காதலாகும் 11:
முகச் சுளிப்புடன் சோபாவில் சாய்ந்திருந்த வேத வர்ஷனின் நெற்றியை மலரையொத்த இரு கரங்கள் மென்மையாய் பிடித்து விட்டன.தன்னருகில் வீசிய மல்லிகைப் பூவின் சுகந்தத்தை உணர்ந்து கொண்டவனின் உதடுகளில் ஒரு இளம்புன்னகை வந்தமர்ந்தது.
அவனுக்குத் தெரியுமல்லவா..அந்தக் கரங்களுக்கு சொந்தக்காரி யார் என்று…?கண்களைத் திறக்காமலேயே அந்தக் கரங்களைப் பிடித்து தன்னருகில் அமர்த்தியவன் அந்தப் பெண்ணின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான்.
இப்பொழுது அவளது இதழ்களிலும் நாணப் புன்னகை.மென்மையாக தலையைப் பிடித்து விட்டவளின் செய்கையில் அவனது தலைவலி இருந்த இடம் தெரியாமல் பறந்து விட்டது.
“தேங்க்ஸ் டி…!”,நெற்றியைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்த கரங்களைப் பற்றி முத்தமிட்டவன் கண்களைத் திறந்தான்.
“ரொம்பவும் தலை வலிக்குதாங்க… நான் வேணும்ன்னா காபி போட்டு எடுத்துட்டு வரட்டுமா…?”,கண்களில் கனிவு மின்ன வினவியவள் அப்படியொரு அழகாக இருந்தாள்.
அவள் கண்மணி. வேத வர்ஷனின் காதல் மனைவி.வெளியுலக வாழ்க்கையில் தன் தந்தையுடன் சேர்ந்து பல அக்கிரம காரியங்களைப் புரிபவன் தான் அவன்.ஆனால்,வீட்டில் அவளது மனைவிக்கு அவனொரு காதல் கணவன் மட்டுமே…!சொல்லப் போனால் அவனது உலகமே அவன் மனைவிதான்.அவளை சந்தித்த முதல் நாளிலிருந்து இன்று வரை அவள் மேல் காதலை மட்டுமே பொழிபவன்.
அவளும் அவனுக்கு சளைத்தவள் அல்ல. கணவன் என்றால் அவளுக்கு உயிர்.அவனது கண்ணசைவில் தன் வாழ்க்கையை நடத்திக் கொள்ளும் சகதர்மிணி அவள்.
“தலை வலித்ததுதான்.. உன்னுடைய கை பட்ட உடனே அந்த வலியும் பறந்து போயிடுச்சு…!”,கூறியபடியே அவன் அவளை தன்னை நோக்கி இழுக்க,
“ம்ப்ச்..ஹால்ல இருந்துட்டு என்ன விளையாட்டு இது…”,போலியாக சலித்தாலும் கணவனின் இழுப்பிற்கு வளைந்துதான் கொடுத்தாள்.
“அதுதான் வீட்டுல யாரும் இல்லையே…அம்மாவும் தூங்க போயிட்டாங்க…”,கண் சிமிட்டியபடியே அவளது முகத்தைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்தவன்..அவளது இதழ்களில் புதைந்து கொண்டான்.
‘யாராவது பார்த்து விடுவார்களோ’ சிறு தயக்கம் இருந்தாலும் கணவனது இதழ் முத்தத்தில் மயங்கித்தான் போனாள்.
வெகுநேரம் கழித்து விடுவித்தவனின் உதடுகளில் ரகசியப் புன்னகை வந்து அமர்ந்து கொண்டது.
“டிபன் எடுத்து வைச்சிருக்கிறேன்…சாப்பிட போகலாம் வாங்க…!”,
“சாப்பிடத்தான் போகணும்…ஆனால்,டிபன் இல்லை..கறி விருந்து…!”,கூறியபடியே எழுந்தவன் அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டான்.
“என்னங்க இது…சாப்பிட்டுட்டு போகலாம்…”.அவளது செல்ல சிணுங்கல் எங்கே அவனுக்கு கேட்டது.
“சாப்பிடத்தான் டி போறேன்…!”,அவள் சிணுங்க சிணுங்க அவளை அள்ளிக் கொண்டு தங்களது படுக்கையறைக்குள் நுழைந்தான்.
அங்கு ஒரு கட்டில் யுத்தம் ஆரம்பமானது..காதலோடு…!திவ்யா என்ற அப்பாவிப் பெண்ணை சிதைத்தவனுக்குள்ளும் காதல் என்னும் இன்னொரு பக்கம். அவனது அக்கிரமங்கள் எதுவும் கண்மணிக்குத் தெரியாது.அவளைப் பொறுத்தவரை கணவன் ஒரு நல்லவன். தன் மனம் அறிந்து நடக்கும் தன் இதய நாயகன்.அவனுடைய மறுபக்கம் அவளுக்குத் தெரிய வரும் போது..இதே காதல் இப்படியே நிலைக்குமா…?
நாளும் பொழுதும் மறைய இன்னும் ஒரு வாரத்தில் விஸ்வேஸ்வரன்-யாழ்வி திருமணம்.தன்னுடன் பணி புரிபவர்களையும்..தனது உயர் அதிகாரிகளையும் மட்டும்தான் அவன் அழைத்திருந்தான்.அவனுக்குத் திவ்யாவின் நினைவு வந்து போனது. உயிருடன் இருந்திருந்தால் அவளையும் கல்யாணத்திற்கு அழைத்திருக்கலாம் என்று எண்ணாமல் அவனால் இருக்க முடியவில்லை. நீ
அதை நினைக்கும் போதே அவனுக்கு ஆத்திரம் பொங்கியது.தன்னை பழி வாங்கத்தான் யாரோ திவ்யாவை கொலை செய்திருக்கிறார்கள் என்பதை அவன் உணர்ந்துதான் இருந்தான். இருந்தாலும் யார் என்று அவனால் கண்டறிய முடியவில்லை.
சிட்டியை துடைத்து எடுத்த அவனுக்கு எதிரிகளுக்கா பஞ்சம்…?அவன் எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் அநியாயக்காரர்களுக்கு எதிரானது. அவன் மேல் கொலைவெறியுடன் சுற்றுபவர்கள் அதிகம்.அதை அவனும் உணர்ந்துதான் இருந்தான். ஆனால்,யாருக்குமே அவனை நெருங்கும் தைரியம் இருந்ததில்லை. ஒற்றைப் பார்வையிலேயே அனைவரையும் தள்ளி நிறுத்தி விடுவான்.அதையும் மீறி அவனை எதிர்ப்பவர்களின் உடலில் உயிர் மட்டும்தான் மிஞ்சும்.அவன் கொடுக்கும் அடி அப்படிப்பட்டது.
‘தன்மேல் விழும் பார்வை இனி யாழ்வியின் மீதும் விழும்…அவளுடைய பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்’,அவன் நினைத்துக் கொண்டிருக்க..அவனது நினைவின் நாயகியே அவனுக்கு அழைத்தாள்.
அது என்னவோ தெரியவில்லை..’யாழ்வி’ என்ற பெயர் அவனது கைபேசி திரையில் ஒளிர்ந்தாலே அவனது இதழ்களுக்குள் புன்னகை வந்து அமர்ந்து கொள்கிறது.
போனை எடுத்தவன் வழக்கம் போல், “சொல்லு…”,என்றான்.
“நான் இன்னைக்கு சாயங்காலம் ஊருக்கு கிளம்பறேன்…!”அவள் கூற அவன் புன்னகை விரிந்தது.அவனுக்குத் தெரியும்..அவனிடம் சொல்லாமல் அவள் செல்ல மாட்டாள் என்று.
திருமணம் உறுதி செய்யப்பட்ட பிறகு அவள் இதையெல்லாம் இயல்பாக செய்தாள். ஒருவேளை,சிறு வயதிலிருந்து அவளது தாய் தந்தையை பார்த்து வளர்ந்ததினால் அவளுக்கு இயல்பாகவே இந்த உணர்வெல்லாம் வந்து விட்டதோ என்னவோ…
ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும் போதும் போன் செய்து அவனிடம் விபரம் கூறி விட்டுத்தான் செல்வாள். மற்றபடி வேறு எதற்காகவும் அவள் அவனை அழைத்ததில்லை.
இயல்பாக அவள் செய்த செய்கைகள் இருவரது மனதையும் நெருங்கச் செய்தது.இருவருமே அவர்களே அறியாமல் கணவன் மனைவி என்ற பந்தத்திற்குள் அடியெடுத்து வைக்க ஆரம்பித்தனர்.அதற்காக இருவருக்குள்ளும் உயிர் காதல் கசிந்து உருகியதா என்று கேட்டால்..இல்லை என்றுதான் கூற வேண்டும்.
‘திருமணம் நிச்சயமாகி விட்டது..இனி அவனிடம் கூறாமல் எதுவும் செய்யக் கூடாது’ என்ற எண்ணம் அவளுக்கு. அவள் கூறும் போது என்னவென்று தெரியாமலேயே மனதுக்குள் தோன்றும் ஒரு அழகான உணர்வு அவனுக்கு.
“ம்..போயிட்டு வா…!”,எப்பொழுதும் போல் அப்பொழுதும் அவள் கூறியது கூறியது அவனுக்கு இதத்தை தர..அவன் குரல் கனிந்து வந்தது.
“நீங்க எப்போ கிளம்பறீங்க…?”,
“கல்யாணத்துக்கு முன்னாடி நாள் கிளம்பறேன்…!நிறைய டேஸ் லீவ் எடுக்க முடியாது…!”,
“ஓகே…எப்படி வருவீங்க…?”,ஏனோ இதை கேட்கும் போது அவளுக்குள் சிறு தயக்கம்.
“கார்லதான்…!”,
“பார்த்து வாங்க…!அது.. நீங்களே ட்ரைவ் பண்ணனும்ல..அதுக்காக சொன்னேன்…!”,
“கபிலனும் துரையும் என்கூட வருவாங்க…! ஸோ.. டோன்ட் வொர்ரி…!”, தன் மீதான அவளது அக்கறை அவனுக்கு இனித்தது.
“அப்போ சரி…!நான் போனை வைக்கிறேன்…!”,அவள் போனை அணைத்து விட சுழல் நாற்காலியில் சுழன்றபடி போனின் திரையையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
தன்னை ஒரு பெண் தேடுகிறாள்..தன் நலனின் மீது ஒரு பெண் அக்கறை கொள்கிறாள்..அனைத்தும் அவனுக்குப் புதிதுதான்.ஆனால்,வெகுவாக பிடித்தும் இருந்தது.தலையை உலுக்கி தன் அலுவலில் ஆழ்ந்தான் விஸ்வேஷ்வரன்.
நாட்கள் ஓட..அவன் யாழ்வியின் ஊருக்கு கிளம்பும் நாளும் வந்தது.
ஒரு முக்கியமான பைலை லாக்கரில் வைத்து விட்டுக் கிளம்பலாம் என்ற எண்ணத்துடன் அந்த பைலை எடுத்துக் கொண்டு அலுவலகத்திற்கு வந்திருந்தான் விஷ்வா.சரியாக அந்த நேரம் கமிஷ்னரும் அவனது அலுவலகத்திற்கு வருகை புரிய..இவனைக் கண்டதும்,”என்ன மேன்..கல்யாண மாப்பிள்ளை…! இன்னும் நீ கிளம்பலையா…?”,என்று வினவினார்.
“இதோ கிளம்பிட்டேன் சார்..இந்த பைலை லாக்கரில வைக்க வந்தேன்…!”,அவரிடம் கூறியபடியே லாக்கரில் வைத்துப் பூட்டியவன், “நீங்க கல்யாணத்துக்கு வர்றீங்கதானே…?”, என்று வினவினான்.
“நான் வராமலா…கண்டிப்பா பேமிலியோட ஆஜர் ஆகிடுவேன்…!”,சிரித்தபடியே அவனை வழியனுப்பி வைத்தார்.
அவன்,துரை மற்றும் கபிலன் மூவரும் அவனது காரில் கிளம்பினர். வெகு நேர பயணத்திற்கு பிறகு அவர்கள் யாழ்வியின் கிராமத்தை அடைந்த போது நேரம் மதியத்தை கடந்திருந்தது.
ஊரே திரண்டு வந்து இவர்களை வரவேற்றது.
“வாங்க மாப்பிளை…!”,
“வாங்க தம்பி…!”,
“டேய்..மாப்பிள்ளையும் அவரோட நண்பர்களும் வந்துட்டாங்க பாரு..குடிக்க ஏதாவது எடுத்துட்டு வா…”,ஆளாளுக்கு பரபரவென்று வரவேற்க..அவனுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்காதது ஒன்றுதான் பாக்கி.
“மாப்பிள்ளை வந்துட்டாராம்… பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தேன்…”,கூட்டமாக வயதான பெண்மணிகள் வேறு வந்து அவனைக் காட்சிப்பொருள் போல பார்த்து விட்டு செல்ல..அவனுக்கு ஒரு மாதிரி அவஸ்தையாகத்தான் இருந்தது.
ஆனால்,பாசத்துடன் அவனிடம் விசாரித்த ஒவ்வொருவரின் கண்களிலும் உண்மைதான் தெரிந்தது.கிராமத்து மனிதர்கள் அல்லவா.. வெள்ளந்தியான குணத்துடன் பாசத்தைப் பொழிந்தனர்.
“தானா அமைஞ்சாலும் நல்ல இடமாகத்தான் பிடிச்சிருக்க ரகுவரா…”ஆளாளுக்கு பேச ஆரம்பிக்க.. நெளிந்தபடி நாற்காலியில் அமர்ந்திருந்தவனின் சங்கடத்தை ரகுவரன் கண்டு கொண்டார்.
“சரி…எல்லோரும் அப்புறம் பேசிக்கலாம்…! மாப்பிள்ளையும் அவரோட நண்பர்களும் ஓய்வெடுக்கட்டும்…சாயங்காலம் வேற நலங்கு இருக்கல்ல..”,அவனைச் சுற்றி நின்றிருந்தவர்களை விலக்கியவர்,
“மாப்பிள்ளை…!வாங்க.. உங்களுக்காக பக்கத்துல இருக்கிற வீட்டை ஒதுக்கி இருக்கிறோம்…!”,என்றபடி மூவரையும் அழைத்துச் சென்றார்.
இவரது வீட்டை ஒட்டிய பக்கத்து வீடு.அதுவும் வசதியாகத்தான் இருந்தது. துரையும்..கபிலனும் ஒரு அறையில் தங்கிக் கொள்ள..விஷ்வா ஒரு அறையில் தங்கிக் கொண்டான்.
ஒரு குளியலைப் போட்டு சற்று படுத்து எழுந்த பிறகுதான் புத்துணர்வாக இருந்தது. வீட்டிலேயே இருப்பது ஒரு மாதிரி இருக்கவும் மொட்டை மாடிக்குச் செல்லும் படிக்கட்டில் ஏறினான். கபிலனும்.. துரையும் எதையோ பேசிக் கொண்டு வெளியே அமர்ந்திருப்பதைக் கண்டவன்,”வாங்களேன்.கொஞ்ச நேரம் மேலே போய் உலாவிட்டு வரலாம்…!”,என்று அவர்களையும் அழைத்தான்.
மூவரும் மொட்டை மாடிக்குச் சென்றனர்.இரு வீட்டையும் இணைப்பது போல் பொதுவாக அமைந்திருந்தது மொட்டை மாடி இந்த வீட்டில் படியேறினால் அந்த வீட்டின் பின்பக்கம் சென்று இறங்கலாம்..அந்தளவிற்கு பெரிதாக இருந்தது.
மூவரும் பேசிக் கொண்டிருக்க..இவர்களைத் தேடி சுடச் சுட காபியுடன் பஜ்ஜியும் வந்தது.
“இங்கே இருக்கீங்களா மாப்பிள்ளை…வீட்டுக்குப் போய் பார்த்துட்டு நீங்க இல்லைன்னதும் மேலே வந்தேன்…!”,கூறியபடியே வந்தார் ரகுவரனின் தம்பி.அவருக்குப் பின்னால் கையில் சிற்றுண்டி அடங்கிய தட்டை எடுத்துக் கொண்டு ஒருவன் வந்தான்.
“சுப்பு…மாப்பிள்ளைக்கும்..அவங்க நண்பர்களுக்கும் கொடு..கூடவே இருந்து இவங்களை கவனிச்சுக்கோ…!”,அந்த வேலையாளுக்கு உத்தரவிட்டவர்..விஸ்வேஷ்வரனுடன் சிறிது நேரம் பேசியிருந்து விட்டு கிளம்பிச் சென்றார்.
கபிலனும் துரையும் வந்திருந்த சுப்புவுடன் அவர்களது கிராமத்தைப் பற்றிய பேச்சில் இறங்கி விட,’என்ன..வந்ததுல இருந்து இவள காணோம்…’அவன் மனம் யாழ்வியைப் பற்றி எண்ணமிட ஆரம்பிக்க..கலகலவென்ற சிரிப்பு சத்தம் அவனது செவியில் வந்து மோதியது.
ரகுவரனின் வீட்டுப் பக்கம் இருந்துதான் அந்த சிரிப்பொலி கேட்க,அவன் கால்கள் அந்த வீட்டின் மொட்டை மாடிக்கு நகர்ந்தன.
கைப்பிடி சுவரில் கை ஊன்றியபடி சுற்றும் முற்றும் பார்த்தவனின் விழிகளில்..ரகுவரனின் வீட்டின் பின்பக்கம் ஒரு பெண்கள் பட்டாளமே நின்றிருப்பது தெரிந்தது.எதையோ கிண்டலடித்து பேசியபடி அனைவரும் கலகலத்து சிரிக்க..அவர்களுக்கு நடுவில் யாரோ ஒரு பெண் அமர்ந்திருப்பது போல் இவனுக்குத் தெரிந்தது.
இள மஞ்சள் வண்ண பாவாடை தாவணி அணிந்திருந்தவளின் முகத்தை மட்டும் சுற்றியிருந்த பெண்கள் மறைத்திருந்தனர். ‘யாழ்வியா இது…?’.இலை மறை காயாக தெரிந்த அவளது பளிங்கு முகம்..அவனையும் அறியாமல் அவன் ஆர்வத்துடன் எட்டி எட்டி பார்க்க..அவளை மறைத்துக் கொண்டு நின்றிருந்த அந்தப் பெண்மணி சற்று நகர்ந்து நின்றார்.
‘யாழ்வியேதான்…’,எப்பொழுதும் ஜீன்ஸ் குர்தியில் அவளைப் பார்த்துதான் அவனுக்குப் பழக்கம். இன்று முதல் முறையாக பாவாடை தாவணியில் பார்க்கிறான்.நலங்கு வைத்துக் கொண்டிருப்பார்கள் போலும். ..கன்னங்களிலும் கன்னங்களிலும் கைகளிலும் கைகளிலும் மஞ்சள் பூசியிருந்தார்கள்.இவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே..கலகலவென்று சிரித்தபடி.. பூக்களால் நிரப்பட்டிருந்த மஞ்சள் தண்ணீரை எடுத்து அவள் மேல் ஊற்றினார்கள்.
பற்கள் தெரிய புன்னகைத்தபடி தன் மேல் விழும் நீர்த்துளிகளை கையை நீட்டி ரசித்து ஏந்தி விளையாடியவள்..அவனுக்கு ஒரு கவிதையாகத்தான் தெரிந்தாள்.வைத்த கண் வாங்காமல் அவன் அவளையே ரசித்துக் கொண்டிருக்க..மொட்டை மாடியில் நின்று இவன் பார்ப்பதை கீழிருந்த பெண்கள் பட்டாளம் கவனித்து விட்டது.
“என்னடி..மாப்பிள்ளை இந்த பார்வை பார்க்கிறாரு… “,ஒருத்தி யாழ்வியின் காதைக் கடிக்க,
இன்னொருத்தியோ,”விட்டால்.. இங்கேயே பர்ஸ்ட் நைட்டை கொண்டாடிருவாரு போல..”,என்று கண்ணடித்தாள்.
பூசியிருந்த மஞ்சளுக்கு இணையாய் அவளது கன்னங்களும் சிவந்து விட..அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவள் பார்ப்பதை அவன் கண்டு கொண்டான்.இருந்தும் அவன் தன் பார்வையை மாற்றவில்லை.அப்படியே வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.இவளுக்குத்தான் ஒரே வெட்கமாக போய்விட்டது.
‘இது என்ன..இப்படி பார்க்கிறாரு…இவளுக எல்லாம் சும்மாவே ஆடுவாளுங்க..இதுல இவரு இப்படியொரு பார்வை பார்த்து வைக்கிறாரு…’,அனைவரது கவனமும் தங்கள் மீதுதான் இருக்கிறது என்பதை அவனுக்கு உணர்த்திவிட முயன்று கண்களால் அவனுக்கு சுற்றுப்புறத்தை சுட்டிக்காட்ட,
அவன் எதையும் கவனிக்கவில்லை.முதல் முறை அவளைத் தாவணியில் பார்த்த மயக்கத்திலிருந்து அவன் இன்னும் வெளிவரவில்லை போலும்…!உதட்டோரப் புன்னகையுடன் கைப்பிடியில் கை ஊன்றி அவளையேதான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“யாழ்வி.. உன் கண்ணசைவு எல்லாம் அவருக்குப் புரியாது.. இப்போ நாங்க புரிய வைக்கிறோம் பாரு…!”,அந்தப் பெண்கள் வேண்டுமென்றே அவளை
மறைத்தவாறு சுற்றி நின்று கொள்ள,மறுபடியும் அவள் முகம் மறைந்ததில் இவன் சற்று எட்டி எட்டி பார்க்க ஆரம்பித்தான்.
சில நிமிடங்கள் அவனுக்கு போக்கு காட்டியவர்கள் சட்டென்று விலகி விட அவளது முகம் அவனுக்கு நன்கு தெரிந்தது.
“என்னங்க மாப்பிள்ளை…எங்க பொண்ணை சைட் அடிக்கறீங்களா…?”,கீழிருந்த பெண்கள் சத்தமாக கேட்டபடி கலகலத்து சிரிக்க அவனுக்கு அப்பொழுதுதான் சுற்றுப்புறம் உரைத்தது.
‘அடேய் விஷ்வா…என்ன காரியம் டா பண்ணிக்கிட்டு இருக்கற…’,மானசீகமாய் தன் தலையில் அடித்துக் கொண்டவன்,வெளியே அந்தப் பெண்களை சமாளிக்கும் பொருட்டு,
“அதுதான் சைட் அடிக்கறேன்னு தெரியுதில்ல..அப்புறம் எதுக்கு மறைச்சு நிற்கறீங்க…?”,என்று கேள்வியெழுப்ப,
“ஆஹா..மாப்பிள்ளை விவரம்தான்…!”,அந்தப் பெண்களும் சிரித்தபடி ஒதுங்கிக் கொண்டனர்.
இப்படியாக கலகலப்பிலும் கிண்டல் கேலியிலும் நேரம் விரைய..பொழுது சாய்ந்து திருமண நாளும் விடிந்தது.
தொடரும்…
