடித்து விட்டு ஓடி விடுவான். குழந்தையின் அழுகுரல் கேட்டு கவிதா விரைந்து வந்து கன்னத்தில் பல் தடம் இருப்பதை பார்த்து கேட்டால் தான் கடிக்கவில்லை என்று அடியோடு மறுத்துவிடுவதுடன் அடம் பிடித்து அழுது அம்மா மேல ஏதும் கேக்காதபடி செய்து விடுவான். வளர வளர அவனுள் பொறாமை வளர்ந்ததே அன்றி குறையவில்லை. விளையாட்டில் கூட தன் தம்பியுடன் சேர்ந்து விளையாடமாட்டான். ஏதாவது ஒரு புதிய விளையாட்டு பொருள் தன் தம்பியின் கையில் கண்டால் அதை அவனுக்கு தெரியாமல் வேண்டும் என்றே போட்டு உடைத்து விட்டு தான் மறு வேலை பார்ப்பான் விக்னேஷ். புதிய உடையோ அல்லது படிப்பு சம்பந்தமான பொருளோ தனக்கு வாங்கி கொடுத்த பிறகு தான் தன் தம்பிக்கே வாங்க விடுவான். சில சமயம் தான் உபயோகித்த பழைய பொருளையோ அல்லது உடையையோ தன் தம்பிக்கு கொடுத்து அவனுடைய புதியதை வாங்கி கொள்வான். கௌரி சங்கர் இதை எல்லாம் பெரியதாக எடுத்துக்கொள்ளமாட்டான். அவனுக்கு அண்ணனை மிகவும் பிடிக்கும். அவனிடத்தில் மிகவும் பாசமாகவும் அன்பாகவும்  இருப்பான். எப்போதும் இன்முகமானாகவே  பேசுவான்.

 நம் நாயகனுக்கு நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைத்ததா? அங்கு அவனுக்கு நேர்ந்த அதிர்ச்சி தான் என்ன? என்பதையும் நாயகியை பற்றியும் அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போமோ? மக்களே! 

 

 

 

 

❤️ Loading reactions...
அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
கண்மணியே காதலில் கரைந்திட வா
806 10 4
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page